டெஸ்ட் ரேங்கிங்: இந்தியா நம்பர்-4

ஐ.சி.சி., டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சிறந்த டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியல் நேற்று துபாயில் வெளியிடப்பட்டது.

இதில் 111 புள்ளிகளுடன் இந்திய அணி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

தலா 116 புள்ளிகளுடன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் முதலிரண்டு இடத்தில் நீடிக்கின்றன.

பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் சச்சின், 12வது இடத்தை பாகிஸ்தானின் அசார் அலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வேறு எந்த ஒரு இந்திய வீரரும், "டாப்-20' வரிசையில் இடம் பெறவில்லை. சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), டிவிலியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), காலிஸ் (தென் ஆப்ரிக்கா) ஆகியோர் "டாப்-3' வரிசையில் உள்ளனர்.

பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ஜாகிர் கான் (12வது), பிரக்யான் ஓஜா (20) ஆகியோர் "டாப்-20' வரிசையில் உள்ளனர்.

ஸ்டைன் (தென் ஆப்ரிக்கா), சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்), ஆண்டர்சன் (இங்கிலாந்து) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

சரியான பதிலடி

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் சொந்த அணிகளால் புறக்கணிக்கப்பட்ட கங்குலி, டிராவிட் மனம் தளர்ந்து விடவில்லை. மற்ற அணிகளின் கேப்டன்களாக சிறப்பாக செயல்பட்டு, சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

முதன் முதலாக 2008ல் ஐ.பி.எல்., துவங்கப்பட்ட போது, கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் "கோல்கட்டா பிரின்ஸ்' கங்குலி. இத்தொடரில் கோல்கட்டா அணி பங்கேற்ற 14 போட்டிகளில் 6ல் வெற்றி மட்டும் பெற்றது. இதனால், 2009ல் சுழற்சி முறை கேப்டன் என்ற பெயரில், கங்குலி சாதாரண வீரராக களமிறங்கினார். கடைசியில் இதுவும் சொதப்ப, 2010ல் கங்குலி மீண்டும் கேப்டனானார்.


முடிந்த கதை:

இம்முறை 14 போட்டியில் 7 வெற்றி கிடைத்தது. வெறுத்துப்போன அணி உரிமையாளர் ஷாருக்கான், 2011ல் கங்குலியை கைவிட்டார். பின் நடந்த வீரர்களுக்கான ஏலத்தில் கங்குலியை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. இதையடுத்து, கங்குலியின் ஐ.பி.எல்., ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.


திடீர் அதிர்ஷ்டம்:

பின் திடீரென புனே வாரியர்ஸ் பெரும் முயற்சி எடுத்து கங்குலியை ஏலத்தில் எடுக்க, 2011ல் 4 போட்டியில் பங்கேற்று 50 ரன்கள் எடுத்தார். தற்போதைய தொடரில் புனே அணியின் "ரெகுலர்' கேப்டன் யுவராஜ் சிங், "கேன்சரால்' பாதிக்கப்பட, கேப்டன் அதிர்ஷ்டம் கங்குலிக்கு அடித்தது.

இம்முறை காரம் குறையாத கங்குலியாக ஜொலித்தார். டில்லி அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 41 ரன்கள் எடுத்ததுடன், 2 விக்கெட்டும் வீழ்த்தி ஆல் ரவுண்டராக மிரட்டினார். புனே அணி பங்கேற்ற முதல் 8 போட்டிகளில் 4 போட்டியில் வெற்றி பெற்றது.


டிராவிட் புறக்கணிப்பு:

இதேபோல, 2008ல் பெங்களூரு அணிக்கு கேப்டனாக இருந்த டிராவிட், 14 போட்டிகளில் 4 வெற்றி மட்டும் பெற்றுத் தந்தார். இதனால், 2009ல் பீட்டர்சனை கேப்டனாக அறிவித்தார் அணி உரிமையாளர் விஜய் மல்லையா. இவர் பாதியில் நாடு திரும்ப, கும்ளே கேப்டனானார்.


மீண்டும் அசத்தல்:

2011ல் பெங்களூரு அணி விராத் கோஹ்லியை மட்டும் தக்கவைத்துக்கொண்டது. இதனால் பொது ஏலத்துக்கு வந்த டிராவிட், ராஜஸ்தான் அணிக்கு சென்றார். அங்கு 2011ல் 12 போட்டிகளில் பங்கேற்று 343 ரன்கள் எடுத்தார். இம்முறை வார்ன் ஓய்வு பெற்றதால், கேப்டன் பொறுப்பு டிராவிட்டுக்கு தேடி வந்தது.

ஐந்தாவது தொடரில் டிராவிட்டை மட்டும் நம்பி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் சற்று பலவீனமான அணியாக தெரிந்தது. ஆனால், துவக்கத்தில் இருந்தே மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 4 ல் வெற்றி பெற்றது. அணியின் இளம் வீரர் ரகானே, ஓவேஸ் ஷா இருவரும் ரன்மழை பொழிகின்றனர்.

