பூபதி-போபண்ணா, பயஸ்-விஷ்ணு, செய்னா வெற்றி

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போண்ணா ஜோடி வெற்றி பெற்றது. ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற இளம் இந்திய வீரர்களான சோம்தேவ் தேவ்வர்மன், விஷ்ணுவர்தன் முதல் சுற்றோடு வெளியேறினர்.

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிர்னி, அலெக்சாண்டர் பர்ரி ஜோடியை சந்தித்தது.

"டை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை பூபதி-போபண்ணா ஜோடி 7-6 என கைப்பற்றியது. பின் எழுச்சி கண்ட பெலாரஸ் ஜோடி "டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை 7-6 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தது.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 8-6 என கைப்பற்றியது. இறுதியில் பூபதி-போபண்ணா ஜோடி 7-6, 6-7, 8-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.


ஒற்றையரில் சொதப்பல்:

ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், பின்லாந்தின் ஜார்க்கோ நிமினனிடம் 3-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில், இந்தியாவின் விஷ்ணு வர்தன், சுலோவேனியாவின் பிளாஸ் காவ்சிச்சிடம் 3-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.


சங்வான் ஏமாற்றம்:

ஆண்களுக்கான குத்துச்சண்டை "லைட் ஹெவிவெயிட் 81 கி.கி., எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் சங்வான், பிரேசிலின் புளோரன்டினோ யமாகுசி பால்கயோவை சந்தித்தார். இதில் சங்வான் 14-15 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.


பம்பயலா "அவுட்:

லண்டன் ஒலிம்பிக் வில்வித்தை பெண்களுக்கான தனிநபர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பம்பயலா தேவி, கிரீஸ் நாட்டைச் சேர்ந்த இவான்ஜெலியா பசாராவை 6-4 என வீழ்த்தினார். பின் இரண்டாவது சுற்றில் பம்பயலா, மெக்சிகோவின் அய்டா ரோமனை சந்தித்தார். இதில் துவக்கத்தில் இருந்தே சொதப்பிய பம்பயலா தேவி 2-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து
வெளியேறினார்.


பெடரர் முன்னேற்றம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் இரண்டாவது சுற்றில் உலகின் "நம்பர்-1 வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் ஜுலியன் பெனட்டியாவை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய பெடரர் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் மிகச் சுலபமாக வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், போலந்தின் உர்சுலா ரத்வான்ஸ்காவை சந்தித்தார். இதில் செரினா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று, மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்ற ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் டேவிட் பெரர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.

செய்னா நேவல் வெற்றி

ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவலின் வெற்றிநடை தொடர்கிறது.

நேற்று இரவு நடந்த கடைசி லீக் போட்டியில் உலகின் 5ம் நிலை வீராங்கனையான செய்னா, பெல்ஜியத்தின் டான் லியானியை சந்தித்தார். இதில் அசத்தலாக ஆடிய செய்னா முதல் செட்டை 21-4 என்ற கணக்கில் 9 நிமிடங்களில் வென்றார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர் 21-14 என்ற கணக்கில் 15 நிமிடங்களில் வென்றார். இறுதியில் செய்னா 21-4, 21-14 என்ற நேர் செட்களில் வெறும் 24 நிமிடங்களில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.


பயஸ்-விஷ்ணு வெற்றி

ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

நேற்று இரவு நடந்த முதல் சுற்றுப் போட்டியில் அபாரமாக ஆடிய பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ், ஜீன்-ஜுலியன் ரோஜர் ஜோடியை 7-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இன்று முதல் பதக்கம் கிடைத்தது. 10 மீ., துப்பாக்கி சுடுதல் ஏர் ரைபிள் பிரி போட்டியில் ககன் நரங் மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்றார்.

லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை கோலகலாமாக துவங்கியது. இந்த போட்டியில் தற்போது பதக்க பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. பல நாடுகள் பதக்க வேட்டையை துவக்கியுள்ள நிலையில் இந்திய அணி மட்டும் பதக்கம் பெறாமல் இருந்தது.

இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட பல வீரர்கள் தோல்வியை தழுவினர். பேட்மின்டனில் ஜூவாலா கட்டா தோல்வியடைந்தார். டேபிள் டென்னிசில் இந்திய அணி தோல்விடைந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

நேற்று செய்னா நேவல் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்று வில்வித்தையில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பொம்பல்யா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதால், இந்த முறையும் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபினவ் பிந்தரா, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெறியேறினார்.

இன்று , இந்தியாவின் ககன் நரங் வெண்கலப்பதக்கம் வென்று இந்திய ரசிகர்களின் ஏக்கத்தை போக்கினார். அவர், துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு தகுதிச்சுற்றில் 598 புள்ளிகள் பெற்று 3வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினார்.பைனலில் அவர் 103.1 புள்ளிகள் பெண்ணு மொத்தம் 701.1 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனை படைத்தார்.

ககன் சாதனைக்கு அவரது தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார். ககன் , இந்திய கொடியை ஒலிம்பிக் கிராமத்தில் பறக்க விட்டுள்ளார் என பெருமையுடன் கூறினார்.

இன்று துகப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற ககன் நரங் மூன்றாவது வீரர் ஆனார். முன்னாக கடந்த 2004ம் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 2008ம் ஆண்டு 10.மீ., ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்தரா தங்கப்பதக்கம் வென்றார்.

