உலக கோப்பை பைனலில் அரங்கேறிய சாதனைகள்

கடந்த 1987ல் இந்தியா, 1999ல் இங்கிலாந்து, 2003ல் தென் ஆப்ரிக்கா, 2007ல் வெஸ்ட் இண்டீஸ், 2015ல் ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.

* தவிர, சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது. கடந்த 2011ல் இந்திய அணி, சொந்த மண்ணில் கோப்பை வென்றது.


நான்காவது கேப்டன்

ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை வென்று தந்த 4வது கேப்டன் என்ற பெருமை பெற்றார் மைக்கேல் கிளார்க். இதற்கு முன், ஆலன் பார்டர் (1987), ஸ்டீவ் வாக் (1999), ரிக்கி பாண்டிங் (2003, 2007) தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


 7

இதுவரை நடந்த 11 உலக கோப்பை பைனலில், 7 முறை (1975, 79, 83, 99, 2003, 2011, 2015) ‘டாஸ்’ வென்ற அணி தோல்வியை சந்தித்தது. நான்கு முறை (1987, 1992, 1996, 2007) வெற்றி பெற்றன.


‘டக்–அவுட்’ சோகம்

இம்முறை அதிக முறை ‘டக்–அவுட்’ ஆனவர்கள் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்சின் (யு.ஏ.இ.,) கிருஷ்ண சந்திரன் முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில் 3 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க், இங்கிலாந்தின் இயான் மார்கன், வெஸ்ட் இண்டீசின் ராம்தின், இலங்கையின் தில்ஷன் உள்ளிட்டோர் தலா 2 முறை ‘டக்–அவுட்’ ஆனார்கள்.


ஹாடின் ‘டாப்’

அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாடின் முதலிடம் பிடித்தார். இவர், 8 போட்டியில் 16 முறை விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். 

இவரை அடுத்து இந்தியாவின் தோனி (15), வெஸ்ட் இண்டீசின் ராம்தின் (13), நியூசிலாந்தின் ரான்கி (13) ஆகியோர் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்டனர்.


9

அதிக ‘கேட்ச்’ பிடித்த வீரருக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ரூசோவ் முதலிடத்தை கைப்பற்றினார். இவர், 6 போட்டியில் 9 ‘கேட்ச்’ பிடித்தார். இந்தியாவின் உமேஷ் யாதவ் (8), இங்கிலாந்தின் ஜோ ரூட் (7), ஷிகர் தவான் (7) உள்ளிட்டோரும் பீல்டிங்கில் அசத்தினர்.


‘ஸ்டார்’ ஸ்டார்க்

இம்முறை சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் வென்றார். இவர், 8 போட்டியில் 22 விக்கெட் கைப்பற்றி, அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருது வென்ற இரண்டாவது ஆஸ்திரேலிய வீரரானார். கடந்த 2007ல் ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (26 விக்.,) இவ்விருது வென்றார்.


இரண்டு ‘ஹாட்ரிக்’

இம்முறை இரண்டு பவுலர்கள் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்தின் ஸ்டீவன் பின், இலங்கைக்கு எதிரான காலிறுதியில் தென் ஆப்ரிக்காவின் டுமினி, இம்மைல்கல்லை எட்டினர்.

* இதுவரை, உலக கோப்பை அரங்கில் 9 முறை ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையின் லசித் மலிங்கா இரண்டு முறை (2007, 2011) இந்த இலக்கை எட்டினார்.

உலக கோப்பை வென்றது ஆஸி - 5 முறை சாம்பியனாகி சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டியில் நியூசி., நிர்ணயித்த குறைந்த இலக்கான 183 ரன்னை ஆஸி., மிக எளிதாக அடைந்து உலக கோப்பையை தட்டி சென்றது. இதன் மூலம் 5வது முறையாக ஆஸி., உலக கோப்பையை வென்றுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டியில் , ஆஸி.,க்கு மிக சொற்ப அளவிலான இலக்கையே நியூஸிலாந்து நிர்ணயித்து. இதனால் ஆஸி., மிக எளிதாக எதிர்கொள்ளும் என்ற சூழலே ஏற்பட்டது. நியூஸிலாந்து விக்கெட்டுகளை ஆஸி., வீரர்கள் மள,மளவென சரித்தனர். 

நியூஸி 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன் எடுத்தது. ஆஸி,.க்கு ரன் இலக்கு 184 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களம் இறங்கிய ஆஸி., நிதானமாக ஆடியது. 33.1 வது ஓவரில் ஆஸி., 3 விக்கெட் இழந்து 184 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.


(1987, 1999, 2003, 2007, 2015):  

சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பி்ன்ச் (0) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய டேவிட் வானர் (45) அரைசத வாய்ப்பை இழந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் மைக்கேல் கிளார்க் (74), ஸ்டீவ் ஸ்மித் (55*) அரைசதமடித்தனர்.

