உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் உள்ள ஸ்குவாஷ் ராக்கெட் சங்க அரங்கில் நடக்கிறது. இந்தப் போட்டியில், நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடந்தது. இதில் இந்தியாவின் முதல்நிலை வீராங்கனை தீபிகா பலிக்கல், அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் முதல்நிலை வீராங்கனை தீபிகா பலிக்கல், எகிப்தைச் சேர்ந்த நான்காம் நிலை வீராங்கனை நூர் எல்தயப்பிடம் 6-11, 11-8, 8-11, 7-11 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். இந்த வெற்றியின் மூலம் நூர் எல் தயப், சக நாட்டு வீராங்கனையான நூர் எல் செர்பினியை பைனலில் சந்திக்க உள்ளார்.
அரையிறுதி ஆட்டத்தின் வெற்றி குறித்து நூர் எல் தயப் கூறுகையில், ""இது ஒரு நல்ல வெற்றி. எனது பயிற்சியாளர் கூறியது போல் விளையாடிய காரணத்தால், வெற்றி பெற்றேன். தீபிகாவுடன் விளையாடியது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. பைனலிலும் வெற்றி பெற ஆவலாக இருக்கிறேன்,'' என்றார்.
இந்தப் போட்டியின் பெண்களுக்கான மற்றொரு அரையிறுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த மரியா தூர் பாகே, எகிப்தைச் சேர்ந்த நூர் எல் செர்பினியிடம் 8-11, 6-11, 6-11 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் எகிப்து நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்த உள்ளனர்.
ஆண்களுக்கான அரையிறுதியில், எகிப்தைச் சேர்ந்த முதல்நிலை வீரர் முகமத் எல் சோர்பகி, சகநாட்டு வீரரான ஆண்ட்ரூ வகி சவ்கிரியை 11-7, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பைனலுக்கு தகுதிபெற்றார். ஆண்களுக்கான மற்றொரு அரையிறுதியில், மலேசியாவைச் சேர்ந்த இரண்டாம் நிலை வீரர் இவான் யன், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆவுரங்கசீப் மெக்மூத்தைச் 11-6, 11-9,11-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றார்
0 comments:
Post a Comment