மீண்டும் "ஈடன் கார்டன்' சாதனை

கடந்த 2001ல் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டெஸ்டில், இரட்டை சதமடித்து வெற்றிக்கு வித்திட்டது போல, இம்முறை மீண்டும் சாதிப்பேன்,'' என, இந்திய வீரர் லட்சுமண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2001ல் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி 171 ரன்களுக்கு சுருண்டு, "பாலோ-ஆன்' பெற்றது.

பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு லட்சுமண் (281), டிராவிட் (180) கைகொடுத்தனர். இந்திய அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 657 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பின்னர் 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, 212 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது.

தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மொகாலியில் நாளை துவங்குகிறது.

இதுகுறித்து இந்தியாவின் அனுபவ பேட்ஸ்மேன் லட்சுமண் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். கடந்த 2001ல், கோல்கட்டா டெஸ்டில் 281 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டது போல, இம்முறை மீண்டும் சாதிப்பேன் என நம்புகிறேன். இதற்காக கடந்த இரண்டு வாரங்களாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். இப்பயிற்சியின் மூலம் எனது "பார்ம்' நல்ல நிலையில் இருப்பதை அறிந்து கொண்டேன்.

இதனால் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிக்கு கைகொடுப்பேன் என எதிர்பார்க்கிறேன். இத்தொடருக்கு பின் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகளுடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பதால், திறமையை நிரூபிக்க வேண்டும்.

இத்தொடர் சொந்த மண்ணில் நடப்பது சாதகமான விஷயம். இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதால், சவால் நிறைந்ததாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியில் திறமையான இளம் வீரர்கள் நிறைய இடம் பெற்றுள்ளனர். நிச்சயம் இவர்கள் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள். இருப்பினும் எதிரணி குறித்து அதிகம் சிந்திக்காமல், போட்டியில் நூறு சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இந்திய அணியின் பந்துவீச்சு பலமடைந்துள்ளது. ஜாகிர், ஹர்பஜன், இஷாந்த், பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா என சிறந்த பவுலர்கள் இடம் பெற்றுள்ளதால், எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதேபோல பேட்டிங்கில் சேவக், காம்பிர், டிராவிட், சச்சின், தோனி என முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருப்பது பலம்.

இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் பலமாக இருப்பதால் தொடரை வென்று சாதிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இவ்வாறு லட்சுமண் கூறினார்.

காமன்வெல்த்: குறைகளை சரிகட்டும் நேரம்

ஒலிம்பிக் போன்ற போட்டிகளை நடத்த வேண்டும் என்று இந்தியா இனி விரும்பினால் கூட, இந்த காமன்வெல்த் போட்டிகள் அதற்கு கரும்புள்ளியாக இருக்கும் என்பதால், விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ஊழல், நிர்வாகிகளிடையே ஒற்றுமையின்மை, சர்வதேச தரத்தில் அரங்குகளையும், தங்குமிடம் வசதிகளை செய்யாதது உள்ளிட்டவை, எதிர்காலத்தில், இந்தியாவுக்கு கெட்ட பேரை ஏற்படுத்தித் தருவதாக அமைந்துவிட்டன.

விளையாட்டைத் துவக்கி வைப்பது, இளவரசர் சார்லசா அல்லது இந்திய ஜனாதிபதியா என்ற கேள்விக்கு இன்று வரை விடை இல்லை. ஊழல் எனும் விஷயம்தான், ஏற்பாடுகளில் உள்ள குளறுபடிகளுக்கு காரணமாக விளங்குகின்றன.

உலகின் முக்கிய விளையாட்டான காமன்வெல்த் போட்டியை நடத்தும் பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. தலைநகர் டில்லியில், வரும் அக்.3 ம் தேதி முதல் 14 வரை நடக்க உள்ளது. இப்போட்டி (2010) நடத்தும் உரிமையை கடந்த 2003 ம் ஆண்டு போராடி பெற்றது இந்தியா.

மைதானக் கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட இப்போட்டிக்கான ஆயத்தப்பணிகளை செய்து முடிக்க, இடையில் 7 ஆண்டு காலம் இருந்தது. ஆனால் இக்காலக்கட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு அமைப்புகள் கடந்த ஆண்டு தான் கண் விழித்தன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், தரமற்ற பொருட்களை வைத்து மைதானங்கள் கட்டுப்பட்டுள்ளன. இதன் விளைவால்தான், முக்கியமான ஜவஹர்லால் மைதானத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது. இதனையடுத்து மைதானத்தின் வெளியே உள்ள நடைமேம்பாலம் அடியோடு இடிந்தது.

இதற்குப் பின் இங்குள்ள பளுதூக்குதல் மையத்தின் மேற்கூரை இடிந்தது. இச்சம்பவங்களில் டில்லி துணை கமிஷ்னர் உள்ளிட்ட 30 பேர் வரை காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காமன்வெல்த் போட்டி துவங்க 10 நாட்கள் இருந்த சமயத்தில் தான், இவை நடந்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக வீரர், வீராங்கனைகள் தங்க உள்ள விளையாட்டு கிராமத்தில் சுகாதாரம் இல்லை.

டில்லியில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட முன்னணி அணிகள் கலந்து கொள்ள சம்மதித்த போதும், முன்னணி வீரர், வீராங்கனைகள் விலகும் அவலம் தொடர்கிறது.