மொத்தத்தில், 2011ல் தங்களது சொந்த அணிகளால் புறக்கணிக்கப்பட்ட கங்குலி, டிராவிட் தான், இந்த தொடரில் சிறந்த கேப்டன்களாக அசத்தி வருகின்றனர்.

கங்குலி தலைமை கிளார்க் ஆர்வம்

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாட உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், புனே வாரியர்ஸ் அணிக்காக கங்குலி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கங்குலி பழகுவதற்கு இனிமையானவர். அவருடன் நட்புணர்வு நீடிக்கிறது. ஐபிஎல் தொடரில் அவரது தலைமையின் கீழ் விளையாடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

புனே வீரர்கள் சிலரிடம் பேசினேன். கேப்டனாக கங்குலி சிறப்பாக செயல்படுவதாகக் கூறினர். ஐபிஎல் போட்டியில் இதுவரை விளையாடியதில்லை. சிறப்பாக விளையாடி முத்திரை பதிக்க முடியும் என நம்புகிறேன் என்றார்.

சச்சினுக்கு எம்.பி., பதவி: மஞ்ச்ரேக்கர் அதிர்ச்சி

சச்சினுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி அளிக்கப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தது, தனக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சாசன சிறப்பு பிரிவின்படி ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க, பார்லிமென்ட்டில் சச்சின் நுழைவது உறுதியாகி உள்ளது. இது குறித்து பிரபலங்கள் சிலரது கருத்து:


சஞ்சய் மஞ்ச்ரேக்கர்(முன்னாள் கிரிக்கெட் வீரர்):

சச்சினுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி என்ற செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தது பேரதிர்ச்சியாக இருந்தது. ஓய்வுக்கு பின் பயிற்சியாளர் உட்பட கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபடுவார் என நினைத்தேன். எம்.பி., ஆவார் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. தற்போது அதிகளவில் போட்டிகளில் பங்கேற்காததால், பார்லிமென்ட் கூட்டங்களில் கலந்து கொள்ள இவருக்கு போதிய நேரம் <உண்டு.


ஹர்ஷா போக்ளே(கிரிக்கெட் வர்ணனையாளர்):

சச்சினை வைத்து பலரும் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இவரை கவுரவப்படுத்துவதற்காக தான் ராஜ்யசபா பதவி என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பார்லிமென்ட்டில் சமூக பிரச்னைகள், நாட்டின் எதிர்காலம் பற்றி பேச வேண்டும் என எதிர்பார்த்தால், அதற்கான அனுபவம் அவரிடம் இல்லை. அவருடன் நெருக்கமாக பழகியதன் அடிப்படையில், அவருக்கு தெரிந்தது எல்லாம் கிரிக்கெட் மட்டுமே. தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதால், பார்லிமென்ட் செல்ல நேரம் கிடைக்குமா என தெரியவில்லை.


ஆகாஷ் சோப்ரா(முன்னாள் கிரிக்கெட் வீரர்):

விளையாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ராஜ்யசபா பதவியை சச்சின் ஏற்றுக் கொண்டுள்ளார். வசதியற்ற விளையாட்டு வீரர்களின் நலனுக்காக குரல் எழுப்ப வேண்டும். விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகளின் தலையீட்டை போக்க போராட வேண்டும்.


சேவக்(கிரிக்கெட் வீரர்):

வாழ்த்துகள் சச்சின். ஐ.பி.எல்., போட்டியில் முதல் முறையாக ராஜ்யசபா உறுப்பினருக்கு எதிராக விளையாடுகிறேன்.


பாய்ச்சங் பூட்டியா(முன்னாள் கால்பந்து வீரர்):

அரசியலில் சேர்ந்து மாற்றத்தை கொண்டு வர முடியுமானால், சச்சின் முடிவை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட முடிவு. சச்சினை போன்றவர்கள் எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவது விளையாட்டுக்கு நல்லது. இவரை போன்ற நல்ல மனிதர்கள் பார்லிமென்ட்டில் நுழைய வேண்டும்.

போட்டியை ரசித்த யுவராஜ்

புணே-டெக்கான் அணிகள் இடையிலான ஆட்டத்தைப் பார்ப்பதற்காக சுப்ரதா ராய் மைதானத்திற்கு யுவராஜ் சிங் வந்தார்.

நுரையீரல் புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துவிட்டு சில நாள்களுக்கு முன்பு இந்தியா திரும்பிய யுவராஜ், திடீரென மைதானத்திற்கு வந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

நல்ல உத்வேகத்துடன் காணப்பட்ட அவர், முரளி கார்த்திக், ராபின் உத்தப்பா உள்ளிட்ட புணே வீரர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேட்டிங்கும் செய்தார்.

