கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் தோனி

டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கப்படுகிறார். இவருக்கு பதிலாக சேவக் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி, தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து, அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது.

முதலில் கேப்டன் மாற்றப்பட உள்ளார். இதன் மூலம் தோனி மற்றும் சேவக் இடையிலான "ஈகோ' பிரச்னைக்கு முடிவு காணலாம். கேப்டன் என்ற முறையில் தன்னால் சேவக்கை கட்டுப்படுத்த இயலவில்லை என தோனி புலம்புகிறார். துவக்க வீரராக பொறுப்பாக "பேட்' செய்யவில்லை என புகார் கூறுகிறார்.

மறுபக்கம் தோனியின் கேப்டன் உத்திகளை ஏற்க மறுக்கிறார் சேவக். வீரர்கள் தேர்வு, "பீல்டிங்' வியூகம் போன்றவற்றில் தோனி தவறு செய்வதாக குறிப்பிடுகிறார். துணை கேப்டன் என்ற முறையில் தன்னிடம் கலந்து ஆலோசிப்பது இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறார். இவர்களது மோதல், அணியில் பிளவை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இருந்து 2013ல் ஓய்வு பெறப் போவதாக தோனி தன்னிச்øயாக அறிவித்தது தேர்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, 2013ல் நடக்க வேண்டிய விஷயம் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை,''என்றார்.

தோனிக்கு பாடம் புகட்டும் வகையில், அவரை டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்க, பி.சி.சி.ஐ, முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. புதிய கேப்டனாக சேவக் நியமிக்கப்படலாம். தவிர, டிராவிட், லட்சுமண் ஆகியோரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாகவும் தேர்வாளர்கள் கருதுகின்றனர்.

எனவே, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, சத்தேஷ்வர் புஜாரா போன்ற இளம் வீரர்களை சேர்க்க முடிவு செய்துள்ளனர். யுவராஜ் உடல்நலம் தேறும்பட்சத்தில் அவருக்கும் டெஸ்டில் வாய்ப்பு தரப்படும்.

கேப்டன் மாற்றம் மட்டும் சாதிக்க உதவாது. ஏனென்றால், தோனிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அடிலெய்டு டெஸ்டில் கேப்டன் பொறுப்பை ஏற்ற சேவக், அணிக்கு வெற்றி தேடித் தர முடியவில்லை.

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைத்தல், இளம் ரத்தம் பாய்ச்சும் வகையில் பாரபட்சமற்ற வீரர்கள் தேர்வு மற்றும் இந்திய கிரிக்கெட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தினால் தான், அன்னிய மண்ணில் வெற்றிக் கொடி நாட்ட முடியும்.

தரம் தாழ்ந்த ஆஸி., வீரர்கள்

ஆஸ்திரேலிய வீரர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாக இந்தியாவின் விராத் கோஹ்லி குற்றம்சாட்டினார். இது குறித்து கோஹ்லி கூறியது:

களத்தில் இருக்கும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து வசைபாடுகின்றனர். இதன் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களின் கவனத்தை சிதறடிக்கின்றனர். நான் 99 ரன்களில் இருந்த போது ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினேன்.

அப்போது ஹில்பெனாஸ் மோசமான வார்த்தைகளால் திட்டினார். இதை நாகரிகம் கருதி வெளியில் சொல்ல முடியாது. இதற்கு நானும் பதிலடி கொடுத்தேன். பின் பாண்டிங் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.

நாங்கள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள். போட்டியில் பங்கேற்க தான் ஆஸ்திரேலியா சென்றுள்ளோம்; திட்டு வாங்குவதற்காக அல்ல. ரசிகர்களும் மோசமாக நடந்து கொள்கின்றனர். பதிலுக்கு நான் ஏதாவது செய்தால்(சிட்னி டெஸ்டில் நடுவிரலை காட்டியது) அபராதம் விதிக்கின்றனர்.

முதல் சதம் அடித்த போது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்று விரைவாக ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை கைப்பற்றும் பட்சத்தில் இந்தியாவுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.


கவாஸ்கர் எதிர்ப்பு:

இதற்கிடையே கோஹ்லியின் செயலுக்கு முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில்,""சதம் அடித்ததும் எதிரணி வீரர்களை நோக்கி ஆவேசமாக சைகை செய்தது பள்ளி குழந்தைகளின் செயலை போல் இருந்தது.

சச்சின், டிராவிட் போன்றவர்கள் சதம் அடித்தால், பேட்டை மட்டுமே உயர்த்திக் காட்டுவர். கோஹ்லியின் ஆட்டம் பாராட்டும்படி இருந்தது,என்றார்.

சச்சினுக்கு பாரத ரத்னா "நோ'

சச்சினுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு இல்லை. இவரது பெயரை பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்யவில்லை.

நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது கலை, இலக்கியம் மற்றும் பொது சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. சமீபத்தில், அனைத்து துறைகளிலும் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விளையாட்டு நட்சத்திரங்களும் பாரத ரத்னா விருது பெறும் தகுதியை பெற்றனர்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு இவ்விருதை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே நேரத்தில் மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்த்திற்கு தான் முதலில் கவுரவம் அளிக்க வேண்டும் என, இன்னொரு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாரத ரத்னா விருதுக்கு சச்சின் பெயரை இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) பரிந்துரை செய்யவில்லை. தியான் சந்த், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த மறைந்த டென்சிங் நார்கே ஆகியோரது பெயரை மட்டும் இவ்விருதுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,""தனிப்பட்ட வீரர்கள் தான் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பின் அரசு அமைத்த குழு இறுதி முடிவு எடுக்கும்.

பத்ம ஸ்ரீ போன்ற விருதுகளை சச்சின் வாங்கிய போது, பி.சி.சி.ஐ., அவரது பெயரை பரிந்துரை செய்யவில்லை,''என்றார்.

இதற்கிடையே பாரத ரத்னா விருதுக்கு இம்முறை யாரையும் தேர்வு செய்யப் போவதில்லை என முடிவு செய்திருப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால், இம்முறையும் விளையாட்டு நட்சத்திரங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

ரேங்கிங் - இந்தியா மீண்டும் நம்பர்-2

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில், இந்திய அணி மீண்டும் "நம்பர்-2' இடத்துக்கு முன்னேறியது.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி 117 புள்ளிகளுடன் மீண்டும் இரண்டாவது இடம் பிடித்தது.

இரண்டாவது இடத்தில் இருந்த தென் ஆப்ரிக்க அணி 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்க அணி 3-2 என கைப்பற்றிய போதும், கடைசி இரண்டு போட்டியில் தோல்வி அடைந்ததால், பின்னடைவை சந்திக்க வேண்டியதாயிற்று.

ஆஸ்திரேலிய அணி 130 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இலங்கை அணி 111 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.


கோஹ்லி "நம்பர்-3':

ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 3வது, கேப்டன் தோனி 5வது இடத்தில் நீடிக்கின்றனர்.

தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, டிவிலியர்ஸ் முதலிரண்டு இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் சதம் அடித்த தென் ஆப்ரிக்காவின் ஸ்மித், 17வது இடத்துக்கு முன்னேறினார்.


இந்தியா ஏமாற்றம்:

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், "டாப்-10' வரிசையில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை. இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (13வது இடம்), அஷ்வின் (19வது) "டாப்-20' வரிசையில் உள்ளனர்.

இலங்கைக்கு எதிராக வேகத்தில் அசத்திய தென் ஆப்ரிக்காவின் டசாட்சொபே, பத்து இடங்கள் முன்னேறி 3வது இடம் பிடித்தார். இலங்கையின் மலிங்கா, பத்தாவது இடத்துக்கு முன்னேறினார். பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், முகமது ஹபீஸ் முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.

