சுழற்சி முறையில் வாய்ப்பு - சேவக்

காயத்தில் இருந்து தப்பிக்க, போட்டியில் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்,'' என, இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக் தெரிவித்துள்ளார்.

இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ.,6ம் தேதி டில்லியில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில், தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட அதிரடி துவக்க வீரர் சேவக் இடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சேவக் கூறியதாவது: காயம், உடற்தகுதி உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இம்முறையை பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் பேட்ஸ்மேன்களை காட்டிலும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு விரைவில் காயமடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
காயம் காரணமாக இங்கிலாந்து மண்ணில் நடந்த தொடரில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் அப்போது நிறைய முன்னணி வீரர்கள் காயம் காரணமாக பங்கேற்காததால், மோசமான தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று.

எந்த ஒரு வீரரும், காயத்தில் இருந்து மீள்வது எளிதான காரியமல்ல. காயத்தின் தன்மையை பொறுத்து மாறுபடும். தற்போது எனது கவனம் முழுவதும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மீது உள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி திறமையை நிரூபிக்க வேண்டும்.
இந்திய வீரர்கள், டெஸ்ட் போட்டியை காட்டிலும் ஐ.பி.எல்., போன்ற அதிகளவு பணம் புரலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்ற செய்தி வெளியானது. இது முற்றிலும் தவறு. எந்த ஒரு வீரரும் முதலில் டெஸ்ட் போட்டியில் தான் விளையாட வேண்டும் என நினைப்பார்கள்.

ஏனெனில் டெஸ்ட் போட்டியின் மூலம் ஒரு வீரரின் உண்மையான திறமையை கண்டறிய முடியும். எந்த ஒரு வீரரும், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டு, ஐ.பி.எல்., போன்ற போட்டிகளில் விளையாட விரும்பமாட்டார்கள்.
சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரின் போது நான் காயத்துடன் விளையாடினேன். இதேபோல "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினும், தொடைப்பகுதியில் காயத்துடன் விளையாடினார். காயம் குறித்து அதிகளவு சிந்திக்காமல், நாட்டுக்காக விளையாட நினைத்ததால், கோப்பை வென்று சாதிக்க முடிந்தது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில், சச்சின் இடத்தை பூர்த்தி செய்வது கடினம். இதற்கு நீண்ட காலம் கடுமையாக போராட வேண்டும். தற்போதுள்ள இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒருவேளை சீனியர் வீரர்கள் ஓய்வு பெறும் பட்சத்தில், அவர்களது இடத்தை இளம் வீரர்கள் எளிதில் பூர்த்தி செய்வார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு சேவக் கூறினார்.

"A' கிரேடில் கோஹ்லி, இஷாந்த்

பி.சி.சி.ஐ., ஒப்பந்த பட்டியலில் விராத் கோஹ்லி, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு "ஏ' கிரேடு வழங்கப்பட்டுள்ளது. இதே பிரிவில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), வீரர்களுக்கு கிரேடு அடிப்படையில் ஆண்டு தோறும் சம்பளம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான புதிய ஒப்பந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி மொத்தமுள்ள வீரர்களின் எண்ணிக்கை 24ல் இருந்து 36 ஆக உயர்த்தப்பட்டது.

இதில் 11 பேர் "சி' கிரேடில் இடம் பெற்றனர். "ஏ' கிரேடில் 9ல் இருந்து 12 பேராக அதிகரிக்கப்பட்டது. சம்பள விகிதத்தில் ( "ஏ'-ரூ. 1 கோடி, "பி'-ரூ. 50 லட்சம், "சி'-ரூ. 25 லட்சம்) மாறுதல் இல்லை. கடந்த ஆண்டு "பி' கிரேடில் இருந்த யுவராஜ் சிங், "ஏ' கிரேடுக்கு உயர்ந்துள்ளார். புதிதாக விராத் கோஹ்லி, இஷாந்த் சர்மாவும் இதில் இடம் பெற்றுள்ளனர்.


ஹர்பஜன் நீட்டிப்பு:

இங்கிலாந்து தொடரில் இருந்து பாதியில் திரும்பிய ஹர்பஜன் சிங், சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்து தொடர், அடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் தேர்வாகவில்லை. இருப்பினும், இவர் "ஏ' கிரேடில் நீடிக்கிறார். ரெய்னாவும் இந்த பிரிவில் உள்ளார்.


விஜய் பின்னடைவு:

வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார், பிரக்யான் ஓஜா தொடர்ந்து "பி' கிரேடில் நீடிக்கின்றனர். அஷ்வின், ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் "சி' கிரேடில் இருந்து "பி' கிரேடுக்கு <உயர்த்தப்பட்டனர். முரளி விஜய், "பி'யில் இருந்து "சி'க்கு தள்ளப்பட்டார். ஆஷிஸ் நெஹ்ரா ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.


ஒவ்வொரு கிரேடிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள்:

"ஏ' கிரேடு (ரூ. 1 கோடி):
தோனி, சச்சின், சேவக், காம்பிர், டிராவிட், லட்சுமண், ரெய்னா, ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், யுவராஜ் சிங், விராத் கோஹ்லி, இஷாந்த் சர்மா.

"பி' கிரேடு (ரூ. 50 லட்சம்):
பிரவீண் குமார், பிரக்யான் ஓஜா, அஷ்வின், ரோகித் சர்மா, ஜடேஜா.

"சி' கிரேடு (ரூ. 25 லட்சம்):
ஸ்ரீசாந்த், அமித் மிஸ்ரா, புஜாரா, மிதுன், வினய் குமார், ரகானே, முனாப் படேல், முரளி விஜய், சிகர் தவான், பார்த்திவ் படேல், சகா, பத்ரிநாத், மனோஜ் திவாரி, பியுஸ் சாவ்லா, தினேஷ் கார்த்திக், உனத்கட், உமேஷ் யாதவ், ராகுல் சர்மா, வருண் ஆரோன்.


