இரட்டை மகிழ்ச்சியில் உசைன் போல்ட்

உலக தடகள போட்டியில் தொடர்ந்து அசத்தி வருகிறார் ஜமைக்காவின் உசைன் போல்ட். 100 மீ., மற்றும் 200 மீ.,ஓட்டத்தில் மின்னல் வேகத்தில் பறந்து இரட்டை சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனியில் உள்ள பெர்லினில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். நேற்று நடந்த ஆண்கள் 200 மீ., ஓட்டப் போட்டியில் 23 வயதான உசைன் போல்ட் பங்கேற்றார்.

போட்டி தூரத்தை 19.19 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.இப்போட்டியில் இரண்டாவது இடத்தை பனாமாவின் அலோன்சா எட்வர்டும் (19.81 வினாடி), மூன்றாவது இடத்தை அமெரிக்காவின் வேலேஸ் ஸ்பியர்மேனும் (19.85) கைப்பற்றினர்.

சாதனை தகர்ப்பு:
கடந்த ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் 200 மீ., ஓட்டப் போட்டியில், போட்டி தூரத்தை 19.30 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார் போல்ட். தற்போது தனது சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக 100 மீ., ஓட்டத்திலும் உலக சாதனை(9.58 வினாடி) படைத்திருந்தார்.

இது குறித்து போல்ட் கூறுகையில்,"" சாதனை படைப்பேன் என்று நான் நினைக்க வில்லை. போட்டிக்கு முன், நான் மிகவும் சோர்வடைந்து இருந்தேன்.இருப்பினும் சிறப்பாக செயல்பட வேண்டும் என எனக் குள்ளாக சொல்லிக் கொண்டேன். இது மிகச் சிறந்த போட்டியாக எனக்கு அமையவில்லை.

ஆனால் எனது செயல்பாடு திருப்தி அளித்தது. கடந்த சில நாட்களாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். தற்போது எனக்கு தேவை நல்ல தூக்கம். அடுத்த உலககோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் எனது சாதனையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்வேன்,'' என்றார்

0 comments:

Post a Comment