தனது உடல்நலம் குறித்து அவர் கூறுகையில், "இப்போது நலமாக உள்ளேன். நடக்க ஆரம்பித்துள்ளேன். 2 அல்லது 3 மாதங்களில் கிரிக்கெட்டுக்கு திரும்பலாம். அது எனது உடல்நிலையைப் பொறுத்தது. விரைவில் கிரிக்கெட்டுக்கு வருவேன் என்று நம்புகிறேன்.

இங்கு வந்து அணியின் சகவீரர்களை பார்த்தது, சிறிது நேரம் பேட் செய்தது, ரசிகர் கூட்டத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சியே. இந்த நாள் சிறந்த நாள். நான் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் நன்றி' என்றார்.

அரசியலில் குதித்தார் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் அரசியலில் குதித்தார். அவரை ராஜ்ய சபா எம்.பி.,யாக்க மத்திய அரசு செய்த பரிந்துரையை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஏற்றார். சச்சினுடன் பாலிவுட் நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு அகா ஆகியோரும் ராஜ்யசபா எம்.பி.,யாகின்றனர்.


இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்றுடன் 39 வயதை கடந்துள்ள சச்சினுக்கு இந்த பிறந்த நாள் நிச்சயம் மறக்க முடியாததாகவே இருக்கும். சர்வதேச போட்டிகளில் நூறு சதங்களை கடந்துள்ள சச்சினுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பிய காங்., தலைவர் சோனியாவை இன்று காலை அவரது வீட்டில் தனது மனைவி அஞ்சலியுடன் சந்தித்தார் சச்சின்.


அது முதலே பற்றிக்கொண்டது பரபரப்பு. சச்சின் ராஜ்யசபா எம்.பி.,யாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதையடுத்தே இந்த சந்திப்பு நிகழ்வதாக மீடியாக்கள் கொளுத்திப்போட்டன.


தொடர்ந்து அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சச்சின் அரசியல் பிரவேத்தை வரவேற்கத்துவங்கின. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சச்சின் ராஜ்ய சபா எம்.பி.,யாவதற்கு வரவேற்பு தெரிவித்தன.


தொடர்ந்து சச்சின், பாலிவுட் நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு அகா ஆகியோரை ராஜ்யசபா எம்.பி.,யாக பரிந்துரை செய்து மத்திய அரசு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 80ன் கீழ் பரிந்துரை செய்யப்பட்ட இம்மூவரையும் ராஜ்யசபா எம்.பி.,யாக்க ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்றிரவு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சச்சின் உள்ளிட்ட மூவரும் விரைவில் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்பர் என தெரிகிறது.அன்னா ஹசாரே வரவேற்பு:


சச்சின் ராஜ்ய சபா எம்.பி.,யாவதை காந்தியவாதி அன்னா ஹசாரே வரவேற்றுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹசாரே, சச்சின் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் ஊழலுக்கு எதிராக போராடுவார் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

தெண்டுல்கரின் இலக்கு 200-வது டெஸ்ட்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பியுள்ள யுவராஜ்சிங் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தெண்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனது வாழ்க்கை நல்ல நிலையில் இருக்க அவரது பங்கு மிகவும் முக்கியமாக உள்ளது.

சர்வதேச போட்டியில் 100 சதம் அடிப்பது சாதாரணமானது இல்லை. இந்த சாதனையை படைத்த தெண்டுல்கருக்கு அடுத்த இலக்கும் இருக்கிறது.

100 டெஸ்டில் விளையாடுவதே சிறப்பானது. அவர் 200 டெஸ்ட் விளையாடுவதை அடுத்த இலக்காக கொண்டுள்ளார். இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.

"ஹேப்பி பர்த்டே' சச்சின்

சச்சின் இன்று தனது 40வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கடந்த 1973, ஏப்., 24ம் தேதி மும்பையில் பிறந்தார்.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் இவர், 39 வயதை பூர்த்தி செய்கிறார். சர்வதேச அளவில் 100வது சதம் அடித்த பின் வரும் பிறந்த நாள் என்பதால், சக அணி வீரர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

ஆனால், பெரிய அளவில் நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என்று ஐ.பி.எல்., தொடரில் இவர் இடம் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான செய்தியில், பிறந்தநாள் விழா பெரியளவில் இருக்காது. மிக நெருக்கமானவர்களுடன், மும்பை அணி உரிமையாளர் நீடா அம்பானியும் பங்கேற்கலாம்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகரில், சச்சின் தங்கியுள்ள ஓட்டலின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்<,"" சச்சின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தயாராக உள்ளோம். அவரது சம்மதத்துக்காக காத்திருக்கிறோம்,'' என்றார்.

மும்பையை கரை சேர்ப்பாரா சச்சின்

ஐ.பி,.எல்., தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர், இந்தியாவில் தற்போது நடக்கிறது. இதில் இன்று நடக்கும் 28வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


பேட்டிங் ஏமாற்றம்:

மும்பை அணி, இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வி அடைந்துள்ளது. அணியின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. டில்லிக்கு எதிரான கடந்த போட்டியில், 92 ரன்னுக்கு சுருண்டது மும்பை அணி. கடந்த ஐந்து தொடர்களில் மும்பை அணியின் மோசமான ஸ்கோர் வரிசையில், இது இரண்டாவதாக அமைந்தது.