இன்றைய போட்டியில் ருமேனியாவின் ஆலின் ஜார்ஜ் மோல்டோவியாயு தங்கப்பதக்கத்தையும், இத்தாலியின் நிக்கோலோ கேம்ப்ரியானி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

வெண்கலப்பதக்கம் வென்ற ககன் நரங், அரியானா மாநில அரசு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ககன் நரங் பதக்கம் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், இன்னும் பல வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர், அபினவ் பிந்தரா பதக்கம் வென்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என கூறினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ககன் நரங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் தொடக்க விழா துளிகள்

இங்கிலாந்து கால்பந்து அணி முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம், தேம்ஸ் நதியில் அதிவேக மோட்டார் படகில் பயணித்தபடி ஒலிம்பிக் சுடரை எடுத்து வந்தார். அதை சர் ஸ்டீவ் ரெட்கிரேவ் பெற்றுக் கொண்டார்.

* இங்கிலாந்து ராணியை, ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் ஹெலிகாப்டரில் அழைத்து வருவது போன்ற வீடியோ காட்சி திரையிடப்பட்டது.

* 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் மகளிர் டேக்வாண்டோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாரா ஸ்டீவன்சன் வீரர், வீராங்கனைகளின் சார்பாக ஒலிம்பிக் உறுதிமொழி ஏற்றார்.

* லண்டன் ஒலிம்பிக் போட்டி முறைப்படி தொடங்குவதாக ராணி எலிசபெத் அறிவித்தார்.

* ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் ஏற்றப்பட்ட ஜோதிக்கான கொப்பரையில், போட்டியில் பங்கேற்கும் நாடுகளைக் குறிக்கும் வகையில் தாமிரத்தாலான 204 இதழ்கள் இடம் பெற்றுள்ளன.

* ‘அதிசயத் தீவுகள்’ தொடக்க விழா நிகழ்ச்சியை, பிரபல திரைப்பட இயக்குனர் டேனி பாயல் ரூ.235 கோடி செலவில் பிரம்மாண்டமாக வடிவமைத்திருந்தார்.

* மொத்தம் 15,000 இசை, நடன, நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

* ஒலிம்பிக் ஸ்டேடிய மைதானத்தில் கிராமப்புற சூழலை தத்ரூபமாகக் காட்சிப்படுத்துவதற்காக பச்சை பசேலென வயல்வெளி, செடி கொடிகள், ஆடு, மாடு, குதிரை, வாத்து என கால்நடைகளும், பறவைகளும் கூட நிகழ்ச்சியில் இடம் பெற்றன.

* ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் குழுமியிருந்த 80,000 பேருடன், உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமானோர் தொடக்க விழா நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை டிவியில் கண்டு ரசித்தனர்.

கடைசி ஓவரில் இந்தியா வெற்றி - இலங்கை ஏமாற்றம்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய கவுதம் காம்பிர் சதம் அடித்து கைகொடுத்தார்.

சொந்த மண்ணில் பவுலிங்கில் சொதப்பிய இலங்கை அணி தோல்வி அடைந்தது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டி, நேற்று கொழும்புவில் நடந்தது. "டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் ஜெயவர்தனா, "பேட்டிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணியில் உமேஷ் யாதவ், பிரக்யான் ஓஜா நீக்கப்பட்டு டிண்டா, "போதை' ராகுல் சர்மா இடம் பெற்றனர். இலங்கை அணியில் திரிமான்னேவுக்குப் பதில் ஜீவன் மெண்டிசிற்கு வாய்ப்பு கிடைத்தது.


அசத்தல் துவக்கம்:

இலங்கை அணிக்கு வழக்கம் போல தரங்கா, தில்ஷன் துவக்கம் கொடுத்தனர். இந்தியா சார்பில் வேகப்பந்து வீச்சை துவக்கிய "சீனியர்' ஜாகிர் கான் மிரட்டினார். முதலில் அபாயகரமான தில்ஷனை (4) போல்டாக்கினார். சில நிமிடத்தில் தரங்காவையும் (8), இவர் திருப்பி அனுப்பினார். மறு முனையில் அசத்திய இர்பான் பதான் வேகத்தில் சண்டிமால், "டக்' அவுட்டானார்.


"சூப்பர்' ஜோடி:

பின் இந்திய பவுலர்கள் ஏனோ, தானோ என்று சொதப்ப துவங்கினர். வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஜெயவர்தனா, சங்ககரா ஜோடி அணியை, சரிவில் இருந்து மீட்டது. இர்பான் ஓவரில் தலா ஒரு பவுண்டரி அடித்த இருவரும், பின் நிதானத்துக்கு மாறினர். இதனால், ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது.

போகப் போக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெயவர்தனா, சர்வதேச அரங்கில் 48வது அரைசதம் அடித்தார். இந்தியாவுக்கு எதிரான 17வது அரைசதம் இது. இந்த ஜோடியை பிரிக்க தோனி எடுத்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. கடந்த போட்டியில் சதம் அடித்த சங்ககரா, நேற்றும் பேட்டிங்கில் கைகொடுத்தார். இவர், தனது 73வது அரைசதம் அடித்தார்.

ஒரு வழியாக நான்காவது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில், ராகுல் சர்மா சுழலில் ஜெயவர்தனா (65) சிக்கினார். சிறிது நேரத்தில் சங்ககராவும் 73 ரன்னில் அவுட்டானார்.


