நூறாவது டெஸ்டில் நூறாவது சதம் எகிறுகிறது எதிர்பார்ப்பு

சிட்னி மைதானத்தில் நடக்கும் நூறாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர் சச்சின், நூறாவது சதத்தை எட்டுவார் என, அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்தது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் வரும் ஜன., 3ல் சிட்னியில் துவங்குகிறது.

இது இம்மைதானத்தில் நடக்கும் 100வது டெஸ்ட் என்ற பெருமை பெறுகிறது. இதில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 100வது சதத்தை எட்டுவார் என அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

கடந்த 22 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில், சச்சின் இதுவரை 59 அன்னிய மைதானங்களில் விளையாடியுள்ளார். இதில் இந்திய துணைக்கண்டத்தில் உள்ள வங்கதேசத்தின் டாகா, மிர்புரில் சிறந்த சராசரி வைத்துள்ளார்.

இருப்பினும், சிட்னி மைதானம் சச்சினுக்கு ராசியானது. இதுவரை இங்கு நான்கு டெஸ்டில் பங்கேற்றுள்ளார். 1992ல் முதல் போட்டியில் சதம் (148*) அடித்தார். பின் 2000த்தில் 45, 4 ஏமாற்றினார். 2004ல் நடந்த டெஸ்டில் இரட்டை சதம் (241*, 60*) அடித்து அசத்தினார்.

கடைசியாக 2008ல் மீண்டும் சதம் (154*, 12) என, இதுவரை ஒரு இரட்டை சதம், 2 சதங்கள் அடித்து மிரட்டியுள்ளார். இம்மைதானத்தில் சச்சினின் சராசரி 221 ரன்கள் என்பது திகைப்படைய வைக்கும் தகவல்.

இது குறித்து சச்சின் கூறியது:

அன்னிய மண்ணில் நான் விளையாடிய மைதானங்களில் சிட்னி எனக்கு பிடித்தது. இங்குள்ள நேர்த்தியான சூழ்நிலை அற்புதமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை இம்மைதானத்துக்கு சிறப்பான இடம் உண்டு. ஏனெனில், இங்கு ரசித்து விளையாடுவேன். இம்மைதானத்தில் களமிறங்கும் போதே, சிறப்பாக விளையாடுவோம் என்ற எண்ணம் தோன்றிவிடும்.

இவ்வாறு சச்சின் கூறினார்.

கடந்த 9 மாதங்களாக சச்சினிடம், பிடிபடாமல் நழுவிக் கொண்டிருக்கும் 100வது சதம், இவருக்கு பிடித்தமான சிட்னியில் பிடிபடட்டும்.


விற்பனை அதிகரிக்கும்:

இதனிடையே சிட்னி டெஸ்டின் முதல் நாளுக்கான டிக்கெட்டுகளில் 14,600 வரை விற்றுள்ளதாம். அடுத்த மூன்று நாட்களுக்கு முறையே 8,500, 7,000, 1,600 டிக்கெட்டுகளை வரை இதுவரை விற்றுள்ளது. இங்கு சச்சின் சாதிக்கும் பட்சத்தில், முழு அளவு டிக்கெட்டுகளும் காலியாகும் என நம்பப்படுகிறது.

சிட்னியில் நூறாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு மீண்டும் சோதனை

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்க உள்ளது. இது இம்மைதானத்தில் நடக்கும் 100வது டெஸ்ட். இந்த ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதால், இந்திய அணிக்கு மீண்டும் சோதனை காத்திருக்கிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, "பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் ஜன., 3ம் தேதி சிட்னியில் துவங்குகிறது. இது இங்கு நடக்கும் 100வது டெஸ்ட் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. கடந்த 1882ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் இங்கு நடந்தது.

சிட்னி ஆடுகளம் வழக்கமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். சமீப காலமாக வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இரு போட்டிகளிலும் (பாகிஸ்தான், இங்கிலாந்து) முதலில் பேட் செய்யும் அணி சுருண்டதை காண முடிந்தது. இதனால், இந்திய அணிக்கு சிட்னியிலும் சோதனை காத்திருக்கிறது.


இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் டாம் பார்க்கர் கூறியது:

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது ஆடுகளம் அமைந்த விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இதேபோன்று தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

இதன் படி முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும். அடுத்தடுத்து ஆடுகளத்தில் திருப்பம் ஏற்படும். ஏனெனில், இங்குள்ள சூழ்நிலையும் அப்படி உள்ளது.

கடந்த ஆண்டு அதிகமாக மழை குறுக்கிட்டது. இம்முறை புத்தாண்டில் வானிலை மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும், ஆடுகளத்தை மூடித்தான் வைத்துள்ளோம். ஏனெனில், அடுத்து வரும் நாட்களில் இங்கு அதிக போட்டிகள் நடக்கவுள்ளன.

தவிர, வேகம், சுழற் பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவருக்கும் சாதகமான ஆடுகளத்தை தரத்தான் எப்போதும் விரும்புகிறேன். இதற்கு தகுந்து தான் ஆடுகளத்தை தயார் செய்துள்ளோம்.

இவ்வாறு டாம் பார்க்கர் கூறினார்.

சச்சின் வீடு ரூ. 100 கோடிக்கு இன்சூரன்ஸ்

மும்பையில் சச்சின் கட்டியுள்ள புதிய வீடு, ரூ. 100 கோடிக்கு "இன்சூரன்ஸ்' செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவர் சமீபத்தில் மும்பை, பாந்த்ரா பகுதியில் 5 மாடி கொண்ட புதிய வீடு கட்டி குடியேறினார்.

இந்த வீட்டை இரு பிரிவுகளாக பிரித்து சச்சின் இன்சூரன்ஸ் செய்துள்ளார்.

முதல் பிரிவு தீ விபத்து. அதாவது தீ, பயங்கரவாத நடவடிக்கைகளால், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவு, குண்டு வெடிப்பு, திருட்டு உள்ளிட்டவைகள் ஏற்படும் பாதிப்புக்கு ரூ. 75 கோடிக்கு பாலிசி எடுத்துள்ளார்.

இரண்டாவதாக சச்சினின் கிரிக்கெட் உபகரணங்கள், படங்கள், கைக்கடிகாரங்கள், பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தவிர, வீடு அமைந்த நிலப்பகுதி, சுற்றுச் சுவர், பாதுகாப்பு கருவிகளுக்காக ரூ. 25 கோடி என மொத்தம் ரூ. 100 கோடி வரைக்கும் "இன்சூரன்ஸ்' செய்திருப்பதாக தெரிகிறது.

இதற்கு சச்சின் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 40 முதல் 50 லட்சம் வரை பிரிமியம் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த இன்சூரன்ஸ் பிரிவில் சச்சின் இரண்டாவது தளத்தில் நிறுத்திவைத்திருக்கும் கார்களுக்கு கிடையாது. ஏனெனில் இந்தக்கார்களுக்கு தனியாக "இன்சூர்' செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார் சச்சின்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 100வது சர்வதேச சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை இழந்தார். இவர், 73 ரன்கள் எடுத்து, பீட்டர் சிடில் வேகத்தில் "கிளீன் போல்டானார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மெல்போர்னில் நடக்கிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. பிராட் ஹாடின் (21), பீட்டர் சிடில் (34) அவுட்டாகாமல் இருந்தனர்.


