நிதிச் சிக்கலில் தவிக்கும் கால்பந்து அணியை மீட்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) உதவவேண்டும் என அகில இந்திய கால்பந்து அமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) கேட்டுள்ளது. இதையடுத்து பி.சி.சி.ஐ., 10 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக பி.சி.சி.ஐ., விளங்குகிறது. இதனிடம் ஏ.ஐ.எப்.எப்., உதவி கேட்டுள்ளது. இது குறித்து கோல்கட்டாவில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி:
ஏ.ஐ.எப்.எப்., அமைப்பு "இலக்கு 2011' என்ற திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் பல்வேறு கிளப் அணிகளில் இருந்து 25 கால்பந்து வீரர்களை தேர்வு செய்ய உள்ளது. அவர்களுக்கு ஒன்பது மாதங்கள் பயிற்சி கொடுத்து வரும் 2011, கத்தாரில் நடக்கும் ஆசிய கோப்பை போட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க கால்பந்து அமைப்புக்கு அதிக பணம் தேவைப்படுகிறது.
ஏ.ஐ.எப்.எப்., தலைவர், தற்போதைய விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல், இந்த நிதிநிலைமையை சமாளிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துணைத்தலைவரும், பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவருமான சரத்பவாரிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து பி.சி.சி.ஐ., 10 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்துள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கருத்தை பி.சி.சி.ஐ., மறுத்துள்ளது.
0 comments:
Post a Comment