கிரிக்கெட் சூதாட்டம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பெருந்தொல்லையாக இருந்து வருகிறது. 1995 இல் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பி.சி.பி. சலீம் மாலிக்கிற்கு ஆயுள் தடை விதித்தது. தவிர, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அன்வர், முஸ்தாக் அகமது, இன்சமாம் உள்ளிட்ட வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
1999 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்த போது நீதி விசாரணை நடத்தப்பட்டது. பத்தாண்டுகள் கழித்து மீண்டும் தற்போது கிரிக்கெட் சூதாட்டம் பாகிஸ்தான் அணியைப் பிடித்துள்ளது.
சமீபத்திய இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது கொழும்பு தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த பாகிஸ்தான் வீரர்களிடம் சூதாட்ட முகவர்கள் சிலர் தொடர்பு கொண்டுள்ளனர். இது குறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, இந்தச் செய்தியை உறுதி செய்த அணி முகாமையாளர் யவர் சயீது கூறுகையில்;
"ஹோட்டலிலிருந்த வீரர்களை சிலர் அணுகி டின்னருக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால், வீரர்கள் உடனடியாக நிர்வாகத்திற்கு இதனைத் தெரிவித்தனர்' என்றார்.
கப்டன் யூனிஸ்கான் இது குறித்துக் கூறுகையில்;
"சூதாட்ட முகவர்கள் யாரும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. ஒருவேளை அப்படி நடந்தால் அவரை உடனடியாகப் பிடித்து ஐ.சி.சி.வசம் ஒப்படைத்து விடுவேன். ஏனெனில், இப்படிப்பட்ட ஆட்கள் கிரிக்கெட்டையே அழித்துவிடுவார்கள்' என்றார்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (பி.சி.பி.) சூதாட்டம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை;
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நடத்தும் அனைத்துப் போட்டிகளிலும் சூதாட்டம் குறித்துக் கண்காணிக்கப்படும். இலங்கைக்கு எதிரான தொடரிலும் ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், ஹோட்டலில் நடந்த சம்பவம் குறித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment