இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் கங்குலி


இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளெட்சரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. 

அவரது தலைமையில் குறிப்பிடத்தக்க வெற்றியை இந்திய அணி பெறவில்லை. தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. 

அவரது பயிற்சி திருப்தி பெரும்பாலான வீரர்களுக்கு அளிக்காததால், அவரது பதவிக்காலத்தை பி.சி.சி.ஐ. நீட்டிக்காது என்று தெரிகிறது. 

இதற்கிடையே சென்னையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. 

இதையடுத்து கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய அணிக்கு இந்திய பயிற்சியாளர் தேவை. 

போதிய திறமைவாய்ந்த பயிற்சியாளர்கள் இந்தியாவில் உள்ளனர்’ என்றார். 

எனவே, இந்தியாவில் உள்ள முன்னாள் வீரர்களில் ஒருவரை அடுத்த பயிற்சியாளராக தேர்வு செய்ய, குறிப்பாக கங்குலியை நியமிக்க பி.சி.சி.ஐ. ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கங்குலி, 113 டெஸ்ட் போட்டிகளில் 16 சதம் 35 அரை சதங்களுடன் 7212 ரன்கள் எடுத்துள்ளார். 

311 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 72 அரை சதங்களுடன் 11363 ரன்கள் சேர்த்துள்ளார்.

தோனி சதம் வீண் - இந்தியா தோல்வி


இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதம் அடித்து அசத்திய கேப்டன் தோனியின் போராட்டம் வீணானது.

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெய்துவரும் மழை காரணமாக, மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதனால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. "டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, "பீல்டிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சேவக் (4), காம்பிர் (8) ஏமாற்றினர். அடுத்து வந்த விராத் கோஹ்லி (0), யுவராஜ் சிங் (2), ரோகித் சர்மா (4) நிலைக்கவில்லை. இதனால் இந்திய அணி 9.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 29 ரன்கள் மட்டும் எடுத்து திணறியது.

இந்நிலையில் இணைந்த கேப்டன் தோனி, ரெய்னா ஜோடி பொறுப்பாக ஆடியது. அணியை விக்கெட் சரிவிலிருந்து மீட்ட இவர்கள் நிதானமாக ரன் சேர்த்தனர். ரெய்னா (43) ஆறுதல் தந்தார். 

அபாரமாக ஆடிய கேப்டன் தோனி, சதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. தோனி (113), அஷ்வின் (31) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஜுனைய்டு கான் 4, முகமது இர்பான், முகமது ஹபீஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு ஹபீஸ் (0), அசார் அலி (9) ஏமாற்றினர். அடுத்து வந்த யூனிஸ் கான் (58) நம்பிக்கை தந்தார். கேப்டன் மிஸ்பா (16) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஜாம்ஷெத், சதம் அடித்தார்.

பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 2, இஷாந்த், டிண்டா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை இந்திய கேப்டன் தோனி பெற்றார்.

இவ்விரு அணிகள் மோதும் 2வது போட்டி ஜன. 3ம் தேதி கோல்கட்டாவில் நடக்கவுள்ளது.

T20 ரேங்கிங் - கோஹ்லி 5வது இடம்


சர்வதேச "டுவென்டி-20' பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் விராத் கோஹ்லி ஐந்தாவது இடம் பெற்றார்.

இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மற்றும் தென் ஆப்ரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதிய "டுவென்டி-20' தொடர் முடிந்தது. 

இதையடுத்து வெளியிடப்பட்ட "டுவென்டி-20' பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராத் கோஹ்லி, ஐந்து இடங்கள் முன்னேறி, முதன் முறையாக ஐந்தாவது (731 புள்ளி) இடம் பெற்றார். 

ரெய்னா (719) 8வது இடத்திலுள்ளார். 6 இடங்கள் முன்னேறிய யுவராஜ் சிங், 13வது இடத்தை பிடித்தார். 3 இடங்கள் முன்னேறிய தோனி, 25வது இடத்திலுள்ளார்.

தவிர, பவுலர்கள் வரிசையில், யுவராஜ் சிங்கிற்கு 35வது இடம் கிடைத்தது. சிறந்த "டுவென்டி-20' "ஆல்-ரவுண்டர்' வரிசையிலும் யுவராஜ் சிங், மூன்றாவது (337) இடம் பிடித்தார். 

மூன்றாவது இடம்:

அணிகளுக்காக தரவரிசையில், இங்கிலாந்து, பாகிஸ்தான் தொடரை 1-1 என "டிரா' செய்த இந்திய அணி, ஒரு புள்ளியை இழந்தது. இருப்பினும், தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

தொடர்ந்து "நம்பர்-1':

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் 888 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருந்தார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க். 

இதில் சதம் அடித்ததன் காரணமாக, சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில், மேலும் 12 புள்ளிகள் பெற்று, தொடர்ந்து முதலிடத்தில் (900) நீடிக்கிறார் கிளார்க். 

டான் பிராட்மேன், பாண்டிங், ஹைடன், வால்டர்ஸ், ஹார்வே, மைக்கேல் ஹசி ஆகியோருக்குப் பின் தரவரிசையில் 900 புள்ளிகளை பெறும் ஏழாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமை பெற்றார் கிளார்க். 

வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் (879), ஆம்லா (875) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். 

முதல் முறையாக இந்தியாவிற்கு நம்பர்-1 வாய்ப்பு


ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணிக்கு "நம்பர்-1' இடம் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) அணிகளுக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து (121 புள்ளி) முதலிடத்திலும், தென் ஆப்பரிக்கா (121) இரண்டாவது இடத்திலும், இந்தியா (120) மூன்றாவது இடத்திலும் உள்ளன. 

ற்போது இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. 

இதன் முதல் போட்டி சென்னையில் நாளை துவங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் ஒருபுள்ளி பெற்று 121 புள்ளி பெற்று முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறும். 

இதுவரை இந்திய அணி அதிகபட்சமாக இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 3 போட்டிகளிலும் இந்தியா வெல்லும் பட்சத்தில் 123 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

மாறாக ஏதாவது ஒரு போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் இந்திய அணி மூன்றாவது இடத்திலேயே நீடிக்க நேரிடும். 

பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் ஆறாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும். 

கேப்டன் தோனிக்கு ஓய்வு


கேப்டனாக தோனிக்கு ஓய்வு கொடுக்கலாம். இவருக்கு பதிலாக விராத் கோஹ்லியை புதிய கேப்டனாக நியமிக்கலாம் என,'' இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்தார்.

சமீப காலமாக தோனியின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. இவரது தலைமையில் இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து கவாஸ்கர் கூறியது:

டெஸ்ட், ஒருநாள் போட்டி, "டுவென்டி-20' என மூன்றுவிதமான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டனாக தோனிக்கு ஒரு சிறிய "பிரேக்' அளிக்கலாம். 

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் நடக்கும் நிலையில், இதனை அமல்படுத்த முடியாது. அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலிய தொடர் அல்லது 2013ன் பிற்பகுதியில் தோனிக்கு ஓய்வு தரலாம். 

இதன் மூலம் இவர், தனது செயல்பாடு குறித்து மதிப்பீடு செய்து, சிறப்பான முறையில் மீண்டு வரலாம்.

தோனிக்கு பதிலாக நீண்ட கால அடிப்படையில் விராத் கோஹ்லியை புதிய கேப்டனாக நியமிக்கலாம். இவர், "டைகர்' பட்டோடியை போன்று மிகச் சிறப்பாக செயல்படுவார். 

கேப்டன் பதவிக்கான ஆக்ரோஷம், ஆற்றல், கம்பீரம், உயர்ந்த தரம் ஆகிய அனைத்தும் இவரிடம் உள்ளது. தோனி "மேட்ச் வின்னர்' என்பதால், சாதாரண வீரராக குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரை அணியில் நீடிக்கலாம். 

ஆஸ்திரேலிய தொடருக்கு பின் பயிற்சியாளர் பிளட்சரின் ஒப்பந்தம் நீடிக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில், புதிய பயிற்சியாளராக இந்தியர் ஒருவர் அல்லது கேரி கிறிஸ்டன் போன்ற திறமையானவரை நியமிக்கலாம். 

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

ரூ. 300 டிக்கெட் "பிளாக்கில்' ரூ. 2,500 - ஆமதாபாத் போட்டிக்கு ஆர்வம்


இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் "டுவென்டி-20' போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற, ரசிகர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரூ. 300 மதிப்புள்ள டிக்கெட், கள்ளச்சந்தையில் ரூ. 2,500க்கு விற்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 

பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி, நாளை ஆமதாபாத்தில் நடக்கிறது.

இதில் பங்கேற்கும் இரு அணி வீரர்கள் நேற்று ஆமதாபாத் வந்து சேர்ந்தனர். இதனிடையே, இப்போட்டியை காண, ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். 

நேற்று டிக்கெட்டுகளை பெற மைதான நுழைவு வாயிலில் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். டிக்கெட் பெறுவதில் இவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, போலீசார் தடியடி நடத்த வேண்டியதாயிற்று. 

இதற்கிடையே, கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை அமோகமாக நடக்கிறது. இப்போட்டிக்கு ரூ. 300 மதிப்புள்ள டிக்கெட்டின் ஒன்றின் விலை, ரூ. 2,500 வரை விற்கப்படுகிறது. இதனால், சாமான்ய ரசிகர்கள் போட்டியை காண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அஷ்வின் இல்லாதது சாதகம்

பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ஹபீஸ் கூறியது:

பெங்களூருவில் நடந்த முதல் "டுவென்டி-20' போட்டியில் அஷ்வினை நீக்கி விட்டு, ரவிந்திர ஜடேஜாவை சேர்த்தது வியப்பாக இருந்தது. இதைத் தான் நாங்கள் விரும்பினோம். 

ஏனெனில், ரவிந்திர ஜடேஜா பந்துகளை ஏற்கனவே சந்தித்துள்ளோம். இதனால், புதிய பந்தில் சில ஓவர்கள் முடிந்து விட்டால் போதும். பின், இந்திய அணியில் உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் கிடையாது. 

அப்புறம் எளிதாக சமாளிக்கலாம் என திட்டமிட்டோம். தவிர, யுவராஜ் சிங் குறித்து எங்களுக்குத் தெரியும். இவர் "பார்மில்' உள்ளார். அதேநேரம், அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர் இல்லாத நிலையில், யாரையும் எளிதாக சமாளிக்கலாம். 