ஜாகிர் அபாரம்:

முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் பீட்டர் சிடில் (41), பிராட் ஹாடின் (27) ஜோடி ஜாகிர் கான் வேகத்தில் வெளியேறியது. அடுத்து வந்த ஹில்பெனாஸ் (19), நாதன் லியான் (6), அஷ்வின் சுழலில் சிக்கினர்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்களுக்கு "ஆல்-அவுட் ஆனது. பட்டின்சன் (18) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ஜாகிர் கான் 4, உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.


சேவக் அரைசதம்:

பின், முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு காம்பிர் (3) ஏமாற்றினார். மறுமுனையில் அபாரமாக ஆடிய சேவக், டெஸ்ட் அரங்கில் தனது 30வது அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த போது, பட்டின்சன் வேகத்தில் சேவக் (67) போல்டானார்.


சூப்பர் ஜோடி:

பின் இணைந்த டிராவிட், சச்சின் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிட் (63வது), சச்சின் (64வது) அரைசதம் அடித்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த போது, பீட்டர் சிடில் வேகத்தில் சச்சின் (73) "கிளீன் போல்டானார். இதன்மூலம் சச்சினின், "சதத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பு மீண்டும் ஒரு முறை தகர்ந்தது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்து, 119 ரன்கள் பின்தங்கி இருந்தது. டிராவிட் (68), இஷாந்த் சர்மா (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஹில்பெனாஸ், பட்டின்சன், பீட்டர் சிடில் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும்

ர்வதேச விளையாட்டில், இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிறப்பானதாகவே அமைந்தது. கிரிக்கெட்டில், உலக கோப்பை(50 ஓவர்) வென்றது. ஹாக்கியில், ஆசிய சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

கால்பந்தில், தெற்காசிய சாம்பியனாக மகுடம் சூடியது. இதை தவிர, டென்னிஸ், பாட்மின்டன், மல்யுத்தம் போன்ற போட்டிகளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா அல்லது ஏமாற்றமே மிஞ்சியதா என பார்ப்போம்...


தீபிகா பல்லிகல்:

ஸ்குவாஷ் போட்டியை பொறுத்தவரையில், சென்னை வீராங்கனையான தீபிகா பல்லிகல், 20, அசத்தினார். இந்த ஆண்டு மட்டும் ஆரஞ்ச் கவுன்டி ஓபன், கலிபோர்னியா ஓபன், ஹாங்காங் தொடர் என, மூன்று சர்வதேச பட்டங்களை வென்றார். தவிர, உலக ஸ்குவாஷ் ஓபன் தொடரின் காலிறுதிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.

கடந்த 2006ம் ஆண்டில் இருந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் தீபிகா பல்லிகல், 2011 பிப்ரவரியில் தரவரிசை பட்டியலில் முதன் முறையாக 24வது இடத்திற்கு முன்னேறிய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். சமீபத்தில் 17வது இடத்தில் இருந்த இவர், இப்போது 19வது இடத்திலுள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்தில் ஜோஷ்னா சின்னப்பா (34வது ரேங்க்), இந்த ஆண்டு ஒரு பட்டம் (சிகாகோ) மட்டும் வென்றார். ஆண்கள் பிரிவை பொறுத்தவரையில் சவுரவ் கோஷல், சித்தார்த், ஹரிந்தர் பால் ஆகியோர் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க வெற்றி எதுவும் பெறவில்லை.


தீபிகா குமாரி:

வில்வித்தை போட்டி இந்த ஆண்டு இந்தியாவுக்கு வெற்றிகரமானதாக இருந்தது. 2012ல் ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ள நிலையில், சர்வதேச அளவில் இந்திய பெண்கள் அணி அசத்தலான திறமை வெளிப்படுத்தியது, லண்டன் பதக்க கனவை அதிகப்படுத்தி உள்ளது.

இதில் முன்னணியில் இருப்பவர் தீபிகா குமாரி, 17. சாதாரண ஆட்டோ ரிக்ஷா தொழிலாளியின் மகளான இவருடன் இணைந்த பம்பயலா தேவி, சுவுரோ ஜோடி, உலக சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில், கொரியாவை வீழ்த்தினர்.

தவிர, இத்தொடரில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி என்ற பெருமை பெற்றனர். பைனலில் ஏமாற்றிய இவர்கள், வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தனர்.


ஆண்கள் சொதப்பல்:

ஆண்கள் பிரிவில் ஜெயந்த் தாலுக்தர் மட்டும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அணி அளவில் எடுத்துக்கொண்டால் பெரும் ஏமாற்றமே. ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற தருண்தீப் ராய், காமன்வெல்த்தில் வெண்கலம் வென்ற ராகுல் பானர்ஜி ஆகியோருக்கும் ஏமாற்றமே.

மொத்தத்தில் இந்த ஆண்டு இந்திய அணி பல்வேறு சர்வதேச போட்டிகளில் 13 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கலம் என, மொத்தம் 40 பதக்கங்களை வென்றது. இதில் 12 பதக்கங்கள் தீபிகா குமாரியால் மட்டும் கிடைத்தது.


ஜுவாலா ஆறுதல்:

பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்கள் இரட்டையரில் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடி வெண்கலம் வென்றது தான், இந்த ஆண்டின் பெரிய வெற்றி. மற்றபடி இந்தியாவுக்கு சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செய்னா நேவல், சுவிஸ் கிராண்ட் பிரிக்சில் மட்டும் தங்கம் வென்றார். மலேசியா, இந்தோனேஷிய தொடர்களில் பைனலில் வீழ்ந்த இவர், உலக சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின், பெண்கள் ஒற்றையர் பைனலுக்கு முன்னேறிய, முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். கலப்பு இரட்டையரில் ஜுவாலா, திஜு ஜோடி, ஒற்றையரில் காஷ்யப்பிற்கு ஏமாற்றம் தான் தந்தனர்.

ஆனால், புதியவரவான சிந்து,16, டச்சு ஓபன், மாலத்தீவு, இந்தோனேஷியா, சுவிஸ் தொடர்களில் கோப்பை வென்றார். 151வது ரேங்கில் இருந்த இவர், தற்போது 42வது இடத்துக்கு முன்னேறினார்.

இந்திய அணிக்கு அக்ரம் அட்வைஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய வீரர்கள் மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும்,'' என, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட், மெல்போர்னில் இன்று ஆரம்பமாகிறது.

இதுகுறித்து அக்ரம் கூறியதாவது:

சச்சின், டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன் களமிறங்கி உள்ள இந்திய அணி, போதிய அனுபவமில்லாத ஆஸ்திரேலியாவை வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் முதலிரண்டு டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்கள் மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும்.

ஏனெனில், எந்த ஒரு அணியாக இருந்தாலும், ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் முதலிரண்டு டெஸ்டில் தடுமாற்றத்தை சந்திக்கும். இதனால் தோல்வி அடைய நேரிடும்.

முன்னதாக நான், டெஸ்ட் போட்டியில் விளையாட பத்து முறை ஆஸ்திரேலியா சென்றேன். அப்போது எங்கள் பாகிஸ்தான் அணி, முதலிரண்டு போட்டியில் சரிவை சந்தித்தது. எனவே இந்திய வீரர்கள், எச்சரிக்கையுடன் விளையாடி, முதலில் தோல்வியில் இருந்து மீள வேண்டும்.

இதன்மூலம் மீதமுள்ள போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரை கைப்பற்றலாம்.

