உலக கோப்பை: வெற்றியை கணிக்கும் "ஆக்டோபஸ்'

 நம்மூரில் கிளி ஜோதிடம் போல, ஐரோப்பிய நாடுகளில் "ஆக்டோபஸ்' கணிப்பு மிகவும் பிரபலம். இம்முறை உலக கோப்பை காலிறுதியில் ஜெர்மனி அணி வெற்றி பெறும் என்று அதிரடியாக கணித்துள்ளது. இதனால் அர்ஜென்டினா அணியினர் கதிகலங்கிப் போயுள்ளனர்.

தென் ஆப்ரிக்காவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. வரும் ஜூலை 3ம் தேதி நடக்கும் காலிறுதியில் முன்னாள் சாம்பியன்களாக ஜெர்மனி, அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. 

இரண்டுமே ஐரோப்பிய அணிகள் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் மாரடோனா பயிற்சியில் அர்ஜென்டினா சாதிக்கும் என கால்பந்து நிபுணர்கள் குறிப்பிட்டனர். இதற்கு நேர்மாறாக "ஆக்டோபஸ்' கணிப்பு அமைந்துள்ளது.

ஜெர்மனியின் ஓபர்ஹாசினில் கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சியகம் உள்ளது. இங்கு இரண்டு வயதான ஆக்டோபஸ், கால்பந்து போட்டிகளின் வெற்றியாளரை துல்லியமாக கணிக்கிறது. பால் என்ற பெயரிலான இந்த "ஆக்டோபஸ்' இம்முறை உலக கோப்பை தொடரில் ஜெர்மனி பங்கேற்ற போட்டிகளின் வெற்றி தோல்விகளை சரியாக கணித்தது. 

அதாவது, லீக் சுற்றில் ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியா மற்றும் கானாவை வீழ்த்தும் என குறிப்பிட்டது. இதே போல செர்பியாவிடம் தோல்வி அடையும் என்றும் சுட்டிக் காட்டியது. தவிர, "ரவுண்ட்-16' போட்டியில் இங்கிலாந்தை வென்று, காலிறுதிக்கு முன்னேறும் என்று தெளிவாக சொன்னது. 

இதையடுத்து காலிறுதியில் ஜெர்மனி அணி, அர்ஜென்டினாவை வீழத்துமா என்ற கேள்வி எழுந்தது. உடனே "ஆக்டோபசிடம்' கேட்டனர். இதற்கு வழக்கம் போல் இரண்டு கண்ணாடி பெட்டிகள் வைக்கப்பட்டன. உள்ளே ஒரு சிப்பி வைக்கப்பட்டது. 

இம்முறை "ஆக்டோபஸ்' மிக நீண்ட நேரம் யோசித்த பின் ஜெர்மனி கொடி வரையப்பட்ட பெட்டியில் இருந்த சிப்பியை எடுத்தது. இதன் மூலம் ஜெர்மனி அணிக்கே வெற்றி என்பதை கணித்தது. 

இது குறித்து கண்காட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,""கடந்த 2008ல் நடந்த "யூரோ' கோப்பை தொடரில் ஜெர்மனி அணியின் செயல்பாடு தொடர்பான "ஆக்டோபஸ்' கணிப்பு 80 சதவீதம் சரியாக இருந்தது. இம்முறை சுமார் ஒரு மணி நேரம் யோசித்த பின் தான் ஜெர்மனி அணியின் பெட்டியை தேர்வு செய்தது. எனவே, காலிறுதி போட்டி மிகவும் கடினமானதாக இருக்கும்,''என்றார்.

உலக கோப்பை கால்பந்து: சர்ச்சை கிளப்பும் நடுவர்கள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இம்முறை நடுவர்களின் தவறான தீர்ப்புகள் தொடருவதால், பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

பரபரப்பான "ரவுண்ட்-16' போட்டியில் ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து வீரர் லாம்பார்டு அடித்த பந்து, "கோல் லைனை' தாண்டிச் சென்றது. ஆனால், உருகுவே நடுவர் ஜார்ஜ் லாரியண்டோ நிராகரித்தார். இதனால் அதிர்ந்து போன இங்கிலாந்து அணி தோல்வி அடைய நேரிட்டது. 