ஆஸ்திரேலிய அணி 33. ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் (55), வாட்சன் (2) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் ஹென்ரி 2, பவுல்ட் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின்மூலம், உலக கோப்பை அரங்கில் ஆஸ்திரேலிய அணி 5வது முறையாக (1987, 1999, 2003, 2007, 2015) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதித்தது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று நடக்கும் பைனலில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.


விறு விறுப்பு இல்லாத உலக கோப்பை : 

முதலில் களம் இறங்கிய நியூஸி., வீரர்கள் மிட்சல் ஸ்டார்க் 'வேகத்தில்' கேப்டன் பிரண்ட மெக்கலம் (0) போல்டானார். மேக்ஸ்வெல்' கப்டில் (15) சிக்கினார். ஜான்சன் பந்தில் வில்லியம்சன் (12) நடையை கட்டினார். 

பொறுப்பாக விளையாடும் எலியட் அரைசதமடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த போது பால்க்னர் பந்தில் ராஸ் டெய்லர் (40) அவுட்டானார். அடுத்து வந்த கோரி ஆண்டர்சன் (0), பால்க்னர் பந்தில் போல்டானார் மெக்கலம், ஆண்டர்சன், ராங்கி , ஹென்றி, போல்ட் தலா ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டாயினர்.

நியூசிலாந்து அணி 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் பால்க்னர், ஜான்சன் தலா 3, ஸ்டார்க் 2, மேக்ஸ்வெல் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


1983லும் 183- 2015 லும் 183 : 

மூன்றாவது உலகக்கோப்பை ( 1983ல் ) இறுதிப்போட்டியில், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, இருமுறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சுலப இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

 குறைந்த ரன் அடித்து, பவுலிங்கில் அசத்திய இந்திய வீரர்கள் கோப்பையை வென்று சாதித்தனர். மூன்றாவது உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதிபெற்ற இந்திய அணி, தான் பங்கேற்ற முதல் இறுதிப்போட்டியிலேயே குறைந்த ரன்கள் அடித்தும், பவுலிங்கில் விஸ்வரூபம் எடுத்து எதிரணியை 140 ரன்களுக்கு ஆல்அவுட் செய்தது போன்று, தற்போது முதல் முறையாக இறுதிப்போட்டியில் பங்கேற்கும் நியூ., அணியும் 183 ரன்கள் எடுத்துள்ளது.


இறுதிப்போட்டியில் கேப்டன்கள் இன்னிங்ஸ்

உலகக்கோப்பை போட்டியில், தொடர் வெற்றி பெற்ற வந்த நியூ., அணியின் கேப்டன் மெக்கலம், முக்கியமான இறுதிப்போட்டியில், 3 பந்துகளை சந்தித்து, டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். 

ஆஸி., கேப்டன் கிளார்க், 72 பந்துகளை சந்திந்து 74 ரன்கள் குவிந்து, அணி பதற்றமின்றி வெற்றிபெற வழிவகுத்தார்,***
கடைசி போட்டியில் அசத்திய கிளார்க்


மெல்போர்ன்: 

ஆஸி. அணி இதற்கு முன் நான்கு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. 87ல் ஆலன்பார்டர் தலைமையிலும், 99ல் ஸ்டீவ் வாக் தலைமையிலும், 2003 மற்றும் 2007ல் ரிக்கி பாண்டிங் தலைமையிலும் கோப்பை வென்றுள்ளது. 

இந்த வரிசையில், தற்போது ஆஸி.,க்காக உலகக்கோப்பை வென்று தந்த கேப்டன்கள் வரிசையில், மைக்கேல் கிளார்க்கின் பெயரும் இடம்பெறுகிறது. இறுதிப்போட்டியில், இவர் 72 பந்துகளில் 74 ரன்கள் அடித்து, அவுட்டாகி, தனது கடைசி போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

ரெய்னாவின் புது வியூகம் - பவுன்சரை சமாளிக்க பயிற்சி

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் சாதிக்க, இந்திய அணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஸ்டார்க், ஜான்சன் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பவுலர்களின் ‘பவுன்சர்களை’ சமாளிக்க, டென்னிஸ் பந்துகளை எகிறச் செய்து ரெய்னா பயிற்சியில் ஈடுபட்டார்.

ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும், விஷேச திட்டத்துடன் இந்திய வீரர்கள் பயிற்சி செய்கின்றனர். 

பாகிஸ்தானின் 7.1 அடி உயரம் கொண்ட முகமது இர்பானை சமாளிக்க, இரண்டு சிறிய நாற்காலி ‘பார்முலாவை’ பயன்படுத்தி பயிற்சி செய்தனர்.