பேட்டிங் வரிசையில் ஆறாவது வீரராக களமிறங்க விராத் கோஹ்லியை தேர்வு செய்யலாம். ஏனெனில் இவர், பயிற்சி போட்டியில் சதம் அடித்திருப்பதால், அங்குள்ள மைதானத்தின் தன்மைக்கேற்ப சிறப்பாக விளையாட வாய்ப்பு உள்ளது. அதேவேளையில், ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்றம் இல்லை.

இவ்வாறு அக்ரம் கூறினார்.

சச்சின் 100வது சதம் அடிப்பாரா?

ஆஸ்திரேலிய தொடரில் சச்சின் 100வது சதம் அடிக்க மாட்டார் என்று நம்புகிறேன்,'' என, ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை துவங்குகிறது. இதில் இந்திய வீரர் சச்சின் தனது 100வது சதத்தை பூர்த்தி செய்வார் என எதிர் பார்க்கப்படுகிறது. இது குறித்து கிளார்க் கூறியது:

இந்திய வீரர் சச்சின் நீண்ட ஆண்டுகளாக, நம்ப முடியாத அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது "பேட்டிங்கை' ரசித்து பார்ப்பேன்.

இவர் சர்வதேச அரங்கில் 100வது சதத்தை நிச்சயமாக அடிப்பார். மெல்போர்னில் சச்சினின் ஆட்டத்தை காண நிறைய ரசிகர்கள் வருவர்.

இவருக்கு ஆதரவு அதிகம் இருக்கும். இவர் 100வது சதம் அடிக்க வாழ்த்துகிறேன். ஆனால், இம்முறை இந்த சாதனை வேண்டாம். வேறு அணிக்கு எதிராக அல்லது அடுத்த தொடரில் வேண்டும் என்றால் அடித்துக் கொள்ளட்டும்.

முதல் டெஸ்டில் விளையாடும் 11 வீரர்களை அறிவித்துள்ளோம். இவர்கள் முதல் டெஸ்டில் வெற்றி தேடித் தருவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.

மிட்சல் ஸ்டார்க், கிறிஸ்டியன் நீக்கப்பட்டு, பாண்டிங், ஹசி ஆகியோருடன் நானும், ஒரு சில ஓவர்கள் பவுலிங் செய்வோம். டேவிட் வார்னர் பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல், பவுலராகவும் கலக்க காத்திருக்கிறார்.
மைதானத்தில் எந்தவிதமான ஒழுங்கீனமான செயலிலும் ஈடுபடக்கூடாது என அணியினரை எச்சரித்துள்ளேன். மீறுபவர்கள் மீது ஆஸ்திரேலிய கிரிக்கெட் (சி.ஏ.,) கடும் நடவடிக்கை எடுக்கும். டெஸ்ட் தொடருக்காக நல்ல முறையில் தயாராகி உள்ளோம். எனவே ஐந்து நாளும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெற்றி பெறுவோம். நாளை "டாஸ்' வெல்லும் வாய்ப்பு கிடைத்தால், பேட்டிங் தான் தேர்வு செய்வோம்.
இவ்வாறு கிளார்க் கூறினார்.

மீண்டும் சுழல் புயல்

ர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து கும்ளே (இந்தியா), வார்ன் (ஆஸ்திரேலியா), முரளிதரன் (இலங்கை) ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற, சுழற்பந்துவீச்சு துறையில் மிகப் பெரும் வெற்றிடம் ஏற்பட்டது.

தற்போது அஷ்வின், ஹபீஸ், சயீத் அஜ்மல் போன்ற திறமையான வீரர்களின் வரவால், சுழற்பந்துவீச்சு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை நடந்துள்ள ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 1930 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன. இதில் சுழற்பந்துவீச்சின் மூலம், 732 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 71 விக்கெட் அதிகம்.

கடந்த 2004ம் ஆண்டில் இருந்து சுழற்பந்துவீச்சின் மூலம் கிடைத்த விக்கெட் விவரம்:


ஆண்டு மொத்த விக்., சுழல் விக்.,

2011 1930 732

2010 1911 661

2009 1939 630

2008 1605 524

2007 2462 708

2006 2131 636

2005 1402 351

2004 1590 446அப்ரிதி முன்னிலை

இந்த ஆண்டு இதுவரை விளையாடிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய
சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில், பாகிஸ்தான் "ஆல்-ரவுண்டர்' அப்ரிதி முன்னிலை வகிக்கிறார்.

இவர், 27 போட்டியில் 45 விக்கெட் வீழ்த்தியுள்ளார். முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள் உள்ளனர். இந்தியா சார்பில் அஷ்வின், 18 போட்டியில் 25 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இந்த ஆண்டு சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு:


வீரர் போட்டி விக்கெட்

அப்ரிதி (பாக்.,) 27 45

அஜ்மல் (பாக்.,) 20 34

ஹபீஸ் (பாக்.,) 32 32

சுவான் (இங்கிலாந்து) 21 31

சாகிப் (வங்கதேசம்) 20 25

அஷ்வின் (இந்தியா) 18 25

ஜடேஜா (இந்தியா) 13 24

முதல் டெஸ்டில் சச்சின் 100வது சதம்

ஆஸ்திரேலிய மண்ணில், சச்சின், தனது 100வது சர்வதேச சதத்தை பதிவு செய்வார். இந்த சாதனையை முதல் டெஸ்டில் படைக்க வாழ்த்துகிறேன், என, ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் 26ம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது.

இத்தொடரில் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 100வது சர்வதேச சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், இதுவரை 99 சதம் (டெஸ்ட் 51 + ஒருநாள் 48) அடித்துள்ளார்.

இதுகுறித்து வார்ன் கூறியதாவது:

இந்திய வீரர் சச்சின், தனது 100வது சதத்தை ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இதனை, மெல்போர்னில் நடக்கவுள்ள முதல் டெஸ்டில் நிகழ்த்த வாழ்த்துகிறேன். சுமார் 70 முதல் 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில், இவர் சாதனை நிகழ்த்தும் பட்சத்தில், அது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.


பலமான பேட்டிங்:

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. குறிப்பாக அனுபவ வீரர் ராகுல் டிராவிட், அதிக ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது. சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில், இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய வீரர்கள் அருமையாக பேட் செய்தனர்.


"பவுலிங் பலவீனம்:

இத்தொடரில், இந்திய அணியின் வெற்றிக்கு பவுலர்களின் உடற்தகுதி முக்கிய பங்குவகிக்கும். அனுபவ வீரர் ஜாகிர் கான், இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது.

ஒருவேளை இவர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில், அது இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும். இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதால், பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே, ஆஸ்திரேலிய அணியின் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும்.


உடற்தகுதி முக்கியம்:

சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில், இந்திய அணி கண்ட மோசமான தோல்விக்கு, முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. எனவே இம்முறை இந்திய வீரர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் உடற்தகுதியில் சிறப்பு கவனம் செலுத்தினால் நல்லது.

இவ்வாறு ஷேன் வார்ன் கூறினார்.

அம்பயர்கள் முட்டாள்களா?: "டிவி' நிறுவனத்துக்கு எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ரசிகர்களுக்காக "ஹாட் ஸ்பாட்' தொழில் நுட்பத்தை "சேனல்-9' பயன்படுத்துவது, களத்தில் இருக்கும் அம்பயர்களை முட்டாள்களாக்கும் செயல் என விமர்சனம் எழுந்துள்ளது.