கிரிக்கெட் "கடவுள்' சச்சின் - சொல்கிறார் ஹசி

தற்போதைய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கிரிக்கெட் "கடவுள்' சச்சின், 100வது சதம் அடிப்பது தவிர்க்க முடியாதது,'' என்கிறார் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹசி.

கடந்த 10 டெஸ்ட் போட்டிகளின், 19 இன்னிங்ஸ்களாக இந்திய பேட்டிங் மாஸ்டர் சச்சின் தனது, 100வது சதத்தை அடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதுகுறித்து மைக் ஹசி கூறியது:

சச்சின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். சரியான "புட் வொர்க்கில்', பந்தை நோக்கி பேட்டினை கொண்டு செல்லும் திறன் ஆகியவற்றை, அருகில் இருந்து பார்க்கும் போது வியப்பாக இருக்கும்.

நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று அவரது மனது நினைப்பதற்கு ஏற்பட, பேட்டும் நன்கு ஒத்துழைக்கிறது.

மற்றபடி, பல நேரங்களில் நன்கு விளையாடினாலும், ஏதாவது ஒரு பந்தில், ஒரு தவறு செய்து விட்டால், அப்புறம் பெவிலியன் திரும்ப வேண்டியது தான். தனது 100வது சதத்தை, இவர் இன்னும் அடிக்கவில்லை என்றாலும், கிரிக்கெட்டின் "கடவுள்' சச்சின் தான்.

கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்த இந்தியாவில், இவர் தெருவில் இறங்கி நடந்து சென்றால், பல ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர்.

இவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, பல்வேறு வகையான நெருக்கடிகளை சமாளித்து, தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும், தொடர்ந்து சிறப்பான முறையில் ரன்கள் குவித்து, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்து வருவது வியப்பாக உள்ளது.

இவர், மனதளவில் மிகவும் வலிமையானவர். சச்சின் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும் பட்சத்தில், 100வது சதம் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால், இது வேறு தொடரில் நடக்கட்டும். இந்த டெஸ்டில் வேண்டாம்.

இவ்வாறு மைக் ஹசி கூறினார்.

புனே வாரியர்ஸ் அணியில் கங்குலிக்கு புது வேலை

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி. நீண்ட இழுபறிக்குப் பின், ஆஷிஸ் நெஹ்ராவுக்குப் பதில், இவரை கடந்த ஆண்டு புனே வாரியர்ஸ் அணி வாங்கியது.

இதனிடையே புனே அணியின் பயிற்சியாளராக இருந்த ஜெப் மார்ஷ், இலங்கை அணிக்கு சென்று விட்டார்.

இதனால், வரும் ஐந்தாவது சீசனில் கங்குலி வீரராக மட்டுமன்றி, அணியின் ஆலோசகராவும் செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அணியின் பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு நியமிக்கப்பட்டார்.

பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரவீண் ஆம்ரேவும், மனநல பயிற்சிக்கு பட்டி ஆப்டனும் தேர்வு செய்யப்பட்டனர்.

அடிலெய்டில் சேவக் அடிப்பாரா? அடிபடுவாரா?

அன்னிய மண்ணில் சேவக்கின் மோசமான ஆட்டம் தொடர்கிறது. கடந்த 21 இன்னிங்சில் இரு முறை மட்டுமே அரைசதம் அடித்துள்ள இவர், அடிலெய்டு டெஸ்டில் மானம் காப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக அன்னிய மண்ணில் இந்திய டெஸ்ட் அணியின் துவக்கம் மோசமாக உள்ளது. இதனால் பின் வரிசை வீரர்கள் நெருக்கடிக்கு ஆளாகி, எளிதில் அவுட்டாக, தொடர் தோல்வியை அணி சந்திக்கிறது.

இதில் அதிரடி வீரர் சேவக், நான்கு ஆண்டுகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடரில், இவரது சராசரி ஒருமுறை கூட 30 ரன்களை தொடவில்லை.

இத்தனைக்கும் இங்கிலாந்து மற்றும் தற்போதைய தொடரை தவிர, மற்ற மூன்று தொடர்களில் நல்ல பார்மில் தான் இருந்தார். இருந்தும் அவர் ரன் சேர்க்காதது வியப்பை தருகிறது.


ஹர்பஜனுக்கு மோசம்:

இந்த போட்டிகளின் 21 இன்னிங்சில், சேவக் எடுத்த ரன்கள் 500ஐ எட்டவில்லை. இரு முறை மட்டும் தான் அரைசதம் அடித்தார். இது அன்னிய மண்ணில் ஹர்பஜன் சிங் எடுத்த ரன்களை விட மோசமான சராசரி. இதில் 16 முறை வேகப்பந்து வீச்சாளர்களிடம் ஒரே மாதிரியாக அவுட்டாகினார்.

அதாவது சரியான அளவில், பந்தை லேசாக"சுவிங்' செய்து வீசினால், விக்கெட் கீப்பர் அல்லது "சிலிப்' பகுதியில் "கேட்ச்' கொடுத்து விடுகிறார்.


நெருக்கடி தருமா:

தற்போது அணியின் கேப்டனாக வேறு பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன் மூன்று முறை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த போட்டிகளில், ஒன்றில் கூட தோற்றதில்லை. இப்போட்டிகளில் 173 ரன்கள் தான் எடுத்தார். இதன் சராசரி 28.33 ஆகும். பொதுவாக கேப்டன் பணி இவரது பேட்டிங்கிற்கு கைகொடுக்கப் போவதில்லை. மாறாக நெருக்கடி தான் தரும்.


நிலைக்க வேண்டும்:

2008ல் அடிலெய்டு டெஸ்டில் சேவக் முதல் இன்னிங்சில் 63, இரண்டாவது இன்னிங்சில் 151 ரன்கள் எடுத்தார். இதனால் இம்முறையும் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மானம் காக்க உதவுவார் என்று நம்பப்படுகிறது. இந்த டெஸ்டில் முதல் இரண்டு மணி நேரம் களத்தில் இருந்து விட்டால், அணியின் ஸ்கோர் 300 அல்லது அதற்கு மேல் செல்வது உறுதி.

ஒருவேளை மீண்டும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானால், கடந்த 26 மாதங்களில் பங்கேற்ற 25 டெஸ்டில், இதுவரை இல்லாத அளவுக்கு, இவரது சராசரி 50க்கும் கீழாக சென்றுவிடும்.

அவமானமா இருக்கே - கபில்தேவ் கவலை

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு, ஒரு கிரிக்கெட் வீரரான எனக்கு அவமானமாக உள்ளது,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது. இது குறித்து கபில்தேவ் கூறியது:

ஆறு மாதத்திற்கு முன்பு "நம்பர்-1' அணியாக இருந்த போது, அணியில் இடம் பெற்றிருந்த அதே வீரர்கள் தான் தற்போதும் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இவர்களது மோசமான ஆட்டம், ஒரு கிரிக்கெட் வீரராக என்னை அவமானம் அடையச் செய்கிறது. மூன்று போட்டியிலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எதிலுமே சரியாக செயல்படவில்லை.

டெஸ்ட் போட்டி என்பது ஐந்து நாட்கள் நடக்கக்கூடியது. இதிலும் நம்முடைய வீரர்கள் ஏமாற்றத்தான் செய்தனர். உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை. நமது அணி சரிவை நோக்கி செல்கிறது. அதிலிருந்து மீள வேண்டும்.