ஏன் இந்தப் பிரச்னை?:

கடந்த 1998 ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் காமன்வெல்த் போட்டி நடந்தன. அதற்குப் பின் ஆசிய கண்டத்தில் இந்தியாவில் தான், இப்போட்டி நடத்தப்பட உள்ளது. இப்பெருமை பெற்ற இந்தியாவால், அதனை சிறப்பாக நடத்திக் காட்டுவதில் ஏன் இந்தப் பிரச்னை என்பது புரியாத புதிராக உள்ளது. இந்தியாவுக்கு அந்தத் தகுதி இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

உலக வல்லரசுகளுக்கு அச்சுறுத்தலாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் தகுதியே உள்ளது என்பது தான் உண்மை. ஆனால் 3 காரணங்கள் இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகின்றன.

கடந்த 2008 ம் ஆண்டு சீனத் தலைநகர் பீஜிங்கில், ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. உலகமே வியக்கும் வகையில் போட்டிகளை நடத்திக் காட்டியது சீனா. ஆனால் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா திணறி வருகிறது. இதன் மூலம் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல் காரணம் ஊழல் தான். மைதானக் கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட எல்லாவற்றுக்குமே இரண்டாம் தரத்திலான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

காமன்வெல்த் போட்டிக்காக அரசு ஒதுக்கிய தொகையை, தங்களால் முடிந்த வரை பலரும் சுருட்டி உள்ளனர். ஆனால் செலவுக் கணக்கு மட்டும் எகிறிய வண்ணம் உள்ளது. உதாரணமாக கழிவறையில் பயன்படுத்தப்படும் டாய்லட் "பேப்பர்', 4000 ரூபாய்கு வாங்கப்பட்டுள்ளது. இது பலருக்கு அல்ல. ஒருவருக்கு மட்டும். அப்படியானால், சுமார் 8,500 வீரர், வீராங்கனைகள் விளையாட்டு கிராமத்தில் தங்க உள்ளனர். இதன் மதிப்பு 3.5 கோடி ரூபாயை எட்டுகிறது. இம்மாதிரி சம்பவம் எங்காவது நடக்குமா. இந்தியாவில் நடந்துள்ளது .

இரண்டாவதாக பயங்கரவாத அச்சுறுத்தல், மிகப் பெரிய பலவீனத்தை இந்தியாவுக்கு தந்துள்ளது. காமன்வெல்த் போட்டி நடக்க உள்ள நிலையில், கடந்த 19 ம் தேதி டில்லி, ஜூம்மா மசூதி அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தைவானை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இது டில்லி காமன்வெல்த் போட்டிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

இதனைக் காரணமாகக் கொண்டு பல வீரர்கள் காமன்வெல்த் போட்டிகளை புறக்கணித்துள்ளனர். கடந்த 2000 லிருந்து தற்போது வரை டில்லியில் 14 முறை, பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. காமன்வெல்த் போட்டிகள் நடக்க உள்ள நிலையில், முன்னணி அணிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை நீக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது மிகப் பெரிய பின்னடைவு.

மூன்றாவதாக இந்திய விளையாட்டு அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை. காமன்வெல்த் குளறுபடிகளுக்கு ஒவ்வொருவரும் மாறி, மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். போட்டி துவங்க இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில், குறைகளை சரிகட்டத்தான் முடியுமே தவிர, சரி செய்ய முடியாது.

காமன்வெல்த் போட்டி: வீரர்களை மிரட்டிய பாம்பு

காமன்வெல்த் போட்டியில் இன்னொரு அதிர்ச்சி. இம்முறை வீரர்கள் தங்கும் அறையில் பாம்பு ஓடுவதை பார்த்து, தென் ஆப்ரிக்க குழுவினர் மிரண்டு போயுள்ளனர். வீரர்களின் உயிரை பணயம் வைத்து, விளையாட்டு கிராமத்தில் தங்க முடியாது என, அதிரடியாக தெரிவித்துள்ளனர்.

டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி வரும் அக்டோபரில்( 3-14) நடக்க உள்ளது. இதற்காக சுமார் ரூ. 70 ஆயிரம் கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், பெருமளவு ஊழல் நடந்துள்ளது. தரமற்ற கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால், ஜவஹர்லால் நேரு மைதானத்தின் மேற்கூரை, நடைமேம்பாலம் போன்றவை இடிந்து விழுந்தன.

நிலைமை மோசம்:

தவிர, போட்டியில் பங்கேற்கும் 71 நாடுகளை சேர்ந்த 8, 500 வீரர், வீராங்கனைகள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விளையாட்டு கிராமமும் அசுத்தமாக உள்ளது. கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன. வீரர்கள் தங்குவதற்கான அறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. ஓய்வு எடுப்பதற்காக உட்கார்ந்தாலே, படுக்கை நிலைகுலைந்து போகிறது.

"வயரிங்', "பிளம்பிங்' பணிகள் முழுமையாக முடிக்கப்படாததால், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருப்பதால், கொசுக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனால், டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி, விளையாட்டு கிராமத்தின் நிலைமை படுமோசமாக இருப்பதால், இங்கு வருவதற்கு பயந்த நட்சத்திர வீரர்கள், போட்டியில் இருந்து விலகினர்.