எதிர்வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில், அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறையை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்கவில்லை. தவிர, இங்கிலாந்து தொடரில் கிடைத்த "கசப்பான' அனுபவம் காரணமாக, "ஹாட் ஸ்பாட்' முறையும் வேண்டாம் என பி.சி.சி.ஐ., முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த "சேனல்-9' "டிவி' நிறுவன அதிகாரி பிராட் மெக்னாமரா,"" அம்பயர்கள் தவறு செய்தார்களா என்பதை அறிந்து கொள்ள, ரசிகர்களுக்காக மட்டும் "ஹாட் ஸ்பாட்' மூலம் சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் காண்பிக்கப்படும்,''என்றார்.

களத்தில் இருக்கும் அம்பயர் தரும் தீர்ப்பை ஏற்காமல், போட்டியாக வேறு ஒரு முடிவை ரசிகர்களுக்கு காட்டுவது, எல்லோரையும் குழப்பமடைய செய்யும். இது, தீர்ப்பு வழங்கிய அம்பயர்களை முட்டாள்களாக்கும் செயல் என, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


கிளார்க் ஆதரவு:

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,"" ஒரு தொடரில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விட்டு, அடுத்த தொடரில் நீக்குகின்றனர். இது என்ன முடிவு என்றே தெரியவில்லை.

இம்முறையை பயன்படுத்துவதில் அனைத்து கிரிக்கெட் போர்டுகளும், நிலையான முடிவு எடுக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) இவ்விஷயத்தில் தலையிட்டு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்,'' என்றார்.

ஆஸி., தொடரில் "ஹாட் ஸ்பாட்' இல்லை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், "ஹாட் ஸ்பாட்' தொழில் நுட்பத்தை பயன்படுத்த பி.சி.சி.ஐ., மறுப்பு தெரிவித்துள்ளது.

அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறைக்கு ஏற்கனவே இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து போட்டியில் பங்கேற்கும் இரு நாடுகளும் ஒத்துக் கொண்டால் மட்டுமே டி.ஆர்.எஸ்., முறையை அமல்படுத்த முடியும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்தது.


"ஹாட் ஸ்பாட்' எப்படி?

கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், டி.ஆர்.எஸ்., முறையை நிராகரித்த இந்தியா, "ஹாட் ஸ்பாட்' முறையை மட்டும் ஏற்றுக் கொண்டது. இதன் படி, "இன்பிரா ரெட் கேமரா' மூலம் வீரர்களின் அசைவுகள் கறுப்பு வெள்ளை ("நெகடிவ்') படங்களாக பதிவு செய்யப்படும்.

பந்து பேட்டின் மீது பட்டால், அந்த இடத்தில் மட்டும் வெள்ளையாக தெரிவதை வைத்து, "அவுட்' கொடுக்கலாம்.


பாதிப்பு அதிகம்:

ஆனால், இங்கிலாந்து தொடரில், லட்சுமண் பேட்டில், பந்து பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனை "ஹாட் ஸ்பாட்' முறையில் சரியாக உறுதி செய்ய முடியவில்லை. இதே போல டிராவிட்டுக்கும் பலமுறை தவறாக "அவுட்' கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் "ஹாட் ஸ்பாட்' முறை வேண்டாம் என பி.சி.சி.ஐ., முடிவு செய்ததாக தெரிகிறது.


குழப்பமாக உள்ளது:

இதுகுறித்து போட்டியை ஒளிபரப்பும் ஆஸ்திரேலிய சேனலின் அதிகாரி பிராட் மெக்னாமரா கூறுகையில்,""கடந்த முறை ஆஸ்திரேலியா சென்ற போது, இந்திய அணிக்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் டி.ஆர்.எஸ்., மற்றும் "ஹாட் ஸ்பாட்' தொழில் நுட்பம் வேண்டாம் என கூறியுள்ளது வியப்பாக இருக்கிறது. இத்தொடரில், இந்திய அணி சில பாதகமான தீர்ப்புகளை பெற்றால், டி.ஆர்.எஸ்., வேண்டும் என்று கூறத் துவங்கிவிடுவர்.

அம்பயர்கள் தவறு செய்தார்களா என்பதை அறிந்து கொள்ள, ரசிகர்களுக்காக மட்டும் "ஹாட் ஸ்பாட்' மூலம் சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் காண்பிக்கப்படும்,''என்றார்.

ராகவேந்திரா பயிற்சியில் சச்சின்

முதல் தர போட்டியில் கூட பங்கேற்காத ராகவேந்திரா என்பவரது பந்துவீச்சில், பயிற்சி மேற்கொண்டார் சச்சின்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100வது சதத்தை எடுக்க, தீவிர முயற்சி செய்து வருகிறார். இம்முறை ஆஸ்திரேலியாவின் ஆடுகளங்களில் ஏற்படும் "அவுட் சுவிங்' பவுலிங்கை சந்திக்க, நம்பகமான ஒருவரை அழைத்துச் சென்றுள்ளார்.

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வேலை பார்த்து வருகிறார் ராகவேந்திரா, 27. இவர் இதுவரை எவ்வித முதல் தர போட்டிகளிலும் பங்கேற்றது இல்லை.

இருந்தாலும், இவரது "அவுட் சுவிங்' பந்து வீசும் திறன், பேட்டிங் பயிற்சிக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று நம்பினார் சச்சின்.

இதற்கு டிராவிட்டும் ஆதரவு தர, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதியுடன் ஆஸ்திரேலியா பறந்து விட்டார்.

தற்போது வலைப்பயிற்சியின் போது சச்சினுக்கு, ஏராளமான "அவுட் சுவிங்' பந்துகளை வீசி வருகிறார். இதனால் ராகவேந்திரா, சச்சினின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

சச்சினை வீழ்த்துமா சாப்பல் திட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் உட்பட இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த, கிரெக் சாப்பல் வகுக்கும் திட்டம் பலிக்காது,'' என, கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தனது 100வது சர்வதேச சதம் அடிக்க காத்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே அசத்தும் இவர், 31 டெஸ்டில் 11 சதங்கள் உட்பட 3,151 ரன்கள்(சராசரி 60.59 ) எடுத்துள்ளார். இவரை எப்படி சமாளிப்பது என ஆஸ்திரேலிய பவுலர்கள் பயந்து போயுள்ளனர்.
அதிரடி திட்டம்:
இவர்களது அச்சத்தை போக்க, கிரெக் சாப்பலை பயன்படுத்த ஆஸ்திரேலிய பயிறசியாளர் மிக்கி ஆர்தர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்திய பயிற்சியாளராக இருந்த சாப்பல் அனுபவ வீரர்களான சச்சின், சேவக், டிராவிட் போன்றவர்களின் பலம், பலவீனம் அறிந்தவர்.
முதல் டெஸ்ட் போட்டி(டிச., 26-30) துவங்கும் முன்பு இவர், சக ஆஸ்திரேலிய வீரர்களிடம் உரை நிகழ்த்த திட்டமிட்டுள்ளார். அப்போது இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்ட முறை பற்றி எடுத்துக் கூறுவார் என தெரிகிறது. இதன் மூலம் சச்சின் விக்கெட்டை எளிதில் வீழ்த்தி விடலாம் என ஆஸ்திரேலியா எண்ணுகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த காலத்தில் கங்குலி உட்பட மற்ற வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்தவர் சாப்பல். இந்நிலையில் இவரது தற்போதைய திட்டம் எடுபடாது என முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.
இது குறித்து கங்குலி கூறியது:
கடந்த 2008ல் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தொடரை 2-0 என பரிதாபமாக இழந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகிகளில் ஒருவராக கிரெக் சாப்பலும் இருந்தார். எனவே, இவரது உதவி ஆஸ்திரேலிய அணிக்கு இம்முறையும் பயன் அளிக்காது. இவரது திட்டமும் எடுபடாது.
துணிச்சல் இல்லை:
இந்திய அணியின் சர்ச்சைக்குரிய பயிற்சியாளராக மூன்று ஆண்டுகள்(2005-07) சாப்பல் இருந்தார். இவரை பயிற்சியாளராக தேர்வு செய்தது எனது தவறு தான். தனிப்பட்ட முறையில் வீரர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்பட்டார்.
சச்சின், லட்சுமண், ஜாகிர், ஹர்பஜன் போன்ற உலக தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிரானரவாக இருந்தார். அணியின் எதிர்காலம் தொடர்பாக எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் அவரிடம் காணப்படவில்லை.
தொடர்ந்து தவறு மேல் தவறு செய்தார். ஆனாலும், அப்போதைய கேப்டன் டிராவிட்டுக்கு அவரது தவறை தடுத்து நிறுத்தும் துணிச்சல் இல்லை.
இவ்வாறு கங்குலி கூறினார்.