மாத்யூஸ் அசத்தல்:

இதன் பின் மாத்யூஸ், ஜீவன் மெண்டிஸ் இணைந்தனர். இவர்கள் இந்திய அணியின் பவுலிங்கை ஒரு "கை' பார்த்தனர். இர்பான், அஷ்வின் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிய மெண்டிஸ், டிண்டா பந்தில் சிக்சர் அடித்தார். இவரது பந்தில் தன்பங்கிற்கு சிக்சர் அடித்த மாத்யூஸ், தனது 11வது அரைசதம் கடந்தார்.

இவர்களது அதிரடியில், கடைசி 10 ஓவர்களில், இலங்கை அணி 97 ரன்கள் சேர்த்தது. 50 ஓவர் முடிவில் இலங்கை அணி, 5 விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தது. மாத்யூஸ் (71), மெண்டிஸ் (45) அவுட்டாகாமல் இருந்தனர்.


காம்பிர் அபாரம்:

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சேவக் (3) அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த விராத் கோஹ்லி (38), கேப்டன் தோனி (31) நிலைக்கவில்லை. மறுமுனையில் பொறுப்பாக ஆடிய மற்றொரு துவக்க வீரர் காம்பிர், ஒருநாள் அரங்கில் தனது 11வது சதம் அடித்தார். இவர் 102 ரன்கள் எடுத்திருந்த போது "ரன்-அவுட்' ஆனார். வழக்கம் போல ரோகித் சர்மா (0) ஏமாற்றினார்.


ரெய்னா அரைசதம்:

பின் இணைந்த சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான் ஜோடி இலங்கை பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. மலிங்கா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ரெய்னா, ஒருநள் அரங்கில் தனது 23வது அரைசதம் அடித்தார். வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது முதலிரண்டு பந்தில் ரெய்னா மூன்று ரன்கள் எடுத்தார். மூன்றாவது பந்தை இர்பான் கோட்டைவிட பரபரப்பு ஏற்பட்டது. நான்காவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இர்பான் வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணி 49.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்து, இலங்கை மண்ணில் சாதனை வெற்றி பெற்றது. ரெய்னா (65), இர்பான் (34) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் மலிங்கா 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி ஜூலை 31ல் கொழும்புவில் நடக்கிறது.

எழுச்சி பெறுமா இந்தியா - இன்று இலங்கையுடன் 3வது மோதல்

இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் சொதப்பிய இந்திய அணி, இன்று எழுச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கினாலும், முதல் போட்டியில் வெற்றி பெற்று நம்பிக்கை தந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் படுமோசமாக தோல்வியடைந்தது.

இன்று, இரு அணிகள் மோதும் மூன்றாவது ஆட்டம், கொழும்புவில் பகலிரவு போட்டியாக நடக்கிறது.

இந்திய அணி கேப்டன் தோனி, பெரும்பாலும் அணியில் பெரிய மாற்றத்தை விரும்ப மாட்டார். தொடரின் முதல் போட்டியில் களமிறங்கும் அணிதான், கடைசிவரை நீடிக்கும். அதேநேரம், ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் சொதப்பிய ரோகித் சர்மா, முதல் இரு போட்டியில் 1, 0 என, ஏமாற்றினார்.

கடைசியாக ரோகித் சர்மா விளையாடிய 10 போட்டிகளில், 156 ரன்கள் தான் எடுத்துள்ளார். இருந்தும், இவருக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பு தந்து ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார்.
தனது கடைசி போட்டியில் (2011, டிச.,) சதம் அடித்த மனோஜ் திவாரி நிலை தான் பரிதாபமாக உள்ளது. அணியில் இடம்பெற்று, உடற்தகுதி இருந்தும், தொடர்ந்து 14 போட்டிகளில் களத்துக்கு வெளியே தான் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

துவக்கத்தில் சேவக், காம்பிர் அடுத்து விராத் கோஹ்லி, ரெய்னா தங்கள் இடத்தை உறுதி செய்து விடுவதால், ரகானேவும் இடமில்லாமல் தடுமாறுகிறார். "மிடில் ஆர்டருக்கும்' இவர் ஒத்து வரமாட்டார் என்பதால், இன்றும் வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதி.


ஓஜா சிக்கல்:

பிரேமதாசா மைதானம் வழக்கமாக சுழற் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும். ஆனால், பிரக்யான் ஓஜா காயம் அடைந்தது, இந்திய அணியின் பவுலிங்கில் பின்னடைவு தான். இதனால், அஷ்வினுடன், "போதை' ராகுல் சர்மா களமிறங்குவாரா இல்லையா என்பது உறுதியில்லாமல் உள்ளது.

ஏனெனில், இவர் போதை மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளதால், போட்டியில் களமிறங்க பி.சி.சி.ஐ., , அனுமதிக்குமா என்று தெரியவில்லை. இதனால், வேகத்தில் "சீனியர்' ஜாகிர் கான், உமேஷ் யாதவ், "ஆல்-ரவுண்டர்' இடத்தில் இர்பான் பதான் கைகொடுக்க வேண்டும்.


பேட்டிங் பலம்:

இலங்கை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் வலுவாகத்தான் உள்ளது. சதம் அடித்த சங்ககரா, தில்ஷன், தரங்கா இன்றும் அசத்தலை தொடரலாம். பவுலிங், பேட்டிங்கில் ஜொலிக்கும் "ஆல்-ரவுண்டர்' பெரேரா இந்த அணிக்கு பெரும் பலமாக உள்ளார்.

