சென்னை அணிக்கு தோனி நோ - கேப்டன் பதவிக்கு குட்பை

சூதாட்ட சர்ச்சை காரணமாக, சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகுகிறார். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் பொறுப்பையும் உதற உள்ளார்.

கடந்த 2008ல் பிரிமியர் ‘டுவென்டி–20’ தொடர் துவங்கிய போது, சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். 

இவரது சிறப்பான தலைமையில் சென்னை அணி 2010, 2011ல் சாம்பியன் பட்டம் வென்றது. 2010ல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்தச் சூழலில் கடந்த பிரிமியர் தொடரில் வெடித்த சூதாட்ட சர்ச்சையில் சென்னை அணி வசமாக சிக்கியது. முத்கல் குழு அறிக்கையில் தோனி உட்பட 6 இந்திய வீரர்கள் பெயர்கள் இடம் பெற்றன.

இதுகுறித்த விசாரணையில், சென்னை அணி உரிமையாளர் தொடர்பாக தவறான தகவலை தோனி கொடுத்ததாக புதிய சர்ச்சை கிளம்பியது. இது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் விவாதிக்கப்பட, தனது ‘இமேஜ்’ பாதிக்கப்பட்டதாக தோனி கருதினார். 

இதையடுத்து, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சீனிவாசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட தோனி, இந்தியா சிமென்ட்ஸ்  துணைத் தலைவர் மற்றும் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

இது ஏற்கப்படவில்லை என்றாலும், இரு தரப்பிலும் தீவிர விவாதம் நடக்கிறது.

கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகுவது உறுதியானால், வரும் ஏப்., 16ல் துவங்கும் ஏழாவது பிரிமியர் தொடரில் சென்னை அணிக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.


பதிலளிக்க மறுப்பு

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பதவி விலகல் குறித்து தோனியிடம் கேட்கப்பட்டது. 

அப்போது கூறுகையில்,‘‘ இதுபோன்ற கேள்விளுக்கு பதிலளிக்கப் போவதில்லை. ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் குறித்து மட்டும் கேளுங்கள்,’’ என்றார்.


அடுத்து யார்

தோனி ஒருவேளை விலகினால், புதிய கேப்டனாக ரெய்னாவை நியமிக்க இயலாது. ஏனென்றால் இவரது பெயரும் முத்கல் அறிக்கையில் உள்ளது.  இதனால், தமிழக வீரர் அஷ்வின் அல்லது குஜராத்தை சேர்ந்த ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.


அணியில் நீடிப்பாரா

சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலக அனுமதி கேட்டுள்ளார் தோனி. இந்திய அணியின் கேப்டனாகவும் இருக்கும் இவர், சாதாரண வீரராக மற்றவரின் தலைமையில் விளையாடுவது கடினம். இதனால் சென்னை அணியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோனிக்கு பரிசாக ஒளிரும் ஸ்டம்ப்ஸ்

இந்திய அணி ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றால், கேப்டன் தோனிக்கு, ஒளிரும் ‘ஸ்டம்ப்ஸ்’ பரிசு தர உள்ளனர்.

வங்கதேசத்தில் ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இப்போட்டிகளின் போது, ஒளிரும் ‘ஸ்டம்ப்ஸ்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.          
                    
இதன்படி விக்கெட் மீது பந்து பட்டதும், ‘பேட்டரியில்’ இயங்கும் எல்.இ.டி விளக்குகள் கொண்ட ‘பெயில்ஸ்’ ஒளிரும். இதில் இருந்து அனுப்பப்படும் ‘ரேடியோ சிக்னல்’ வாயிலாக ஒட்டுமொத்த ‘ஸ்டம்ப்ஸ்’ சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும்.

இதைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலியாவின் எக்கெர்மான். இந்த உலக கோப்பை தொடருக்காக 32 ‘ஸ்டம்ப்ஸ்’, 40 ‘பெயில்ஸ்’களை வங்கதேசம் கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து எக்கெர்மான் கூறியது:

‘எல்.இ.டி., ஸ்டம்ப்ஸ்’ தொட்டவுடன் ஒளிரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, விக்கெட் கீப்பர் ‘கிளவ்ஸ்’ லேசாக பட்டால் போதும், சிவப்பு நிறத்தில் மின்னும். 

அம்பயர்கள் முடிவு எடுக்கவும் பெரும் உதவியாக உள்ளது. இதை அமைக்க செலவு அதிகம்.ஒரு போட்டிக்கு ரூ. 24 லட்சம் வரை தேவைப்படும். ‘பெயில்சின்’ விலையில் ஒரு ‘ஐ–போன்’ வாங்கிவிடலாம்.

இதனால், போட்டி முடிந்ததும் வீரர்கள் ‘ஸ்டம்ப்சை’ எடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட இம்முறை அனுமதி இல்லை. இந்திய அணி கேப்டன் தோனியை பொறுத்தவரையில், வெற்றி பெற்றவுடன் ‘ஸ்டம்ப்சை’ எடுத்து வைத்துக் கொள்வதில் ஆர்வம் உள்ளவர். 

இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றால், தோனிக்காக சில ‘ஸ்பெஷல்’ ஏற்பாடுகளை செய்து, ‘ஸ்டம்ப்சை’ பரிசாக தர திட்டமிட்டுள்ளேன். 

இவ்வாறு எக்கெர்மான் கூறினார்.

தொடருமா அமித் மிஸ்ரா மேஜிக்?

இந்திய பந்துவீச்சுக்கு புத்துயிர் அளித்துள்ளார் அமித் மிஸ்ரா. தனது ‘சுழல்’ மந்திரத்தால் எதிரணிகளை கட்டிப் போடும் இவர், ‘டுவென்டி–20’ உலக கோப்பை போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, 31. கடந்த 2003ல் முதன் முதலாக இந்திய அணியில் இடம் பெற்ற போதும், இதுவரை 13 டெஸ்ட் (43 விக்.,), 23 ஒருநாள் (40 விக்.,) போட்டிகளில் தான் பங்கேற்றுள்ளார்.      

பிரிமியர் போட்டி வரலாற்றில், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மலிங்காவுக்கு (103 விக்.,) அடுத்து, 2வது இடம் பெற்றுள்ளார் அமித் மிஸ்ரா (76 போட்டி, 95 விக்.,).      

கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 18 விக்கெட் கைப்பற்றினார். இருப்பினும், விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வந்தார்.    
               
சமீபத்திய ஆசிய கோப்பை போட்டியில், கோஹ்லி வாய்ப்பு தர பாகிஸ்தானுக்கு எதிராக 2 விக்கெட் சாய்த்து அசத்தினார். இதையடுத்து, முதல் ‘டுவென்டி–20’ (2010, ஜிம்பாப்வே) போட்டியில் பங்கேற்று, நான்கு ஆண்டுக்குப் பின், ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது.       

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த லீக் போட்டியில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து, 2 விக்கெட் வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.      

தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் அசத்திய இவர், 18 ரன்னுக்கு 2 விக்கெட் சாய்த்து, மீண்டும் ஆட்டநாயகன் ஆனார். இவரது வருகையால் இந்திய அணியின் பவுலிங்  பலம் பெற்றுள்ளது.

அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்றது குறித்து அமித் மிஸ்ரா கூறியது:      

எப்போதும் நல்லவிதமாகவே நினைப்பேன்.  களத்துக்கு வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்தது குறித்து அதிகம் கவலைப்பட்டதில்லை. எனது பவுலிங்கில் முன்னேற்றம் செய்வது குறித்து  முயற்சித்துக் கொண்டிருப்பேன். இதற்காக பயிற்சியாளர், கேப்டனிடம் அதிகம் ஆலோசித்தது உண்டு.       

இவ்வாறு அமித் மிஸ்ரா கூறினார்.      


தோனி ஆதரவு

கேப்டன் தோனி கூறுகையில்,‘‘ பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சற்று நெருடலாக காணப்பட்டார். பந்தை முடிந்தளவுக்கு சிறப்பாக சுழற்றி வீசினால் போதும் என, அமித் மிஸ்ராவிடம் தெரிவித்தேன். இதை சரியாக செய்தது மிகவும் மகிழ்ச்சி,’’ என்றார்.

கிறிஸ் கெய்ல் 100வது டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி துவக்க வீரர் கிறிஸ் கெய்ல், தனது 100வது டெஸ்டில் களமிறங்க காத்திருக்கிறார். வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இம்மைல்கல்லை எட்ட உள்ளார்.      

வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் கிறிஸ் கெய்ல், 34. கடந்த 1999ல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச அரங்கில் காலடி வைத்த இவர், 2000ம் ஆண்டு நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். 

இதுவரை இவர், 99 டெஸ்ட் (6933 ரன்), 255 ஒருநாள் (8743 ரன்), 38 சர்வதேச ‘டுவென்டி–20’ (1130 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.      

கெய்ல், தனது 100வது டெஸ்டில் களமிறங்க காத்திருக்கிறார். இதற்கான அறிவிப்பை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு நேற்று அறிவித்தது. 

இதன்படி வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நியூசிலாந்து அணி, மூன்று டெஸ்ட், இரண்டு சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜமைக்காவில் (ஜூன் 8–12) நடக்கிறது. 

இப்போட்டியின் மூலம் கெய்ல், தனது 100வது டெஸ்டில் விளையாட உள்ளார். தவிர இப்போட்டி, இவரது சொந்த ஊரான ஜமைக்காவில் நடக்க இருப்பதால், உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார். இதன்மூலம் 100வது டெஸ்டில் விளையாடும் 59வது சர்வதேச வீரர் மற்றும் 9வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமை பெற உள்ளார். 

ஒட்டுமொத்தமாக இந்தியாவின் சச்சின் அதிகபட்சமாக 200 டெஸ்டில் விளையாடி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சந்தர்பால் 153 டெஸ்டில் பங்கேற்றுள்ளார்.      

இத்தொடரின் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிரினிடாட் (ஜூன் 16–20), கயானாவில் (ஜூன் 26–30) நடக்கவுள்ளன. இரண்டு சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் டொமினிகாவில் (ஜூலை 5, 6) நடக்கின்றன. 

இத்தொடருக்கு பின், வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் (ஆக., 20, 22, 25), ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ (ஆக., 27), இரண்டு டெஸ்ட் (செப்., 5–9, 13–17) போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

உலககோப்பைக்கு முன்பு விதிமுறையில் மாற்றம் இல்லை - ICC

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய விதிமுறைகள் 2011–ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்டது.

பீல்டிங் கட்டுப்பாட்டு, 2 புதிய பந்துகள் ஆகிய விதிகள் கொண்டு வரப்பட்டது. இரண்டு முனையில் இருந்தும் புதிய பந்துகள் பயன்படுத்தப்பட்டன. 

இதனால் சுழற்பந்து வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி இந்த விதியை மாற்றுமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.

பேட்டிங் பவர் பிளேயில் 4 வீரர்கள் மட்டுமே எல்லை கோடு அருகே இருக்க வேண்டும். பேட்டிங் பவர் பிளேயை 16 முதல் 40 ஓவருக்குள் எடுக்க வேண்டும்.

இந்த புதிய விதிக்கு இந்தியாவோடு, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளும் எதிர்த்தன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஜிம்பாப்வே ஆதரித்தன. வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா நடுநிலை வகித்து உள்ளன.

இந்த நிலையில் உலக கோப்பைக்கு முன்பு வரை இந்த விதிமுறையில் மாற்றம் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாகி தேவ் ரிச்சர்ட்சன் கூறியதாவது:–

உலக கோப்பை வரை ஒருநாள் போட்டி விதிமுறையில் மாற்றம் செய்யும் எண்ணம் இல்லை. உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு தான் ஐ.சி.சி. கூட்டம் கூட்டப்படும். விதியை மாற்றுவது பற்றி மறு ஆய்வு செய்யப்படும்.

20 ஓவர் போட்டிக்கு இணையாக இருக்கும் வகையில் தான் 50 ஓவர் போட்டியில் இந்த புதிய விதி கொண்டு வரப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஐ.பி.எல் சீசன் 7 க்கான போட்டி அட்டவணை வெளியீடு

7-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பெரும்பாலான போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மற்றும் வங்காளதேசத்தில் நடத்தப்படவுள்ளன. 

இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16-ம்தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் கொல்கத்தாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

சார்ஜாவில் 17-ம்தேதி நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.

18-ம் தேதி அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணியும் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன.

போட்டிக்கான அட்டவணை பின்வருமாறு:

ஏப்.18.    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் (அபுதாபி)

ஏப்.19.    ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் -மும்பை இந்தியன்ஸ் ,கொல்கத்தா நைட்ரைடர்ஸ் -டெல்லி டேர்வில்ஸ் (துபாய்)

ஏப்.20.    ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப்  (ஷார்ஜா)

ஏப்.21.    சென்னை சூப்பர் கிங்ஸ் -டெல்லி டேர்வில்ஸ் (அபுதாபி)

ஏப்.22.    கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ஷார்ஜா)

ஏப்.23.    ராஜஸ்தான் ராயல்ஸ்  - சென்னை சூப்பர் கிங்ஸ் (துபாய்) 

ஏப்.24.    ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (ஷார்ஜா)

ஏப்.25.    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -டெல்லி டேர்வில்ஸ் (துபாய்) ,சென்னை சூப்பர்கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (துபாய்)

ஏப்.26.    ராஜஸ்தான் ராயல்ஸ் -   ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் (அபுதாபி) ,கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (அபுதாபி)

ஏப்.27.    டெல்லி டேர்வில்ஸ்- மும்பை இந்தியன்ஸ் (ஷார்ஜா) ,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர்கிங்ஸ் (ஷார்ஜா)

ஏப்.28.    ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் -  கிங்ஸ் லெவன் பஞ்சாப் (துபாய்)

ஏப்.29.    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (அபுதாபி)

ஏப்.30.    மும்பை இந்தியன்ஸ் -  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (துபாய்)

ஓய்வு பெறுகிறார் சங்ககரா

சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சங்ககரா. இலங்கை அணியின் ‘சீனியர்’ வீரர் சங்ககரா, 36. 

கடந்த 2000ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த இவர், இதுவரை 122 டெஸ்ட் (11,151 ரன்கள்), 369 ஒருநாள் (12,500), 50 சர்வதேச ‘டுவென்டி–20’ (1311) போட்டிகளில் விளையாடி உள்ளார். 

இவர், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

இதுகுறித்து சங்ககரா கூறியது: வங்கதேசத்தில் நடக்கும் உலக கோப்பை (டுவென்டி–20) தொடருக்கு பின், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். 

இது, என் கடைசி ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர். இம்முடிவு வருத்தமானது என்றாலும், உண்மையானது. இதன்மூலம் அணியில் இடம் பெற காத்திருக்கும் திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உள்ளூர் ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடுவேன்.      

ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்பேன். ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு பின், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை (50 ஓவர்) தொடர் மீது கவனம் செலுத்த உள்ளேன்.  எனது எதிர்காலம் குறித்து, அணித் தேர்வாளர்களிடம் பேச உள்ளேன்.      

இரண்டு முறை இலங்கை அணிக்கு ‘டுவென்டி–20’ உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு கிடைத்தது. 

ஆனால், பைனலில் சொதப்பியதால், கோப்பை வெல்ல முடியாமல் போனது. இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணிக்கு கோப்பை வென்று தர முயற்சிப்பேன்.      
இவ்வாறு சங்ககரா கூறினார்.

எது சிறந்த வெற்றிக்கூட்டணி - சோதிக்க தோனிக்கு வாய்ப்பு

டுவென்டி-20’ உலக கோப்பை பயிற்சி போட்டியில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில், இந்திய அணிக்கான வெற்றிக்கூட்டணியை கண்டறிய கேப்டன் தோனி முயற்சிக்கலாம்.

ஐந்தாவது ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. இதில் ‘பிரிவு–2’ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி வரும் 21ம் தேதி ‘பரம எதிரியான’ பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக இன்றைய பயிற்சி போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது.   
                
அன்னிய மண்ணில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறது. சமீபத்தில் கோஹ்லி தலைமையில் ஆசிய கோப்பை தொடரிலும்  ‘அடி’ வாங்கியது. தற்போது தோனி, யுவராஜ், ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் திரும்பியுள்ள நிலையில், உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

இன்றைய இலங்கைக்கு எதிரான பயிற்சி போட்டியில் அனைத்து 15 வீரர்களையும் பயன்படுத்தலாம். இதன் மூலம், எது சிறந்த வெற்றிக்கூட்டணி என்பதை கேப்டன் தோனி கண்டறியலாம். முதலில் சரியான துவக்க ஜோடியை தேர்வு செய்ய வேண்டும். 

ரோகித் சர்மா தொடர்ந்து சொதப்புவதால், பிரிமியர் தொடரில் துவக்க வீரராக களமிறங்கிய அனுபவம் உள்ள ரகானேவை தவானுடன் சேர்த்து களமிறக்கலாம். 

ரெய்னா பலம்: ‘மிடில்–ஆர்டரில்’ ‘டுவென்டி–20’ ‘ஸ்பெஷலிஸ்ட்’ விராத் கோஹ்லி, யுவராஜ், ரெய்னா பலம் சேர்ப்பர். இத்தொடரில் சதம் அடித்த பெருமைமிக்க ரெய்னா, பயிற்சி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

கடைசி கட்டத்தில் தோனி கைகொடுக்கலாம். அம்பதி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் வாய்ப்பை வீணாக்கக் கூடாது.

பழிதீர்க்குமா: பந்துவீச்சு தான் பெரும் பிரச்னையாகவே உள்ளது. முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், மோகித் சர்மா உள்ளிட்ட ‘வேகங்கள்’ கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குகின்றனர். 

இதையடுத்து இந்தியாவின் அதிவேகப்பந்துவீச்சாளரான வருண் ஆரோனை சோதித்து பார்க்கலாம். இவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படாதது பின்னடைவான விஷயம்.‘சுழலில்’ அஷ்வின், ரவிந்திர ஜடேஜா அசத்தினால், சமீபத்திய ஆசிய கோப்பை லீக் போட்டியில் இலங்கையிடம் சந்தித்த தோல்விக்கு இந்தியா பழிதிர்க்கலாம்.