விளையாட்டு மசோதாவுக்கு எதிர்ப்பு

விளையாட்டு அமைப்புகளை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட, திருத்தப்பட்ட புதிய மசோதாவுக்கும், பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் ஜக்தலே கூறுகையில்,"" புதிய மசோதாவில் உள்ள சில அம்சங்கள், விளையாட்டு அமைப்புகளின் தன்னாட்சி அதிகாரத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும். தவிர, உறுப்பினர்களில் அதிகாரத்தையும் குறைக்கும் வகையில் உள்ளது. இம்மசோதாவை முழுவதுமாக எதிர்க்கிறோம்,'' என்றார்.

இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி

முத்தரப்பு ஹாக்கி லீக் போட்டியில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் மோதிக் கொண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த இந்திய வீரர் குர்பாஜ் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. பசல்டன் நகரில் நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்திய அணிக்கு துஷார் கண்டேகர், முஜ்தபா, ருபிந்தர் சிங் தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் 3-0 என முன்னிலை பெற்றது.

பின் பாகிஸ்தான் அணிக்கு சோகைல் அபாஸ் (48, 64வது நிமிடம்) இரண்டு கோல் அடித்தார். இதனை தொடர்ந்து கேப்டன் ஷகீல் ஒரு கோல் அடிக்க, போட்டி 3---3 என "டிரா' ஆனது.
பயங்கர மோதல்:
இப்போட்டியின் கடைசி கட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க, ஆக்ரோஷமாக போராடினர். அப்போது "பெனால்டி கார்னர்' ஏரியாவில் வைத்து இந்தியாவின் குர்பஜ் சிங் மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் முரட்டுத் தனமாக தடுத்ததாக, பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். ஒருகட்டத்தில் கைகலப்பில் ஈடுபட, போட்டி முடிய ஒரு நிமிடம் 35 வினாடிகள் மீதம் இருக்கும் போது ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அரைமணி நேரம் வரை போட்டி நடக்கவில்லை. பின் இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு திரும்பினர். ஆனலும், போட்டியை தொடர வேண்டாம் என முடிவு செய்தனர்.
இந்த மோதலில் காயம் அடைந்த இந்திய வீரர் குர்பஜ் சிங், ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் இம்ரான் சகா, ரசூல் ஆகியோரும் காயம் அடைந்திருப்பதாக தெரிகிறது.

கேப்டனாக சச்சின் பிரகாசிக்காதது ஏன்?

வயதில் மூத்தவர்களுக்கு சச்சின் மிகுந்த மரியாதை அளிப்பார். அவர்கள் சொல்வதை அமல்படுத்துவது தனது கடமை என நினைத்தார். இப்படி நிறைய பேரின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டதால் தான், கேப்டனாக பிரகாசிக்க முடியவில்லை,''என, பி.சி.சி.ஐ., முன்னாள் செயலர் ஜெயவந்த் லீலே தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின். "பேட்டிங்கில்' எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். ஆனால், கேப்டனாக ஏமாற்றம் அளித்தார்.

கடந்த 1996ல் அணிக்கு தலைமையேற்ற இவர், 25 டெஸ்டில் 9 தோல்வியை சந்தித்தார். 73 ஒரு நாள் போட்டிகளில் 43ல் தோல்வியை தழுவினார்.

இதையடுத்து கேப்டன் பதவியை 2000ல் ராஜினாமா செய்தார். கேப்டனாக இவரது வீழ்ச்சிக்கான காரணம் குறித்து, இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) முன்னாள் செயலர் ஜெயவந்த் லீலே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் ஜெயவந்த் லீயே கூறியிருப்பதாவது:

கேப்டன் பதவியில் இருந்து சச்சின் விலகிய போது, எனது கண்கள் குளமாகின. கேப்டனாக இருந்த காலத்தில், அவருடன் பழகும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவரது பிரச்னையே யார் சொன்னாலும் கேட்பது தான். அமைதியான குணம் கொண்ட இவர், 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார்.

அன்று முதல், வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதை வழக்கமாக கொண்டார். அவர்கள் சொல்வதை எல்லாம் அமல்படுத்துவது தனது கடமை என நினைத்தார். அப்படி செய்யும் போது தனது சுயபுத்தியை பயன்படுத்த தவறினார். இது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்த, கேப்டன் பதவிக்கு சிக்கலானது.
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆமதாபாத் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. அப்போது, யாரோ ஒருவர் சிபாரிசு செய்தார் என்பதற்காக தனக்கு சற்றும் அறிமுகமில்லாத நிலேஷ் குல்கர்னியை தேர்வு செய்ய வேண்டுமென சச்சின் வலியுறுத்தினார்.


உடனே தேர்வுக் குழு தலைவராக இருந்த கிஷண் ருங்தா ,""நீங்கள் அவர் பவுலிங் செய்வதை பார்த்திருக்கிறீர்களா,''எனக் கேட்டார். சர்வதேச போட்டிகளில் மிகவும் "பிசி'யாக இருந்த சச்சின், ரஞ்சி டிராபி போட்டியில் கூட விளையாடவில்லை.

இதனால் குல்கர்னியை தெரிய வாய்ப்பு இல்லை. இந்நிலையில்,""எனக்கு தெரியாது சார். ஆனால், குல்கர்னி 26 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். மிகச் சிறந்த பவுலர்,''என்று சொன்னார்.

இதற்கு பதில் அளித்த ருங்தா,""டியர் கேப்டன். குல்கர்னி பந்துவீசுவதை பார்த்திருந்தாலாவது, உங்கள் சிபாரிசை ஏற்றுக் கொண்டிருப்பேன். ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணியே குல்கர்னியை தேர்வு செய்யவில்லை. அவரை நீக்கி விட்டனர். உள்ளூர் அணியிலேயே வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு வீரரை தேசிய அணிக்கு எப்படி தேர்வு செய்ய முடியும்,''என்றார்.
இதற்கு, பதில் சொல்ல முடியாமல் தவித்த சச்சினின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. இவ்வாறு ஜெயவந்த் லீலே குறிப்பிட்டுள்ளார்.

ஐ.சி.சி., ரேங்கிங்: இந்தியா நம்பர்-3

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.

இதில் இந்திய அணி ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு 118 புள்ளிகளுடன் முன்னேறியது.

சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 5-0 எனக் கைப்பற்றியதே இம்முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம்.

