தென் ஆப்ரிக்கா பிரமாண்ட வெற்றி - 151 ரன்னுக்கு சுருண்டது வெ.இண்டீஸ்

உலக கோப்பை லீக் போட்டியில் 257 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்க அணி பிரமாண்ட வெற்றி பெற்றது. டிவிலியர்ஸ் 52 பந்தில் சதம் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்னுக்கு சுருண்டது.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.


அசத்திய இருவர்:

தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (12) அதிர்ச்சி கொடுக்க, முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 30 ரன்கள் மட்டும் எடுத்தது. பின், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆம்லா, டு பிளசி என, அடுத்தடுத்து அரைசதம் விளாசினர்.


டிவிலியர்ஸ் சதம்:

2வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்த போது, போட்டியின் 30வது ஓவரை வீசிய கெய்ல், டுபிளசி (62), ஆம்லாவை (65) அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.

அடுத்து இணைந்த ரோசாவ், டிவிலியர்ஸ் ஜோடி வேகமாக ரன்கள் சேர்த்தது. 4வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்த போது, அரைசதம் அடித்த ரோசாவ் (61) அவுட்டானார்.

மறுமுனையில் 30 பந்தில் அரைசதம் எட்டிய டிவிலியர்ஸ், அடுத்த 22வது பந்தில் சதத்தை (52 பந்து) கடந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது.

ஹோல்டர் வீசிய போட்டியின் 48வது ஓவரில் 4 பவுண்டரி, 2 சிக்சர் என, 34 ரன்கள் எடுத்த டிவிலியர்ஸ், கடைசி ஓவரில் 30 ரன்கள் (4 சிக்சர், 1 பவுண்டரி) அடிக்க, 400 ரன்களை கடந்தது. கடைசி 10 ஓவரில் மட்டும் 150 ரன்கள் சேர்த்த தென் ஆப்ரிக்க அணி, 50 ஓவரில்  5 விக்கெட்டுக்கு 408 ரன்கள் குவித்தது. 66 பந்தில் 162 ரன்கள் எடுத்த டிவிலியர்ஸ், பெகர்டியன் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.


இமாலய இலக்கு:

எட்ட முடியாத இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, ரன்கள் எடுப்பதற்குப் பதில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது.

கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த கெய்ல், இம்முறை 3 ரன்னுடன் கிளம்பினார். சாமுவேல்ஸ் ‘டக்’ அவுட்டானார். ஸ்மித் (31), சிம்மன்ஸ் ‘டக்’, சமி (5) வரிசையாக இம்ரான் தாகிர் சுழலில் சிக்கினர். கார்டர் (10) நீடிக்கவில்லை.

தொடர்ந்து ரசலும் ‘டக்’ அவுட்டாக, 63 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. ராம்தின் (22) ஏமாற்ற, தனது முதல் அரைசதம் கடந்த திருப்தியில் ஹோல்டர் (56) திரும்பினார். பின் வந்த பென் (1) அபாட்டிடம் சிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி, 33.1 ஓவரில், 151 ரன்னுக்கு சுருண்டு, 257 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெய்லர் (15) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருது டிவிலியர்சிற்கு கிடைத்தது.


இது அதிகம்

உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது தென் ஆப்ரிக்கா (408/5). இதற்கு முன், 2
* சிட்னி மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இது தான். இதற்கு முன் 2006ல் ஆஸ்திரேலிய அணி 368/5 ரன்கள் (எதிர்–இலங்கை) எடுத்தது.

* தவிர, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் மற்றும் 50 ஓவர் போட்டிகளில், முதன் முறையாக 400 ரன்களை தாண்டிய அணி என்ற பெருமை பெற்றது தென் ஆப்ரிக்கா. 


அதிவேக 50, 100, 150

ஒருநாள் கிரிக்கெட்டில் அதி வேக 50, 100, 150 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ்

* கடந்த ஜன., 18ல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 16 பந்தில் அரைசதம் கடந்தார். அடுத்த இடத்தில் இலங்கையின் ஜெயசூர்யா (17 பந்து) உள்ளார்.

