டெஸ்ட் போட்டியை காப்பாற்றலாம்: சச்சின்

சிறுவர்களுக்கு போட்டியை காண இலவச டிக்கெட் கொடுப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக் கெட்டை அழிவில் இருந்து பாதுகாக்கலாம்,'' என, இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.

தற்போது "டுவென்டி-20' கிரிக்கெட்டின் வளர்ச்சியால் டெஸ்ட் கிரிக்கெட் வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐ.பி.எல்., தொடர், மற்றும் அணிகளின் சுற்றுப்பயணத்தில் அதிகரிக்கும் "டுவென்டி-20' போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

டெஸ்ட் போட்டிகளின் இன்றைய நிலை குறித்து சச்சின் கூறியது: கிரிக்கெட் விளையாட துவங்கிய போது எனது வயது ஐந்து. முதன் முதலாக நான் டெஸ்ட் கிரிக்கெட்டை மைதானத்தில் பார்க்கும் போது எனது வயது பத்து. அது இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டி என உறுதியாக எனக்குத் தெரியும்.

இதில் மாற்றமில்லை. ஏனெனில் குழந்தைகள் மனதில் ஒரு சம்பவம் பதிந்து விட்டால் அவ்வளவு எளிதில் அது நினைவை விட்டு அகலாது. அதுபோல நாம் எந்த அளவிற்கு குழந்தைகளை ஒரு விளையாட்டுக்கு அழைக்கிறோமோ, அந்த அளவுக்கு அந்த விளையாட்டு முன்னேற்றம் அடையும்.

பல்வேறு பள்ளிகளில் இருந்து வார இறுதியில் சிறுவர்களை டெஸ்ட் கிரிக்கெட்டை பார்வையிட இலவசமாக அனுமதிக்க வேண்டும். ஒருவேளை அவர்களில் பத்து சதவீத சிறுவர்கள், டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களாகி விட்டால் அது, டெஸ்ட் போட்டிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், ""மக்கள் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்து ரசிக்க தயாராகத்தான் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆனால் "டுவென்டி-20' கிரிக்கெட் பார்த்து பழகிய அவர்களை ஒருநாளுக்கு ஏழு மணி நேரம் வீதம், ஐந்து நாட்களுக்கு பார்க்க வைப்பது கடினம் தான்.

ஒட்டுமொத்தமாக ரசிகர்கள் தான் ஒரு விளையாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்கிறார்கள்,'' என்றார்.

0 comments:

Post a Comment