இந்த வருடத்திற்குள் மீண்டும் நம்பர் ஒன் ஆவதே என் லட்சியம்


கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 2010-ம் ஆண்டிலிருந்து முதலிடம் வகித்துவந்த செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் முதலிடம் பிடித்தார். 

இந்நிலையில் இந்த வருடத்திற்குள் டென்னிசில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பதே என் லட்சியம் என ஜோகோவிச் கூறியுள்ளார்.
 
இதுபற்றி பேசிய ஜோகோவிச், ‘அது (முதலிடம் பிடிப்பது) என்னுடைய இலக்குகளில் ஒன்றாகும். அது என்னுடைய லட்சியம் எனலாம். 

இந்த வருட இறுதிக்குள் முதலிடத்தைப் பிடிக்க என்னால் முடியும். அதற்காக ஒவ்வொரு தொடர்களிலும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த நான் முயன்று வருகிறேன். நான் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். 

ஏனெனில் இப்போது சிறந்த வீரர்கள் பலர் முதலிடத்தை அடையும் போட்டியில் உள்ளனர்’ என்றார்.
 
கடந்த ஆண்டு (2011) டென்னிசில் உச்சத்தில் இருந்த ஜோகோவிச்சின் ஆதிக்கம் இந்த ஆண்டின் துவக்கத்திலும் நீடித்தது. 

ஆனால் தொடர்ந்து நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் தொடர்களில் முறையே நடால் மற்றும் பெடரரிடம் தோற்றதால் ஜோகோவிச் ஆதிக்கம் தற்போது சற்று மங்கிய நிலையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகா யுத்தம் - இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்


டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் இன்றைய "சூப்பர்-8' போட்டியில் கிரிக்கெட் அரங்கின் "பரம எதிரிகளான' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, இம்முறை கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது. 

நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் இலங்கையில் நடக்கிறது. இன்றைய "சூப்பர்-8' போட்டியில் "குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும் பிரிவு-2ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. 

வருவாரா சேவக்:

இந்திய அணியில் மீண்டும் சேவக் இடம் பெறுவது அவசியமாகிறது. காம்பிருடன் சேர்ந்து அதிரடி துவக்கம் தருவார் என நம்புவோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக திணறிய காம்பிர், மீண்டும் ரன் குவிப்பில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது. 

தோனி வியூகம்:

"மிடில் ஆர்டரில்' இளம் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். ரெய்னா, யுவராஜ் சிங் தங்கள் பங்கிற்கு அசத்த தயாராக உள்ளனர். தோனி மந்தமான ஆட்டத்தை கைவிட்டு, விரைவாக ரன் சேர்க்க வேண்டும். ஐந்து பவுலர்களா அல்லது 7 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதா என்ற நெருக்கடியில் உள்ளார். இவரது வித்தியாசமான வியூகங்கள் இன்று எடுபட வேண்டும்.

தேறுமா "பவுலிங்':

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான "சூப்பர்-8' போட்டியில் பவுலிங்கில் சொதப்பியது இந்திய அணி. இதனால், இன்று பவுலர்கள் எழுச்சி பெற வேண்டும். அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், இர்பான் பதான் கைகொடுக்கலாம். 

தமிழகத்தின் பாலாஜி கடைசி கட்ட ஓவர்களில், பாகிஸ்தானின் ரன்குவிப்புக்கு தடையிட்டால் நல்லது. "ஆல்-ரவுண்டர்' இடத்தில் வரும் இர்பான் பதான் தனது வேலையை சரியாக செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழலில் "சீனியர்' ஹர்பஜனுடன், "ஜூனியர்' அஷ்வின் இணைந்து அசத்தலாம். பியுஸ் சாவ்லா இடம் பெறுவது சந்தேகமே. 

இத்தொடருக்கான பயிற்சி போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த இந்திய அணி இம்முறை பதிலடி கொடுக்க வேண்டும். தவிர, ஆஸ்திரேலியாவிடம் படுமோசமாக தோற்றதால், "ரன்ரேட்டில்' முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. இதனால், இன்று "மெகா' வெற்றி தேவைப்படுகிறது. 

கம்ரான் பலம்:

முதல் "சூப்பர்-8' போட்டியில் தென் ஆப்ரிக்காவை வென்ற உற்சாகத்தில் உள்ளது பாகிஸ்தான் அணி. "பேட்டிங்' வலுவாகவே உள்ளது. "ஆல் ரவுண்டர்' கேப்டன் முகமது ஹபீஸ், இம்ரான் நசிர் அசத்தல் பார்மில் உள்ளனர். "மிடில் ஆர்டரில்' வரும் ஜாம்ஷெட், சோயப் மாலிக் ஆகியோரும் ரன்வேட்டை நடத்துகின்றனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல், இவரது சகோதரர் உமர் அக்மல் இருவரும் இந்திய அணிக்கு மீண்டும் தொல்லை தரலாம். 

அப்ரிதி "ஆபத்து':

"ஆபத்தான' அப்ரிதி, முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட முயற்சிப்பார். இவரை விரைவில் வெளியேற்றுவதைப் பொறுத்து, இந்திய அணியின் வெற்றி அமையும்.

பவுலிங்கில் அணிக்கு முக்கிய துருப்பு சீட்டாக இருப்பவர் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல். "தூஸ்ரா', "தீஸ்ரா' என, ஒவ்வொரு பந்துக்கும் வித்தியாசம் காட்டும் இவர், இன்றும் மிரட்டலாம். வேகப்பந்து வீச்சாளர்கள் உமர் குல், பேட்டிங்கிலும் கைகொடுப்பது சிறப்பம்சம். சோகைல் தன்விர் இருப்பது சாதகமான விஷயம். இவர்களுடன் சுழலில் அப்ரிதியும், ராஜா ஹசனும் அசத்துவர். 