ஆப்ரிக்கா அச்சம்:

இந்தச் சூழலில், தென் ஆப்ரிக்க குழுவினர் மட்டும் விளையாட்டு கிராமத்தில் தங்க சம்மதம் தெரிவித்தனர். ஆனால், இவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. இந்த நாட்டின் வீரர்கள் தங்குவற்காக ஒதுக்கப்பட்ட அறையில் பாம்பு ஒன்று ஓடுவதை பார்த்துள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இது குறித்து தென் ஆப்ரிக்க தூதர் ஹாரிஸ் மபுலேலா மஜேக் கூறியது:

எங்களது அறையில் பாம்பு ஒன்றை பார்த்தோம். இது இந்திய வகையை சேர்ந்ததா என்பது பற்றி தெரியாது. பாம்பு இருக்கும் அறையில், எங்கள் வீரர்களை தங்க சொல்ல இயலாது. அவர்களது உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது மிகுந்த கவலை அளிக்கிறது. தவிர, தரைப்பகுதி முழுவதும் நீர் நிரம்பியுள்ளது. மேற்கூரையும் ஈரப்பதமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக , அறைகளின் நிலைமை மோசமாக உள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் வரை, விளையாட்டு கிராமத்தில் தங்க முடியாது.

தற்போதைக்கு போட்டியில் இருந்து விலகும் உத்தேசம் இல்லை. அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்பட்ட பின், எங்களது வீரர்கள் போட்டியில் பங்கேற்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகரற்ற வீரர் சச்சின்

ஐ.சி.சி., விருதுகளை வைத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை அளவிட முடியாது. அவர் நிகரற்ற வீரர்,'' என, யுவராஜ் தெரிவித்தார்.


கிரிக்கெட் அரங்கில் 20 ஆண்டுகளாக அசத்தி வருகிறார் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் (169 போட்டி, 13837 ரன்கள்) மற்றும் ஒரு நாள் போட்டிகளில் (442 போட்டி, 17598 ரன்கள்) அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தவர். பல்வேறு சாதனைகளை படைத்தும், இதுவரை "கிரிக்கெட் ஆஸ்கர்' என அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விருது இன்னும் பெற வில்லை.இது குறித்து சக வீரர் யுவராஜ் சிங் கூறியது: ஐ.சி.சி., விருது களை அடிப்படையாக வைத்து சச்சினை எடை போட முடியாது. கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை சச்சின் படைத்து விட்டார். அவரை யாரோடும் ஒப்பிட முடியாது. சச்சினுக்கு நிகர் சச்சின் தான்.


இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும். டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' அணியாக இந்தியா உள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிட முடியாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளித்தது. இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.


சச்சினுக்கு வாய்ப்பு:இதுவரை ஐ.சி.சி., விருது பெறாத சச்சின், இந்த ஆண்டு இப்பெருமை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த டெஸ்ட் மற்றும் சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரர் பரிந்துரை பட்டியலில் சச்சின் பெயர் இடம் பெற்றுள்ளது. வரும் அக். 6 ம் தேதி பெங்களூருவில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் சச்சினுக்கு அதிக வாய்ப்பு உள்ளது

இந்திய அணிக்கு நெருக்கடி: கங்குலி

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் (2011), இந்திய அணிக்கு கடும் நெருக்கடி காத்திருக்கிறது, என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.


அடுத்த ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடரை (50 ஓவர்), இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் இணைந்து நடத்துகின்றன. பிப்ரவரி 19 ம் தேதி தொடர் துவங்குகிறது. பைனல் போட்டி ஏப். 2 ல் நடக்கிறது.கடந்த 1983 ம் ஆண்டு உலககோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று சாதித்தது.


அதற்குப் பின் நடந்த 6 உலககோப்பை தொடர்களில் இந்திய அணி கோப்பை கைப்பற்ற வில்லை. அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடக்க உள்ள உலககோப்பை தொடரில், கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணியாக இந்தியா கருதப்படுகிறது.


ஆனால் இது மிகவும் சிரமம் என்கிறார் முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி. இது குறித்து இவர் கூறியது: சொந்த மண்ணில் உலககோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணிக்கு நெருக்கடி அதிகம். உள்நாட்டு ரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பு, இந்திய அணி வீரர்களுக்கு மனதளவில் நெருக்கடியை எற்படுத்தும்.


இத்தொடரில் எந்த அணி கோப்பை வெல்லும் என்பதை கணிப்பது சிரமம். கோப்பை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உண்டு. இந்திய அணியில் சச்சின், சேவக், தோனி, யுவராஜ், காம்பிர் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் அணியின் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது. இருப்பினும் உலககோப்பைக்குள் அணியின் பந்து வீச்சு பலப்படும் என எதிர்பார்க்கிறேன்.


சச்சின் பலம்: இந்திய அணிக்கு சச்சின் தான் பலம். கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் சச்சின், பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இந்த முறை இந்திய அணிக்கு அவர் உலககோப்பை பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

சவாலான இந்திய தொடர்

வலிமையான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், எப்போதுமே சவால் நிறைந்தது,'' என, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.


இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. வரும் 25ம் தேதி இந்திய பிரசிடென்ட் லெவன் அணியுடன், 3 நாள் பயிற்சி போட்டியில் விளையாடுகிறது.


இத்தொடர் குறித்து ஜான்சன் கூறியது:இந்திய அணிக்கு சச்சின், டிராவிட் மற்றும் சேவக், பேட்டிங் வரிசையிலும், பவுலிங்கில் ஹர்பஜனும் வலு சேர்க்கின்றனர். இவர்களுக்கு எதிராக விளையாடுவதே, மிகவும் சவாலானது. மற்றபடி ரேங்கிங் குறித்தெல்லாம் எங்களுக்கு கவலையில்லை.