வீரர்கள், தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். குழுவாக இணைந்து செயல்பட முயற்சிக்க வேண்டும். அவர்களின் அனைத்து முயற்சிக்கும் ஆதரவு தர தயாராக உள்ளோம்.

இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

திராட்சை தோட்டத்தில் தோனி

ஆஸ்திரேலிய மண்ணில் சந்தித்த டெஸ்ட் தொடர் தோல்வியை எண்ணி தோனி கவலைப்பட்டதாக தெரியவில்லை. அடிலெய்டில் உள்ள திராட்சை தோட்டத்தில், மனைவி சாக்ஷியுடன் உலா வந்து உற்சாகமாக பொழுதை கழித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. இதில், பெர்த்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தாமதமாக பந்துவீசிய பிரச்னையில் சிக்கிய, தோனிக்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

வரும் 24ம் தேதி துவங்கும் நான்காவது போட்டிக்கு சேவக், கேப்டனாக செயல்பட உள்ளார். இப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் அடிலெய்டு வந்தனர்.

தோனியை பொறுத்தவரை, தடை காரணமாக நிறைய நாட்கள் ஓய்வு கிடைத்துள்ளது. நேற்று அடிலெய்டில் உள்ள திராட்சை தோட்டத்துக்கு மனைவி சாக்ஷியுடன் சென்று சுற்றிப் பார்த்திருக்கிறார்.

இங்குள்ள மலைகளில் 50க்கும் மேற்பட்ட திராட்சை தோட்டங்கள் உள்ளன. இதில் இருந்து தயாரிக்கப்படும் "ஒயின்' மிகவும் பிரபலம். கடந்த 1844ல் விக்டோரியா மகாராணிக்கே அடிலெய்டில் இருந்து தான் "ஒயின்' அனுப்பப்பட்டதாம்.

தொடர் தோல்வியை அடுத்து, இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு "ஹனிமூன்' சென்றார்களா...சுற்றுலா சென்றார்களா என்று விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் திராட்சை தோட்டத்தில் தோனி, உலா வந்தது புதிய பிரச்னைக்கு வழிவகுத்துள்ளது.

இதற்கிடையே, திராட்சை தோட்டத்துக்கு வீரர்கள் யாரும் செல்லவில்லை என, இந்திய அணியின் "மீடியா' மானேஜர் ஜி.எஸ். வாலியா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தோல்விக்கு ஐ.பி.எல்., காரணமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு, ஐ.பி.எல்., போட்டிகள் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்டில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. இதற்கு பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளில் அதிகளவு பங்கேற்றதே காரணம் என கூறப்படுகிறது.

இது குறித்த தங்களது கருத்துக்களை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்,


வெங்சர்க்கார்:

இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்துக்கு ஐ.பி.எல்., மட்டும் காரணமல்ல. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன், தேவையான அளவு போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதுவே தோல்விக்கு வழி வகுத்தது. அன்னிய மண்ணில் விளையாடச் செல்லும் முன், முறையான பயிற்சி மேற்கொண்டிருக்க வேண்டும்.


சந்து போர்டே:

ஐ.பி.எல்., போட்டியை மட்டும் நாம் பழிக்க கூடாது. இந்திய பேட்ஸ்மேன்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. ஒரு சில அனுபவ வீரர்கள் போட்டி துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர். இருந்தபோதும், ஏன் சோபிக்க தவறினர் என்று தெரியவில்லை.


பாபு நட்கர்னி:

இந்திய அணியின், அனுபவ வீரர்கள் வெவ்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் மாறும் தன்மை இல்லாமல் உள்ளனர். இது தோல்விக்கு முக்கிய காரணம். ஒருவேளை வீரர்கள் ஐ.பி.எல்., போட்டியில் விளையாடுவதால் டெஸ்டில் விளையாட முடியவில்லை என்று உணர்ந்தால், ஏதாவது ஒன்றில் பங்கேற்றுவிட்டு, ஒன்றை புறக்கணித்து விட வேண்டியது தான்.


ஆகாஷ் சோப்ரா:

இளம் வீரர்கள் டெஸ்டில் பின்னடைவை சந்திப்பதற்கு ஐ.பி.எல்., மட்டும் காரணம் கிடையாது. இக்கட்டான சமயங்களில் பொறுமையாக செயல்படும் குணம் வீரர்களிடம் இல்லை. தோல்விக்கான காரணத்தை இப்போதே கண்டறிந்து, சரியான தீர்வு காண வேண்டும்.


கவாஸ்கர்:

டெஸ்ட், ஐ.பி.எல்., போட்டிகளில் வீரர்களின் பேட்டிங் "ஸ்டைல்' மட்டுமே மாறுபடும். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஐ.பி.எல்., போட்டியில் விளையாடியவர் தான். இவரால் மட்டும் எப்படி சாதிக்க முடிகிறது. எனவே இக்கருத்து முற்றிலும் தவறானது.


பிஷன்சிங் பேடி:

இந்திய அணியின் தொடர் தோல்விக்கு ஐ.பி.எல்., தான் முதன்மை காரணம். தவிர, கிரிக்கெட்டிற்கு ஒரு கொள்கை உண்டு. ஐ.பி.எல்., போட்டிக்கு எந்த விதமான கொள்கையும் இல்லை. இதில், பணம் மட்டுமே முக்கிய குறிக்கோள்.


மனோஜ் பிரபாகர்:

தற்போதுள்ள, இளம் வீரர்கள் பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இதே அளவு ஆர்வத்தினை ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் காட்டுவதில்லை. நீண்ட நாட்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டிய பணத்தை, ஒரு மாதத்தில் ஐ.பி.எல்., போட்டியில் பெற்று விடுகின்றனர்.


கட்டாயம் இல்லை

ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,""ஐ.பி.எல்., தொடரில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஷேன் வாட்சன் இடம் பெற்றுள்ளனர். இவர்களால் மட்டும் எப்படி சிறப்பான ஆட்டத்தை மற்ற போட்டிகளிலும் வெளிப்படுத்த முடிகிறது.

தவிர, ஐ.பி.எல்., தொடர் மே மாதமே முடிந்தது விட்டது. இதன் பின் நிறைய போட்டிகளில் இந்திய அணி பங்கேற்றுவிட்டது. மேலும் வீரர்களை யாரும் கண்டிப்பாக போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை,''என்றார்.

உதவாக்கரை இந்திய அணி

டெஸ்ட் தொடரில் சொதப்பிய இந்திய அணியை, ஆஸ்திரேலிய பத்திரிகைகள் கடுமையாக சாடியுள்ளன. ரன் எடுக்க திணறிய பேட்ஸ்மேன்களை, உதவாக்கரை என படுமோசமாக விமர்சித்துள்ளன.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி முதல் கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரிசையாக முதல் மூன்று டெஸ்டில் வீழ்ந்த இந்திய அணி, தொடரை 3-0 என இழந்தது.

இத்தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடு படுமோசமாக இருந்தது. ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை. இது குறித்து ஆஸ்திரேலிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ள விமர்சன செய்திகள்:


"தி ஆஸ்திரேலியன்':

எட்டு மாதங்களுக்கு முன் நம்பர்-1 அணியாக இருந்த இந்திய அணியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. பலமாக கருதப்பட்ட "பேட்டிங்' தூண்கள், உடைந்து போன பயனற்ற கற்களாக காட்சி அளித்தனர். இவர்களது உதவாக்கரை ஆட்டம் அணிக்கு கைகொடுக்கவில்லை. முன்பு ஆஸ்திரேலிய பவுலர்களை பயமுறுத்தக்கூடியவராக இருந்த லட்சுமண், இம்முறை 2, 1, 2, 66, 31,0 என மோசமான ஸ்கோர் எடுக்க, உள்ளூரிலேயே அதிக விமர்சனங்களை சந்திக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் அடித்த கையோடு இத்தொடரில் பங்கேற்றார் சேவக். மெல்போர்னில் சூறாவளியாக 67 ரன்கள் எடுத்த இவர், பின் 7, 30, 4, 0, 10 என மட்டமான ஸ்கோரில் வெளியேறினார். தோனியும் பேட்டிங்கில் கோட்டை விட்டார்.