வெற்றி வரலாறு:

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் கோப்பை வெல்லும் நோக்கத்தில் உள்ளதால், இன்றைய போட்டியின் வெற்றி மிகவும் முக்கியமானது. இரு அணிகளும் சமபலத்தில் உள்ளன. ஆனாலும், உலக கோப்பை அரங்கில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாறு இன்றும் தொடரட்டும்.

100 சதவீத வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை தொடர் என்று வந்து விட்டால் இந்திய அணியினர் எழுச்சி பெற்று விடுவர். இதுவரை நடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடர்களில் 5 முறை (1992, 1996, 1999, 2003, 2012) இரு அணிகளும் மோதின. இவை அனைத்திலும் இந்திய அணி தான் வென்றது. 

இது, "டுவென்டி-20' உலக கோப்பை அரங்கிலும் தொடர்கிறது. கடந்த 2007ல் முதன் முதலாக நடந்த தொடரின் லீக் மற்றும் பைனலில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனால், இன்றும் வெற்றி தொடரும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

முதல் "டை'

"டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் முதன் முதலில் "டை' ஆன போட்டி, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் தான். 

2007ல் டர்பனில் நடந்த இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. பின், பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுக்க, போட்டி "டை' ஆனது. பின் "பவுல் அவுட்' முறையில் இந்தியா வென்றது. 

"பவுல் அவுட்டில்' வென்றது எப்படி

 ஐ.சி.சி., விதிப்படி அப்போது "சூப்பர் ஓவர்' முறைக்கு பதிலாக "பவுல் அவுட்' முறை கடைபிடிக்கப்பட்டது. 

அதாவது, இரு அணியிலும் தலா 5 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொருவரும் மாறி மாறி பவுலிங் செய்து, ஆடுகளத்தில் இருக்கும் "ஸ்டம்சுகளை' போல்டு செய்ய வேண்டும். இப்படித்தான், பாகிஸ்தானுக்கு எதிரான "சூப்பர் ஓவரில்' இந்தியா விளையாடியது. 

இதன்படி, முதல் இரு வாய்ப்புகளில் இந்தியாவின் சேவக், ஹர்பஜன் "போல்டாக்கினர்'. பாகிஸ்தானின் யாசிர் அராபத், <உமர் குல் வீணடித்தினர். அடுத்து உத்தப்பாவும் அசத்தினார். மூன்றாவது வாய்ப்பில் அப்ரிதியும் சொதப்ப, 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று, "சூப்பர்-8'ல் நுழைந்தது.


எல்லாமே செப்டம்பர் 

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை மோதிய இரு "டுவென்டி-20' உலக கோப்பை போட்டிகளும் செப்டம்பர் மாதம் தான் நடந்தது. அதாவது, 2007, செப்., 14ல் லீக் போட்டி, செப்., 24ல் பைனலில் மோதின. இப்போது மூன்றாவது முறையாக, மீண்டும் செப்., 30ல் மோதவுள்ளன. 


களத்தில் எகிறும் "டென்ஷன்'

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளில் வழக்கமாகவே பரபரப்பு அதிகம் இருக்கும். உலக கோப்பை போட்டிகள் என்றால் கூடுதல் "டென்ஷன்' தான். இதுவரை இந்த அணிகள் மோதிய உலக கோப்பை போட்டிகளில் நடந்த, விறுவிறு சம்பவங்கள் சில...

1992, மார்ச் 4ல் சிட்னியில் நடந்த லீக் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்தார் கிரண் மோரே. பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்தத் பேட்டிங் செய்த போது, ஒவ்வொரு முறையும் தவளை மாதிரி குதித்து "அவுட்' கேட்டார். உடனே மோரேயுடன், மியான்தத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பியதும், கிரண் மோரே போல மூன்று முறை மேலும், கீழுமாக குதித்து சூடேற்றினார். 

* 1996ல் பெங்களூருவில் நடந்த காலிறுதியில் இரு அணிகள் மோதின. இந்திய அணியின் இலக்கை (287/8) துரத்திய பாகிஸ்தான் அணிக்கு அமீர் சோகைல், சயீத் அன்வர் "சூப்பர்' துவக்கம் தந்தனர். தனது பந்தில் பவுண்டரி அடித்த சோகைலை, வெறுப்புடன் பார்த்தார் வெங்கடேஷ் பிரசாத். அதற்கு சோகைல், என்னைப் பார்க்காதே, பந்தைப் பார் என்பது போல "சைகை' செய்தார். அடுத்த பந்தில் சோகைல் போல்டாக, பிரசாத்தை கோபத்துடன் பார்க்க, வெளியே போ என, தன் பங்கிற்கு சைகை காண்பிக்க, அரங்கமே அதிர்ந்தது. 

* 2003ல் பாகிஸ்தான் அணி "வேகப்புயல்' சோயப் அக்தரை நம்பி களமிறங்கியது. ஆனால், இவரது முதல் ஓவரில் சச்சின் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என தொடர்ந்து அடித்து அசத்த, இவர் தொடர்ந்து பவுலிங் செய்ய வரவில்லை.

மறக்க முடியாத "கேட்ச்'

கடந்த 2007ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை பைனலில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. 
பாகிஸ்தான் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டன. ஜோகிந்தர் சர்மா வீசிய இந்த ஓவரில் இரண்டாவது பந்தில் சிக்சர் விளாசினார் மிஸ்பா. இதனால் 4 பந்தில் 6 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. 3வது பந்தை "ஸ்கூப் ஷாட்' மூலம் விக்கெட் கீப்பருக்கு பின்புறம் தூக்கி அடித்தார் மிஸ்பா. அதை ஸ்ரீசாந்த், அப்படியே தனது கைக்குள் அடக்க, இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கோப்பை வென்றது.

காம்பிர் "டாப்'

இரு அணிகள் இடையிலான "டுவென்டி-20' உலக கோப்பை போட்டியில், ஒரே இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை இந்தியாவின் காம்பிர் பெற்றுள்ளார். 2007ல் நடந்த பைனலில் 75 ரன்கள் (54 பந்து) எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் மிஸ்பா, 53 ரன்கள் எடுத்துள்ளார்.