புதிய திட்டம்:

அடுத்து, சிட்னியில் 26ம் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க, ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா ஆயத்தமாகிறது.

இங்கு ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாக இருக்குமா அல்லது சுழலுக்கு சாதகமாக தொடருமா என, இன்னும் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களுக்கு ‘பவுன்சர்’ வீசிய ஸ்டார்க், ஜான்சன், ஹேசல்வுட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய அணி பயிற்சியாளர் பிளட்சர், 66, நேற்று புதிய திட்டத்தை கையாண்டார். 

பயிற்சியின் போது ரெய்னாவை மட்டும் தனியாக அழைத்துச் சென்றார். டென்னிஸ் ‘ராக்கெட்டை’ மூலம் ரெய்னாவை நோக்கி டென்னிஸ் பந்தை வேகமாக அடித்தார். இந்த பந்தின் எடை குறைவு என்பதால் தரையில் பட்டு நன்கு உயரமாக முகத்தை நோக்கி வந்தது. 

இதை எப்படி சமாளிப்பது என, பயிற்சியில் ஈடுபட்டார் ரெய்னா. உடலில் படும் படி வந்த பந்துகளை ‘ஹூக் ஷாட்’ அடித்து பழகினார். ஸ்டார்க் வீசுவதைப் போல வேகமாக வந்த பந்துகளை சமாளிக்க முடியாமல்  தடுமாறினார். இதையடுத்து, ரெய்னாவுக்கு உரியா ஆலோசனைகள் வழங்கினார் கேப்டன் தோனி.

இந்த பயிற்சி ரெய்னாவின் ‘ஷார்ட் பிட்ச்’ பலவீனத்தை சரியாக்க உதவும் என, நம்பப்படுகிறது.

பைனலில் நியூசிலாந்து அணி - வெளியேறியது தென் ஆப்ரிக்கா

பந்துக்கு பந்து பதட்டத்தை ஏற்படுத்திய உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்கா அணி சோகத்துடன் வெளியேறியது. 

உலக கோப்பை தொடரில் இன்று நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் அபாட்டுக்குப்பதில் பிலாண்டர் வாய்ப்பு பெற்றார். 

தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கத்திலேயே பவுல்ட் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ ஆம்லா (10), குயின்டன் (14) அடுத்தடுத்து வெளியேறினர். ரூசோவ் 39 ரன்கள் எடுத்தார். சிறப்பாக செயல்பட்ட டுபிளசி அரை சதம் அடித்தார். தன் பங்கிற்கு கேப்டன் டிவிலியர்சும் அரை சதம் எட்டினார். 


மில்லர் அதிரடி:

தென் ஆப்ரிக்க அணி 38 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தபோது, மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. மழையால் ஆட்டம் சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டதால், போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டுபிளசி 82 ரன்கள் எடுத்தார். 

பின் களமிறங்கிய மில்லர் அதிரடியாக விளையாடினார். இவர் 18 பந்தில் 49 ரன்கள் விளாசினார். தென் ஆப்ரிக்க அணி 43 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 281 ரன்கள் எடுத்தது. டிவிலியர்ஸ் (65), டுமினி (8) அவுட்டாகாமல் இருந்தனர். 


மெக்கலம் அரை சதம்:

நியூசிலாந்து அணிக்கு ‘டக்–வொர்த் லீவிஸ்’ முறைப்படி 43 ஓவரில் 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், கப்டில் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. 

மார்னே மார்கல் பந்துவீச்சில் 3 பவுண்டரி விளாசிய மெக்கலம் அரை சதம் அடித்தார். இவர் 59 ரன்களில் அவுட்டானார். 


ஆண்டர்சன் அசத்தல்:

வில்லியம்சன் (6) நிலைக்கவில்லை. கப்டில் 34 ரன்கள் எடுத்தார். டுமினி பந்தில் ராஸ் டெய்லர் (30) ஆட்டமிழந்தார். இதன் பின் கைகோர்த்த கோரி ஆண்டர்சன், எலியாட் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. 

இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த நேரத்தில், ஆண்டர்சன் 58 ரன்களில் அவுட்டாக, சற்று பதட்டம் ஏற்பட்டது. ரான்கியும் 8 ரன்களில் கிளம்ப, நெருக்கடி அதிகரித்தது. 

இருப்பினும், எலியாட் போராடினார். கடைசி 2 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்டைன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய எலியாட் வெற்றியை உறுதி செய்தார். 

நியூசிலாந்து அணி 42.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்திருந்தது. எலியாட் (84), வெட்டோரி (7) அவுட்டாகாமல் இருந்தனர். 


முதல் முறை

உலக கோப்பை அரங்கில் நியூசிலாந்து அணி முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன், 6 முறை (1975, 79, 92, 99, 2007, 2011) அரையிறுதிக்குள் நுழைந்தபோதும், ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. 