இவ்வாறு முகமது ஹபீஸ் கூறினார்.

ரசிகர்களுக்கு கண்ணீர் நன்றி - சச்சின் உருக்கம்


ரசிகர்களின் அன்பை நினைத்து, என் கண்களில் கண்ணீர் வந்தது'' என, சச்சின் உருக்கத்துடன் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வீரர் சச்சின், 39. ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார். 

தற்போது, குடும்பத்துடன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலமான முசவுரியில் ஓய்வு எடுத்து வரும் இவர் சமூக வலைதளமான "டுவிட்டரில்' கருத்து தெரிவித்துள்ளார். 

அதில் கூறியிருப்பதாவது: இத்தனை ஆண்டுகளாக, எனக்கு ஆதரவும், அன்பும் அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. 

குறிப்பாக ஓய்வு அறிவித்ததை தொடர்ந்து, கடந்து இரண்டு நாட்களாக வெளிப்படுத்திய உங்களின் உணர்வுகளின் மூலம், என் மனதில் மகிழ்ச்சி உண்டானது. அதே நேரம், என் கண்களில் கண்ணீரும் வந்தது. 

ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய, நினைவுகள் என்றும் என்னுடன் இருக்கும். 

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்ப்புக்கு இடையே மோதல் - இன்று இந்தியா-பாக்., T20


பல்வேறு எதிர்ப்புகளை கடந்து இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. பெங்களூருவில் நடக்கும் முதலாவது "டுவென்டி-20' போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி அசத்தல் வெற்றி பெற காத்திருக்கிறது.

கடந்த 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டித் தொடர் நடக்கவே இல்லை. உலக கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் தொடரில் மட்டும் இரு அணிகளும் மோதின. 

மீண்டும் போட்டி:

ஐந்து ஆண்டுகளுக்குப் பின், இப்போது இரண்டு "டுவென்டி-20' மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. முதல் "டுவென்டி-20' இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பின், "டுவென்டி-20' போட்டிகளில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. இப்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பதால், சற்று கூடுதல் பொறுப்புடன் விளையாடுவர் என எதிர்பார்க்கலாம்.

இடம் கிடைக்குமா:

விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ரெய்னா மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் வழக்கமான ரன்குவிப்பை வெளிப்படுத்த வேண்டும். அதேநேரம் அணியில் புதிதாக இடம் பெற்ற அம்பதி ராயுடுவுக்கு இடம் கிடைக்குமா எனத் தெரியவில்லை. 

பேட்டிங்கில் மட்டுமன்றி, "பார்ட் டைம்' பவுலராக அசத்துகிறார் யுவராஜ் சிங். கடந்த இரு போட்டியில் 6 விக்கெட் வீழ்த்திய இவரது அபார "பார்ம்' இன்றும் தொடர்ந்தால் அணிக்கு நல்லது.

பவுலிங் கவலை:

அணியின் பவுலிங் தான் பெரும் கவலையாக உள்ளது. டிண்டா தவிர, அவானா, அஷ்வின், சாவ்லா என, ஒருவருக்கும் விரைவாக விக்கெட் வீழ்த்த தெரியவில்லை போல. ரன்களை மட்டும் வாரி வழங்குகின்றனர். இந்த பலவீனத்தை பாகிஸ்தான் வீரர்கள் பயன்படுத்தினால் சிக்கல் தான். இன்றைய போட்டியில் அபிமன்யு மிதுன் அல்லது புவனேஷ்வர் குமாருக்கு தோனி வாய்ப்பு தருவார் என நம்பலாம்.

புதிய அணி:

"டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்குப் பின், பாகிஸ்தான் அணியில் அகமது ஷெசாத், உமர் அமின், முகமது இர்பான், ஆசாத் அலி, ஜுல்பிகர் பாபர் உட்பட 6 வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். தவிர, கேப்டன் முகமது ஹபீஸ், அப்ரிதி, ஜாம்ஷெத், கம்ரான் அக்மல் என, கடைசி வரை போராடக் கூடிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். 

வலுவான கூட்டணி:

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் உமர் குல், சோகைல் தன்விர் என, இரு அனுபவ வீரர்கள் பலம் சேர்க்கின்றனர். தவிர, அணியின் சுழற்பந்து வீச்சும் வலுவாக உள்ளது. சயீத் அஜ்மல், அப்ரிதி, கேப்டன் முகமது ஹபிஸ் கூட்டணி எவ்வித பேட்டிங் ஆர்டரையும் சரித்து விடும் பலம் கொண்டது. 

மொத்தத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும், பாகிஸ்தான் அணியின் பவுலர்களுக்கும் இடையில் நடக்கும் மோதலாகவே இப்போட்டி பார்க்கப்படுகிறது. 

சச்சின் இல்லாமல்...

சச்சின் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தது முதல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்று வந்துள்ளார். இப்போது முதன் முறையாக சச்சின் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது. 

திருப்பித் தர முடிவு

இந்தியாவுக்கு எதிரான தொடரை பார்வையிட, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விற்க, டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மிகவிரைவில் தொடர் துவங்குவதால் ரசிகர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், முதல் மூன்று போட்டிகளுக்குரிய (2 "டுவென்டி-20', ஒரு ஒருநாள் போட்டி) ரூ. 9 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகளை, இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) திருப்பித் தர, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) முடிவு செய்துள்ளது. 

