ஆச்சர்யம் அளித்த வெற்றி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின், உலக சுற்றுக்கு 11 ஆண்டுகளுக்குப் பின் முன்னேறியுள்ளது இந்திய அணி.

சமீபத்தில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி மோதியது. இதில், ஒற்றையர் பிரிவு, மாற்று ஒற்றையர் பிரிவு போட்டிகளில் அசத்திய சோம்தேவ் தேவ்வர்மன் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஆகியோரும் சிறப்பாக செயல்பட இந்திய அணி 4-1 கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி உலக சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன் கடந்த 1998 ம் ஆண்டு டேவிஸ் கோப்பை உலக சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியிருந்தது.

அதற்குப் பின் தற்போது தான் இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோரை தொடர்ந்து, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்

சோம்தேவ். தனது வெற்றிப் பயணம் குறித்து சோம்தேவ் அளித்த "மினி' பேட்டி:

* டேவிஸ் கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறதா?
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றிக்கு எனது செயல்பாடுகள் மட்டும் காரணமல்ல. போபண்ணா, யூகி பாம்ப்ரி ஆகியோரும் முக்கிய காரணம். இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

* டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பற்றி உங்கள் கருத்து?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்றில் எனது ஆட்டம் முழு திருப்தி அளித்தது. இந்திய டென்னிஸ் பாரம்பரியமிக்கது. தலை சிறந்த வீரர்கள் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார்கள்.

அவர்களது சாதனைக்கு முன் எனது செயல்பாடுகள் பெரிய விஷயம் அல்ல.

* கடந்த 1998 ம் ஆண்டு இந்திய அணி டேவிஸ் கோப்பை உலக சுற்றுப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. அப்போது உங்களுக்கு 12 வயது. தற்போது 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்த வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. இதை எப்படி உணர்கிறீர்கள்?

11 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த இந்த வெற்றி, என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதை மிகவும் வித்தியாசமாக கருதுகிறேன். எனது ஆட்டத்தில் எனக்கு நம்பிக்கை முழு நம்பிக்கை இருந்தது. இதன் மூலம் எனது நீண்ட கால கனவு நனவாகி உள்ளது.

* தகுதிச் சுற்றுப் போட்டியில், தென் ஆப்ரிக்காவின் ரிக் டே வோஸ்டை வீழ்த்த கடுமையாக போராட வேண்டியிருந்ததா?

அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். அதனால் வெற்றிக்கு கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. எனது டென்னிஸ் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றியாக இதை கருதுகிறேன். வெற்றிக்கு சக வீரர் ரோகன் போபண்ணா முக்கிய காரணம். நெருக்கடியாக நேரங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தார்.

அவர் அளித்த உற்சாகத்தால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. அணியின் கேப்டன் மிஸ்ரா, மகேஷ் பூபதி ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

* உங்களது வெற்றிப் பயணம் தொடருமா?

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் தான் களமிறங்குகிறேன். சமீபத்தில் நடந்த யு.எஸ்., ஓபன் தொடரில், எனது செயல்பாடுகள் திருப்தி அளித்தது. தற்போது டேவிஸ் கோப்பை வெற்றி, புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

இதே உற்சாகத்துடன் இனி வரும் போட்டிகளிலும் நம்பிக்கையுடன் செயல்படுவேன்

இரானி கோப்பை: இன்று ஆரம்பம்

இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் நாக்பூரில் இன்று துவங்குகிறது. இதில் "ரெஸ்ட் ஆப் இந்தியா' மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

உள்ளூர் தொடர்களில் ஒன்றான 47வது இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் நாக்பூரில் இன்று துவங்குகிறது. இதில் "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி, ரஞ்சி கோப்பை நடப்பு சாம்பியனான மும்பை அணியை சந்திக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட் போல ஐந்து நாட்கள் நடக்கும்.


வருகிறார் சேவக்:

தோள்பட்டை காயம் காரணமாக, சமீபத்திய சர்வதேச தொடர்களில் பங்கேற்காத இந்திய அணியின் துவக்க வீரர் சேவக், இரானி கோப்பை தொடரில் பங்கேற்கிறார். இவர் "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணியின் கேப்டனாக களமிறங்குகிறார்.

இவருடன் தமிழக வீரர் பத்ரிநாத், முரளி விஜய், ரவிந்திர ஜடேஜா, அபினவ் முகுந்த், பிரக்யான் ஓஜா, முனாப் படேல், ஸ்ரீசாந்த், மனோஜ் திவாரி, விரிதிமன் சகா உள்ளிட்டோரும் "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி சார்பில் விளையாடுகின்றனர்.