* இதே போட்டியில் 31 பந்தில் சதம் அடித்து புதிய வரலாறு படைத்தார். அடுத்த இடத்தில் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் (36 பந்து) உள்ளார்.

* தற்போது, உலக கோப்பை அரங்கில் 64 பந்தில் 150 ரன்கள் எடுத்து, மற்றொரு சாதனை படைத்தார். 

தென் ஆப்ரிக்க அணிக்கு அபராதம்

இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசிய தென் ஆப்ரிக்க அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னில் நடந்த ‘பி’ பிரிவு உலக கோப்பை லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. 

இப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசியது.

ஐ.சி.சி., விதிமுறைப்படி போட்டியில் தாமதமாக பந்துவீசுவது குற்றமாகும். 

இதனையடுத்து ஐ.சி.சி., ‘மேட்ச் ரெப்ரி’ ஜெப் குரோவ், தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்சுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம், மற்ற வீரர்களுக்கு 10 சதவீதம் அபராதம் விதித்தார். 

உலக கோப்பை பைனலுக்கு முன், மீண்டும் ஒரு முறை தென் ஆப்ரிக்க அணி தாமதமாக பந்துவீசும் பட்சத்தில், கேப்டன் டிவிலியர்சுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தவா­னுக்கு கேப்டன் தோனி பாராட்டு

தென் ஆப்­ரிக்­கா­வுக்கு எதி­ராக நன்கு திட்­ட­மிட்டு பேட் செய்தார் ஷிகர் தவான்,’’என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்தார். 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. மெல்போர்னில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. 

இதில் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய வீரர் தவான் சதம் (137) விளாசினார். இது அணியின் வெற்றிக்கு வித்திட்டது. 

இது குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,‘‘ தென் ஆப்­ரிக்­கா­வுக்கு எதி­ராக நன்கு திட்­ட­மிட்டு பேட் செய்தார் ஷிகர் தவான். சதம் அடித்த பிறகு ரன் வேட்­டையை தொடர்ந்­தது தான் சிறப்­பம்சம்.

வீரர்களின் ‘பார்ம்’ குறித்து விமர்­சிக்­கின்­றனர். இதனை யாரும் அவ்­வ­ள­வு எளிதில் கண்­ட­றிய முடி­யாது. 15 முதல் 20 நிமிடங்களில் இழந்த ‘பார்மை’ மீட்­­கலாம். தவானை பொறுத்­த­வரை கடந்த போட்­டியில் போதிய நேரம் தாக்­குப்­பி­டித்து விளை­யா­டினார். இது, தென் ஆப்­ரிக்­கா­வுக்கு எதி­ராக சதம் அடிக்க உத­வி­யது.

ரெய்னா, ஜடேஜா அவுட்டான பின், ஷமி, அஷ்வின் இணைந்து 300 ரன்களை தாண்ட உதவியது பாராட்டுக்குரியது. ஒட்டுமொத்த பவுலிங் கூட்டணியும் திறமையுடன் செயல்பட்டது. எங்கள் அணியில், சிறப்பான ‘பீல்டர்கள்’ உள்ளனர். உலக கோப்பை தொடரின் முதலிரண்டு லீக் போட்டிகளிலும் வென்றது மகிழ்ச்சி.


ரசி­கர்­க­ளுக்கு நன்றி:

மெல்போர்ன் அரங்கில் திரண்ட சுமார் 87 ஆயிரம் ரசிகர்­களை பார்த்த போது மிகவும் பிர­மிப்­பாக இருந்­தது. இதில், 20 ஆயிரம் ரசி­கர்கள் தென் ஆப்ரிக்­கா­வுக்கு ஆத­ரவு அளித்­தனர் என்­றாலும் கூட, மீத­முள்ள 60 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட ரசி­கர்கள் இந்­த­ி­யா­வுக்கு உற்­சாகம் அளித்­தனர். இவர்­க­ளது ஆத­ர­வு, சிறப்­பாக செயல்­பட ஊக்­கம் தந்­தது. இவர்­க­­ளுக்கு எனது நன்­றி,’’ என்றார்.