துவக்க வீரர் லீவி, ரோகித் சர்மா, போலார்டு, அம்பாதி ராயுடு ஆகியோர் நிலையற்ற பேட்டிங்கை வெளிப்படுத்துகின்றனர். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஒட்டுமொத்தமாக ஏமாற்றம் தருகிறார். இதனால், பேட்டிங்கில் நல்ல துவக்கம் தர, சச்சினால் மட்டுமே முடியும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அணிக்கு எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ, அப்போதெல்லாம் அதை கைப்பற்றி தரும் மலிங்கா, இடுப்பு வலியால் அவதிப்படுகிறார். இவருக்குப் பதில் இடம் பெற்ற மக்காய், டில்லிக்கு எதிராக பெரியளவில் சாதிக்கவில்லை.

இதுவரை 10 விக்கெட் வீழ்த்திய முனாப் படேல் மட்டும் ஆறுதலாக பவுலிங் செய்கிறார். சுழற்சியில் ஹர்பஜன் சிங், இதுவரை 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியது அணிக்கு வருத்தமான செய்தி.


பஞ்சாப் பரிதாபம்:

பஞ்சாப் அணி இதுவரை 6 போட்டிகளில் பங்கேற்று 2ல் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அணியின் பேட்டிங் சுமார். பெங்களூரு அணிக்கு எதிராக எடுத்த 163 ரன்கள் தான் இந்த அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.

இந்நிலையில், கில்கிறிஸ்ட் இன்றும் இல்லாதது இழப்பு தான். கடந்த சீசனில் 463 ரன்கள் குவித்த வல்தாட்டி, இப்போது ஆறு போட்டியில் 34 ரன்கள் தான் எடுத்துள்ளார். டேவிட் ஹசி, ஷான் மார்ஷ் மட்டும் ஆறுதல் தருகின்றனர்.


மகமூது ஆறுதல்:

விசா சிக்கலில் இருந்து மீண்டு, அணிக்கு திரும்பிய அசார் மகமூது, அசத்தலான ஆட்டத்தை தருகிறார். இன்றும் இது தொடரும் என நம்பலாம். இவருடன் மாஸ்கரனாஸ், பிரவீண் குமார், மன்பிரீத் சிங், பியுஸ் சாவ்லா ஆகியோர் இருந்தாலும், இன்று துவக்கத்தில் விக்கெட் வீழ்த்துவதை பொறுத்து தான் பஞ்சாப் அணியின் வெற்றி அடங்கியுள்ளது.


பலன் தருமா:

மும்பை அணி ஐந்து நாள் ஓய்வுக்குப் பின் இன்று களம் காணுகிறது. பஞ்சாப் அணி கெய்ல் புயலில் இருந்து முழுமையாக மீண்டு விட்டார்களா என்று தெரியவில்லை. இந்நிலையில் சொந்தமண் பலத்தில் மும்பை எழுச்சி பெறலாம்.

ஐ.பி.எல். கிரிக்கெட்: 89 சிக்சர் அடித்து கெய்ல் முதலிடம்

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி வீரர் கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டம் தொடர்கிறது. புனே வாரியாஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது போல பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் அவர் அதிரடியாக விளையாடினார்.

56 பந்தில் 87 ரன் (8 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். கிறிஸ் கெய்ல் இந்த ஐ.பி.எல். போட்டியில் மட்டுமின்றி ஓட்டு மொத்த ஐ.பி.எல். கணக்குப்படி சிக்சர் அடித்ததில் முன்னிலையில் உள்ளார்.

இந்த ஐ.பி.எல், போட்டியில் 5 ஆட்டத்தில் விளையாடி 19 சிக்சர் அடித்து முன்னிலையில் உள்ளார்.

அவருக்கு அடுத்தப்படியாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பெலிசிஸ் 12 சிக்சரும் (6 ஆட்டம்), டெல்லி வீரர் பீட்டர்சன் 11 சிக்சரும் (11 ஆட்டம்) அடித்துள்ளனர்.

ஒட்டு மொத்த ஐ.பி.எல். கணக்குப்படி கெய்யில் 39 ஆட்டத்தில் 89 சிக்சர் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

கில்கிறிஸ்ட் 84 சிக்சர் அடித்து 2-வது இடத்திலும், ரெய்னா 82 சிக்சர் அடித்து 3-வது இடத்திலும் யூசுப் பதான் 75 சிக்சர் அடித்து 4-வது இடத்திலும், ரோகித் சர்மா 5-வது இடத்திலும் (70 சிக்சர்) உள்ளனர்.

சிக்சர் விளாசியதில் மூக்கு அவுட்

தான் சிக்சர் அடித்த பந்து பட்டு மூக்குடைந்த சிறுமியை, ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினார் கெய்ல்.

