எல்லை மீறினாரா தோனி - கடும் கோபத்தில் பி.சி.சி.ஐ.,

பயிற்சியாளர் பிளட்சருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தோனிக்கு, பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளது.      

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டப்பட்டு, இந்திய அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். விரைவில் பிளட்சர் நீக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.            
                        
இதனை மறுத்த கேப்டன் தோனி கூறுகையில்,‘‘உலக கோப்பை தொடர்(2015) வரை இந்திய அணிக்கு பிளட்சர் தான் பயிற்சியாளர். இவர் தான் ‘பாஸ்’. இவரது அதிகாரங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. ரவி சாஸ்திரி மேற்பார்வை மட்டும் செய்வார்,’’ என்றார்.    
  
பொதுவாக பயிற்சியாளர் தொடர்பான முடிவுகளை பி.சி.சி.ஐ., தான் எடுக்கும். இந்தச் சூழலில் தோனி தன்னிச்சையாக கருத்து வெளியிட்டது மோதல் போக்கை உருவாக்கியுள்ளது.      

அதிகாரம் இல்லை: இது குறித்து பி.சி.சி.ஐ.,யின் பெயர் குறிப்பிட விரும்பாத நிர்வாகி மற்றும் இந்திய அணியுடன் பல தொடர்களில் மானேஜராக சென்ற ஒருவர் கூறியது: இந்திய அணிக்கு பயிற்சியாளராக யார் இருக்க வேண்டும் என்பதை தோனி முடிவு செய்ய முடியாது. 

இதை பி.சி.சி.ஐ., தான் தீர்மானிக்க வேண்டும். வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டன் யார், பயிற்சியாளர் யார் என்பதை தேர்வுக்குழு  தான் முடிவு செய்யும். இந்திய அணி கேப்டனிடம் இருந்து இது போன்ற கருத்து வெளியானது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. அடுத்த செயற்குழு கூட்டத்தில் இது குறித்து கட்டாயம் விவாதிக்கப்படும்.    
        
அணியின் ‘பாஸ்’ யார் என்பது குறித்து தோனி கருத்து தெரிவித்திருக்கக் கூடாது. இதற்கான அதிகாரம் இவருக்கு கிடையாது.       
      
இவ்விஷயத்தில் தோனி வரம்பு மீறி செயல்பட்டுள்ளார். ‘மீடியா’ தரப்பில் இருந்து எப்படிப்பட்ட கேள்விகளும் கேட்கத்தான் செய்வர். அனுபவம் நிறைந்த கிரிக்கெட் வீரராக இருப்பவர், தனது எல்லை என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்குத் தகுந்து பதில் தர வேண்டும். 

போட்டியில் களமிறங்கும் 11 வீரர்கள் யார் என்பதை, பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் முடிவு செய்ய முடியாது. அதேபோல, யார், எத்தனை காலத்துக்கு பதவியில் இருப்பர் என்பதை தோனி முடிவு செய்யக் கூடாது. அணியின் துணை பயிற்சியாளர்களை நியமிப்பது,  தொடர்பாக கருத்து தெரிவிக்கும் உரிமையும் இவருக்கு கிடையாது.     இவ்வாறு அவர் கூறினார்.           

மோதல் ஆரம்பம்: பயிற்சியாளரை ஓரங்கட்ட வேண்டும் என்று தான் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இது தோனிக்கு பிடிக்கவில்லை என்றே தெரிகிறது. இதனால் தான் வெளிப்படையாக பிளட்சருக்கு ஆதரவு தெரிவித்தார். இது தோனி–பி.சி.சி.ஐ., இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

பதிலடி கொடுக்க இளம் படை ரெடி - ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது. இதில் சஞ்சு சாம்சன், குல்கர்னி, கரண் சர்மா போன்ற இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர். 

இவர்கள், டெஸ்ட் தொடர் தோல்விக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதையடுத்து, ஒருநாள் தொடரில் பயிற்சியாளர் பிளட்சருக்கு உதவ, சஞ்சய் பங்கர், பாரத் அருண் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இவர்கள் பணியை மேற்பார்வை செய்யவுள்ள ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி, நேற்று அணியினருடன் இணைந்தார்.

 இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்டலில் நடக்கவுள்ளது. ஒருநாள் அரங்கில் ‘உலக சாம்பியன்’ இந்தியா தான். சர்வதேச தரவரிசையிலும் ‘நம்பர்–2’ (112 புள்ளி) ஆக உள்ளது. 

இங்கிலாந்து அணி (109) ஐந்தாவது இடத்தில் தான் உள்ளது. ‘நடப்பு உலக சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைக்க, இந்திய அணியை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) உள்ளது.