இர்பான் அபாரம்

பவுலிங்கை பொறுத்தவரையில் இந்தியா சார்பில், இர்பான் பதான் 4 ஓவரில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் (2007, பைனல்) வீழ்த்தியது தான் சிறப்பான பந்து வீச்சு. பாகிஸ்தான் சார்பில் முகமது ஆசிப், 18 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

மழை வருமா

இன்றைய போட்டி நடக்கும் கொழும்புவில், வெப்பநிலை அதிகபட்சம் 29, குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் பெரும்பாலும் மேகமூட்டமாக இருக்கும். இடியுடன் கூடிய மழை வர 50 சதவீதம் வாய்ப்புள்ளது.

ஷேவாக் நீக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா பயம் இல்லாமல் ஆடியது


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஷேவாக் நீக்கப்பட்டார். டோனியின் இந்த முடிவை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- 

காம்பீர் சிறந்த தொடக்க வீரர். அவரும், ஷேவாக்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இந்த இருவரையும் பிரிப்பது என்ற முடிவு சரியானது அல்ல. 

ஷேவாக் எதிர் அணிக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடிய அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். 6 அல்லது 7 ஓவர் அவர் களத்தில் இருந்தாலே ஆட்டத்தின் போக்கு மாறி விடும். 

ஷேவாக் ஒரு ஓவருக்கு 6 ரன்னுக்கு மேல் எடுக்க கூடியவர். அவர் இல்லாததால் ஆஸ்திரேலியா எந்தவித பயமும் இல்லாமல் விளையாடி எளிதில் வெற்றி பெற்றது. 

2011 உலக கோப்பைக்கு பிறகு பியூஸ்சாவ்லா இந்திய அணியில் எந்தவித முத்திரையும் பதிக்கவில்லை. 

இதனால் அவர் எப்படி தேர்வு பெற்றார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. அவர் இடத்தில் அமித்மிஸ்ரா அல்லது ராகுல்சர்மாவை தேர்வு செய்து இருக்கலாம்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

உலக கோப்பை T20 - இந்திய 140 ரன்கள்


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான "டுவென்டி-20 உலககோப்பை தொடரில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது.

இலங்கையில் "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நடக்கிறது. கொழும்புவில் நடக்கும் "சூப்பர்-8 போட்டிகளில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி "பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் துவக்க வீரர் சேவக் இடம் பெறவில்லை. டிண்டா, பாலாஜி நீக்கப்பட்டு அனுபவ ஜாகிர் கான், அஷ்வின் இடம் பெற்றார். முதலில் "பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் விக்கெட்டுக்கு ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் இர்பான் பதான் அதிக பட்சமாக 31 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு கம்மின்ஸ் இரண்டு , வாட்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை- ஷேவாக் ஆடுகிறார்


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது. 

இந்த சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் இ மற்றும் “எப்” என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. “இ” பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளும் “எப்” பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

இன்று நடைபெறும் “சூப்பர் 8” சுற்று ஆட்டங்களில் “இ” பிரிவில் உள்ள இலங்கை- நியூசிலாந்து, இங்கிலாந்து- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி “சூப்பர் 8” சுற்றின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 

இந்த ஆட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதுவரை நடந்த 3 உலக கோப்பை போட்டியில் 2007-ம் ஆண்டு மட்டுமே இந்தியா முத்திரை பதித்தது. 

டோனி தலைமையிலான அந்த அணி அறிமுக உலக கோப்பையை கைப்பற்றியது. அதற்கு அடுத்த உலக கோப்பைகளில் “சூப்பர் 8” சுற்றோடு இந்தியாவின் வாய்ப்பு முடிந்துவிட்டது. 

இதனால் இந்தப்போட்டியில் “சூப்பர் 8” சுற்றில் சிறப்பாக ஆட வேண்டும். இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெறுவது ஆவசியமாகிறது. முதல் கட்டமாக ஆஸ்திரேலியாவை நாளை வீழ்த்துவது அவசியம். 

நாளைய போட்டிக்கான வீரர்கள் தேர்வு கேப்டன் டோனிக்கு சவாலாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 பேட்ஸ்மேன் மற்றும் 5 பவுலர் பார்முலா பலனை கொடுத்தது. ஹர்பஜன், பியூஸ் சாவ்லா ஆகியோர் சிறப்பாக பந்து வீசியதால் வீரர்கள் தேர்வு செய்வதில் சிரமம் ஏற்படும். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்ட அஸ்வின் இடம் பெறுவார். ஹர்பஜன் 4 விக்கெட் கைப்பற்றி இருந்ததால் அவரது தேர்வு தவிர்க்க இயலாது. அஸ்வின், ஹர்பஜன் இரண்டு பேரும் தேர்வு செய்யப்படும் போது பியூஸ்சாவ்லா கழற்றி விடப்படலாம். அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் அணியில் இடம் பெறுவது அவசியமாகிறது. 

கடந்த போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர் முழு உடல் தகுதி இருந்தால் இடம் பெறுவார். அப்படி அவர் ஆடும் பட்சத்தில் 7 பேட்ஸ்மேன்களும், 4 பவுலருடன் இந்தியா களம் இறங்கும். அசோக் திண்டா கழபற்றி விடப்படுவார். 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜாகீர்கான் பந்துவீச்சு எடுபடவில்லை. இதனால் அவருக்கு இங்கிலாந்து போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர் வேண்டும் என்று டோனி நினைத்தால் தமிழக வீரர் பாலாஜி நீக்கப்படுவார். பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய வீரர்கள் அனைவரும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். 

வீராட் கோலி, காம்பீர், ரோகித்சர்மா, ரெய்னா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். “லீக்” ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போராடி வென்ற இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் இந்திய வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். 