வெடிகுண்டு சோதனை

பெங்களூரு போட்டிக்கு 5000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 100 வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்களுடன் வெடிகுண்டு சோதனை செய்து வருகின்றனர். பெங்களூரு கமிஷனர் மிர்ஜி கூறுகையில்<,"" இரு நாட்டு அரசுகள் தொடருக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் எவ்வித இடையூறும் ஏற்பட விடமாட்டோம்<,'' என்றார்.

தொடரும் அனுமதி மறுப்பு

இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது, கெட்டி, ஆக்ஷன் இமேஜ் நிறுவனங்களை மைதானத்துக்குள் அனுமதிக்க பி.சி.சி.ஐ., மறுத்தது. இதனால், பிற நிறுவனங்கள் தொடரை புறக்கணித்தன. இப்போது, பாகிஸ்தான் தொடரிலும் இது தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

இதுவரை...

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நான்காவது முறையாக சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் மோத உள்ளன. முன்னதாக விளையாடிய மூன்று போட்டியில், 2ல் இந்தியா வெற்றி பெற்றது. ஒரு போட்டி "டை' ஆனது. இதில், "பவுல் அவுட்' முறையில் இந்தியா வென்றது.

* கடந்த 2007ல் டர்பனில் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) லீக் போட்டியில் முதன்முதலில் மோதின. இப்போட்டி "டை' ஆனது. பின், "பவுல் அவுட்' முறையில் இந்தியா வெற்றி பெற்றது.

* ஜோகனஸ்பர்க் நகரில் 2007ல் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) பைனலில், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, கோப்பை வென்றது.

* கடந்த செப்டம்பர் மாதம், கொழும்புவில் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு பின்

கடந்த 2008ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் எவ்வித தொடரும் நடத்தப்படவில்லை. ஐ.சி.சி., சார்பில் நடத்தப்படும் உலக கோப்பை உள்ளிட்ட பல்வேறு அணிகள் பங்கேற்கும் தொடரில் மட்டும் மோதின. 

ஐந்து ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இவ்விரு அணிகள், இரண்டு அணிகள் மட்டும் பங்கேற்கும் சர்வதேச தொடரில் பங்கேற்கின்றன. கடைசியாக பாகிஸ்தான் அணி 2007ல், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தது. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை (50 ஓவர்) அரையிறுதியில் விளையாட பாகிஸ்தான் அணி, இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.

157

ஜோகனஸ்பர்க் நகரில் 2007ல் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) பைனலில், முதலில் பேட் செய்த இந்திய அணி 157 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் "டுவென்டி-20' அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

* இப்போட்டியில் 152 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது.

128

கொழும்புவில், கடந்த செப்டம்பர் மாதம் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) லீக் போட்டியில் 128 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.

* கடந்த 2007ல் டர்பனில் நடந்த உலக கோப்பை (டுவென்டி-20) லீக் போட்டியில் 9 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்த இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது.

கோஹ்லி "78'

"டுவென்டி-20' போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் விராத் கோஹ்லி (78 ரன்கள்) முதலிடம் வகிக்கிறார். இவரை அடுத்து காம்பிர் (78), ராபின் உத்தப்பா (58) ஆகியோர் உள்ளனர்.

* இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர்கள் வரிசையில் மிஸ்பா (96 ரன்கள்) முன்னிலையில் உள்ளார். இவரை அடுத்து சோயப் மாலிக் (56), இம்ரான் நசிர் (48) ஆகியோர் உள்ளனர்.

இர்பான் "6'

"டுவென்டி-20' அரங்கில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் வரிசையில் இர்பான் பதான் (6 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து ஆர்.பி. சிங் (4), பாலாஜி (3) ஆகியோர் உள்ளனர்.

* இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் பவுலர்கள் வரிசையில் முகமது ஆசிப் (5 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். இவரை அடுத்து உமர் குல் (3), அப்ரிதி (3) உள்ளனர்.

தோனி மீண்டும் கேப்டன்


பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார். 

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி 2 "டுவென்டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி நேற்று பி.சி.சி.ஐ., நேற்று வெளியிட்டது. 

இந்திய அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் தொடர்நாயகன் விருது வென்று அசத்திய யுவராஜ் சிங் ஒருநாள் போட்டிக்கான அணியில் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் தேர்வு செய்யபட்டார். 

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த காரணத்தினால் அவருக்கு பதிலாக ரகானே வாய்ப்பு பெற்றார். 

மோசமான "பார்ம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், இத்தொடரிலும் இடம் பெறவில்லை. புவனேஷ்குமார், சமி அகமது ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். துவக்க வீரர் சேவக் ஒருநாள் போட்டிகளில் மட்டும் இடம் பிடித்துள்ளார். 

அணி விவரம்: 

ஒருநாள்: தோனி(கேப்டன்), சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், இஷாந்த் சர்மா, ரகானே, அசோக் டிண்டா, புவனேஷ்வர் குமார், சமி அகமது, அமித் மிஸ்ரா. 

"டுவென்டி-20: தோனி(கேப்டன்), காம்பிர், ரகானே, யுவராஜ் சிங், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், அசோக் டிண்டா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், பர்விந்தர் அவானா, பியுஸ் சாவ்லா, ராயுடு.