இளம் கேப்டன்: இலங்கை அணியை பொறுத்தவரை ஆசிய கோப்பை வென்ற உற்சாகத்தில் உள்ளது. சம்பள பிரச்னை காரணமாக, முதல் தர வீரர்கள் பங்கேற்பது சந்தேகம். இளம் கேப்டன் சண்டிமால் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இவருக்கு ஜெயவர்தனா, சங்ககராவின் அனுபவம் கைகொடுக்கும். ‘வேகத்தில்’ மிரட்ட மலிங்கா உள்ளார். ‘சுழலில்’ அஜந்தா மெண்டிஸ் அசத்தலாம்.


பாக்.,– நியூசி., மோதல்: 
           
இன்று மிர்புரில் நடக்கும் மற்றொரு பயிற்சி போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.


அயர்லாந்து–ஜிம்பாப்வே பலப்பரீட்சை:

இன்று நடக்கும் ‘பி’ பிரிவு ‘சூப்பர்–10’ தகுதிச் சுற்றுப் போட்டிகளில், அயர்லாந்து – ஜிம்பாப்வே, நெதர்லாந்து – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதுகின்றன.

விராத் கோஹ்லி நான்காவது இடம்

ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இந்தியாவின் விராத் கோஹ்லி 4வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் முதலிடத்துக்கு முன்னேறினார்.      

சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வௌியிட்டது. 

பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி (4வது இடம்), சுரேஷ் ரெய்னா (5வது இடம்), யுவராஜ் சிங் (6வது இடம்) ‘டாப்–10’ வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.     

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், 3வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறினார். இதனையடுத்து நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் 2வது, இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் 3வது இடம் பிடித்தனர்.      

சுழல் ஆதிக்கம்: பவுலர்களுக்கான தரவரிசையில் ‘டாப்–20’ பட்டியலில் ஒரு இந்திய பவுலர் கூட இடம் பெறவில்லை. இந்தியா சார்பில் அஷ்வின் 22வது, ஹர்பஜன் சிங் 28வது இடத்தில் உள்ளனர். 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் ‘சுழலில்’ அசத்திய வெஸ்ட் இண்டீசின் சாமுவேல் பத்ரி 13 இடங்கள் முன்னேறி, 2வது இடத்தை கைப்பற்றினார். முதலிடத்தில் மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் உள்ளார். 

மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் உள்ளார். பவுலர்களுக்கான ‘டாப்–10’ பட்டியலில், 9 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒன்பதாவது இடத்தில் உள்ள இலங்கையின் நுவன் குலசேகரா மட்டும் வேகப்பந்துவீச்சாளர்.
      
‘ஆல்–ரவுண்டர்’ யுவராஜ்: ‘ஆல்–ரவுண்டர்’களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் யுவராஜ் சிங் 3வது இடத்தில் உள்ளார். முதலிரண்டு இடங்களில் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் உள்ளனர்.  

    
இந்தியா ‘நம்பர்–2’

அணிகளுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை), இந்திய அணி 123 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இலங்கை அணி (129 புள்ளி) உள்ளது. மூன்றாவது இடத்தை பாகிஸ்தான் (121) அணி கைப்பற்றியது. 

அடுத்த எட்டு இடங்களில் தென் ஆப்ரிக்கா (120), ஆஸ்திரேலியா (112), வெஸ்ட் இண்டீஸ் (112), நியூசிலாந்து (108), இங்கிலாந்து (104), அயர்லாந்து (94), வங்கதேசம் (70), ஆப்கானிஸ்தான் (70) அணிகள் உள்ளன. வங்கதேசத்தில் இன்று துவங்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு பின், இப்பட்டியலில் மாற்றம் வரலாம்.

நம்பிக்கை வைப்பாரா தோனி?

அஷ்வின், ஜடேஜாவை விட சிறப்பாக செயல்பட்ட போதும், தோனியின் ‘கடைக்கண்’ பார்வை கிடைக்காததால், அணியில் இடம் பெறமுடியாமல் தவிக்கிறார் அமித் மிஸ்ரா. 
           
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, 31. இதுவரை 13 டெஸ்ட் (43 விக்.,), 23 ஒருநாள் (40 விக்.,) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அணியில் இடம் பெற்ற போதும், பெரும்பாலான நேரங்களில் பார்வையாளராகவே சென்று திரும்புகிறார். 
            
கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 18 விக்கெட் கைப்பற்றினார். அதேநேரம், ‘ரெகுலர்’ கேப்டன் தோனி, அஷ்வின் மற்றும் ஜடேஜா மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதால், விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் அமித் மிஸ்ரா இடம் பெற முடியாமல் போகிறது. 
            
சமீபத்திய ஆசிய கோப்பை போட்டியில், கோஹ்லி வாய்ப்பு தர பாகிஸ்தானுக்கு எதிராக 2 விக்கெட் சாய்த்து அசத்தினார். தவிர, இந்தியாவில் நடக்கும் பிரிமியர் போட்டி வரலாற்றில், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்வரிசையில் இரண்டாவது இடம் (76 போட்டி, 95 விக்.,) அமித் மிஸ்ராவுக்குத் தான். முதலிடத்தில் மலிங்கா (103 விக்.,) உள்ளார். 
           
இதனால் தான், ‘லெக் ஸ்பின்னர்’ அமித் மிஸ்ராவை ‘ஜோக்கர் கார்டு’ முறையில் ரூ. 4.75 கோடிக்கு, ஐதராபாத் அணி மீண்டும் தக்கவைத்தது. 
     
அதேநேரம், பிரிமியர் தொடரில் பங்கேற்ற 67 போட்டிகளில் 64 விக்கெட்டுகள் தான் கைப்பற்றியுள்ளார் அஷ்வின். ஜடேஜாவின் நிலை இன்னும் மோசம். இவரது 78 போட்டிகளில் 39 விக்கெட்டுகள் தான் கிடைத்தன.  
     
நரேந்திர ஹிர்வானி கூறுகையில்,‘‘ அமித் மிஸ்ராவை தோனி நம்ப வேண்டும். மற்ற பவுலர்கள் மீது வைக்கும் நம்பிக்கையை, இவர் மீதும் காட்ட வேண்டும். அணியில் பல ஆண்டுகள் விளையாடும் தகுதி இவருக்கு உள்ளது,’’ என்றார்.