இதற்கு பின் நடந்த அர்ஜென்டினா-மெக்சிகோ இடையிலான "ரவுண்ட்-16' சுற்று போட்டியிலும் நடுவர்களின் தவறு செய்தனர். ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் கார்லஸ் டெவேஸ், தலையால் முட்டி அணியின் முதல் கோலை அடித்தார். இதனை "ஆப்-சைடு' என்று கூறி, மெக்சிகோ வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

உடனே இத்தாலி நடுவர் ராபர்ட்டோ ரோசட்டி, சக நடுவர்களுடன் விவாதித்தார். பின் கோல் என்று அதிரடியாக அறிவித்தார். இது மெக்சிகோ அணியின் தோல்விக்கு வித்திட்டது. "ரீப்ளே' பார்த்த போது "ஆப்சைடு' என்பது தெளிவாக தெரிந்தது. டெவேஸ் அருகே எதிரணியின் தற்காப்பு வீரர்கள் யாரும் காணப்படவில்லை. 

"பிபா' எதிர்ப்பு:

"நாக்-அவுட்' சுற்று துவங்கி விட்ட நிலையில், நடுவர்களின் தவறான தீர்ப்பு முன்னணி அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள. இதனை தவிர்க்க, "வீடியோ' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. 

இது குறித்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தலைவர்(பிபா) செப் பிளாட்டர் கூறுகையில்,""சர்ச்சைக்குரிய கோல் பற்றி முடிவு செய்ய வீடியோ "ரீப்ளே' அல்லது "கோல் லைன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்த இயலாது. 

இதனை உலகம் முழுவதும் நடக்கும் போட்டிகளில் அமல்படுத்த நிறைய செலவாகும். தவிர, போட்டியின் வேகத்தை குறைத்து விடும். எனவே, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வாய்ப்பு இல்லை,''என்றார்.

நடுவர்களின் தவறான முடிவுகள்


உலககோப்பை கால்பந்து போட்டியில் நடுவர்களின் தவறான முடிவுகள் சில அணிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஜெர்மனிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் லேம்பர்ட் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு உள்ளே விழுந்து வந்ததை ஜெர்மனி கோல்கீப்பர் பிடித்தார்.
 

டெலிவிஷன் ரீப்ளேயில் அது கோலாக தெரிந்தது. ஆனால் நடுவர் அந்த கோலை ஏற்றுக் கொள்ளவில்லை. உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இது மிகவும் சர்சையாக கருதப்பட்டது. இந்த கோலை அங்கீகரித்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும்.
 

டெலிவிஷன் ரீப்ளேயில் நடுவர் இதை முடிவு செய்து இருக்க வேண்டும். அப்படி செய்யாதது மிகவும் தவறானது. நடுவரின் இந்த முடிவை இங்கிலாந்து பயிற்சியாளர் கேபிலோ கண்டித்து உள்ளார். 


இதேபோல மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் அடித்த முதல் கோலும் சர்ச்சையானது. டெலிவிஷன் ரீப்ளேயில் அது “ஆப்சைடு” என்பது தெரியவந்தது.

அர்ஜென்டினா அபார வெற்றி: வெளியேறியது கிரீஸ்

கிரீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், மாரடோனாவை பயிற்சியாளராக கொண்ட அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இதன்மூலம் 9 புள்ளிகளுடன் "பி' பிரிவில் முதல் அணியாக "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு முன்னேறியது. தோல்வி கண்ட கிரீஸ் அணி, தொடரில் இருந்து வெளியேறியது.

தென் ஆப்ரிக்காவில், 19வது "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் போலோக்வானியில் நேற்று நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில், உலக தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா, கிரீஸ் (13வது இடம்) அணிகள் மோதின.