பெங்களூருவில் இந்திய வீரர்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது "டுவென்டி-20 போட்டியில் பங்கேற்பதற்காக, நேற்று இந்திய வீரர்கள் பெங்களூரு வந்தனர். விமான நிலையம் வந்த இவர்கள், பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாக்., வீரர்கள் பயிற்சி

பாகிஸ்தான் அணியினர் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பலத்த பாதுகாப்புடன் பயிற்சி மேற்கொண்டனர். காலை 10.50 மணிக்கு உடற்பயிற்சியுடன் துவக்கினர். பின் இவர்கள், பயிற்சியாளர் தேவ் வாட்மோர் முன்னிலையில் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.

கேப்டன் முகமது ஹபீஸ், சயீத் அஜ்மல், அப்ரிதி, உமர் குல், கம்ரான் அக்மல், உமர் அக்மல், மாலிக் உள்ளிட்டோர் "கேட்ச் மற்றும் "பீல்டிங் பயிற்சி மேற்கொண்டனர்.

ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் சச்சின்


இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய வீரர் சச்சின் ஓய்வு பெற்றார். 

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கடந்த 1973ல் மும்பையில் பிறந்தார். 1989ம் ஆண்டு, 16 வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 

கடந்த 23 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்த சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 34,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். 

ஒருநாள் கிரிக்கெட் அரங்கில்  இரட்டைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை உட்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவர், இதுவரை 463 ஒருநாள் போட்டிகளில் 49 சதம் உட்பட 18,426 ரன்கள் எடுத்துள்ளார். 194 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 51 சதம், 66 அரைசதம் உட்பட 15, 645 ரன்கள் குவித்துள்ளார். 

வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரில் சதத்தில் சதம் அடித்தார்.  சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான "ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா விருதை பெற்றார். இவர் இந்தியாவின் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா மற்றும் பத்ம விபூசன் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். 

கடந்த 2006க்கு பின் "டுவென்டி-20 போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அதன் பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்ற இவர், சமீப காலமாக "பார்ம் இல்லாமல் தவித்து வந்தார். 

தற்போது இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, 2 "டுவென்டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றவுள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் தற்போது இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இது குறித்து சச்சின் கூறியது:

உலக கோப்பை வெல்லும் அணியில் இடம் பெற வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியதால் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். 

2015ல் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தேர்வு விரைவில் துவங்கவுள்ளது. இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தான் இந்த முடிவை எடுத்தேன். 

இதுவரை எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் கிரிக்கெட் தேர்வுக்குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணியின் சிறப்பான எதிர்காலத்திற்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சச்சின் கூறினார்.

ஆறாவது ஐ.பி.எல் தொடர் எப்போது?


ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர், அடுத்த ஆண்டு ஏப்., 3ம் தேதி கோல்கட்டாவில் ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் "நடப்பு சாம்பியன் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டு தோறும் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. 

அடுத்த ஆண்டுக்கான 6வது ஐ.பி.எல்., தொடர், ஏப். 3ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. ஏப். 3ம் தேதி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் "நடப்பு சாம்பியன் கோல்கட்டா நைட்ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் போல, "ரவுண்டு ராபின் மற்றும் "பிளே ஆப் தகுதிச் சுற்றுகள் நடத்தப்படுகிறது. "ரவுண்டு ராபின் சுற்றில் ஒரு அணி, மற்ற 8 அணிகளுடன் தலா 2 முறை லீக் போட்டியில் மோதும். இச்சுற்றின் கடைசி போட்டி அடுத்த ஆண்டு மே 19ம் தேதி நடக்கவுள்ளது. 

முடிவில், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் "பிளே-ஆப் தகுதிச் சுற்றுக்கு (3 போட்டிகள்) தகுதி பெறும். மொத்தம் 72 லீக் போட்டிகள், 3 "பிளே-ஆப் தகுதிச் சுற்றுப் போட்டிகள், ஒரு பைனல் உட்பட மொத்தம் 76 போட்டிகள் நடக்கவுள்ளன.

முதலிரண்டு "பிளே-ஆப் சுற்றுப் போட்டிகள் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த ஆண்டு மே 21, 22ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. மூன்றாவது "பிளே-ஆப் மற்றும் பைனல், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், அடுத்த ஆண்டு மே 24, 26ம் தேதிகளில் நடக்கவுள்ளது.

இதுகுறித்து ஐ.பி.எல்., தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ""இதுவரை நடந்த ஐந்து ஐ.பி.எல்., தொடர்கள் போல, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 6வது ஐ.பி.எல்., தொடர் வெற்றிகரமாக நடக்கும் என நம்புகிறோம். 

உலகின் தலைசிறந்த முன்னணி வீரர்கள் பங்கேற்பதால், இத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, என்றார்.

யுவராஜ் ஆல்-ரவுண்டராக அசத்தல்


முதலாவது "டுவென்டி-20 போட்டியில் யுவராஜ் சிங் "ஆல்-ரவுண்டராக அசத்த, இந்திய அணி, இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் உள்ள சுப்ரதா ராய் சகாரா மைதானத்தில் நேற்று நடந்தது. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங் தேர்வு செய்தார்.

