அதலபாதாளத்தில் இந்திய பவுலர்கள்



ஒருநாள் போட்டிகளில் இந்திய பவுலர்களின் செயல்பாடு படுமோசமாக உள்ளது. சமீபத்திய 20 போட்டிகளில் 250 அல்லது அதற்கு மேலான ரன்களை வாரி வழங்கியுள்ளனர்.

கடந்த 2011ல் நடந்த உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. தொடர்ந்து  சொந்தமண்ணில் நடந்த இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை கைப்பற்றியது.

அதேநேரம், அன்னிய மண்ணில் பங்கேற்ற இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளிடம் தோற்றது, இலங்கை மற்றும் பலம் குறைந்த வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளை மட்டும் வென்றது.

இதற்கு இந்திய அணியின் பலவீனமான பந்துவீச்சு முக்கிய காரணம். கடந்த ஜன. 1, 2013 முதல் இந்திய அணி பங்கேற்ற போட்டிகளில், 20ல் 250 அல்லது அதற்கு மேல் என, ரன்களை விட்டுக் கொடுத்தது. 

இதில் 11 போட்டிகளில் எதிரணியினர் 300 அல்லது அதற்கும் மேல் ரன்களை எடுத்துள்ளனர். இதனால், பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது. சமீபத்திய நியூசிலாந்து தொடரில் முதல் மூன்று போட்டியிலும், சராசரியாக 300க்கும் மேற்பட்ட ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அணியின் முன்னணி பவுலர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. கடந்த ஐந்து போட்டிகளில் புவனேஷ்வர் குமார், 3 விக்கெட்டுகள் தான் வீழ்த்தினார்.

அணியின் தற்போதைய ‘சீனியர்’ இஷாந்த் சர்மா, கடந்த இரு போட்டிகளில் 2 விக்கெட் கைப்பற்றினார். முகமது ஷமி மட்டும் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளார். இவர் கடந்த நான்கு போட்டிகளில் 10 விக்கெட் சாய்த்துள்ளார்.ஆனாலும் ரன்களை கட்டுப்படுத்த தவறினார்.

சுழற்பந்துவீச்சும் தேறவில்லை. அணியின் முன்னணி வீரர் அஷ்வின், நான்கு போட்டிகளில் ஒரு விக்கெட் தான் கைப்பற்றினார். ரவிந்திர ஜடேஜா (4) சற்று பரவாயில்லை.

இந்தியாவின் பிடியில் உலக கிரிக்கெட்



ஐ.சி.சி., கூட்டத்தில் பெரும்பாலான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேறிய நிலையில், இந்தியாவின் பிடியில் உலக கிரிக்கெட் வருகிறது. ஐ.சி.சி., புதிய தலைவராக, சீனிவாசன் தேர்வு செய்யப்பட உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ‘டாப்–3’ நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் வகையில், புதிய பரிந்துரைகள் உருவாக்கப்பட்டன. 

இதன்படி, லாபத்தில் இந்த மூன்று நாடுகளுக்கும் அதிக பங்கு தரப்படும். மற்றநாடுகளுக்கு, அடுத்த 8 ஆண்டுகளுக்கு  வருமானம் குறைந்துவிடும். தவிர, தலைவர் பதவிக்கு ‘டாப்–3’ நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே வரமுடியும்.

இது ஐ.சி.சி.யை., அபகரிக்கும் செயல் என, பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று துபாயில் துவங்கிய ஐ.சி.சி., கூட்டத்தில் புதிய விதிகள் தாக்கல் செய்யப்பட்டன. 


அதிகரித்த எதிர்ப்பு:

இது நிறைவேற 10ல் 7 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால், துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்த தென் ஆப்ரிக்காவுடன், ஆசியாவின் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என, மொத்தம் 4 நாடுகள் இணைந்து கொண்டன. இதனால், சிக்கல் ஏற்பட்டது.  


சீனிவாசன் தலைவர்:

இருப்பினும், ஆறு மணி நேர விவாதத்துக்குப் பின்.  பெரும்பாலான தீர்மானங்கள் ஒருமனதாக ஏற்கப்பட்டன. அதேநேரம், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் ஐ.சி.சி.,யை கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு அதிக எதிர்ப்பு காணப்பட்டது. இதன் மீதான ஓட்டெடுப்பு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஐ.சி.சி.,க்கு வலிமையான தலைமை தேவை என்பதால், கிரிக்கெட்டை வழிநடத்தும் பொறுப்பு பி.சி.சி.ஐ.,க்கு தரப்பட்டது. 

இதன் அடிப்படையில், ஐ.சி.சி., யின் புதிய தலைவராக, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் தேர்வு செய்யப்பட உள்ளார். இவர், 2016 வரை இப்பதவியில் இருப்பார் என்று தெரிகிறது.

மூவர் கூட்டணிக்கு செல்வாக்கு

ஐ.சி.சி., இரண்டு நாள் கூட்டம் இன்று துபாயில் துவங்குகிறது. இதில், வலிமையான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகளின் கட்டுப்பாட்டில் ஐ.சி.சி., கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. 

கடந்த 1909ல் துவங்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,), மொத்தம் 106 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்.      

ஐ.சி.சி.,க்கு கிடைக்கும் 75 சதவீத வருமானம், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 நிரந்தர உறுப்பினர்களுக்கு சம அளவில் பிரித்து தரப்படுகிறது. ஆனால், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில் தான் அதிக வருமானம் கிடைக்கிறது. ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகள் ஆண்டுக்கு குறைவான போட்டிகளில் பங்கேற்ற போதும், சமமான தொகை தான் கிடைத்தன.      