போட்டியின் துவக்கத்தில் இருந்து இரு அணி வீரர்களும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய கிரீஸ் அணி ஆட்டத்தின் 14வது, 18வது நிமிடத்தில் கிடைத்த "கார்னர் கிக்' வாய்ப்பை வீணடித்தது. இதேபோல 19வது, 32வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி, "கார்னர் கிக்' வாய்ப்பை கோட்டைவிட்டார். இதனால் முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி பரிதாபமாக இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட அர்ஜென்டினா அணிக்கு டிமிசெலிஸ் (77வது நிமிடம்), பாலர்மோ (89வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து நம்பிக்கை அளித்தனர். தொடர்ந்து போராடிய கிரீஸ் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

ஆட்டநாயகனாக மெஸ்சி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் லீக் சுற்றில் விளையாடிய மூன்று போட்டியிலும் வெற்றி கண்ட அர்ஜென்டினா அணி, 9 புள்ளிகளுடன் "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு "பி' பிரிவிலிருந்து முதல் அணியாக முன்னேறியது.

அர்ஜென்டினா-மெக்சிகோ மோதல்:

"ரவுண்ட் ஆப் 16' சுற்றில், வரும் 27ம் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் நடக்கும் போட்டியில் அர்ஜென்டினா அணி, "ஏ' பிரிவில் 2வது இடம் பிடித்த மெக்சிகோ அணியை சந்திக்கிறது.

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி அர்ஜென்டினா

உலக கோப்பை தொடர் லீக் போட்டியில், இன்று அர்ஜென்டினா, கிரீஸ் அணிகள் மோதுகின்றன. முதல் இரண்டு போட்டிகளில் வென்றுள்ள அர்ஜென்டினா அணி, இன்று "ஹாட்ரிக்' வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரில், "பி' பிரிவில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் மாரடோனாவின் அர்ஜென்டினா அணி, 2004ல் "யூரோ சாம்பியனான' கிரீசை சந்திக்கிறது.

அர்ஜென்டினாவைப் பொறுத்தவரையில், தனது முதல் இரண்டு போட்டியில் நைஜீரியா (1-0), தென் கொரியாவை (4-1) வென்று, அடுத்த சுற்றுக்கு சென்று விட்டது. இன்று இந்த அணியின் மெஸ்சி, "ஹாட்ரிக்' நாயகன் ஹிகுவேன், ஹெய்ன்ஸ், கார்லஸ் டெவேஸ், டி மரியா ஆகியோர் இணைந்து வெற்றிபெற்றுத்தருவார்கள் என நம்பப்படுகிறது.

கட்டாய வெற்றி:

கிரீஸ் அணி தனது முதல் போட்டியில் தென் கொரியாவுடன் தோல்வியடைந்தது. ஆனால் அடுத்து நைஜீரியாவை வென்றது. இன்று இந்த அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்த அணி உள்ளது. இதற்கு முன்னணி வீரர்கள் சல்பிங்கிடிஸ், ஜியோலிஸ் ஆகியோர் கைகொடுக்க தயாராக உள்ளனர்.

பாகிஸ்தான் வீரர்களுடன் வாக்குவாதம்


ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் வீரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காம்பீர்-கம்ரன் அக்மல், ஹர்பஜன் சிங்-சோயிப் அக்தர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது.
 

பாகிஸ்தான் வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காம்பீர், ஹர்பஜன் தண்டனையில் இருந்து தப்பினர்.

 
போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் வீரர்கள் இடையே நடந்த மோதலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தண்டனையில் இருந்து தப்பினர். ஆடுகளத்தில் வீரர்கள் உணர்ச்சி வசப்படக்கூடாது என்று அறிவுரை வழங்கி உள்ளார்.

 
இதற்கிடையே ஆடுகளத்தில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் மோதிக் கொள்வதால் இரு நாடுகள் இடையே கிரிக்கெட் போட்டி வேண்டாம் என்று பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் மொய்ன்கான் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு கோப்பை பெற்றுத் தந்தவர்

1966-ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை இங்கிலாந்துக்கு பெற்றுத்தந்தவர் முன்னாள் கேப்டன் பாபி மூர்.