நம்பிக்கை மீது ‘அடி’

தோல்வி குறித்து தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் கூறுகையில்,‘‘ இந்திய அணியிடம் 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது அதிர்ச்சியாக உள்ளது. இது மிகவும் வருத்தம் தருகிறது.  

எங்களின் நம்பிக்கையின் மீதும் பலத்த ‘அடி’ விழுந்­துள்­ள­து. போட்டி முடிந்தபின், ஆம்லாவிடம் பேசினேன். அப்போது, இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார். அதே நேரத்தில், எங்களின் ‘பேட்டிங்’ படுமோசமாக இருந்தது,’’ என்றார். 

உ­­லக கோப்பையில் சூதாட்டம்

உலக கோப்பை தொடரின் முடி­வுகள் கிரிக்கெட் சூதாட்­டக்­கா­ரர்­க­ளால் முன்­கூட்­டியே நிர்­ணயிக்­கப்­பட்­ட­தாக ‘வாட்ஸ் ஆப்’ சமூக வளைதளத்தில் செய்­தி வெளியாகி உள்­ளது.

ஆஸ்­தி­ரே­ல­ியா, நியூ­சி­லாந்தில் 11வது உலக கோப்பை தொடர் நடக்­கி­றது. இதில்,  சூதாட்­டக்­கா­ரர்கள் அதிகம் ‘விளையா­டு­வ­து’ போல சமூ­க­வ­ளை­த­ள­மா­ன ‘வாட்ஸ் ஆப்பில்’ செய்தி வெளியா­க­ி­யுள்­ள­து. 

இதுவரை நடந்த போட்­டி­களின் முடிவு இவர்கள் கணிப்­பின்­ப­டி சரியாக அமைந்­துள்­ளது. உதா­ர­ண­மாக, நியூ­சி­லாந்து அனைத்து போட்­டி­க­ளிலும் வென்றது. 

நாளை நடக்கும் போட்­டியில் இந்­திய அணி, தென் ஆப்­ரிக்­க­விடம் தோற்­குமாம். அடுத்து, ஜிம்­பாப்­வே­யிடமும் தோல்வி அடையும் என கூறப்­பட்­டுள்­ளது. 

காலி­று­தியில் இந்­தியா, நியூ­­சி­லாந்தை வெல்­லுமாம். அரையி­று­தியில் ஆஸ்­தி­ரே­ல­ி­யா­­விடம் தோற்று, கோப்­பையை தக்க வைக்­காது என தெரி­வ­ிக்­கப்­பட்­டுள்­ளது.

மார்ச் 29ல் நடக்கும் பைனலில் தென் ஆப்­ரிக்க அணி, ஆஸ்­தி­ரே­லி­யாவை வீழ்த்­தி, முதல் முறை­யாக சாம்­பியன் பட்­டத்தை வெல்லும் என கணிக்­கப்­பட்­டுள்­ள­து. 

இது போன்ற செய்­தி­களின் உண்மைதன்மையை கண்­ட­றிந்து, ஐ.சி.சி., உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பதே ரசி­கர்­களின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

இந்திய அணிக்கு சச்சின் எச்சரிக்கை

தென் ஆப்ரிக்க அணியினர் ‘பீல்டிங்கில்’ துடிப்பானவர்கள். பந்துவீச்சில் மிரட்ட ஸ்டைன் காத்திருப்பதால், இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும்,’’என, சச்சின் தெரிவித்தார். 

உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியா, நியசிலாந்தில் நடக்கிறது. இதில் இந்திய அணி முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அடுத்த போட்டியில்(பிப்.,22), தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. 

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறியது:

தென் ஆப்ரிக்க வீரர்கள் மிகவும் துடிப்பானவர்கள். பாகிஸ்தான் அணியை விட ‘பீல்டிங்கில்’ சிறப்பாக செயல்படுவார்கள். பந்தை அருகில் தட்டிவிட்டு, ஒரு ரன் எடுப்பது கடினம். துவக்க ஜோடி சிறப்பான அடித்தளம் அமைக்க வேண்டும். 