தலைமுறையின் சிறந்த வீரர் - பைனலில் சச்சின்-காலிஸ்-வார்னே

தலைமுறையின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பைனல் பட்டியலில் சச்சின், காலிஸ், வார்னே இடம் பெற்றனர். சச்சின் விளையாடிய நாட்களில் கடுமையான போட்டி கொடுத்து வந்த வெஸ்ட் இண்டீசின் லாரா பின்தங்கினார்.      

கிரிக்கெட் இணையதளம் சார்பில் 1993 முதல் 2013 வரையிலான 20 ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரர் தேர்வு செய்யப்படவுள்ளார். 

‘தலைமுறையின் சிறந்த வீரர்’ என்ற பெயரிலான விருதுக்கு இந்தியாவின் சச்சின், வெஸ்ட் இண்டீசின் லாரா, தென் ஆப்ரிக்காவின் காலிஸ், இலங்கையின் முரளிதரன், ஆஸ்திரேலியாவின் வார்ன் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.   
               
டிராவிட், லட்சுமண், வக்கார் யூனிஸ், இயான் சேப்பல் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், பத்திரிகையாளர்கள் என, 50 பிரபலங்கள் அடங்கிய நடுவர்கள் குழு சிறந்த வீரரை தேர்வு செய்கிறது.விருதுக்கான மூன்று பேர் கொண்ட பைனல் பட்டியலில் சச்சின், வார்ன், காலிஸ் தேர்வாகினர்.                   

சச்சினை பொறுத்தவரையில் 24 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில், ‘சதத்தில்’ சதம் அடித்து அசத்தியவர். தவிர, டெஸ்ட் (15,921 ரன்கள்), ஒருநாள் (18,426) அரங்கில் வியக்கத்தக்க சாதனைகள் படைத்துள்ளார்.     
              
வார்ன் தனது மாயாஜால சுழற்பந்து வீச்சினால், ரசிகர்களை மயக்கியவர். டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் வார்ன் (708 விக்.,).                   
இந்த தலைமுறையில் சிறந்த ‘ஆல் ரவுண்டர்’ காலிஸ் என்பதில் சந்தேகமில்லை. டெஸ்ட் (13,289), ஒருநாள் (11,574) போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களுக்கும் மேல் குவித்த இவர், 577 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.                   
டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் சாய்த்த முரளிதரன், டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் (400) எடுத்த லாரா பைனல் பட்டியலில் இடம் பெறவில்லை.         
          
கிரிக்கெட் இணையதளத்தின் 20 வது ஆண்டு விழாவை அடுத்து, இன்று மும்பையில் நடக்கும் விழாவில், சிறந்த வீரர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

கால்பந்து களத்தில் கங்குலி

 பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் கோல்கட்டா அணியை வாங்குவது தொடர்பாக கங்குலி, நடிகர் ஷாருக்கான் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, 41. கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் துவக்கப்பட்ட போது, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின், 48, கோல்கட்டா அணியில் இடம் பெற்றார்.             
            
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கோல்கட்டா அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்டார். பின்,  2011ல்  புனே அணியில் இடம் பெற்றார். தற்போது பிரிமியர் தொடரில் பங்கேற்கவில்லை.  
                       
சிறுவயதில் கிரிக்கெட் தேர்வு செய்வதற்கு முன், கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தவர் கங்குலி. இந்தச்சூழலில், பிரிமியர் கிரிக்கெட் போல, இந்தியாவில் பிரிமியர் கால்பந்து தொடர் வரும் செப்டம்பரில் நடக்கவுள்ளது. 

மும்பை, கோல்கட்டா, டில்லி, பெங்களூரு, சென்னை, கவுகாத்தி, கோவா, கொச்சி உட்பட 9 நகரங்களை அடிப்படையாக கொண்டு, கால்பந்து அணிகள் இடம் பெறவுள்ளன.    
   
இந்த அணிகள் 10 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் விற்கப்படும். ஒவ்வொரு அணிக்கும் அடிப்படை விலை, ரூ. 120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    
   
கங்குலி ஆர்வம்: இதில் கோல்கட்டா அணியை வாங்குவதில் கங்குலி ஆர்வம் காட்டுகிறார். இதற்காக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) தலைவர் பிரபுல் படேலை சந்தித்து, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.                        

ஷாருக் போட்டி: 

அதேநேரம், பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோல்கட்டா அணியை தன்வசம் வைத்துள்ள ஷாருக்கான், கோல்கட்டா கால்பந்து அணியையும் வாங்க திட்டமிட்டுள்ளார். இதை ஏ.ஐ.எப்.எப்., துணைத்தலைவர் சுப்ரட்டோ தத்தா உறுதி செய்தார்.            
            
ஏற்கனவே, பிரிமியர் அணி தொடர்பாக கங்குலி–ஷாருக் இடையே பிரச்னை உள்ளது. தற்போது கால்பந்து அணியை வாங்க இருவரும் கோதாவில் இறங்கியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அணியை வாங்கியவர்கள் விவரம் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும். அப்போது, கோல்கட்டா அணி யாருக்கு சொந்தம் என்பது தெரிய வரும்.

இந்தியா, துபாய், வங்கதேசத்தில் பிரிமியர் தொடர்

ஏழாவது பிரிமியர் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், இந்தியா என 3 நாடுகளில் நடக்கவுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிரிமியர் ‘டுவென்டி–20’ போட்டி தொடர் நடக்கிறது. 

அடுத்த மாதம் லோக்சபா தேர்தல் துவங்குவதால், இத்தொடருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதனால், ஏழாவது தொடர் இந்தியாவில் நடப்பது சந்தேகமாக இருந்தது. 

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசம், இந்தியா என 3 நாடுகளில் நடத்த, இந்திய கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஏழாவது தொடர் வரும் ஏப்., 16ம் தேதி துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. 