ஜாபர் கேப்டன்:

மும்பை அணியின் கேப்டனாக வாசிம் ஜாபர் விளையாடுகிறார். இவரோடு அஜித் அகார்கர், இக்பால் அப்துல்லா, தவால் குல்கர்னி, ரமேஷ் பவார், அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா உள்ளிட்டோர் மும்பை அணி சார்பில் விளையாடுகின்றனர்.


இருபது முறை:

இரானி கோப்பை தொடரில் "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவரை நடந்துள்ள 46 தொடரில் 20 முறை கோப்பை கோப்பை வென்று சாதித்துள்ளது. இதனை தொடர்ந்து மும்பை (15 முறை), கர்நாடகா (3 முறை), டில்லி மற்றும் ரயில்வேஸ் அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றுள்ளன.

தமிழகம் (1988-89), ஐதராபாத், அரியானா அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றுள்ளன. கடந்த 1965-66ம் ஆண்டு நடந்த இத்தொடர் மழைகாரணமாக கைவிடப்பட கோப்பையை "ரெஸ்ட் ஆப் இந்தியா' மற்றும் மும்பை அணிகள் பகிர்ந்து கொண்டன.


நேரடி ஒளிபரப்பு:

இப்போட்டி நேரடி ஒளிபரப்பு செய்ய, நியோ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போட்டியை நியோ கிரிக்கெட் சேனலில் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை காலை 9.30 மணியில் இருந்து காணலாம்.

தவிர, இந்த நிறுவனம் அடுத்து வரவிருக்கும் சாலஞ்சர் டிராபி (அக். 8-11) மற்றும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் (அக். 25-நவ. 11) உள்ளிட்ட முக்கிய தொடரை நேரடி ஒளிபரப்பு செய்கிறது

யுவராஜ் இல்லாதது இந்தியாவுக்கு பெரிய இழப்பு

இந்திய அணியில் யுவராஜ் சிங் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கூறினார்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுடன் தோல்வியுற்றதால் மட்டும் இந்தியாவை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அளவுக்கு திறமை படைத்தது இந்திய அணி.

தற்போதுள்ள நிலையில் போட்டியிலிருந்து இந்தியா வெளியேறியதாக கூறிவிட முடியாது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் முடிவில் மட்டுமே இந்தியாவுக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.

இந்திய அணியில் யுவராஜ் சிங் இல்லாதது அந்த அணிக்கு பெரிய இழப்பாகும். சச்சினும், யுவராஜ்சிங்கும் இந்திய அணியின் சொத்து.

இக்கட்டான நேரங்களில் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள் சச்சின், யுவராஜ் சிங்.

ஆனால் முன்பிருந்தது போல கேப்டன் தோனியிடமிருந்த நம்பிக்கை தற்போது இல்லை என்றார் அவர்

பாக்., வென்றால் இந்தியாவுக்கு மகிழ்ச்சி!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. இன்று பிற்பகல் நடக்கும் முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். அப்போது தான் இந்திய அணிக்கு மகிழ்ச்சி பிறக்கும்.

ஒருவேளை ஆஸ்திரேலியா வென்றால், இந்தியா வெளியேற நேரிடும். மாலையில் துவங்கும் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மோதலும் முக்கியத்துவம் இல்லாமல் போய் விடும். எனவே, பாகிஸ்தான் வெற்றியை பொறுத்து தான் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நாளை ஜோகனஸ்பர்கில் நடக்க உள்ள லீக் போட்டியில், "ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.


சிக்கலில் இந்தியா:

இந்திய அணிக்கு இத்தொடர் எதிர்பார்த்தபடி அமையவில்லை. தனது முதல் லீக் போட்டியில், பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

தற்போது இந்தியா 1 புள்ளி மட்டும் பெற்றுள்ளது. ஆனால் "ஏ' பிரிவில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. இப்பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதில் சிக்கல் நீடிக்கிறது.


"ரன்-ரேட்' முக்கியம்:

அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலிய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வீழ்த்தும் பட்சத்தில், 5 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறி விடும். தவிர, இந்தியா வெளியேறி விடும். ஒரு வேளை தோற்கும் பட்சத்தில் 3 புள்ளிகளுடன் நீடிக்கும்.