முதல் எதிர்ப்பு: 

இதற்கு பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ஐ.சி.சி.,யில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை வைத்தது. இதன் படி, நிதி, வர்த்தகம், நிர்வாகம் தொடர்பாக, புதிய பரிந்துரைகள் வைக்கப்பட்டன.

 இதை இந்தியாவுடன் இணைந்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,), இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டுகள் (இ.சி.பி.,) முன்மொழிந்தன.      


முழுக் கட்டுப்பாடு: 

இது நிறைவேறும் பட்சத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் ஐ.சி.சி., வந்துவிடும். இந்த தீர்மானத்துக்கு, 10ல் 7 நிரந்த உறுப்பு நாடுகள் ஆதரவு தேவை. 

வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் இந்தியாவுக்கு ஆதரவாக தென் ஆப்ரிக்கா, இலங்கை போர்டுகள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தன. பெரும்பாலான நாடுகள் என்ன செய்வது என முடிவு செய்யாமல் உள்ளன. இருப்பினும், புதிய செயல்திட்டத்தை எப்படியும் தடுப்பர் என்றே தெரிகிறது.  

    
பி.சி.சி.ஐ., மிரட்டல்: 

அதேநேரம், இந்த தீர்மானம் நிறைவேறுவதைப் பொறுத்து தான், அடுத்து வரும் 50 ஓவர், ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர்களில் பங்கேற்பது குறித்து இந்திய அணி முடிவு செய்யும் என, பி.சி.சி.ஐ., தெளிவாகத் தெரிவித்துவிட்டதாம். எதிர்கால அட்டவணை குறித்து சம்பந்தப்பட்ட போர்டுகளுடன், பி.சி.சி.ஐ., நேரிடையாக விவாதிக்கத் துவங்கி விட்டது.    
  
இந்தியா எந்த அணிகளுடன் இனி விளையாடப் போகிறது என்பது குறித்து முடிவு செய்து, ஐ.சி.சி.,யிடம் தெரிவிக்கும் நிலைக்கு வந்தாயிற்று. இதனால், இன்று ஐ.சி.சி., கூட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.      

நாளை 4வது போட்டி- வெற்றி கட்டாயத்தில் இந்தியா



டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 

இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் 24 ரன்னிலும், 2–வது ஆட்டத்தில் 15 ரன்னிலும் இந்திய அணி தோற்றது. 3–வது போட்டி ‘டை’ ஆனது. இந்தியா 0–2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதும் 4–வது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா பயணத்தில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்து இருந்தது. அதே நிலை நியூசிலாந்திலும் தொடரக்கூடாது என்ற கவலையில் இந்தியா உள்ளது.

அதற்கு ஏற்ற வகையில் நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடுவார்கள்.

கடந்த போட்டியில் ஜடேஜா, அஸ்வின் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பியது. இதனால் முன்னணி பேட்ஸ்மேன்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.

தொடக்க வீரர்கள் தவான், ரோகித்சர்மா, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரகானே, ரெய்னா ஆகியோர் தங்களது பங்களிப்பை அதிகமான உணர்த்த வேண்டும். டோனி இந்த முறையாவது ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த மண்ணில் விளையாடுவதால் நியூசிலாந்து அணி மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. குப்தில், வில்லியம்சன், டெய்லர், ஆண்டர்சன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், சவுத்தி, மெக்லகன் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

நாளைய ஆட்டமும் பகல்–இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும். இந்தப்போட்டி சோனி சிக்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:–

இந்தியா: டோனி (கேப்டன்), ரோகித்சர்மா, ஷிகார் தவான், வீராட் கோலி, ரகானே, ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, வருண் ஆரோன், ஸ்டூவர்ட் பின்னி, அம்பதி ராயுடு, ஈஷ்வர் பாண்டே, இஷாந்த்சர்மா, அமித் மிஸ்ரா.

நியூசிலாந்து: மேக்குல்லம் (கேப்டன்), குப்தில், ரைடர், வில்லியம்சன், ரோஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், லுகே ரோஞ்சி, நாதன் மேக்குல்லம், சவுத்தி, மில்ஸ், பென்னட், மெக்லகன், ஜேம்ஸ் ரீசம்.

தோனி மீது பிஷன் சிங் பேடி தாக்கு



இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) இருந்து, அதிகாரம் மற்றும் சலுகைகளை அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்,’’ என, பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. 2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர் போட்டிகளில் உலக கோப்பை வென்று தந்தார். 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றினார். 

இதனால், கிரிக்கெட் உலகம் தோனியை புகழ்கிறது. ஆனால், இவரை கடுமையாக விமர்சித்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி.

இதுகுறித்து அவர் கூறியது:

என்னைப் பொறுத்தவரையில், நான் தோனியின் பெரிய ரசிகன் அல்ல. ஆனால், ஒன்று மட்டும் உறுதி. பி.சி.சி.ஐ.,யின் அதிகாரம், சலுகைகளை அதிகமாக அனுபவித்து வரும் ஒரே கேப்டன் தோனி தான்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டைகர் பட்டோடி, கவாஸ்கர் கூட, இப்படி ஒரு சலுகை மற்றும் சுதந்திரத்தை, பி.சி.சி.ஐ.,யிடம் இருந்து பெற்றிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இவரை சகவீரர்கள் கூட எளிதில் அணுக முடியாது. கடந்த 2012ல் லட்சுமண் ஓய்வு பெற்றார். இதை கேப்டன் தோனியிடம் தெரிவிக்க முயன்றார். ஆனால், தோனி எங்கிருக்கிறார் என்றே லட்சுமணால் கண்டறிய முடியவில்லை.

எங்கள் காலத்தில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களில் வெற்றி பெற்றோம். இதற்கு பி.சி.சி.ஐ.,யில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ. 50 பரிசு கொடுத்தனர். இப்போது அப்படியல்ல. 

ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்றால், பணம் அவரைத் தேடிவரும். இப்போது பணத்தை தேடி அலைவதால், கிரிக்கெட் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.

பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனுக்கும், சென்னை அணியின் சில வீரர்களுக்கும் தொடர்புகள் உள்ளன. உதாரணமாக புஜாராவையும், ரெய்னாவையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும். ரெய்னாவை விட புஜாரா நன்றாகத்தான் விளையாடுகிறார்.

ஆனால், பி.சி.சி.ஐ., வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ரெய்னாவுக்கு ‘ஏ’ பிரிவு (ரூ. 1 கோடி), புஜாராவுக்கு ‘பி’ பிரிவு (ரூ. 50 லட்சம்). இதற்கு ரெய்னாவுக்கும் சீனிவாசனுக்கும் உள்ள தொடர்பு தான் காரணம்.

இவ்வாறு பிஷன் சிங் பேடி கூறினார்.

நம்பர் 1 மகுடத்தை இழந்தது இந்தியா



நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தை இழந்தது. 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, 0–-1 என பின்தங்கியிருந்தது. 

இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் தோனி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு ஜெசி ரைடர் (20), கப்டில் (44) ஜோடி அசத்தல் துவக்கம் அளித்தது. போட்டியின் 17 ஓவர் முடிவில், லேசான மழை குறுக்கிட்ட காரணத்தினால் 5 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. 

வில்லியம்சன் (77), ஒருநாள் அரங்கில் தனது 8வது அரைசதத்தை பதிவு செய்தார். நியூசிலாந்து அணி 33.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதையடுத்து போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

ராஸ் டெய்லர் (57) அரைசதம் கடந்து வெளியேறினார். கடைசி நேரத்தில், அதிரடியாக ரன்கள் சேர்த்த கோரி ஆண்டர்சன் 17 பந்தில் 44 ரன்கள் விளாச, நியூசிலாந்து அணி 42 ஒவரில், 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இந்திய அணிக்கு ‘டக்வொர்த்-–லீவிஸ்’ முறைப்படி 297 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 

இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட் கைப்பற்றினார்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (20), ஷிகர் தவான் (12) ஜோடி சொதப்பல் துவக்கம் அளித்தது. ரகானே (35) தாக்குபிடிக்கவில்லை. கோஹ்லி (78) அரைசதம் கடந்தார். 

ரெய்னா (35), கேப்டன் தோனி (56) போராடியும் வெற்றி கிடைக்கவில்லை. இந்திய அணி, 41.3 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. 

இதையடுத்து ‘டக்வொர்த்–லீவிஸ்’ முறைப்படி இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

துவக்க வீரராக களமிறங்கினால் ஜொலிப்பாரா கோஹ்லி?



தொடர்ந்து சொதப்பும் ரோகித் சர்மாவுக்குப் பதில், விராத் கோஹ்லியை துவக்க வீரராக களமிறக்கலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1994ல் நியூசிலாந்து சென்றது இந்திய அணி. 

அப்போது,நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதில் துவக்க வீரராக இருந்த சித்து காயமடைய, இரண்டாவது போட்டியில் யாரை துவக்கத்துக்கு களமிறக்குவது என, குழப்பம் ஏற்பட்டது.       

அதுவரை 4, 5, 6 வது இடங்களில் களமிறங்கி வந்த சச்சின். முதன் முறையாக இப்போட்டியில் துவக்க வீரராக இறக்கப்பட்டார். இது இவரது ௭௦வது ஒருநாள் போட்டி. இதில் 49 பந்தில் 82 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார். இதற்கு பின் துவக்க வீரராக பல்வேறு சாதனைகள் படைத்தார்.

இப்போது இந்திய அணிக்கு மீண்டும் துவக்கத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காம்பிர், சேவக்கிற்கு மாற்றாக வந்தது ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி.    
   
ரோகித் ஏமாற்றம்: இதில் ரோகித் சர்மா சமீப காலமாக ஏமாற்றுகிறார். தென் ஆப்ரிக்க மண்ணில், ஸ்டைனின் 17 பந்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. தற்போது நேப்பியரில் நடந்த முதல் போட்டியில், 23 பந்தில் 3 ரன்கள் தான் எடுத்தார்.       

இதனால், சச்சினை போல விராத் கோஹ்லியை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.       

மீண்டும் வாய்ப்பு: கோஹ்லி கடந்த 2008, ஆக., 18ல் இலங்கைக்கு எதிராக அறிமுகமானது போது, துவக்க வீரராகத்தான் வந்தார். முதல் 5 போட்டிகளில், ஒரு அரைசதம் உட்பட, மொத்தம் 149 ரன்கள் எடுத்தார். 

பின், பேட்டிங்கில் பின்வரிசைக்கு தள்ளப்பட்ட கோஹ்லி, தற்போது 3வது வீரராக வருகிறார். இவருக்கு மீண்டும் துவக்க வீரராக வாய்ப்பு தந்தால், முழுமையாக 50 ஓவர்களும், பேட்டிங்கில் நீடிக்கலாம். சச்சினைப் போல எண்ணற்ற சாதனைகள் படைக்கலாம்.       

ரெய்னா ஏமாற்றம்: இதேபோல, ‘மிடில் ஆர்டரில்’ ரெய்னா, அணியை கைவிடுகிறார். கடந்த 2005ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ரெய்னா, இதுவரை 187 போட்டிகளில் 4,530 ரன்கள் (3 சதம், 29 அரைசதம்) எடுத்துள்ளார்.       
ஆனால், கடைசியாக பங்கேற்ற 25 போட்டிகளில், ஒருமுறை மட்டும் தான் அரைசதம் (65 ரன்கள்) அடித்தார். மற்றபடி மொத்தம் 463 ரன்கள் தான் எடுத்துள்ளார்.       

‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளில் அவுட்டாவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவருக்குப் பதில் டெஸ்ட் போட்டிகளில் அசத்தும் புஜாராவை அணியில் சேர்த்தால் நல்லது.       

உலக கோப்பை துவங்க இன்னும் ஒரு ஆண்டு (2015) மட்டும் உள்ள நிலையில், அணியில் தேவையான மாற்றங்களை செய்து சோதித்து பார்க்க இதுவே சரியான தருணம் என்பதை கேப்டன் தோனி உணர வேண்டும்.

வீராட் கோலி உலக சாதனை


இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று நேப்பியரில் நடைபெற்றது. 

இதில் இந்தியா அணி 24 ரன்னில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் இளம் வீர் வீராட் கோலி சதம் அடித்தும் இந்தி அணி தோல்வியைத் தழுவியது. 

இப்போட்டியில் அடித்து சதம் மூலம் 18 சதங்களை வேகமாக அடித்த வீரர் என்ற சாதைனைக்கு கோலி சொந்தமானார். 

தனது 119-வது இன்னிங்சில் இச்சாதனையை அவர் நிகழ்த்தினார். 

இதற்கு முன்பு இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி தனது 174-வது இன்னிங்கில் 18 சதம் அடித்தது உலக சாதனையாக இருந்தது. இதை நேற்று கோலி முறியடித்தார்.

அதுபோல் சேசிங்கில் வீராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி முதல் முறையாக தோல்வியைத் தழுவியது. கோலி சேசிங்கில் 12 முறை சதம் அடித்துள்ளார். அதில் 11 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

நியூசி., வெற்றி - கோஹ்லி சதம் வீண்



இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  விராத் கோஹ்லி சதம் வீணானது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேப்பியரில் இன்று துவங்குகியது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். 

நியூசிலாந்து அணிக்கு கப்டில் (8), ரைடர் (18) சொதப்பல் துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த ராஸ் டெய்லர் (55), வில்லியம்சன் (71), இருவரும் அரைசதம் கடந்தனர். 

பின் வந்த கேப்டன் பிரண்டன் மெக்கலம் (30) ஓரளவு கைகொடுத்தார். ரான்கி (30), நாதன் மெக்கலம் (2) ஏமாற்றினார். 

கடைசி நேரத்தில்  அதிரடியில்  மிரட்டய கோரி ஆண்டர்சன்  அரைசதம் கடக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 292 ரன்கள் குவித்தது. கோரி ஆண்டர்சன் (68), சவுத்தி (3) அவுட்டாகாமல் இருந்தனர். 

இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி  4  விக்கெட் வீழ்த்தினார்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்சமா ஜோடி துவக்கம் அளித்தது. ரோகித் சர்மா (3) தாக்குபிடிக்கவில்லை. தவான் (32) நிலைக்கவில்லை. 

தொடர்ந்து வந்த ரகானே (7), ரெய்னா (18) ஏமாற்றினர். எதிர்முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோஹ்லி (123)  ஒருநாள் அரங்கில் 18வது சதத்தை பூர்த்தி செய்தார். 

இவருக்கு நல்ல ‘கம்பெனி’ கொடுக்க  கேப்டன் தோனி(40) ஓரளவு கைகொடுத்தார். பின்வரிசை வீரர்கள் ஏமாற்ற,  இந்திய அணி 48.4 ஓவரில் 298 ரன்கள் எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

ஷமி  (7) அவுட்டாகாமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1–0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

சிக்கல் சென்னை - பிரிமியர் சூதாட்டத்தில் திருப்பம்



பிரிமியர் கிரிக்கெட் சூதாட்டம் குறித்த மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழு, பிப்., 10ல் அறிக்கையை தாக்கல் செய்கிறது. இதில், ‘சென்னை அணியை தடை செய்ய வேண்டும்,’ என, பரிந்துரைக்க இருப்பதாக தெரிகிறது.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசன் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினார். இதுகுறித்து விசாரிக்க, பி.சி.சி.ஐ., சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பாலசுப்ரமணியன், ஜெயராம் சவுதா என, இரு நபர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் அறிக்கை செல்லாது என, மும்பை ஐகோர்ட் தெரிவித்தது. இதை எதிர்த்து பி.சி.சி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அப்போது பி.சி.சி.ஐ., முடிவை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை தனியாக அக்., 7ல் அமைத்தது.

அரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையிலான இதில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஷ்வர் ராவ் மற்றும் அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலே தத்தா இடம் பெற்றனர்.

மும்பை கிரைம் பிராஞ்ச் அதிகாரி ஹிமான்சு ராய், மெய்யப்பனுக்கு எதிரான ஆதாரங்களை, இக்குழுவிடம் நவ., 7ல் சமர்ப்பித்தார். பி.சி.சி.ஐ., ஊழல் தடுப்பு அதிகாரி ரவி சவானி, சண்டிலா, பத்திரிகையாளர்கள் சீனிவாசனுக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் லலித் மோடியின் வக்கீல் மெக்மூத் அப்டி, முத்கல் குழுவில் நேரில் ஆஜராகினார். இன்று, பி.சி.சி.ஐ., அனுமதியற்ற பீகார் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஆதித்ய வர்மாவை சந்திக்கிறது.

பிப்., 10ல் அறிக்கையை முத்கல் குழு சுப்ரீம் கோர்ட்டில் சமர்பிக்கிறது. இதில் சென்னை அணி உரிமையை தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.


மீண்டும் சிக்கல்:

பிப்., 12ல் ஏழாவது பிரிமியர் தொடருக்கான வீரர்கள் ஏலம், நடக்கவுள்ளது. அறிக்கை, ஒருவேளை சென்னைக்கு பாதகமாக இருக்கும் என்றால், அது தோனியின் சென்னை அணிக்கு மட்டுமன்றி, பிரிமியர் தொடரின் நன்மதிப்புக்கு களங்கமாக அமையும்.