6, 23, 57, 2, 12, 2 என குறைவான ஸ்கோர் எடுத்தார். இவரே மோசமாக விளையாடியதால், மற்ற பேட்ஸ்மேன்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியவில்லை. கடந்த 3 டெஸ்டில் இந்தியா சார்பில் ஒருவர் கூட சதம் அடிக்கவில்லை.


பாராட்டு இல்லை:

பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் டிராவிட்டை, ஹாரிஸ் போல்டாக்கினார். உடனே அவர் பின் மிக நீண்ட தூரம் ஓடிச் சென்று, முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டினார் கேப்டன் மைக்கேல் கிளார்க். அதே நேரத்தில் உமேஷ் யாதவ் 5வது விக்கெட்டை பெற்ற போது, அவருக்கு கேப்டன் தோனி உள்ளிட்ட சக இந்திய வீரர்கள் பாராட்டு தெரிவிக்கவில்லை.


"தி டெய்லி டெலிகிராப்':

பத்திரிகையாளர் சந்திப்பில் மைக்கேல் கிளார்க்கிடம் கேட்ட முதல் கேள்வியே,"வங்கதேசத்திடம் விளையாடுவதை போல் உணர்ந்தீர்களா?' என்பது தான். இதுவே இந்திய அணியின் மோசமான ஆட்டத்துக்கு நல்ல உதாரணம். தாமதமாக பந்துவீசிய விவகாரத்தில் சிக்கிய இந்திய கேப்டன் தோனி, அடிலெய்டு டெஸ்டில் பங்கேற்க முடியாது.

இது ஏற்கனவே தவிக்கும் இந்திய அணிக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. "பார்ம்' இல்லாத சேவக், கேப்டன் பதவியை ஏற்க <உள்ளார். இவரது சராசரி இம்முறை 19 ரன்கள் தான். தனது சொந்த பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் சேவக், சிதறிப் போன இந்திய அணியை எப்படி மீட்க போகிறார் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இத்தொடரின் புள்ளிவிவரங்களை பார்த்தால், ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் புரியும். ஆஸ்திரேலிய அணி ஒவ்வொரு விக்கெட்டுக்கும் சராசரியாக 47.08 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 22.9 ரன்கள் தான் எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் நான்கு பேர் 134 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இந்திய அணி வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரே 83 ரன்கள் தான். ஆஸ்திரேலிய "வேகங்கள்' 57 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.


"ஹெரால்டு சன்':

ஆஸ்திரேலிய அணி பயிற்சி உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் கூடுதல் அக்கறை செலுத்தியது. கோடிகளில் புரளும் இந்திய வீரர்களோ, பயிற்சிக்கு பதிலாக பெரும்பாலான நேரம் மரங்களின் நிழலில் ஓய்வு எடுத்தனர். இதன் பலனை போட்டிகளில் அனுபவித்தனர்.


"சிட்னிங் மார்னிங் ஹெரால்டு':

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது. அப்போது, இதே போன்றதொரு "அடி'யை இந்திய அணிக்கு கொடுக்க வேண்டும் என்று சக வீரர்களுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கட்டளையிட்டார்.

இதற்கேற்ப விக்கெட் பசியோடு காணப்பட்ட "வேகப்புயல்கள்' இந்திய அணியை சிதறடித்தனர். மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு புத்துயிர் கொடுத்துள்ளார் கிளார்க்.

முத்தரப்பு தொடரில் சச்சின் - இந்திய அணி அறிவிப்பு

முத்தரப்பு தொடருக்கான இந்திய அணியில் சச்சின் இடம் பெற்றார். மிக நீண்ட இடைவெளிக்கு பின் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்.

தற்போதைய டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இரண்டு "டுவென்டி-20' போட்டிகளில்(பிப்., 1, பிப்., 3) விளையாட உள்ளன. பின் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர்(பிப்., 5- மார்ச் 8) நடக்க உள்ளது.

இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சச்சின் பெயரும் இடம் பெற்றுள்ளது. "டுவென்டி-20' போட்டியில் இருந்து ஏற்கனவே விலகி விட்ட இவர், முத்தரப்பு தொடரில் விளையாட உள்ளார்.

கடந்த ஏப்., 2ல் நடந்த உலக கோப்பை பைனலுக்கு பின், மீண்டும் ஒருநாள் போட்டிகளில் களமிறங்க உள்ளார். தனது 100வது சர்வதேச சதத்தை முத்தரப்பு தொடரில் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


யுவராஜ் "நோ':

காயத்தில் இருந்து மீண்ட பிரவீண் குமார், இர்பான் பதான், "ஸ்பின்னர்' ராகுல் சர்மா, மனோஜ் திவாரி, பார்த்திவ் படேல் வாய்ப்பு பெற்றுள்ளனர். தற்போதைய டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள இஷாந்த் சர்மா, விரிதிமான் சகா நீக்கப்படுகின்றனர்.

காயத்தில் இருந்து மீளாத யுவராஜ், ஹர்பஜன் சிங், வருண் ஆரோன், முனாப் படேல் இடம்பெறவில்லை.

"டுவென்டி-20' மற்றும் முத்தரப்பு தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:

தோனி(கேப்டன்), சேவக்(துணை கேப்டன்), சச்சின், காம்பிர், விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், பிரவீண் குமார், வினய் குமார், மனோஜ் திவாரி, ராகுல் சர்மா, பார்த்திவ் படேல், இர்பான் பதான், ஜாகிர் கான்.

தோனிக்கு தடை: சேவக் புதிய கேப்டன்

இந்திய அணிக்கு சோதனை மேல் சோதனை. தாமதமாக பந்துவீசிய விவகாரத்தில், தோனிக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. நான்காவது டெஸ்டுக்கு கேப்டன் பொறுப்பை சேவக் ஏற்கிறார்.

பெர்த்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இப்போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் நான்கு "வேகங்களுடன்' இந்தியா களமிறங்கியது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில், 2 ஓவர்கள் தாமதமாக பந்துவீச நேர்ந்தது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) விதிமுறைப்படி தவறு.

இத்தகைய தவறை ஒரு ஆண்டில் மூன்று முறை செய்யலாம். சமீபத்தில் தான் இரண்டாக குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பார்படாஸ் டெஸ்டில் தாமதமாக பந்துவீசிய பிரச்னையில் தோனி சிக்கினார்.

தற்போது இரண்டாவது முறையாக சிக்கியதால், இவர் மீது அம்பயர்கள் அலீம் தர், தர்மசேனா புகார் செய்தனர். இதனை விசாரித்த ஐ.சி.சி., "மேட்ச் ரெப்ரி' ரஞ்சன் மடுகுலே, தோனிக்கு ஒரு போட்டி தடை மற்றும் அபராதம் விதித்தார். சக வீரர்கள் அபராதத்துடன் தப்பினர். தனது தவறை ஒத்துக் கொண்ட தோனி, தண்டனையை ஏற்றுக் கொண்டார்.

