மீண்டும் யுவராஜ் சிங் - ஆஸி., தொடருக்கு தேர்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் யுவராஜ் சிங், மீண்டும் இடம் பிடித்தார்.
 இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒரே ஒரு சர்வதேச "டுவென்டி-20' மற்றும் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் வரும் 10ல் ராஜ்கோட்டில் துவங்குகிறது. 

ஒரு "டுவென்டி-20', மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு சென்னையில் இன்று அறிவித்தது. 

இதில், சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் "ஏ', சாலஞ்சர் டிராபி தொடரில் அசத்திய யுவராஜ் சிங், எதிர்பார்த்தது போல 9 மாத இடைவேளைக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

சமீபத்தில் நடந்த ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்ற புஜாரா, தினேஷ் கார்த்திக், ரகானே, மோகித் சர்மா, பர்வேஸ் ரசூல், உமேஷ் யாதவ் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டனர். அமித் மிஸ்ரா, அம்பதி ராயுடு, முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்கத் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றனர். 

அணி விவரம்: தோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவிந்தர ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, வினய் குமார், அமித் மிஸ்ரா, அம்பதி ராயுடு, முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்கத். 

தோனி,சச்சினை முந்தும் கோஹ்லி



விளம்பர வருமானத்தில் தோனி, சச்சினை முந்தினார் இளம் வீரர் விராத் கோஹ்லி. இவர், விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் ஜெர்மனி நிறுவனத்துடன் ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது.

இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 25. கடந்த 2008ல் இந்திய அணிக்கு 19 வயது உலக கோப்பை வென்று தந்தார். இவரது சிறப்பான பேட்டிங் தொடர, மிக விரைவில் துணைக் கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக அசத்திய கோஹ்லி, ஒருநாள் தொடரை முழுமையாக வென்று, இந்திய அணி கோப்பை கைப்பற்ற உதவினார். 


இயற்கை வரம்:

அழகான உடல் அமைப்பு, கவர்ச்சிகரமான பார்வை, சிறப்பான அணுகுமுறையால் மைதானத்துக்கு வெளியிலும், வெற்றிகரமாக ஜொலிக்கிறார். கிரிக்கெட்டில் கிடைக்கும் ஓய்வுகளை வீணடிக்காத இவர், மொபைல் போன், டொயோட்டா, பெப்சி உள்ளிட்ட 13 பொருட்களுக்கு மாடலாக தோன்றுகிறார். 


மதிப்பு அதிகம்:

2008ல் சச்சினுக்கு மாற்றாக பேசப்பட்ட இவரது விளம்பர மதிப்பு ரூ. 3 கோடியாக இருந்தது. இப்போது பல மடங்கு அதிகரிக்க, கோஹ்லியின் வருமானம் கொடி கட்டி பறக்கிறது. கடந்த ஆண்டு விளம்பரங்கள் மூலம் ரூ. 40 கோடி வரை கோஹ்லிக்கு வருமானம் கிடைத்தது.


கோர்ட் சாதகம்:

கடந்த 2008ல் "நைக்' நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதாக, இவர் மீது சமீபத்தில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோஹ்லிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. 


புதிய ஒப்பந்தங்கள்:

 கோர்ட் தீர்ப்பை அடுத்து, சமீபத்தில் புதியதாக 2 ஒப்பந்தம் செய்துள்ளார். சச்சின், ஸ்டீவ் வாக்குடன் ஒப்பந்தம் செய்துள்ள டயர் நிறுவனம், இவரை ஆண்டுக்கு ரூ. 6.5 கோடிக்கு இணைத்துள்ளது. 

ஜெர்மனியை சேர்ந்த விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் "அடிடாஸ்' நிறுவனம், ஆண்டுக்கு ரூ. 10 கோடி என்ற அளவில், கோஹ்லியை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. 

இதனால், கோஹ்லியின் ஆண்டு விளம்பர வருமானம் விரைவில் கணிசமாக உயர்ந்து, தோனி, சச்சினை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முந்துகிறார் கோஹ்லி:


இதுகுறித்து ஒரு தனியார் நிறுவன தலைமை அதிகாரி இந்திராணி தாஸ் பிலா கூறுகையில்,"" கடந்த சில ஆண்டுகளாக விளம்பர உலகில் தோனி ஆதிக்கம் செலுத்தினார். 

ஆனால், இப்போது கோஹ்லி அதி வேகமாக வளர்ந்து வருகிறார். நகர்ப்புறங்களில் இவருக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதனால், பல நிறுவனங்கள் இவரை இழுக்க போட்டியிடுகின்றன,'' என்றார்.

இளம் இந்தியா ஹாட்ரிக் வெற்றி



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில், ஷிரேயாஸ் ஐயர் சதம் அடித்து கைகொடுக்க, இளம் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில், "டக்-வொர்த் லீவிஸ்' முறைப்படி "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன.

முதலிரண்டு போட்டிகளில் ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா அணிகளை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடந்த மூன்றாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் விஜய் ஜோல், "பேட்டிங்' தேர்வு செய்தார்.


ஷிரேயாஸ் அபாரம்:

இந்திய அணிக்கு அன்குஷ் பெய்ன்ஸ் (20) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய அகில் ஹெர்வாத்கர் (56) நம்பிக்கை தந்தார். கேப்டன் விஜய் ஜோல் (38) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய ஷிரேயாஸ் ஐயர், சதம் அடித்தார். 

இவர், 67 பந்தில் 109 ரன்கள் (6 சிக்சர், 10 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ரிக்கி புய் (66) அரைசதம் அடித்தார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்கள் குவித்தது. சர்பராஸ் கான் (9), தீபக் ஹோடா (13) அவுட்டாகாமல் இருந்தனர்.


மழை குறுக்கீடு:

சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் டாமியன் மார்டிமர் (31) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய கெல்வின் ஸ்மித் (74) ஆறுதல் தந்தார். அடுத்து வந்த ஜரான் மார்கன் (29) நிலைக்கவில்லை. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால், "டக்-வொர்த் லீவிஸ்' முறைப்படி 30 ஓவரில் 175 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி 30 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் இந்திய அணி, "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.

8 வயதில் 5 விக்கெட்



கங்கா லீக் தொடரில் குறைந்த வயதில் (8), 5 விக்கெட் வீழ்த்தி சாதித்தார் முஷீர் கான்.

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் (எம்.சி.ஏ.,), 1948 முதல் நடத்தப்படுகிறது கங்கா லீக் கிரிக்கெட் தொடர் (19 வயது). 

இந்த ஆண்டு, 8 வயதில் ஸ்போர்ட்ஸ்பீல்டு கிரிக்கெட் கிளப் அணிக்காக களமிறங்கினார் முஷீர் கான். 

இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், கத்தோலிக் ஜிம்கானா அணிக்கு எதிரான போட்டியில் 18 ஓவரில் 78 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். 

65 ஆண்டு கங்கா லீக் தொடரில், குறைந்த வயது வீரர் ஒருவர் 5 விக்கெட் வீழ்த்துவது இது தான் முதன் முறை. 

பின் களமிறங்கிய ஸ்போர்ட்ஸ்பீல்டு அணி திணறியது. முஷீர் கான் சகோதரர் சர்ப்ராஸ் கான், 16, (பள்ளி கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த சச்சினின் சாதனையை முறியடித்தவர்) 65 நிமிடம் களத்தில் நின்று போட்டியை "டிரா' செய்ய (81/7) உதவினார். 

தல தோனியின் புதிய அவதாரம்



தோனியின் புதிய "ஹேர்-ஸ்டைல்' ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய அணி கேப்டன் தோனி, 32. "ஹெலிகாப்டர் ஷாட்' உட்பட பல புதிய முறைகளை பேட்டிங்கில் அறிமுகப்படுத்தினார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் பெக்காம் போல "ஹேர் ஸ்டைலையும்' அடிக்கடி மாற்றுவார். 

கடந்த 2004ல் அறிமுகம் ஆன போது கழுத்து வரை கூந்தல் வைத்திருந்தார். இதனை அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் பாராட்டினார். பின் "கிராப்' வெட்டிய தோனி, 2011ல் உலக கோப்பை வென்ற போது, மொட்டை அடித்துக் கொண்டார். 

இவர் ஒவ்வொரு முறை ராஞ்சிக்கும் வரும் போது, இங்குள்ள கயா சலூனில் தான் முடி வெட்டுவார். அப்போது, நூற்றுக்கணக்கான ரசிகர்கள், கடைக்கு வெளியே கூட, இவர்களை கட்டுப்படுத்துவது, பெரும் சிரமமாகி விடும். 

கடந்த 2006ல் இங்கு இருந்த போலீஸ் அதிகாரி அகிலேஷ் குமார், " தயவு செய்து முடிவெட்ட செல்லும் போது, எங்களிடம் சொல்லுங்கள், அப்போது தான் பாதுகாப்பு தரமுடியும்,' என்றாராம்.

தற்போது, சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் போட்டியில், "மொஹாக்' பாணியில்(கீரிப்புள்ள தலை) இருபக்கம் தலைமுடியை எடுத்து விட்டு, நடுவில் மட்டும் நீளமாக முடி வைத்துள்ளார். 

தோனியின் பயிற்சியாளர்களில் ஒருவரான சஞ்சால் பட்டாச்சார்யா கூறுகையில்,"" தோனியை பள்ளி நாட்களில் இருந்தே கவனித்து வருகிறேன். 

அப்போதே, மற்றவர்களை விட வித்தியாசமாகத் தான் தலைமுடி வைத்திருப்பார். புதிய "மொஹாக்' முறை, தோனியின் நான்காவது "ஸ்டைல்' ஆக உள்ளது,'' என்றார்.

ஐதராபாத் அணி போட்டியை பிக்சிங் செய்தேன் - சூதாட்ட தரகர் தகவல்

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக மும்பை போலீசார் குற்றப்பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்தனர். 
இதில் சந்திரேஷ் ஷிவ்லால் பட்டேல் என்ற சூதாட்ட தரகர் பெயர் இடம் பெற்றுள்ளது. இவரை டெல்லி போலீசாரும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் கைது செய்து இருந்தனர்.

கடந்த ஜூன் 17–ந் தேதி சூதாட்ட தரகர் சந்திரரேஷ் பட்டேல் மும்பை போலீசிடம் வாக்கமூலம் அளித்து இருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஐதராபாத் அணி போட்டியை நானும், சில சூதாட்ட தரகர்களும் இணைந்து புனேயில் பிக்சிங் செய்தோம். 

இதற்காக ஐதராபாத் அணி வீரர்கள் திஷாரா பெரைரா, ஹனுமானா விகாரி, கரண் சர்மா, ஆசிஷ் ரெட்டி ஆகிய வீரர்களை சந்தித்தோம். 

ஆசிஷ் ரெட்டியின் சகோதரர் பிரீத்தம் ரெட்டி இதற்கு இடைத்தரகராக செயல்பட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

யூரோ 2020 கோப்பையை நடத்த பல நாடுகள் விருப்பம்

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யுஈஎப்ஏ அதன் உறுப்பு நாடுகளான 54ல் 32 நாடுகள் வரும் 2020 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பையை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. 

பாரம்பரியமாக இந்தப் போட்டிகள் ஒன்று அல்லது இரண்டு நாடுகளால் நடத்தப்படும். ஆனால், 2020 ஆம் ஆண்டுப் போட்டிகள் ஐரோப்பாவின் 13 நாடுகளில் பகிர்ந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வருடம் கால்பந்துப் போட்டித் தொடரின் 60 ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவதால் போட்டி அமைப்புகளில் மாற்றத்தைப் பற்றி இந்தக் கழகம் சென்ற டிசம்பர் மாதமே முடிவெடுத்திருந்தது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு போலந்து மற்றும் உக்ரேன் நாடுகள் நிகழ்த்திய போட்டிகளின்போதே மாற்றங்கள் குறித்து யுஈஎப்ஏ தலைவர் மைக்கேல் பிளாட்டினி யோசனை தெரிவித்திருந்தார். 

சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவிடம் டிசம்பர் மாதம் ஒப்புதல் பெற்று இந்த வருடம் ஜனவரி மாதம் போட்டி நடத்தும் விதம் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. உறுப்பினர் நாடுகளின் கால்பந்து சங்கங்களில் இருந்து இந்த மாற்றத்திற்கு வந்த வரவேற்பு குறித்து தலைவர் மைக்கேல் பிளாட்டினி மகிழ்ச்சி தெரிவித்தார்.



யூரோ பார் யூரோப் என்ற இந்தத் திட்டத்தின் வடிவம் யூரோ சாம்பியனான ஸ்பெயின் மற்றும் பாரம்பரிய கால்பந்து போட்டி நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், கிரீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

மனுக்கள் பெறுவதற்கான இறுதி நாளாக அடுத்த வருடம் ஏப்ரல் 25 ஆம் தேதியையும், போட்டி நடத்தும் நாடுகள் குறித்து தெரிவிக்க செப்டம்பர் 25 ஆம் தேதியையும் யுஈஎப்ஏ குறிப்பிட்டுள்ளது.

அசத்துமா சென்னை கிங்ஸ் - இன்று டைட்டன்ஸ் அணியுடன் மோதல்



சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியில் இன்று டைட்டன்ஸ் அணியை சந்திக்கிறது. சொந்த மண்ணில் களமிறங்கும் தோனி, முதல் வெற்றியை பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 அணிகள், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. 

"பி' பிரிவில் இடம் பெற்றுள்ள தோனியின் சென்னை அணி, தென் ஆப்ரிக்காவின் டைட்டன்சை எதிர்கொள்கிறது. 

முதல் "டுவென்டி-20': சென்னை அணிக்கு இம்முறை சொந்தமண்ணாக ராஞ்சி மைதானம் உள்ளது. வழக்கமாக சென்னை சேப்பாக்கத்தில் நடக்க வேண்டிய போட்டிகள், மைதான அனுமதி, இலங்கை வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் போன்ற பல காரணங்களால் இம்முறை ராஞ்சிக்கு மாற்றப்பட்டது. இது, கேப்டன் தோனியின் சொந்த ஊர் என்பதால், ரசிகர்கள் உற்சாகத்துக்கு பஞ்சம் இருக்காது. 

சபாஷ் ஹசி: சென்னை அணிக்கு மீண்டும் மைக்கேல் ஹசி நல்ல துவக்கம் தரலாம். கடந்த பிரிமியர் தொடரில் ஒட்டுமொத்த அளவில் அதிக ரன்கள் (733) குவித்த இவர், தனது அதிரடியை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் துவக்க வீரராக வரும் முரளி விஜய், இம்முறை சுதாரித்துக் கொள்ள வேண்டும். 

"மிடில் ஆர்டரில்' ரெய்னாவும், கேப்டன் தோனியும் கைகொடுக்கலாம். பின் வரிசையில் அசத்த ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ உள்ளனர்.

"சுழல்' கூட்டணி: பவுலிங்கை பொறுத்தவரை பிரிமியர் தொடரில் 28 விக்கெட் சாய்த்த, அஷ்வின் (15)-ரவிந்திர ஜடேஜா (15) கூட்டணி மீண்டும் மிரட்டலாம். வேகத்துக்கு இளம் வீரர் மோகித் சர்மா மற்றும் பிரிமியர் போட்டிகளில் அதிக விக்கெட் (32) வீழ்த்திய "ஆல் ரவுண்டர்' டுவைன் பிராவோ உள்ளது கூடுதல் பலம்.

பேட்டிங் பலம்: தென் ஆப்ரிக்காவின் டைட்டன்ஸ் அணி வலுவானது தான். உள்ளூரில் நடந்த ராம் ஸ்லாம் தொடரில் கோப்பை நழுவவிட்ட ஏமாற்றத்தில் உள்ளது. இத்தொடரில் அதிக ரன் சேர்த்த கேப்டன் டேவிட்ஸ் (209), இம்முறை சாதாரண வீரராக விளையாடுகிறார். 

கேப்டனாக ஜார்ஸ்வெல்டு களமிறங்குகிறார். பெகர்டியன் (208), "ஆல்-ரவுண்டர்' வான் டர் மெர்வி (208), ருடால்ப் சுதாரித்துக் கொண்டால், சென்னை அணிக்கு சிக்கலாகி விடும். 

தாமஸ் வேகம்: பவுலிங்கில் அல்போன்சா தாமஸ் , மார்னே மார்கலை தான் பெரிதும் நம்பியுள்ளது. மற்றொரு வீரர் ஆல்பி மார்கல், இம்முறை சென்னை அணிக்காக விளையாடுகிறார். சுழலில் வான் டர் மெர்வி கைகொடுக்கலாம்.

இத்தொடரில் நான்கு லீக் போட்டிகள் தான். இதனால் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

யாருக்கு கோப்பை? சாதிக்குமா சென்னை அணி?



உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில் அசத்திய அணிகள் மோதும், சாம்பியன்ஸ் லீக் தொடர் அதிரடியாக ஆரம்பமாகிறது. இதில் மும்பை, சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் கோப்பை வெல்ல களத்தில் குதித்துள்ளன.

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இணைந்து சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20'தொடரை நடத்துகின்றன. 

இதில் இந்தியாவில் இருந்து பிரிமியர் தொடர் சாம்பியன் மும்பை, இரண்டு மற்றும் 3வது இடம் பெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. 

தவிர, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ என, 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

மீதமுள்ள இரண்டு அணிகள் செப்., 17 முதல் 20 வரை நடந்த தகுதிச்சுற்றின் மூலம் தேர்வு பெற்றன. 


தோனி நம்பிக்கை:

சென்னை அணியை பொறுத்தவரையில், பிரிமியர் தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும். ஆனால், சாம்பியன்ஸ் லீக் தொடர் என்றதும், அப்படியே தலை கீழ் நிலை தான். இதுவரை நடந்த நான்கு தொடர்களில் 2010ல் மட்டும் கோப்பை வென்றது. மற்றபடி 2009ல் தகுதி பெறவில்லை. 2011, 2012ல் லீக் சுற்றுடன் திரும்பியது. 

அடுத்த ஆண்டில் புதிய ஏலம் நடக்கிறது. இதனால், சென்னை அணி வீரர்கள் ஒருங்கிணைந்து அசத்த, இது தான் கடைசி வாய்ப்பு. இதற்கேற்ப கேப்டன் தோனி, சொந்தமண்ணில் ஏதாவது மாயம் நிகழ்த்துவார் என்று நம்பப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில், சமீபகாலமாக வெற்றி பாதைக்கு திரும்பியுள்ள தோனிக்கு, வழக்கம் போல முரளி விஜய் (14 போட்டி, 414 ரன்),ரெய்னா (14 போட்டி, 384 ரன்) கைகொடுக்க வேண்டும். 

சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் 4, 5வது இடத்திலுள்ள இவர்களுடன் பத்ரிநாத்தும் உதவலாம். தவிர, கடந்த பிரிமியர் தொடரில் பேட்டிங்கில் எழுச்சி பெற்ற மைக்கேல் ஹசி இருப்பது கூடுதல் பலம்.

பவுலிங்கில் சமீபகாலமாக சர்வதேச அரங்கில் எழுச்சி பெற்றுள்ள ரவிந்திர ஜடேஜா, முக்கிய ஆயுதமாக இருப்பார். ஒருநாள் தரவரிசையில் "நம்பர்-1' பவுலராக உருவெடுத்துள்ள இவருடன், தமிழகத்தின் அஷ்வினும் இணைந்து வெற்றிதேடித் தரவேண்டும். தவிர, டுவைன் பிராவோ, ஆல்பி மார்கல், கிறிஸ் மோரிசும் உள்ளனர்.

சச்சினை சந்திக்க ஆசை - கேப்டன் டிராவிட்



சச்சின் பெரிய வீரர். சாம்பியன்ஸ் லீக் தொடரில் இவர் பங்கேற்கும் மும்பை அணியை, அரையிறுதியில் சந்திக்க ஆசையாக உள்ளது,'' என, ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் தெரிவித்தார். 

ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர், இந்தியாவில் நாளை துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 அணிகளுடன், தகுதி சுற்றில் இருந்து முன்னேறிய ஐதராபாத், ஒடாகோ அணிகளும் விளையாடுகின்றன. 

ஜெய்ப்பூரில் நடக்கும் முதல் போட்டியில், டிராவிட்டின் ராஜஸ்தான் அணி, சச்சின் இடம் பெற்றுள்ள மும்பை அணியை சந்திக்கிறது. இருவருமே "சீனியர்கள்' என்பதால், வண்ண சீருடையில் பங்கேற்கும் கடைசித் தொடர் இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் கூறியது: 

சச்சின் பெரிய வீரர். இந்திய அணியில் இருவரும் இணைந்தும், மற்ற நேரங்களில் எதிர் எதிராகவும் விளையாடியுள்ளோம். என்னைப் பொறுத்தவரை நாளை நடக்கும் லீக் போட்டி, முக்கியத்துவம் வாய்ந்து இல்லை. 

இதை ராஜஸ்தான், மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியாக மட்டும் தான் பார்க்க வேண்டும். இத்தொடரின் அரையிறுதியில் நாங்கள் மோத வேண்டும் என்று விரும்புகிறேன். 


முடிவு இல்லை:

இது தான் எனது கடைசி "டுவென்டி-20' தொடர் என்று பேசப்படுகிறது. அடுத்த ஆண்டு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போதைய நிலையில், சாம்பியன்ஸ் லீக் தொடரில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளேன். 

அசோக் மனேரியா கடந்த முறை சிறப்பாக விளையாடவில்லை. வளர்ந்து வரும் வீரர்களுக்கான தொடர் மற்றும் இந்தியா "ஏ' போட்டிகளில் தற்போது அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இவருக்கு சில ஓவர்கள் பவுலிங் செய்யவும், பேட்டிங்கில் அதிக வாய்ப்பும் கிடைக்கும் என, நம்புகிறேன். 

சூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடை பெற்ற, சித்தார்த் திரிவேதிக்கு பதில் யாரை சேர்ப்பது என சிந்தித்து வருகிறோம். சர்ச்சையில் இருந்து விடுபட்ட ஹர்மீத் சிங், சில நாட்களுக்கு முன் அணியுடன் இணைந்து, பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரை சேர்ப்பது பற்றி அணி நிர்வாகம் பார்த்துக் கொள்ளும். 


நன்றாக உள்ளது:

ஸ்ரீசாந்த், அங்கித் சவான் விஷயத்தை பொறுத்தவரை, எங்களை விட விசாரணை குழுவுக்கு நன்கு தெரியும். சம்பந்தப்பட்ட வீரர்கள் இல்லாமல், இதற்கு முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இதை மீண்டும் தொடர்வோம்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

200-வது டெஸ்ட் போட்டியுடன் தெண்டுல்கர் ஓய்வு பெற நிர்ப்பந்தமா?


இந்திய கிரிக்கெட் அணியின் இதயம் போன்றவர் சச்சின் தெண்டுல்கர். சாதனை படைக்கவே பிறந்தவரான தெண்டுல்கரின் சாதனை பட்டியல் அனுமாரின் வாலையும் மிஞ்சும் எனலாம். தனது சாதனை சரித்திரத்தில் தெண்டுல்கர் மேலும் ஒரு மகுடத்தை சேர்க்க இருக்கிறார். 

40 வயதான தெண்டுல்கர், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், டெஸ்ட் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஒவ்வொரு தொடரின் போது தனது உடல் தகுதியை ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி ஆடுவது பற்றி முடிவு எடுப்பேன் என்று ஏற்கனவே தெண்டுல்கர் தெரிவித்து இருக்கிறார். 

1989-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயது பாலகனாக அறிமுகமான தெண்டுல்கர் இதுவரை 198 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார். நவம்பர் மாதத்தில் இந்தியா வந்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் களம் காண தெண்டுல்கர் தன்னை தயார்படுத்தி வருகிறார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி தெண்டுல்கருக்கு 200-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை எந்தவொரு வீரரும் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை. தெண்டுல்கருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிக்கி பாண்டிங், ஸ்டீவ்வாக் ஆகியோர் 168 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கின்றனர். 

200-வது டெஸ்ட் போட்டியுடன் தெண்டுல்கரை ஓய்வு பெறும்படி, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் அறிவுரை வழங்கியதாகவும், 200-வது டெஸ்டுக்கு பிறகும் விளையாட விரும்பினால், ரன் குவிப்பின் அடிப்படையில் தான் தெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. 'எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ள தெண்டுல்கரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றாலும் பல சிறந்த இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புக்காக காத்து இருப்பதால் தெண்டுல்கரிடம் ஓய்வு ஆலோசனை தெரிவிக்கப்பட்டு இருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத தேர்வாளர் கூறியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழு தலைவரும் இந்த செய்தியை உடனடியாக மறுத்துள்ளனர். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய சீனியர் அதிகாரி ராஜீவ் சுக்லா கருத்து தெரிவிக்கையில், 'தெண்டுல்கர் ஓய்வு குறித்து வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது. நாங்கள் தெண்டுல்கர் மற்றும் தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் ஆகிய இருவரிடமும் பேசினோம். அவர்களுக்கு இடையில் அப்படி எந்தவித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. ஓய்வு குறித்து வீரர் தான் முடிவு செய்ய முடியும். இது தான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொள்கையாகும். தெண்டுல்கரின் 200-வது டெஸ்ட் போட்டியை தங்கள் மாநிலத்தில் நடத்த பல மாநில கிரிக்கெட் சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஸ்டேடியத்தில் அதிக இருக்கை வசதி கொண்ட மும்பை மற்றும் கொல்கத்தாவுக்கு தான் இந்த போட்டியை நடத்த அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை' என்றார். 

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் அளித்த விளக்கத்தில், 'தெண்டுல்கரை சந்திப்பது எப்பொழுதும் மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் கடந்த 10 மாதங்களாக நான் தெண்டுல்கரை சந்திக்கவில்லை. அவரிடம் டெலிபோனில் கூட பேசியதில்லை. அவரும் என்னுடன் பேசவில்லை. நாங்கள் இருவரும் எதுபற்றியும் விவாதிக்கவில்லை. வெளியான தகவல் அனைத்தும் முட்டாள்தனமானது' என்று குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி தேடித் தந்தார் தவான்



தவான் அதிரடி அரைசதம் கைகொடுக்க, ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கண்டுரட்டா மரூன்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.

ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் 21ல் துவங்குகிறது. 

இதற்கு முன் மொகாலியில் நேற்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் ஐதராபாத் (இந்தியா), கண்டுரட்டா மரூன்ஸ் (இலங்கை) அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ஐதராபாத் கேப்டன் தவான், "பீல்டிங்' தேர்வு செய்தார். 

கண்டுரட்டா மரூன்ஸ் அணியின் தரங்கா (19) நிலைக்கவில்லை. பின் சங்ககரா, கேப்டன் திரிமான்னே ஜோடி பொறுப்பாக ஆடியது. அரைசதம் கடந்த திரிமான்னே(54), இஷாந்த் சர்மா "வேகத்தில்' வீழ்ந்தார். 

கண்டுரட்டா மரூன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. சங்ககரா (61), தில்கரா (21) அவுட்டாகாமல் இருந்தனர். 

சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு தவான், பார்த்திவ் படேல் அசத்தல் துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில், பார்த்திவ்(52) வெளியேறினார். 

மெண்டிஸ் ஓவரில் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த தவான், 71 ரன்களுக்கு(53 பந்து, 11 பவுண்டரி) அவுட்டானார். அடுத்து வந்த திசாரா பெரேரா, குலசேகரா ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து வெற்றி தேடித் தந்தார். 

ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெரேரா(32) அவுட்டாகாமல் இருந்தார்.

ஆட்டநாயகன் விருதை தவான் வென்றார்.

சாம்பியன்ஸ் லீக் தொடருடன் விடைபெறும் சச்சின், டிராவிட்

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து சச்சின், டிராவிட் ஓய்வு பெறுகின்றனர். இதற்கு பின் கிரிக்கெட் களத்தில் இவர்களை வண்ண சீருடையில் காண இயலாது. 
ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் செப்., 21ல் துவங்குகிறது. இந்தியா சார்பில் பிரிமியர் தொடர் "நடப்பு சாம்பியன்' மும்பை, சென்னை, ராஜஸ்தான், ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கும்.

கடைசி தொடர்: ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின், டெஸ்டில் பங்கேற்று வருகிறார். பிரிமியர் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர வீரராக உள்ளார். 

டிராவிட்டை பொறுத்தவரை, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றுவிட்டார். பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக உள்ளார். இருவரும் தற்போதைய சாம்பியன்ஸ் லீக் தொடருடன் குறைந்த ஓவர் போட்டியில் இருந்து முழுமையாக விடைபெற உள்ளனர். 

இத்தொடருக்குப் பின் சச்சின், டிராவிட்டை வண்ண சீருடையில், மைதானத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது. இதனால், ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 இடம், 4 அணி:  இத்தொடரில் பங்கேற்கும் மேலும் 2 அணிகளை தேர்வு செய்ய, இன்று முதல் 20ம் தேதி வரை தகுதி போட்டிகள் நடக்கின்றன. இதில் இந்தியாவின் ஐதராபாத் (இந்தியா), ஒடாகோ வோல்ட்ஸ் (நியூசி.,), கண்டுரட்டா மரூன்ஸ் (இலங்கை) மற்றும் பாகிஸ்தானின் பைசலாபாத் உல்வ்ஸ் என, 4 அணிகள் விளையாடுகின்றன. 

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில், முதல் இரு இடங்களை பெறும் அணிகள், செப்., 21ல் துவங்கும் முக்கிய சுற்றுக்கு முன்னேறும். 

தவானுக்கு சோதனை: இன்று இரவு நடக்கும் போட்டியில் ஐதராபாத், கண்டுரட்டா (இலங்கை) அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணியின் "ரெகுலர்' கேப்டன் சங்ககரா, இத்தொடரில் கண்டுரட்டா அணிக்கு எதிராக விளையாடுகிறார். 

இதனால், கேப்டன் பொறுப்பு ஷிகர் தவானிடம் வர, இவருக்கு கூடுதல் "சுமை' ஏற்பட்டுள்ளது. மற்றபடி துவக்கவீரர் பார்த்திவ் படேல், தென் ஆப்ரிக்காவின் டுமினி, திசரா பெரேரா நம்பிக்கை தரலாம். 

ஸ்டைன் பலம்: கடந்த பிரிமியர் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டைன், இஷாந்த் சர்மா கூட்டணி அசத்தியது. இது தகுதிச்சுற்றில் தொடரும் பட்சத்தில் வெற்றி எளிதாகும். ஜிம்பாப்வே தொடரில் 18 விக்கெட் வீழ்த்தி மிரட்டிய அமித் மிஸ்ரா, சுழல் "வலை' விரிக்கலாம்.

வலுவான அணி: திரிமான்னே கேப்டனாக உள்ள இலங்கையின் கண்டுரட்டா மரூன்ஸ் அணியில், சங்ககரா, அஜந்தா மெண்டிஸ், ஹெராத், குலசேகரா உள்ளிட்ட சர்வதேச வீரர்கள் இருப்பது பெரும் பலம். 

மிடில் ஆர்டரில் களம் இறங்க சேவாக் விருப்பம்



இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிரடி வீரராக திகழ்பவர் சேவாக். அவர் சமீபகாலமாக சரியாக விளையாடததால் கிரிக்கெட் வாரியம் அவரை ஒதுக்கி வருகிறது. 

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் நடுத்தர வரிசையில் விளையாட விருப்பம் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2-வது மற்றும் 3-வது 4-நாள் போட்டிக்கான இந்திய 'ஏ' அணியில் சேவாக் இடம் பெற்றுள்ளார். இந்திய அணி தேர்வாளர் சந்தீப் பட்டீல், சேவாக்கை தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்துள்ளார்.

35-வயதை நெருங்கும் சேவாக் சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓரங்கட்டுப்பட்டு வருகிறார். சேவாக்குக்குப் பதிலாக தொடக்க வீரராக களம் இறங்கிய தவான் சிறப்பாக விளையாடி வருகிறார். 

இதனால் சேவாக் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். கடைசியாக சேவாக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

வரும் நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் விளையாட இருக்கிறது. அப்போது இந்திய அணியில் மிடில் ஆர்டரில் களம் இறங்கி விளையாட சேவாக் விருப்பம் தெரிவித்தள்ளார்.

இதற்குக் காரணம் ஆஸ்திரேலியா இந்தியா வந்தபோது காம்பீர் மற்றும் சேவாக் ஆகியோருக்குப் பதிலாக களம் இறங்கிய தமிழக வீரர் முரளி விஜய்- தவான் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 

மேலும், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது கடைசி போட்டியில் தவான் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப்பதிலாக புஜாரா விளைடினார். இதனால் சேவாக் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்குவது முடியாத காரியம் ஆகிவிட்டது.

இதனால் மிடில் ஆர்டரில் விளையாட முயற்சி செய்து வருகிறார். தற்போது இந்திய அணியில் மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. ரகானேவை மிடில் ஆர்டராக இறக்கினார்கள். 

ஆனால் அவர் சிறப்பாக விளையாடவில்லை. அதேபோல் ரெய்னாவும் மிடில் ஆர்டரில் சோபிக்கவில்லை. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ரோகித் சர்மா அணியில் இடம்பெற்றாலும் சரியாக விளையாடுவாரா? எனத்தெரியவில்லை.

டிராவிட், லஷ்மண், கங்குலி ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் அந்த இடத்தை நிரப்ப சரியான வீரர்கள் இல்லை. அதனால் சேவாக் மிடில் ஆர்டரில் விளையாட போட்டியிருக்காது என்ற நிலையில் அதில் விளையாட விரும்புகிறார்.

பாகிஸ்தான் அணிக்கு அவமானம்

பரபரப்பான இரண்டாவது டெஸ்டில், "பேட்டிங்கில்' சொதப்பிய பாகிஸ்தான் அணி, "கத்துக்குட்டி' ஜிம்பாப்வே அணியிடம் 24 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. 
ஜிம்பாப்வே சென்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை வகித்தது. 

இரண்டாவது டெஸ்ட் ஹராரேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 294, பாகிஸ்தான் 230 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 199 ரன்கள் எடுத்தது. 

நான்காம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. 

சடாரா மிரட்டல்: நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் அணியின் அத்னன் அக்மல் (20) நிலைக்கவில்லை. தனிநபராக போராடிய கேப்டன் மிஸ்பா, அரைசதம் அடித்தார். 

இவருக்கு, அப்துர் ரெஹ்மான் (16), சயீத் அஜ்மல் (2), ஜுனைடு கான் (1) ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட ரஹாத் அலி (1) "ரன்-அவுட்' ஆனார்.

இரண்டாவது இன்னிங்சில், பாகிஸ்தான் அணி 239 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது. மிஸ்பா (79) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே சார்பில் "வேகத்தில்' மிரட்டிய டென்டாய் சடாரா 5 விக்கெட் வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி, தொடரை 1-1 என சமன் செய்தது. 

ஆட்டநாயகன் விருதை ஜிம்பாப்வே அணியின் சடாரா வென்றார். தொடர் நாயகன் விருது பாகிஸ்தானின் யூனிஸ் கானுக்கு வழங்கப்பட்டது.

மோட்டார் பைக்கை தனிதனியாக பிரித்த கேப்டன் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மோட்டார் பைக் ஆர்வலர். அதிநவீன மோட்டார் சைக்கிளில் செல்வது அவருக்கு பிடித்தமான ஒன்றாகும்.

இந்த நிலையில் முதல் முறையாக தான் வாங்கிய மோட்டார் பைக்கை டோனி தனித்தனியாக பிரித்து எடுத்துள்ளார். இதை அவர் தனது டூவிட்டரில் படத்துடன் வெளியிட்டுள்ளார். 

‘யமஹா ராஜ்தூத்’ என்ற பழைய மோட்டார் சைக்கிளை அவர் தனித்தனி பாகங்களாக பிரித்து எடுத்துள்ளார். இந்த பைக்கை ரூ.4,500 கொடுத்து வாங்கியதாக அவர் தெரிவித்து உள்ளார்.

சாம்பியன்களுக்கு புது சோதனை



யு.எஸ்., ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினின் நடால், அமெரிக்காவின் செரினா ஆகியோர் தங்களது பரிசுத்தொகையில் பாதியை வரியாக செலுத்த வேண்டியுள்ளது.

 நியூயார்க்கில் "கிராண்ட்ஸ்லாம்' தொடரான யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில், ஸ்பெயினின் ரபெல் நடால், உலகின் "நம்பர்-1' வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 

இதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், பெலாரசின் அசரன்காவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்றார். 

இந்த ஆண்டு நடந்த நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் யு.எஸ்., ஓபனுக்கு தான் பரிசுத் தொகை அதிகம். ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 23 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 

இத்தொகையில் பாதிக்குமேல் வருமான வரியாக செலுத்திய வேண்டியதால், சாம்பியன் பட்டம் வென்ற நடால், செரினாவுக்கு புது சோதனை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நடால் கூறுகையில், ""எப்போதும் விளையாட்டில் பரிசுத்தொகை முக்கிய பங்குவகிக்கும். இந்த ஆண்டு யு.எஸ்., ஓபன் தொடரின் பரிசுத்தொகையை அதிகரித்தற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

ஆனால் வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை என்பது நிலையானது கிடையாது. இத்தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் வரியாக செலுத்த வேண்டும். தவிர, பணத்தின் மதிப்பு நாட்டுக்கு நாடு மாறுபடுவதால் பரிசுத்தொகையும் ஏற்றத்தாழ்வை சந்திக்கிறது,'' என்றார்.

செரினா கூறுகையில்,""என் டென்னிஸ் வாழ்க்கையின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை சுமார் ரூ. 300 கோடியை தாண்டிவிட்டது என்று கேள்விப்பட்டேன். இதில் பாதியை வரியாக செலுத்திவிட்டேன். 

பரிசுத்தொகை விஷயத்தில் நான் தலையிட மாட்டேன். டென்னிசை மிகவும் நேசிப்பதால் எனக்கு பணம் முக்கியமல்ல,'' என்றார். 

சாம்பியன்ஸ் லீக் தொடரில் சிக்கல்



வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்க, இந்தியா வர இருந்த, பாகிஸ்தான் உள்ளூர் அணிக்கு அனுமதி கிடைக்கவில்லை. 

ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் செப்., 21ல் துவங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து மும்பை, சென்னை, ராஜஸ்தான் என, மூன்று அணிகள் பங்கேற்கவுள்ளன. 

தவிர, ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கும். வரும் செப்., 17 முதல் 20 வரை நடக்கவுள்ள தகுதிச் சுற்றின் மூலம், மீதமுள்ள 2 அணிகள் தேர்வு செய்யப்படும்.

இதில் ஐதராபாத் (இந்தியா), ஒடாகோ வோல்ட்ஸ் (நியூசி.,), கண்டுரட்டா மரூன்ஸ் (இலங்கை) மற்றும் பாகிஸ்தானின் பைசலாபாத் வால்வ்ஸ் என, 4 அணிகள் விளையாட இருந்தன. 

ஆனால், சமீபத்தில் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதட்டமான நிலை காரணமாக, பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

"இவர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க முடியாது,' என, மத்திய அரசு கைவிரித்தது. இதனால், பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைக்கவில்லை. இதனால், தகுதிச் சுற்றில் மூன்று அணிகளை மட்டும் வைத்து விளையாட, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

நேபாள கிரிக்கெட்டில் சேவக் படத்தால் கிளம்பிய சர்ச்சை



நேபாள கிரிக்கெட் சங்க (சி.ஏ.என்.,) ஆண்டு விழா மலரின் அட்டைப்படத்தில் சேவக் படத்தை வெளியிட்டது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சி.ஏ.என்., சார்பில் இந்த ஆண்டுக்கான மலர் வெளியிடப்பட்டது. இதில் வெளியான படங்கள் குறித்து நேபாள கிரிக்கெட் நிர்வாகிகள் அக்கறை செலுத்தவில்லை. 

இதன் காரணமாக அட்டை படத்திலேயே தவறு நடந்தது. நேபாள அணியின் சீருடையில் இந்திய வீரர் சேவக்கின் "ஆக்ஷன்' படம் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. 

இதில் சேவக் முகம் லேசாக மறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது சேவக் தான் என்பது தெளிவாக தெரிந்தது. இதனால், உள்ளூர் நேபாள வீரர்கள் கொதிப்படைந்தனர். 

முன்னாள் வீரர் ராஜூ பஸ்னயாத் கூறுகையில்,""நேபாள கிரிக்கெட் நிர்வாகிகள் தங்கள் நாட்டு வீரர்களை புறக்கணித்தது பெரும் அவமானம்,''என்றார். 

இதனை மறுத்த சி.ஏ.என்., தலைமை கமிட்டி உறுப்பினர் கிரன் ராணா கூறியது:
அட்டையில் உள்ளது சேவக் படம் தான். நன்கு கூர்ந்து கவனித்தால், இவரது முகம் லேசாக மறைக்கப்பட்டு இருக்கும். 

வேண்டுமேன்றே இதை செய்யவில்லை. முழுவதும் எங்கள் தரப்பில் நடந்த தவறு தான். 

சேவக்கிற்கு நேபாளத்தில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இதை அச்சிட்ட உரிமையாளர் கூட சேவக் ரசிகராக இருந்திருக்கலாம். உணர்ச்சி வசப்பட்டு இப்படி செய்துள்ளார். 


விற்பனை இல்லை:

இந்த ஆண்டு மலரை நாங்கள் விற்கவில்லை. ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. ஏற்கனவே, 150 பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டு விட்டதால், சேவக் படத்தை மாற்றிவிட்டு, மீண்டும் அச்சிடும் வாய்ப்பு இல்லை. 

தவிர, சி.ஏ.என்.,க்கும், இந்திய கிரிக்கெட் போர்டுக்கும் (பி.சி.சி.ஐ.,) நல்ல நட்புறவு உள்ளது. தனது மனைவி சாக்ஷியுடன் நேபாளம் வந்த இந்திய கேப்டன் தோனி, பசுபதிநாத் கோயிலில் பிரார்த்தனை செய்தார். 

இவரை, நேபாள கிரிக்கெட்டின் தூதராக கடந்த ஆண்டு நியமித்தோம். இதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல், பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். 

இவ்வாறு கிரன் ராணா கூறினார்.

இந்திய கிரிக்கெட்டின் வித்யா பாலன்

பொழுபோக்கிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடர், பாலிவுட் நடிகை வித்யா பாலன் போன்றது,'' என, இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி விமர்சித்தார்.

பிரிமியர் லீக் "டுவென்டி-20' தொடரில் சூதாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பஞ்சமில்லை. இதனால், பாரம்பரியமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கூறுகையில்,"" டெஸ்ட் போட்டிதான் நமது பாரம்பரியம். இதனை காப்பாற்ற ஆர்வம் கொள்வதில்லை. 

இதை நினைக்கும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது. பொழுபோக்கிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் ஐ.பி.எல்., தொடரை இந்திய கிரிக்கெட்டின் வித்யா பாலன்(பாலிவுட் கவர்ச்சி புயல்) என குறிப்பிடலாம்,'' என்றார்.

டோக்கியோ நகரில் 2020 ஒலிம்பிக் போட்டி



ஜப்பான் தலைநகர் டோக்கியோ வரும் 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றது. ஐ.ஓ.சி.,யின் ஓட்டெடுப்பின் மூலம் இந்த நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) பொதுக்குழு கூட்டம் அர்ஜென்டினா தலைநகர் பியுனஸ் ஏர்சில் நடக்கிறது. இதில், 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் இடத்திற்கான தேர்வு நடைபெற்றது. 

இதற்கு ஜப்பானின் டோக்கியோ, துருக்கியின் இஸ்தான்புல், ஸ்பெயினின் மாட்ரிட் ஆகிய மூன்று நகரங்களுக்கு இடையே போட்டி காணப்பட்டன. முதல் சுற்று ஓட்டெடுப்பில் மாட்ரிட் நகரம் தோல்வியடைந்தது. 

எனவே, அடுத்த சுற்றில் மற்ற இரு நகரத்தில் எது வெற்றி பெறும் என ஆர்வம் அதிகரித்தது. முடிவில், டோக்கியோ 60 வாக்குகள் பெற்று, 2020ல் ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை தட்டிச் சென்றது. 

இஸ்தான்புல் நகருக்கு 36 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம், ஜப்பான் நான்காவது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது. ஏற்கனவே 1964 (டோக்கியோ), 1972 (சபோரோ, குளிர்கால), 1998 (நகனோ, குளிர்கால), ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. 

ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட கசிவு காரணமாக, டோக்கியோவுக்கு எதிர்ப்பும் இருந்தன. தற்போது, இதையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது. 

இது குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்ஷா அபே கூறுகையில்,"" 2020ல் ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில், மகிழ்ச்சி அடைகிறேன். புகுஷிமா அணு உலை பாதுகாப்புடன்தான் உள்ளது. இதனால், டோக்கியாவுக்கு எந்தவித பாதிப்பும் வராது என உறுதி தருகிறேன்,'' என்றார். 

சச்சினுக்கு கங்குலி ஆதரவு



சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை, அவரது சொந்த மண்ணான மும்பையில் நடத்துவது தான், அவருக்கு மரியாதை செலுத்துவது போல இருக்கும்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்தார். 

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்து சாதனை படைத்தார். இதுவரை 198 டெஸ்டில் 15,837 ரன்கள் எடுத்துள்ளார். 

இவர், சொந்த மண்ணில் 200வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வகையில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்பாடு செய்து வருகிறது. இதன்படி, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், வரும் அக்., 31ல் துவங்குகிறது. 

இதில், இரண்டு டெஸ்ட் போட்டிகளை கோல்கட்டா மற்றும் மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,), மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) என, இருவருமே சச்சினின் வரலாற்று சிறப்பு மிக்க 200வது டெஸ்ட் போட்டியை, தங்களது மண்ணில் நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கங்குலி கூறியது:

சச்சினின் சொந்தமண் மும்பை. இங்கு தான் இவரது அனைத்து நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், தனது 200வது டெஸ்ட் போட்டியை மும்பையில் விளையாடினால், அது உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும். தவிர, அவரது விருப்பத்தை நிறைவேற்றியது போல இருக்கும். 


மீண்டும் வராது:

இதுபோன்ற சம்பவம் மீண்டும் வரப்போவதில்லை. இப்போதைய நிலையில், உலக கிரிக்கெட்டில் இந்த சாதனையை எந்த ஒரு வீரராலும், எப்போதும் முறியடிக்க முடியாது. இப்படிப்பட்ட சிறப்பான நிகழ்வு நடக்கும் போது, இதைக் காண நாம் எல்லோரும் அங்கு இருக்க வேண்டும்.

இது ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமையும். சச்சினும் இந்த தருணத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும். இப்போட்டியில் பேட்டிங்கில் திணறக் கூடாது. அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு வேண்டும்.


நிரப்ப முடியாது:

சச்சின் ஓய்வுக்குப் பின், இவரைப் போன்ற வீரரை ஒருபோதும் பார்க்க முடியாது. அவர் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்புவது என்பது மிக கடினம். எதிர்வரும் தொடரில் சச்சின் சிறப்பாக விளையாட வேண்டும். ஒருவேளை சதம் அடித்து சச்சின் ஓய்வு பெற்றால், இப்போது விமர்சனம் செய்பவர்கள், இன்னும் கொஞ்சம் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று பேசுவர். 

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், 40 வயதில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார். இதற்காக இவரை சச்சினுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது. ஏனெனில், அது தனிமனித விளையாட்டு. கிரிக்கெட் அப்படியல்ல சரியாக விளையாடவில்லை எனில் தேர்வு செய்ய மாட்டார்கள்.


கடின காலம்:

சமீபத்திய சூதாட்ட புகார்களால் இந்திய கிரிக்கெட்டுக்கு கடின காலம் தான். எனினும், இதிலிருந்து இந்தியா கட்டாயம் மீண்டு வரும். ஆனால், அடுத்து வரும் 16 மாதங்கள், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்கள் என, இந்திய அணிக்கு தொடர்ந்து சோதனை காத்திருக்கிறது. 

இவ்வாறு கங்குலி கூறினார்.

இந்தியா- வெ.,இண்டீஸ் தொடர் - அக்., 31ல் துவக்கம்



இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 31ல் துவங்குகிறது.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். சதத்தில் சதம் உள்ளிட்ட ஏராளமான சாதனை புரிந்துள்ளார். 

தற்போது 198 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள இவர், தனது 200வது போட்டியை சொந்த மண்ணில் விளையாட, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வழிவகை செய்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியாவில் பங்கேற்க அழைத்தது. இதன்படி, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி துவங்குகிறது. 

தவிர, 3 பயிற்சி போட்டியும் உள்ளன. மொத்தம் 4 வாரங்கள் இத்தொடர் நடக்கிறது. 

போட்டி நடக்கும் இடங்களை தேர்வு செய்யும் சுழற்சி முறைப்படி, குஜராத்தின் ஆமதாபாத்தில்தான் சச்சின் தனது 200வது டெஸ்ட்டில் விளையாட வேண்டும். 

ஆனால், இதை நடத்த மும்பை, கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் போட்டியிடுகின்றன. 

பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில்,"" இத்தொடருக்கான தேதி, மைதானம் போன்றவை விரைவில் வெளியிடப்படும்,'' என்றார். 

களிமண் கதாநாயகனுக்கு மவுசு

அமெரிக்காவில் நடக்கும் யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரில், நடால் தான் கோப்பை வெல்வார் என, ஏராளமானோர் பந்தயம் கட்டுகின்றனர்.

ஸ்பெயினின் டென்னிஸ் நட்சத்திரம் ரபெல் நடால், 27. களிமண் கள நாயகன். இவருக்கு பிடித்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில், 2005-2008, 2010-2013 என 8 முறை கோப்பை வென்றுள்ளார். 

ஆஸ்திரேலிய ஓபன் (2009), விம்பிள்டன் (2008, 2010) மற்றும் யு.எஸ்., ஓபனிலும் (2010) நான்கு பட்டம் கைப்பற்றினார்.

முழங்கால் காயம் காரணமாக ஏழு மாதமாக டென்னிசில் விலகியிருந்த நடால், பிப். மாதம் மீண்டும் போட்டிகளுக்கு திரும்பினார். அப்போது முதல் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இதுவரை பிரேசில், மெக்சிகோ, இந்தியன் வெல்ஸ், பார்சிலோனா, மாட்ரிட், ரோம், மான்ட்ரியல், சின்சினாட்டி மற்றும் பிரெஞ்ச் ஓபன் என, மொத்தம் 9 போட்டிகளில் பட்டம் வென்றார். 


நடால் முதல்வன்:

நடாலின் இந்த அபாரமான "பார்ம்' காரணமாக, தற்போது அமெரிக்காவில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிசில், இவர் தான் கோப்பை வெல்வார் என, அதிகம் பேர் பந்தயம் கட்டுகின்றனர். இது 7/4 என்ற விகிதத்தில் <உள்ளது. 

ஓய்வு பெறும் முடிவில் அவசரப்படவில்லை - தெண்டுல்கர்



கிரிக்கெட்டில் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். 

இதுவரை 198 டெஸ்டில் விளையாடி உள்ள தெண்டுல்கள் 200–வது டெஸ்டோடு ஒய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டு வருகிறது. 

அதற்கு ஏற்றவாறு 200–வது டெஸ்ட் போட்டி இந்திய மண்ணில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியை நவம்பர் மாதம் இந்தியாவில் விளையாட அழைத்துள்ளது. முதலில் தென்ஆப்பிரிக்காவில் தான் அவரது 200–வது டெஸ்ட் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் ஓய்வு பெறும் முடிவில் நான் அவசரப்படவில்லை என்று தெண்டுல்கர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:– 

நான் 23 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். மேலும் ஒரு அடியை எடுத்து வைக்க விரும்புகிறேன். நான் எல்லாவற்றையும் நினைத்து பார்ப்பது இல்லை. 

ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டிய அவசரம் எதுவும் எனக்கு இல்லை. நான் ஒரு கிரிக்கெட் வீரர்தான். கிரிக்கெட்டின் கடவுள் என்று குறிப்பிட வேண்டாம். நான் தவறுகளை செய்பவன். 

நாம் எல்லோரும் தவறுகள் செய்யக் கூடியவர்கள்தான். ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் நான் என்னை தயார் படுத்திக் கொள்வேன். 

1999–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது எனது தந்தையை இழந்தேன். இது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. 

இவ்வாறு தெண்டுல்கள் கூறினார்.

இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்



அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 55 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) நேற்று அறிவித்தது.

கோல்கட்டாவில் நடந்த இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செயற்குழு கூட்டத்தில், அடுத்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து இத்தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) நேற்று வெளியிட்டது. 

இதன்படி, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அடுத்த ஆண்டு ஜூன் 26ம் தேதி முதல் செப்., 7ம் தேதி வரை ஐந்து டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச "டுவென்டி-20' தொடரில் பங்கேற்க உள்ளது. இதன்மூலம், 55 ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 

முன்னதாக 1959ல் இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. இதில் இங்கிலாந்து அணி 5-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது. 

கடைசியாக 2011ல் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 4-0 என தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது.

பயிற்சி போட்டிகள்: டெஸ்ட் போட்டிகள், டிரன்ட் பிரிட்ஜ், லார்ட்ஸ், ஏஜியஸ் பவுல், ஓல்டு டிராபோர்டு மற்றும் ஓவல் மைதானங்களில் நடக்கிறது. டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணி, இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது. 

இங்கிலாந்தில் உள்ளூர் அணிகளான லீசெஸ்டர்ஷயர், டெர்பிஷயர் அணிகளுக்கு எதிராக மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. 

இதேபோல, ஒருநாள் தொடருக்கு முன், மிடில்சக்ஸ் அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 50 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள், பிரிஸ்டோல், சோபியா கார்டன்ஸ், டிரன்ட் பிரிட்ஜ், எட்பாஸ்டன், ஹெட்டிங்லி மைதானங்களில் நடக்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தலைமை அதிகாரி டேவிட் கூலியர் கூறுகையில், ""55 ஆண்டுகளுக்கு பின், இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்,'' என்றார்.

ஐ.சி.சி., ரேங்கிங் - இந்தியா நம்பர் 1



ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில், இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் விராத் கோஹ்லி 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது. அடுத்த இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (112) அணிகள் உள்ளன.


கோஹ்லி "நம்பர்-4':

பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 4வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய கேப்டன் தோனி 7வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 16வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா, டிவிலியர்ஸ், இலங்கையின் சங்ககரா உள்ளனர்.


ஜடேஜா "நம்பர்-1':

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய அணியின் "ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா, முதலிடத்தை வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் உள்ளார். 

மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 18வது இடத்தில் நீடிக்கிறார்.

"ஆல்-ரவுண்டர்'களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 3வது இடத்தில் நீடிக்கிறார். முதலிரண்டு இடங்களில் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் உள்ளனர்.