இந்திய அணிக்கு அனுமதி மறுப்பு

சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் பங்கேற்க இந்திய அணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கெடு முடிந்த பின் பெயர் பட்டியலை அனுப்பியதால் செய்னா நேவல் உள்ளிட் டோர் முக்கிய தொடரில் பங்கேற்கும் அரிய வாய்ப்பை இழந்தனர்.

இந்த தவறுக்கு இந்திய பாட்மின்டன் சங்க நிர்வாகிகளின் அலட்சியமே முக்கிய காரணம். இருப்பினும், சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு உரிய நேரத்தில் தகவல் தரவில்லை என நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.சீனாவில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் வரும் செப். 15 முதல் 20 ம் தேதி வரை நடக்க உள்ளது.

இதில் பங்கேற்பவர்களின் பெயர் பட்டியலை அனுப்ப ஆக. 11 தான் கடைசி நாள். ஆனால் இந்திய பாட்மின்டன் சங்கம் (பி.ஏ.ஐ.,) ஒருநாள் தாமதமாக ஆக. 12ல் அனுப்பியது. இதனை சீன பாட்மின்டன் நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர்.

இதனால் செய்னா நேவல், ஜூவாலா கட்டா, திஜு, சேட்டன் ஆனந்த் போன்ற முன்னணி வீரர்கள் இந்த தொடர்களில் கலந்து கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து இந்திய வீராங்கனை செய்னா நேவல் கூறியது:

எல்லோரும் உலக பாட் மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் "பிசியாக' இருந்ததால், பட்டியல் அனுப்ப வேண்டிய கடைசி தேதியை மறந்து விட்டார்கள். அதேபோல வீரர்களும் தங்களதுபட்டியலை சரியான தேதிக்குள் பி.ஏ.ஐ.,க்கு அனுப்பவில்லை. இந்த தகவலை பி.ஏ.ஐ.,யும் எங்களுக்கு தெரிவிக்க மறந்து விட்டார்கள்.

மொத்தத்தில் எல்லா இடத்திலும் தவறு நடந்துள்ளது. இது மிகவும் வருத்தமாக உள்ளது. ஏனெனில் இந்த தொடரில் கடந்த ஆண்டு நான் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தேன். இப்போது கலந்து கொள்ளாததால் ரேங்கிங்கில் புள்ளிகளை இழக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு செய்னா கூறினார்.திஜு ஆவேசம்: ஆனால் மற்றொரு வீரர் திஜு, பி.ஏ.ஐ., அமைப்பை குற்றம் சாட்டுகிறார். இதுகுறித்து அவர் கூறியது:ஒவ்வொரு தொடருக்கு முன்பாகவும் நாங்கள் பங்கேற்க போகிறோம் என தெரிவிக்கமாட்டோம். ஒருவேளை ஏதாவது தொடரில் பங்கேற்க முடியவில்லை என்றால் தான் பி.ஏ.ஐ., க்கு தெரிவிப்போம்.

இந்த ஆண்டு நடக்கும் அனைத்து சூப்பர் சீரிஸ் தொடர்களிலும் பங்கேற்க வேண்டும் என நாங்கள் கடந்த 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பே தெரிவித்துள் ளோம். ஆனால் அவர்கள் சீன தொடருக்கு சரியான நேரத்தில் பட்டியலை அனுப்ப மறந்து விட்டார்கள்.

இது முழுவதும் அவர்கள் தவறுதான். இதில் பங்கேற்காததால் ரேங்கிங்கில் பின்தள்ளப்படுவது ஏமாற்றமாக உள்ளது. இவ்வாறு திஜு தெரிவித்தார்.பயிற்சியாளர் ஏமாற்றம்: இதுகுறித்து செய்னா நேவல் பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில்,"" ஒருநாள் தாமதமானதால் சீனா தொடரில் கலந்து கொள்ளமுடியாதது துரதிருஷ்டவசமானது.

ஐதராபாத்தில் நடந்த உலக பாட்மின்டன் தொடரில் அதிக கவனம் செலுத்தியதால், இந்த தவறு ஏற்பட்டுவிட்டது,'' என்றார்.


வீரர்கள்தான் பொறுப்பு : இந்திய பாட்மின்டன் சங்க தலைவர் வர்மா கூறுகையில்,""ஒரு தொடருக்கு முன்பாக வீரர்கள் அனுப்பும் பட்டியலை தான் உலக பாட்மின்டன் சங்கத்திற்கு அனுப்புவோம். வீரர்கள் அனுப்பிய பட்டியல் ஆக.12ல் தான் கிடைத்தது என பயிற்சியாளர் கோபிசந்த் என்னிடம் தெரிவித்தார்.

இருப்பினும் உடனடியாக நாங்கள் சீனாவிற்கு அனுப்பினோம். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. ஏன் வீரர்கள் தாமதமாக அனுப்பினார்கள் என்று எனக்குத் தெரியாது,'' என்றார்

0 comments:

Post a Comment