சச்சினுக்கு ஆதரவாக தீர்மானம்

நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருதை, கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு வழங்க வேண்டும் என, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

கலை, இலக்கியம், அறிவியல், பொதுமக்கள் சேவை போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு தான் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களும், இவ்விருது பெறலாம் என, மத்திய அரசு விதிமுறையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது.

இதன்படி கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனை படைத்துள்ள இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினும் இவ்விருதை பெற வாய்ப்பு வந்துள்ளது.

இதற்கு எம்.சி.ஏ., ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இதன் துணைத்தலைவர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில்,"" சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எங்களது வேண்டுகோளை, மகாராஷ்டிரா அரசு மத்திய அரசிடம் கொண்டு செல்ல வேண்டும். இதுகுறித்து எங்களது செயலர்கள், மகாராஷ்டிரா அரசுக்கு கடிதம் எழுதுவார்கள்,'' என்றார்.

இந்திய அணியின் அடுத்த வாரிசுகள்

இந்திய அணியின் "பிக்-3' என்றழைக்கப்படும் சச்சின், லட்சுமண், டிராவிட் ஆகியோர் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்த இடத்தை நிரப்ப தகுதியான இருவராக ரோகித் சர்மா, விராத் கோஹ்லி உருவெடுத்துள்ளனர்.

இந்திய அணியின் "மிடில் ஆர்டரில்' கங்குலி ஓய்வுக்குப் பின், அந்த இடம் சரியாக நிரப்பப்படாமல் உள்ளது. இந்த இடத்துக்கு பத்ரிநாத், புஜாரா, ரெய்னா, யுவராஜ் என மாறி, மாறி வந்தும் இன்னும் யாரும் நிலைத்த பாடில்லை.

இந்நிலையில் தற்போதைய அணியின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகிய மூவரும் மிக விரைவில் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடும் போட்டி:

ஏற்கனவே, "மிடில் ஆர்டரில்' ஒரு இடம் உறுதியில்லாமல் உள்ளது. இந்நிலையில் சச்சின், லட்சுமண், டிராவிட் ஆகியோருக்கு, எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடர் தான் கடைசியாக இருக்கும் என்ற நிலையில், இந்த மூன்று இடங்களுக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது.


முந்தும் "இருவர்':

ரோகித் சர்மா, 24, விராத் கோஹ்லி, 25, ஆகியோர் இரு இடங்களைப் பெறுவதில் முன்னணியில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் "டாப்' பார்மில் இருக்கும் இவர்கள், வரும் டிசம்பர் 26ல் துவங்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.


கோஹ்லி முன்னிலை:

இதில் ரோகித் சர்மாவை விட, டில்லியின் விராத் கோஹ்லிக்கு விளையாடும் "லெவனில்' இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அரைசதம் அடித்த விராத் கோஹ்லி, இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் சதம் (117) அடித்து அசத்தினார்.

மொத்தம் பங்கேற்ற 72 ஒருநாள் போட்டியில் 9 சதம் அடித்துள்ளார். இதில் கடைசி 9 போட்டியில், 3 முறை சதம் அடித்துள்ளார். இந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில், 900க்கும் அதிகமாக குவித்து, இரண்டாவது இடத்தில் உள்ளார்.


ரோகித் பரிதாபம்:

மறுமுனையில் ரோகித் சர்மாவை துரதிருஷ்டம் துரத்துகிறது. உண்மையை சொன்னால், இவர் கடந்த 2010ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாக வேண்டியது. நாக்பூரில் போட்டி துவங்க சில மணி நேரங்கள் இருந்த போது ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக, அணியில் இருந்து வெளியேறினார்.


மீண்டும் காயம்:

கடந்த டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், சந்தித்த முதல் பந்திலேயே விரல் எலும்பு முறிந்து நாடு திரும்பினார். சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட முடியாத நிலையில், இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். தற்போதைய முதல் மூன்று போட்டியில் ரோகித் சர்மா 72, 90*, 95 என ரன்கள் குவித்தார்.


வெங்சர்க்கார் பாராட்டு:

இந்த இருவர் குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு முன்னாள் தலைவர் வெங்சர்க்கார் கூறுகையில்,""சர்வதேச போட்டிகளில் "ஷார்ட் பிட்ச்' பந்துகளை கையாளும் திறன் அதிகம் தேவை.

இவ்விஷயத்தில் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி இருவரும், "சூப்பர்' திறமை பெற்றுள்ளனர். இவர்களுக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, அனைத்துவிதமான போட்டிகளிலும் இடம் பெறத் தகுதியுள்ளது,'' என்றார்.

மொத்தத்தில் இந்த இளம் வீரர்களுக்கு பந்துகள் எகிறும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில், கடும் சோதனை காத்திருக்கிறது.

பகலிரவு டெஸ்ட் போட்டி - டிராவிட் விருப்பம்

டெஸ்ட் போட்டியை காப்பாற்ற வேண்டும். இதற்காக பகலிரவு டெஸ்ட் அல்லது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவது பற்றி ஐ.சி.சி., பரிசீலிக்க வேண்டும்,'' என, இந்திய வீரர் டிராவிட் கேட்டுக் கொண்டார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள டிராவிட், வரலாற்று சிறப்பு வாய்ந்த பிராட்மேன் நினைவு உரையாற்றினார். இதன் மூலம், இந்த உரை நிகழ்த்தும் முதலாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமை பெற்றார். மிகவும் உணர்ச்சிகரமாக பேசிய டிராவிட், டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து டிராவிட் பேசியதாவது:

டெஸ்ட் போட்டி என்பது தங்கத்தை போன்று தரம்வாய்ந்தது. இதனை விளையாடவே கிரிக்கெட் வீரர்கள் விரும்புகின்றனர். ரசிகர்கள் வேண்டுமானால் "டுவென்டி-20' அதிரடியை காண விரும்பலாம்.

டெஸ்ட் போட்டியை காண அதிகமான ரசிகர்களை மைதானத்துக்கு வரவழைக்க வேண்டும். இதற்காக பகலிரவு டெஸ்ட் அல்லது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தலாம். கடந்த ஆண்டு அபுதாபியில் நடந்த முதல் தர பகலிரவு போட்டியில் பங்கேற்றேன்.