இவருடன் மாத்யூஸ், சண்டிமால், திரிமான்னேவும் தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்க்கின்றனர்.


மலிங்கா ஆறுதல்:

முதல் போட்டியில ஏமாற்றிய மலிங்கா, அடுத்து வழக்கமான தனது விக்கெட் வேட்டைக்கு திரும்பியது, கேப்டன் ஜெயவர்தனாவுக்கு ஆறுதல் தான். இளம் <இசுரு உதனா, சுழலில் ரங்கனா ஹெராத், ஜீவன் மெண்டிஸ், சேனநாயகேவும் கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

ஒலிம்பிக் மைதானத்தில் அதிசய தீவு

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் இன்று வண்ணமயமாக துவங்குகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு துவக்கவிழா மிகப் பிரமாண்டமாக நடக்க உள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி இன்று துவங்குகிறது. இதற்கான வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு ஆஸ்கர் விருது வென்ற இயக்குனர் டேனி பாயல் தலைமையிலான குழு நடத்துகிறது.

மூன்றரை மணி நேரம் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு "அதிசய தீவுகள்' என, பெயரிடப்பட்டுள்ளது. 27 முறை மணி ஓசை ஒலிக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் துவங்கும்.


வருகிறார் "007':

அடுத்து இங்கிலாந்தின் பல்வேறு துறையில் பிரபலமானவர்களை மைதானத்தில் தோன்ற உள்ளனர். "ஜேம்ஸ்பாண்ட்' டேனியல் கிரெக் என்பவர் நடித்த "தி அரைவல்' என்ற குறும்படம் காண்பிக்கப்படும்.

பி.பி.சி.,யால் தயாரிக்கப்பட்ட இதில், ஜேம்ஸ்பாண்ட் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வந்து, அப்படியே ஒலிம்பிக் மைதானத்துக்கு, பாராசூட்டில் மேலிருந்து கீழே இறங்குகிறார். அப்போது ஹெலிகாப்டருடன் இணைக்கப்பட்ட கயிற்றில் ஒலிம்பிக் ஜோதி எடுத்து வரப்படும்.


உண்மை விலங்குகள்:

பின் "கிரீன் அண்டு பிளசன்ட்' என்ற நிகழ்ச்சி துவங்குகிறது. இதில் பிரிட்டனின் பசுமையான கிராமப்புறமாக போல் மைதானம் மாறும். இதில் உண்மையான குதிரைகள், ஆடுகள், வாத்துகள், மாடுகள் பங்கேற்கும்.


பாரம்பரிய நிகழ்ச்சி:

இதன்பின், இங்கிலாந்தின் வரலாறு குறித்து, மைதானத்தில் விரிவாக காண்பிக்கப்பட உள்ளது. அப்போது நூற்றுக்கணக்கில் வீரர்கள் அரங்கில் தோன்றுவர். இங்கிலாந்தில் நடந்த தொழிற்புரட்சியை நினைவுபடுத்தும் வகையில், "சிம்னி' விளக்குகளுடன் தோன்றுவர்.


வீரர்கள் அணிவகுப்பு:

இதையடுத்து, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நாடுகளில் அகர வரிசைப்படி, மைதானத்தில் அணி வகுத்து வருவர். இதில் முதல் அணியாக கிரீசும், கடைசியில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து வீரர்களும் வருவர்.


உறுதி மொழி:

பின், லண்டன் ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டியின் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் செபாஸ்டியன் கோ, அடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜாக்ஸ் ரோகி என, இருவரும் துவக்க உரை ஆற்றுவர்.

அடுத்து ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டு, ஒலிம்பிக் கீதம் இசைக்கப்படும். பின், போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்வர். பின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படும். இது ஒலிம்பிக் போட்டி முடியும் வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். தொடர்ந்து வாண வேடிக்கையுடன் துவக்க விழா நிறைவு பெறும்.

டெஸ்ட் ரேங்கிங்: சச்சின் பின்னடைவு

சர்வதேச டெஸ்ட் வீரர்களுக்கான தர வரிசைப் பட்டியலில், இந்தியாவின் சச்சின், 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது.

இதில் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (749 புள்ளி), ஒரு இடம் பின்தங்கி 12வது இடம் பிடித்தார். இவரைத் தவிர வேறு இந்திய வீரர் யாரும் "டாப்-20' இடத்துக்குள் இல்லை.

முதல் மூன்று இடங்களில் இலங்கையின் சங்ககரா(892), தென்ஆப்ரிக்காவின் காலிஸ் (874), ஆம்லா (872) உள்ளனர். பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜாகிர் கான் (697), பிரக்யான் ஓஜா (572) மட்டும் 12வது, 20வது இடத்தில் உள்ளனர்.

இதில், முதல் மூன்று இடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (896), பாகிஸ்தானின் அஜ்மல் (832), இலங்கையின் ஹெராத் (782) உள்ளனர்.

"ஆல் ரவுண்டர்கள்' வரிசையில் தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ் (616) முதலிடம் பிடித்தார். வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (404), நியூசிலாந்து வீரர் வெட்டோரி (349) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

கபில்தேவ் மீதான தடையை நீக்கியது பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மீதான தடையை நீக்கி அவருக்கு பிசிசிஐ மன்னிப்பு வழங்கியது. இதன்மூலம் அவர் கிரிக்கெட் வாரியம் மூலம் ரூ.1.5 கோடி வரையிலான சலுகைகள் பெற வாய்ப்பு உள்ளது.