ரோகித் சர்மா அடுத்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். கேப்டன் தோனியின் ‘பார்ம்’ கவலை தருவதாக இல்லை. இந்திய அணி 320 ரன்களுக்கு அதிகமாக ரன்களை குவிப்பதை, இலக்காக கொள்ள  வேண்டும். 

ஏனெனில், கடந்த போட்டியில் பாகிஸ்தான்  சிறப்பாக விளையாடி இருந்தால், 300 ரன்களை எட்டி இருக்கும். 

தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன் நம்ப முடியாத திறமை வாய்ந்தவர். இவரின் பந்துவீச்சை சரியாக கணித்து விளையாடுவது கடினம். இவ்வாறு சச்சின் கூறினார். 

இம்ரான் சொன்னார் - அக்ரம் செய்தார்

உலக கோப்பை தொடரில்(1992) சிறப்பாக  வியூகம் அமைத்தார் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான். 

இதன் பைனலில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் (72), மியாண்தத்(58), இன்சமாம்(42), அக்ரம்(33) கைகொடுத்தனர். 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது.      

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. அக்ரம் ‘வேகத்தில்’ நட்சத்திர வீரரான இயான் போத்தம் ‘டக்’ அவுட்டானார். ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து தத்தளித்தது. 

இந்த நேரத்தில் ஆலன் லாம்ப், நீல் பேர்பிரதர் இணைந்து துணிச்சலாக போராடினர். இவர்கள் 5வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்க்க, இம்ரான் மனதில் லேசான கலக்கம் ஏற்பட்டது. 

உடனே அக்ரமை அழைத்து,‘‘எனக்கு எப்படியாவது விக்கெட் வேண்டும். ‘வைடு’ அல்லது ‘நோ-பால்’ பற்றி எல்லாம் கவலைப்படாமல் பந்துவீசு,’’என, கட்டளை பிறப்பித்தார்.       

கேப்டன் உத்தரவை அப்படியே செயல்படுத்திய அக்ரம், ஆலன் லாம்ப்பை போல்டாக்கினார். அடுத்து வந்த கிறிஸ் லீவிசையும் தனது ‘யார்க்கரில்’ வெளியேற்றி, போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தினார். 

இங்கிலாந்து அணி 49.2 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, உலக கோப்பையை வென்றது. ஆட்ட நாயகன் விருதை அக்ரம் தட்டிச் சென்றார். 

கேப்டன் தோனிக்கு பெண் குழந்தை

இந்திய கேப்டன் தோனி, அப்பாவாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இவரது மனைவி சாக்சிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்திய அணி கேப்டன் தோனி, 33. சர்வதேச ‘டுவென்டி–20’ (2007), 50 ஓவர் (2011), மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி (2013) என மூன்றுவிதமான கோப்பை வென்ற பெருமை தோனிக்கு உண்டு.

கடந்த 2010ல் (ஜூலை 4) கேப்டன் தோனி, தனது குழந்தை பருவ தோழியான சாக்சியை மணந்தார். தோனி, உள்ளூர், வெளிநாடு என எங்கு விளையாடச் சென்றாலும் சாக்சியை உடன் அழைத்துச் செல்வார். 

சமீபத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரின் போது சாக்சி வரவில்லை.

இந்நிலையில் தற்போது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கவுள்ள 11வது உலக கோப்பை தொடரில் பங்கேற்க சென்றுள்ள தோனிக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது.

தோனியின் மனைவி சாக்சி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குர்கானில் உள்ள போர்டிஸ் தனியார் மருத்துவமனையில் (பிப்., 6) மாலை குழந்தை பிறந்தது. இக்குழந்தை 3.7 கிலோ எடை இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதன்மூலம் தோனி, அப்பாவாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் கேப்டன் தோனிக்கு, மகள் பிறந்த ராசி கைகொடுக்கும் பட்சத்தில், மீண்டும் கோப்பை வென்று சாதிக்கலாம்.

மீண்டும் மகுடம் சூடுமா இந்தியா ? கபில் தேவ் கணிப்பு

உலக கோப்பை தொடரில் 99 சதவீதம் இந்திய அணி கோப்பை வெல்லும் என, இதயம் கூறினாலும், 25 சதவீதம் தான் வாய்ப்புள்ளது என, மூளை சொல்கிறது,’’ என, கபில்தேவ் தெரிவித்தார்.     
        