இளம் பவுலர்கள்: இம்முறை பீட்டர் ஜார்ஜ், ஜேம்ஸ் பட்டின்சன், மைக்கேல் ஸ்டிராக் என இளம் பவுலர்கள் வந்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் சிறப்பாக விளையாடுவதற்கு தேவையான ஆலோசனைகளை அளித்து வருகின்றேன். இத்தொடரின் மூலம் அவர்கள் நிறைய கற்றுக்கொள்வார்கள்.


வெற்றி உறுதி: இந்திய ஆடுகளங்களில் பந்து அதிகமாக "பவுன்ஸ்' ஆகாது. தவிர, வெப்பமும், ஈரப்பதமும் நிறைந்தது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிக்கலை கொடுக்கும். இருந்தாலும் எப்படியும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெறுவோம் என உறுதியாக கூறுகிறேன்.


பாதுகாப்பு திருப்தி: இப்போதெல்லாம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என பலவித கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கின்றனர். இதனால் குறிப்பிட்ட இடைவெளியில், வீரர்களுக்கு அணி நிர்வாகம் ஓய்வு தரவேண்டும். தவிர, இந்தியாவில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு திருப்தி தருகிறது. நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். இவ்வாறு ஜான்சன் கூறினார்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: வாரியர்ஸ் அணிக்கு வெற்றி இலக்கு 137

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கிரி‌க்கெட் டுவென்டி- 20, போட்டியின் 20 வது ‌தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வாரியர்ஸ் அணியும் மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி களமிறங்கிய ‌சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்‌கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது.

ஐ.பி.எல். புதிய விதி தெண்டுல்கர் அதிருப்தி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற 8 அணியும் வீரர்களை பல கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தன.

முதல் ஐ.பி.எல். போட் டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2-வது ஐ.பி.எல். போட்டியில் டெக்கான் சார்ஜாஸ் அணியும், 3-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும் சாம்பியன் பட்டம் பெற்றன.

4-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்தப் போட்டியில் கூடுதலாக கொச்சி, புனே அணிகள் பங்கேற்கின்றன. 10 அணிகள் பங்கேற்பதால் 4-வது ஐ.பி.எல். போட்டி அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே விளையாடிய வீரர்களின் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களே மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்றும், மற்ற வீரர்கள் அனைவரும் புதிதாக ஏலத் தில் விடப்படுவார்கள் என்றும் விதியில் தெரிவிக்கப்பட்டது.

ஐ.பி.எல்.லின் இந்த புதிய விதிக்கு தெண்டுல்கர் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அனைத்து அணிகளும் ஏற்கனவே விளையாடிய வீரர்களையே வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்களை புதிதாக ஏலத்தில் விடும் முடிவு சரி யானது இல்லை.

மும்பை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடி வருகிறார்கள். இதனால் கடந்த முறை 2-வது இடத்தை பிடிக்க முடிந்தது. எங்களது கடின உழைப்பால் முன் னேறினோம். புதிதாக அணி வீரர்களை ஒருங்கிணைப்பது என்பது கடினம்.

இவ்வாறு அவர் கூறினார். ஐ.பி.எல். போட்டியின் புதிவிதிகள் குழப்பம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி., விருது: சச்சினுக்கு வாய்ப்பு

ஐ.சி.சி., விருதுக்கான இறுதிப் பட்டியலில் சச்சின், சேவக் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பெங்களூருவில் அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கிறது. இதில் ஒன்பது வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.


இதில், ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் டெஸ்ட் வீரர் என இரண்டு பிரிவுகளில் சச்சின், சேவக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் சச்சின் இடம் பெற்றுள்ளார். இவருக்கு ஏதாவது ஒரு விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. கேப்டன் தோனி, இறுதி பட்டியலில் எந்த ஒரு விருதுக்கும் தேர்வு செய்யப்படவில்லை.


சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பட்டியலில் இங்கிலாந்தின் சுவான், சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டைன் இடம் பிடித்துள்ளனர். சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், ஆஸ்திரேலியாவின் வாட்சன், ரேயான் ஹாரிஸ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
சிறந்த "டுவென்டி-20' போட்டி வீரருக்கான பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி, இலங்கையின் மகிலா ஜெயவர்தனா, தென் ஆப்ரிக்காவின் ரேயான் மெக்லாரன், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸி. தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், யுவராஜ் நீக்கப்பட்டுள்ளார்.


இன்று வெளியிடப்பட்ட 15 பேர் கொண்ட பட்டியலில், புஜாராவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.


யுவராஜ் நீக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "இதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. ஆட்டத்திறன் மற்றும் உடல்தகுதியை மட்டுமே கருத்தில் கொண்டு வீரர்கள் தேரவு செய்யப்பட்டுள்ளனர்." என்றார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடர் மொஹாலியில் அக்டோபர் 1-ம் தேதி தொடங்குகிறது.


அணி வீரர்கள்:


எம்.எஸ். டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், ராகுல் திராவிட், சச்சின் தெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமன், ரெய்னா, ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, ஜாகீர்கான், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், பிரக்யான் ஓஜா, எம். விஜய், புஜாரா

சடுகுடு சக்கரவர்த்தி

கபடி என்று அழைக்கப்படும் சடுகுடு விளையாட்டு தமிழகத்தில்தான் உருவானது என்றாலும் இந்த விளையாட்டு இந்தியா முழுவதும் குறிப்பாக கிராமங்களில் அதிகம் விளையாடப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் தெற்காசிய நாடுகளிலும் ஜப்பான், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இந்த விளையாட்டு பரவியுள்ளது.