முதல் முறையாக உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய கபில்தேவ், ஓய்வு பெற்ற பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் அவருக்க உயர் பொறுப்பு வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டி தொடங்கப்பபட்டபோது, அதற்கு எதிராக ஐ.சி.எல் போட்டி தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக கபில் தேவ் செயல்பட்டதுடன், பிசிசிஐ.க்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

இதனையடுத்து அவர் பிசிசிஐ.யின் பதவி வகிக்கவும், வாரியத்தின் உயர்மட்டக்குழு கூட்டத்திலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், ஐ.சி.எல் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், தன் மீதான தடையை நீக்கும்படியும் பிசிசிஐ.க்கு கபில்தேவ் கடிதம் எழுதினார்.

இன்று பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் பிசிசிஐ தலைவர் சீனிவாசனை சந்தித்தார். அப்போது ஐசிஎல் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்காக கடித நகலையும் ஒப்படைத்தார்.

இதையடுத்து அவர் மீதான தடையை நீக்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐசில் தலைவர் பதவியிலிருந்து விலகுவதுடன், பிசிசிஐக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும் கடிதத்தில் கூறியதால் அவர் மீதான தடை நீக்கப்படுவதாக சீனிவாசன் தெரிவித்தார்.

தற்போது தடை நீங்கியதன்மூலம் கபில்தேவுக்கு மீண்டும் பிசிசிஐ உயர் பொறுப்புகள் கிடைக்கவும், ரூ.1.5 கோடி வரையலின சலுகைகளும் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உள்ளது

சுருண்டது இந்திய அணி - இலங்கை முதல் வெற்றி

இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 138 ரன்னுக்கு "ஆல் அவுட்' ஆனது. இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி, அம்பாந்தோட்டை மைதானத்தில் நடக்கிறது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியின் துவக்க வீரர் சேவக் (15), இம்முறை நிலைக்கவில்லை.

அடுத்து வந்த விராத் கோஹ்லி (1), ரெய்னா (1) ஏமாற்றினர். ரோகித் சர்மா "டக்' அவுட்டானார். தோனியும் (11) கைவிட்டார். இர்பான் 6, அஷ்வின் 21 ரன்கள் எடுத்தனர்.

கடைசி வரை போராடிய காம்பிர், 65 ரன்னில் அவுட்டாக, இந்திய அணி 33.3 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை சார்பில் பெரேரா, மாத்யூஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு தில்ஷன் (50), தரங்கா (59) கைகொடுக்க, 19.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய மூவர்ணக்கொடி

ஒலிம்பிக் கிராமத்தில், இந்திய மூவர்ணக்கொடி திட்டமிட்டப்படி நேற்று ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஒத்திவைக்க வேண்டுமென்ற இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

லண்டனில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ம் தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் ஒலிம்பிக் கிராமத்தில் ஏற்றப்படும். இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைவர் அஜித் பால் சிங் மற்றும் பெரும்பாலான விளையாட்டு நட்சத்திரங்கள் இன்னும் லண்டன் வந்து சேரவில்லை.

எனவே, கொடி ஏற்றும் நிகழ்ச்சியை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை லண்டன் ஒலிம்பிக் நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

இதையடுத்து ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று தேசிய கீதம் இசைக்க,இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.அருகில் ஐந்து வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் கொடியும் ஏற்றப்பட்டது.

இதில் ஒலிம்பிக் கிராமத்தின் மேயர் சார்லஸ் ஆலன், இந்திய ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவர் முரளிதரன் ராஜா கலந்து கொண்டனர். இந்தியக் குழு முழுமையாக வராததால் வெறும் 35 வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றனர்.

வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, டென்னிஸ் வீரர்கள் மகேஷ் பூபதி, போபண்ணா, குத்துச்சண்டை அணியினர் மற்றும் ஹாக்கி வீரர்கள் சிலர் பங்கேற்றனர்.

கடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, பயிற்சிக்காக ஜெர்மனி சென்றிருப்பதால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.

வீரர்களை வரவேற்று சார்லஸ் ஆலன் கூறுகையில்,"" பல்வேறு கலாசாரத்தில் இருந்து ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்திருக்கிறீர்கள். என்றும் மறக்கமுடியாத நினைவுகளோடு திரும்பிச் செல்வீர்கள் என நம்புகிறேன்.

இந்திய குழுவினர் முழுமையாக வராததால், இந்நிகழ்ச்சியை ஒத்தி வைக்க வேண்டுமென்ற நிர்வாகிகளின் கோரிக்கையை புரிந்து கொண்டோம். ஆனாலும், ஏற்கனவே திட்டமிட்ட அட்டவணையில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.

இந்தியாவை போல பல்வேறு நாடுகளும் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை மாற்றி அமைக்க வலியுறுத்தின. இதனை ஏற்றுக் கொண்டால் ஒட்டுமொத்த போட்டிக்கும் இடையூறு ஏற்படும்,''என்றார்.

தப்புகிறாரா போதை ராகுல் சர்மா?

போதை மருந்து பயன்படுத்திய ராகுல் சர்மா மீது, நடவடிக்கை எடுப்பதில் அவசரம் காட்டப் போவதில்லை. போலீஸ் அறிக்கை குறித்து தீவிரமாக ஆராய்ந்த பின்னரே முடிவு செய்யப்படும்,'' என, ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்தார்.