இவர் 1941-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இங்கிலாந்தின் பார்கிங் நகரில் பிறந்தார். பள்ளியில் படித்தபோது பள்ளி அணிக்காக கால்பந்து விளையாடினார். இளம் வயதிலேயே மிகச்சிறந்த தடுப்பாட்டக்காரராக திகழ்ந்த மூர், 1956-ம் ஆண்டு வெஸ்ட் ஹாம் யுனைட்டெடு அணிக்காகவும், பின்னர் மான்செஸ்டர் யுனைட்டெடு அணிக்காகவும் விளையாடினார்.

தலையால் முட்டியும், உயரமாக துள்ளிக்குதித்தும் எதிரணியினரிடம் இருந்து பந்தை லாவகமாக பறிக்கும் அசாத்திய திறமைபெற்றவர். கால்பந்து மட்டுமன்றி கிரிக்கெட்டிலும் கை தேர்ந்தவர். இங்கிலாந்தின் எஸ்ùஸக்ஸ் அணிக்காக சில காலம் கிரிக்கெட் விளையாடினார். 1960-ம் ஆண்டு 23 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து கால்பந்து அணியில் இடம்பிடித்தார்.

பின்னர் இங்கிலாந்து கால்பந்து அணிக்குள் நுழைந்தார். 1962-ம் ஆண்டு அப்போதைய இங்கிலாந்து கேப்டன் ஜானி ஹெய்ன்ஸ் ஓய்வுபெற்றதையடுத்து மூர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அப்போது மூர் 12 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இங்கிலாந்தின் இளம் கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

அவரது தலைமையிலான இங்கிலாந்து அணி பல்வேறு ஆட்டங்களில் வெற்றி வாகை சூடியது. 1966-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மூர் தலைமையில் பங்கேற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல்கள் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதனால் இங்கிலாந்தின் செல்லப்பிள்ளையானார்.

1970-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய மூர் தலைமையிலான அணி காலிறுதி வரை முன்னேறியது. தொடர்ந்து 108 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற சிறப்பையும் மூர் பெற்றார். இவரது இந்த சாதனையை பின்னர் பீட்டர் ஷில்டான் (125 ஆட்டங்களில் கேப்டன்), டேவிட் பெக்காம் (109) ஆகியோர் தகர்த்தனர்.

கால்பந்தில் ஓய்வுபெற்ற பிறகு பல்வேறு கால்பந்து கிளப்புகளில் மேலாளராக பணியாற்றினார்.  
1990-ம் ஆண்டு லண்டன் வானொலியில் கால்பந்து வர்ணனையாளராக பணியாற்றினர். இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் சகாப்தத்தை ஏற்படுத்திய மூர், 1993-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

சர்ச்சை நாயகன்

வடக்கு அயர்லாந்து அணியின் சிறந்த விங்கராகத் திகழ்ந்த ஜார்ஜ் பெஸ்ட் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர்.

இவர் 1946-ம் ஆண்டு மே 22-ம் தேதி வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் பிறந்தார். பள்ளியில் படித்தபோது தனது 11-வது வயதில் கால்பந்து விளையாட ஆரம்பித்தார். இளம் வயதிலேயே சிறந்த விங்கராகவும், ஆக்ரோஷமான நடுகள ஆட்டக்காரராகவும் விளங்கினார்.

தனது 15-வயதில் மான்செஸ்டர் யுனைட்டடு அணியில் இடம்பிடித்தார். மான்செஸ்டர் யுனைட்டடு அணிக்காக விளையாடிய இவர், 1968-ம் ஆண்டு ஐரோப்பியன் கோப்பையை மான்செஸ்டர் அணிக்கு பெற்றுத்தந்தார். அந்த ஆண்டு ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தால் மான்செஸ்டர் அணிக்கு ஏராளமான வெற்றிகளைப் பெற்றுத்தந்தவர்.

1964-ம் ஆண்டு வடக்கு அயர்லாந்து அணியில் இடம்பிடித்து, பின்னாளில் அந்த அணியின் கேப்டனாகவும் உருவெடுத்தார். இவரது தலைமையில் வடக்கு அயர்லாந்து 37 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. பெஸ்ட் கேப்டனாக இருந்த காலத்தில் 9 கோல்கள் அடித்துள்ளார்.