சின்னச்சாமி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி, புனேயை வீழ்த்தியது. இதில், ராகுல் சர்மா ஓவரில் 5 சிக்சர் விளாசினார் பெங்களூரு அணி வீரர் கெய்ல்.

அதில் ஒரு சிக்சர் மைதானத்தில் அமர்ந்திருந்த சிறுமி டியா பாட்யாவின், 11, மூக்கில் பட்டு ரத்தம் கொட்டியது.

"ஸ்கேன்' செய்ததில் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக "ஆப்பரேஷன்' செய்யப்பட்டது.

நேற்று இந்த சிறுமியை கெய்ல், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அந்த சிறுமி கெய்லிடம்,"" எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை.

நீங்கள் தொடர்ந்து பந்துகளை சிக்சராக அடியுங்கள்,'' என்றார்.

இதுகுறித்து கெய்ல் கூறுகையில்,"" சிறுமி பாட்யாவை சந்தித்தது நெகிழ்ச்சியான தருணம். விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.

கேப்டன் தோனிக்கு காயமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை, அணி நிர்வாகம் மறுத்துள்ளது.

ஐந்தாவது ஐ.பி.எ ல்., தொடரில் "நடப்பு சாம்பியன்' சென்னை அணி, இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில், 2ல் மட்டும் வெற்றி பெற்றது. புனே அணிக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியின் போது, கேப்டன் தோனிக்கு தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் போட்டி முடிந்தவுடன் மனைவி சாக்ஷியுடன் மும்பை சென்றுவிட்டாராம். அங்கு டாக்டரிடம் ஆலோசனை பெற்றுள்ளார்.

இதில், அடுத்து வரும் 3 அல்லது 4 போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என டாக்டர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஏற்கனவே, 2 வெற்றி மட்டும் பெற்று மோசமான நிலையிலுள்ள சென்னை அணிக்கு இந்த செய்தி பெரும் பின்னடைவாக உள்ளது.


ரெய்னா கேப்டனா:

இந்நிலையில் சொந்த மண்ணில் சென்னை அணி, வரும் 19ல் புனே, 21ல் ராஜஸ்தான் அணிகளை எதிர்த்து களமிறங்குகிறது. இதில் வெற்றிபெற்றால் தான், "பிளே ஆப்' சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

ஒருவேளை தோனி பங்கேற்கவில்லை என்றால், ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் எனத் தெரிகிறது. 2010 தொடரில் இப்படித்தான் தோனி சில போட்டிகளில் ஓய்வெடுத்த போது, ரெய்னா கேப்டனாக செயல்பட்டார். இதில் சென்னை அணி கோப்பை வென்றது.


நிர்வாகம் மறுப்பு:

தோனி காயம் குறித்து சென்னை அணி நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,"" கடந்த வாரத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்றதன் காரணமாக, பல வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை.

தோனி தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவே மும்பை சென்றுள்ளார். மற்றபடி, காயம் குறித்த செய்தி உண்மையில்லை,'' என்றார்.

"சூப்பர்' சிக்சருக்கு ரூ. 5 லட்சம்

ஐ.பி.எல்., "சூப்பர்' சிக்சஸ்' போட்டியில் மிக நீண்ட தூரத்துக்கு சிக்சர் அடிக்கும் வீரருக்கு, ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

ஐ.பி.எல்., போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது, அதிக சிக்சர் அடித்த வீரர் விருது, "சூப்பர் கேட்ச்' பிடித்த விருது என, வீரர்கள் ஏற்கனவே பரிசு மழையில் நனைந்து கொண்டுள்ளனர். இப்போது புதிதாக "சூப்பர் சிக்சஸ்' என்ற போட்டி நடத்தப்படுகிறது.

இதன்படி, தேர்வு செய்யப்பட்ட 5 நாட்களில் போட்டி நடக்கும். ஒவ்வொரு அணிகளும் தலா 3 வீரர்களை இதில் பங்கேற்கச் செய்யலாம். வழக்கமான ஆடுகளத்தில், "பவுலிங் மெஷின்' உதவியுடன் 12 பந்துகளில் வீசப்படும்.

இதை எந்த வீரர் அதிக தூரத்துக்கு சிக்சர் அடிக்கின்றாரோ, அவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். மொத்தம் 5 நாட்கள் நடக்கும் இப்போட்டியில், முதலிடம் பெறும் வீரருக்கு வீரருக்கு, மே 27ல் ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.


யூசுப் ஏமாற்றம்:

கோல்கட்டா, பஞ்சாப் இடையிலான ஆட்டத்தின் (ஏப். 15) முடிவில், முதல் "சூப்பர் சிக்சஸ்' போட்டி நடந்தது. இதில் பஞ்சாப் வீரர் டேவிட் மில்லர், 83 மீ., தூரத்துக்கு சிக்சர் அடித்து ரூ. 1 லட்சத்தை தட்டிச் சென்றார். கோல்கட்டாவின் யூசுப் பதான் 78 மீ., தூரம் தான் அடித்தார்.

