முதல் டெஸ்ட் அனுபவங்கள் : மனம் திறக்கிறார் சச்சின்

"எனது முதல் டெஸ்ட் போட்டியில் எதிர்பார்த்தது நடக்கவில்லை. எதிர் பார்க்காதவை தான் நடந்தன,'' என, சச்சின் கூறியுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையிலான 60 ஆண்டுகள் கிரிக்கெட் உறவு குறித்து மத்திய அமைச்சர் சசி தரூர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முன்னாள் தலைவர் ஷாரியார் கான் இணைந்து புத்தகம் எழுதியுள்ளனர்.

"ஷேடோஸ் அக்ராஸ் தி பிளேயிங் பீல்டு' என்ற இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, மும்பையில் நேற்று முன் தினம் நடந்தது. இதில், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கலந்து கொண்டார். டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள சச்சின், பாகிஸ்தானுக்கு எதிராகத் தான், தனது டெஸ்ட் வாழ்க்கையை துவக்கினார். கடந்த 1989 ம் ஆண்டு கராச்சியில் நடந்த இப்போட்டியில் சச்சின் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சச்சின் கூறியதாவது: கராச்சியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நான் இடம் பெற்றேன். முதல் நாள் ஆட்டத்தில் சுமார் 6 மணி நேரம் பீல்டிங் செய்தேன். இதனால் அதிக உடல் சோர்வு ஏற்பட்டது. அன்றைய போட்டி முடிந்தவுடன் ஓட்டலுக்கு சென்று தூங்கி விட்டேன். அதற்குப் பின் எழுந்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் தூங்க சென்று விட்டேன். மறுநாள் பேட்டிங் செய்ய வந்தேன். வாசிம் அக்ரம், வக்கர் யூனிஸ் பந்து வீச்சில் மிரட்டிக் கொண்டிருந்தனர். அக்ரம் வீசிய முதல் பந்தை எதிர்கொண்டேன். அது "பவுன்சராக' சென்றது.

அடுத்த பந்தை "யார்க்கராக' வீசுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அதுவும் "பவுன்சராக' வந்தது. மூன்றாவது பந்தாவது "யார்க்கராக' இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அடுத்த இரண்டு பந்துகளையும் "பவுன்சர்' செய்து எரிச்சலூட்டினார் அக்ரம். "இது டெஸ்ட் கிரிக்கெட்டில் காலடி வைத்ததற்கு கிடைத்த வரவேற்பு' என அப்போது எனக்குள் சொல்லிக் கொண் டேன். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நாம் நினைப்பது நடக்காது.

அத்தொடர் எனக்கு ஆச்சரியமான அனுபவமாக அமைந்தது. இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி தொடரை "டிரா' செய்தனர். நாடு திரும்பிய போது, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விளையாட்டு அல்ல: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடரை, இரு நாட்டு ரசிகர்களும் சாதாரண விளையாட்டாக நினைக்க வில்லை. தங்கள் நாட்டு அணி வெற்றி பெற வேண்டும் என்ற அதிக எதிர்பார்ப்புகளுடன் போட்டியை பார்க்கிறார்கள். வெற்றியோ, தோல்வியோ இரு நாடுகளிலும் அது பிரதிபலிக்கிறது. கிரிக்கெட் ஒரு விளையாட்டு தான் என்று நாங்கள் கூறினாலும், அது ஏற்றுக் கொள்ளப்பட வில்லை.

பெரும் வரவேற்பு: கடந்த 1997 ம் ஆண்டு கனடாவில் நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி, 4-1 கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. வெற்றிக்குப் பின் டில்லி திரும்பிய எங்களுக்கு, அதிகாலை 2 மணிக்கு சுமார் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரு நாட்டின் ராஜாவாக நாங்கள் பெருமைப்படுத்தப் பட்டோம்.
அதே ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான மற்றொரு ஒரு நாள் தொடரில், இந்திய அணி 1-2 கணக்கில் தோல்வி அடைந்தது. அப்போது ரசிகர்கள், ஏதோ தவறு செய்து விட்ட குற்றவாளிகளைப் போல எங்களை பார்த்தனர். இந்த அனுபவங்களின் மூலம் எனது வாழ்க்கையில் பல விஷயங்களை அறிந்து கொண்டேன். கிரிக்கெட் தொடரில் ஏற்படும் வெற்றியையும், தோல்வியையும் சரிசமமாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை பெற இவை உதவியாக அமைந்தன. இத்தகைய மனநிலையை பெற எனது குடும்பத்தினரின் பங்கும் முக்கியமானது. இவ்வாறு சச்சின் கூறினார்.

0 comments:

Post a Comment