இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது. இப்போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கிறது. பிளின்டாப் காயத்தால் அவதிப்படுவது இங்கிலாந்துக்கு பெரும் சிக்கலாக உள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டிகள் முடிவில் இங்கிலாந்து 1-0 என்ற முன்னிலையில் உள்ளது. மிக முக்கியமான நான்காவது டெஸ்ட் இன்று ஹெடிங்லியில் துவங்குகிறது. இதில் வென்றால் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றி விடும். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பிளின்டாப் சந்தேகம்:இம்முறை ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் ஆதிக்கமே காணப்படுகிறது. லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வென்று முன்னிலை வகிக் கிறது. இன்று துவங்கும் நான்காவது டெஸ்டில் அணியின் நம்பிக்கை நாயகனான பிளின்டாப் இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது. வலது முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இவர், உடல்தகுதியில் தேறினால் மட்டுமே பங்கேற்பார். ஏற்கனவே பீட்டர்சன் இல்லாத நிலையில், பிளின்டாப்பும் விலகினால் பெரும் பின்னடைவு ஏற்படலாம். இவர் விலகும் பட்சத்தில் ஜோனாதன் டிராட், சைடுபாட்டம், ஹார்மிசன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
இது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் கூறுகையில்,""உடல்தகுதி இருந்தால் மட்டுமே பிளின்டாப் விளையாடுவார். இவரது நிலைமை பற்றி மருத்துவ குழு தான் முடிவு செய்யும். இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றுவோம்,''என்றார்.
பாண்டிங் ராசி: ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை ஹெடிங்லி மைதானம் மிகவும் ராசியானது. கடந்த 34 ஆண்டுகளில் இங்கு தோல்வியை சந்தித்தது இல்லை. தவிர கேப்டன் பாண்டிங் இந்த மைதானத்தில் இரண்டு முறை சதம் அடித்துள்ளார். காயத்தில் இருந்து குணமடைந்த பிரட் லீ இடம் பெறலாம். இதே போல விரல் காயத்தில் இருந்து மீண்ட விக்கெட் கீப்பர் பிராட் ஹாடினும் அணிக்கு திரும்ப உள்ளார். இப்போட்டி குறித்து பாண்டிங் கூறுகையில்,""ராசியான ஹெடிங்லி மைதானத்தில் விளையாட இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இங்கு தான் 1997ல் டெஸ்ட் போட்டிகளில் எனது முதல் சதத்தை அடித்தேன். நான்காவது போட்டியில் வென்று, தொடரில் சமநிலை பெற காத்திருக்கிறோம்,''என்றார்
0 comments:
Post a Comment