வங்கதேச நாட்டின் தேசிய விளையாட்டாகவும், இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மாநில விளையாட்டாகவும் உள்ளது கபடி. தமிழர் விளையாட்டான கபடியில் இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களைக் காட்டிலும் பஞ்சாபியர்கள் அதிகம் ஈடுபாடு கொண்டுள்ளனர். பஞ்சாபைச் சேர்ந்த பலர் இந்த விளையாட்டில் சாதனை நிகழ்த்தியுள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர் பல்வீந்தர் சிங் ஃபித்தா.


1956-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தில் பிறந்தார் பல்வீந்தர். தனது 4-வது வயது முதலே கபடி விளையாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் அவர். சிறந்த கபடி வீரராக வர வேண்டும் என்ற லட்சியத்துடன் தீவிரமாக பயிற்சி எடுத்து போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். கபடியின் மைந்தன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் பல்வீந்தர் தனது பள்ளி மற்றும் கல்லூரி நாள்களில் பல போட்டிகளில் பங்கேற்று வியத்தகு வெற்றிகளை குவித்தார்.


1973-ம் ஆண்டு முதல் முதலாக தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கபடிப் போட்டியில் பங்கேற்று விளையாடினார். தனது முதல் தேசிய போட்டியிலேயே தன் தனித்திறமையால் அவர் பங்கேற்ற அணியை தங்கப் பதக்கம் பெற வைத்தார் பல்வீந்தர் சிங்.


பின்னர் கல்லூரி வாழ்க்கையிலும் பல போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் படைத்தார். 1973-ம் ஆண்டுக்கும் 1991-ம் ஆண்டுக்கும் இடையே நடந்த 18 தேசிய கபடி போட்டிகளில் பங்கற்ற பல்வீந்தர் 10 போட்டிகளில் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அது மட்டுமல்ல, பல்வேறு சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போட்டிகளிலும் அவர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


பஞ்சாப் மாநில காவல்துறையில் பணிபுரியும் பல்வீந்தர் அந்த அணிக்காக விளையாடினார். 1977-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் கபடி போட்டியில் பல்வீந்தரின் தனித் திறமையால் பஞ்சாப் அணி 22 தங்கப் பதக்கங்களை வென்றது.


1982-ம் ஆண்டு தில்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் பங்கேற்ற இந்திய கபடி அணி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. 1984-ம் ஆண்டு நடந்த ஆசிய கபடிப் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக களமிறங்கிய பல்வீந்தர் தனது அணியை தங்கப் பதக்கம் பெற வைத்தார்.


1989-ம் ஆண்டு இஸ்லாமாபாதில் நடைபெற்ற தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியன் கேப்டனாக களமிறங்கினார் பல்வீந்தர். அந்தப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.


25-ம் ஆண்டுகளுக்கும் மேலாக கபடியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய பல்வீந்தர் சிங் ஃபித்தா 1997-ம் ஆண்டு கபடி விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கபடி விளையாட்டில் அவரது சாதனைகளைப் பாராட்டும் விதமாக 1999-ம் ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு.

கிரிக்கெட்டை சீர்குலைக்கும் சூதாட்டம்

கிரிக்கெட்டுக்கு "ஜென்டில் மேன்' விளையாட்டு என்ற பெயர் உள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சம்பளம் அதிகம். ஒரு போட்டிக்கு 2 லட்சம் வரை வீரர்கள் சம்பாதிக்கிறார்கள்.

தவிர, விளம்பர வருமானம் கோடிக் கணக்கில் கொட்டுகிறது. இவ்வளவு பணம் சம்பாதித்தும், ஒரு சில கிரிக்கெட் வீரர்களுக்கு இது போதவில்லை. "மேட்ச் பிக்சிங்', "ஸ்பாட் பிக்சிங்' என பல சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் ஒரே போட்டியில், பல கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். பார்ம் இருந்தால் மட்டுமே, கிரிக்கெட் விளையாட முடியும். தவிர, அணியிலும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் அணியில் வாய்ப்பு கிடைக்கும் சமயத்திலேயே சூதாட்டத்தில் ஈடுபட்டு வருமானத்தை பெருக்கிக் கொள்ள நினைக்கின்றனர்.

பாக்., அதிகம்:

ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட முன்னணி அணிகளை சேர்ந்த வீரர்கள், பல்வேறு சமயங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். சூதாட்டத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் அணி பாகிஸ்தான் தான். . இந்த அணி வீரர்கள் அடிக்கடி சூதாட்டத்தில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்குகின்றனர்.

இருப்பினும் சூதாட்டத்தை விட்டுவிட மனதில்லை. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த டெஸ்ட், இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர், வாஹப் ரியாஸ் உள்ளிட்ட இளம் வீரர்கள் தான் சூதாட்டத்தில் சிக்கியுள்ளனர்.

பயம் இல்லை:

இளம் வயதில் சிறப்பாக ஆடி, பிரகாசமான எதிர்காலத்தை எட்ட, இம்மாதிரியான வீரர்களுக்கு ஆசை இல்லை. ஒரு சில போட்டிகள் விளையாடினாலும், சூதாட்டத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே இவர்களது விருப்பமாக உள்ளது. இதனால் எந்தப் பிரச்னை பற்றியும் கவலைப்படாமல், சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

உலக கிரிக்கெட்டை நிர்வகிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) மெத்தனப் போக்கும் இதற்கு முக்கிய காரணம். ஐ.சி.சி., சார்பில் செயல்பட்டு வரும் ஊழல் கண்காணிப்பு குழு, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செயல்பட வில்லை. மீடியாக்கள் சூதாட்டப் பிரச்னையை கிளப்பிய பின்னரே, ஊழல் கண்காணிப்பு குழு செயல்படத் துவங்கி உள்ளது.

