சென்னை வீரர்கள் 3 பேருக்கு தொடர்பு


பிக்சிங்' விவரகாரத்தில் ஒரு "சீனியர்' வீரர் உட்பட மொத்தம் சென்னை அணியின் மூன்று வீரர்கள் சிக்கவுள்ளனர். விரைவில் இவர்கள் கைதாகலாம்.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளில் "பிக்சிங்' செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் பிடிபட்டனர். 

இதன் பின் இவ்விவகாரத்தில் தினமும் ஒரு புதுத்தகவல் வெளியாகிறது. 

இதுவரை மொத்தம் 21க்கும் மேற்பட்டோர் டில்லி டில்லி போலீசிடம் சிக்கியுள்ளனர். இதனிடையே, "பிக்சிங்' குறித்து தனியாக விசாரித்து வரும் மும்பை போலீசில், மல்யுத்த வீரர், நடிகர் தாராசிங்கின் மகன், நடிகர் வின்டூ ரந்த்வா சிக்கினார். 

இவர் கொடுத்த தகவலின் பேரில், சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனை போலீசார் விசாரிக்க உள்ளனர். இதனிடையே, "பிக்சிங்' செய்த மூன்று சென்னை வீரர்கள் குறித்து வின்டூ, போலீசிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பை போலீஸ் இணைக்கமிஷனர் ஹிமான்சு ராய் கூறுகையில்<"" சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று சென்னை வீரர்களின் பெயரை, வின்டூ எங்களிடம் தெரிவித்தது உண்மை தான். 

இதில் ஒரு முன்னணி "சீனியர்' வீரரும் உள்ளார். இதன் நம்பகத்தன்மை குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இது யார் யார் என்பது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது,'' என்றார்.

சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணை


கிரிக்கெட் சூதாட்ட விசாரணை தீவிரமடைகிறது. ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்ட வீரர்கள் மற்றும் "புக்கி'களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து கண்டறிய முக்கிய ஓட்டல்களின் "சிசிடிவி' கேமராவில் பதிவான படங்களை டில்லி போலீசார் சோதனை செய்ய உள்ளனர். 

தவிர, சூதாட்ட விவகாரம் தொடர்பாக நேற்று ஒரு கிரிக்கெட் வீரர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்ற ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரும் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்டு, டில்லி போலீசிடம் பிடிபட்டனர். கிரிக்கெட் வீரராக இருந்து புக்கியாக மாறிய அமித் சிங்கும் கைதானார். ஐந்து நாள் போலீஸ் காவலில் உள்ள இவர்களிடம், போலீசார் "கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தி வருகின்றனர். 

இவர்கள் கொடுத்த தகவலின்படி, நேற்று அவுரங்காபாத்தில் வைத்து மனிஷ் குடேவர், 32 மற்றும் "புக்கி'களான சுனில் பாட்யா, 44, கிரண் டோல், 42, ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை "ஸ்பாட் பிக்சிங்' தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரான குடேவார், சண்டிலா வீட்டுக்கு அருகில் வசிப்பவர். இவர், 2003-05 வரை ரஞ்சி போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பாபுராவ் யாதவ் என்ற இன்னொரு கிரிக்கெட் வீரரை போலீசார் தேடி வருகின்றனர். இவர், ரயில்வே அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். இவர் மிக விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.


மும்பையில் சோதனை: 

இ-தற்-கிடையே மும்பையில் உள்ள இரண்டு ஐந்து நட்சத்திர ஓட்டலில் டில்லி சிறப்பு பிரிவு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்ட வீரர்கள் தொடர்பாக விசாரித்தனர். தவிர மும்பை, சண்டிகர், கோல்கட்டா, ஐதராபாத் ஆகிய இடங்களில் ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் தங்கிய ஓட்டலில் உள்ள "சிசிடிவி' ரகசிய கேமராவில் பதிவான படங்களை தருமாறு டில்லி போலீசார் கேட்டுள்ளனர். 

இதனை சோதனை செய்தால், "புக்கி'களுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஸ்ரீசாந்த், உள்ளிட்ட மூன்று பேரின் குரல் மாதிரியை பதிவு செய்ய கோர்ட்டில் அனுமதி கோர உள்ளனர்.