ஒருநாள் தொடரை முழுமையாக இழந்த இங்கிலாந்து அணி, நான்காவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு 106 புள்ளிகளுடன் பின்தங்கியது.


இந்திய அணி மூன்றாவது இடத்தில் நீடிக்க, நாளை டர்பனில் நடக்கவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்த வேண்டும்.

ஒருவேளை தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணி மீண்டும் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும்.

தவிர தென் ஆப்ரிக்க அணி 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிடும். இலங்கை அணி (119 புள்ளி), இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள, அடுத்து வரவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டும்.

கங்குலிக்கு அனுமதி மறுப்பு

ஈடன் கார்டன் மைதானத்துக்குள் நுழைந்த முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியை பார்த்து, ஐ.சி.சி., அதிகாரி ஒருவர் "யார் நீங்கள்?' எனக் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.

இப்போட்டி துவங்குவதற்கு முன், "பிட்ச் ரிப்போர்ட்' கொடுப்பதற்காக மைதானத்திற்குள் நுழைந்த உள்ளூர் "ஹீரோ'வும், வர்ணனையாளருமான கங்குலியை, ஐ.சி.சி.,யின் ஊழல் தடுப்பு அதிகாரி தர்மேந்தர் சிங் யாதவ், "யார் நீங்கள்?' எனக் கேட்டார்.

அப்போது அவர், "நான் தான் கங்குலி. "பிட்ச் ரிப்போர்ட்' கொடுப்பதற்காக மைதானத்திற்குள் செல்கிறேன்,'' எனக் கூறினார். இதற்கு ஒன்றும் மடங்காத தர்மேந்தர் சிங் யாதவ், கங்குலியை மைதானத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கவில்லை.

அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறினார். அடையாள அட்டையை, வர்ணனையாளர் அறையில் வைத்துவிட்டு வந்த கங்குலி, மீண்டும் சென்று எடுத்து வந்தார்.

அதன்பின் கங்குலியை மைதானத்திற்குள் செல்ல அனுமதி அளித்தார். இச்சம்பவம் குறித்து கங்குலி கருத்து ஒன்றும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து மேற்கு வங்க கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் பிஸ்வாரப் தேய் கூறுகையில், ""இந்த சம்பவம் குறித்து விசாரித்து முடிவு எடுக்கப்படும். இது பற்றி கங்குலியுடன் பேச உள்ளேன்,'' என்றார்.

டுவென்டி-20 தரவரிசை அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் "டுவென்டி-20' போட்டிக்கு தரவரிசை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகள், வீரர்கள் தரவரிசைதான் இதுவரை வெளியிடப்பட்டு வந்தது.

முதன் முறையாக "டுவென்டி-20' போட்டிக்கும் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி அணிகள் வரிசையில் முதல் மூன்று இடங்களை இங்கிலாந்து (127 புள்ளி), இலங்கை (126), நியூசிலாந்து (117) அணிகள் பெற்றுள்ளன.

4, 5, 6வது இடங்களில் தென் ஆப்ரிக்கா (113), இந்தியா (112), ஆஸ்திரேலியா (111) உள்ளன. கடைசி மூன்று இடங்களில் பாகிஸ்தான் (97), வெஸ்ட் இண்டீஸ் (89), ஜிம்பாப்வே (54) உள்ளன.

சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களை இங்கிலாந்தின் இயான் மார்கன் (832), நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (799), இங்கிலாந்தின் பீட்டர்சன் (793) உள்ளனர். இந்தியா சார்பில் "டாப்-10' வரிசையில் ரெய்னா (5வது) மட்டும் இடம் பெற்றுள்ளார்.

சிறந்த பவுலர்கள் பட்டியலில் இலங்கையின் மெண்டிஸ் (748), இங்கிலாந்தின் சுவான் (727), பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் (721) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.

"டாப்-30' பவுலர்கள் வரிசையில், இந்தியாவின் ஹர்பஜனைத் (9), தவிர யாருமில்லை.

"ஆல் ரவுண்டர்கள்' வரிசையில் ஆஸ்திரேலியாவின் வாட்சன் (385), டேவிட் ஹசி (316) முதல் மற்றும் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற அப்ரிதி (339), இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் யுவராஜ் சிங் (192) ஆறாவது இடத்தை பெற்றுள்ளார்.

சச்சின் மாளிகையை பார்க்கலாமா...

மும்பை செல்லும் அனைவரும், சச்சினின் புதிய சொகுசு மாளிகையை பார்க்க செல்கின்றனர். இதனால், சச்சினின் வீடு விரைவில் சுற்றுலா மையமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இதுவரை 181 டெஸ்ட் ((14,965 ரன்கள்), 453 ஒருநாள் (18,111 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், விரைவில் 100 வது சதம் அடிக்க காத்திருக்கிறார்.

இதனிடையே, மும்பையில் 5 மாடிகள் கொண்ட சொகுசு மாளிகையில் சச்சின் சமீபத்தில் குடியேறினார். விநாயர் கோயில், நீச்சல் குளம், "மினி-தியேட்டர்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்குள்ளன.

6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ரூ. 50 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த வீடு தான் இப்போது சுற்றுலா ரசிகர்கள் இலக்காக மாறியுள்ளது. மும்பை செல்லும் அனைவரும், புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள பெர்ரி கிராஸ் ரோடுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். தங்களது சுற்றுலா அட்டவணையில், இந்த வீட்டினையும் சேர்த்துள்ளார்கள்.

நிரந்தர அனுமதி:

தவிர, நகரில் உள்ள அனைவரும், இந்த தீபாவளி விடுமுறையில் இதுவரை பத்திரிகைகளில் மட்டுமே பார்த்த சச்சினின் வீட்டினை, எப்படியும் நேரில் சென்று பார்த்துவிட முடிவு செய்துள்ளனராம். இதனால் அங்கு போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய, போக்குவரத்து போலீசார், சச்சினின் வீட்டில் நிரந்தரமாக தங்க, அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அமிதாப் வீடு:

ஏற்கனவே மும்பையில் உள்ள பல்வேறு பாரம்பரிய தளங்கள், நினைவிடங்கள் வரிசையில் ஜல்சா பகுதியில் உள்ள, அமிதாப்பச்சன் வீடும் இப்படித்தான் முக்கிய சுற்றுலா தளமாகியுள்ளது.

இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கூட, கடந்த 30 ஆண்டுகளாக, அமிதாப்பச்சன் வீட்டினையும் தாங்கள் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக வைத்துள்ளனர். இப்போது, சச்சின் வீடும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

ஏமாற்றம் அளித்த பீல்டிங்

மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் "பீல்டிங்' மோசமாக இருந்தது,'' என, இங்கிலாந்து கேப்டன் குக் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதுகின்றன. முதல் மூன்று போட்டிகளில் வென்ற இந்திய அணி, தொடரை வென்றது.

இது குறித்து குக் கூறியது:

முதல் இரண்டு போட்டிகளை காட்டிலும், மூன்றாவது போட்டியில் எங்களது பேட்டிங், பவுலிங்கில் முன்னேற்றம் காணப்பட்டது. "உலக சாம்பியன்' இந்திய அணிக்கு எதிராக 298 ரன்கள் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. நல்ல இலக்கினை தான் நிர்ணயித்தோம்.

ஆனால் "பீல்டிங்கில்' தவறு செய்ததால் வெற்றி வாய்ப்பினை இழக்க நேரிட்டது. இதன் காரணமாக இந்திய அணி, கூடுதலாக 20 முதல் 25 ரன்கள் எடுத்தது. விராத் கோஹ்லி கொடுத்த இரண்டு "கேட்ச்' வாய்ப்பு, ரவிந்திர ஜடேஜாவினை "ரன்அவுட்' செய்யும் வாய்ப்பு ஆகியவற்றை "விக்கெட் கீப்பர்' கீஸ்வெட்டர் தவற விட்டார்.

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகி இருந்தோம். ஆனால் "பீல்டிங்கில்' சாதிக்க தவறியது ஏமாற்றம் அளித்தது. 0-3 என பின்தங்கியுள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை சவாலாக எடுத்துக் கொண்டு வெற்றி பெறுவோம்.

டிராட் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 98 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. இவரை போன்ற பேட்ஸ்மேன் தான் அணிக்கு தேவை. பிராட், ஆண்டர்சன் அணியில் இடம் பெறாதது, பெரிய பின்னடைவாக அமைந்தது.

கடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணியினர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் தோனி போட்டியை வெற்றிகரமாக முடிக்கிறார்.

பழிவாங்கும் படலமா?: கேப்டன் தோனி மறுப்பு

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பழிவாங்கும் படலமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. விளையாட்டில் இந்த வார்த்தை மிகவும் கடினமானது,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டித் தொடரில் ஒரு வெற்றிகூட பெறாமல், வெறுங்கையுடன் திரும்பியது. இதற்கு, தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பதிலடி கொடுத்தது. தொடரை 3-0 என வென்று பழிதீர்த்தது.

இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:

விளையாட்டு என்று வரும் போது, பொதுவாக பழி தீர்ப்பது என்பது மிகவும் கடினமான வார்த்தை. விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பேசிக்கொண்டே, பழி தீர்ப்பது பற்றியும் பேசுகிறோம். இந்த வார்த்தையை விளையாட்டில் பயன்படுத்துவது குறித்து நான் நினைக்கவே இல்லை.


வெற்றிக்கு காரணம்:

இத்தொடரில் சீனியர் வீரர்கள் பலர் காயமடைந்த நிலையில், இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல, இங்கிலாந்து தொடரில் "டாஸ்' கூட வெல்ல முடியவில்லை. இருப்பினும் அதிக ரன்கள் எடுத்தோம்.

ஆனால், மழை, பனிப்பொழிவு போன்ற காரணங்களால் சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை. இப்போது சொந்த மண் சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக உள்ளது. இதைப் பயன்படுத்தி பவுலர்கள் சிறப்பாக செயல்படுவது தான் வெற்றிக்கு காரணம்.


இளமைக்கு முன்னுரிமை:

பேட்டிங்கின் போது வழக்கம் போல, இளம் வீரர்களை முன்னணி வரிசையில் களமிறங்க வேண்டும் என விரும்புவேன். அவர்கள் 20 ஓவர்களுக்கும் அதிகமாக பேட்டிங் செய்யும் போது, தங்களது திறனை பட்டை தீட்டிக்கொள்ள உதவும். ஏற்கனவே, முக்கிய வீரர்கள் காயம் அடைந்த நிலையில், இப்படிச் செய்தால் திறமையான வீரர்களை கண்டறிய முடியும்.


தாமதமான வெற்றி:

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் நாங்கள் எளிதாக வென்றிருக்க வேண்டும். இடையில் ஒரு சில விக்கெட்டுகளை இழந்ததால், சற்று நெருக்கடி ஏற்பட்டது. கூடுதலாக ஒரு விக்கெட்டை இழந்திருந்தால், இலக்கை எட்டுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டு இருக்கும், அவ்வளவு தான்.


எங்களுக்கு சாதகம்:

தவிர, நானும், ஜடேஜாவும் களத்தில் இருக்கும் வரை எப்படியும் வெல்வோம் என்று நம்பினோம். இதற்கேற்ப பனிப்பொழிவு சாதகமாக இருந்தது. இதனால் இங்கிலாந்து பவுலர்கள் "ரிவர்ஸ் சுவிங்', "யார்க்கர்' முறையில் பவுலிங் செய்ய முடியவில்லை.

தொடரை வென்று விட்டதால், அடுத்து வரும் போட்டிகளில், பிற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இதுகுறித்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். மொத்தத்தில் சூழ்நிலைக்கேற்ப சிறந்த வீரர்களுடன் களமிறங்குவோம்.

இவ்வாறு தோனி கூறினார்.

சச்சின் புதிய வீட்டுக்கு அபராதம்

சச்சின் தனது புதிய வீட்டிற்கு முறைப்படி குடியிருப்பு அனுமதி சான்றிதழ் பெறவில்லை. இதற்காக, மும்பை மாநகராட்சிக்கு ரூ. 4.35 லட்சம் அபராதம் செலுத்தினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகன் சச்சின். இவர், மும்பை புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள பெர்ரி கிராஸ் ரோட்டில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டினார்.