டுவென்டி 20 உலக கோப்பையில் விறுவிறு

டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் கேப்டன் தோனி, ரெய்னா, யுவராஜ் சிங், ரவிந்திர ஜடேஜா அடங்கிய நால்வர் கூட்டணி, இந்திய அணிக்கு வெற்றி தேடித்தரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர், வரும் மார்ச் 16ல் வங்கதேசத்தில் துவங்குகிறது.

இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், குரூப் 2ல் இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் உள்ளன.

தவிர, மார்ச் 16 முதல் 21ம் தேதி வரை நடக்கும் தகுதிச் சுற்றில் மோதும் 8 அணிகளில் இருந்து, 2 அணிகள் முக்கிய சுற்றுக்கு தேர்வு பெறும்.

இந்திய அணியை பொறுத்தவரையில் சமீபத்திய ஆசிய போட்டியில், பைனலுக்கு முன்னேறவில்லை. இருப்பினும், ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு கேப்டன் தோனி, யுவராஜ், ரெய்னா அணிக்கு திரும்புவது நம்பிக்கை அளிக்கிறது.

‘டுவென்டி–20’ போட்டிகளில் இந்த மூவரும் ‘ஸ்பெஷலிஸ்ட்கள்’. கடந்த 2007ல் நடந்த தொடரில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர் அடித்து அசத்தியவர் யுவராஜ். 

கடைசியாக பங்கேற்ற பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டிகளில் 72, 77 ரன்கள் எடுத்துள்ளார்.


ரெய்னா எப்படி:

யுவராஜ் சிங்கிற்கு அடுத்து ‘டுவென்டி–20’ போட்டியில் ‘ஸ்பெஷலிஸ்ட்’ ரெய்னா தான்.  பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் அதிக ரன்கள் (99 போட்டி, 2,802 ரன்கள்) எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த அனுபவம் உலக கோப்பை தொடரிலும் கைகொடுக்கலாம்.


சபாஷ் கேப்டன்:

கடந்த 2007ல் முதல் ‘டுவென்டி–20’ உலக கோப்பையை வென்று காட்டியவர் தோனி. பேட்டிங்கில் கடைசி வரை இருந்து ‘பினிஷிங்’ செய்வதில் கெட்டிக்காரர்.

சமீபத்திய தொடர் தோல்விகள், சூதாட்ட சர்ச்சைகளில் இருந்து மீள, இத்தொடரில் கோப்பை வென்று திரும்புவார் என நம்பப்படுகிறது.


ஜடேஜாவுக்கும் இடம்:

இவர்களுடன் ரவிந்திர ஜடேஜாவும் கைகொடுக்கலாம். சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் பெரியளவில் சாதிக்கவில்லை என்ற போதும், பிரிமியர் தொடரில் அசத்தியுள்ளார்.   வங்கதேசத்தில் உள்ள ஆடுகளங்கள் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இவர் விக்கெட் வேட்டை நடத்தலாம்.


ஹாட்ரிக்’ கோப்பை

இந்திய அணிக்கு 50 ஓவர் போட்டிகளில் கடந்த 2011ல் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என, அடுத்தடுத்த ஐ.சி.சி., தொடரில் கோப்பை வென்று தந்தவர் கேப்டன் தோனி. வரும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் சாதிக்கும் பட்சத்தில், ‘ஹாட்ரிக்’ பட்டம் வென்ற ஒரே சர்வதேச கேப்டன் என்ற பெருமை பெறலாம்.


சத்தமில்லாத சாதனை

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில்  கேப்டனாக இருந்தது, அதிக வெற்றிகள் பெற்றவர்களில் முதலிடம் தோனிக்குத் தான். இதுவரை 22 போட்டிகளில் கேப்டனாக இருந்து, 12 வெற்றி பெற்றார்.

இங்கிலாந்தில் கோலிங்வுட் (17 ல், 8 வெற்றி), தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் (16ல் 11 வெற்றி), இலங்கையின் சங்ககரா (14ல் 10 வெற்றி) உள்ளிட்டோர், அடுத்த 3 இடங்களில் உள்ளனர். 


‘மார்ச் 14’

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான தோனி தலைமையிலான இந்திய அணி, வரும் 14 ம் தேதி வங்கதேசம் புறப்பட்டு செல்கிறது. தாகா சென்றடைந்ததும், பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


அணி விவரம்:

தோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ரெய்னா, யுவராஜ் சிங், ரகானே, ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, மோகித் சர்மா, வருண் ஆரோன்.

ஐ.சி.சி தரவரிசை - கோலி மீண்டும் முதலிடம்

ஐ.சி.சியின் ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இளம் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 12 மாதங்களில் கோலி 1580 ரன்கள் குவித்து 886 புள்ளிகள் பெற்றுள்ளார். 

அடுத்தடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி ஆகியோர் உள்ளனர். இந்திய அணியின் கேப்டன் டோனி 6-வது இடத்திலும், ஷிகர் தவான் 8-வது இடத்தில் உள்ளனர்.

ஆசியக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய இலங்கையின் திரிமன்னே 39வது இடத்தை பிடித்துள்ளார். 

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆசியக்கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய லசித் மலிங்கா 11 இடங்கள் முன்னேறி 22வது இடத்தை பிடித்துள்ளார்.

ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா தொடர்ந்து இரண்டாம் இடம் வகித்து வருகிறது. ஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இலங்கை 112 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

டெஸ்ட் ரேங்கிங் - இந்தியா பின்னடைவு

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி, இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை (ரேங்கிங்) பட்டியல் வெளியானது. 

இதில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–1 என, வென்ற ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகள் கூடுதலாக பெற்று இரண்டாவது இடத்துக்கு (115) முன்னேறியது.

இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருந்து, மூன்றாவது இடத்துக்கு (112) தள்ளப்பட்டது. தொடரை இழந்த போதிலும், தென் ஆப்ரிக்க அணியின் ‘நம்பர்–1’ இடத்துக்கு (127) ஆபத்து இல்லை.

இங்கிலாந்து (107), பாகிஸ்தான் (100) மற்றும் இலங்கை (89) அணிகள் 4, 5 மற்றும் 6 வது இடத்திலுள்ளன.

