ஊக்க மருந்து தடுப்பு நிலையத்திலிருந்து ஐ.சி.சி.விலக வேண்டும்

ஊக்கமருந்து தடுப்பு நிலையத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட்சபை (ஐ.சி.சி.) விலக வேண்டுமென இந்திய கிரிக்கெட்சபை (பி.சி.சி.ஐ.) கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, ஐ.சி.சி.மற்றும் ஊக்கமருந்து தடுப்பு நிலையத்துக்கு இடையே பிளவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கிரிக்கெட்டுக்கு என்று தனியாக ஊக்கமருந்து சோதனை நிலையம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி வரும் அக்டோபரில் நடக்கவுள்ள ஐ.சி.சி.செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ.உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்;

"ஊக்கமருந்து சோதனையை வீரர்கள் எதிர்க்கவில்லை. சர்ச்சைக்குரிய விதிமுறையை தான் ஏற்க மறுக்கின்றனர். கிரிக்கெட் என்பது திறன் அடிப்படையில் விளையாடக் கூடியது. இதில் உடல் வலிமைக்கு அவசியமில்லை. இதனால், ஊக்கமருந்து பயன்படுத்த வேண்டிய அவசியம் வீரர்களுக்கு இல்லை. ஊக்கமருந்து தடுப்பு மையத்திலிருந்து ஐ.சி.சி. வெளியேறுவது தான் பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையும் ' என்றார்.

இதேவேளை, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லின் ஆலோசனையை ஏற்க பி.சி.சி.ஐ. மறுப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ. செய்தி தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறுகையில்;

"விளையாட்டுத்துறை அமைச்சர் கில் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார். இதை பி.சி.சி.ஐ. ஏற்றுக்கொள்ளாது. இந்திய அரசியல் சாசனத்தின் படி தனிப்பட்ட ஒருவரின் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் பி.சி.சி.ஐ. யின் செயல்பாடுகள் அமையும்.

கிரிக்கெட் தொடர் நடக்கும் சமயங்களில் பொதுவாக உலக ஊக்கமருந்து தடுப்பு மையம் நடத்தும் பரிசோதனைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், போட்டிகள் நடக்காத சமயங்களில் நடத்தவுள்ள புதிய பரிசோதனை முறைகளுக்க வீரர்களைக் கட்டுப்படுத்த முடியாது' என்றார்.

0 comments:

Post a Comment