ஹேல்ஸ் அரைசதம்:

 இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் லம்ப் (1) ஏமாற்றினார். பின் இணைந்த அலெக்ஸ் ஹேல்ஸ், லூக் ரைட் ஜோடி ரன் வேட்டை நடத்தியது. டிண்டா வீசிய முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த ஹேல்ஸ், பர்விந்தர் அவானா, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின் ஆகியோரது பந்தையும் விட்டுவைக்கவில்லை. 

அபாரமாக ஆடிய ஹேல்ஸ், 26 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த போது, யுவராஜ் "சுழலில் ரைட் (34) அவுட்டானார்.

சுழல் ஜாலம்: 

தொடர்ந்து மிரட்டிய யுவராஜ் வலையில் ஹேல்ஸ் (56), இயான் மார்கன் (5) சிக்க, ரன் வேகம் குறைந்தது. "மிடில்-ஆர்டரில் சமித் படேல், ஜாஸ் பட்லர் ஜோடி நிதானமாக ஆடியது. 

படேல் 24 ரன்களுக்கு அவுட்டானார். டிம் பிரஸ்னன் "டக்-அவுட் ஆனார். அவானா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் பட்லர் அடுத்தடுத்து இரண்டு "சிக்சர் அடிக்க, ஸ்கோர் 150 ரன்களை தாண்டியது.

இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. பட்லர் (33), டிரட்வெல் (1) அவுட்டாகாமல் இருந்தனர். 
இந்தியா சார்பில் யுவராஜ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

சூப்பர் துவக்கம்:

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு காம்பிர், ரகானே ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சை பதம்பார்த்த இவர்கள், அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில் காம்பிர் (16) அவுட்டானார். 

பிரஸ்னன், டெர்ன்பாக் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ரகானே (19) தேவையில்லாத "ஷாட் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

"சிக்சர் யுவராஜ்:

பின் இணைந்த விராத் கோஹ்லி, யுவராஜ் சிங் ஜோடி அபாரமாக ஆடியது. பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய யுவராஜ், டேனி பிரிக்ஸ் வீசிய 8வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்த போது, ரைட் பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்ற யுவராஜ் (38) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கோஹ்லி (21), மீக்கர் பந்தில் போல்டானார்.

தோனி அபாரம்:

"மிடில்-ஆர்டரில் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா அசத்தினர். இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள், அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். ரெய்னா (26) "ரன்-அவுட் ஆனார். மீக்கர் பந்தில் தோனி இரண்டு பவுண்டரி அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணி 17.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (24) அவுட்டாகாமல் இருந்தார்.

 ஆட்டநாயகன் விருதை யுவராஜ் சிங் வென்றார். இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது "டுவென்டி-20 போட்டி மும்பையில் நாளை நடக்கிறது.

முதல் வெற்றி

புனேயில் உள்ள சுப்ரதா ராய் சகாரா மைதானத்தில் நேற்று முதன் முதலாக சர்வதேச "டுவென்டி-20 போட்டி நடந்தது. இங்கு முதல் வெற்றியை பதிவு செய்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

வீணடித்த ரகானே

இங்கிலாந்து வீரர் பிரஸ்னன் வீசிய 5வது ஓவரின் 4வது பந்தை இந்தியாவின் ரகானே தூக்கி அடிக்க, அதனை மீக்கர் கோட்டைவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய ரகானே (19 ரன்), இந்த ஓவரின் கடைசி பந்தை மீண்டும் தூக்கி அடிக்க, அதனை சமித் படேல் அருமையாக பிடித்தார்.

அவானா அறிமுகம்

இளம் இந்திய மிதவேகப்பந்துவீச்சாளர் பர்விந்தர் அவானா, 26, இங்கிலாந்தின் ஜேம்ஸ் டிரட்வெல், ஸ்டூவர்ட் மீக்கர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். 2 ஓவர் வீசிய அவானா, விக்கெட் வீழ்த்த தவறினார்.

யுவராஜ் பெருந்தன்மை

மனிதநேயமிக்க யுவராஜ் கூறுகையில்,""டில்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட செய்தியை படித்த போது மனதிற்கு வேதனையாக இருந்தது. ஆட்ட நாயகன் விருதை அவருக்கும், அவரது பெற்றோர்க்கும் அர்ப்பணிக்கிறேன். 

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு ஒட்டுமொத்த அணியும் கவலை அடைந்தது. அந்த பெண்ணின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என தெரியாது. ஒட்டுமொத்த இந்தியாவும் அந்த பெண் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கும் என உறுதியாக நம்புகிறேன்,என்றார். 

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் போட்டிக்கான நேரம் மாற்றம்


இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் நான்கு ஒருநாள் போட்டிகள் துவங்கும் நேரத்தை பி.சி.சி.ஐ., மாற்றியது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி, அடுத்த ஆண்டு ஜன. 11ம் தேதி ராஜ்கோட்டில் நடக்கவுள்ளது. 

பின், கொச்சி (ஜன. 15), ராஞ்சி (ஜன. 19), மொகாலி (ஜன. 23), தர்மசாலா (ஜன. 27) ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளது. முதல் நான்கு போட்டிகள் பகலிரவு போட்டியாகவும், கடைசி போட்டி பகல் போட்டியாகவும் நடத்தப்படுகிறது.