மீதமுள்ள போட்டிகள், வரும் ஏப். 24 (புனே-டில்லி), மே 6 (மும்பை-சென்னை), மே 20ம் (டெக்கான்-பெங்களூரு) தேதி நடக்கும். மே 13 ல் ராஜஸ்தான் வீரர்கள் மட்டும் பங்கேற்கும் போட்டி நடக்கும்.

மும்பையின் வெற்றிநடை தொடருமா?

ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் - டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிநடையை தக்கவைத்துக் கொள்ள மும்பை அணி காத்திருக்கிறது.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடக்கவுள்ள ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடருக்கான 19வது லீக் போட்டியில், ஹர்பஜன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, சேவக்கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


பவுலிங் பலம்:

மும்பை அணியின் மிகப்பெரிய பலம் வேகப்பந்துவீச்சு. லசித் மலிங்கா, முனாப் படேல் வேகத்தில் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை எளிதில் பறிகொடுக்கின்றனர். இவர்களுக்கு "ஆல்-ரவுண்டர்' போலார்டு, பிராங்க்ளின் ஆகியோர் ஒத்துழைப்பு அளிப்பது கூடுதல் பலம்.

அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை. இன்று இவர் எழுச்சி பெற்றால் நல்லது. மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா நம்பிக்கை அளிக்கிறார். இவரது சுழல் ஜாலம் இன்றும் தொடந்தால், விக்கெட் வேட்டை நடத்தலாம்.


சேவக் எதிர்பார்ப்பு:

டில்லி அணியின் பேட்டிங்கில் சேவக் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. கடந்த மூன்று போட்டியில் பெரிய அளவில் ரன் சேர்க்காத இவர், இன்று அதிரடி துவக்கம் அளிக்கும் பட்சத்தில் வலுவான ஸ்கோரை பெறலாம். மகிளா ஜெயவர்தனா, கெவின் பீட்டர்சன் வருகையால் டில்லி அணியின் பேட்டிங் வரிசை பலமடைந்துள்ளது.

சென்னை அணிக்கு எதிராக அசத்திய இவர்கள், இன்றும் கைகொடுக்கலாம். காயத்தில் இருந்து மீண்ட நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர், அணியில் இணைந்திருப்பது டில்லி அணியின் பேட்டிங்கில் கூடுதல் வலு சேர்க்கிறது. "மிடில்-ஆர்டரில்' வான் டெர் மெர்வி, வேணுகோபால் ராவ், அபிஷேக் நாயர், இர்பான் பதான் ஆகியோர் கைகொடுக்க வேண்டும்.


மார்கல் நம்பிக்கை:

டில்லி அணியின் வேகப்பந்துவீச்சில் மார்னே மார்கல் நம்பிக்கை அளிக்கிறார். இவருடன் இணைந்து இர்பான் பதான், உமேஷ் யாதவ் துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில், மும்பை அணிக்கு சிக்கல்தான். சுழலில், சொல்லிக்கொள்ளும்படி முன்னணி வீரர்கள் இல்லாதது பின்னடைவான விஷயம். வான் டெர் மெர்வி, நதீம் ஆகியோர் சுழலில் கைகொடுக்கும் பட்சத்தில், சுலப வெற்றி பெறலாம்.

சொந்த மண்ணில் சாதிக்க மும்பை அணியும், மூன்றாவது வெற்றியை பெற டில்லி அணியும் காத்திருப்பதால், சுவாரஸ்யமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.


இதுவரை...

ஐ.பி.எல்., அரங்கில் மும்பை இந்தியன்ஸ் - டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் ஒன்பதாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய எட்டு போட்டிகளில் மும்பை 5, டில்லி 3 போட்டியில் வெற்றி பெற்றன.

தெண்டுல்கர்,டோனியை விட கோலிக்கு அதிகம்

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை இன்சூரன்ஸ் செய்து உள்ளன. இதில் இந்திய அணியின் சொத்தான வீராட் கோலியே அதிகமான தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திர வீரரான கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆடுகிறார்.

இந்த ஐ.பி.எல். போட்டியில் அவர் ரூ.32 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தப் படியாக தான் டோனி, தெண்டுல்கர் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான மகேந்திர சிங் டோனி ரூ.30 கோடிக்கும், மும்பை இந்தியன்ஸ் வீரர் தெண்டுல்கர் ரூ.14 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வீரர்களில் பீட்டர்சன் அதிகமாக தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் வீரரான அவர் ரூ.30 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளார்.

தோல்விக்கு காரணம் தோனி

புனே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் இருந்தே தோற்க வேண்டும் என்ற நினைப்பில் தோனி விளையாடியது தெளிவாகத் தெரிந்தது.

* தொடர்ந்து சொதப்பும் முரளி விஜயை வெளியேற்றாமல், பெங்களூருக்கு எதிராக அசத்திய போலிஞ்சருக்கு ஓய்வு கொடுத்தார்.