‘விசாரணை ஒரு கண்துடைப்பாக இருக்காது. பி.சி.சி.ஐ., தலைவர், சென்னை அணி உரிமையாளர் சீனிவாசனுக்கு சாதகமாக இருக்காது,’ என, ஏற்கனவே நீதிபதி முத்கல் தெரிவித்திருந்தார்.

தெரிவிக்க முடியாது:

நீதிபதி முத்கல் கூறியது:
விசாரணைக்கு எங்களுக்கு நான்கு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்போது பிப்., 10ல் அறிக்கை தாக்கல் செய்யப் போகிறோம்.

பெட்டிங்கை சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்பது குறித்து, பிப்., 10க்குப் பின் பேசலாம்.

இவ்வாறு நீதிபதி முத்கல் கூறினார்.

இளம் வீரர்களை கொண்ட சிறந்த அணி இந்தியா

உலக கிரிக்கெட்டில் தற்போதுள்ள இந்திய அணி சிறந்த இளம் வீரர்களை கொண்டது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இயன் செப்பல் கூறடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

இந்திய கிரிக்கெட் அணியில் ஷிகார்தவான், வீராட் கோலி. புஜாரா, ரோகித் சர்மா போன்ற திறமை வாய்ந்த இளம்வீரர்கள் உள்ளனர். இதேபோல உம்டுகட் போன்ற எதிர்கால வீரரும் இருக்கிறார்கள்.

தவான் சிறந்த அதிரடி தொடக்க வீரர் ஆவார். அவர் திறமை வாய்ந்தவர். இந்திய அணியில் விலை மதிப்புமிக்க வீரர் ஆவார். தற்போதுள்ள இந்திய அணி தலைசிறந்த இளம் வீரர்களை கொண்ட உலகின் சிறந்த அணியாக திகழ்கிறது.

2015–ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அணியும் இப்போதே சிறந்த வீரர்களை உருவாக்கி வருகிறது.

இவ்வாறு இயன்சேப்பல் கூறியுள்ளார். 

இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 16 ஆண்டு காலம் 75 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

ஐ.பி.எல். ஏலத்தில் முன்னணி வீரர்கள்



7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12–ந் தேதி நடக்கிறது.

இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியில் 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தவிர மற்ற 7 அணிகளும் 24 வீரர்களை நீட்டித்து உள்ளது.

சென்னை சூப்பர்கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 3 அணிகள் மட்டும் தான் 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது.

டோனி, ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், பிராவோ, (சென்னை) ரோகித்சர்மா, ஹர்பஜன்சிங், அம்பதி ராயுடு, போலார்ட், மலிங்கா, (மும்பை), ரகானே, ஸ்டுவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், வாட்சன், பில்க்னெர், (ராஜஸ்தான்), கோலி, கெய்ல், டிவில்லியம்ஸ் (பெங்களூர்), டேவிட் மில்லர், (பஞ்சாப்) காம்பீர், சுனில் நரின் (கொல்கத்தா) ஹிகார் தவான், ஸ்டெயன் (ஐதராபாத்) ஆகிய வீரர்கள் நீட்டிக்கப்பட்டுள்ளனர்.

அணியில் நீட்டிக்கப்படாத பல முன்னணி வீரர்கள் ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல்நிலை பட்டியலில் டேவிட் வார்னர், பீட்டர்சன், ஆரான் பிஞ்ச், ஜான்சன், ஷார்மார்ஷ், குயின்டன் காக், கோரி ஆண்டர்சன், ஸ்டீவ் சுமித், டுபெலிசிஸ், மார்னே மார்கல், வெயன் சுமித், போன்ற வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

இந்திய வீரர்களில் ஷேவாக், யுவராஜ்சிங், முரளி விஜய் ஆகியோரும் முதல் நிலையில் இருப்பார்கள்.

36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சனை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணி எந்த வீரரையும் தக்க வைத்து கொள்ளாததால் ஏலத்தில் ரூ.60 கோடி செலவிடலாம். இதனால் அந்த அணி எந்த விலை கொடுத்தாலும் முன்னணி வீரர்களை வாங்க போராடும்.

இதே போல, 20 ஓவர் போட்டிக்கான எஸ்பெ சலிஸ்ட் வீரர்களான ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), குயிண்டன் காக் (தென் ஆப்பிரிக்கா), ஆகியோருக்கும் அதிக மவுசு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜயை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்து தக்க வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் ஜோகர் கார்டை பயன்படுத்தும்.

நியூசி., மண்ணில் சாதிக்குமா இந்தியா?



அன்னிய மண்ணில் வெற்றி வாகை சூடும் இலக்குடன் தோனி தலைமையிலான இந்திய அணி வீரர்கள், நேற்று நியூசிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 19ல் நேப்பியரில் துவங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன் இரண்டு நாள் (பிப்., 2,3) பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது.

இத்தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இளம் இந்திய அணி நேற்று மும்பையில் இருந்து நியூசிலாந்துக்கு கிளம்பியது.

டெஸ்ட் ‘ஸ்பெஷலிஸ்ட்’ வீரர்களான புஜாரா, ஜாகிர் கான், முரளி விஜய், உமேஷ் யாதவ் ஆகியோர் ஒருவாரம் கழித்து தான் நியூசிலாந்து செல்ல உள்ளனர்.

பொதுவாக இந்திய அணி உள்ளூரில் அசத்தும்; வெளிநாடுகளில் சொதப்பும். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கூட படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலை மாற வேண்டும். 

நியூசிலாந்து மண்ணில் விராத் கோஹ்லி, ரகானே, ரெய்னா உள்ளிட்ட இளம் வீரர்கள் எழுச்சி பெறும்பட்சத்தில் இந்திய அணி முத்திரை பதிக்கலாம்.