1971-ம் ஆண்டு பெல்பாஸ்ட்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பெஸ்ட் அடித்த கோலே, அவரது கால்பந்து வாழ்க்கையில் மிகச்சிறந்த கோலாகும். இவரது தலைமையிலான அணி 1978-ம் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றது. 

1982-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய அணியில் பெஸ்ட் இடம்பெறவில்லை. வயது முதிர்வு மற்றும் குடிப்பழக்கத்தால் ஆட்டத்திறன் குறைந்ததே இதற்குக் காரணம்.  மான்செஸ்டர் உள்ளிட்ட பல்வேறு கிளப்புகளுக்காக விளையாடியுள்ள இவர் 579 ஆட்டங்களில் 205 கோல்கள் அடித்துள்ளார்.

பீலே தேர்வு செய்த 2004-ம் ஆண்டின் சிறந்த 125 கால்பந்து வீரர்களில் இவரும் ஒருவர். தொழில்முறை கால்பந்து சங்கத்தின் "ஆல் ஸ்டார்' விருது, பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் கெüர டாக்டர் பட்டம் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். குடிப்பழக்கத்துக்குள்ளான பெஸ்ட் பல்வேறு பிரச்னைகளில் சிக்கினார். குடிபோதையில் கார் ஓட்டியதற்காக இவருக்கு 3 மாதம் சிறைதண்டனையும், 20 மாதங்கள் கார் ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

கடந்த 2005-ம் ஆண்டு சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் பெஸ்ட் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலின் பல பாகங்கள் செயலிழந்தன. 2005, நவம்பர் 25-ம் தேதி அவர் உயிரிழந்தார்

இதுவரை சாம்பியன்கள்

உலக கோப்பை வரலாற்றில் பிரேசில் அணி அதிகபட்சமாக 5 முறை (1958, 62, 70, 94, 2002) கோப்பை வென்று சாதித்துள்ளது. இதுவரை கோப்பை வென்ற அணிகள்: 

ஆண்டு    சாம்பியன்    கோல்    எதிரணி    இடம்

1930    உருகுவே    4-2    அர்ஜென்டினா    உருகுவே
1934    இத்தாலி*    2-1    செக்கோஸ்லேவியா    இத்தாலி
1938    இத்தாலி    4-2    ஹங்கேரி    பிரான்ஸ்
1950    உருகுவே    2-1    பிரேசில்    பிரேசில்
1954    மே.ஜெர்மனி    3-2    ஹங்கேரி    சுவிட்சர்லாந்து
1958    பிரேசில்    5-2    சுவீடன்    சுவீடன்
1962    பிரேசில்    3-1    செக்கோஸ்லேவியா    சிலி
1966    இங்கிலாந்து*    4-2    மே.ஜெர்மனி    இங்கிலாந்து
1970    பிரேசில்    4-1    இத்தாலி    மெக்சிகோ
1974    மே.ஜெர்மனி    2-1    நெதர்லாந்து    மே.ஜெர்மனி
1978    அர்ஜென்டினா*    3-1    நெதர்லாந்து    அர்ஜென்டினா
1982    இத்தாலி    3-1    மே.ஜெர்மனி    ஸ்பெயின்
1986    அர்ஜென்டினா    3-2    மே.ஜெர்மனி    மெக்சிகோ
1990    மே.ஜெர்மனி    1-0    அர்ஜென்டினா    இத்தாலி
1994    பிரேசில்**    3-2    இத்தாலி    அமெரிக்கா
1998    பிரான்ஸ்    3-0    பிரேசில்    பிரான்ஸ்
2002    பிரேசில்    2-0    ஜெர்மனி    ஜப்பான்-கொரியா
2006    இத்தாலி**    5-3    பிரான்ஸ்    ஜெர்மனி
* கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போட்டிகள்
** "பெனால்டி' முறையில் வெற்றி

2011 உலகக் கோப்பையை வெல்வதே கனவு: சச்சின்

2011-ம் ஆண்டு ஆசிய கண்டத்தில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்வதே எனது கனவு என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.


இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு இந்தியா முன்னேறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


தற்போது உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக எங்களை தயார் செய்து வருகிறோம். உலகக் கோப்பையை வெல்வது என்பது எனது கனவு மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கனவும் அதுதான். மும்பை இறுதிப்போட்டியில் விளையாடும் கனவு நனவாக எல்லாம் சேர்ந்து வரவேண்டும்.


தற்போதுள்ள இந்திய அணி திறமைவாய்ந்ந்த அணியாக திகழ்வதால் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு நல்லவாய்ப்பு உள்ளது. எனவே நீண்டகாலத்திற்கு பிறகு இந்த உலகக் கோப்பையில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


தற்போது இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாகத் திகழ்கிறது. முதலிடம் பெறுவது என்பது கடினமானது. தொடர்ந்து அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.


நாங்கள் கடந்த 20 மாதங்களாக சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகிறோம். எல்லா அணிகளும் முதலிடத்திற்கு வர விரும்புகின்றன. அதனால் நாங்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடி வருகிறோம் என்றார் டெண்டுல்கர்.

எதிர்காலம் பற்றி டெண்டுலல்கரிடம் கேட்டபோது, எப்போது கிரிக்கெட்டில் விளையாட்டின் மீதுள்ள உற்சாகம் குறைகிறதோ, அப்போது ஓய்வுபெறுவேன். நீண்டகாலம் கிரிக்கெட் விளையாட முடியும் என்று கருதுகிறேன். கிரிக்கெட் வேட்கை குறையும் வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தெரிவித்தார்.

ஜொலிக்க காத்திருக்கும் நட்சத்திரங்கள்

உலக கோப்பை கால்பந்து தொடரில் நட்சத்திர வீரர்களுக்கு பஞ்மில்லை. ஒவ்வொருவரும் தங்களது திறமையை நிரூபிக்க காத்திருக்கின்றனர். இவர்களில் "டாப்-10' வீரர்கள் வருமாறு:

கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்)

மத்திய கள வீரரான இவர், உலககோப்பையில் உற்று நோக்கப்படும் வீரர்களில் ஒருவராக உள்ளார். ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக ரூ. 600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், 2008ல் "பிபா' வழங்கிய உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றார், 

போர்ச்சுகல் அணி சார்பில் 68 போட்டிகளில் பங்கேற்று 22 கோல்கள் அடித்துள்ளார். வெகு தூரத்திலிருந்து கோல் அடிக்கும் திறமை பெற்ற இவர், "பிரீ-கிக்', "பெனால்டி கிக்' அடிப்பதில் வல்லவர். 
உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-1, வயது-25

லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா)

 பார்சிலோனா கிளப் அணி சார்பில் விளையாடி வரும் மெஸ்சி, முன்கள வீரராக அசத்தக் கூடியவர். அர்ஜென்டினா அணிக்காக 41 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 13 கோல்கள் அடித்துள்ளார். எதிரணி வீரர்களின் தடுப்பை தகர்க்க கூடிய இவர், தலையால் முட்டிக் கோல் அடிப்பதில் கை தேர்ந்தவர். 

கடந்த 2009 ம் ஆண்டு "பிபா' வழங்கிய உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை மெஸ்சி வென்றுள்ளார். உலககோப்பையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது யார் என்பதில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. 

உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-1, வயது-22

வேய்ன் ரூனே (இங்கிலாந்து)

கால்பந்து அரங்கில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் வேய்ன் ரூனே. முன்களத்தில் மிரட்டக் கூடிய இவர், எதிரணிகளின் வியூகத்தை நொடிப் பொழுதில் தகர்த்தெறியும் திறமை படைத்தவர். பம்பரமாய் சுழன்று ஆடக் கூடிய இவர், எதிரணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கக் கூடியவர். இங்கிலாந்து அணி சார்பில் 57 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 25 கோல்கள் அடித்துள்ளார். 

உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-இல்லை, வயது-24

காகா (பிரேசில்)

 திறமையான நடுக்கள வீரர் காகா. அனைவரும் ரசிக்கக் கூடிய விதத்தில் விளையாட்டு உணர்வுடன் ஆடக் கூடியவர். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர், நீண்ட காலமாக மிலன் கிளப் அணிக்காக விளையாடியவர். தற்போது ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோ, ரொனால்டினோ ஆகியோர் இந்த முறை பிரேசில் அணியில் இடம் பெறவில்லை. 

இதனால் சாதித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பிரேசில் அணி சார்பில் இதுவரை 73 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 26 கோல்கள் அடித்துள்ளார். 

உலககோப்பை-2 முறை (2002, 2006), கோல்-1, வயது-27

பெர்னாண்டோ டோரஸ் (ஸ்பெயின்)

பெர்னாண்டோ டோரஸ் தனது 7வது வயது முதல் கால்பந்து விளையாட ஆரம்பித்தார். 10 வது வயதில் 55 கோல்கள் அடித்து அசத்தினார். லிவர் பூல் கிளப் அணி அசத்திவரும் இவர், கோல் அடிப்பதில் வல்லவர். கோல் அடிப்பதற்காகவே பிறந்தவர் என போற்றப்படக் கூடியவர். அதிரடி மட்டுமின்றி மிகவும் நுணக்கமாக ஆடக் கூடிய திறமை படைத்தவர். முன் கள வீரரான இவர், பந்தை "பாஸ்' செய்வதில் கில்லாடி. ஸ்பெயின் அணி சார்பில் 71 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 23 கோல்கள் அடித்துள்ளார். 

உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-3, வயது-25

சாமுவேல் இடோ (கேமரூன்)

ஆப்ரிக்க கண்டத்தின் மிகச் சிறந்த முன் கள வீரராக கருதப்படுகிறார் கேமரூனின் சாமுவேல் இடோ. தனது 16 வயதில் ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், கிளப் போட்டிகளில் 108 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். தற்போது இன்டர் மிலன் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த முறை அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றுள்ள இவர், சாதித்துக் காட்டுவதில் உறுதியாக உள்ளார். கேமரூன் அணிக்காக 94 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 44 கோல்கள் அடித்துள்ளார். 

உலககோப்பை-2 முறை (1998, 2002), கோல்-1, வயது-28

ஆண்டர்சன் டிகோ (போர்ச்சுகல்)

போர்ச்சுகல் அணியின் அனுபவ வீரர் ஆன்டர்சன் டிகோ. செல்சியா கிளப் அணி சார்பில் அசத்தி வரும் இவர், கடந்த உலககோப்பை (2006) தொடரில் அசத்தினார். மத்திய கள வீரரான டிகோ, பந்தை "பாஸ்' செய்வதில் திறமை மிக்கவர். எதிரணி வீரர்களின் தடுப்பை மிக எளிதாக தகர்ப்பவர். கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பின், போர்ச்சுகல் அணி சார்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார் டிகோ.

உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-1, வயது-32

கார்லஸ் டெவேஸ் (அர்ஜென்டினா)

அர்ஜென்டினாவின் சிறந்த முன்கள வீரர் கார்லஸ் டேவேஸ். மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியின் நட்சத்திர வீரரான இவர், துல்லியமாக கோல் அடிப்பதில் சிறந்தவர். அர்ஜென்டினா அணி சார்பில், 51 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 8 கோல்கள் அடித்துள்ளார். அணியின் பயிற்சியாளர் மாரடோனா, இந்த முறை உலககோப்பையில் டேவேசை மிகவும் நம்பியுள்ளார். எதிர்பார்த்த படி, டேவேஸ் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலககோப்பை- ஒரு முறை (2006), கோல்-1, வயது-26

தியரி ஹென்றி (பிரான்ஸ்)

 முன்கள வீரரான தியரி ஹென்றி, சர்ச்சை நாயகனாகவும் வலம் வருகிறார். உலககோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் போது, அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், தனது கையால் கோலடித்தார். இதன் மூலம் பிரான்ஸ் உலககோப்பைக்கு தகுதி பெற்றது. அயர்லாந்து வாய்ப்பை இழந்தது. இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இதற்காக ஹென்றி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தற்போது 32 வயதானாலும் இவரது ஆட்டத்தின் வேகம் குறையவில்லை. மிகவும் "ரிலாக்சாக' ஆடக் கூடியவர். பிரான்ஸ் அணி சார்பில் 114 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 51 கோல்கள் அடித்துள்ளார். 