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களான வாட்சன், வார்னர் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் ஆவார்கள். இதுதவிர மைக்ஹஸ்சி, டேவிட் ஹஸ்சி, கிறிஸ்டியன், கேப்டன் பெய்லி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், கும்மினஸ், ஸ்டார்க், ஹாக் போன்ற சிறந்த புவலர்களும் உள்ளனர். இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் தூர்தர்சன் ஸ்டார், கிரிக்கெட் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

இந்திய வீரர்கள் தேர்வில் குழப்பம்


டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் "சூப்பர்-8' சுற்றுக்கு இந்திய அணி ஆயத்தமாகிறது. இதில், 7 பேட்ஸ்மேன்கள் "பார்முலாவை' தொடர்வதா அல்லது 5 பவுலர்களுடன் களமிறங்குவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சேவக்கிற்கு ஏற்பட்டுள்ள காயமும் சிக்கலை அதிகரித்துள்ளது.

 நான்காவது உலக கோப்பை "டுவென்டி-20' தொடர் இலங்கையில் நடக்கிறது. லீக் போட்டிகள் முடிந்து இன்று ஓய்வு நாள். நாளை முதல் "சூப்பர்-8' சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் 28ம் தேதி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 

சேவக் சந்தேகம்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. விரல் பகுதியில் காயம் அடைந்த சேவக்கிற்கு இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. 

நேற்று மூன்று மணி நேரம் நடந்த பயிற்சியிலும் இவர் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் இர்பான் பதான் "பேட்டிங்' பயிற்சி மேற்கொண்டார். இது அடுத்த போட்டியில் சேவக் இடம் பெறுவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இவருக்கு பதிலாக மீண்டும் இர்பான், துவக்க வீரராக களமிறக்கப்படலாம். இது குறித்து இந்திய அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""சேவக் நல்ல உடற்தகுதியுடன் தான் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் இவரது காயத்தின் தன்மை அதிகரித்து விடக் கூடாது என்பதற்காகவே ஓய்வு அளிக்கப்பட்டது,''என்றார். 

ஹர்பஜன் உறுதி:

இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் ஹர்பஜன், 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 7 பேட்ஸ்மேன்கள் "பார்முலாவை' கைவிட்டு 5 பவுலர்களுடன் களமிறங்கலாம் என்ற கருத்து இந்திய அணியில் எழுந்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணியை எப்போதும் அச்சுறுத்தும் ஹர்பஜனை தவிர்க்க இயலாது. வார்னர், மைக்கேல் ஹசி போன்ற இடது கை பேட்ஸ்மேன்களை சமாளிக்க இவர் கட்டாயம் இடம் பெற வேண்டும். தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பியுஸ் சாவ்லா இடம் கேள்விக் குறியாகிறது. 

பாலாஜிக்கு சிக்கல்:

 அணியில் ஜாகிர் கான் வேண்டும் என, தோனி விரும்பினால், மீண்டும் ஐந்து பவுலர்களுடன் களம் காணலாம். ஜாகிர் வருகையால் பாலாஜி விளையாடும் லெவனில் இடம் பெறுவது சந்தேகம் தான். மொத்தத்தில் வீரர்கள் தேர்வு இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

திறமையை நிரூபித்த ஹர்பஜன்


இங்கிலாந்துக்கு எதிராக சுழலில் அசத்திய ஹர்பஜன் சிங் திறமையை நிரூபித்து, தனது தேர்வை நியாயப்படுத்தினார்,'' என, இந்திய கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்தார்.

கொழும்புவில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான "ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. 

பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.4 ஓவரில் 80 ரன்களுக்கு சுருண்டு, 90 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றது. சுழலில் அசத்திய அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் 4 விக்கெட் கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். சர்வதேச போட்டியில் ஒரு ஆண்டுக்கு பின் களமிறங்கிய இவர், முத்திரை பதித்தார்.

இதுகுறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது: 

இங்கிலாந்துக்கு எதிராக ஹர்பஜன் சிங் செயல்பாடு பாராட்டுக்குரியது. எதிர்பார்த்ததை விட அருமையாக பந்துவீசி தனது திறமையை நிரூபித்தார். நீண்ட இடைவேளைக்கு பின் கிடைத்த பொன்னான வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி, எழுச்சி கண்டது வரவேற்கத்தக்கது. 

"தூஸ்ரா' உள்ளிட்ட பல்வேறு முறையில் பந்துவீசி, பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக காணப்பட்ட இவர்,"பீல்டிங்' வியூகம் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தனது பணியில் மட்டும் முழு கவனம் செலுத்தினார். 

பிரச்னை ஏராளம்:

அணியின் 11 வீரர்களை தேர்வு செய்வதில் தான் நிறைய பிரச்னை உள்ளது. அடுத்த போட்டியில் யார் இடம் பெறப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. கடைசி கட்டத்தில் ஹர்பஜன் அதிரடியாக ஆடி, பேட்டிங்கிலும் கைகொடுப்பார். இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கலாம். 

ரோகித் முன்னுரிமை:

இங்கிலாந்துக்கு எதிராக ரோகித் சர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இவரை மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக குறிப்பிடுவேன். இதற்காக யுவராஜை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் இல்லை. அனைத்து வகையான "ஷாட்' அடிக்கும் திறமை ரோகித்திடம் உண்டு. ரெய்னாவுடன் சேர்ந்து "டுவென்டி-20' போட்டிக்கு ஏற்ற வீரராக திகழ்கிறார். 

அடுத்து வரும் போட்டிகளில் "டாப்-ஆர்டரில்' களமிறங்குவார். துவக்க வீரராக காம்பிர் எழுச்சி கண்டது பாராட்டுக்குரியது. "மேட்ச் வின்னரான' இவர், இந்தியாவுக்காக நிறைய போட்டிகளில் தனிநபராக போராடி வெற்றி தேடித் தந்துள்ளார்.

இப்போட்டியில் இர்பான் பதானின் பந்துவீச்சு அருமையாக இருந்தது. "பவர் பிளே' ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, ரன் வேட்டையை தடுத்தார். 

மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் பியுஸ் சாவ்லா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்து விக்கெட் வீழ்த்தியது பாராட்டுக்குரியது.

இவ்வாறு தோனி கூறினார்.

விஜய் 266 ரன்கள் விளாசல்


ராஜஸ்தான் அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் முரளி விஜய் 266 ரன்கள் விளாச, "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி வலுவான நிலையில் உள்ளது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் "நடப்பு' ரஞ்சி கோப்பை சாம்பியன் ராஜஸ்தான், "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

 முதல் இன்னிங்சில் ராஜஸ்தான் 253 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. 

இரட்டை சதம்:

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிக்காக விளையாடும் தமிழக வீரர் முரளி விஜய் இரட்டை சதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பத்ரிநாத் அரைசதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த போது பத்ரிநாத் (55) அவுட்டானார். 

அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு அரைசதம் அடிக்க, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்த போது 394 பந்தில் 266 ரன்கள் (6 சிக்சர், 36 பவுண்டரி) எடுத்த முரளி விஜய் அவுட்டானார். சிறிது நேரத்தில் தினேஷ் கார்த்திக் (56) வெளியேறினார்.

வலுவான முன்னிலை:

அடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி (3), ஹர்மீத் சிங் (1) ஏமாற்றினர். முதல் இன்னிங்சில் "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி 7 விக்கெட்டுக்கு 607 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. இதையடுத்து 354 ரன்கள் வலுவான முன்னிலை பெற்றது.

ராஜஸ்தான் பின்னடைவு:

பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ராஜஸ்தான் அணிக்கு அன்கித் லம்பா (4) மீண்டும் ஏமாற்றினார். மூன்றாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்து, 311 ரன்கள் பின்தங்கி இருந்தது. சாக்சேனா (17), கேப்டன் கனித்கர் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

 "ரெஸ்ட் ஆப் இந்தியா' சார்பில் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

சொந்த மண்ணில் இலங்கை பரிதாபம்


மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட, இலங்கை அணிக்கு எதிரான "டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பர்' வெற்றி பெற்றது. பவுலிங், பேட்டிங்கில் ஏமாற்றிய இலங்கை, சொந்த மண்ணில் பரிதாபமாக வீழ்ந்தது.

நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் இலங்கையில் நடக்கிறது. "சி' பிரிவு கடைசி லீக் போட்டியில் இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. மழையால் போட்டி துவங்குவதில் தாமதம் ஆனது. 

பின், தலா 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்தனா, "பீல்டிங்' தேர்வு செய்தார். தசைப்பிடிப்பு காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிராக 6 விக்கெட் வீழ்த்திய அஜந்தா மெண்டிஸ் நீக்கப்பட்டு, ஹெராத் சேர்க்கப்பட்டார்.


லீவி "அவுட்':

தென் ஆப்ரிக்க அணிக்கு ரிச்சர்டு லீவி, ஆம்லா துவக்கம் கொடுத்தனர். குலசேகரா வீசிய முதல் ஓவரில் தடுமாறிய லீவி, 4 ரன்னுக்கு அவுட்டானார். மலிங்கா ஓவரில் ஆம்லா, இரண்டு பவுண்டரி விளாசினார். இவர், 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

டிவிலியர்ஸ் அதிரடி:

ஹெராத் ஓவரில், தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். மலிங்கா பந்திலும் சிக்சர் அடித்த டிவிலியர்ஸ் (30 ரன்கள், 13 பந்து) அவரிடமே வீழ்ந்தார். 

சொதப்பிய டுபிளசி 13 ரன்கள் (11 பந்து) எடுத்தார். கடைசி நேரத்தில் பெரேரா ஓவரில், டுமினி அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் விளாச தென் ஆப்ரிக்க அணி 7 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்தது. டுமினி (15) அவுட்டாகாமல் இருந்தார்.

அசத்தல் பவுலிங்:

கடின இலக்கை துரத்திய இலங்கை அணியை, தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் மார்னே மார்கல், ஸ்டைன் இருவரும் போட்டுத் தாக்கினர். முதலில் தில்ஷன், "டக்' அவுட்டானார். அடுத்து, ஸ்டைன் வேகத்தில் ஜெயவர்தனா 4 ரன்னில் திரும்பினார். 

இருமுறை தப்பிப்பிழைத்த சங்ககராவும் (13) அணியை கைவிட்டார். மீண்டும் அசத்திய ஸ்டைன், பெரேராவை (1) பெவிலியனுக்கு அனுப்பினார். முனவீரா 13 ரன்கள் எடுத்தார். 

இலங்கை அணி 7 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 46 ரன்கள் மட்டும் எடுத்து, 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. திரிமான்னே (5), ஜீவன் மெண்டிஸ் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

மெக்கலம் உலக சாதனை! - சூப்பர் சதம் விளாசினார்


வங்கதேசத்துக்கு எதிரான "டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம். 123 ரன்கள் விளாசிய இவர், "டுவென்டி-20' அரங்கில் இரண்டு சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். 

தவிர, ஒரே இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். இப்போட்டியில் நியூசிலாந்து அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேச அணி ஏமாற்றம் அளித்தது.

இலங்கையில் நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பல்லேகெலேயில் நேற்று நடந்த "டி' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேச அணிகள் மோதின. "டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு துவக்கக்தில் கப்டில் (11) ஏமாற்றினார். பின் பிராங்க்ளின், பிரண்டன் மெக்கலம் ஜோடி அசத்தியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த போது, மொர்டசா "வேகத்தில்' பிராங்க்ளின் (35) அவுட்டானார்.


சிக்சர் மழை:

வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கிய மெக்கலம் அதிவிரைவாக ரன் சேர்த்தார். ஜியாவுர் ரஹ்மான் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சாகிப் , மொர்டசா, ஷபியுல் இஸ்லாம், எலியாஸ், அப்துர் ரசாக் பந்துகளில் சிக்சர் மழை பொழிந்தார். எலியாஸ் சன்னி வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த மெக்கலம், "டுவென்டி-20' அரங்கில் தனது இரண்டாவது சதம் அடித்தார்.