இங்கு சமீபத்தில் குடியேறினார். ஆனால், வீட்டில் நிரந்தரமாக குடியிருப்பதற்கான தகுதி சான்றிதழை பெறவில்லை.

இதையடுத்து மாநகராட்சி விதிமுறைகளை சச்சின் மீறியதாக புகார் எழுந்தது. அபராதம் செலுத்தும்படி நோட்டீசும் அனுப்பப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,""குடியிருப்பதற்கு தகுதியான இடம் என்று அனுமதி பெற்ற பிறகு தான் குடியேற வேண்டும்.

ஆனால், சச்சின் அனுமதி சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பே "வாஸ்து பூஜை' செய்து விட்டு, வீட்டில் குடியேறினார். இது சட்டத்துக்கு புறம்பான செயல்.

இதற்காக ஒரு சதுர அடிக்கு ரூ. 50 வீதம், இவரது வீடு அமைந்துள்ள சுமார் 836 சதுர அடியை கணக்கிட்டு ரூ. 4.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்டு அபராத தொகையை சச்சின் செலுத்தினார். இதையடுத்து இவருக்கு அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டது,''என்றார்.

முதல் இடத்தில் நீடிப்பது கடினம்

"டென்னிஸ் அரங்கில் முதல் இடத்தில் நீடிப்பது மிகவும் கடினம், என, டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி தெரிவித்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் "ரேங்கிங் பட்டியலில் "நம்பர்-1 இடத்தில் உள்ளார் வோஸ்னியாக்கி. சமீபத்தில் நடந்த யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் முதலிடத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது.

இது குறித்து வோஸ்னியாக்கி கூறியது:

முதல் இடத்தை தக்க வைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இது மிகவும் கடினமானது. முதல் இடத்திற்கு முன்னேறிய போது எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். நீண்ட நாள் உழைப்பிற்கு கிடைத்த பலனாக தான் இதனை பார்த்தேன்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதே இடத்தில் நீடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக கடினமாக போராடினேன். ஆனால், தோல்வி அடைய நேர்ந்தது ஏமாற்றம் அளிக்கிறது. தற்போது நடக்கும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

காயம் மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்படாமல் இருக்க, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஏனென்றால் காயத்தினால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து மீண்டு, பழைய நிலையை அடைவது சிரமம்.

இவ்வாறு வோஸ்னியாக்கி கூறினார்.

குழப்பமான புதிய விதிமுறை: கோஹ்லி

ஐ.சி.சி., அறிமுகப்படுத்தி உள்ள ஒருநாள் போட்டிக்கான புதிய விதிமுறை குழப்பமாக உள்ளது,'' என, இந்திய வீரர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), சமீபத்தில் ஒருநாள் போட்டிக்கான விதிமுறையை தற்போது நடக்கும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு ஒருநாள் தொடரில் அறிமுகம் செய்தது. இதன்படி, ஒரு இன்னிங்சில் இரண்டு பந்துகள், "பவுர்பிளே' நிபந்தனை, "ரன்னர்' கிடையாது, உள்ளிட்ட பல புதிய முறைகள் பின்பற்றப்பட்டன.

இதுகுறித்து இந்திய "மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி கூறியதாவது: ஒருநாள் போட்டிக்கான விதிமுறையில் மாற்றம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் புதிய விதிமுறைகள் சற்று குழப்பமாக உள்ளது.

"ரன்-அவுட்' குழப்பம்:

குறிப்பாக "ரன்-அவுட்' தொடர்பான புதிய விதிமுறை சந்தேகமாக இருக்கிறது. இதன்படி பீல்டரை தடுக்கும் விதமாக செயல்படும் பேட்ஸ்மேனுக்கு "ரன் அவுட்' கொடுக்கலாம். அதாவது, ஒரு பீல்டர் "ரன் அவுட்' செய்ய முற்படும் போது, பேட்ஸ்மேன் தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக வேண்டுமென்றே திசையை மாற்றி ஓடினால், அவருக்கு "அவுட்' கொடுக்கலாம்.

இது தொடர்பான முடிவை எடுக்க, களத்தில் இருக்கும் அம்பயர் மூன்றாவது அம்பயரை கேட்கலாம். இதில் "ரன் அவுட்' செய்யப்பட்ட பின் தான் "அப்பீல்' செய்ய வேண்டுமா என்பது போன்ற விஷயங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.


மழையால் பாதிப்பு:

இங்கிலாந்து மண்ணில் கண்ட தொடர் தோல்விகளுக்கு பின், தற்போது முதல்முறையாக வெற்றி கிடைத்திருப்பது உற்சாகமாக உள்ளது. இந்த வெற்றி அடுத்து வரும் போட்டிகளிலும் சாதிக்க உதவும் என நம்புகிறேன். சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் நடந்த ஒருநாள் போட்டியில் எங்களது செயல்பாடு சிறப்பாக இருந்தது. ஆனால் மழை உள்ளிட்ட காரணங்களால், வெற்றி நழுவியது.


சுழற்பந்துவீச்சு பலம்:

இந்திய அணியின் பலம் சுழற்பந்துவீச்சு தான். முதல் போட்டியில் "மிடில் ஓவரில்' சுழற்பந்துவீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டனர். இதனால் இங்கிலாந்து அணியின் ரன் வேட்டை தடுக்கப்பட்டு விக்கெட் வேட்டை நடத்தப்பட்டது.

வேகப்பந்துவீச்சில் பிரவீண் குமார் நம்பிக்கை அளித்தார். இளம் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அருமையாக செயல்பட்டார். முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது.

பயிற்சியை துவக்கினார் சச்சின்

காயம் காரணமாக ஓய்வில் இருந்த சச்சின், நேற்று மும்பையில் பேட்டிங் பயிற்சியை துவக்கினார்.

இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். ஒரு நாள் தொடர் துவங்க இருந்த நேரத்தில், ஏற்கனவே ஆப்பரேஷன் செய்திருந்த இவரது கால் பெருவிரலில், லேசாக வீக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து வீக்கமும், வலியும் அதிகரித்ததால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் நாடு திரும்பினார்.