உலககோப்பை-3 முறை (1998, 2002, 2006), கோல்-6, வயது-32

மிராஸ்லாவ் குளோஸ் (ஜெர்மனி)

 அதிரடி ஆட்டக்காரர் மிராஸ்லாவ் குளோஸ், இதுவரை விளையாடிய 2 உலககோப்பை தொடர்களில் தலா 5 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இச்சாதனை படைத்த உலகின் முதல் வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார் குளோஸ். தலையால் முட்டிக் கோல் அடிப்பது இவரது தனிச் சிறப்பு. பேயர்ன் முனிக் கிளப் அணி சார்பில் விளையாடி வருகிறார். இதுவரை ஜெர்மனி சார்பில் 93 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 48 கோல்கள் அடித்துள்ளார். 

உலககோப்பை- 2 முறை (2002, 2006), கோல்-10, வயது-31

ஆன்ட்ரே பிர்லோ (இத்தாலி)

மத்திய கள வீரரான பிர்லோ தனது 16 வயதில் கால்பந்து அரங்கில் காலடி எடுத்து வைத்தார். ஏ.சி.மிலன் கிளப் அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். கடந்த 2006 ம் ஆண்டு இத்தாலி அணி, உலககோப்பை வெல்ல இவரது பங்கும் முக்கியமானதாக அமைந்தது. தூரத்திலிருந்து மிக துல்லியமாக கோல் அடிக்கும் திறமை பெற்ற இவர், இந்த முறையும் அசத்த காத்திருக்கிறார். 

உலககோப்பை-ஒரு முறை (2006), கோல்-1, வயது-30

மோரிமோடோ (ஜப்பான்)

ஆசிய அணியான ஜப்பான் சார்பில் சாதிக்க காத்திருக்கிறார் மோரிமோடோ. ஆசியாவின் சிறந்த இளம் வீரராக வலம் வரும் இவர், பெனால்டி ஏரியாவில் திறமையாக ஆடக் கூடியவர். 22 வயதான இவர், ஜப்பான் லீக் போட்டிகளில் மிக இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். 

இவரது உருவம், எடை, செயல்பாடுகள் ஆகியவை பிரேசிலின் ரொனால்டோவை ஒத்திருப்பதால், இவர் "ஜப்பான ரொனால்டோ' என அழைக்கப்படுகிறார். முதல் முறையாக 
உலககோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இவர், ஜப்பான் அணிக்கு கைகொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

கிளின்ட் டெம்ப்சே (அமெரிக்கா)

அமெரிக்க அணியின் முன்னணி வீரர்களில் டெம்ப்சேவுக்கு முக்கிய இடம் உண்டு. கடந்த 2006 ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலககோப்பை தொடரில், அமெரிக்கா தரப்பில் கோல் அடித்த ஒரே வீரர் இவர் தான். நடுக்கள வீரரான இவர், அதிரடியாக ஆடக் கூடியவர். பல்காம் கிளப் அணிக்காக விளையாடி வரும் இவர், மைதானத்தில் துடிப்புடன் செயல்படக் கூடியவர். 

அமெரிக்கா சார்பில் 62 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 18 கோல்கள் அடித்துள்ளார். தகுதிச் சுற்றுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய இவர், அமெரிக்கா உலககோப்பை தொடருக்கு முன்னேற முக்கிய காரணமாக திகழ்ந்தார். 

உலககோப்பை -ஒரு முறை (2006), கோல்-1, வயது-27