பஞ்சாப்பை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சர்மா, 25. ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் சர்மா, மே 20ம் தேதி மும்பை ஓட்டலில் நடந்த "பார்ட்டி'யில் சக வீரர் பார்னலுடன் (தென் ஆப்ரிக்கா) கலந்து கொண்டார்.

இதில் பங்கேற்றவர்கள் போதை மருந்து பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடந்த "ரெய்டில்' ராகுல் சர்மா, பார்னல் உட்பட 90 பேர் பிடிபட்டனர். இவர்களது ரத்தம், சிறுநீர் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.

ராகுல் சர்மா, பார்னல், முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடியின் மகன் அங்கன் பேடி <உட்பட 42 பேர், "கேனபிஸ்', "கோகெய்ன்' என்ற போதை மருந்துகளை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இவர்களை விரைவில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" சம்பவம் நடந்து இத்தனை நாளைக்குப் பின் தான் அறிக்கை வெளிவந்துள்ளது. ராகுல் சர்மா குறித்து போலீசார் தரும் அறிக்கையை முழுமையாக படித்துப் பார்த்து, நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.
அணியில் இடமில்லை

போதை மருந்து பயன்படுத்தி சிக்கியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சர்மா, தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய அணியில் இடம் பெற்றார். நேற்று நடந்த முதல் போட்டியில், களமிறங்கிய 11 பேர் கொண்ட அணியில் இவர் சேர்க்கப்படவில்லை.

உலக கோப்பை "டுவென்டி-20' உத்தேச அணியில் யுவராஜ்

உலக கோப்பை "டுவென்டி-20' தொடருக்கான, உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், "கேன்சரில்' இருந்து மீண்ட யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் இடம் பெற்றுள்ளனர்.

நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர், வரும் செப்., 18 முதல் அக்., 12 வரை இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான 30 பேர் கொண்ட, உத்தேச இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.


பதான் சகோதரர்கள்:

கேப்டன் தோனி, சேவக், ரெய்னா, காம்பிர், ரோகித் சர்மா <உள்ளிட்ட வழக்கமான வீரர்களுடன், இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள், ரவிந்திர ஜடேஜா, அஷ்வினும் இடம் பெற்றனர். நுரையீரல் "கேன்சர்' கட்டி பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்ட யுவராஜ், கடந்த இரு மாதங்களாக "பேட்டிங்' பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவரும் உத்தேச அணியில் இடம் பெற்றார். இவர், 15 பேர் கொண்ட பிரதான அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.


மன்தீப்புக்கு இடம்:

கடந்த ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மன்தீப் சிங் புதுமுகமாக வாய்ப்பு பெற்றுள்ளார். கடந்த சீசனில் 432 ரன்கள் குவித்த இவர், இதுவரை 13 முதல் தர போட்டிகளில் 1074 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 63.


ராயுடுவுக்கு வாய்ப்பு:

அதேபோல, கபில்தேவின் ஐ.சி.எல்., அமைப்பில் இருந்து விலகிய மும்பை வீரர் அம்பதி ராயுடுவுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் இவர் மும்பை அணியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் (15 போட்டி, 333 ரன்கள்) முதலிடம் பெற்றார். சமீபகாலமாக அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


உத்தேச அணி விவரம்:

தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, அஷ்வின், பிரக்யான் ஓஜா, உமேஷ் யாதவ், அசோக் டிண்டா, ரகானே, மனோஜ் திவாரி, ராகுல் சர்மா, வினய் குமார், ஜாகிர் கான், யுவராஜ் சிங், உத்தப்பா, இர்பான் பதான், யூசுப் பதான், மன்தீப் சிங், பியுஸ் சாவ்லா, ரவிந்திர ஜடேஜா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், முனாப் படேல், நமன் ஓஜா, தினேஷ் கார்த்திக், பிரவீண் குமார், பாலாஜி.


பட்டின்சனுக்கு "நோ'

உலக கோப்பை "டுவென்டி-20' தொடருக்கான உத்தேச ஆஸ்திரேலிய அணியில், வேகப்பந்து வீச்சாளர் பட்டின்சன் இடம் பெறவில்லை.

நியூசிலாந்து, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர் பட்டின்சன், சுழற் பந்து வீச்சாளர் நாதன் லையான் புறக்கணிக்கப்பட்டனர். மற்றபடி, கிளின்ட் மெக்கே, மிட்சல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹில்பெனாஸ் ஆகியோருடன், மிட்சல் ஜான்சன், நானஸ், ஹாரிஸ் ஆகிய அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது.


உத்தேச அணி விவரம்:

ஜார்ஜ் பெய்லி, டிராவிஸ் பெர்ட், கிறிஸ்டியன், கம்மின்ஸ், தோகர்டி, பால்க்னர், ஆரோவ் பின்ச், ரேயான் ஹாரிஸ், ஹில்பெனாஸ், பிராட் ஹாக், டேவிட் ஹசி, மைக்கேல் ஹசி, மிட்சல் ஜான்சன், மிட்சல் மார்ஷ், லாப்லின், ஷான் மார்ஷ், மாக்ஸ்வெல், மெக்டொனால்டு, மெக்கே, நானஸ், ஓ கீபே, பெய்னே, குயினே, ஸ்டீவன் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், ஆடம் வோஜஸ், மாத்யூ வேட், வார்னர், வாட்சன், காமிரான் ஒயிட்.