அதே சமயம் இன்று நடக்க உள்ள மற்றொரு லீக் ஆட்டத்தில், இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்த வேண்டும். தற்போது ஒரு புள்ளி பெற்றிருக்கும் இந்திய அணி, இதன் மூலம் 3 புள்ளிகள் பெறும். ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் தலா 3 புள்ளிகள் பெற்றிருப்பதால், ரன்-ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும் அணி முடிவு செய்யப்படும்.


வாய்ப்பு குறைவு:

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 3 புள்ளிகள் பெற்றாலும், ரன் ரேட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்தியாவின் ரன் ரேட் தற்போது -1.08. ஆஸ்திரேலியா +1.00 விகிதம் பெற்று முன்னிலையில் உள்ளது. தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா தனது முதல் போட்டியில், பாகிஸ்தானிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனவே இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ரன் வித்தியாசம் 104.

இந்தியா அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், ஆஸ்திரேலியா, பாகிஸ்தானிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டும். அதே சமயம் வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்த வேண்டும். எதுவாக இருப்பினும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற அதிர்ஷ்டம் தான் முக்கியம்.


நெருக்கடி உண்டு:

இத்தொடரில் மிகவும் பலவீனமான அணியாக காட்சி அளித்தது வெஸ்ட் இண்டீஸ். ஆனால் பவுலிங்கில் அசத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வி அடைந்தாலும், வெஸ்ட் இண்டீசின் போராட்டம் பாராட்டும்படியாக அமைந்திருந்தது.

இன்றைய போட்டியில் இந்தியாவுக்கு, வெஸ்ட் இண்டீஸ் கடும் நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. டாங்க், ரோக், பெர்னார்ட் உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் வேகங்களிடம், இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்குப் பிடிப்பது கடினம் தான்.


பவுலிங் மோசம்:

வெஸ்ட் இண்டீசை வீழ்த்த வேண்டும் எனில், இந்திய அணி பவுலிங்கில் எழுச்சி பெற வேண்டியது அவசியம். இந்திய அணியின் பந்து வீச்சு இத்தொடரில் படுமோசமாக உள்ளது. நெஹ்ரா மட்டுமே ஆறுதல் அளிக்கிறார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இஷாந்த் சர்மா சொதப்பி வருகிறார். ஹர்பஜன், மிஸ்ரா நம்பிக்கை அளித்தாலும், விக்கெட் கைப்பற்ற தடுமாறி வருகின்றனர். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இன்றைய போட்டியில் இந்தியா சாதிக்க முடியும்.


ரன் குவிப்பு முக்கியம்:

இது ஒருபுறம் இருக்க, இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சச்சின், காம்பிர், ரெய்னா, டிராவிட், தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் பேட் செய்தால், இந்திய அணி எளிய வெற்றியை இன்று எட்டலாம்.

இன்றைய லீக் போட்டிகளில் இந்திய அணி, அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், பாகிஸ்தானிடம், ஆஸ்திரேலியா தோல்வி அடைய வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் தற்போதைய பிரார்த்தனையாக உள்ளது.


பாக்.,-ஆஸி., பலப்பரீட்சை

இன்று நடக்கும் மற்றொரு லீக் போட்டியில், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

பாகிஸ்தானை பொறுத்த வரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சூப்பர் பார்மில் உள்ளது. ஆமெர், நவீத், குல் வேகத்தில் மிரட்டுகின்றனர். அப்ரிதி, அஜ்மலின் சுழற் பந்து வீச்சும் ஆறுதல் அளிக்கிறது. முன்னணி பேட்ஸ்மேன்களான முகமது யூசுப், மாலிக், யூனிஸ் கான், நசீர், கம்ரான் நம்பிக்கை அளிக்கின்றனர்.

பாகிஸ்தானைப் போலவே ஆஸ்திரேலியாவும் வலுவான அணியாக உள்ளது. கேப்டன் பாண்டிங், ஹசி, பெய்ன், ஒயிட் பேட்டிங்கில் அசத்துகின்றனர். ஜான்சனின் ஆல்-ரவுண்டர் செயல்பாடு அணிக்கு பக்கபலமாக உள்ளது.