வழக்கமாக, இந்தியாவில் பகலிரவு போட்டிகள் மதியம் 2.30 மணிக்கு துவங்கப்படும். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், பகலிரவு போட்டிகள் மதியம் 12 மணிக்கு துவங்கும் என பி.சி.சி.ஐ., நேற்று அறிவித்தது. 

இப்போட்டிகள் இரவு 7.45 மணிக்கு முடிவடையும். தர்மசாலாவில் நடக்கவுள்ள கடைசி போட்டி திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு துவங்கும்.

பொதுவாக பனிப்பொழிவு காலங்களில் நடக்கும் பகலிரவு போட்டிகளில் "டாஸ்' வெல்லும் அணி, "பீல்டிங்' தேர்வு செய்யும். ஏனெனில் இரண்டாவதாக பவுலிங் செய்யும் அணியின் பவுலர்களுக்கு, பந்தை பிடித்து வீசுவதற்கு சிரமமாக இருக்கும். 

இதனை தவிர்ப்பதற்காக போட்டி துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் எவ்வித பிரச்னையும் இருக்காது.

இந்திய-பாக்., தொடர் நடக்குமா?


பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்கும். இதை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை,' என, பி.சி.சி.ஐ., தெரிவித்தது.

இரண்டு "டுவென்டி-20', மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் அணி 22ம் தேதி இந்தியா வருகிறது. பெங்களூருவில், முதல் "டுவென்டி-20' போட்டி (டிச., 25) நடக்கிறது. 

இதனிடையே, இந்தியா வந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறுகையில்,"" நமது உள்துறை அமைச்சர் பலவீனமாக உள்ளார். 

கடின வார்த்தைகளை மாலிக் பேசும் போது, நாமும் கடினமாக பதிலடி கொடுத்திருக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.

பி.சி.சி.ஐ., துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,""விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது. 

பாகிஸ்தான் தொடர் ஏற்கனவே திட்டமிடப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இந்நிலையில் தொடரை ரத்து செய்வது என்ற கேள்விக்கு இடமில்லை. போட்டிகள் வழக்கம் போல நடக்கும்,'' என்றார்.

தோனிக்கு பதில் கோஹ்லி - கேப்டனை மாற்ற நேரம் வந்தாச்சு


தோனிக்குப்பதில் கேப்டன் பதவியில் விராத் கோஹ்லியை அமர்த்த நேரம் வந்துவிட்டது,'' என, கவாஸ்கர் தெரிவித்தார்.

டெஸ்ட் அரங்கில் தோனி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 8 போட்டிகளில் தோற்றது. 

தற்போது இந்திய மண்ணிலும் இங்கிலாந்திடம் தொடரை இழந்துள்ளது. இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நாக்பூர் டெஸ்டில் சதம் அடித்து அசத்திய இளம் விராத் கோஹ்லி வசம் கேப்டன் பதவியை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது: 

நாக்பூர் டெஸ்டின், நான்காவது நாள் வரை, தோனிக்கு மாற்று வீரர் யாரும் இல்லை என்று தான் கூறினேன். ஆனால், கோஹ்லி சதம் அடித்து பின், இவரிடம் உள்ள திறமை வெளிப்பட்டுள்ளது. 

என்னைப் பொறுத்தவரையில், இவர் கேப்டன் பதவிக்கு தயாராகிவிட்டார். இங்கிலாந்து அணி சிறப்பாக "பேட்டிங்' செய்தது. நமது பவுலர்கள் திறமையில்லாமல் இருந்தனர். தவிர, பேட்ஸ்மேன்களும் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. 

சச்சின் ஓய்வு:

நம்மை விட, இங்கிலாந்து அணியினர் சிறப்பாக விளையாடுவார்கள் என நான் சிந்தித்து பார்க்கவில்லை. ஆமதாபாத் டெஸ்டில் தோற்றவுடன், அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அதிக உழைப்புடன் வெற்றி பெற்றுள்ளனர். எந்தவொரு வீரரும் எந்தளவிற்கு, விளையாட்டை உற்சாகத்துடன் விளையாடுகிறார்கள் என்பது முக்கியம். 

"பீல்டிங்' போன்றவற்றில் எப்போது உற்சாகம் குறைகிறதோ, அப்போது விலகிவிட வேண்டும். இது எப்போது, நடக்கும் என்பது சச்சினுக்குத்தான் தெரியும். இவருக்கு இத்தொடர் சிறப்பாக அமையவில்லை. ஆஸ்திரேலியா தொடருக்கு முன், இவர் எதிர்காலம் பற்றி முடிவெடுப்பார் என நினைக்கிறேன். 

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

 நீக்கலாம்:

முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,""டெஸ்ட் கேப்டன் பதவியில் தோனி நீடிக்கக்கூடாது. நான் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தால், இவரை விக்கெட் கீப்பராக, பேட்ஸ்மேனாக தேர்வு செய்வேன். 

ஏனெனில் இவரின் பங்களிப்பு அணிக்கு தேவை. ஆனால், கேப்டன் பதவி இல்லாமல் இருந்தால், அணிக்கு இன்னும் அதிக பங்களிப்பை கொடுப்பார். ஓய்வு குறித்து தேர்வாளர்கள் சச்சினிடம் பேச வேண்டும்,'' என்றார்.