* முதலில் சென்னை அணி 13வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. பின், எளிதாக 170 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலையில், தோனி மந்தமாக விளையாட, ஸ்கோர் 160ஐ கூட எட்டவில்லை.

* டெக்கான் அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய ரவிந்திர ஜடேஜாவுக்கு, ஒரு ஓவர் கூட பவுலிங் தரவில்லை.

* கடைசி ஓவரை வீச, ஆல்பி மார்கல் போன்ற அனுபவ வீரர்கள் இருக்க, சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காத, யோ மகேசிடம் பந்தை கொடுத்தது ஏன், என்பது போன்ற கேள்விகளுக்கு தோனி தான் பதில் தரவேண்டும்

இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதே லட்சியம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான 30 வயதான யுவராஜ்சிங் நுரையீரல் பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் 3 கட்ட கீமோதெரபி சிகிச்சை பெற்று கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பினார்.

வீடு திரும்பிய பின்னர் யுவராஜ்சிங் முதல்முறையாக தனது சொந்த ஊரான குர்கானில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மீண்டும் எனக்கு வாழ்க்கை அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டு இருக்கிறேன். நோயின் பாதிப்பில் இருந்து விடுபட்டு நாடு திரும்பியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நான் விரைவில் களம் திரும்ப வேண்டும் என்று எனது ரசிகர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். பழைய நிலைக்கு திரும்ப எனது உடல் சில காலங்கள் எடுத்து கொள்ளும் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

உடல் நலனில் நான் கவனம் செலுத்த வேண்டியது இருக்கிறது. 2 மாதங்களுக்கு பிறகு முடிந்த வரை சீக்கிரம் களம் திரும்ப முயற்சிப்பேன். கடினமான நேரத்தை நான் கடந்து வந்து இருக்கிறேன். எனது தாயார் என்னுடன் இருப்பது எனக்கு மிகப்பெரிய பலமாகும். அவர் இல்லாமல் இந்த கஷ்ட காலத்தை கடப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. சிகிச்சை பெற்ற இந்த 2 மாத காலக்கட்டத்தில் அவர் தனது சோகத்தை மறைத்து கொண்டதுடன், கண்ணீர் கூட சிந்தவில்லை.

அதிகாலையில் நான் இருமினாலோ அல்லது தும்மினாலோ உடனே எழுந்து வந்து என்னை பார்ப்பார். சில சமயம் நான் சிறுகுழந்தை போல் அழுவேன். அப்போது அவர் என்னை தேற்றுவார். அவர் என்னை விட மனவலிமை மிக்கவராக இருந்தார். இதே போல் சைக்கிள் பந்தய வீரர் அமெரிக்காவின் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்கும் உத்வேகமும், நம்பிக்கையும் அளித்தார். 5 அல்லது 6 வருடங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் புத்தகத்தை நான் படித்தேன்.

சில காரணத்தால் அதனை படிப்பதை பாதியில் விட்டுவிட்டேன். தற்போது முழுமையாக படித்து முடித்தேன். ஆம்ஸ்ட்ராங்கும் என்னை போன்று தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர். ஆனால் அவருக்கு அது கடைசி கட்டத்தில் தான் தெரியவந்தது. எனக்கு தொடக்க கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அவருடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை. வாழ்க்கையில் அவர் உண்மையிலேயே கதாநாயகன்.

அவரது சாதனைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். எனக்கு புற்றுநோய் இருந்ததை என்னால் நம்பமுடியவில்லை. அதனை பரிசோதனை மூலம் உறுதி செய்ய 6 மாத காலம் பிடித்தது. மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்பட்டதுடன், கடுமையான இருமலும் இருந்தது. சளியில் ரத்தம் வந்தது. இதனை நான் யாரிடமும் சொல்லவும் இல்லை. காண்பித்ததும் கிடையாது. எனக்கு தானே நான் நன்றாக இருப்பதாக சொல்லி தேற்றி கொண்டேன்.

ஆனால் எனக்குள் சிக்கலான பிரச்சினை இருப்பது தெரிந்தது. அதில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தேன். மனரீதியாக நான் எப்பொழுதும் உறுதி படைத்தவன். தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். புற்றுநோய் எனது உடலை விட்டு நீங்கி விட்டது. இருப்பினும் அந்த தாக்குதலின் வடு இன்னும் உள்ளது. வருங்காலங்களில், புற்றுநோயில் இருந்து விடுபட்டு சாதிக்க நினைப்பவர்களுக்கு நான் உதவி செய்வேன்.

எப்போதெல்லாமல் அணியில் இடம் பெறாமல் வெளியில் இருந்து கிரிக்கெட் பார்ப்பனோ அப்போது அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும். எனவே கிரிக்கெட்டை டி.வி.யில் பார்ப்பதை தவிர்த்து விடுவேன். ஆனால் வீட்டில் இருந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்தது ரொம்ப கடினமாக இருந்தது.