இந்த அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால், ஒளிவெள்ளத்தில் டெஸ்ட் போட்டியை தாராளமாக நடத்தலாம். இது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) ஆய்வு செய்ய வேண்டும்.


ஒருநாள் போட்டி குறைப்பு:

தற்போது அதிகமான ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும். சமீபத்தில் இங்கிலாந்து சென்று ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடியது. பதிலுக்கு இங்கிலாந்து அணி, இந்தியா வந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற போது, ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை.

இதனால் மைதானங்கள் வெறிச்சோடி கிடந்தன. அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா இடையிலான ஒருநாள் தொடரின் போது மைதானங்கள் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது.

எனவே, உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கிய தொடர்கள் தவிர, தேவையில்லாமல் நடத்தப்படும் ஒருநாள் போட்டிகளை குறைப்பது மிகவும் அவசியம்.
இவ்வாறு டிராவிட் கூறினார்.

மவுனத்தை கலைத்தார் கும்ளே - ராஜினாமா பின்னணி

பி.சி.சி.ஐ., மற்றும் கும்ளே இடையிலான மோதல் முற்றுகிறது. தனது தொலைநோக்கு திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தான், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக கும்ளே தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் "சுழல்' ஜாம்பவான் கும்ளே. ஓய்வுக்கு பின், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்றார்.

போதிய நேரம் இல்லாததால், இப்பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார். இதனை இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) ஏற்றுக் கொண்டது.


ஆதரவு இல்லை:

இந்தச் சூழலில் தனது ராஜினாமாவுக்கான காரணத்தை கும்ளே போட்டு உடைத்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில்,""தேசிய கிரிக்கெட் அகாடமியை இன்னும் சிறப்பான மையமாக மாற்ற 3 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை வகுத்தேன்.

இத்திட்டம் ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில், 10 முறை விளக்கி கூறினேன். ஆனால், கமிட்டியின் உறுப்பினர்கள் யாரும் ஏற்க தயாராக இல்லை. எனது பேச்சுக்கு மதிப்பு அளிக்காத நிலையில், வெறும் தலைவராக இருந்து பயன் இல்லை என நினைத்தேன்.

எனவே, ராஜினாமா செய்வதை தவிர எனக்கு வேறுவழி தெரியவில்லை,''என்றார்.


செலவு அதிகம்:

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""வீரர்களை காயத்தில் இருந்து மீட்பது தொடர்பாக, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டத்தை கும்ளே சமர்ப்பித்தார். இதற்கு செலவு அதிகம். தவிர, ஒரு குறிப்பிட்ட கம்ப்யூட்டர் நிறுவனம் தான் இதனை கையாள வேண்டும் என நிர்ப்பந்தித்தார். இந்நிறுவனத்திடம் இருந்து அவர் கமிஷன் பெற வாய்ப்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் தான் அவரது திட்டத்தை ஏற்க முடியவில்லை,''என்றார்.


கவாஸ்கர் ஆவேசம்

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியில் இருந்த கபில் தேவ் நீக்கப்பட்டார். அடுத்து வந்த ரவி சாஸ்திரி விலகினார். தற்போது கும்ளேவும் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,""சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் கும்ளே. பல முறை காயம் அடைந்த அனுபவம் அவருக்கு உண்டு.

அவர் அளிக்கும் திட்டம் வீரர்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். இத்திட்டம் குறித்து குறைந்தபட்சம் விவாதித்து இருக்க வேண்டும். நிராகரித்தது சரியல்ல. ஐ.பி.எல்., பணிகளுக்காக எனக்கு வழங்குவதாக உறுதி அளித்த ரூ. 4 கோடி இன்னும் அளிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக பி.சி.சி.ஐ., மீதான நம்பிக்கை தகர்ந்து போயுள்ளது,''என்றார்.

கும்ளே திடீர் ராஜினாமா

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் கும்ளே. தற்காலிக தலைவராக பாண்டோவ் நியமிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் "சுழல்' ஜாம்பவான் கும்ளே. ஓய்வுக்கு பின், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்றார். கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். தவிர, ஐ.பி.எல்., பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் ஆலோசகராகவும் இருக்கிறார்.

இப்படி பல பொறுப்புகளில் இருப்பதால், போதிய நேரம் இல்லாததால், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

இதனை இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,) செயற்குழு நேற்று ஏற்றுக் கொண்டது. தற்காலிக தலைவராக பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் பொதுச் செயலர் பாண்டோவ் நியமிக்கப்பட்டார்.


உண்மை என்ன?

பி.சி.சி.ஐ., நிர்வாகிகளுடன் ஒத்துப் போகாததால் தான் பதவியை கும்ளே ராஜினாமா செய்ததாக தெரிகிறது. ஒரு காலத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமி என்பது இளம் வீரர்களை உருவாக்கும் களமாக இருந்தது.

தற்போது காயமடைந்த வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாக மாறியுள்ளது. இதற்கு கும்ளே எதிர்ப்பு தெரிவிக்க, பிரச்னை வெடித்துள்ளது. தவிர, "டென்விக்' என்ற விளையாட்டு நிறுவனத்தை கும்ளே நடத்தி வருகிறார்.

இதில், கர்நாடகாவின் வினய் குமார், ஸ்ரீநாத் அரவிந்த் உள்ளிட்ட இளம் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். தனது செல்வாக்கை பயன்படுத்தி இவர்களை, இந்திய அணியில் இடம் பெறச் செய்ததாக கும்ளே மீது புகார் கூறப்பட்டது.

இப்படி தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதால் தான் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம் எப்போது?

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம், அடுத்த மாதம் கடைசியில் அல்லது பிப்ரவரி மாதம் துவக்கத்தில் நடக்கலாம்.

ஐந்தாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், அடுத்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கவுள்ளது.

இத்தொடரை நடத்துவது குறித்து ஐ.பி.எல்., நிர்வாகக்குழு கூட்டம் நேற்று முன்தினம் சென்னையில் கூடியது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

சமீபத்தில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட காரணத்தினால் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி ஐ.பி.எல்., தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் உள்ளிட்ட ஒன்பது அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன.

இதனால் இம்முறை, முதல் மூன்று தொடரில் விளையாடியது போல, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். இதில் உள்ளூரில் ஒரு போட்டியிலும், வெளியூரில் (எதிரணி) ஒரு போட்டியிலும் விளையாடும்.

இதன்மூலம் இம்முறை, 72 லீக் போட்டிகள், 2 அரையிறுதி, ஒரு மூன்றாவது இடத்துக்கான போட்டி மற்றும் ஒரு பைனல் உட்பட மொத்தம் 76 போட்டிகள் நடக்கவுள்ளன. துவக்க விழா மற்றும் பைனல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. அரையிறுதிப் போட்டிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ளது.

தற்போது ஒவ்வொரு அணியிலும் 30 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இதனை 33 ஆக உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விளையாடும் லெவன் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள். இதில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.

ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்களின் ஏலம், அடுத்த மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் துவக்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐ.பி.எல்., நிர்வாகக்குழு தலைவர் ராஜீவ் சுக்லா தெரித்துள்ளார். இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா ரூ. 10.38 கோடி செலவழிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பியது நடந்தது - தோனி

சச்சினின் 200 ரன்கள் சாதனையை சேவக் மட்டுமே முறியடிக்க முடியும் என, எப்போதும் நம்பினேன் இது சரியாக நடந்துள்ளது,'' என, இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்தூரில் நடந்த நான்காவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை துவம்சம் செய்து இரட்டை சதம் அடித்த சேவக், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் (219) எடுத்தவர் என்ற சாதனை படைத்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

இந்திய அணியின் கேப்டன் தோனி, சேவக் சாதனை குறித்து கூறியது:

குவாலியர் போட்டியில் சச்சின் இரட்டை சதம் அடித்து சாதித்தார். இதையடுத்து எல்லோரும் பல்வேறு வீரர்களை குறிப்பிட்டு, அவர்களால் சச்சின் சாதனையை தகர்க்க முடியும் என்று கூறிவந்தனர்.

ஆனால் நான் மட்டும் சேவக்கினால் தான், இரட்டைசதம் அடிக்க முடியும் என்று உறுதியாக நம்பினேன்.

இவர் பெரிய அளவில் அதிரடியான ஆட்டக்காரர் என்பதால் மட்டும் இப்படி நினைக்கவில்லை. சாதனை நிகழ்த்தும் பேட்டிங் திறமை சேவக்கிடம் இருந்தது என்பது தான் உண்மை.

மொத்தத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட இரண்டு இரட்டை சதங்களையும், இந்திய வீரர்கள் தான் அடித்துள்ளனர் என்று நினைக்கும் போது, மிகவும் பெருமையாக உள்ளது.

இந்திய அணி தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று வருவதற்கு காரணம் கடின உழைப்பு தான். வேறு எந்த குறுக்கு வழியையும் நாங்கள் பின்பற்றுவது கிடையாது.

இந்தியாவில் கிரிக்கெட் மட்டுமன்றி, மற்ற விளையாட்டுகளையும் வளர்க்க வேண்டும். இதற்கான என்னென்ன வழிமுறைகள் உள்ளதோ, அவை அனைத்துக்கும் நான் உதவத் தயாராக உள்ளேன்.

இவ்வாறு தோனி கூறினார்.

சென்னையில் இன்று கிரிக்கெட் கொண்டாட்டம்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று சென்னையில் நடக்கிறது. ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால், இதில் சேவக் மீண்டும் விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகளின் முடிவில், 3-1 என இந்திய அணி தொடரை வென்றது. முக்கியமில்லாத ஐந்தாவது மற்-றும் கடைசி போட்டி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.


அதிரடி தொடருமா:

சச்சின், தோனி, யுவ-ராஜ் சிங் ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாத போதும், இளம் இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசத்துகிறது. கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சேவக், முதன் முறையாக தொடரை வென்றுள்ளார்.

சென்னையில் அன்வர் (பாக்.,1997) இதற்கு முன் 194 ரன்கள் விளாசியுள்ளார். இதனால் இன்று @சவவக் அதிரடி தொடரும் என எதிர்பார்க்கலாம். இத்தொடரில் இதுவரை 284 ரன்கள் குவித்துள்ள ரோகித் சர்மா, விராத் கோஹ்லி (163) நல்ல "பார்மில்' இருப்பதால் கவலை இல்லை.

காம்பிர் (83), ரெய்னா (62) இருவரும் ரன்கள் சேர்க்க முயற்-சிக்க வேண்-டும்.


அஷ்வின் எதிர்பார்ப்பு:

டெஸ்ட் தொடரில் கலக்கிய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், ஒரு நாள் தொடரில் இதுவரை 4 விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார். சுழலுக்கு சாதகமான சென்னை ஆடுகளத்தில் இவர் எழுச்சி பெறுவார் என நம்பலாம். அறிமுக அசத்தல் ராகுல் சர்மா, ரவிந்திர ஜடேஜா விக்கெட் வேட்டை இன்று தொடர வேண்டும்.

ரஞ்சி கோப்பை தொடரில் 4 போட்டியில் 21 விக்கெட் வீழ்த்திய இர்பான் பதானுக்கு, இன்று வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவோம். மற்றபடி வினய் குமார், அபிமன்யு மிதுன் சுமார் தான்.


பொறுப்பான ஆட்டம்:

பிராவோ, ராம்தின், ரசல், சிம்மன்ஸ் உள்ளிட்ட வெஸ்ட் இண்டீசின் "டாப் ஆர்டர்" வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகின்றனர். ஒருபோட்டியில் எழுச்சி பெற்றால், அடுத்த முறை சொதப்புகின்றனர்.

இன்று கவனமாக செயல்பட்டால் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யலாம். கேப்டன் சமி உட்பட பலரும் எளிதான "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விடுகின்றனர். இன்று இந்தப்பிரிவில் அக்கறை காட்ட வேண்டும்.

கீமர் ரோச், ராம்பால் துல்லியமாக பந்துவீசுவது அணிக்கு பலம் என்றால், சமி, போலார்டு, ரசல் ரன்கள் வழங்குவதில் "வள்ளலாக' உள்ளது பெரும் பலவீனமாக உள்ளது. கடந்த முறை ஏமாற்றிய "சுழலில்' சுனில் நரைன், ஆடுகளத்தின் உதவியுடன் இன்று பந்தை நன்கு சுழற்றலாம்.


ரசிகர்கள் ஆர்வம்:

மோசமான வானிலை காரணமாக, தமிழக அணி சென்னையில் விளையாடிய ரஞ்சிக் கோப்பை போட்டி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்கள், இன்றைய விறுவிறுப்பான போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பாராட்டு மழையில் சேவக்

ஒரு நாள் போட்டியின், ஒரே இன்னிங்சில் 219 ரன்கள் விளாசி, உலக சாதனை படைத்த சேவக்கிற்கு வாழ்த்துகள் குவிகின்றன. இவரது "ரோல் மாடல் சச்சின் உட்பட பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்கள் வாயார பாராட்டியுள்ளனர்.

இந்தூரில் நேற்று முன் தினம் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 219 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் சேவக், ஒரு நாள் அரங்கில் புதிய வரலாறு படைத்தார். இவர், வீரர் சக வீரர் சச்சினின் சாதனையை முறியடித்தார்.

கடந்த 2010ல் குவாலியர் ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக சச்சின் 200 ரன்கள் எடுத்து அசத்தினார். அப்போது அவர் கூறுகையில்,"" எனது இந்த சாதனையை, சகவீரர் ஒருவர் முறியடித்தால் மகிழ்ச்சி தான், என்றார்.

இதையடுத்து எல்லோரது எதிர்பார்ப்பும்சேவக் மீது திரும்பியது. சச்சின் சாதனையை முறியடிக்க, இவரால் மட்டுமே முடியும் என்றனர். இதற்கான வாய்ப்பு கடந்த உலக கோப்பை தொடரில் கிடைத்தது. வங்கதேசத்துக்கு எதிரான இப்போட்டியில் 175 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

கடைசியில் சச்சினின் சாதனையை, ஒன்றரை ஆண்டில் சேவக் தகர்த்து விட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 219 ரன்கள் அடித்துவிட்டார்.

இதுகுறித்து சேவக் கூறியது:

எனது "ரோல் மாடல் சச்சினின் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இருமுறை தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. தவிர, இந்த வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை தான் கிடைக்கும். இதை சரியாக பயன்படுத்திக் கொண்டடேன்.

இந்த இரட்டை சதத்தை எனது தந்தைக்கு அர்ப்பணம் செய்கிறேன். மொத்தத்தில் இந்த இன்னிங்ஸ் சிறப்பானது ஆகும். ஏனெனில் டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் களத்தில் இருந்து விளையாடலாம். ஆனால் ஒருநாள் போட்டியில் "ரன்ரேட் முக்கியம். தவிர, ஆடுகளமும் சாதகமாக இருந்ததால் சாதிக்க முடிந்தது.