இப்போதைய நிலையில், இங்கிலாந்து மண்ணில் மற்றொரு தொடரை இழக்காமல் இருப்பதே முக்கியம். ஒருநாள் கோப்பையை இந்தியா வெல்லும் பட்சத்தில் ரசிகர்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும்.


கோஹ்லி எழுச்சி:

நேற்று முன்தினம் நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. டெஸ்ட் தொடரில் சொதப்பிய கோஹ்லி (10 இன்னிங்ஸ், 134 ரன்கள்), பயிற்சியில் 71 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் இவர் தான் இப்போதைய ‘ரன் மெஷின்’. இதுவரை 134 போட்டிகளில், 5,634 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 19 சதம், 30 அரைசதங்கள் அடங்கும். இவருடன் ரெய்னாவும் இணைந்து அசத்த உள்ளார்.


சபாஷ் சஞ்சு:

அணியில் புதிதாக இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சன், 19, தவால் குல்கர்னி, 25, உள்ளிட்டோர் ஆஸ்திரேலியாவில் நடந்த இளம் வீரர்களுக்கான தொடரில் மிரட்டியவர்கள். கடந்த ரஞ்சி சீசனில் கேரள அணிக்காக பங்கேற்ற சாம்சன் 530 ரன்கள் குவித்தார். இவர் துடிப்பான விக்கெட் கீப்பர் என்பது கூடுதல் சிறப்பு.


கரண் கலக்கல்:

சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மா, 23, ஐ.பி.எல்., தொடரில் ஐதாராபாத் அணிக்காக ரூ. 3.75 கோடிக்கு வாங்கப்பட்டார்.  ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் இவரது ‘எக்கானமி ரேட்’ 3.93 தான்.

அடுத்து வேகப்பந்து வீச்சாளர் குல்கர்னி, 58 முதல்தர போட்டிகளில் 181 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இவர்களுடன் அனுபவ ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ஜடேஜாவும் கைகொடுக்கலாம்.


தோனிக்கு சவால்:

தரவரிசையில் இங்கிலாந்து பின்தங்கியிருந்தாலும், சொந்தமண்ணில் அவ்வளவு எளிதாக வெற்றியை விட்டுத் தராது. இதனால், டெஸ்ட் தொடரை போல, ஒருநாள் போட்டிகளிலும் கேப்டன் தோனிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

ராஜினாமா முடிவில் தோனி - முன்னாள் வீரர்கள் ஆவேசம்

டெஸ்ட் தொடரில் சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இங்கிலாந்து சென்ற இந்திய அணி, நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது. அடுத்து லார்ட்சில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது. 1–0 என, முன்னிலை பெற்றவுடன் இந்திய வீரர்கள் வெற்றி மிதப்பில் சொதப்ப துவங்கினர். 

பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாக சொதப்பினர். இவர்களை முன்னேற்ற பயிற்சியாளர் பிளட்சர் எதுவுமே செய்யவில்லை. சொந்தமண்ணில் வீறு கொண்டு எழுந்த இங்கிலாந்து அணி, ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று 3–1 என, கோப்பை வென்றது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடரை மோசமாக இழந்ததால், இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 

இது குறித்து அணியின் முன்னாள் வீரர்கள் ஆவேசமாக கூறியது:      


அஜித் வடேகர்: கடினமான ஆடுகளம் கொண்ட லார்ட்சில் நாம் வென்றோம். இந்த முன்னிலையை தக்கவைக்க என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமும் பயிற்சியாளர் பிளட்சருக்கு இல்லை. இவர் அங்கு என்ன செய்து கொண்டுள்ளார். இவர் கிளம்பும் நேரம் வந்து விட்டது என நினைக்கிறேன். 

பேட்டிங்கில் தனது யுக்தியை மாற்றிக் கொண்ட தோனி, கேப்டன் பணியில் மட்டும் ஏன், தன்னை மாற்றிக் கொள்ள மறுக்கிறார். ‘தேர்டு மேன்’ பகுதியில் பீல்டரை நிறுத்தாதால், இங்கிலாந்து ஸ்கோரில் பாதியளவு ரன்கள் இப்பகுதியில் இருந்து தான் கிடைத்தன. அஷ்வினை முதல் டெஸ்டில் இருந்து சேர்த்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது வியப்பாக இருந்தது.      

குண்டப்பா விஸ்வநாத்: தோனியின் கேப்டன் பொறுப்பு, விக்கெட் கீப்பிங் பணிகள் திருப்தி தரவில்லை. அவரது மனதில் நினைப்பதை செய்தார். இத்தவறை திரும்ப திரும்ப தொடர்ந்தார். எப்போதுமே ஏதாவது அதிசயம் நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதிசயம் என்பது அடிக்கடி நிகழாது. ஏதாவது ஒரு முறை தான் ஏற்படும். இதற்காக தோனியை இப்போது நீக்கக் கூடாது. அணியை வழிநடத்த இப்போதைக்கு அனுபவமான, சரியான வீரர் இவர் மட்டும் தான்.       