ஒருநாள் அணி விவரம்: தோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, ரகானே, அம்பதி ராயுடு, ரெய்னா, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே, பின்னி, ஆரோன்.

டெஸ்ட் அணியில், ரெய்னா, அமித் மிஸ்ரா, பின்னி, ஆரோன் ஆகியோருக்கு பதில் புஜாரா, முரளி விஜய், ஜாகிர் கான், உமேஷ் யாதவ், சகா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது



இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஆண்டுதோறும், சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். இவ்விருதுக்கு இம்முறை கபில் தேவ் தேர்வு செய்யப்பட்டார். நேற்று மும்பையில் நடந்த விழாவில் இவருக்கு, விருதுடன் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 

கடந்த 1983ல் இந்தியாவுக்கு முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்த கபில், 131 டெஸ்ட் (5248 ரன்கள், 434 விக்கெட்), 225 ஒருநாள் (3783 ரன்கள், 253 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். 

கடந்த சீசனில்(2012-–13) சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்ட வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை ‘சுழல்’ நாயகன் அஷ்வின் பெற்றார். இவர் இந்த காலக்கட்டத்தில் 8 டெஸ்டில் 43 விக்கெட் வீழ்த்தினார். 18 ஒருநாள் போட்டிகளில் 24 விக்கெட் கைப்பற்றினார். இவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

ரஞ்சி டிராபியில்(2012-–13) சிறந்த ‘ஆல்-ரவுண்டருக்கான’ விருதை அபிஷேக் நாயர் பெற்றார்.  இவர் 11 போட்டிகளில் 966 ரன்கள் எடுத்துள்ளார். இவர் ரூ.2.5 லட்சம் பரிசை தட்டிச் சென்றார்.

சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா, இந்தியாவின் சிறந்த வீரருக்கான(2013-–14) திலிப் சர்தேசாய் விருது பெற்றார். இவர் 2 டெஸ்டில் 288 ரன்கள் எடுத்தார். இவர் ரூ. 5 லட்சம் பரிசு பெற்றார்.

சிறந்த வீராங்கனைக்கான(சீனியர்) விருதை தமிழகத்தின் திருஷ்காமனி(ரூ. 50 ஆயிரம் பரிசு) பெற்றார்.

இந்திய கிரிக்கெட் சேவைக்காக ஜாம்பவான்கள் பாபு நட்கர்னி, பரூக் இன்ஜினியர், மறைந்த ஏக்நாத் சோல்கர் ஆகிய மூவருக்கும் தலா ரூ. 15 லட்சம் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது. நட்கர்னி, பரூக் பங்கேற்கவில்லை. சோல்கர் சார்பில் அவரது மனைவி விருதை பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் சச்சின், லட்சுமண், கங்குலி, தோனி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

பின் கபில் தேவ் கூறுகையில்,“நாங்கள் விளையாடிய காலத்தில், விருது பற்றி எல்லாம் நினைக்கவில்லை. கிரிக்கெட் மீதான மோகத்தால் விளையாடினோம். நாட்டில் கிரிக்கெட் இந்த அளவுக்கு பிரபலம் அடைந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்,”என்றார்.

7-வது IPL - ஷேவாக்கை கழற்றி விட்டது டெல்லி அணி



ஏழாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி டெல்லி அணி எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டது. இதன் மூலம் ஷேவாக் முதல் முறையாக பகிரங்க ஏலத்திற்கு வருகிறார்.

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பிப்.13-தேதியும் ஏலம் தொடரும். இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய சீசனில் விளையாடிய வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 5 வீரர்களை தொடர்ந்து தங்கள் அணிகளில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும், அப்படி தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு ரூ.12.5 கோடி, ரூ.9.5 கோடி, ரூ.7.5 கோடி, ரூ.5.5 கோடி, ரூ.4 கோடி வீதம் சம்பளமாக ஒதுக்க வேண்டும் என்றும், சர்வதேச போட்டியில் ஆடாத வீரர் தக்க வைக்கப்பட்டால் அவருக்கு ரூ.4 கோடி ஊதியமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது.

எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுகிறார்கள் என்ற பட்டியலை சமர்ப்பிக்க ஜனவரி 10-ந்தேதி (நேற்று) கடைசி நாளாகும். இதன்படி 8 அணி நிர்வாகங்களும் அந்த விவரங்களை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி அதிரடியாக, எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளது. அந்த அணியின் உள்ளூர் நாயகன் 35 வயதான ஷேவாக் பார்மில் இல்லை. ரஞ்சி கிரிக்கெட்டில் 13 இன்னிங்சில் விளையாடி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். 

ஓராண்டுக்கு மேலாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருவதால் அவரை வைத்துக் கொள்ள டெல்லி அணிக்கு விருப்பம் இல்லை. இதனால் தங்கள் அணியில் இருந்து அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுவித்து விட்டு, இந்த சீசனில் புத்தம் புதிய அணியை தேர்வு செய்யும் முடிவுக்கு டெல்லி அணி வந்துள்ளது.

முதல் மூன்று சீசனில் முத்திரை வீரர் அந்தஸ்துடன் அதிரடி காட்டிய ஷேவாக், அடுத்த மூன்று தொடர்களிலும் அந்த அணியில் நீடித்தார். இந்த நிலையில் ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக ஷேவாக் ஏலம் மூலம் விற்கப்பட இருக்கிறார். 

அவருடன் சேர்த்து மஹேலா ஜெயவர்த்தனே, டேவிட் வார்னர், கெவின் பீட்டர்சன், உன்முக் சந்த் ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்களும் ஏலத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனாலும் மேட்ச் கார்டு சலுகையை பயன்படுத்தி ஏலத்தின் போது ஷேவாக்கை மறுபடியும் டெல்லி அணி வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.