இது குறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,""நடத்தை விதிமுறையின்படி தாமதமாக பந்துவீசினால், ஒரு ஓவருக்கு வீரர்களின் போட்டி சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். கேப்டனுக்கு இரண்டு மடங்காக அபராதம் அதிகரிக்கப்படும்.

இந்திய அணி இரண்டு ஓவர்கள் தாமதமாக பந்துவீசியதால், வீரர்களுக்கு 20 சதவீதம், தோனிக்கு ஒரு போட்டி தடை மற்றும் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது,''என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 24ம் தேதி அடிலெய்டில் துவங்கும் நான்காவது டெஸ்டில் தடை காரணமாக தோனி இடம் பெற முடியாது. இவருக்கு பதிலாக அணியின் கேப்டன் பெறுப்பை சேவக் ஏற்க உள்ளார். விக்கெட் கீப்பர் பணியை விரிதிமன் சகா ஏற்பார்.

கேப்டன் தோனியை நீக்க வேண்டும்

தோனியை டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும். சீனியர் வீரர்கள் லட்சுமண், டிராவிட் இருவரும் ஓய்வு பெற வேண்டும்,'' என, கங்குலி உள்ளிட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முதல் இரண்டு டெஸ்டில் தோல்வியடைந்தது. பெர்த்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்டிலும் மோசமான நிலையில் உள்ளது.


தோனி வேண்டாம்:

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மதன் லால் கூறுகையில்,""டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

புது சிந்தனையுடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் மற்றொரு வீரரை கொண்டு வருவதற்கான சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன்,'' என்றார்.


விலக வேண்டும்:

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது:

ஈடன் கார்டனில் டிராவிட், லட்சுமண் இருவரும் சாதித்தது போல, மீண்டும் வேண்டும் என, நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இவர்கள் இப்போது 40 வயதை நெருங்குகின்றனர்.

சொந்த மண்ணில் திறமை வெளிப்படுத்தினாலும், அடுத்து 2013ல் இந்திய அணி அன்னிய மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும். இதற்கு முன், தானாக ஓய்வு பெறுவது குறித்து, இந்த வீரர்கள் முடிவெடுக்க வேண்டும்.


இடம் கிடைக்காது:

தற்போதைய நிலையில் பெர்த் மட்டுமல்ல, அடிலெய்டிலும் தோல்வி தான் கிடைக்கும் என்று தெரிகிறது. கேப்டன் தோனி மீதமுள்ள மூன்று இன்னிங்சில், தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டும்.

இல்லையென்றால் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிப்பதே சிக்கலாகி விடும். இத்தொடருக்குப் பின் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும்.
இவ்வாறு கங்குலி கூறினார்.


என்ன பயன்?

கபில்தேவ் கூறுகையில்,""பணம் மற்றும் உலக கிரிக்கெட்டை கட்டுபடுத்துவதில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நல்ல நிலையில் உள்ளது. இவ்வளவு செல்வாக்கு இருந்து என்ன பயன், அன்னிய மண்ணில் இந்திய அணி தொடர் தோல்வியைத் தான் சந்திக்கிறது. பி.சி.சி.ஐ., உண்மையில் ஒரு வலிமையான அணியை உருவாக்கவில்லை,'' என்றார்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்

பெர்த் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்புவதால், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. பவுலிங்கில் எழுச்சி பெற்ற உமேஷ் யாதவ், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட், பெர்த்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 161 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 149 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர்( 104), கோவன் (40) அவுட்டாகாமல் இருந்தனர்.


உமேஷ் அபாரம்:

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. இம்முறை உமேஷ் யாதவ் பவுலிங்கில் அசத்தினார். இவரது வேகத்தில் கோவன் (74), பாண்டிங் (7) போல்டாகினர். மார்ஷ்சும் 11 ரன்னில் அவுட்டாகினார். வார்னரை (180) இஷாந்த் சர்மா வெளியேற்றினார். கிளார்க் 18 ரன்கள் எடுத்தார்.

ஹாடின் "டக் ஆனார். ஹசி (14), சிடில் (30), ஹாரிஸ் (9) நிலைக்கவில்லை. ஹில்பெனாஸ் (6) சேவக் சுழலில் வீழ்ந்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 208 ரன்கள் முன்னிலை பெற்றது. ஸ்டார்க் (15) அவுட்டாகாமல் இருந்தார்.

பவுலிங்கில் அசத்திய உமேஷ் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார். ஜாகிர் கான் 2, வினய் குமார், இஷாந்த் சர்மா, சேவக் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.


சச்சின் "அவுட்:

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு காம்பிர் (14), சேவக் (10) இருவரும் அதிர்ச்சி தந்தனர். சச்சின் 8 ரன்களுக்கு அவுட்டாகி, மீண்டும் சதத்தில் சதம் அடிக்காமல் ஏமாற்றினார்.

லட்சு"மண் "டக் அவுட்டாகினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு, 88 ரன்கள் எடுத்து, 120 ரன்கள் பின்தங்கி இருந்தது. டிராவிட் (32), கோஹ்லி (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணியின் கடைசி வாய்ப்பு

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் இந்திய அணி 0-2 என பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட், பெர்த் மைதானத்தில் இன்று துவங்குகிறது.

இது குறித்து அக்ரம் கூறியது:

பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சு சாதகமாகவும், நன்கு "பவுன்ஸ்' ஆகும். இங்கு பெரும்பாலும் ஆஸ்திரேலிய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், கடந்த 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. எனவே இன்றும் கவனமுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

முதல் இரண்டு போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடு உண்மையிலேயே மிகவும் மந்தமாக இருந்தது. ரோகித் சர்மா உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு தேர்வு குழுவினர் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

ஏனென்றால் லட்சுமண், சச்சின், டிராவிட் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் தொடர்ந்து அணிக்காக விளையாட முடியாது. கடந்த ஒரு வருடமாக டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொதப்பி வருகிறது.

சிட்னி, மெல்போர்ன் இரண்டிலும் சச்சின் மட்டும் தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா போட்டி என்பதால் இதில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நினைக்கிறேன்.

தோல்வி அடையும் அணி விமர்சனத்திற்குள்ளாவது இயற்கை தான். தேவையற்ற விமர்சனத்தை தவிர்க்க வெற்றி பெறுவது தான் ஒரே வழி. பெர்த் வெற்றி இந்திய அணிக்கு பெரும் திருப்பு முனையாக அமையும். கடந்த தோல்விகளை மறந்து புத்துணர்ச்சியுடன் களமிறங்கினால் சாதிக்கலாம்.

இவ்வாறு அக்ரம் கூறினார்.

அணியில் பிளவை ஏற்படுத்துகிறார் சேவாக்

இந்திய அணி வீரர்களிடையே துணை கேப்டன் வீரேந்திர சேவாக், பிளவை ஏற்படுத்துகிறார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவின் "ஹெரால்டு சன்' வெளியிட்டுள்ள செய்தியில், "அணி வீரர்களிடையே பிளவை ஏற்படுத்தும் கருத்துகளைக் கொண்டுள்ளார் சேவாக்' என்று கூறியுள்ளது. இந்திய அணி வீரர்களிடையே ஒற்றுமையில்லை.

அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் தெரிவித்ததாகவும் அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அணிக்கு யார் கேப்டனாக இருப்பது என்பதில் இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. சில வீரர்கள் சேவாக் கேப்டனாக வரவேண்டும் என்றும், சில வீரர்கள் தோனியே கேப்டனாகத் தொடர வேண்டும் என்றும் விரும்புகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, "உலகில் உள்ள மற்ற அணிகளோடு ஒப்பிடும்போது இந்திய அணி விரைவாக சுருண்டுவிடும். அந்த அணி எப்போதெல்லாம் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறதோ, அப்போது அந்த அணி வீரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள்' என்று ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், "சிட்னி ஹெரால்டு' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், "ஹாடின் அவரது விக்கெட் கீப்பர் பணியில் மட்டும் கவனம் செலுத்தட்டும். மற்றதைப் பற்றிப் பேச வேண்டாம்.

இந்திய வீரர்களுக்கு மனதளவில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காகவே ஹாடின் இவ்வாறு பேசியுள்ளார்' என்றார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி கண்டு பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், இப்போது ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமின்றி, ஊடகங்களும் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படுவாரா?

ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள சர்வதேச "டுவென்டி-20' மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய வீரர்களின் தேர்வு, வரும் 15ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் "உலக கோப்பை தொடர் நாயகன்' யுவராஜ் சிங் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முதற்கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அதன்பின், இரண்டு சர்வதேச "டுவென்டி-20' மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதில் மூன்றாவது அணியாக இலங்கை விளையாடுகிறது.

இரண்டு சர்வதேச "டுவென்டி-20' போட்டிகள் சிட்னி (பிப்., 1) மற்றும் பெல்போர்ன் (பிப்., 3) நகரில் நடக்கிறது.

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி பிப்., 5ம் தேதி மெல்போர்னில் நடக்கிறது.

இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய வீரர்களின் தேர்வு, வரும் 15ம் தேதி பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் சென்னையில் நடக்கிறது.

இதில் "ஆல்-ரவுண்டர்' யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஓய்வில் இருக்கும் இவர், தற்போது முழுமையாக குணமடைந்து, பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

பயிற்சிக்கு "நோ' சொன்ன வீரர்கள்

டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய வீரர்கள் திருந்தவே இல்லை. தீவிர பயிற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக, "கோ- கார்ட்டிங்' ரேசில் பங்கேற்று சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணி, முதலிரண்டு டெஸ்டில் தோல்வி அடைந்தது. முக்கியமான மூன்றாவது டெஸ்ட் வரும் 13ம் தேதி பெர்த்தில் துவங்குகிறது.

இதில், சாதிப்பதற்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், "கோ-கார்ட்டிங்' எனப்படும் சிறிய வகை கார் ரேசில் கலந்து கொண்டு பொழுதை வீணாக்கினர்.


தோனி அணுகுமுறை:

இத்தொடரில் இந்திய வீரர்கள் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதது பற்றி முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையாக சாடினார். இவர்கள், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்லவில்லை என விமர்சித்தார்.

வீரர்களின் தவறான மனநிலைக்கு கேப்டன் தோனியின் அணுகுமுறையும் ஒரு காரணம். வலைப்பயிற்சியில் ஈடுபடுவதால் உடனடி பலன் கிடைக்கப் போவதில்லை என நம்புகிறார். இவர் கூறுகையில்,""ஆஸ்திரேலிய பந்துவீச்சை நமது வீரர்கள் நன்கு அறிந்து கொண்டனர்.

தற்போதைக்கு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது தான் நல்லது. சிலர் பயிற்சியில் அதிக நேரம் செலவழிக்க விரும்பலாம். தனிப்பட்ட முறையில் என்னை கேட்டால், கிரிக்கெட்டில் இருந்து விலகி, பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவதே சிறந்தது. இது மனதளவில் புது உற்சாகம் தரும்,''என்றார்.

இதே கருத்தையே இந்திய அணியின் மானேஜர் அலுவாலியாவும் பிரதிபலித்தார். இவர் கூறுகையில்,""கோ-கார்ட்டிங் ரேஸ்' போன்றவை மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும். சிறிய வகை ரேஸ் காரை ஓட்டும் போது புது அனுபவம் கிடைக்கும்.

2007-08ல் பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டிக்கு முன், இந்திய வீரர்கள் சைக்கிள் "ரேசில்' கலந்து
கொண்டனர். பின் அந்த போட்டியில் வெற்றி பெற்றனர்,'' என்றார்.

அலுவாலியா சொல்வது போல் இம்முறையும் இந்திய அணி வெற்றி பெறுமா?

ரேங்கிங்: இந்தியா பின்னடைவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி "டிரா' (2-2) செய்தால் கூட, ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில், இங்கிலாந்து (125), இந்தியா (118), தென் ஆப்ரிக்கா (117), ஆஸ்திரேலியா (103) முதல் நான்கு இடங்களில் உள்ளன. இதில் இந்திய அணி, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒருவேளை மீதமுள்ள இரண்டு டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், தொடர் 2-2 என "டிரா' ஆகிவிடும்.

இருப்பினும், ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில், இந்திய அணி 117 புள்ளிகள் பெற்று, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். இதனால் தென் ஆப்ரிக்க அணி (117), ஒரு சில தசம புள்ளிகள் வித்தியாசத்தில், இரண்டாவது இடத்துக்கு முன்னேறும்.

டெஸ்ட் தொடரை, 3-0 என கைப்பற்றும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணி 110 புள்ளிகளுடன், நான்காவது இடத்தில் நீடிக்கும். இந்திய அணி 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும்.

ஒருவேளை 3-1 என கைப்பற்றும் பட்சத்தில், ஆஸ்திரேலிய அணி 108 புள்ளிகளுடன் 4வது இடத்தில் தொடரும். இந்திய அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடிக்கும்.

ஒருவேளை, 4-0 என முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில், ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு தலா 111 புள்ளிகள் கிடைக்கும். ஒரு சில தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணி மூன்றாவது இடத்தை பெறும்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், சச்சின் (6வது இடம்), டிராவிட் (15வது இடம்), லட்சுமண் (18வது இடம்), சேவக் (22வது இடம்) உள்ளிட்ட இந்திய வீரர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

சிட்னி டெஸ்டில் 329 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் (8வது இடம்), சுமார் 15 மாதங்களுக்கு பின் "டாப்-10' வரிசையில் இடம் பிடித்துள்ளார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, 12வது இடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங்கில், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பென் ஹில்பெனாஸ், 11 இடங்கள் முன்னேறி, முதன்முறையாக 11வது இடம் பிடித்தார்.

இந்திய பேட்ஸ்மேன்கள் காகிதப்புலிகள்

இந்திய பேட்ஸ்மேன்கள் காகித புலிகளாக உள்ளனர். களத்தில் தொடர்ந்து சொதப்பும் இந்த வயதான வீரர்கள் தேவைதானா'' என ஆஸ்திரேலிய "மீடியா'க்கள் சாடியுள்ளன.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடக்கிறது. மெல்போர்னில் 122 ரன்கள் வித்தியாசம், சிட்னி டெஸ்டில் இன்னிங்ஸ், 68 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்த இந்திய அணி, தொடரில் 0-2 என பின்தங்கியுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளின் செய்திகள்:


"ஆஸ்திரேலியன் அசோசியேட் பிரஸ்'

காகித அளவில் பார்த்தால், இந்திய டெஸ்ட் அணியின் "பேட்டிங்' படை, இதுவரை பார்த்திராத அளவில் அஞ்சத்தக்க வகையில் இருந்தது. ஆனால் உண்மையில் இவர்களுக்கு வயதாகிவிட்டது. அனுபவம் பயனற்றதாகி விட்டது.