இதற்கு முன் ஆஸ்திரேலியா சென்ற இரு தொடர்களில் சிறப்பாகத் தான் செயல்பட்டோம். இம்முறையும் அதேபோல விளையாட முயற்சிப்போம்.

இவ்வாறு சேவக் கூறினார்.

தோனிக்கு பயங்கரவாதிகள் குறி

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் உயிருக்கு பயங்கரவாத அமைப்புகள் குறி வைத்துள்ளதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி. "டுவென்டி-20 (2007), 50 ஓவர் உலக கோப்பை வென்று தந்தவர். தற்போது ஓய்வில் உள்ளார்.

இவருக்கு மாவோயிஸ்ட் மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உளவுத்துறை அனைத்து மாநில உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்," தோனி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு, மாவோயிஸ்ட், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புகள் குறி வைத்துள்ளனர்.

இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள், என தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஜார்க்கண்ட் போலீசார், தோனியின் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். கடந்த வாரம் ஏர்போர்ட்டில் இருந்து ஹார்மு ஹவுசிங் காலனியில் உள்ள தனது வீட்டுக்கு தோனி சென்ற போது, ஒரு ஜீப் நிறைய துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர்.

இது தவிர, இவரது வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் "கமாண்டோ போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தோல்விக்கு என்ன காரணம்?

மூன்றாவது ஒருநாள் போட்டியில் "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்,'' என, கேப்டன் சேவக் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.

நேற்று முன்தினம் ஆமதாபாத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதுகுறித்து இந்திய கேப்டன் சேவக் கூறியதாவது: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. இதற்கு "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம் முக்கிய காரணம். குறிப்பாக நானும், காம்பிரும் அடுத்தடுத்த பந்தில் "டக்-அவுட்' ஆனது பின்னடைவாக அமைந்தது.

அதன்பின் களமிறங்கிய பேட்ஸ்மேன்களிடமும் சரியான "பார்ட்னர்ஷிப்' அமையாதது வெற்றியை தட்டிப்பறித்தது. தவிர, கடந்த இரண்டு போட்டியிலும் "டாப்-ஆர்டர்' பெரிய அளவில் சோபிக்கவில்லை. மீதமுள்ள இரண்டு போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சிறந்த துவக்கம் அளிக்க முயற்சிக்க வேண்டும்.

சுரேஷ் ரெய்னா ஏமாற்றி வருவது பின்னடைவான விஷயம். ரோகித் சர்மா, விராத் கோஹ்லி உள்ளிட்டோர் நல்ல "பார்மில்' இருப்பதால், "மிடில்-ஆர்டரில்' ஓரளவு ரன் சேர்க்க முடிகிறது. இக்கட்டான நேரத்தில் ரோகித்துடன் இணைந்து அஷ்வின் கைகொடுத்தது பாராட்டுக்குரியது.

ரோகித் சர்மா, சதம் அடிக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தது. இவரது பொறுப்பான ஆட்டம் மீதமுள்ள போட்டிகளிலும் தொடரும் என நம்புகிறேன்.

இக்கட்டான நேரத்தில் "டெயிலெண்டர்கள்' சாதிப்பது எளிதான காரியமல்ல. அபிமன்யு மிதுன், உமேஷ் யாதவ் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதிரடியாக இரண்டு சிக்சர் விளாசிய மிதுன், அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக எல்.பி.டபிள்யு., முறையில் அவுட்டானதால், தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று.

இப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. மிதுன், உமேஷ், வினய் என இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை அளித்தனர். ஆனால், கடைசி நேரத்தில் ரன்களை வாரி வழங்கியது எதிரணிக்கு சாதகமாக அமைந்தது. வரும் போட்டிகளில் கட்டுக்கோப்பாக பந்துவீசும் பட்சத்தில், சுலப வெற்றி பெறலாம்.

இவ்வாறு சேவக் கூறினார்.

3 வாரத்தில் களம் காண்கிறார் யுவராஜ்

நுரையீரல் கட்டியால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இப்போது குணமடைந்து வருகிறார். அவர் 3 வாரங்களில் மீண்டும் கிரிக்கெட்டில் பங்கேற்பார் என்று அவருடைய தாயார் ஷப்னம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் களத்திலும், வெளியிலும் புதிய யுவராஜ் சிங்கைப் பார்க்கலாம். யுவராஜின் வாழ்க்கையே மாறியுள்ளது.

எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதை அவர் இப்போது உணர்ந்துள்ளார்.

அவர் எப்போதுமே போராடும் குணமுள்ளவர். இப்போதும் பலமானவராகவும், துணிச்சல் மிக்கவராகவும் உருவெடுத்துள்ளார்.

அவர் தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட காலத்தில் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளார்.

அவருடைய நுரையீரலில் ஏற்பட்ட கட்டி அபாயகரமானது என்பதை அவர் அறிந்திருந்தாலும், அந்த வலியை அவர் யாரிடமும் பகிந்து கொண்டதில்லை.

அது முழுமையாகக் குணமடைய இன்னும் சில நாள்கள் ஆகலாம். அதை பொறுப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றார்.

ஸ்ரீசாந்தின் வாய்ப்பு நழுவியது

கால்விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, கேரளா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், ரஞ்சி கோப்பை "பிளேட்' லீக் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இவருக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடிக்கும் வாய்ப்பு நழுவியது.

உள்ளூர் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கோப்பை "பிளேட்' லீக் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள கேரளா அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இடம் பெற்றிருந்தார்.

சமீபத்தில் இவரது கால் விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர், எட்டு வாரங்கள் வரை எவ்வித போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


நழுவிய வாய்ப்பு:

இதன்மூலம் ஸ்ரீசாந்துக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு வேகப்பந்துவீச்சாளர் பிரவீண் குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் காயம் காரணமாக பிரவீண் குமார், அதிரடியாக நீக்கப்பட்டார். இவருக்கு மாற்று வீரரை, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தேர்வுக்குழு இன்று தேர்வு செய்கிறது. இதில் இர்பான் பதான், ஸ்ரீசாந்த், அபிமன்யு மிதுன் உள்ளிட்டோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால் காயம் காரணமாக ஸ்ரீசாந்தின் பொன்னான வாய்ப்பு வீணானது.


இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறியதாவது:

முக்கியமான நேரத்தில் காயமடைந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. காயத்தை பரிசோதித்த டாக்டர்கள், "ஆப்பரேஷன்' செய்யும் படி அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் நான் "ஆப்பரேஷன்' செய்யப்போவதில்லை. மாறாக ஆயுர்வேத மருத்துவம் மேற்கொண்டு வருகிறேன். இதன்மூலம் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையலாம்.

ஏனெனில் முன்னதாக ஏற்பட்ட காயத்துக்கு, ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் பூரண குணமடைந்தேன். காயத்தில் இருந்து மீண்டு வரும் நான், டிச., 12ம் தேதி முதல், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

எட்டு வாரங்கள் வரை போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தேன். டெஸ்ட் தொடருக்கு முன், முழுமையாக குணமடைவேன் என்ற நம்பிக்கை இல்லை.

ஆனால் ஒருநாள் தொடருக்கு முன், நூறு சதவீத உடற்தகுதி பெற்றுவிடுவேன் என எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.