இதனால் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கும் துளி அளவும் பயம் ஏற்படுவது கிடையாது. தவிர, சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை.

கடுமையான தண்டணை:

சூதாட்டப் பிரச்னையில் ஈடுபடும் வீரர்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். பல்வேறு கட்டங்களில் விசாரணை நடத்துவதை விட்டுவிட்டு, உடனடியாக தண்டனை வழங்க வழிவகø செய்ய வேண்டும். ஐ.சி.சி., மற்றும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் போர்டுகள் இதில் துரிதமாக செயல்பட வேண்டும். அப்போது தான், கிரிக்கெட் மீதான மக்களின் ஈர்ப்பு இனி வரும் காலங்களில் நிலை நிற்கும்.

நாட்டுப்பற்று அவசியம்:

எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட் வீரர்களுக்கு நாட்டுப்பற்று மிகவும் அவசியம். பணத்துக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்த்து, தாய்நாட்டின் வெற்றிக்காக போராடும் குணம் வேண்டும். அப்போது தான் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

சாம்பியன்ஸ் `லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.இன்று நடந்த 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- வயம்பா (இலங்கை) அணிகள் மோதின.


இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது.


அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 44 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்சருடன் 87 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் 46 பந்துகளில் 9 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 68 ரன்கள் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய வயம்பா அணி 17.1 ஓவரில் 103 ரன்களுக்கு அல் அவுட்டானது.


இதையடுத்து சென்னை அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கருணாநாயகே 31 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 25 ரன் எடுத்தார்

மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ரவுண்டர்...

கிரிக்கெட்டில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் மேற்கிந்தியத் தீவுகளின் கார்ல் ஹுப்பர்.

21 ஆண்டுகள் அந்த அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். ÷ஹுப்பர் கயானாவில் உள்ள பிரிட்ஜ்டவுனில் 1966-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி பிறந்தார். தொடக்கத்தில் கயானா அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார்.

பின்னர் 1987-ம் ஆண்டு தேசிய அணியில் இடம் பிடித்தார்.1987-ம் ஆண்டு மார்ச்சில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதன் முறையாக களமிறங்கினார் ஹுப்பர். அதே ஆண்டு டிசம்பரில் மேற்கிந்திய தீவுகள் -இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

ஒரு நாள், டெஸ்ட் என இரண்டு போட்டிகளிலும் சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தார். 2001-ல் இந்தியாவுக்கு எதிரான தொடரில் 233 ரன்கள் எடுத்ததே டெஸ்ட் போட்டியில் ஹுப்பரின் அதிகபட்ச ரன்களாகும். ஒரு நாள் போட்டிகளில் அவரது அதிகபட்ச ரன் 133*.

இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட் போட்டியில் கென்ட், லங்காஷையர் அணிகளுக்காக விளையாடி உள்ள ஹுப்பர், கவுன்ட்டி கிரிக்கெட்டின் 18 அணிகளுக்கு எதிராகவும் சதமடித்தவர் என்ற பெருமைக் குரியவர்.

மேலும், 100 ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 5,000 ரன்கள், 100 விக்கெட்டுகள், 100 கேட்சுகள் பிடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் உரியவர் ஹுப்பர். பின்னர் இந்தச் சாதனையை தென்னாப்பிரிக்காவின் ஜேக்கஸ் காலிஸ் சமன் செய்தார்.

முன் கள பீல்டிங்கில் அசைக்க முடியாதவராக விளங்கினார் கூப்பர். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் கூறுகையில், தான் விளையாடிய காலங்களில் சிறந்து விளங்கிய பேட்ஸ்மேன்களில் கார்ல் ஹுப்பர் மறக்க முடியாதவர் என தெரிவித்தார்.

2002-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,762 ரன்களும், 277 ஒரு நாள் போட்டிகளில் 5,761 ரன்களும் எடுத்துள்ளார்.

இதில் 20 சதங்கள், 56 அரை சதங்கள் அடங்கும். ÷மொத்தம் 307 விக்கெட்டுகள், 235 கேட்சுகளையும் பிடித்துள்ளார் கார்ல் ஹுப்பர்

சூதாட்டத்தில் 29 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில், 29 கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


லண்டனில் இருந்து வெளிவரும் "த சண்டே டைம்ஸ்" பத்திரிகையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.


ஐசிசி.,யின் ஊழல் தடுப்பு பிரிவு தயாரித்த இந்த முறைகேடு பட்டியலில் பல பிரபல வீரர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் இல்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


சில சூதாட்ட முறைகள் மர்மமான முறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிக முறை "டக்' விக்கெட் எடுத்தவர்

கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக வீரர்களை (104) டக் அவுட் ஆக்கியவர் என்ற சாதனைக்குரியவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரத். வசீகரமான மிதவேகப் பந்து வீச்சின் மூலம் எதிரணி வீரர்களையும் கவர்ந்தவர்.

மெக்ரத், ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ செüத்வேல்ஸில் 1970-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி பிறந்தார். 1993-ல் நியூ செüத்வேல்ஸ் அணிக்காக முதன் முறையாக கிரிக்கெட்டில் களமிறங்கினார். அதற்கு அடுத்த ஆண்டே ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடித்தார்.