பணம், பதவி, பகட்டு - இந்திய தோல்விக்கு காரணம் என்ன?


டெஸ்ட் போட்டி மீதான ஆர்வம் இந்திய வீரர்களுக்கு சுத்தமாக இல்லை. பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., தொடருக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். 

கேப்டன் பதவியை பிடிக்க மோதல், அணியில் ஒற்றுமையின்மை, தவறான வீரர்கள் தேர்வு போன்றவை அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற அணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால், இந்திய அணியால் மட்டும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடிவதில்லை. 

முன்பு வெளிநாடுகளில் தோல்வி அடைவது வாடிக்கையாக இருந்தது. தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் முக்கிய காரணம். இதன் மூலம் கோடிகள் கிடைப்பதால், கிரிக்கெட் வீரர்கள் பகட்டான வாழ்க்கைக்கு மாறி விட்டனர். 

ஒரு டெஸ்டில் விளையாடினால் ஒரு வீரருக்கு ரூ.7 லட்சம் தான் சம்பளம் கிடைக்கும். தவிர, 5 நாட்கள் களத்தில் கடுமையாக பாடுபட வேண்டும். இத்தகைய சிரமங்களை தற்போதைய வீரர்கள் எதிர்கொள்ள தயாராக இல்லை.

டெஸ்ட் போட்டிகளில் தோனியிடம் இருந்து கேப்டன் பதவியை பிடிக்க காம்பிர், சேவக் முயற்சிக்கின்றனர். இப்படி பதவி போட்டி அதிகரித்தது, அணியின் நலனை பெரிதும் பாதித்தது. இது வீரர்கள் இடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தியது. 

இந்திய தேர்வுக்குழுவினரும் தைரியம் இல்லாதவர்களாக உள்ளனர். பழம்பெருமைக்கு முக்கியத்துவம் அளித்து விளையாடாத வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கின்றனர். 

உதாரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய நான்கு டெஸ்டில் சச்சின் சராசரியாக 18.66 ரன்கள் தான் எடுத்தார். ஆனாலும், இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

டெஸ்ட் போட்டிக்கு எழுச்சி அளிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் போர்டு விரைவில் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்து நடக்க உள்ள தொடரிலாவது சாதிக்க முடியும்.

இந்தியாவுக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிற 25–ந்தேதி முதல் ஜனவரி 6–ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 

இதற்காக பாகிஸ்தான் வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்திய தொடர் குறித்து பாகிஸ்தான் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் மிஸ்பா உல்–ஹக் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணியில் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர்களது சொந்த மண்ணிலேயே அதிர்ச்சி அளிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்தியா–பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை எப்போதும் அனைத்து தரப்பினரும் உன்னிப்பாக கவனிப்பார்கள். அப்படிப்பட்ட இந்த தொடரில் தங்களது திறமையை நிரூபித்து, முத்திரை பதிக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது அருமையான வாய்ப்பு. 

இந்த தொடரில் இரு அணிகளுக்கும் நெருக்கடி அதிகமாக இருக்கும். பதற்றமின்றி, நல்ல மனநிலையில் விளையாடும்படி எங்களது வீரர்களுக்கு அறிவுரை வழங்குவேன். 

மூத்த வீரர் அப்துல் ரசாக் நீக்கம் பற்றி கேட்கிறீர்கள். அவரது திறமை குறித்து யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் தேர்வாளர்கள் இந்தியாவில் உள்ள சூழலை மனதில் வைத்து அணியை தேர்வு செய்திருக்கிறார்கள். சீனியர் வீரரை நீக்குவது தொடர்பான எந்த ஒரு விஷயத்திலும், அந்த முடிவுக்கு கேப்டன் மட்டுமே காரணம் அல்ல, அது கூட்டாக எடுக்கப்பட்ட முடிவு என்பதை மக்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன் முகமது ஹபீஸ் கூறுகையில், ‘20 ஓவர் போட்டி மற்றும் ஒரு நாள் தொடர் இரண்டிலும் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.

20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி பாகிஸ்தான் அணிகளில் உமர்குல், ஜூனைட் கான், வஹாப் ரியாஸ், முகமது இர்பான், அன்வர் அலி, ஆசாத் அலி, சோகைல் தன்விர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

விராத் கோஹ்லி அபார சதம் - தோனி 99-ல் ரன் அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் விராத் கோஹ்லி சதம் அடித்தார். தோனி 99 ரன்னில் அவுட்டானார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் நாக்பூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 330 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 87 ரன் எடுத்திருந்தது. கோஹ்லி (11), கேப்டன் தோனி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. தோனி, கோஹ்லி இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களது மந்தமான ஆட்டத்தினால் ஸ்கோர், ஒன்றிரண்டு ரன்களாக உயர்ந்தது. 

தோனி 28 வது அரைசதம் அடித்தார். மறுமுனையில் சதம் அடித்த விராத் கோஹ்லி, 103 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜடேஜா 12 ரன்கள் எடுத்தார். தோனி 99 ரன்கள் எடுத்து தேவையில்லாமல் ரன் அவுட்டானார். சாவ்லா (1) விரைவில் திரும்பினார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்திருந்தது. அஷ்வின் (7) அவுட்டாகாமல் உள்ளார்.