வருகிறது 7 ஓவர் கிரிக்கெட்



கிரிக்கெட்டில் விறுவிறுப்பை அதிகரிக்க, 7 ஓவர்கள் கொண்ட "செவன் ஸ்டார் லீக்' தொடர் விரைவில் அரங்கேற உள்ளது.

மந்தமான டெஸ்ட் போட்டிகளால் வெறுத்துப் போன ரசிகர்களுக்கு ஒருநாள் (50 ஓவர்) போட்டி உற்சாகம் தந்தது. பின் அதிரடியான "டுவென்டி–20' போட்டி பெரும் வரவேற்பை பெற்றது. 


தூதுவர் தோனி:

இந்த வரிசையில், 7 ஓவர்கள் கொண்ட புதுமையான "செவன் ஸ்டார்' லீக் தொடர் துபாயில் நடக்க உள்ளது. இதற்கு ஐ.சி.சி., இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதி அளித்துள்ளன. 

இதன் துாதராக இந்திய கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மார்ச் மாதம் இத்தொடர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எத்தனை அணிகள்:

ஐக்கிய அரபு .எமிரேட்சை (யு.ஏ.இ.,) சேர்ந்த அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மான், ராஸ்–அல்–கெய்மான், உம்–அல்–குய்வான், பூஜாய்ரா ஆகிய ஏழு அணிகள் இதில் பங்கேற்கும். ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் இடம் பெறுவர்.


7 நாடுகள்:

யு.ஏ.இ., இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. துபாயில் முதல் முறையாக நடத்தப்படும் இத்தொடர், எதிர்காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும். 

 இத்தொடர் வெற்றி பெறும்பட்சத்தில், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி–20' தொடர் போல, "செவன் ஸ்டார்' சாம்பியன்ஸ் லீக் தொடரை நடத்தவும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவுக்கு நியூசிலாந்து மண்ணில் புது நெருக்கடி

நியூசிலாந்தில் வீசும் பலத்த காற்று இந்திய வீரர்களுக்கு பெரும் தொல்லையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வீரர்கள் உள்ளூரில் புலி தான். அன்னிய மண் என்று வந்து விட்டால், அவ்வளவு தான். எவ்வளவு அடி கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு திரும்புவர். 

கடந்த 2011ல் இங்கிலாந்து (0-4), 2011-12ல் ஆஸ்திரேலியா (0-4), 2013ல் தென் ஆப்ரிக்கா (0-1) என, பங்கேற்ற பங்கேற்ற 10 டெஸ்டில், 9ல் தோல்வியடைந்தது. ஒரு டெஸ்ட் போட்டியை (2013, ஜோகனஸ்பர்க்) மட்டும் "டிரா' செய்தது.

வரும் 12ம் தேதி இந்திய அணி, நியூசிலாந்து கிளம்புகிறது. இங்கு ஐந்து ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.


வரலாறு எப்படி:

கடந்த 1967–-68ல் முதன் முறையாக நியூசிலாந்து சென்ற போது, இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-–1 என, வென்றது. இதன் பின் 7 தொடர்களில், இந்திய அணி 2 டெஸ்டில் மட்டும் தான் வெற்றி பெற்றது.

கடைசியாக 2009ல் தோனி தலைமையில் சென்ற இந்திய அணி, 41 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் தொடரை (1–-0) வென்று திரும்பியது. இருப்பினும், நியூசிலாந்தில் மொத்தம் பங்கேற்ற 21 டெஸ்டில், இந்திய அணி 5ல் தான் வெற்றி பெற்றது.


வெற்றி தொடர்:

தவிர, ஒருநாள் தொடர்களை பொறுத்தவரையில், கடந்த 1975-–76 முதல் பங்கேற்ற 5 தொடர்களில் ஒன்றைக் கூட கைப்பற்றியதில்லை. முதன் முறையாக 2009ல் தோனியின் அணி தான் கோப்பை வென்று திரும்பியது. இதற்கு, அப்போதைய ஆடுகளங்கள் துணைக்கண்டத்தைப் போல, பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருந்தன.


கடும் சவால்:

இம்முறை இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. ஏனெனில், நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்குமாறு, வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே, சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் இருந்து தோல்வியுடன் திரும்பிய, தோனியின் படைக்கு, இது மற்றொரு சோதனை தான். சச்சின், டிராவிட், லட்சுமண் இல்லாத நிலையில், புஜாரா, விராத் கோஹ்லி, ரகானே போன்ற இளம் வீரர்கள் ஆறுதல் தந்த போதும், இவை வெற்றிக்கு போதவில்லை.


காற்று தொல்லை:

தவிர, நியூசிலாந்தில் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். பந்துகள் பவுன்ஸ் ஆகும் அதேநேரத்தில், காற்றும் கைகொடுப்பதால் நன்கு "சுவிங்' ஆகும். இதை சமாளிப்பது கடினம் தான்.

தவிர, நியூசிலாந்து உலகத்தரம் வாய்ந்த அணி அல்ல என்ற போதிலும், சொந்தமண்ணில் அசைக்க முடியாத வீரர்களாக வலம் வருகின்றனர். இந்த சாதகத்தை பயன்படுத்தி போட்டிகளில் வெற்றி பெறுவதில் வல்லவர்கள்.
இதனால், இந்திய அணி இம்முறை வெற்றிபெற, கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். 
 

அனுபவம் உள்ளது

சமீபத்தில் இந்தியா "ஏ', 19 வயது அணிகளுடன் நியூசிலாந்து சென்று திரும்பிய பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் கூறுகையில்,"" தென் ஆப்ரிக்க ஆடுகளங்கள் கடினமானது. பந்து நன்கு "பவுன்ஸ்' ஆகும். நியூசிலாந்தில் காற்றின் வேகம் அதிகம். 