இதிலிருந்து 15 பேர் கொண்ட அணி, வரும் ஆக., 18ல் அறிவிக்கப்படும்.


பீட்டர்சன் நீக்கம்

உலக கோப்பை "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கும் பீட்டர்சனின் கனவு தகர்ந்தது.

இங்கிலாந்தின் அதிரடி வீரர் கெவின் பீட்டர்சன்,32. சமீபத்தில் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு விதிப்படி ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற்றால், "டுவென்டி-20' போட்டியில் பங்கேற்க முடியாது. இதன்படி நேற்று அறிவிக்கப்பட்ட "டுவென்டி-20' <உலக கோப்பைக்கான இங்கிலாந்து உத்தேச அணியில் பீட்டர்சன் பெயர் இடம் பெறவில்லை. கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாக்.அணி இந்தியா வருகை - கவாஸ்கர் கண்டனத்திற்கு பிசிசிஐ பதில்

மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக டிசம்பர் மாதம் இந்தியா வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதற்கான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டது. பிசிசிஐ-ன் இந்த அறிவிப்பை கிரிக்கெட் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

முன்னாள் கேப்டன் பிஷன்சிங் பேடி வரவேற்றுள்ளார். பாகிஸ்தான் அணி இந்தியா வருவதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட அனுமதி அளித்த பிசிசிஐக்கு, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவசேனாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் கேப்டன் என்ற முறையில் கருத்து தெரிவிக்க கவாஸ்கருக்கு உரிமை உள்ளது என்று பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். சிவசேனா கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து கேட்டபோது, ‘பிசிசிஐ இந்த முடிவை எடுத்தபோது எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி உடனிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்வாக நிறைய பிரச்சினைகளை யார் வேண்டுமானாலும் எழுப்பலாம். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை காண்பதில் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இரு நாட்டு அரசியல் சூழ்நிலை ஸ்திரமற்றதாக இருக்கும் நிலையிலும், கிரிக்கெட் வாரியங்கள் மனப்பூர்வமாக இணைந்து செயல்படுகின்றன’ என்றார்.

பாகிஸ்தான் அணி வருகைக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் வாய்ப்பு பற்றி கேட்டதற்கு, பாகிஸ்தானில் பாதுகாப்பு திருப்தி அளிக்கும் பட்சத்தில் இருந்தால் கண்டிப்பாக இந்திய அணி அங்கு செல்லும், என்று சுக்லா தெரிவித்தார்.

பிசிசிஐ-ன் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ், இதன்மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவு வலுப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தான் மக்களும் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உலக கிரிக்கெட் அரங்கில் வலுவான அணியாக திகழும் இந்திய அணியுடன் விளையாடுவதால் பாகிஸ்தான் வீரர்களும் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும் என்றார் ஜாகீர் அப்பாஸ்.

ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம்: சானியா

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் எத்தனை பதக்கம் வெல்வோம் என்று உறுதியளிக்க முடியாது. அதேநேரத்தில் 100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது: இத்தனை பதக்கங்கள் வெல்வோம் என்று முன்கூட்டியே தெரிவிப்பது சரியானதாக இருக்காது. நாங்கள் அனைவருமே கடும் நெருக்கடிக்கு மத்தியில் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறோம்.

அதனால் பதக்கம் வெல்வோம் என்று உறுதிகூற முடியாவிட்டாலும், 100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.

சானியாவுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கனிடம் லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு குறித்து கேட்டபோது, "இந்தியாவுக்கு எத்தனை பதக்கம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணிப்பது பொருத்தமானதாக இருக்காது.

இந்த விஷயத்தில் முன்கூட்டியே கருத்து சொல்வது சரியாக இருக்காது என்பதால் நான் இப்போதைக்கு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை.

இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்கள் அதிகளவில் ஒலிம்பிக் போட்டிக்கு செல்வது கட்டுப்படுத்தப்படுமா என்று மாக்கனிடம் கேட்டபோது, "அடுத்த ஒலிம்பிக்கின்போது விளையாட்டுத் துறை அமைச்சர்கூட முன்னாள் வீரராகவே இருப்பார் என்று நம்புகிறேன்.

இந்த முறை லண்டன் செல்லும் 10 பேர் அடங்கிய குழுவில் நான் மட்டும்தான் விளையாட்டு வீரர் அல்ல' என்றார்.

டெஸ்ட் - ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது இந்தியா

சர்வதேச டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் இந்திய அணி ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தர வரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது.

இதில் கடந்த ஆண்டு இதே நேரத்தில் "நம்பர்-1' இடத்தை இங்கிலாந்திடம் இழந்த இந்திய அணி, தற்போது 104 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இலங்கை அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி 0-1 என்ற கணக்கில் இழந்தது.

இருப்பினும் பாகிஸ்தான் அணி, 109 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்தது.

முதல் மூன்று இடத்தில் இங்கிலாந்து(122), ஆஸ்திரேலியா(116), தென் ஆப்ரிக்கா (113) அணிகள் உள்ளன. இலங்கை அணி(98) ஆறாவது இடத்தில் உள்ளது.

டிராவிட் இடத்தை நிரப்புவது கடினம் - தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் “தூண்” என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு பிறகு அணியில் இருந்து ஓய்வு பெற்றார். டெஸ்டில் 3-வது வீரராக களம் இறங்கி அணியை தூக்கி நிறுத்துவதில் அவர் சிறந்தவர்.