வீட்டில் இருந்த போது, நான் நடக்க முயற்சித்ததுடன், வீடியோ கேம்ஸ் விளையாடினேன். சினிமா பார்த்தும் பொழுதை கழித்தேன். எனது தாயார் எனக்கு சமைத்து கொடுத்தார். என்னால் அதிகம் எதுவும் செய்ய முடியவில்லை. வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு கடினமாக இருந்தது. வருங்காலத்தில் நான் என்ன செய்வேன் என்பது எனக்கு தெரியாது.

இந்திய அணியின் சின்னத்தை மறுபடியும் அணிந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதையே எனது வாழ்நாள் லட்சியமாக கருதுகிறேன். நான் சிகிச்சை பெற்ற போது, ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிக் கொண்டிருந்த சச்சின் தெண்டுல்கருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். லண்டனுக்கு வந்து அவர் என்னை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது.

எனக்கு எப்பொழுதும் உத்வேகம் அளிக்கக்கூடியவர் தெண்டுல்கர். அவருடன் மறக்க முடியாத நட்பை வளர்த்துக் கொண்டுள்ளேன். சர்வதேச போட்டியில் தெண்டுல்கர் 100-வது சதத்தை அடிக்கும் போது நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

துரதிர்ஷ்டவசமாக என்னால் அணியில் இருக்க முடியாமல் போய்விட்டது. உலக கோப்பை கிரிக்கெட்டில் கால்இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 57 ரன்கள் எடுத்த இன்னிங்ஸ் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத தருணமாகும்.

நான் எப்போதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி ரன்னை அடிக்க விரும்புவேன். அதனால் தான் இந்த இன்னிங்சை சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். கிரிக்கெட் பிரபலம் மூலம் எனக்கு புகழ், பணம் உள்பட எல்லாம் கிடைத்து விட்டது. பணம் வாழ்க்கைக்கு முக்கியம் தான். இருப்பினும் பணத்தை விட மகிழ்ச்சியும், உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானதாகும்.

இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.

IPL : இணையதள ரசிகர்கள் அதிகரிப்பு

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் "டுவென்டி-20' போட்டிகளை, இணைதளத்தில் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை 56 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஐ.பி.எல்., போட்டிகளை "டிவி'யில் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக வருத்தப்படுகின்றனர் நிர்வாகிகள்.

ஆனால், இணையதளத்தில் பார்ப்பவர்கள் எண்ணிக்கை, சரிபாதிக்கும் மேலாக அதாவது 56 சதவீதம் உயர்ந்துள்ளது பெரும் வியப்பாக உள்ளது.

துவக்கவிழா உட்பட இதுவரை நடந்த போட்டிகளை 1.37 கோடி பேர் வரை இணைதளத்தில் பார்த்துள்ளனராம். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 88 லட்சமாகத்தான் இருந்துள்ளது.


டில்லி முதலிடம்:

இதில் பெங்களூரு, டில்லி நகரங்களில் மட்டும் 14 சதவீதத்தில் கண்டு களித்தனர். இரண்டாவது இடத்தில் மும்பை (13 சதவீதம்) வருகிறது. கடந்த ஏப். 10ல் நடந்த பெங்களூரு-கோல்கட்டா இடையிலான போட்டியை மட்டும் அதிகப்படியாக 21.5 லட்சம் பேர் இணையதளத்தில் பார்த்தனர்.


மொபைலும் ஆதிக்கம்:

இதுதவிர, 60 ஆயிரம் பேர் தங்கள் மொபைல் போனில் ஐ.பி.எல்., போட்டியை கண்டுகளிக்கின்றனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாம்.

இதுகுறித்து கூகுள் இந்தியாவின் மீடியா சேல்ஸ் தலைவர் பிரவீண் சர்மா கூறுகையில்,"" ஐ.பி.எல்., போட்டிகளை இணைதளத்தில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடந்து அதிகரித்து வருகிறது. இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது,'' என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற கேப்டனாக தோனி இல்லை

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்நாள் எம்.பி.யுமான அசாருதின் எம்.பி.க்களின் கிரிக்கெட் போட்டிக்காக தர்மசாலா வந்தார். அப்போது அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தற்போதைய இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி ஒரு நாள் மற்றும் 20-20 போட்டிகளுக்கு தகுதியான நபர் ஆவார். ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் தகுதி வாய்ந்த கேப்டனாக இல்லை. இதில் அவர் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும்.

என்னை பொறுத்தவரை இந்த மூன்று தரப்பு போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணியின் சுவர் என வர்ணிக்கப்பட்ட ராகுல் திராவிட் ஓய்வு பெற்றதை அடுத்து, அவருடைய இடத்துக்கு தகுதியான நபர் ரோகித் சர்மா.

அவருக்கு மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

விராத் கோலி வளர்ந்து வரும் வீரராக இருக்கிறார்.

மேலும், சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய அவர் ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.