அரையிறுதிக்கு முன்னேற இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது ஆஸ்திரேலியாவுக்கு அவசியம். அதனால் பாகிஸ்தானை வீழ்த்த கடுமையாகப் போராட உள்ளது ஆஸ்திரேலியா. சமபலத்தில் உள்ள இரு அணிகள் மோதும் இப்போட்டி, விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீரர்கள் தேர்வில் தவறு: தோனி

ஐ.பி.எல்., தொடரில் வீரர்கள் வெளிப்படுத்தும் திறமையை அடிப்படையாக கொண்டு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு வீரர்களை தேர்வு செய்யக்கூடாது. இது தவறாகிவிடுகிறது,'' என இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி, அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதில் யூசுப் பதான் உள்ளிட்ட சில வீரர்கள் பேட்டிங்கில் ஏமாற்றியது திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் வீரர்கள் தேர்வு குறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறியது:

உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்., தொடரில் திறமையை வெளிப்படுத்தும் வீரர்கள் உடனடியாக தேசிய அணியில் இடம் பிடிப்பது குறித்து எதிர்பார்க்கிறார்கள். ஆனால் "டுவென்டி-20' போட்டிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது ஒருநாள் போட்டி.

இது வீரர்களின் பொறுமை சோதிக்கும் போட்டி. முதலில் பவுலிங் செய்யும் போது இருந்த புத்துணர்ச்சியுடன், கடைசிகட்ட ஓவர்களையும் வீசுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

தற்போது அணியில் உள்ள யூசுப் பதான், உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்., தொடரில் ஆதிக்கம் செலுத்தியவர். ஆனால் சர்வதேச போட்டிகளுக்கு வரும் போது அவரால் ஜொலிக்க முடியவில்லை.

இதுதான் கவலையளிக்கும் விஷயம். இதனால் ஐ.பி.எல்., தொடரை அடிப்படையாக கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யக்கூடாது.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

நியூஸிலாந்து வீரர் ரைடருக்கு அபராதம்

நியூஸிலாந்து வீரர் ஜெஸ்ஸி ரைடருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜோஹன்னஸ்பர்க்கில் இலங்கைக்கு எதிரான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 74 ரன்களைக் குவித்த ரைடர் ஆட்டமிழந்தார். அவர் பெவிலியனுக்குத் திரும்பிய வேளையில் டிரஸ்ஸிங் ரூமிலிருந்த நாற்காலியை தனது கிரிக்கெட் மட்டையால் உடைத்தார்.

இது சர்வதேச கிரிக்கெட் விதிகளை (ஐசிசி) மீறிய செயலாகும். இதைத் தொடர்ந்து ஜெஸ்ஸி ரைடருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் வாங்கிய ஊதியத்தில் இருந்து 15 சதவீத தொகையை அபராதமாக செலுத்தவேண்டும் என்று போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் தலைமையிலான குழு உத்தரவிட்டுள்ளது

இந்தியா-ஆஸி., போட்டி மழையால் ரத்து

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின், நேற்றைய லீக் போட்டி மழையின் காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 9 வது லீக் போட்டியில், "ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. யூசுப் பதான், ஆர்.பி.சிங் ஆகியோர் நீக்கப்பட்டு அமித் மிஸ்ரா, பிரவீண் குமார் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்பட வில்லை.

வாட்சன் "அவுட்': ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன், டிம் பெய்ன் துவக்கம் தந்தனர். நெஹ்ரா, பிரவீண் குமார் கட்டுக் கோப்பாக பந்து வீசினர். நெஹ்ரா வேகத்தில் வாட்சன், "டக்-அவுட்டனார்'. பின்னர் பெய்னுடன், பாண்டிங் இணைந்தார்.

இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் குவித்தது. ஒரு நாள் அரங்கில் 2 வது அரை சதம் கடந்தார் பெய்ன். இவர் 56 ரன்களுக்கு (7 பவுண்டரி 1 சிக்சர்) வெளியேறினார்.


சூப்பர் ஜோடி:

அடுத்து வந்த மைக்கேல் ஹசி, பாண்டிங்கிற்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் அதிகரித்தது. ஒரு நாள் அரங்கில் பாண்டிங் 70 வது அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த நிலையில், பாண்டிங் (65) ரன் அவுட் செய்யப்பட்டார்.

மறுமுனையில் ஹசி, அரை சதம் கடந்தார். இவர், 67 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். மிடில் ஆர்டரில் ஒயிட் அதிரடி காட்ட துவங்கினார்.



போட்டி ரத்து:

42.3 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 234 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் மழை குறுக்கிட, ஆட்டம் தடைபட்டது. ஒயிட் (35), பெர்குசன் (2) களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால்,போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

தவிர, மைதானத்தில் உள்ள ஒரு மின் "டவர்', மின்னல் தாக்கியதால் பழுதடைந்தது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.