அப்துர் ரசாக் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்ற மெக்கலம் (123), தமிம் இக்பாலின் துடிப்பான "கேட்ச்' மூலம் அவுட்டானார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்தது. கேப்டன் ராஸ் டெய்லர் (14) அவுட்டாகாமல் இருந்தார். 

தமிம் ஏமாற்றம்:

கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (0) ஏமாற்றினார். அடுத்து வந்த சாகிப் அல் ஹசன் (11), கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (4) நிலைக்கவில்லை. மற்றொரு துவக்க வீரர் முகமது அஷ்ரபுல் (21), மகமதுல்லா (15) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

நாசிர் அரைசதம்:

"மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய நாசிர் ஹொசைன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜேக்கப் ஓரம் பந்தில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த நாசிர், டிம் சவுத்தி பந்தை பவுண்டரிக்கு விரட்டி, தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 50 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து வந்த மொர்டசா (5), எலியாஸ் சன்னி (5) ஏமாற்ற, வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகன் விருதை பிரண்டன் மெக்கலம் பெற்றார்.

முதல் வீரர் 

நேற்று 123 ரன்கள் எடுத்த பிரண்டன் மெக்கலம், "டுவென்டி-20' அரங்கில் இரண்டு முறை சதம் அடித்த முதல் வீரரானார். முன்னதாக இவர், 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த போட்டியில் 116* ரன்கள் எடுத்தார்.

* இது, சர்வதேச "டுவென்டி-20' வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட 8வது சதம். ஏற்கனவே தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்டு லீவி (117*, எதிர்-நியூசிலாந்து, 2012), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (117, எதிர்-தென் ஆப்ரிக்கா, 2007), இலங்கையின் தில்ஷன் (104*, எதிர்-ஆஸ்திரேலியா, 2011), இந்தியாவின் சுரேஷ் ரெய்னா (101, எதிர்-தென் ஆப்ரிக்கா, 2010), இலங்கையின் மகிளா ஜெயவர்தனா (100, எதிர்-ஜிம்பாப்வே, 2010), ஸ்காட்லாந்தின் பெர்ரிங்டன் (100, எதிர்-வங்கதேசம், 2012) ஆகியோர் தலா ஒரு சதம் அடித்தனர்.

* இது, "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட நான்காவது சதம். முன்னதாக கெய்ல் (2007), ரெய்னா (2010), ஜெயவர்தனா (2010) ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர். தவிர இது, நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பதிவு செய்யப்பட்ட முதல் சதம்.

* "டுவென்டி-20' அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை பதிவு செய்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் மெக்கலம். தலா 117 ரன்கள் எடுத்த ரிச்சர்டு லீவி (தென் ஆப்ரிக்கா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். தவிர இது, "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் ஒரு இன்னிங்சில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ரன்.

* இப்போட்டியில் 51 பந்தில் சதம் அடித்த மெக்கலம், "டுவென்டி-20' அரங்கில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் நான்காவது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ரிச்சர்டு லீவி (45 பந்து), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (50 பந்து), நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (50 பந்து) ஆகியோர் உள்ளார். தவிர இது, "டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது அதிவேக சதம். ஏற்கனவே 2007ல் கெய்ல் 50 பந்தில் சதம் அடித்தார்.


சிக்சர் மன்னன்

வங்கதேச அணிக்கு எதிராக மொத்தம் 7 "சிக்சர்' அடித்த நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், சர்வதேச "டுவென்டி-20' அரங்கில் அதிக "சிக்சர்' விளாசிய வீரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இதுவரை 49 போட்டியில் 64 "சிக்சர்' அடித்துள்ளார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் வாட்சன் (50 சிக்சர்), டேவிட் வார்னர் (46), வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (43), இந்தியாவின் யுவராஜ் சிங் (41) ஆகியோர் உள்ளனர்.

தொடரும் சோகம்

நியூசிலாந்துக்கு எதிராக 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வங்கதேச அணி, "டுவென்டி-20' உலக கோப்பை அரங்கில் தொடர்ந்து ஒன்பதாவது தோல்வியை பெற்றது. கடந்த 2007ல் நடந்த முதலாவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய வங்கதேச அணி, அதன்பின் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகளிடம் தோல்வி அடைந்தது. 

2009ல் இந்தியா, அயர்லாந்து அணிகளிடம் வீழ்ந்தது. கடந்த 2010ல் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளிடம் தோற்றது. இம்முறை நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து தோல்வி பயணத்தை தொடர்கிறது.

எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட்டில் நீடிப்பார் சச்சின்?


டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு சச்சின் நீடிப்பார்,'' என, லாரா கணித்துள்ளார்.

இந்திய அணியின் "மாஸ்டர்' பேட்ஸ்மேன் சச்சின், 39. சர்வதேச போட்டிகளில் 100 சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்த இவர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் "ஹாட்ரிக்' போல்டானார். இதையடுத்து இவர் ஓய்வு பெற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்தது. 

இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாரா கூறியது: சச்சின் "டுவென்டி-20' போட்டிகளில் இருந்து, ஏற்கனவே விலகி விட்டார். ஒரு நாள் போட்டிகளில் கவனம் செலுத்துகிறாரா என தெரியவில்லை. 

ஆனால், டெஸ்டில் விளையாடும் திறமை இன்னும் இவரிடம் உள்ளது. அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பார். 

தனது 16வது வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். நான் ஓய்வை அறிவித்து, ஐந்து ஆண்டுகளான பின்பும், தொடர்ந்து விளையாடி வருகிறார். 

சர்வதேச கிரிக்கெட்டில் 25வது ஆண்டை நெருங்கும் இவரை எண்ணி, இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும். 

பல முறை காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அதிக ரன் சேர்த்தவர்கள் பட்டியலில் உச்சத்தில் இருக்கிறார். 