தென் ஆப்ரிக்கா சோகம்

இதன் மூலம், தென் ஆப்ரிக்கா அணி உலக கோப்பை தொடரில் நான்காவது முறையாக அரையிறுதியில் தோல்வியடைந்தது. இதற்கு முன், 1992, 99, 2007ல் அரையிறுதியில் வீழ்ந்தது. 


பவுல்ட் சாதனை

ஒரு உலக கோப்பை தொடரில் அதிக (21) விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து பவுலர் என்ற சாதனை படைத்தார் பவுல்ட். இதற்கு முன், கடந்த 1999 உலக கோப்பையில் ஜெப் அலாட் 20 விக்கெட் கைப்பற்றியதே அதிகமாக இருந்தது. 

தென் ஆப்ரிக்கா சாதனை வெற்றி - வெளியேறியது இலங்கை அணி

இலங்கைக்கு எதிரான உலக கோப்பை காலிறுதியில் தாகிர், டுமினி ‘சுழலில்’ மிரட்ட, தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. தவிர, உலக கோப்பை ‘நாக்–அவுட்’ சுற்றில் தென் ஆப்ரிக்க அணி முதல் வெற்றி பெற்று சாதித்தது. 

உலக கோப்பை தொடரின் காலிறுதி சுற்று இன்று துவங்கியது. சிட்னியில் நடந்த முதல் காலிறுதியில் இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 

தென் ஆப்ரிக்க அணியில் பெகர்டியனுக்குப்பதில் அபாட் இடம்பிடித்தார். இலங்கை அணியில் சுழல் வீரர் கவுசால் அறிமுக வாய்ப்பு பெற்றார். 


தாகிர் அசத்தல்:

இலங்கை அணிக்கு குசல் பெரேரா (3) ஏமாற்றினார். ஸ்டைன் ‘வேகத்தில்’ தில்ஷன் டக்–அவுட் ஆனார். இம்ரான் தாகிர் ‘சுழலில்’ திரிமான்னே (41), ஜெயவர்தனா (4) ஆட்டமிழந்தனர். மாத்யூஸ் (19), குலசேகரா (1), கவுசால் (0) ஆகியோரை அவுட்டாக்கிய டுமினி ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினார். 

சங்ககரா 45 ரன்களில் அவுட்டானார். மலிங்காவும் 3 ரன்களில் திரும்ப, இலங்கை அணி 37.2 ஓவரில் 133 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக இம்ரான் தாகிர் 4, டுமினி 3 விக்கெட் வீழ்த்தினர். 


குயின்டன் அரை சதம்:

எளிய இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா 16 ரன்கள் எடுத்தார். சிறப்பாக செயல்பட்ட குயின்டன் அரை சதம் அடித்தார். தென் ஆப்ரிக்க அணி 18 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. குயின்டன் (78), டுபிளசி(21) அவுட்டாகாமல் இருந்தனர். 


சாதித்த தென் ஆப்ரிக்கா

கடந்த 1992 முதல் 2011 வரை நடந்த உலக கோப்பை தொடரின், ‘நாக்–அவுட்’ சுற்றில் ஒரு முறை கூட, தென் ஆப்ரிக்கா வென்றது கிடையாது. இந்த வெற்றியின் மூலம், தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக உலக கோப்பையின், ‘நாக்–அவுட்’ சுற்றில் வெற்றி பெற்று, சாதனை படைத்தது.


சங்ககரா 500

இன்றைய போட்டியில் 4 ரன்கள் எடுத்தபோது, இந்த உலக கோப்பை தொடரில் 500 ரன்கள் எட்டிய முதல் வீரரானார் சங்ககரா. ஒட்டுமொத்தமாக, 7 போட்டியில் விளையாடியுள்ள இவர் 541 ரன்கள் குவித்துள்ளார். 

* ஒரு  உலக கோப்பை தொடரில் 500 அல்லது அதற்கு மேல் ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 6வது இடத்தை சங்ககரா அடைந்தார். 

* ஒட்டுமொத்த உலக கோப்பை அரங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தை (1532 ரன்கள்) சங்ககரா பிடித்தார். முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் சச்சின் (2278), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (1743) உள்ளனர். 

ரெய்னாவுக்கு திருமணம் - தோழியை கரம்பிடிக்கிறார்

இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரரான ரெய்னாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இந்திய அணியின் இளம் வீரர் ரெய்னா, 28. 

இதுவரை 18 டெஸ்ட் (768 ரன்கள்) , 213 ஒரு நாள் (5316), 44 ‘டுவென்டி–20’ (947) போட்டிகளில் விளையாடி உள்ளார். உலக கோப்பை தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார். 

இவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. இது குறித்து ரெய்னாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில்,‘‘ ரெய்னா தாயாரின் தோழியின் மகள் பிரியங்கா சவுத்ரி. 

சிறு வயதிலிருந்தே ரெய்னாவும், பிரியங்காவும் நெருங்கிய நண்பர்கள். உ.பி., மாநிலம் மீரட்டை சேர்ந்த பிரியங்கா நெதர்லாந்தில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்திய அணி வீரர்கள், உலக கோப்பை தொடரை முடித்து, மார்ச்30ம் தேதி தாயகம் திரும்புகின்றனர். 

ஏப்ரல் 1ம் தேதி ரெய்னா, தனது நண்பர்களுக்கு விருந்து அளிக்கிறார். டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏப்ரல் 3ம் தேதி காலை நிச்சயதார்த்தமும், அன்று மாலையில் ரெய்னாவுக்கும், பிரியங்காவுக்கும் திருமணம் நடக்கவுள்ளது. இதில் இந்திய வீரர்கள், உறவினர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பிரண்டன் டெய்லர் நம்பர் 1

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் நடக்கும் உலக கோப்பை தொடரில் முதல் 38 போட்டிகளில் 31 சதங்கள் அடிக்கப்பட்ட போதும், இந்திய அணிக்கு எதிராக, எந்த அணி வீரரும் சதம் அடிக்கவில்லை. 

நேற்று பிரண்டன் டெய்லர் (138) இதை முறியடித்தார். இதற்கு முன், பாகிஸ்தான் வீரர் மிஸ்பா, 76 ரன்கள் எடுத்தது தான் அதிகம்.

* உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் சதம் அடித்த முதல் ஜிம்பாப்வே வீரர் இவர் தான். இதற்கு முன், கெவின் குரான் 1983ல் 73 ரன்கள் எடுத்தார்.

* உலக கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் (அயர்லாந்து 121, இந்தியா 138) அடித்த முதல் ஜிம்பாப்வே வீரரானார் டெய்லர். 

* உலக கோப்பை அரங்கில் 400 ரன்னுக்கும் மேல் குவித்த முதல் ஜிம்பாப்வே வீரரும் டெய்லர் தான். இத்தொடரில் 6 போட்டிகளில் 433 ரன்கள் குவித்தார். இதற்கு முன் நெய்ல் ஜான்சன், 1999ல் 367 ரன்கள் (8 போட்டி) எடுத்தார்.

* இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்துக்கு (433) முன்னேறினார். முதலிடத்தில் இலங்கையின் சங்ககரா (496) உள்ளார்.

* ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த ஜிம்பாப்வே வீரர்களில் முதலிடம் பெற்றார் டெய்லர் (8). அடுத்த இரு இடத்தில் கேம்பெல் (7), கிராண்ட் பிளவர் (6) உள்ளனர்.

* ஜிம்பாப்வே அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் ஆன்டி பிளவர் (213 போட்டி, 6786 ரன்), கிராண்ட் பிளவருக்கு (221ல், 6571) அடுத்து மூன்றாவது இடம் பெற்றார் டெய்லர் (167ல் 5258).


0 முதல் 138 வரை 

ஜிம்பாப்வே வீரர் பிரண்டன் டெய்லர், இலங்கை அணிக்கு எதிராக 2004, ஏப்., 20ல் புலவாயோ போட்டியில் அறிமுகம் ஆனார். இதில் 5 பந்துகளை மட்டும் சந்தித்து ‘டக்’ அவுட்டானார். 

நேற்று கடைசி போட்டியில் களமிறங்கிய இவர், 110 பந்துகளில் 138 ரன்கள் சேர்த்து, ஒருநாள் அரங்கில் இருந்து விடைபெற்றார்.


அதிக சிக்சர்

நேற்று ஜிம்பாப்வே அணி, இந்திய அணிக்கு எதிராக 12 சிக்சர் விளாசியது. ஒருநாள் அரங்கில் ஒரு இன்னிங்சில், ஜிம்பாப்வே அணி இத்தனை சிக்சர் அடித்தது இது தான் முதன் முறை.


29 பந்தில் 70 ரன்

நேற்று சதம் அடித்த பிரண்டன் டெய்லர் முதல் 81 பந்தில் 68 ரன்கள் தான் எடுத்திருந்தார். அடுத்து எதிர்கொண்ட 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்து, 138 ரன்னுக்கு (110 பந்து) அவுட்டானார்.

சங்ககரா சாதனை சதம் - இலங்கை வெற்றி

ஸ்காட்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், தில்ஷன், சங்ககரா சதமடித்து கைகொடுக்க, இலங்கை அணி 148 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில், இலங்கை, ஸ்காட்லாந்து அணிகள் மோதும் உலக கோப்பை 'ஏ' பிரிவு லீக் போட்டி இன்று நடந்தது. 