யாருக்கு வாய்ப்பு?

நேற்றைய போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டதால், "ஏ' பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதில் சிக்கல் நீடிக்கிறது.

* "ஏ' பிரிவில் 4 புள்ளிகளை பெற்ற பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கு முன்னேறி விட்டது.

* இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே ஆஸ்திரேலியா (3 புள்ளிகள்) மற்றும் இந்திய அணிகள் (1 புள்ளி) உள்ளன. நாளை நடக்க உள்ள பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டிகள், அரையிறுதிக்கு முன்னேறும் மற்றொரு அணியை முடிவு செய்ய உள்ளன.

* பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெறும் பட்சத்தில் 5 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறும். தவிர, இந்தியா வெளியேறிவிடும்.

* ஒருவேளை அப்போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கும் பட்சத்தில் 3 புள்ளிகளுடன் நீடிக்கும்.

* அதே சமயம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 3 புள்ளிகள் பெறும்.

* இந்தியா, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகள் பெறும் பட்சத்தில், ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ள அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

சாம்பியன்ஸ் டிராபி: இன்று இந்தியா-ஆஸி., மோதல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய வாழ்வா... சாவா... போட்டியில் இந்திய அணி, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. தொடரின் அரையிறுதி வாய்ப்பை பெற, இன்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தோனி தலைமையிலான அணி களமிறங்குகிறது.

சாம்பியன்ஸ் டிராபி (மினி <உலக கோப்பை) தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. "ஏ' பிரிவு லீக் போட்டியில் இன்று இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது.


தோனி அதிர்ச்சி:

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் பவுலர்கள் மோசமாக சொதப்பியது, கேப்டன் தோனிக்கு கடும் அதிர்ச்சி அளித்தது.


டிராவிட் ஆறுதல்:

பேட்டிங்கில் துவக்க வீரர் காம்பிர், பார்முக்கு திரும்பியுள்ளது வரவேற்கத்தக்கது. சச்சின் இன்று நம்பிக்கை கொடுப்பார் என தெரிகிறது. ரெய்னா, டிராவிட் கடைசி வரை நிலைத்து நின்று வெற்றிக்கு உதவ வேண்டும்.

தோனி, விராத் கோஹ்லி இருவரும் சூழ்நிலை கண்டு பொறுப்பாக விளையாட வேண்டும். தன்மீதான நம்பிக்கையை யூசுப் பதான் தொடர்ந்து வீணடித்து வருகிறார்.


பவுலிங் சொதப்பல்:

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர்கள் சொதப்பினர். கேப்டன் தோனி, நேரடியாக பவுலர்கள் மீதே குற்றம் சுமத்தினார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இஷாந்த் துவக்கத்தில் விக்கெட் வீழ்த்தி அணியினரை ஊக்கப்படுத்த வேண்டும்.

ஆஷிஸ் நெஹ்ரா அசத்தலை இன்றும் தொடர்வார் என நம்பலாம். ஆர்.பி.சிங் சரியாக செயல்படாத பட்சத்தில் பிரவீண் குமாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.


ஏமாற்றிய ஹர்பஜன்:

சயீத் அஜ்மல், மெண்டிஸ், வான் டர் மெர்வி போன்ற இளம் வீரர்கள் இந்த தொடரில் அசத்தி வரும் நிலையில் இந்தியாவின் அனுபவ ஹர்பஜன், ஏமாற்றுவது வருத்தம் தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதும் சாதிக்கும் இவர், இன்றும் ஆறுதல் கொடுப்பார் என தெரிகிறது.


பாண்டிங் பலம்:

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வென்ற உற்சாகத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் போட்டியில் வென்றுள்ளது. இன்றும் கேப்டன் பாண்டிங், பெய்னே, வாட்சன், மைக்கேல் ஹசி, பெர்குசன் ஆகியோர் பேட்டிங்கில் கைகொடுக்கலாம். முதல் போட்டியில் களமிறங்காத துணைக்கேப்டன் மைக்கேல் கிளார்க், இன்று விளையாட உள்ளார்.


பிரெட் லீ எழுச்சி:

நீண்ட ஓய்வுக்கு பின் களமிறங்கிய பிரெட் லீ, சிறப்பாக செயல்படுகிறார். பந்து வீச்சில் மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் ஜான்சன் அசத்துவது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவர்கள் தவிர, பீட்டர் சிடில், வாட்சன், ஹோப்ஸ் என வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல அடித்தளம் அமைக்கிறார்கள். சுழலில் ஹவுரிட்ஜ் நன்கு செயல்படுவது கேப்டனுக்கு நலமே.