இந்த விசாரணையில், இன்ஸ்பெக்டர் பத்ரிஷ் தத் ஏற்கனவே ஒட்டு கேட்டு பதிவு செய்த வீரர்களின் உரையாடல் உதவலாம். மர்மமான முறையில் மரணம் அடைந்த இவர் சார்பில், கடந்த மே 9ம் தேதி பதிவு செய்த எப்.ஐ.ஆர்., ல் வீரர்கள் மற்றும் "புக்கி'களின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

அதில்,"கடந்த ஏப்ரல் மாத மூன்றாவது வாரத்தில், பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடப்பதாக சிறப்பு பிரிவுக்கு தகவல் வந்தது. இதில், "நிழல் உலக தாதா' மற்றும் வீரர்களுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. பெரும் தொகையை பெற்றுக் கொண்டு வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக செயல்படுகின்றனர். இது கிரிக்கெட்டை நேசிக்கும் அப்பாவி ரசிகர்களை ஏமாற்றும் செயல்,''என தெரிவிக்கப்பட்டது. 

இதனை அடிப்படையாக கொண்டு, டில்லி சிறப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடர உள்ளனர்.

திறமை இல்லாத ஐ.சி.சி. - ஆஸி., வீரர்கள் சங்கம் தாக்கு


விளையாட்டு உலகின் மிகவும் மோசமான, திறமையற்ற நிர்வாகமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) உள்ளது,' என, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ஏ.சி.ஏ.,) தெரிவித்தது. 

ஐ.சி.சி., வீரர்கள் பிரதிநிதி கமிட்டி உறுப்பினராக, முன்னாள் இந்திய வீரர் சிவராமகிருஷ்ணன் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), இருப்பதாக புகார் எழுந்தது. இதனால், தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு கிளம்பின. 

இதுகுறித்து ஏ.சி.ஏ., தலைவர் பால் மார்ஷ் கூறியது:

கிரிக்கெட் உலகின் மோசமான நாள் இது தான். சிவராமகிருஷ்ணன் தேர்வு பிரச்னை, கிரிக்கெட்டுக்கு தவறான அறிகுறி. இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு கிரிக்கெட் போர்டும் துணிச்சலாக செயல்படும் என்று நினைக்கவில்லை. 

இதனால், இவ்விஷயத்தில் ஐ.சி.சி., கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வீரர்கள் விரும்புகின்றனர். ஆனால், இது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில், உலக விளையாட்டு அமைப்புகளில் திறமையற்ற நிர்வாகமாக ஐ.சி.சி., உள்ளது. 

இவ்வாறு பால் மார்ஷ் கூறினார். 

பிரிக்க முடியாத கிரிக்கெட்டும் சூதாட்டமும்


ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்ற ராஜஸ்தான் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகிய மூவரும் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்டு, டில்லி போலீசிடம் பிடிபட்டனர். தற்போது, 5 நாள் போலீஸ் காவலில் உள்ள இவர்களிடம் தீவிர விசாரணையின் நடக்கிறது.

கிரிக்கெட்டில் சூதாட்டம் நடப்பது புதிதல்ல. இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான இதில், பல ஆண்டுகளாக சூதாட்டம் நடந்து வருகிறது.

1979-80: இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கோல்கட்டா டெஸ்ட் போட்டியில், டாஸ் சுண்டுவதில் சூதாட்டம் நடந்தது. பாக்., கேப்டன் ஆசிப் இக்பால் நாணயத்தை சுண்டி, டாசில் ஜெயித்த போதும், இந்திய கேப்டன் ஜி.ஆர்.விஸ்வநாத் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

1981: ஆஸ்திரேலிய வீரர்கள் டென்னிஸ் லில்லி மற்றும் ரோட்னி மார்ஷ், தங்கள் அணிக்கு எதிராக சூதாட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

1992-93: ஆஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது நடந்த விபரங்களை அறிய, இந்தியர் ஒருவர் ஆஸி., வீரர் டீன் ஜோன்ஸ்சுக்கு 50 ஆயிரம் டாலர் அளித்தார்.

1993: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோற்க, ஆஸி., வீரர் ஆலன் பார்டருக்கு, முஸ்டாக் முகமது 5 லட்சம் பவுண்ட் அளித்ததாக புகார்.

1996: இந்திய அணியின் முன்னாள் மேனேஜர் சுனில் தேவ், சில இந்திய வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்தியதாக விசாரிக்கப்பட்டார்.

1997: இந்திய வீரர் மனோஜ் பிரபாகர், இலங்கை சுற்றுப் பயணத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார்.

1998: நியூசிலாந்து எதிராக மோசமாக பந்து வீச, பாக்., கேப்டன் வாசிம் அக்ரம், தனது அணி வீரர் அடா உர் ரஹ்மானுக்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்ததாக புகார். இதனால் கேப்டன் பதவியை அக்ரம் ராஜினாமா செய்தார்.