இலங்கை அணியில் சண்டிமால், உபுல் தரங்கா, சேனநாயகே நீக்கப்பட்டு துஷ்மந்தா சமீரா, நுவன் குலசேகரா, குசால் பெரேரா சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு திரிமான்னே (4) ஏமாற்றினார். பின் இணைந்து அபாரமாக ஆடிய தில்ஷன் (104), சங்ககரா (124) சதமடித்தனர். இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 4வது சதமடித்து வரலாறு படைத்தார் சங்ககரா. 

தவிர இது, உலக கோப்பை அரங்கில் இவரது 5வது சதம். இதன்மூலம் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில், 2வது இடத்தை ஆஸ்திரேலியாவின் பாண்டிங்குடன் பகிர்ந்து கொண்டார். 

உலக கோப்பை அரங்கில் தில்ஷன் 4வது சதமடித்தார். மகிளா ஜெயவர்தனா (2) ஏமாற்றினார். அடுத்து வந்த கேப்டன் மாத்யூஸ் 21 பந்தில் 51 ரன்கள் எடுத்து கைகொடுத்தார்.

இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 363 ரன்கள் எடுத்தது. குலசேகரா (18), சமீரா (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஸ்காட்லாந்து சார்பில் டேவி 3 விக்கெட் வீழ்த்தினார்.

கடின இலக்கை விரட்டிய ஸ்காட்லாந்து அணிக்கு கோட்ஜெர் (0), மெக்லியாடு (11), மக்கான் (19) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய பிரடீ கொலேமென் (0), கேப்டன் பிரஸ்டன் மம்சன் (60) அரைசதம் கடந்தனர்.

ஸ்காட்லாந்து அணி 43.1 ஓவரில் 215 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. இலங்கை சார்பில் குலசேகரா 3 விக்கெட் கைப்பற்றினார்.

51 பந்தில் சதம் - நிறைய சாதனைகள்

2வது அதிவேகம்

ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் நேற்று 51 பந்தில் சதத்தை எட்டினார் இதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர்கள் பட்டியலில், 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் (50 பந்து, எதிர்–இங்கிலாந்து, 2011)  உள்ளார்.

* இந்த உலக கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ், வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக 52 பந்தில் சதம் அடித்தார்.

* ஒருநாள் அரங்கில் அதிவேக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரரானார். இவர், பால்க்னரின் சாதனையை(57 பந்து, எதிர் இந்தியா, 2013) தகர்த்தார். 


5

நேற்று 5வது வீரராக வந்த ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் சதமடித்தார். இதன்மூலம் இம்முறை 5வது வீரராக களமிறங்கி, 5 பேர் சதமடித்துள்ளனர். 

ஏற்கனவே தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர், டிவிலியர்ஸ், இலங்கையின் மகிளா ஜெயவர்தனா, ஜிம்பாப்வேயின் பிரண்டன் டெய்லர் ஆகியோர் 5வது வீரராக வந்து சதமடித்தனர். 

கடந்த 1996ல் நடந்த உலக கோப்பை தொடரில், இந்தியாவின் வினோத் காம்ப்ளி, நியூசிலாந்தின் கிறிஸ் ஹாரிஸ் என இரண்டு பேர் 5வது வீரராக களமிறங்கி சதமடித்தனர். மற்ற உலக கோப்பை தொடர்களில் தலா ஒரு பேட்ஸ்மேன் இம்மைல்கல்லை எட்டினர்.


சாதனை நழுவியது

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தது. 

இவர், 49 பந்தில் 99 ரன்கள் எடுத்திருந்த போது, மலிங்கா பந்தை அடிக்க முயன்றார். அப்போது பந்து, பேடில் பட்டுச் செல்ல ஒரு ரன் எடுக்கப்பட்டது. 

இதனை அறியாத அம்பயர், ‘லெக் பைஸ்’ சிக்னல் காட்டவில்லை. பின், மேக்ஸ்வெலிடம் கேட்டு ‘லெக் பைஸ்’ என தெரிவித்தார். சாதனைக்கு ஆசைப்படாத மேக்ஸ்வெல், உண்மையை தெரிவித்தது பாராட்டுக்குரியது.


14 ஆயிரம் ரன்கள்

அபாரமாக ஆடிய இலங்கையின் சங்ககரா, ஒருநாள் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். 

இதுவரை 402 போட்டிகளில் விளையாடிய இவர், 24 சதம், 93 அரைசதம் உட்பட 14,065 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் (18,426 ரன், 463 போட்டி) உள்ளார்.