பகலிரவு போட்டி என்பதால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்வது <உறுதி. இரு அணிகளும் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குவதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

-----


யாருக்கு அரையிறுதி வாய்ப்பு

இன்று இந்திய அணி வெல்லும் பட்சத்தில் அரையிறுதி செல்ல வாய்ப்பு பிரகாசமாகும். தவிர, தோல்வியடைந்தால் தொடரை விட்டு வெளியேற நேரும். பிரிவு "ஏ'ல் இருந்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மட்டும் அரையிறுதிக்கு தகுதிபெறும். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தொடரை விட்டு வெளியேறும்.


இந்தியா ஆதிக்கம் :

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் இந்திய அணி இரண்டு முறையும், ஆஸ்திரேலிய அணி, ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
----


இரு அணிகள் இதுவரை...
* இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 96 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் இந்திய அணி 32, ஆஸ்திரேலிய அணி 57 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

* ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக கடந்த 2003ல் 2 விக்கெட்டுக்கு 359 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி கடந்த 2001ல் தனது அதிகபட்ச ஸ்கோராக 315 ரன்கள் எடுத்துள்ளது.

* குறைந்த ரன்னாக இந்திய அணி கடந்த 1981ல் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி கடந்த 1991ல் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

*கடந்த 2007ல் இந்திய அணியின் முரளி கார்த்திக், 27 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சு. ஆஸ்திரேலிய அணி சார்பில் மெக்லே, 39 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
-------


சச்சின் ஆதிக்கம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவின் சச்சின் இதுவரை, 2730 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரண்டு இடத்தில் அசாருதீன் (990), டிராவிட் (928) உள்ளனர்.

இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங், இதுவரை 1713 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரு இடங்களில் கில்கிறிஸ்ட் (1622), ஹைடன் (1450) உள்ளனர்.
-------


பிரெட் லீ மிரட்டல்

இரு அணிகளுக்கு இடையே அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ (49) முதலிடத்திலும், இந்தியாவின் கபில் தேவ் (45) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் போட்டிக்கு ஆபத்து?

"டுவென்டி-20' போட்டிகளின் வரவிற்கு பின் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமல்ல ஒருநாள் போட்டிகளுக்கும் வரவேற்பு குறைந்துள்ளது. விரைவில் ஒருநாள் போட்டிகள் மறைந்து விடும் என அஞ்சப்படுகிறது.

அவ்வளவு எளிதில் இது நடக்குமா அல்லது மீண்டும் எழுச்சி பெறுமா என்பது குறித்து பார்ப்போம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டு, குறிப்பிட்ட ஓவர்கள் கொண்டு விளையாடும் ஒருநாள் போட்டி முறை, 1962ல் கொண்டு வரப்பட்டது.

அப்போது தலா 65 ஓவர்கள் கொண்ட போட்டியாக விளையாடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் முதன் முதலாக 1975ல் நடந்த உலக கோப்பை 60 ஓவர்கள் கொண்டதாக இருந்தது. பின் அதுவும் குறைந்து தற்போது 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.

கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்களின் பிறப்பிடமாக இருக்கும் இங்கிலாந்து, கடந்த 2003ல் மூன்றரை மணி நேரத்தில் முடிந்து விடக்கூடிய "டுவென்டி-20' கிரிக்கெட் போட்டியை உள்ளூரில் அறிமுகம் செய்தது.

பின் 2005ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் அறிமுகப்படுத்தியது. இந்த வகை போட்டியின் அசுர வளர்ச்சியால், முதன் முதலாக ஐ.சி.சி., சார்பில் நடந்த 2007 உலக கோப்பை தொடர் நடத்தப்பட்டது.

இதில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றது. பின் 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. உலகிலேயே அதிக ரசிகர்கள் நேரிலும், "டிவி'யிலும் கண்டுகளித்த தொடராக சாதனை படைத்தது.

குறைந்த பார்வையாளர்கள்:
இப்படி "டுவென்டி-20' போட்டிக்கு அமோக ஆதரவு கிடைக்க, ஒருநாள் போட்டிக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இதன் உச்சகட்டமாக இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, 2010ம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டி அட்டவணையில் இருந்து ஒருநாள் போட்டிகளை நீக்கியது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் வார்ன்,""டெஸ்ட், "டுவென்டி-20' என இருவித கிரிக்கெட் மட்டும் போதும். ஒருநாள் போட்டி தேவையில்லை,'' என்றார்.

