பந்தை எறிவது தொடர்பான சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார் முரளிதரன். இவர், அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்து வீசுவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை அணியின் "சுழல் மன்னன்' முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்(777) வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது பந்துவீச்சு தொடர்பாக 1995 முதல் சர்ச்சை நீடிக்கிறது.
ஐ.சி.சி., மீது தவறு: தனக்கு எதிரான சர்ச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத முரளிதரன் வழக்கம் போல விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். சமீபத்திய நியூசிலாந் துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூட அபாரமாக பந்து வீசினார். இந்தச் சூழலில் இவர் மீது மீண்டும் பந்தை எறிவதாக புகார் கூறப்பட்டுள்ளது. இம்முறை நியூசிலாந்தின் முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியது: ஐ.சி.சி., நிர்ணயித்துள்ள 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்து பந்துவீசுகிறார் முரளிதரன். வெறும் கண்ணால் பார்த்தாலே இவர் பந்தை எறிவது தெளிவாக தெரியும். "சூப்பர் ஸ்லோ-மோஷன்' கேமரா மூலம் பார்க்கும் போது இத்தவறை துல்லியமாக உறுதி செய்யலாம்.
இதற்காக முரளிதரன் மீது குறை சொல்ல முடியாது. இவர் தனது பணியை கச்சிதமாக செய்கிறார். இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஐ.சி.சி., மீது தான் தவறு உள்ளது. ஒரு வீரர் பந்தை எறிகிறார் என்றால் உடனே பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறார். ஆய்வகத்தில் அவரது உடல் அசைவை கண்காணிக்கின்றனர்.
பின்னர் சரியாக தான் பந்துவீசுகிறார் என விடுவித்து விடுகின்றனர். இது முரளிதரன் விஷயத்திலும் பல முறை நடந்துள்ளது. இவரது உடல் முழுவதும் "பல்புகளை' பொருத்தி பரிசோதனை செய்தனர். இறுதியில் பந்தை எறியவில்லை என தெரிவித்தனர்.
உண்மையிலேயே இவர் பந்தை எறியவில்லை என்று சொல்ல முடியுமா? சோதனையின் போது தன்னால் விதிமுறைகளுக்கு உட்பட்டு பந்துவீச முடியும் என நிரூபிக்கிறார். ஆனால் பரபரப்பான போட்டியின் போது இதனை கடைப்பிடிக்க முடிவதில்லை.
கிரிக்கெட் போட்டிகள் ஆய்வகத்தில் விளையாடப்படுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பவுலிங் தொடர்பான தனது சோதனை முறைகளில் ஐ.சி.சி., மாற்றம் செய்ய வேண்டும். விதிமுறையை மீறும் பவுலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மார்க் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்
0 comments:
Post a Comment