ஏணி வைத்தாலும் எட்டாது - 632 மடங்கு அதிகம்

உலக கோப்பை தொடரின் அரையிறுதியுடன் திரும்பிய இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ. 5.4 கோடி கிடைத்தது. அதேநேரம் கடந்த 1983ல் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 18.8 லட்சம் தான் கிடைத்தது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் சமீபத்தில் உலக கோப்பை தொடர் நடந்தது. இதில் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ. 24.7 கோடி (லீக் சுற்று செயல்பாடு சேர்த்து) கிடைத்தது. பைனலில் வீழ்ந்த நியூசிலாந்து அணி ரூ. 12.6 கோடி பெற்றது.

லீக் சுற்றில் தொடர்ச்சியான 6 வெற்றியுடன் காலிறுதியில் அசத்திய இந்திய அணி, அரையிறுதியில் வீழ்ந்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.5.4 கோடி கிடைத்தது. மற்றொரு அரையிறுதியில் வீழ்ந்த தென் ஆப்ரிக்கா, லீக் சுற்றில் இந்தியாவுடன் தோற்றது. இதனால், இந்த அணிக்கு ரூ. 4.9 கோடி மட்டும் கிடைத்தது.

காலிறுதியில் தோற்ற பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா ரூ. 3 கோடி பெற்றன. மற்ற இரண்டு காலிறுதியில் வீழ்ந்த வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு லீக் சுற்று வெற்றி, தோல்வியையும் சேர்த்து ரூ. 2.9 கோடி, ரூ. 2.7 கோடி கிடைத்தன.

லீக் சுற்றுடன் திரும்பிய அணிகளில் அயர்லாந்துக்கு அதிகபட்சமாக ரூ. 1.1 கோடி கிடைத்தது. இங்கிலாந்து ரூ. 78 லட்சம், ஜிம்பாப்வே, ஆப்கன் தலா ரூ. 50 லட்சம் பெற்றன. இத்தொடரில் ஒரு வெற்றி கூட பெறாத ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு ரூ. 22 லட்சம் கிடைத்தன.


எட்டாத உயரம்:

அதேநேரம், 1975ல் முதல் உலக கோப்பை தொடரில் கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூ. 3.7 லட்சம் கிடைத்தது. 1983ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா ரூ. 18.8 லட்சம் மட்டும் பெற்றது.

அதேநேரம். இப்போது சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி, முதல் உலக கோப்பை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை விட, 632 மடங்கு அதிகமாக பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. முதல் மற்றும் தற்போதைய தொடர் பரிசுப் பணத்தை பார்த்தால் ஏணி வைத்தாலும் எட்டாது.