அதிகரித்த ஒருநாள்:
ஆனாலும், ஐ.சி.சி., அட்டவணையில் இடம் பெற்றுள்ள ஒரு நாள் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கின்றன. கடந்த 1980 முதல் 1989 வரையில் 516 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. 2000 முதல் இந்த ஆண்டு வரை 1353 போட்டிகள் நடந்துள்ளது. இதனை பார்க்கையில் ஒரு நாள் போட்டிகள் எளிதில் மறையாது என்பது தெளிவாகிறது.

ஐ.சி.சி., ஆதரவு:
இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை நிர்வாகி ஹாருண் லார்கட் கூறுகையில்,"" ஒருநாள் கிரிக்கெட் மிக வெற்றிகரமான போட்டி. தற்போதைக்கு 50 ஓவர்கள் போட்டியில் இருந்து விலகி செல்லும் எண்ணம் இல்லை. இதில் மாற்றம் செய்வதற்கு சச்சின் போன்றவர்கள் தெரிவித்துள்ள கருத்தை வரவேற்கிறோம்,'' என்றார்.

சவாலான நாட்கள்:
அடுத்து வர இருக்கும் ஒன்றரை ஆண்டுகள் ஒருநாள் போட்டிகளுக்கு சவாலான நாட்கள். வரும் 2011ல் ஆசிய துணைக்கண்டத்தில் நடக்க இருக்கும் <உலக கோப்பை (50 ஓவர்) தொடர், ஒருநாள் போட்டிகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு துணைக்கண்டத்து நிர்வாகிகள் கடுமையாக போராட வேண்டும். ஒருவேளை இந்திய அணி மீண்டும் "நம்பர்-1' இடத்தை பிடித்து விட்டால் அது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, வர்த்தக ரீதியிலும் இந்த போட்டிகளுக்கு உள்ள வரவேற்பை அதிகரித்து விடும்.

சச்சின் "பார்முலா'
ஒருநாள் போட்டிகளில் விறுவிறுப்பை அதிகரிக்க இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்,"" 100 ஓவர்களை பிரித்து தலா 25 ஓவர்கள் வீதம் நான்கு இன்னிங்சாக விளையாடலாம்,'' என்கிறார்.

மற்றொரு இந்திய வீரர் கும்ளே,""50 ஓவர்கள் என்பதை 40 ஓவர்களாக குறைத்து விளையாடலாம்,'' என்றார். வழக்கம் போல இங்கிலாந்து ஏற்கனவே 50 ஓவர்களை குறைத்து தலா 40 ஓவர்கள் கொண்ட "புரோ-40' போட்டிகளை அறிமுகம் செய்துள்ளது.
புதிய கருத்து நன்மையா?

* சச்சினின் கருத்துப்படி நான்கு இன்னிங்சாக விளையாடுவதால் ஒவ்வொரு 25 ஓவர்கள் துவக்கத்தின் போதும் அதிக பரபரப்பு இருக்கும்.

* மிடில் ஆர்டரில் சோம்பலாக செல்லும் நிலையை
மாற்றலாம்.

* பகலிரவு போட்டிகளில் "டாஸ்' வெல்லும் அணிக்கு போட்டி சாதகமாக முடிவதை தடுக்கலாம். ஏனெனில் இரு அணிகளும் பகலில் மற்றும் இரவில் தலா 25 ஓவர்கள் விளையாடும்.

* "டுவென்டி-20' போட்டிகள் போல பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் இருக்கும். இது பார்வையாளர்களிடம் வரவேற்பை அதிகரிக்கும்.

பவுலர்கள் பரிதாபம்

* தலா 4 இன்னிங்சாக மாற்றுவதால் முதலில் ஆட்டமிழந்த வீரர் மறுபடியும் களமிறங்கலாம். இது பவுலர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும்.

* எந்த பேட்ஸ்மேன்களும் சதம் அடிக்க முடியாமல் போகலாம்.

* பின் வரிசை வீரர்கள் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு இருக்காது

இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடனான லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.

இது பகலிரவு ஆட்டமாக செஞ்சுரியன் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

டாûஸ வென்ற பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ்கான் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.