லாராவை விட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன்

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் காலிஸ் அளித்த பேட்டியில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் லாராதான் என்று கூறினார். தெண்டுல்கரின் சாதனைகள் வியக்கத்தக்க என்றும் தெரிவித்தார்.
ஆனால் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்த வீரர் பிரெட்லி லாராவை விட தெண்டுல்கரே உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:–

தெண்டுல்கர் பந்தை கணித்து விளையாடுவதில் மிகவும் வல்லமை பெற்றவர். பந்தை அதிவேகமாக கணிக்க கூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இதனால்தான் அவரை உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதுகிறேன். லாராவை விட தெண்டுல்கருக்கு பந்து வீசுவதுதான் மிகவும் கடினமானது.

எனது முதல் டெஸ்டில் அவரது ஆட்டத்தை பார்த்து மெய்சிலிர்த்து இருக்கிறேன். அவரை பலமுறை அவுட் செய்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமே.

அவரை அவுட் செய்ய கூடுதல் கவனம் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் என்னை பொறுத்தவரை அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன்.

இவ்வாறு பிரெட்லி கூறியுள்ளார்

அடுத்ததடுத்த தோல்விகள் அதிர்ச்சி அளிக்கவில்லை - கோஹ்லி



ஆசிய கோப்பை தொடரின் அடுத்ததடுத்த தோல்விகள் அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை,’’ என இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 

இதில் தனது முதல் லீக் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணி, இலங்கை, பாகிஸ்தான் என இரண்டு அணிகளுக்கு எதிராக தாக்குபிடிக்கமுடியாமல் தோல்வியை தழுவியது. தவிர, இத்தொடரின் பைனலுக்கான வாய்ப்பையும் கோட்டைவிட்டு வெளியேறியது.

இந்நிலையில் இந்தியாவின் இரட்டை தோல்வி அதிர்ச்சி அளிக்கவில்லை என இந்திய கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது:

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி அதிர்ச்சி எதுவும் ஏற்படுத்தவில்லை. இந்திய வீரர்கள் போரடிய விதத்தை பார்த்து பெருமைப்படுகிறேன். போட்டியின் போது அதிக பனிப்பொழிவு இருந்தது. இது இந்திய வீரர்களின் வேலையை அதிகப்படுத்தியது. இதில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் இந்திய வீரர்கள் வெற்றிக்கு கொடுத்த போராட்டத்தை யாரும் மறக்கமுடியாது.

தவிர, வலிமையான அணிக்கு எதிராக அனுபவம் இல்லாத வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். குறிப்பாக அமித் மிஸ்ரா செயல்பாடு திருப்தி அளிக்கும் விதத்தில் இருந்தது. ‘டுவென்டி–20’ போட்டிளை போல எளிய முயற்சியில் 50 ஓவர் போட்டிகளில் வெற்றிபெற முடியாது.

குறைந்த ரன்கள் இலக்காக இருந்தால் அப்ரிதி, குல் விரைவாக ரன்கள் சேர்க்க முயற்சிப்பார்கள், அப்போது விக்கெட் கைப்பற்ற அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். அது சிறந்த முறையில் கைகொடுத்தது. 

ஆனால் அஷ்வின் பந்தில் இரண்டு சிக்சர் அடித்த அப்ரிதி அணியை வெற்றி பெற செய்தார். பொதுவாக பனிப்பொழிவு இருக்கும் போது பவுலர்களை எந்த குறையும் சொல்லமுடியாது. 

ஆனால் பீல்டிங்கில் கிடைத்த சில அரிய வாய்ப்புகளை பயன்படுத்தியிருந்தால், இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம். போட்டியில் வெற்றி, தோல்வி என்பதை நாம் நிர்ணயிக்க முடியாது. 

அதனால் இந்த தோல்விகள் அதிர்ச்சி எதுவும் ஏற்படுத்தவில்லை. வெற்றிபெற இந்திய வீரர்கள் கடினமாக கடைசிவரை போராடிய  விதம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.

இந்தியாவை விரட்டினார் அப்ரிதி - கடைசி ஓவர் வரை டென்ஷன்

ஆசிய கோப்பை பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த அப்ரிதி, வெற்றி இலக்கை விரட்ட கைகொடுத்தார். தவிர, இந்தியாவின் பைனல் கனவுக்கும் வேட்டு வைத்தார்.
வங்கதேசத்தில் 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த 6வது லீக் போட்டியில் ‘பரம எதிரிகளான’ இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில், ஸ்டுவர்ட் பின்னி நீக்கப்பட்டு, அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். 


தவான் ஏமாற்றம்:

இந்திய அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. முகமது ஹபீஸ் பந்தில் ஷிகர் தவான் (10) வீழ்ந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு ‘அடி’ விழுந்தது. இம்முறை கேப்டன் விராத் கோஹ்லி (5), குல் ‘வேகத்தில் அவுட்டானார். 

பின் ரோகித் சர்மா, ரகானே சேர்ந்து அணியை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஜூனைடு கான், குல் பந்துவீச்சில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட ரோகித் (56) ஒருநாள் அரங்கில் தனது 22வது அரைசதத்தை பூர்த்தி செய்து அவுட்டானார். 


தல்ஹா அசத்தல்:

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், ரகானே சேர்ந்து ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்த ரன் வேகம் அப்படியே குறைந்தது. அறிமுக பவுலர் தல்ஹா வேகத்தில் ரகானே 23 ரன்களுக்கு(50 பந்துகள்) அவுட்டானார். சிறிது நேரத்தில் கார்த்திக்கும் (23) நடையை கட்டினார். தோனியும் இல்லாததால் அணியின் ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது.

கடைசி கட்டத்தில் அம்பதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா ஜோடி விரைவாக ரன் சேர்த்தது. அப்ரிதி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராயுடு (58), அரைசதம் கடந்து வெளியேறினார். 

உமர் குல் வீசிய போட்டியின் 48வது ஓவரில் அஷ்வின் 2 பவுண்டரி, ஜடேஜா ஒரு சிக்சர் அடித்தனர். சயீத் அஜ்மல் ‘சுழலில்’ அஷ்வின் (9), ஷமி (0) அவுட்டாகினர். இந்திய அணி 50 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்தது. ஒருநாள் அரங்கில் தனது 9வது அரைசதம் அடித்த ஜடேஜா (52), மிஸ்ரா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

பாகிஸ்தான் அணிக்கு அஜ்மல் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.