இவர் விடைபெறும் போது, உலக கிரிக்கெட் நிச்சயமாக ஒரு திறமையானவரை "மிஸ்' பண்ணும். இவ்வாறு லாரா கூறினார்.

டென்னிஸ் சங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடர மகேஷ் பூபதி முடிவு

இந்திய டென்னிஸ் சங்கம் விதித்துள்ள தடையை எதிர்த்து வழக்குத் தொடர டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.


மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா ஆகியோர் 2014 ஜூன் வரை இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) தெரிவித்தது.


டென்னிஸ் சங்கம் வலியுறுத்திய நிலையிலும் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸýடன் சேர்ந்து விளையாட மாட்டோம் என்று இவர்கள் இருவரும் மறுத்ததே இந்த தடைக்குக் காரணம்.


இந்நிலையில் மும்பையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பூபதி இது தொடர்பாகக் கூறியது: இந்தியாவுக்காக போபண்ணா 10 ஆண்டுகள் வரை டென்னிஸ் விளையாடியுள்ளார். நான் 18 ஆண்டுகளாக நாட்டுக்காக போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.


இந்நிலையில் எங்களுக்கு எதிராக மிகக் கடுமையாக டென்னிஸ் சங்கம் நடந்து கொண்டுள்ளது. இது ஏற்புடையதே அல்ல. எனவே இது தொடர்பாக எனது தரப்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, முக்கியமாக சட்டரீதியாக இந்த விஷயத்தை அணுகுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். விரைவில் இது தொடர்பாக முடிவை அறிவிப்பேன் என்றார்.


உங்கள் மீதான நடவடிக்கை, டென்னிஸ் சங்கத்தின் பழி வாங்கும் போக்கு என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "ஆம் அப்படித்தான் நினைக்கிறேன்' என்றார் பூபதி.

நான் துரோகியா? - பூபதி ஆவேசம்

எங்களை துரோகியாக சித்தரிக்கின்றனர். இதை ஏற்கமுடியாது, சட்டரீதியாக எதிர் கொள்வேன்,'' என, இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி தெரிவித்தார்.

லண்டன் ஒலிம்பிக் டென்னிசில் லியாண்டர் பயசுடன் சேர்ந்து விளையாட மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா மறுத்தனர். இதனால் டேவிஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். தவிர, வரும் 2014, ஜூன் 30ம் தேதி வரை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து பூபதி கூறியது:

அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) சங்கம் சர்வாதிகார போக்குடன் நடக்கிறது. இதன் தலைவர் அனில் கன்னா, பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளார். பயஸ் தோளில் ஏறிக் கொண்டு, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, எனக்கு எதிராக பல முறை செயல்பட்டார். இதனை எனக்கும், பயசிற்கும் இடையிலான மோதலாக, "மீடியா' செய்தி வெளியிட்டது துரதிருஷ்டவசமானது.


எதுவும் தெரியாது:

இந்தியாவுக்காக விளையாடவே எப்போதும் விரும்புவேன். சமீபத்திய டேவிஸ் கோப்பை தொடருக்காக தயாராகவே இருந்தேன். ஆனால், ஏ.ஐ.டி.ஏ.,யில் இருந்து யாரும், எதுவும் சொல்லவில்லை. எங்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து "மீடியா' நண்பர்கள் மூலம் வந்த "இ-மெயில்' மூலமாகத் தான் தெரிந்தது.


தலையிட வேண்டும்:

நாங்கள் லண்டன் ஒலிம்பிக்கில் தோற்றதை நிறைய பேர் கொண்டாடினர். இவ்விஷயத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஒ.ஏ.,) அல்லது மத்திய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பெரும் இடைஞ்சல்:

டென்னிஸ் தான் எனக்கு அனைத்தும் கொடுத்தது. கடவுளின் கருணையினால், இப்போட்டியின் வளர்ச்சிக்கு நிறைய உதவிகள் செய்யும் தகுதியை பெற்றுள்ளேன். பல்வேறு தொடர்களை நடத்துகிறேன். டென்னிஸ் மைதானங்கள் கட்டியுள்ளேன்.

ஆனால், ஒவ்வொரு முயற்சிக்கும் ஏதாவது இடைஞ்சல் செய்வர். அவர்கள் அனுமதியின்றி எதுவும் செய்ய முடியாது. இளம் வீரர்களை உருவாக்கும் முயற்சிக்கு பெரும் தடையாக அனில் கன்னா உள்ளார்.

ஒலிம்பிக் தேர்வுக்கு இரு வாரத்துக்கு முன், பிரெஞ்ச் ஓபன் தொடரை நானும், சானியாவும் வென்றோம். அடுத்த இரு நாட்களில் லண்டனில் இருவரும் சேர்ந்து விளையாட முடியாது என்கின்றனர்.


அனில் ஆதிக்கம்:

அனைத்து முடிவுகளையும் அனில் கன்னா மட்டும் எடுக்கிறார். கடைசியில் டென்னிஸ் சங்கம் மீது காரணம் சொல்கிறார். இந்த அமைப்பு ஒருநபர் கமிட்டி போல செயல்படுகிறது. நீண்ட நாட்களாக டென்னிஸ் போட்டி இப்படித்தான் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பயசை குற்றம் சொல்ல முடியாது. இதனால் எதிர்கால இந்திய டென்னிசிற்கு பெரும் சிக்கல் தான்.


துரோகியா:

கடைசியில், தடை விதித்து துரோகியாக சித்தரிக்கின்றனர். இதை ஏற்க முடியாது. இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன். இதற்கான முயற்சியில் எனது வக்கீல்கள் ஈடுபட்டுள்ளதால், இதுகுறித்து மேலும் எதுவும் தெரிவிக்க முடியாது.
இவ்வாறு பூபதி தெரிவித்தார்.