இது குறித்து லண்டனில் உள்ள, "ஸ்பெஷலிஸ்ட்' டாக்டர் ஜேம்ஸ் கால்டரை சந்தித்தார். அவரது ஆலோசனையில் பேரில், சச்சினுக்கு என "ஸ்பெஷலாக' வடிவமைக்கப்பட்ட "ஷூ' அணிந்து வந்தார்.

சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மும்பை அணிக்கு ஹர்பஜன் சிங் தலைமை ஏற்று, கோப்பை வென்று தந்தார். போட்டிகளில் பங்கேற்கவில்லை என்ற போதிலும், சச்சின் தனது அணியினருடன் சென்று, வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

காயம் காரணமாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடக்கும் ஒருநாள் தொடரில், முதல் இரு போட்டிகளுக்கான அணியிலும் சச்சின் தேர்வு செய்யப்படவில்லை.

இதனிடையே, நேற்று முன்தினம் மும்பையில் உள்ள "பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ்' மைதானத்தில் சச்சின், பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து சச்சின், வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அணிக்கு திரும்பி விடுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, சேவக்கும் வரவுள்ள நிலையில், சச்சினும் பயிற்சிக்கு திரும்பியது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.

ஐந்தாவது ஐ.பி.எல் தொடர் தேதி அறிவிக்கப்பட்டது

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் அடுத்த ஆண்டு (ஏப்., 4- மே. 27) நடக்கும். இதன் துவக்க விழா சென்னையில் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டுதோறும் உள்ளூர் "டுவென்டி-20' தொடர் நடத்தப்படுகிறது. ஐந்தாவது தொடருக்கான தேதி, துவக்க விழா நடக்கும் இடம் ஆகியவை நேற்று அறிவிக்கப்பட்டது.


ஐதராபாத்தில் ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சில் கூட்டம், அதன் தலைவர் ராஜிவ் சுக்லா தலைமையில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்திற்கு பின் ராஜிவ் சுக்லா கூறியது:

ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக ஐ.பி.எல்., அமைப்பில் இருந்து கொச்சி டஸ்கர்ஸ் அணி நீக்கப்பட்டது. இதில் விளையாடிய வீரர்களுக்கு உரிய தீர்வு காணப்படும்.

இவர்கள் மீண்டும் கொச்சி அணியிலோ அல்லது வேறு அணியில் விளையாடுவார்களா என்ற முடிவு அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும்.

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கவில்லை. மீண்டும் அவர்களை எடுப்பது பற்றி இன்று விவாதிக்கவில்லை. அடுத்த முறை இதுபற்றி விவாதிப்போம்.

ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் களைப்படைகின்றனர் என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. வீரர்களின் சோர்வினை தடுக்க, அணியின் பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் இணைந்து செயல்பட வேண்டும்.

மேலும் வீரர்கள் போட்டி முடிந்த பின்பு "பார்ட்டி'யில் கலந்து கொள்வதற்கு தடைவிக்க வேண்டும் என ஐ.பி.எல்., அணி உரிமையாளர்களிடம் பேச உள்ளோம்.

இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.

பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் கூறுகையில்,""அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல்., போட்டிகள் சென்னையில் துவங்கும். ஏப்., 3ம் தேதி சென்னையில் இதன் துவக்க விழா நடக்கும். வீரர்களை ஏலத்தில் எடுப்பது போன்ற முடிவுகள் அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும்,''என்றார்.

ரேங்கிங் : இந்தியா முன்னேறுமா?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, வெல்லும் பட்சத்தில் இந்திய அணி "ரேங்கிங்' பட்டியலில் முன்னேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் அணிகள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி (112 புள்ளி) ஐந்தாவது இடத்தில் உள்ளது.

முதல் நான்கு இடங்களில் ஆஸ்திரேலியா (130), இலங்கை (119), தென் ஆப்ரிக்கா (116) மற்றும் இங்கிலாந்து (113) அணிகள் உள்ளன.

இதனிடையே நாளை துவங்கும் தொடரில், இந்திய அணி வெல்லும் பட்சத்தில் இந்திய அணி நான்காவது இடத்தை பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முடிவுக்கு ஏற்ப, இந்த வரிசையில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் தோனி (6வது), கோஹ்லி (9), சச்சின் (13), காம்பிர் (14), சேவக் (15) ஆகியோர் "டாப்-15' இடத்துக்குள் உள்ளனர்.

ரேங்கிங் : இந்தியா முன்னேறுமா?

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, வெல்லும் பட்சத்தில் இந்திய அணி "ரேங்கிங்' பட்டியலில் முன்னேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் அணிகள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி (112 புள்ளி) ஐந்தாவது இடத்தில் உள்ளது.

முதல் நான்கு இடங்களில் ஆஸ்திரேலியா (130), இலங்கை (119), தென் ஆப்ரிக்கா (116) மற்றும் இங்கிலாந்து (113) அணிகள் உள்ளன.

இதனிடையே நாளை துவங்கும் தொடரில், இந்திய அணி வெல்லும் பட்சத்தில் இந்திய அணி நான்காவது இடத்தை பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முடிவுக்கு ஏற்ப, இந்த வரிசையில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் தோனி (6வது), கோஹ்லி (9), சச்சின் (13), காம்பிர் (14), சேவக் (15) ஆகியோர் "டாப்-15' இடத்துக்குள் உள்ளனர்.

ஐ.பி.எல்.லில் பாகிஸ்தான் வீரர்கள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை சேர்ப்பது குறித்து வரும் 14-ம் தேதி நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் பணம் கொழிக்கும் ஐபிஎல் போட்டியில் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுடன் ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் சுக்லா கூறியது:

ஐபிஎல் போட்டியின் பாகிஸ்தானைச் சேர்ந்த நடுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். சில அணிகளுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர்களாக உள்ளனர். இதேபோல் சில அணிகளின் அதிகாரிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

அப்படியிருக்கையில் ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் ஐபிஎல் போட்டியில் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறமுடியாது. எனவே யாருக்கு எதிராகவும் தடை என்ற கேள்விக்கே இடமில்லை.

பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் போட்டியில் சேர்ப்பது குறித்து ஆட்சி மன்றக் குழு கூட்டத்தின்போது விவாதிக்கப்படும். எனினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களிடமே உள்ளது. அவர்களை ஏலம் எடுப்பதா, வேண்டாமா என்பதை அணி உரிமையாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஐபிஎல் போட்டியின் போது வீரர்கள் காயமடைவதால்தான் சர்வதேச அளவிலான போட்டிகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று இட்டுக்கட்டி கூறப்படுகிறது.

ஐபிஎல் போட்டியின்போது வீரர்கள் காயத்தோடும், களைப்போடும் இருந்தாலும்கூட, அவர்களை விளையாடும்படி வற்புத்தப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. வீரர்களின் காயத்துக்கு ஐபிஎல் போட்டியை மட்டுமே குற்றம்சாட்ட முடியாது.

இந்தியா-இங்கிலாந்துத் தொடரில்தான் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர். எனவே காயம் எப்படி வேண்டுமானாலும் ஏற்படலாம்.

பைனலில் இளம் இந்திய அணி

நான்கு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், இளம் இந்திய அணி (19 வயது) கடைசி லீக் போட்டியில், வெஸ்ட் இண்டீசை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து நாளை நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் 19 வயதுக்குபட்ட வீரர்கள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆந்திராவில் நடக்கிறது. நேற்று நடந்த போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய இந்திய அணிக்கு ஹெர்வத்கர் (22), கேப்டன் உன்முக்த் சந்த் (28), சுமாரான துவக்கம் கொடுத்தனர். வோஹ்ரா (44) அரைசத வாய்ப்பை இழந்தார்.

தியோபிராட் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுக்க, இந்திய அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது.

சற்று கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அல்லைன், ஹாட்ஜ் இருவரும் அதிகபட்சமாக தலா 31 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 40.5 ஓவரில் 168 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.


பைனலில் இந்தியா:

இத்தொடரில் ஒவ்வொரு அணியும் 6 லீக் போட்டிகளில் பங்கேற்றது. இதில் இந்திய அணி அனைத்து போட்டியிலும் வென்றது.

இதையடுத்து இந்திய அணி, பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ள இலங்கையுடன் (3 வெற்றி), நாளை பைனலில் மோதுகிறது. மூன்று, நான்காவது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சந்திக்கின்றன.

இந்தியா-இங்கிலாந்து தொடரில் "ஹாட் ஸ்பாட்' இல்லை

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில், "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பம் பயன்படுத்தப் போவதில்லை,'' என, இத்தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய பி.பி.ஜி., ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைமை அதிகாரி வாரன் பிரன்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து ஒருநாள் மற்றும் ஒரே ஒரு "டுவென்டி-20' போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி அக்.14ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.


புதிய தொழில்நுட்பம்:

சமீபகாலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில், பந்து பேட்டில் பட்டதா, இல்லையா என்பதை உறுதி செய்ய "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இதன்படி ஆடுகளத்தின் இரு புறமும் "இன்பிரா ரெட் கேமரா' பொருத்தப்படும். இதில் போட்டியின் ஒவ்வொரு அசைவும் படம் பிடிக்கப்படும். இவை கறுப்பு வெள்ளை "நெகடிவ்' படங்களாக "கம்ப்யூட்டரில்' பதிவு செய்யப்படும்.

பந்து பேட்டின் மீது படும் போது, அந்த இடம் மட்டும் வெள்ளையாக தெரியும். இதை வைத்து "அவுட்' என்பதை உறுதி செய்யலாம். கிரிக்கெட்டில் முதன் முதலாக 2006-07ல் நடந்த ஆஷஸ் தொடரில் பயன்படுத்தப்பட்டது. இந்த "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் வரை செலவாகும்.


"ஹாட் ஸ்பாட்' சர்ச்சை:

சமீபத்தில், இங்கிலாந்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அப்போது இதுதொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதனால் பி.சி.சி.ஐ., அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை மற்றும் "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பத்தை எதிர்த்தது.

பி.பி.ஜி., ஸ்போர்ட்ஸ் நிறுவன தலைமை அதிகாரி வாரன் பிரன்ணன் கூறுகையில், ""இங்கிலாந்து மண்ணில் நடந்த தொடரின் போது "ஹாட் ஸ்பாட்' தொழில்நுட்பத்தில் சில பிரச்னைகள் எழுந்தது வருத்தமளிக்கிறது.

டி.ஆர்.எஸ்., மற்றும் "ஹாட் ஸ்பாட்' முறைக்கு, பி.சி.சி.ஐ., ஆதரவு அளிக்காததால், இந்திய மண்ணில் நடக்கவுள்ள தொடரில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த போவதில்லை.

புதிதாக நான்கு கேமராக்கள் வாங்கி உள்ளோம். இதனை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள தொடர்களில் பயன்படுத்தி, "ஹாட் ஸ்பாட்' சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்'' என்றார்.

நடையை கட்டியது நடப்பு சாம்பியன்

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் இருந்து, "நடப்பு சாம்பியன்' சென்னை கிங்ஸ் வெளியேறியது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், 46 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக வீழ்ந்தது. வார்னர் அதிரடி சதம் கைகொடுக்க, வெற்றிபெற்ற நியூ சவுத் வேல்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடரின் "ஏ' பிரிவு கடைசி லீக் போட்டி நேற்று சென்னையில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், நியூ சவுத்வேல்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற காடிச், பேட்டிங் தேர்வு செய்தார்.


நல்ல துவக்கம்:

நியூ சவுத்வேல்ஸ் அணிக்கு வாட்சன், வார்னர் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். போலிஞ்சரின் முதல் ஓவரில் மூன்று பவுண்டரி விளாசினார் வாட்சன். இவர் 21 ரன்னுக்கு அவுட்டானார். பின் வார்னருடன், ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.


சூப்பர் ஜோடி:

ஸ்மித் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுபுறம் வார்னர் சென்னை அணியினரின் பவுலிங்கை உண்டு, இல்லை என்று துவம்சம் செய்தார். வார்னர் 38 ரன் எடுத்திருந்த போது, கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை, ஜகாதி கோட்டை விட்டார்.

கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட வார்னர், சிக்சர் மழை பொழிந்தார். ஜகாதி,
போலிஞ்சர், ரெய்னா, அஷ்வின் என, யாரையும் விட்டு வைக்கவில்லை.


வார்னர் சதம்:

இரண்டாவது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தநிலையில், ஸ்மித் (31) வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வார்னர், 58வது பந்தில் தனது 2வது "டுவென்டி-20' சதத்தை பதிவு செய்தார். பிராவோ வீசிய 19வது ஓவரில் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்கள் எடுக்கப்பட்டது.

20 ஓவரில் நியூ சவுத்வேல்ஸ் அணி 2 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது.


ஹசி ஆறுதல்:

அரையிறுதிக்கு முன்னேற, 17 ஓவரில் 202 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி களமிறங்கியது. வழக்கம் போல் ஹசி, முரளி விஜய் துவக்கம் தந்தனர். கிளார்க்கின் முதல் ஓவரில் ஹசி, மூன்று பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில், அம்பயர் ஜோகனின் (தெ.ஆப்.,) தவறான தீர்ப்பில் ஹசி (37) அவுட்டானார்.

முரளி விஜய் (17) மீண்டும் ஏமாற்றினார். 14 பந்துகளில் 28 ரன்கள் விளாசிய ரெய்னா அவுட்டானதும், சென்னை அணியின் வெற்றி கனவு தகர்ந்தது. கரைசேர்ப்பார் என்று எதிர்பார்த்த கேப்டன் தோனி, 2 ரன்னுக்கு அவுட்டாகி வெறுப்பேற்றினார். பிராவோவும் (16) நிலைக்கவில்லை. சகா "டக்' அவுட்டானார்.

பத்ரிநாத் (13) இம்முறையும் சொதப்பினார். அஷ்வின் (1) நிலைக்கவில்லை. கடைசியில் குலசேகரா (18), போலிஞ்சர் (17) போராடிய போதும், வெற்றிக்கு உதவவில்லை.

சென்னை அணி 18.5 ஓவரில் 155 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. நியூ சவுத் வேல்ஸ் அணி 6 புள்ளியுடன், அரையிறுதிக்கு முன்னேறியது.

அதிசயம் நிகழ்த்துமா சென்னை கிங்ஸ்

சாம்பியன்ஸ் லீக் தொடரில் இன்றைய முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், சென்னை அணி நல்ல "ரன்ரேட்டில்' இமாலய வெற்றி பெற வேண்டும். பின் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம்.

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் "ஏ' பிரிவு கடைசி லீக் போட்டியில், "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணியை சந்திக்கிறது.


மோசமான துவக்கம்:

சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய், ரெய்னா ஆகியோர் துவக்கத்தில் திணறுவது பின்னடைவை ஏற்படுத்துகிறது. இன்று இவர்கள் எழுச்சி பெற வேண்டும். கேப்டன் தோனி, பத்ரிநாத் தங்களது ஆமை வேக ஆட்டத்துக்கு விடைகொடுக்க வேண்டும். "ஆல்-ரவுண்டராக' டுவைன் பிராவோ அசத்துவது நம்பிக்கை தருகிறது.

கடந்த போட்டியில் பவுலிங்கில் கலக்கிய போலிஞ்சர் இன்றும் தனது விக்கெட் வேட்டையை தொடர்ந்தால் எதிரணிக்கு சிக்கல் ஏற்படும். இவரை தவிர அஷ்வின், மார்கல், ஜகாதி உள்ளிட்டோர் தங்களின் வலிமையை நிரூபிக்க வேண்டும்.


ஸ்மித் நம்பிக்கை:

நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு துவக்கத்தில் வாட்சன், வார்னர், டேனியல் ஸ்மித் ஆகியோர் கைகொடுக்கின்றனர். கேப்டன் சைமன் காடிச் "பார்மிற்கு' திரும்பினால் நல்லது. ஸ்டீபன் ஸ்மித்தின் அசத்தல் ஆட்டம் இன்றும் தொடரலாம்.

பவுலிங்கில் ஸ்டீவ் ஓ கபே, ஸ்டீபன் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஹென்ரிக்ஸ் விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும்.

சென்னையில் இன்று நடக்கும் மற்றொரு "ஏ' பிரிவு லீக் போட்டியில், டிரினிடாட் அண்டு டுபாகோ அணி, கேப் கோப்ராஸ் அணிகள் மோதுகின்றன.


வாய்ப்பு எப்படி?:

சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இம்முறை "ஏ' பிரிவு "குரூப் ஆப் டெத்' என அழைக்கப்பட்டது. இதற்கேற்ப அரையிறுதிக்கு முன்னேற அணிகள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

இன்று கேப் கோப்ராஸ் வெற்றி பெற்றால்(5 புள்ளிகளுடன்) நல்ல "ரன் ரேட்' இருப்தால், மும்பையை பின்னுக்கு தள்ளி அரையிறுதிக்கு முன்னேறும். இதே போல சென்னை அணியை, நியூ சவுத் வேல்ஸ் வென்றால் 6 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை பெறும்.

மாறாக கோப்ராஸ், நியூ சவுத் வேல்ஸ் அணிகள் தோல்வி அடையும் பட்சத்தில் மும்பை அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். பின் நியூ சவுத் வேல்ஸ், சென்னை கிங்ஸ், டிரினிடாட் டுபாகோ ஆகிய 3 அணிகள் இடையே அரையிறுதிக்கு முன்னேறுவதில் போட்டி இருக்கும். இனை அனைத்து நான்கு புள்ளிகள் பெற்று இருக்கும். அப்போது "ரன் ரேட்' அடிப்படையில் வாய்ப்பு முடிவு செய்யப்படும்.

எனவே, இன்று சென்னை அணி முதலில் நல்ல "ரன் ரேட்டில்' வெற்றி பெற வேண்டும். அதற்கு பின் அதிர்ஷ்டம் அடித்தால், அரையிறுதி வாய்ப்பை பெறலாம்.