1993 நவம்பரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா- நியூசிலாந்து டெஸ்ட் தொடரே மெக்ரத்துக்கு முதல் சர்வதேச போட்டியாகும். அதே ஆண்டு டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கினார்.


1995-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா வென்றது. வேகப் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தி வந்த, மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சாளர்களே வியக்கத்தகும்
வகையில் அந்த தொடரில் மெக்ரத் சிறப்பாக பந்து வீசினார்.


தனது அசாதாரணமான பந்து வீச்சின் மூலம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளராக பரிமளித்தார்.


100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை 2004-ம் ஆண்டு மெக்ரத் பதிவு செய்தார். 2005-ம் ஆண்டு நடந்த ஐ.சி.சி. சூப்பர் சீரியஸ் போட்டியில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். முதல் மூன்று இடங்களிலும் உள்ளவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் (முரளீதரண், வார்னே, கும்ப்ளே).


2005-ம் ஆண்டு நடந்த ஆஷஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில், மார்கஸ் டிரெஸ்கோதிக்கை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.


2006 டிசம்பரில் தொடங்கிய அடுத்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை படுதோல்வி அடையச் செய்தது. இந்த வெற்றியில் மெக்ரத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் 21 விக்கெட்டுகளை மெக்ரத் வீழ்த்தினார். 2007-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தோடு கிரிக்கெட்டிலிருந்து மெக்ரத் ஓய்வு பெற்றார்.


124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 563 விக்கெட்டுகளையும், 250 ஒரு நாள் போட்டிகளில் 381 விக்கெட்டுகளையும் மெக்ரத் வீழ்த்தியுள்ளார். பீல்டிங்கிலும் மெக்ரத் சிறந்து விளங்கினார். 6 அடி 5 அங்குல உயரம் கொண்ட மெக்ரத், பந்தை சரியாக த்ரோ செய்வதில் வல்லவர்.


மேலும், ஒரே பேட்ஸ்மேனை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற சாதனைக்கும் உரியவர் மெக்ரத். இங்கிலாந்தின் மைக் ஆதெர்டனை மட்டும் 19 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.


2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.


மெக்ரத்துக்கு ஜேம்ஸ், ஹோலி என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி ஜேன் லூயிஸ் புற்றுநோய் காரணமாக 2008-ம் ஆண்டு உயிரிழந்தார். மெக்ரத், தன் மனைவியுடன் சேர்ந்து துவக்கிய மெக்ரெத் அறக்கட்டளை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வுக்கு நிதிதிரட்டும் சேவையில் ஈடுபட்டுள்ளது.

அர்ப்பணிப்புடன் விளையாடுகிறேன்: சச்சின்

கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்த நாள் முதல், இன்று வரை அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடி வருகிறேன்,'' என, சச்சின் தெரிவித்தார்.


சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்றுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின். இத்தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த உள்ள இவர், கோப்பை வெல்ல காத்திருக்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருவது குறித்து சச்சின் கூறியது: நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த நாள் முதலாக, இன்று வரை அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறேன். நான் கிரிக்கெட்டை மதிக்கிறேன். எங்கே சென்று விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. தரமான போட்டிகள் எங்கு நடந்தாலும், அங்கு சென்று திறமை வெளிப்படுத்த விரும்புகிறேன்.


சாம்பியன்ஸ் லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன். அதை விட இந்தியாவுக்காக விளையாடுவது தனிச் சிறப்பு. மும்பையும், இந்தியாவும் இணையும் போது, மும்பை இந்தியன்ஸ் உருவாகிறது. இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சில் சிறந்தவர்

ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சு முறையின் மூலம் கிரிக்கெட்டில் தனி முத்திரைப் பதித்தவர் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ்.

தான் விளையாடிய காலங்களில் சக வீரர் வாசிம் அக்ரமுடன் ஜோடி சேர்ந்து எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வெஹாரியில் 1971-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி பிறந்தார் யூனிஸ். ஒரு நாள் போட்டியில் 416 விக்கெட்டுகள், டெஸ்ட் போட்டியில் 373 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் என்றும் நினைவுகூரத்தக்க வீரராக விளங்குகிறார்.

1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியே, யூனிஸின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். இதே ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரும் முதல் முறையாக களமிறங்கினார் என்பது கூடுதல் சிறப்பம்சம். முதல் ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் யூனிஸ். டெண்டுல்கர், கபில்தேவ் விக்கெட்டுகளும் இதில் அடங்கும்.

தொடர்ந்து தனது வேகப் பந்து வீச்சு மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் கிரிக்கெட் உலகில் சிறப்பிடம் பெற்றார். புரேவாலா எக்ஸ்பிரஸ், விக்கி என சிறப்பு பெயர்களும் அவருக்கு உண்டு. இன்ஸ்விங் யார்க்கர் முறையிலும் சிறந்து விளங்கியவர் யூனிஸ்.

1993-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மணிக்கு 153 கி.மீ. வேகத்தில் பந்து வீசியதே அவரது அதிகபட்ச பந்துவீச்சு வேகமாகும். 1992-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் சிறப்பான வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சு குறித்து இங்கிலாந்து பத்திரிகைகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பின. பின்னர், இந்த சர்ச்சை தவறானது என நிரூபிக்கப்பட்டது.

2000 முதல் 2003-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியின் கேப்டனாக யூனிஸ் பொறுப்பேற்றிருந்தார். 2003-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தொடர்ச்சியாக மூன்று ஒரு நாள் ஆட்டங்களில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனைக்குரியவர் யூனிஸ். 1992-ம் ஆண்டு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருது யூனிஸýக்கு வழங்கப்பட்டது.