துவக்க ஆட்டக்காரர்களாக கம்ரன் அக்மலும், இம்ரான் நசீரும் களமிறங்கினர். ஆனால் இருவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. நஸீர் 20 ரன்களிலும், கம்ரன் அக்மல் 19 ரன்களிலும் பெவிலியின் திரும்பினர். இந்த விக்கெட்டுகளையும் நெஹ்ரா வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து வந்த கேப்டன் யூனிஸ்கானை 20 ரன்களில் அவுட்டாக்கினார் ஆர்.பி. சிங்.

இந்நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷோயிப் மாலிக்கும், முகமது யூசுப்பும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ஸ்கோர் 180-ஐத் தொட்ட பிறகு இருவரும் அதிரடியாக விளையாடினர். மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் பெüண்டரி பறந்தது. குறிப்பாக ஸ்லிப் திசையில் பெüண்டரிகளை விரட்டி ஸ்கோரை இருவரும் உயர்த்தினர்.

அதிரடியாக விளையாடிய மாலிக் சதமடித்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த யூசுப்பை 87 ரன்களில் அவுட்டாக்கினார் நெஹ்ரா. 88 பந்துகளில் இந்த ரன்களை அவர் சேர்த்தார். மாலிக் - யூசுப் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஷாகித் அப்ரிதி 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மாலிக் 128 ரன்களில் வீழ்ந்தார். 126 பந்துகளில் இந்த ரன்களை அவர் எடுத்தார்.

முகமது ஆமிர், உமர் அக்மல், உமர் குல் ஆகியோர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நவீத் உல் ஹசன் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியத் தரப்பில் நெஹ்ரா 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும், ஆர்.பி. சிங், ஹர்பஜன் சிங், பதான், ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தியா தோல்வி:

303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்திய அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது

ஆஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடுவேன்: சேவாக்

ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறினார்.

இதுகுறித்து மும்பையில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

அக்டோபர் 25-ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒரு தினத் தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்குள் நான் முழு உடல் தகுதியுடன் இந்திய அணியில் இடம்பெறுவேன்.

உடல்ரீதியாக நான் இன்னும் முழுதுமாக தயாராகவில்லை. பெüண்டரி எல்லையிலிருந்து என்னால் பந்தை எறியமுடியவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா தொடர் துவங்க இன்னும் ஒரு மாதம் உள்ளது. அதற்குள் நான் தயாராகிவிடுவேன்.

இருப்பினும் சாம்பியன்ஸ் லீக் போட்டி, ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடுவேன்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. துணை கேப்டன் பதவியில் எனக்கு விருப்பமில்லை. என்னை விட இளைஞராக உள்ள வீரருக்கு அதை வழங்கலாம். இதன்மூலம் நான் பேட்டிங்கில் கவனம் செலுத்தலாம் என்றுதான் நான் கூறியிருந்தேன். அதை இப்போதும் கூறுகிறேன். கேப்டன் பதவிக்கு நான் என்றும் ஆசைப்பட்டதில்லை என்றார் அவர்

சச்சின் விக்கெட்டே எனது இலக்கு: ஆமீர்

இந்தியாவுடனான ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டே எனது இலக்கு என பாகிஸ்தான் இளம் வீரர் முகமது ஆமீர் (18) கூறினார்.

ஜோஹன்னஸ்பர்கில் இருந்து ஆமீர் கூறியதாவது: சச்சின் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவரது விக்கெட்டை கைப்பற்றுவதில் ஆர்வமாக உள்ளேன். அதற்காக எப்படிப் பந்துவீசுவது என பயிற்சியும் எடுத்துள்ளேன்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது என்பது எனது கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மறக்க முடியாத சில ஆட்டங்களைப் பார்த்துள்ளேன். டெண்டுல்கருக்கு வாசிம் அக்ரம் எப்படி பந்துவீசினார் என்பதை விடியோவில் பார்த்து தெரிந்து கொண்டுள்ளேன்.

சச்சின் விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்துவது எனக்கு மட்டும் உற்சாகத்தைக் கொடுப்பதல்ல. முழு அணியுமே அதனால் மகிழ்ச்சி அடையும்.

மொத்த அணியுமே இந்தியாவுடனான ஆட்டத்தை எதிர் நோக்கியுள்ளது. இந்தியாவுடனான ஆட்டத்தில் தனிப்பட்ட முறையில் எப்படி விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. இணைந்து எப்படி செயல்படப் போகிறோம் என்பதே முக்கியம் என்றார்.

மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் ஆட்டத்தில் ஆமீர் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது