ரஞ்சி கோப்பை வென்றால் ரூ.2 கோடி

உள்ளூர் தொடருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரஞ்சி கோப்பைக் கான பரிசுத் தொகை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 2 கோடி வழங்கப் படும் என பி.சி.சி.ஐ., அதிரடியாக அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செயற்குழு கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது.

இதில் உள்ளூர் ரஞ்சி தொடருக்கான பரிசுத் தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 60 லட்சத்தில் இருந்து ரூ. 2 கோடியாக பரிசுத் தொகை உயர்த்தப்பட்டது. இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.1 கோடி (முன்பு ரூ. 30 லட்சம்) மற்றும் அரை யிறுதிக்கு முன்னேறும் அணிகளுக்கு ரூ. 50 லட்சமும் பரிசு வழங்கப்படும். தவிர இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.,) அமைப்பில் இருந்து விலகிய வீரர்களுக்கு இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' தொடரில் பங்கேற்க முறைப்படி அனுமதி வழங்கியது.

ஜாக்பாட்: சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை காணப்பட்ட போதும், பி.சி.சி.ஐ.,க்கு எவ்வித சரிவும் ஏற்படவில்லை. தொடர்ந்து கோடிக்கணக்கில் லாபம் அடைந்து வருகிறது. இதன் கீழ் செயல்படும் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் லாபத்தின் பங்காக ரூ. 20 கோடி வழங்க உள்ளது. இது அடுத்த ஆண்டு ரூ. 24 முதல் 28 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கை: பொது மன்னிப்பு வழங்கப் பட்ட முன்னாள் ஐ.சி.எல்., வீரர்கள் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கலாம். இவர்களுக்கான சம்பளத் தொகை அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் வரை தீர்மானிக்கப்படும்.உள்ளூர் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், சாம்பியன் கோப்பை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை ரூ. 2 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது. இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. ஒரு கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் கால்பந்து போட்டியின் தரத்தை உயர்த்த, அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) ரூ. 25 கோடி நிதி வழங்க பி.சி.சி.ஐ., செயற்குழு முடிவு செய்துள்ளது. வீரர்கள் பேட்டிங், பவுலிங்கில் சாதிக்க அடுத்த மாதம் முதல், சிறப்பு பயிற்சி முகாம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி முகாம்களை மும்பை (பேட்டிங்), மொகாலி (வேகப் பந்துவீச்சு) மற்றும் சென்னை (சுழற் பந்துவீச்சு, விக்கெட் கீப்பிங்) உள்ளிட்ட நகரங்களில் அமைக்க முடிவு செய்துள்ளது. தவிர, அம்பயர்களுக்கான அகாடமி அமைக்க முடிவு செய்யப் பட்டது. ஆஸ்திரேலியாவில் நடந்த வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடரில், கோப்பை வென்ற இளம் இந்திய அணியினருக்கு தலா ரூ. 10 லட்சம் போனஸ் தொகையாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இந்திய அம்பயர்கள் அமிஸ் சகிபா மற்றும் ஷவிர் தரபோரே இருவரும் ஐ.சி.சி., நடுவர் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் அம்பயர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் "மேட்ச் ரெப்ரி' உள்ளிட் டோர்களுக்கு போட்டியின் ஒருநாள் ஊதியமாக ரூ. 7 ஆயிரத்து 500 ல் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 comments:

Post a Comment