நல்ல துவக்கம்:

எட்டக்கூடிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஷார்ஜீல் (25), ஷேசாத் (42) ஜோடி நல்ல அடித்தளம் கொடுத்தது. மிஸ்பா (1) ரன் அவுட்டானார். பின் வந்த உமர் அக்மலை (4) மிஸ்ரா ‘பெவிலியனுக்கு’ அனுப்ப, பாகிஸ்தான் அணி, 113 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது.

பின் வந்த சோயப் மக்சூத் கைகொடுக்க, பாகிஸ்தான் அணி சீராக முன்னேறியது. அஷ்வின் பந்தில் ஹபீஸ்(75) அவுட்டானார். சோயப்(38) ரன் அவுட்டாக, லேசான பதட்டம் ஏற்பட்டது. ஆனாலும், ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த அப்ரிதி, இந்திய அணிக்கு ‘செக்’ வைத்தார். 


அப்ரிதி அதிரடி:

கடைசி ஓவரில் இந்திய வெற்றிக்கு 2 விக்கெட் தேவைப்பட்டது. பாகிஸ்தான் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. அஷ்வின் பந்துவீசினார். முதல் பந்தில் சயீத் அஜ்மல்(0) போல்டானார். இரண்டாவது பந்தில் ஜூனைத் கான் ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் அப்ரிதி ஒரு இமாலய சிக்சர் அடித்து, இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கினார். 4

வது பந்தையும் சிக்சருக்கு அனுப்பிய இவர், வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனலுக்கு அனேகமாக முன்னேறியது. அப்ரிதி(18 பந்தில் 34 ரன், 2 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார். ஆட்டநாயகன் விருதை ஹபீஸ் தட்டிச்சென்றார்.

சங்ககராவிடம் சரிந்தது இந்தியா - கடைசி ஓவரில் இலங்கை வெற்றி



ஆசிய கோப்பை லீக் போட்டியில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

துாணாக நின்று சதம் அடித்த சங்ககரா, இலங்கை அணிக்கு கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய இந்திய வீரர் ஷிகர் தவானின் ஆட்டம் வீணானது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று நடந்த தொடரின் 4வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 

இலங்கை அணியில் சுரங்கா லக்மலுக்கு பதிலாக அஜந்தா மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியில் வருண் ஆரோன் நீக்கப்பட்டு, ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.


தவான் அபாரம்:

இந்திய அணிக்கு ரோகித் சர்மா (13) மோசமான துவக்கம் கொடுத்தார். பின் ஷிகர் தவான், கேப்டன் விராத் கோஹ்லி சேர்ந்து அசத்தலாக ஆடினர். மலிங்கா வீசிய 5வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த தவான், ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார்.  இரண்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த போது, அஜந்தா மெண்டிஸ் ‘சுழலில்’ கோஹ்லி (48) போல்டானார்.

அடுத்து வந்த ரகானே (22) பெரிய அளவில் சோபிக்கவில்லை. தொடர்ந்து அசத்திய தவான், திசாரா பெரேரா வீசிய 26வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். அபாரமாக ஆடிய இவர் (94), மெண்டிஸ் பந்தில் போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 


‘மிடில்–ஆர்டர்’ ஏமாற்றம்:

இதற்கு பின் வந்தவர்கள் சொதப்பினர். தினேஷ் கார்த்திக் (4), அம்பதி ராயுடு (18) சொற்ப ரன்னில் வெளியேறினர். ஸ்டூவர்ட் பின்னி ‘டக்–அவுட்’ ஆனார். மலிங்கா ‘வேகத்தில்’ அஷ்வின் (18) நடையை கட்டினார். புவனேஷ்வர் குமார் (0), மெண்டிஸ் பந்தில் அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா, ஒரே ஒரு சிக்சர் மட்டும் அடித்தார். மெண்டிஸ் பந்தில் இரண்டு சிக்சர் விளாசிய முகமது ஷமி ஆறுதல் தந்தார்.

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (22), முகமது ஷமி (14) அவுட்டாகாமல் இருந்தனர். 

இலங்கை சார்பில் அஜந்தா மெண்டிஸ் 4, சேனநாயகே 3 விக்கெட் கைப்பற்றினர்.


குசால் அரைசதம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா, திரிமன்னே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முகமது ஷமி வீசிய 6வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த திரிமன்னே, அஷ்வின் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். 

முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த போது அஷ்வின் பந்தில் திரிமன்னே (38) அவுட்டானார். முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த குசால் பெரேரா, ஒருநாள் அரங்கில் தனது 3வது அரைசதம் அடித்தார். இவர், 64 ரன்கள் எடுத்த போது அஷ்வினிடம் சரணடைந்தார்.


‘ஹாட்ரிக்’ நழுவல்:

ஆட்டத்தின் 32வது ஓவரை வீசிய ரவிந்திர ஜடேஜா ‘இரட்டை அடி’ கொடுத்தார். இந்த ஓவரின் முதலிரண்டு பந்தில் ஜெயவர்தனா (9), சண்டிமால் (0) அடுத்தடுத்து அவுட்டானார்கள். மூன்றாவது பந்தில் கேப்டன் மாத்யூஸ் 2 ரன்கள் எடுக்க, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. பின், முகமது ஷமி ‘வேகத்தில்’ மாத்யூஸ் (6) பெவிலியன் திரும்பினார்.


சங்ககரா சதம்:

அடுத்து வந்த சேனநாயகே (12), சதுரங்கா டி சில்வா (9) நிலைக்கவில்லை. இதையடுத்து இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், அபாரமாக ஆடிய சங்ககரா போட்டியை மீண்டும் இலங்கை வசம் கொண்டு வந்தார். 

முகமது ஷமி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இவர், ஒருநாள் அரங்கில் தனது 18வது சதத்தை பதிவு செய்தார். இவர், 84 பந்தில் 103 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் இணைந்த திசாரா பெரேரா, அஜந்தா மெண்டிஸ் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.

இலங்கை அணி 49.2 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திசாரா பெரேரா (11), மெண்டிஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா தலா 3, அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு 4 புள்ளிகள் வழங்கப்பட்டன.