எரபள்ளி பிரசன்னா: இந்திய அணியில் பிளட்சரின் பங்கு என்பது ‘பூஜ்யம்’ தான். இதை உறுதியாக சொல்ல முடியும்.       

ஸ்ரீகாந்த்: பயிற்சியாளர் பிளட்சர் இந்திய அணிக்காக எதுவும் செய்ததாக தெரியவில்லை. இளம் வீரர்கள், அனுபவமில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அணியில் 7 முதல் 8 வீரர்களுக்கு போதிய அனுபவம் உள்ளது. ஆனால், போராடும் குணத்தை இழந்து விட்டனர். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவில்லை.    

12 ஆயிரம் ரன்னை தவறவிட்ட சங்ககரா

பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்டில் 2–வது இன்னிங்சில் இலங்கை முன்னாள் வீரர் சங்ககரா 12 ஆயிரம் ரன்னை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

அதற்கு அவருக்கு 17 ரன் தேவைப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் அவர் மேலும் 5 ரன் எடுத்த நிலையில் (59 ரன்னில் அவுட்) பெவிலியன் திரும்பினார்.

128 டெஸ்டில் விளையாடி உள்ள சங்ககரா 11,988 ரன் எடுத்து உள்ளார். 12 ஆயிரம் ரன் எடுக்க அவருக்கு இன்னும் 12 ரன் தேவை. 

அடுத்த டெஸ்ட் தொடரில் தான் அவரால் இதை எடுக்க முடியும். டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் சங்ககரா 5–வது இதில் உள்ளார்.

தெண்டுல்கர் 15,921 ரன்னுடன் முதல் இடத்தில் உள்ளார். பாண்டிங் (13,378 ரன்), காலிஸ் (13,289), டிராவிட் (13,288) ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவருமே ஓய்வு பெற்று விட்டனர்.

முதலிடம் பிடித்தார் அஷ்வின்

ஐ.சி.சி., டெஸ்ட் ‘ஆல்–ரவுண்டருக்கான’ ரேங்கிங்கில் (தரவரிசை), இந்தியாவின் அஷ்வின் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறினார். பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில், இலங்கையின் சங்ககரா மீண்டும் முதலிடம் பிடித்தார்.      

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில், ‘ஆல்–ரவுண்டர்’களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் அஷ்வின், 372 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில், பேட்டிங்கில் (40, 46 ரன்கள்) அசத்தியதே முன்னேற்றத்துக்கு காரணம். 

இதன்மூலம் தென் ஆப்ரிக்காவின் பிலாண்டர் (365 புள்ளி) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தில் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் உள்ளார். இப்பட்டியலில், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜான்சனை முந்தி, 4வது இடம் பிடித்தார்.      
சங்ககரா முதலிடம்: பாகிஸ்தானுக்கு எதிராக காலேயில் நடந்த முதல் டெஸ்டில், 10வது முறையாக இரட்டை சதம் அடித்த இலங்கையின் சங்ககரா, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், மீண்டும் முதலிடம் பிடித்தார். 

முன்னதாக இவர், 2007 (டிசம்பர்), 2012ல் (நவம்பர்) வெளியிடப்பட்ட ரேங்கிங்கில் ‘நம்பர்–1’ இடம் பிடித்தார். அடுத்த இரண்டு இடங்களில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், ஹசிம் ஆம்லா உள்ளனர். 

தனது கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கையின் மகிளா ஜெயவர்தனா, 14வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இப்பட்டியலில், இந்தியாவின் புஜாரா, 10வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கும், விராத் கோஹ்லி, 15வது இடத்தில் இருந்து 20வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.     

ஆண்டர்சன் முன்னேற்றம்: பவுலர்களுக்கான தரவரிசையில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 7வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், நான்கு இடங்கள் முன்னேறி, 9வது இடம் பிடித்தார். 

இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில், இரண்டாவது இன்னிங்சில் அசத்திய இங்கிலாந்தின் மொயீன் அலி, நான்கு இடங்கள் முன்னேறி, முதன்முறையாக 33வது இடம் பிடித்தார். இந்தியாவின் அஷ்வின், ஒரு இடம் பின்தங்கி, 13வது இடத்தை பெற்றார். மற்ற இந்திய பவுலர்களான பிரக்யான் ஓஜா 15வது, இஷாந்த் சர்மா 20வது இடத்தில் உள்ளனர்.

ஐ.சி.சி., விதிமுறை மாற்றப்படுமா?

ஐ.சி.சி., விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரும் எவ்வித திட்டமும் இல்லை,’’ என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சீனிவாசன் தெரிவித்தார். 

இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா ‘தள்ளு’ விவகாரம் குறித்து விசாரித்த ஐ.சி.சி., கமிஷனர் கார்டன் லீவிஸ், போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி இருவரையும் விடுவித்தார். 

இதை எதிர்த்து ஐ.சி.சி., ‘அப்பீல்’ செய்ய வேண்டும் என்ற, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 

இதன் எதிரொலியாக, ஐ.சி.சி., நடத்தை விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கருத்து தெரிவித்திருந்தார். 

இது குறித்து ஐ.சி.சி., தலைவர் சீனிவாசன் கூறுகையில்,‘‘ வீரர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரும் எவ்வித திட்டமும் ஐ.சி.சி.,யிடம் இல்லை,’’ என்றார். 

ஜடேஜாவை மிரட்டிய ஆண்டர்சன்

ஆண்டர்சனின் அநாகரிக நடத்தை அம்பலமாகியுள்ளது. ரவிந்திர ஜடேஜாவின் பல்லை உடைத்து விடுவதாக மிரட்டியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டின்,  இரண்டாவது நாள் ஆட்ட உணவு இடைவேளை முடிந்து திரும்பிய போது, இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜாவை தள்ளி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, இரு அணிகள் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து விசாரித்த ‘மேட்ச் ரெப்ரி’ டேவிட் பூன்,  ஜடேஜாவுக்கு, போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) கமிஷனர் கார்டன் லீவிஸ் லுாயிஸ், இருவரையும் விடுவித்து அதிர்ச்சி தீர்ப்பு அளித்தார்.

சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில், ஆண்டர்சன் தனது தவறை ஒப்புக் கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் போர்டு வக்கீல் நடத்திய குறுக்கு விசாரணையின் போது, ஜடேஜாவை தள்ளி, பல்லை உடைப்பேன் என மிரட்டியதை ஒப்புக்கொண்டாராம். கிரிக்கெட் உணர்வுக்கு எதிராக செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், ‘வீடியோ’ ஆதாரம் இல்லாததால் தண்டனையில் இருந்து தப்பி விட்டார். இதனால், கேப்டன் தோனி உள்ளிட்ட பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

ராகுல் தயவில் சச்சினுக்கு பாரத ரத்னா

சச்சினுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கியதன் பின்னணியில் ராகுல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் சாதனை வீரர் சச்சின், 41. சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் அடித்தவர். 24 ஆண்டுகால கிரிக்கெட் திறமையை கவுரவிக்கும் வகையில், இவர் ஓய்வு பெற்ற (2013, நவ., 16) சில மணி நேரங்களில், நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. 

இவ்விருது மறைந்த ‘ஹாக்கி ஜாம்பவான்’ தியான்சந்த்துக்கு தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஓட்டு வங்கி அரசியலுக்காக இவரை புறக்கணித்துவிட்டு, கடைசி நேரத்தில் சச்சினை தேர்வு செய்ததாக சர்ச்சை எழுந்தது.

இதன் பின்னணியில் காங்., துணைத் தலைவர் ராகுல் இருந்ததாக தெரிகிறது.
அதாவது, 2013, நவ., 14ல் சச்சினின் கடைசி டெஸ்ட், மும்பையில் துவங்கியது. நாடு முழுவதும் இவருக்கு எழுந்த ஆதரவு அலையை ராகுல் தனக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பியுள்ளார். இதனை மனதில் வைத்து சச்சினின் ஆட்டத்தை பார்க்க மும்பை கிளம்பி இருக்கிறார்.

அப்போது பிரதமர் அலுவலகத்துடன் ‘பாரத ரத்னா’ விருது தருவது குறித்து பேசியுள்ளார். உடனே, சச்சின் குறித்த விவரங்களை அனுப்புமாறு, நவ., 14, மதியம்1.35 மணிக்கு, மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு, பிரதமர் அலுவலகம் ‘பேக்ஸ்’ அனுப்பியது.

மாலை 5.22 மணிக்கு சச்சினின் விவரங்களை பெற்றது பிரதமர் அலுவலகம். மறுநாள் (நவ.,15) அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இதற்கு ஒப்புதல் தரும்படி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ளார். அவரும் அன்றே கையெழுத்திட, நவ., 16ல் விருது குறித்து அறிவிப்பு வெளியானது.

இப்படி ராகுலின் தலையீடு இருந்ததால் தான், அவசர கதியில் வேலைகள் நடந்துள்ளதாக தெரிகிறது.