டிராவிட் ஓய்வுக்கு பிறகு இந்திய அணி டெஸ்டில் விளையாடவில்லை. இந்த நிலையில் டிராவிட் இடத்தை நிரப்புவது கடினம் என்று உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியா மற்றும் உலக கிரிக்கெட்டில் வியக்கத்தக்க வீரர் ராகுல் டிராவிட் ஆவார்.

அவரது இடத்தை நிரப்புவது கடினம். அர்ப்பணிப்பு திறனோடு விளையாடக் கூடியவரால் மட்டும் அந்த இடத்துக்கு வரமுடியும்.

டெஸ்டில் 3-வது வீரராக விளையாடுவது என்பது சவாலானது. அவர் நீண்ட காலமாக அந்த வரிசையில் சிறப்பாக ஆடினார்.

எல்லா சிறந்த வீரர்களும் ஒருநாள் ஓய்வு பெற்றாகத்தான் வேண்டும். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு உள்ளூர் போட்டிகளின் அமைப்பு முறை சரியானது இல்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டு சரியானது இல்லை.

ஏனென்றால் இதே நிலையில் தான் நாம் டெஸ்டில் “நம்பர் 1” இடத்தை பிடித்தோம்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

மும்பை அணியில் சச்சின்

ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை உத்தேச அணியில் சச்சின், ஜாகிர் கான் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச அரங்கில் சாதனை வீரராக திகழும் சச்சின், உள்ளூர் போட்டிகளில் எல்லாம் பங்கேற்பது கிடையாது.

கடந்த "சீசனில்' தனது மும்பை அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. உடல்தகுதியை நிரூபிக்க ஜாகிர் கான் சில போட்டிகளில் பங்கேற்றார்.

இந்நிலையில் 2012-13 ம் ஆண்டில் நடக்கவிருக்கும் உள்ளூர் ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

35 பேர் கொண்ட பட்டியலில் சச்சின், ஜாகிர் கான், ரகானே, ரோகித் சர்மா, அகார்கர் உட்பட பல முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்டில் வெற்றி பெறுவது எப்படி?

அன்னிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற, "ஆல் ரவுண்டர்' திறமை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும்,'' என, இந்தியாவின் சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்து சாதித்தவர். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தானாக முன்வந்து விலகினார் சச்சின்.

தற்போது ஓய்வில் உள்ள சச்சின் கூறியது.

ஒருவர் டெஸ்ட் வீரராக உருவாக வேண்டும் என்றால், அது இயற்கையிலே அமைய வேண்டும். இதற்கென்று எந்த "பார்முலாவும்' கிடையாது. மற்றபடி, ஒரு சிலர் விரும்பாத நிலையில், டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என, யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஒருவேளை டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றால், அதற்கான வழியை அவர்களே கண்டு கொள்ள வேண்டும். தங்கள் கனவு நிறைவேற, எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

அன்னிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற, "ஆல் ரவுண்டர்' திறமை வெளிப்படுத்தினால் தான் முடியும். எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும். அதேநேரத்தில், பேட்டிங்கில் 20 விக்கெட்டுகளையும் பயன்படுத்தக் கூடாது. இதைத்தவிர, சிறப்பான பீல்டிங்கும் அவசியம்.

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் "நம்பர்-1' இடத்தை பெற வேண்டும் என்று எல்லோரும் விரும்புகின்றனர். இது ஒன்றும் வெகுதொலைவில் இல்லை. படிப்படியாக இதை அடையலாம். ஆனால், இதற்கு சில உறுதியான முடிவுகள் தேவைப்படுகின்றன.

முதலில் நியூசிலாந்து தொடர் உள்ளது. அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்கள் வருகின்றன. நீண்ட நாட்களுக்குப் பின் வரும் தொடரில், இப்போதே கவனம் செலுத்தினால், அப்புறம் கவனம் சிதறிவிடும்.

வீரர்களுடன் இணைந்து விளையாடும் போது, ஒவ்வொருவரது இயற்கை குணங்கள், திறமைகள், பல்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி செயல்படுவர் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான், சிறப்பான "பார்ட்னர்ஷிப்' அமைக்க முடியும்.

இப்படித்தான் டிராவிட், கங்குலியுடன் வெற்றிகரமாக செயல்பட்டேன். ஒவ்வொரு தலைமுறை வீரர்களும் இதைப் பின்பற்றினால் நல்லது.

சிறுவயதில் இருந்தே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் நான் இருந்தேன். ஒவ்வொரு முறை பயிற்சிக்காக களமிறங்கும் போதும், பயிற்சியாளர்கள் என்ன விரும்புகின்றனரோ, அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன்.

இதற்காக மிகவும் கடினமான பயிற்சியில ஈடுபடுவேன். ஏனெனில் எனக்கு வேண்டியது எல்லாம், இந்திய அணியில் இடம். இதை அடைய வேண்டும் என்பதே பெரிய இலக்காக இருந்தது.

இப்போதும், தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை சிறப்பாக விளையாட வேண்டும். ஏனெனில், இந்த கிரிக்கெட்டினால் தான் வளர்ந்தேன். இதைத் தொடரவே விரும்புகிறேன்.

இவ்வாறு சச்சின் கூறினார்.