அயர்லாந்து அணி திரில் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இன்று நடந்த மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

இதுவரை 2 வெற்றி, ஒரு தோல்வி உட்பட 4 புள்ளிகளுடன் உள்ள அயர்லாந்து அணி, மீதமுள்ள 3 போட்டியில், 2ல் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு சுலபமாக முன்னேறலாம். 

ஆனால் கடைசி இரண்டு போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளை சந்திக்க இருப்பதால், இன்று எப்படியும் வெல்ல வேண்டும் என, களமிறங்கியது. ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே பீல்டிங் தேர்வு செய்தது.


ஜாய்ஸ் சதம்:

அயர்லாந்து அணிக்கு ஸ்டெர்லிங் (10) துவக்கத்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். போர்டர்பீல்டு (29) நிலைக்கவில்லை. இருப்பினும், ஜாய்ஸ், பால்பிர்னே இணைந்து சிறப்பான ரன் குவிப்பை வெளிப்படுத்தினர். 

ஜிம்பாப்வே அணியின் ‘பீல்டிங்கும்’ மந்தமாக அமைய, ஜாய்ஸ் ஒருநாள் அரங்கில் 3வது சதம் விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்த நிலையில், ஜாய்ஸ் (112) அவுட்டானார். 

கெவின் ஓ பிரையன் (24), வில்சன் (25), மூனே (10), நெயில் ஓ பிரையன் (2) என, வரிசையாக அவுட்டான போதும், பால்பிர்னே 79 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். அயர்லாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்தது. டாக்ரெல் (5), கசாக் (2) அவுட்டாகாமல் இருந்தனர். 


டெய்லர் ஆறுதல்:

கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு சிபாவா (18), சிக்கந்தர் (12), மிர்ரே (11) அடுத்தடுத்து வெளியேறினர். மசகட்சா 5 ரன்கள் மட்டும் எடுத்தார். பின் இணைந்த பிரண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ் ஜோடி சிறப்பாக விளையாடியது. 

ஸ்டெர்லிங் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த டெய்லர் சதம் விளாசினார். இவர் 121 ரன்களில் ஆட்டமிழந்தார். சீன் வில்லியம்ஸ் சத (96) வாய்ப்பை இழந்தார். 

பின் வந்த எர்வின் (11), பன்யான்கரா (5) நிலைக்கவில்லை. கெவின் ஓ பிரையன் பந்துவீச்சில் முபரிவா இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். சகபவா 17 ரன்களில் அவுட்டானார். 

கசாக் பந்தில் முபரிவா (18) அவுட்டாக, ஜிம்பாப்வே அணி 49.3 ஓவரில் 326 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, தோல்வியடைந்தது. அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக கசாக் 4 விக்கெட் வீழ்த்தினார். 

பத்திரிகையாளர் மீது கோஹ்லி பாய்ச்சல்

பத்திரிகையாளர் ஒருவரை கடுமையாக திட்டிய கோஹ்லி புது சர்ச்சை கிளப்பினார்.

பெர்த்தில் நேற்று பயிற்சி முடித்து ‘டிரஸ்சிங் ரூமிற்கு’ திரும்பிய கோஹ்லி, இந்தியாவை சேர்ந்த ஒரு ஆங்கில நாளிதழின் பத்திரிகையாளரை தகாத வார்த்தைகளால் திட்டினார். 

இவர், தொடர்ந்து வசைபாட சக வீரர்களும் அந்த பத்திரிகையாளரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறிது நேரத்திற்கு பின் கோபத்திற்கான காரணம் தெரிய வந்தது. கோஹ்லி மற்றும் அவரது தோழியும் நடிகையுமான அனுஷ்கா பற்றி சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியாகியிருக்கிறது. 

அதை அந்த பத்திரிகையாளர் தான் எழுதியதாக கோஹ்லி தவறாக நினைத்துள்ளார். இந்த செய்தியை தான் எழுதவில்லை என்று கூறியுள்ளார். 

உடனே தவறை உணர்ந்த கோஹ்லி, மற்றொரு பத்திரிகையாளரை அழைத்து தனது வருத்தத்தை அவரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டாராம். 

பின் அணி இயக்குனர் ரவி சாஸ்திரி, கோஹ்லியை தனிப்பட்ட முறையில் அழைத்து பதட்டப்படாமல் இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார் இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக கருதப்படும் சூழலில், இது போன்று பொது இடத்தில் நடக்க கூடாது என ஆலோசனை கூறினாராம்.

சங்ககரா சாதனை

பேட்டிங்கில் அசத்திய இலங்கையின் சங்ககரா, 70 பந்தில் சதத்தை எட்டினார். 

இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், 5வது இடத்தை அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங்குடன் (70 பந்து, எதிர்–நெதர்லாந்து, 2011) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் (50 பந்து, எதிர்–இங்கிலாந்து, 2011) உள்ளார்.


23வது சதம்

அபாரமாக ஆடிய இலங்கையின் சங்ககரா, 23வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில், அதிக சதம் கடந்த வீரர்கள் பட்டியலில், இந்தியாவின் கங்குலி (22 சதம்), கோஹ்லி (22), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (22) ஆகியோரை முந்தி 4வது இடம் பிடித்தார். 

முதல் மூன்று இடங்களில் இந்தியாவின் சச்சின் (49), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (30), இலங்கையின் ஜெயசூர்யா (28) உள்ளனர்.

* இது, உலக கோப்பை வரலாற்றில் சங்ககராவின் 3வது சதம்.


‘ஹாட்ரிக்’

நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த இலங்கை அணி, ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளை வீழ்த்தி எழுச்சி கண்டது. நேற்று இங்கிலாந்தை தோற்கடித்த இலங்கை அணி, தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்து, காலிறுதிக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது.


2 ஓவர்...4 பவுலர்

ஹெராத் வீசிய 49வது ஓவரின் 5வது பந்தை ஜாஸ் பட்லர் அடித்தார். இதனை பிடிக்க முயன்ற ஹெராத்தின் இடது கையில் பந்து பலமாக தாக்கியதில் காயமடைந்தார். சிகிச்சைக்காக ஹெராத் ‘பெவிலியன்’ திரும்பியதால், மீதமிருந்த ஒரு பந்தை திசாரா பெரேரா வீசினார்.

லக்மல் வீசிய 50வது ஓவரின் முதல் பந்து, அளவுக்கு அதிகமாக உயரமாக சென்றதால் ‘நோ–பால்’ என அறிவிக்கப்பட்டது. பின், 5வது பந்தில் மீண்டும் அளவுக்கு அதிகமாக வீசியதால், மீண்டும் ‘நோ–பால்’ கொடுக்கப்பட்டு, லக்மலுக்கு பந்துவீச அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மீதமிருந்த 2 பந்தை தில்ஷன் வீசினார்.

இதன்மூலம் இலங்கை அணி, கடைசி 2 ஓவரை வீசி 4 பவுலர்களை பயன்படுத்தியது.


212

நேற்று, இலங்கையின் திரிமான்னே, சங்ககரா ஜோடி 2வது விக்கெட்டக்கு 212 ரன்கள் சேர்ந்தது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த இலங்கை ஜோடிகள் வரிசையில் 3வது இடம் பிடித்தது. 

முதலிரண்டு இடங்களில் தில்ஷன், உபுல் தரங்கா ஜோடி (282 ரன், எதிர்–ஜிம்பாப்வே, 2011 மற்றும் 231 ரன், எதிர்–இங்கிலாந்து, 2011) உள்ளது.

ஜிம்பாப்வே அணி தோல்வி - பாக்., அணி முதல் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், இன்று நடந்த உலக கோப்பைக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின. 

பாகிஸ்தான் அணியில் யூனிஸ் கான் நீக்கப்பட்டு ரஹாத் அலி சேர்க்கப்பட்டார். 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு நசிர் அகமது (1), அகமது ஷேசாத் (0) மோசமான துவக்கம் கொடுத்தனர். பின் இணைந்த ஹாரிஸ் சோகைல், கேப்டன் மிஸ்பா ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. 

மூன்றாவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த போது ஹாரிஸ் சோகைல் (27) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய மிஸ்பா (73) அரைசதம் கடந்தார். உமர் அக்மல் (33) ஆறுதல் தந்தார். அடுத்து வந்த அப்ரிதி ‘டக்–அவுட்’ ஆனார். சோகைப் மக்சூட் (21) சோகபிக்கவில்லை. 

வகாப் ரியாஸ் தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்தது. வகாப் ரியாஸ் (54), சோகைல் கான் (6) அவுட்டாகாமல் இருந்தனர். ஜிம்பாப்வே சார்பில் சட்டாரா 3, சீன் வில்லியம்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர். 

ஜிம்பாப்வே அணிக்கு சிபாபா (9), சிக்கந்தர் (8) ஏமாற்றினர். முகமது இர்பான் பந்தில் மககட்சா (29) வெளியேறினார். பிரண்டன் டெய்லர் அரை (50) சதம் எட்டினார். சீன் வில்லியம்ஸ் 33 ரன்கள் எடுத்தார். 

மிர்ரே (8), முபரிவா (0) உள்ளிட்டோர் விரைவில் வெளியேற, ஜிம்பாப்வே அணி 215 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, தோல்வியடைந்தது. கேப்டன் சிகும்பரா (35) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில் 4 விக்கெட் வீழ்த்திய வகாப் ரியாஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார். 

இந்தியா, வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இன்றைய போட்டியின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்தது.