பந்து வீச்சில் யூனிஸýக்கு இருந்த திறமையை கருத்தில் கொண்டு 2006-ம் ஆண்டில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2010 பிப்ரவரியில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

யூனுஸýக்கு இடது கை சிறுவிரல் கிடையாது. அவர், ஒரு சமயம் நீச்சலில் ஈடுபட்ட போது இடது கையில் அடிபட்டு சிறுவிரல் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிக எதிர்பார்ப்பில் சச்சின்

இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக, பல தனியார் அமைப்புகள் இணைந்து செயல்படுகிறது.

இவர்கள் இணைந்து வரும் செப்., 26 முதல் அக்., 2 வரை, "கொடுத்து மகிழுங்கள்' (ஜாய் ஆப் கிவ்விங்) என்ற தேசிய இயக்கம் மூலம் பெருமளவு உதவியை திரட்ட உள்ளனர். இதன் தூதராக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்திய கிரிக்கெட்டின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1989, நவ.,15ம் தேதி சச்சின் இந்திய அணியில் அறிமுகமானார். தொடர்ந்து அசத்தல் பேட்ஸ்மேனாக நீடித்து மாஸ்டர் பேட்ஸ்மேனாக உருவெடுத்த, இவர் எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர். தனிப்பட்ட முறையில் 200 குழந்தைகளுகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கும் இவர் உதவி வருகிறார்.

இதுதவிர, கடந்த ஆண்டு "கொடுத்து மகிழுங்கள்' என்ற தேசிய அமைப்புடன் இணைந்தும் பெருமளவு உதவிகள் குவிய வழிவகுத்தார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இதன் தூதராக நியமிக்கப்பட்ட சச்சின் இதுகுறித்து அவர் கூறியது:

கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சிக்காக நான் கிரிக்கெட் முகாம் நடத்தினேன். இதில் என்னுடன் நேரத்தை செலவிட அதிக அளவில் ஏலம் கேட்ட, 25 முதல் 30 பேர்கள் பங்கேற்றனர். இதில் பாதி இளைஞர்கள், பாதி வயதானவர்கள். அவர்களுடன் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன்.

பேட்டிங்கின் போது எதிர் முனையில் (22 மீ.,தொலைவு) இருந்து 137 கி.மீ., வேகம் முதல் பல வேகங்களில் வரும் பந்தை எதிர்கொள்வது குறித்து கூறினேன். ஆனால் அவர்கள் அதை நம்பவில்லை. மொத்தத்தில் இந்த முகாம் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தது. ஆனால் இதை மிகைப்படுத்தி விட்டனர்.

இப்போதும் உண்டு:

இந்த ஆண்டு தான் என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஏனெனில் விரைவில் <உலக கோப்பை உட்பட பல தொடர்கள் வரவுள்ளது. இதனால் நேரம் கிடைப்பது கடினம். இருப்பினும் மக்கள் பலரும் என்னுடன் நேரத்தை செலவிட ஆர்வமாக உள்ளனர். அவர்களுடன் கிரிக்கெட்டை பகிர்ந்து கொள்ள மீண்டும் சிறிய அளவில் முகாம் நடத்த உள்ளேன்.

அதிக எதிர்பார்ப்பு:

ஆனால் இம்முறை அதிக அளவில் தொகையை எதிர்பார்க்கிறேன். அதாவது என்னுடன் நேரம் செலவிட விரும்புவர்கள் அதிக அளவில் ஏலம் கேட்க வேண்டும். ஏனெனில் இந்த ஆண்டு அதிகபட்ச இலக்கு வைத்துள்ளோம். இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதிலும் <உள்ளவர்கள் உதவ வேண்டும். அப்போது எங்களால் பெரிய இலக்கை அடைய முடியும்.

உங்களால் முடியும்:

இந்நிகழ்ச்சி மூலம் நமது மக்களுக்கு <உதவ, உங்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு தான் தர வேண்டும் என்று யாரையும் சொல்ல மாட்டேன். <ஒரு லட்சம், ஆயிரம், நூறு அல்லது ஐம்பது ரூபாய் என உங்களால் முடிந்த அளவுக்கு நன்கொடை கொடுத்து <உதவுங்கள். இதனால் உதவி பெறுபவர்கள் முகத்தில் புன்னகையை காணலாம். இது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும்.

அதிக ஈடுபாடு:

கிரிக்கெட்டின் மீது தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறேன். எனது பள்ளி நாட்களில் இருந்து இப்போது வரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டுள்ளேன். தவிர, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவும் நிறைவேறியது. மீதமுள்ள நேரங்களில் இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு <உதவுவது மகிழ்ச்சி தான்.

விவரிக்க முடியாது:

இதேபோல மைதானத்தில் என்னை பாராட்டி, எனது பெயரை உச்சரிக்கும் போதும் மகிழ்ச்சி ஏற்படும். இதை விவரிப்பது என்பது மிகவும் கடினமானது. இதுபோன்ற செயல்கள் தான் கிரிக்கெட் வீரரின் வளர்ச்சிக்கு உதவும். அவர்களை எப்போதும் சிறப்பாக சாதிக்க தூண்டும்.
ஓய்வு இல்லை:

கிரிக்கெட்டில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை. ஒருவேளை அப்படி ஒரு திட்டம் இருந்தால், உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன். தற்போதைக்கு கிரிக்கெட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறேன். மற்றபடி வேறு எந்த எண்ணமும் இல்லை.
இவ்வாறு சச்சின் கூறினார்.