சேவக் மீது மோசடி புகார்

ஓட்டல் நடத்த உரிமை கொடுப்பதாக கூறி, 2 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பணமோசடி செய்ததாக சேவக் மற்றும் அவரது பார்ட்னர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் சேவக். இவரது தொழில் ரீதியிலான பார்ட்னர் சித்தார்த். கடந்த 2006ம் ஆண்டு சேவக் கிற்கு சொந்தமான உணவு விடுதியை, குத்தகையில் எடுத்து நடத்துவதற்கு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

இதன் படி அலகாபாத் பகுதியில் ஏற்கனவே கடை வைத்து இருந்த ரஜத் சர்மா என்பவர்,சித்தார்த்தை அணுகியுள்ளார். விடுதி நடத்தும் உரிமையை அவரிடம் 2 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்க்கு சித்தார்த் விற்றுள்ளார். இதனை பல தவணைகளாக, ரஜத் சர்மா கொடுத்துவிட்டார். இருப்பினும், ஒப்பந்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும், விடுதி உரிமையை ரஜத்திடம் கொடுக்கப்படவில்லை.

இதையடுத்து தனது பணத்தை திருப்பி தருமாறு ரஜத் சர்மா, சித்தார்த்திடம் கேட்டுள்ளார். ஆனால் சித்தார்த் மறுத்துள்ளார். இதனால் சேவக் மற்றும் சித்தார்த் மீது அலகாபாத் போலீஸ் நிலையத்தில் ரஜத் சர்மா புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராம் அத்கர் கூறியது:கல்லூரி உதவி பேராசிரியர் ரஜத் சர்மா அனுப்பிய புகார் எங்களுக்கு பதிவு தபாலில் வந்துள்ளது. சேவக் மற்றும் அவரது பார்ட்னர் சித்தார்த் இருவரும், உணவு விடுதி நடத்த உரிமை தருவதாக தெரிவித்து, 2 லட்சத்து, நாற்பதாயிரம் ரூபாய் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளர்.

இதுகுறித்து இன்னும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை. புகார் தெரிவித்து இருப்பவர் அலகாபாத்தை சேர்ந்தவர். இங்கு உணவு விடுதி நடத்துவதாகத் தான் பணம் கொடுத்துள்ளார். ஆனால் ஒப்பந்தம் மற்றும் மற்ற அனைத்து நடவடிக்கைகளும் டில்லியில் நடந்துள்ளது. எனவே வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றால், முறைப்படி டில்லியில் தான் செய்யவேண்டும். இவ்வாறு ராம் அத்கர் கூறினார்

0 comments:

Post a Comment