டிராவிட், சச்சின் 39 வயதை நெருங்குகின்றனர். லட்சுமண் 37ல் உள்ளார். இவர்களை வைத்து தான் சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி மோசமாக தோற்றது. தற்போது ஆஸ்திரேலிய தொடரில் பின்தங்கியுள்ளது. இவையெல்லாம் ஏதோ கெட்ட செய்தியை உணர்த்துகின்றன.

சாம்பியன் வீரர்கள் அதிகம் நிறைந்திருப்பது எப்போதும் அணிக்கு ஆபத்து தான் தரும். இந்த மும்மூர்த்திகள் தவிர, சேவக், கேப்டன் தோனியும் சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்திய அணி "நம்பர்-1' இடத்தை இங்கிலாந்திடம் இழக்கும் முன், இந்த சீனியர் வீரர்கள் பெரிய "பார்ட்னர்ஷிப்' அமைத்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். இப்போது அதுபோல நிகழவில்லை. இவர்களது வயது குறித்து கேள்விகள் எழுகின்றன.


"சிட்னி மார்னிங் ஹெரால்டு'

சிட்னி மைதானம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என மிகைப்படுத்தப்பட்ட வதந்தி இருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்குப் பின்னும் சச்சின், லட்சுமண் களத்தில் இருந்த போது, இந்திய அணி மீண்டுவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. சச்சின், லட்சுமண் வெளியேறிய பின், மற்ற வீரர்கள் வழக்கம் போல போவதும் வருவதுமாக இருக்க, கிளார்க் மடியில் வெற்றி விழுந்தது.


"தி ஆஸ்திரேலியன்'

கிளார்க், சச்சினின் ஒரு விக்கெட்டை மட்டும் தான் வீழ்த்தினார். இது ஐந்து விக்கெட் எடுத்ததற்கு சமம். எப்போது சச்சின் அவுட்டானாரோ, அது மற்ற வீரர்களின் வெளியேற்றத்துக்கான வாசல் கதவை திறந்து விட்டது.


"ஹெரால்டு சன்'

பெரிய பேட்டிங் படை கொண்ட இந்திய வீரர்களை, நான்கு நாட்களில் வீழ்த்தி, இரு வாரத்தில் இருமுறை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது பாராட்டுக்குரியது. கேப்டன், ஒருநாள் 300 ரன்கள் எடுக்கிறார். மறுநாள் சச்சினின் விக்கெட்டை வீழ்த்தி, 100வது சத சாதனையை தடுக்கிறார். இவர் கேப்டனாக இனி செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.


"டெய்லி டெலிகிராப்'

சொந்த மண்ணில் கிளார்க் அடித்த "டிரிபிள்' சதம், என்றென்றும் நினைவில் நீடித்து இருக்கும். சரியான நேரத்தில் பாண்டிங், ஹசி சதம் அடித்தனர்.

இவ்வாறு அவை தெரிவித்து இருந்தன.

54 நாட்கள்...76 போட்டிகள்: ஐ.பி.எல்., அட்டவணை அறிவிப்பு

ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், சென்னையில் வரும் ஏப்ரல் 4ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 54 நாட்களில் மொத்தம் 76 போட்டிகள் நடக்க உள்ளன.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், ஆண்டுதோரும் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர், வரும் ஏப்ரல் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.

இத்தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மும்பையில் நேற்று அறிவித்தது. வரும் ஏப்ரல் 4ம் தேதி சென்னையில் நடக்கும் முதல் போட்டியில், "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

கடந்த தொடரில் அறிமுகமான கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, சமீபத்தில் ஐ.பி.எல்., தொடரில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்ட்டா நைட்ரைடர்ஸ் உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன.

மொத்தம் 54 நாட்கள் நடக்கும் இத்தொடரில், 72 லீக் போட்டிகள், மூன்று "பிளே-ஆப்' (பைனலுக்கான தகுதிச் சுற்று), ஒரு பைனல் உட்பட மொத்தம் 76 போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடக்கின்றன. பெங்களூருவில் இரண்டு "பிளே-ஆப்' போட்டிகளும், சென்னையில் ஒரு "பிளே-ஆப்' மற்றும் பைனல் (மே 27) நடக்கிறது.

லீக் போட்டிகள் அனைத்தும், முதல் மூன்று தொடரில் விளையாடியது போல நடக்கும். அதாவது ஒரு அணி, மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை லீக் போட்டியில் விளையாடும். இதில் ஒரு போட்டி உள்ளூரிலும், மற்றொரு போட்டி எதிரணியின் ஊரிலும் விளையாடும்.

லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள், பைனலுக்கான "பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

முதல் "பிளே-ஆப்' போட்டியில், முதலிரண்டு இடங்களில் உள்ள அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி, பைனலுக்கு நேரடியாக முன்னேறிவிடும். இரண்டாவது "பிளே-ஆப்' போட்டியில் 3, 4வது இடத்தில் உள்ள அணிகள் மோதும்.

இதில் வெற்றி பெறும் அணி, முதல் "பிளே-ஆப்' போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன், மூன்றாவது "பிளே-ஆப்' போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி, பைனலுக்கு தகுதி பெறும்.

100வது சதத்தைப் பற்றி நினைக்கவில்லை

100-வது சதத்தைப் பற்றிய சிந்தனையின்றி போட்டியை மிகவும் ரசித்து விளையாடுவதற்கே முன்னுரிமை கொடுக்கிறேன் என்று சச்சின் கூறியுள்ளார்.

சச்சினின் 100-வது சதத்தை எதிர்நோக்கி உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அவர் மேலும் கூறியது:

100-வது சதம் என்பது வெறும் எண்ணிக்கைதானே என்று சொல்வது எளிது. ஆனால் அதை அடிப்பது கடினம். 100-வது சதம் குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால் நான் போட்டியை ரசித்து விளையாடவே விரும்புகிறேன். ரசிப்புத் தன்மை மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன்.

இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சியோடு விளையாடுவதிலும், வெற்றிபெறுவதிலுமே முழுக் கவனமும் உள்ளது என்றார்.

இலங்கையில் ஐ.பி.எல்., போட்டிகள்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' தொடரை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு நடக்கும் ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் ஒரு சில போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு தலைவர் தர்மதாசா கூறுகையில்,"" ஐ.பி.எல்., போட்டிகளை நடத்துவதன் மூலம் இலங்கைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர்.

கிரிக்கெட் போர்டும் நல்ல வளர்ச்சி பெறும். இது குறித்து பி.சி.சி.ஐ.,யிடம் ஏற்கனவே பேசியுள்ளோம். இதற்கு ஒத்துழைப்பு தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

தவிர, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒரு நாள் உள்ளிட்ட போட்டிகளும் ஆண்டிற்கு மூன்று முறை நடந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன்,'' என்றார்.

கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்

கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக டிரவர் பெய்லிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், ஆண்டுதோரும் "டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவ் வாட்மோர் இருந்தார்.

சமீபத்தில் இவரை, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக நியமிக்க, அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் கோல்கட்டா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து முறைப்படி விலகினார்.

இவருக்கு மாற்று பயிற்சியாளராக, முன்னாள் இலங்கை அணியின் பயிற்சியாளர் டிரவர் பெய்லிசை, நேற்று கோல்கட்டா அணி நிர்வாகம் நியமித்தது.

இவரது பயிற்சியின் கீழ், இலங்கை அணி கடந்த 2009ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை மற்றும் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் பைனலுக்கு முன்னேறியது.

இதுகுறித்து கோல்கட்டா அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் கூறுகையில், ""கோல்கட்டா அணியின் பயிற்சியாளராக டிரவர் பெய்லிசை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவரது அனுபவம், கோல்கட்டா அணியின் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.