போபண்ணா பாவம்

போபண்ணா குறித்து பூபதி கூறுகையில்,"" போபண்ணாவுடன் இரட்டையரில் விளையாட, பாகிஸ்தானின் குரேஷி போல, நல்ல இளம் "பார்ட்னர்' தேவைப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகள் விளையாட வேண்டியதால், அவரை இந்தப் பிரச்னையில் இழுக்க விரும்பவில்லை. இதிலிருந்து அவர் விலகி இருக்க வேண்டும்,'' என்றார்.


கடைசி போட்டி

இரட்டையர் பிரிவில் அசத்தி வரும் பூபதி, 38, இதுவரை 12 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். தற்போது 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இவரது டென்னிஸ் வாழ்க்கை அனேகமாக முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து பூபதி கூறுகையில்,""இரண்டு ஆண்டுகள் தடை என்பது மிக நீண்ட காலம். எனவே நாட்டுக்காக கடைசி போட்டியில் விளையாடி முடித்து விட்டேன் என நினைக்கிறேன். ஆனாலும் 2013 வரை விளையாட விருப்பம் உண்டு,'' என்றார்.

இலங்கையில் உலக கோப்பை டுவென்டி-20 அதிரடி ஆரம்பம்

கண் இமைக்கும் நேரத்தில் காட்சிகள் மாறும் "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதில், ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கப்படும் அதிசயம் அரங்கேறலாம். மடமடவென விக்கெட்டுகள் சரிவதையும் காணலாம்.

ஒவ்வொரு போட்டியிலும், கடைசி பந்து வரை "டென்ஷன் எகிறும் என்பதால், உலக ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கலாம்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நான்காவது "டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று முதல் அக்., 7ம் தேதி வரை நடக்கிறது. இத்தொடர் ஆசிய மண்ணில் முதன்முறையாக நடக்க உள்ளது சிறப்பம்சம். 20 நாட்கள் நடக்கும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன.


இந்தியா தயார்:

இம்முறை கோப்பை வெல்ல கடும் போட்டி காணப்படுகிறது. ஒருநாள் அரங்கில் நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி, "டுவென்டி-20 உலக கோப்பையை மீண்டும் கைப்பற்ற தயாராக உள்ளது. போட்டிகள் நமக்கு பரிச்சயமான இலங்கை மண்ணில் நடப்பது சாதகமான விஷயம்.

கடந்த 2007ல் முதலாவது "டுவென்டி-20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அப்போதைய அணியில் இருந்த காம்பிர், தோனி, யுவராஜ், ரோகித் சர்மா, இர்பான் பதான், ஹர்பஜன், சேவக், பியுஸ் சாவ்லா ஆகிய 8 பேர் இம்முறையும் இடம் பெற்றிருப்பதால் அனுபவத்திற்கு பஞ்சமில்லை.
இந்திய அணியின் மிகப் பெரும் பலம் கேப்டன் தோனி தான்.

இவரது புதுமையான திட்டங்கள் கைகொடுத்தால் மீண்டும் அசத்தலாம். கடந்த 2007ல் பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் கடைசி ஓவரை யாருமே எதிர்பார்க்காத வகையில் ஜோகிந்தர் சர்மாவை வீசச் சொன்னார். இது பலன் தர, இந்தியா கோப்பை வென்றது. இது போன்ற உத்திகளை இவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம். பேட்டிங், கீப்பிங்கிலும் கைகொடுப்பார்.

துவக்கத்தில் காம்பிர், சேவக் ஜோடி மிரட்டலாம். இவர்களுக்கு இடையிலான "கெமிஸ்டிரி சிறப்பாக உள்ளது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு பேட் செய்கின்றனர். "மிடில் ஆர்டரில் விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா உள்ளனர். ஐ.பி.எல்., தொடரில் அசத்திய இவர்கள் அணியின் முதுகெலும்பாக உள்ளனர். "சூப்பர் பார்மில் உள்ள கோஹ்லி தொடர்ந்து நம்பிக்கை தருகிறார்.


யுவராஜ் நம்பிக்கை:

"கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கும் திறமை படைத்த இவர், இலங்கை மண்ணிலும் அசத்துவார். இர்பான் பதான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுழலுக்கு ஏற்ற இலங்கை ஆடுகளத்தில் அஷ்வின், ஹர்பஜன், பியுஸ் சாவ்லா மிரட்டலாம். "வேகத்துக்கு ஜாகிர் கான், உமேஷ் யாதவ், தமிழக வீரர் பாலாஜி, டிண்டா உள்ளனர்.

"டுவென்டி-20 போட்டியில் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் பணி மகத்தானது. எனவே, சேவக், யுவராஜ், ரெய்னா, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி போன்றவர்களும் கைகொடுக்கலாம். இந்தியா "சூப்பர்-8 சுற்றுக்கு எளிதில் முன்னேறி விடும். இதற்கு பின் கவனமாக செயல்பட்டால், கோப்பை நமதே.


கெய்ல் "புயல்:

கோப்பை வெல்லக்கூடிய மற்ற அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது. அணியில் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் அசத்தியவர்கள் என்பது பலம். கிறிஸ் கெய்ல், போலார்டு, டுவைன் பிராவோ, ஆன்ட்ரி ரசல் போன்றவர்கள் அதிரடி ஆட்டத்தில் கெட்டிக்காரர்கள்.

கோல்கட்டா அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த சுனில் நரைன் சுழலில் அசத்தலாம். கேப்டன் சமி தனது படையை சரியாக வழிநடத்தினால் சாதிக்க வாய்ப்பு உண்டு.

அடுத்து தென் ஆப்ரிக்க அணி. கேப்டன் டிவிலியர்ஸ், காலிஸ், டுபிளசிஸ், ரிச்சர்டு லெவி, ஆல்பி, மார்னே மார்கல், பார்னல், ஸ்டைன் என அணியின் பெரும்பாலான வீரர்கள் ஐ.பி.எல்., தொடரில் ஹீரோக்களாக வலம் வந்தவர்கள். இந்த அனுபவத்தை பயன்படுத்தினால், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம்.