கடந்த 1983 தொடரில் அசத்தி, இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை வென்று தந்தவர் கேப்டன் கபில்தேவ். இதன் பின் 28 ஆண்டுகள் கழித்து தான், தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் ஆனது. 

தற்போது ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைக்குமா என்பது குறித்து கபில்தேவ் கூறியது: வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதா என, கேட்கும் போது, இதயம் உணர்ச்சி வசப்பட்டு 99 சதவீதம் வாய்ப்புள்ளது என்று தான் கூறுகிறது. 

அதேநேரம், எனது கிரிக்கெட் மூளையை பயன்படுத்தி யோசித்துப் பார்த்தால், 25 சதவீத வாய்ப்பு இருப்பதாகத் தான் தெரிகிறது.         
    
சமீபத்திய போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என, எல்லோரும் கூறுகின்றனர். ஒருவேளை வெற்றிப் பாதைக்கு திரும்பி விட்டால், அப்புறம் ஏன் கோப்பை வெல்லக் கூடாது என, எனது கிரிக்கெட் மூளை நினைக்கிறது. ஏனெனில், நமது அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். பலமுறை இவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.  
           
அனுபவ கேப்டன்: தவிர, அனுபவ கேப்டன் தோனி மற்றும் 6 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களது நாளாக அன்றைய தினம் அமைந்து விட்டால், தனி நபராக போராடி அணியை வெற்றி பெறச் செய்வர். மற்றபடி, முதல் லீக் போட்டியில் (பிப்., 15) இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும். பின் அரையிறுதிக்கு முன்னேறுவது முக்கியம். 

கோப்பை வென்றது ஆஸி., - இங்கிலாந்து ஏமாற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான முத்தரப்பு ஒரு நாள் தொடரின் பைனலில் மேக்ஸ்வெல் ஆல்–ரவுண்டராக அசத்த ஆஸ்திரேலிய அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கோப்பை வென்று அசத்தியது. 

முத்தரப்பு ஒருநாள் தொடரில் சொதப்பிய இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. இன்று பெர்த்தில் நடந்த பைனலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.


மேக்ஸ்வெல் அதிரடி:

ஆஸ்திரேலிய அணியின் பின்ச் டக்–அவுட் ஆனார். ஆண்டர்சன் வேகத்தில் வார்னர் (12) வெளியேறினார். பின் வந்த கேப்டன் பெய்லியும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டீவன் ஸ்மித் 40 ரன்கள் எடுத்தார். 

சிறப்பாக செயல்பட்ட மேக்ஸ்வெல் அரை சதம் அடித்தார். இவர் பிராட் பந்தில் 95 ரன்களில் அவுட்டானார். மிட்சல் ஜான்சன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த மிட்சல் மார்ஷ் 60 ரன்களில் வெளியேறினார். 

ஹாடின் (9) நிலைக்கவில்லை. கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய பால்க்னர் அரை சதம் எட்டினார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெ்டடுக்கு 278 ரன்கள் எடுத்தது. பால்க்னர் (50), ஸ்டார்க் (0) அவுட்டாகாமல் இருந்தனர். 


ஜான்சன் அசத்தல்:

இங்கிலாந்து அணிக்கு இயான் பெல் (8) ஏமாற்றினார். ஜான்சன் ‘வேகத்தில்’ ஜேம்ஸ் டெய்லர் (4), மார்கன் (0) அடுத்தடுத்து சிக்கினர். மொயீன் அலி (26), ஜோ‌ ரூட்  (25) வெகுநேரம் நிலைக்கவில்லை. 

மேக்ஸ்வெல் ‘சுழலில்’ பட்லர்(17),  வோக்ஸ் (0) ஆட்டமிழந்தனர். பிராட் 24 ரன்கள் எடுத்தார். பின் வந்தவர்களும் சொதப்ப, இங்கிலாந்து அணி 39.1 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி தோல்வியடைந்தது. 

ஆண்டர்சன் (5) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் மேக்ஸ்வெல் 4, ஜான்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.