பெய்லிஸ் கூறுகையில், ""கோல்கட்டா அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்ததற்கு, அணி நிர்வாகத்தினருக்கும், அதன் சீனியர் வீரர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக நடந்த ஐ.பி.எல்., தொடர்களை பார்த்துள்ளேன்.

இதில் கோல்கட்டா அணியினரின் செயல்பாட்டினை நன்கு அறிந்துள்ளேன். ஒவ்வொரு வீரரின் திறமைக்கேற்ப பயிற்சி அளித்து, கோல்கட்டா அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன்,'' என்றார்.

பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற ஆட்டம் - மீண்டும் ஏமாற்றிய சச்சின்

சிட்னி டெஸ்டில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு சுருண்டது. 41 ரன்னுக்கு அவுட்டாகிய சச்சின், 100வது சர்வதேச சதம் அடிக்க மீண்டும் தவறினார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் சிட்னியில் நடக்கிறது. "டாஸ் வென்ற தோனி "பேட்டிங் தேர்வு செய்தார். துவக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டினர்.

முதலில் காம்பிர் "டக் அவுட்டாகி சரிவைத் துவங்கி வைத்தார். சிறிது நேரத்தில் "சீனியர் டிராவிட்டும் (5) ஏமாற்றினார்.

சற்று நேரம் போராடிய சேவக் 30 ரன்கள் எடுத்தார். லட்சுமண் (2) மறுபடியும் சொதப்பினார். விராத் கோஹ்லி (23) ஏமாற்றினார்.

பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சச்சின், 41 ரன்களுக்கு அவுட்டாகி, மீண்டும் சதத்தில் சதம் அடிக்கும் சாதனையை நழுவ விட்டார். சற்று தாக்குப்பிடித்த அஷ்வின் 20 ரன்கள் எடுத்தார்.

ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மூவரும் "டக் அவுட்டாகினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரைசதம் அடித்த தோனி (57) அவுட்டாகாமல் இருந்தார்.

பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி துவக்கத்தில் வார்னர் (8), மார்ஷ் (0), கோவன் (16) விக்கெட்டுகளை இழந்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 3 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது.

பாண்டிங் (44), கிளார்க் (47) அவுட்டாகாமல் இருந்தனர். ஜாகிர் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

சிட்னி ஆடுகளம் யாருக்கு சாதகம்

சிட்னி ஆடுகளம் "சுழலுக்கு ஒத்துழைக்குமா அல்லது "வேகத்துக்கு கைகொடுக்குமா என்ற குழப்பம் நீடிக்கிறது. இது ஆஸ்திரேலிய அணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி இந்திய அணியை சிதறடிக்க, கேப்டன் மைக்கேல் கிளார்க் திட்டமிடுகிறார். அதே நேரத்தில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், ஒரு சுழற்பந்துவீச்சாளர் கட்டாயம் வேண்டுமென வலியுறுத்துவதால், பிரச்னை வெடித்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.


மாறிய களம்:

இரண்டாவது டெஸ்ட் நாளை சிட்னியில் துவங்குகிறது. இங்குள்ள ஆடுகளம் பொதுவாக சுழலுக்கு ஒத்துழைக்கும். ஆனால், கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய "ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் மொத்தம் வீழ்ந்த 30 விக்கெட்டுகளில், 3 விக்கெட்டை தான் சுழற்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினர்.

இது, சிட்னி ஆடுகளம் "வேகத்துக்கு சாதகமாக மாறியிருப்பதை சுட்டிக் காட்டியது. இதே நிலை இம்முறையும் தொடரலாம். இதன் காரணமாக தான் ஆஸ்திரேலிய அணியில் அவசர அவசரமாக "வேகப்புயல் ரியான் ஹாரிஸ் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து பீட்டர் சிடில், ஹில்பெனாஸ், பட்டின்சன், ஹாரிஸ் என நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க, கேப்டன் மைக்கேல் கிளார்க் திட்டம் வகுத்து இருக்கிறார். இதற்கு பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "எல்லாம் வேகம் என்ற கொள்கையில் தனக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆர்தர் கூறுகையில்,""பந்துவீச்சாளர்கள் தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை. சிட்னி ஆடுகளம் பாரம்பரியமாக சுழலுக்கு ஒத்துழைக்கும். என்னை பொறுத்தவரை "ஸ்பின்னர் இல்லாமல் களமிறங்குவதை ஏற்க முடியாது.

மெல்போர்ன் டெஸ்டில் நாதன் லியான் "சுழலை இந்திய வீரர்கள் எளிதாக சமாளித்தனர். வலுவான இலக்கை நிர்ணயிக்கும் பட்சத்தில் எதிரணிக்கு இவர் நிச்சயமாக சவால் கொடுப்பார்,என்றார்.


வானிலை முக்கியம்:

ஆடுகள பராமரிப்பாளர் டாம் பார்க்கர் கூறுகையில்,""கடந்த ஆண்டு ஆஷஸ் போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளம் போல் இருக்கும்.

இரு அணிகளுக்கும் சாதகமாக அமையும். இதன் தன்மை, வானிலையை பொறுத்து மாறும். மேகமூட்டத்துடன் காணப்பட்டால், பந்துகள் நன்கு "ஸ்விங் ஆகும். போகப் போக "சுழலுக்கும் கைகொடுக்கும்,என்றார்.

2011ம் ஆண்டின் சிறந்த வீரர் டிராவிட்

2011ம் ஆண்டின் சிறந்த வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் "பெருஞ்சுவர் டிராவிட், ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்டார். கேப்டன் தோனிக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.

இந்திய விளையாட்டு நட்சத்திரங்களில் சிறந்த வீரர்களை, ஆங்கில பத்திரிகை ஒன்று தேர்வு செய்தது.

இதற்காக 2011ல் வீரர்கள் வெளிப்படுத்திய திறமை அடிப்படையில் சச்சின், தோனி, டிராவிட், யுவராஜ், ரோகன் போபண்ணா (டென்னிஸ்), ரஞ்சன் சோதி (துப்பாக்கி சுடுதல்) உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

இரண்டு வாரங்களாக நடந்த ஓட்டெடுப்பில், துவக்கத்தில் இருந்தே டிராவிட் தான் முன்னிலையில் இருந்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இவர் 2011ல் பங்கேற்ற 12 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு "டுவென்டி-20 போட்டிகளில், தலா 5 சதம், அரைசதம் உட்பட மொத்தம் 1300 ரன்கள் எடுத்து இருந்தார்.

கடைசியில், 28 ஆண்டுகளுக்குப் பின் உலக கோப்பை வென்ற கேப்டன் தோனி, தொடர் நாயகன் யுவராஜ், சச்சின் ஆகியோரை பின் தள்ளி 48 சதவீத ஓட்டுகளுடன் டிராவிட், இந்த ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனி மனிதனாக போராடியது (4 டெஸ்டில், 3 சதம் உட்பட 461 ரன்கள்), இவரை சிறந்த வீரராக தேர்வு செய்ய முக்கிய காரணமாக அமைந்தது.

இரண்டாவது இடத்தை, 20 சதவீத ஓட்டுகள் பெற்ற, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தட்டிச் சென்றார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என புகழப்படும் தோனிக்கு மூன்றாவது இடம் (14 சதவீதம்) தான் கிடைத்தது. யுவராஜ் (12%) நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அடுத்த நான்கு இடங்களை துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதி (3%), டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா (தலா 2%), குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிருஷ்ணன் (1%) ஆகியோர் பெற்றனர்.