1998: பாக்., வீரர்கள் அக்ரம், சலீம் மாலிக், இன்சமாம், இஜாஸ் அகமது ஆகியோர், தெ.ஆ., மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாக்., வீரர் ராஷித் லத்தீப் புகார்.

1998: பாக்., அணிக்கு எதிரான போட்டியில் தோற்க, ஆஸி., வீரர்கள் மார்க் வாக், வார்ன், டிம் மே ஆகியோருக்கு சலீம் மாலிக் 50 ஆயிரம் டாலர் அளித்தார்.

1999: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தோற்க, வீரர்களுக்கு 3 லட்சம் பவுண்ட் அளித்ததாக இங்கி., வீரர் கிறிஸ் லுயிஸ் புகார்.

2000, ஏப்.7: இந்தியா-தெ.ஆ., எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தெ.ஆ., கேப்டன் ஹான்சி குரோனியே சூதாட்டத்தில் ஈடுபட்டதால், வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதில் கிப்ஸ், பீட்டர் ஸ்ட்ரைடம், ஹென்றி வில்லியம்ஸ், நிக்கி போயேவுக்கும் தொடர்பு இருப்பதாக புகார்.

2000, மே 24: சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பாக்., வீரர்கள் சலீம் மாலிக், அடா உர் ரஹ்மானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

2000, ஜூலை 20: இந்திய வீரர்கள் கபில் தேவ், அசாருதீன், அஜய் ஜடேஜா, மோங்கியா மற்றும் நிகில் சோப்ரா ஆகியோர், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

2000, அக்.31: கிரிக்கெட் வீரர்கள் லாரா, டீன் ஜோன்ஸ், அலெக்ஸ் ஸ்டூவர்ட், ரணதுங்கா, அரவிந்த டி சில்வா, மார்டின் குரோவ், சலீம் மாலிக் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சி.பி.ஐ., அறிக்கை.

2000, டிச.5: அசாருதீன், அஜய் சர்மா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் வாழ்நாள் தடை. அஜய் ஜடேஜாவுக்கு ஐந்து ஆண்டுகள் தடை.

2004, ஆக.17: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கென்ய வீரர் மவ்ரைஸ் உடும்பேவுக்கு, ஐந்து ஆண்டுகள் தடை.

2008, மே 13: வெ.இ., வீரர் மார்லன் சாமுவேல்சுக்கு, அணியின் ரகசியங்களை தெரிவித்ததற்காக இரண்டு ஆண்டுகள் தடை.

2010, நவ: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் "ஸ்பாட் பிக்சிங்'சில் ஈடுபட்டதாக பாக்., வீரர்கள் சல்மான் பட்டுக்கு 10 ஆண்டுகளும், முகமது ஆசிப்புக்கு 7 ஆண்டுகளும், முகமது ஆமிருக்கு 5 ஆண்டுகளும் தடை.

2012: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய வீரர் சுதிந்ராவுக்கு வாழ்நாள் தடையும், ஸ்ரீவஸ்தவாவுக்கு ஐந்து ஆண்டுகளும், மோனிஷ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டும் தடை விதிக்கப்பட்டது.

2012: சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பாக்., வீரர் டேனிஷ் கனேரியாவுக்கு வாழ்நாள் தடை. இங்கி., வீரர் மெர்வ்யன் வெஸ்ட்பீல்டுக்கு 5 ஆண்டுகள் தடை.

3 ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டம்


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 வீரர்கள், 11 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கடந்த 5-ம் தேதி நடைபெற்ற புனே வாரியர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின்போது சூதாட்டம் நடந்துள்ளது. இதேபோல் 9-ம் தேதி ராஜஸ்தான்-பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியிலும் சூதாட்டம் நடந்துள்ளது. 

புனே அணிக்கு எதிராக சண்டிலா சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு ஓவரில் குறிப்பிட்ட ரன்களை விட்டுக் கொடுப்பதற்காக கூறி சூதாட்டம் நடந்துள்ளது. சண்டிலாவுக்கு ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் சில சைகைகளுக்கு ஏற்ப வீரர்கள் ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர். வீரர்களும் தங்கள் சமிக்ஞைகள் மூலம் இடைத்தரகர்களுக்கு தங்கள் செயல்பாடுகளை தெரிவித்துள்ளனர். சூதாட்டப் புகார் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.