இதில் "சுவிங்' ஆகி வரும் பந்துகளை சந்திப்பது கடினம். முதலில் இருந்தே அடித்து விளையாட முடியாது. கோஹ்லி, ரகானே, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமிக்கு இங்கு விளையாடிய அனுபவம் உள்ளது,'' என்றார்.

தோனியுடன் காம்பிர் மோதலா?



எனக்கும், கேப்டன் தோனிக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் தான் அணியில் சேர்க்கப்படாததற்கு காரணம் என்ற செய்தியில் உண்மையில்லை,’’ என, காம்பிர் தெரிவித்தார்.      

இந்திய அணியின் துவக்க வீரர் காம்பிர், 32. இதுவரை 54 டெஸ்ட் (4,021 ரன்கள்), 147 ஒருநாள் (5,238) மற்றும் 37 ‘டுவென்டி-20’ (937) பங்கேற்றுள்ளார். கடைசியாக 2012, டிச.,ல் இங்கிலாந்துக்கு எதிரான் நாக்பூர் டெஸ்ட் போட்டிக்குப் பின் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.     
  
இவர், ‘அணியில் தனது இடத்தை தக்க வைக்க மட்டும் விளையாடுகிறார். வெற்றிக்கு முயற்சிப்பதில்லை,’ என, கேப்டன் தோனி புகார் கூறியதாக அப்போது செய்திகள் வெளியாகின.       

தற்போது, இழந்த ‘பார்மை’ மீட்க காம்பிர் போராடி வருகிறார். கடந்த 2009, நியூசிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவர், இரண்டு சதம் அடித்தார். ஆனாலும், எதிர்வரும் நியூசிலாந்து தொடரில் இவரது பெயரை தேர்வாளர்கள் பரிசீலிக்கக் கூட இல்லை.       

இதுகுறித்து காம்பிர் கூறியது: எனக்கும், கேப்டன் தோனிக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் தான் அணியில் சேர்க்கப்படாததற்கு காரணம் என்ற செய்தியில் உண்மையில்லை. 

இது ஒரு சிலரால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை. இதைத்தான் நான் முதலில் கூறினேன். இப்போதும் இதையே தான் சொல்கிறேன். என் விஷயத்தில் மட்டுமல்ல சேவக், யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் என, யாருக்கும் தோனியுடன் உரசல் கிடையாது. 

மோசமான ‘பார்ம்’ மற்றும் உடற்தகுதியால்  நாங்கள் அணியில் இல்லாத நேரத்தில், இப்படி பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன, அவ்வளவு தான். மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.       

நியூசிலாந்து தொடரில் இடம் பெறாததால், எனக்கு பெரிய பாதிப்பு இல்லை. இதை எல்லோரும் நம்புங்கள். வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படுவதும், மீண்டும் திரும்புவதும், கிரிக்கெட்டில் சகஜம். சச்சின் தவிர, இந்திய அணியிலுள்ள வீரர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட சூழ்நிலையை சந்தித்தவர்கள் தான்.       

கடந்த 2011 வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தோள்பட்டை காயம் காரணமாக விலகிவிட்டு, பின் பிரிமியர் தொடரில் பங்கேற்ற போது, தேசத்தை விட கிளப் அணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறினர்.   
    
இதெல்லாம் கட்டுக்கதை. காயமடைந்த நேரத்தில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். என்னைப் பொறுத்தவரை பிரிமியர் தொடரில் பங்கேற்பதை விட, இந்திய அணிக்காக விளையாடுவதற்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.       

இவ்வாறு காம்பிர் கூறினார்.      

சென்னை அணியில் டாப் 5 வீரர்கள் யார்?



ஏழாவது பிரிமியர் கிரிக்கட் தொடருக்கான வீரர்கள் ஏலம், வரும் பிப்., 12, 13ல் நடக்கவுள்ளது. 

இதற்கு முன் ஒவ்வொரு அணி நிர்வாகமும், எந்தெந்த வீரர்களை தக்க வைக்கின்றன என்ற விவரத்தை, ஜன.,10ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். 

இதன்படி, சென்னை அணியில் கேப்டன் தோனி நீடிப்பது உறுதி. 2010, 2011ல் சென்னை அணி சாதிக்க முக்கிய காரணமாக இருந்த அஷ்வின், ‘ஆல் ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா, ரெய்னாவும் அணியில் இருக்கலாம். 

கடந்த தொடரில் 18 போட்டிகளில் 32 விக்கெட் சாய்த்த வெஸ்ட் இண்டீசின் டுவைன் பிராவோவும் தொடரலாம். அதேநேரம் மோகித் சர்மா, ஆல்பி மார்கல், மைக்கேல் ஹசியின் நிலை என்னாகும் எனத் தெரியவில்லை. 

மும்பை அணியை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், போலார்டு, மலிங்காவுடன், சமீபகாலமாக வேகத்தில் மீண்டும் மிரட்டி வரும் மிட்சல் ஜான்சன் என, ஐந்து பேர் உறுதியாக இருக்கலாம். அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் ஏலத்தில் மீண்டும் வாங்கப்படலாம். 


காம்பிர் நீடிப்பு:

கோல்கட்டா அணிக்கு கடந்த 2011ல் இருந்து கேப்டனாக உள்ள காம்பிர், 2012ல் கோப்பை வென்று கொடுத்தார். இவருடன், மனோஜ் திவாரி, யூசுப் பதான் மற்றும் வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் தக்கவைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ராஜஸ்தானை பொறுத்தவரையில் ரகானே, வாட்சன், பால்க்னர், டாம்பே நீடிக்க வாய்ப்பு உள்ளது.