உலகக்கோப்பை ஹீரோ

1996-ம் ஆண்டு உலகக்கோப்பை ஹீரோக்கள் என்று இருவரைக் குறிப்பிடலாம். ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா ஆகிய இருவர் தான் அந்த ஹீரோக்கள்.
 ÷1965-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் பிறந்தார் அரவிந்த டி சில்வா. வலது கை ஆட்டக்காரரான இவர், 1984-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக விளையாடினார்.  அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஆடும் வாய்ப்பு டி சில்வாவுக்கு கிட்டியது. ஸ்வீப் ஷாட் அடிப்பதில் வல்லவர்.

1996-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் முதல் சுற்றில் ஜிம்பாப்வே, கென்யா அணிகளுக்கு எதிராக முறையே 91 மற்றும் 145 ரன்கள் அடித்து இலங்கை அணியின் மேட்ச் வின்னராகத் திகழ்ந்தார். கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஜவஹல் ஸ்ரீநாத், இலங்கையின் தொடக்க வீரர்களை வீழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து 4-வது வீரராக வந்த டி சில்வா, சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து இலங்கை அணி 252 ரன்களை எட்டுவதற்கு காரணமாக இருந்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 120 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள், பீல்டிங் நின்ற இலங்கை வீரர்கள் மீது பாட்டில்களை தூக்கி எறிந்தனர். இதையடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இலங்கை அணி மோதியது. அப்போட்டியில் டி சில்வா சிறப்பாக பந்துவீசி 42 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 107 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டி சில்வாவின் சதத்தால் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. 

இறுதி ஆட்டம் உள்பட 2 ஆட்டங்களில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ÷2003 உலகக்கோப்பையோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வுபெற்றார்.

93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20 சதங்கள், 22 அரைசதங்கள் உள்பட 6,361 ரன்களைக் குவித்துள்ளார். 29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதேபோல் 308 ஒருநாள் போட்டிகளில் 11 சதங்கள், 64 அரைசதங்கள் உள்பட 9,284 ரன்களும், 106 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 11 முறை ஆட்டநாயகனாகவும், 4 முறை தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 31 முறை ஆட்டநாயகனாகவும், 3 முறை தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1990-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக டி சில்வாவை விஸ்டன் பத்திரிகை தேர்வு செய்தது. விஸ்டன் பத்திரிகை வெளியிட்ட சிறந்த 100 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 6 முறை இடம்பிடித்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி ஜூன் 7ல் தேர்வு

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு, வரும் ஜூன் 7ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.

இலங்கையில் உள்ள தம்புலாவில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நான்கு அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடருக்கான இந்திய அணி வீரர்களை, ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழு அடுத்த மாதம் 7ம் தேதி டில்லியில் தேர்வு செய்ய உள்ளனர். வரும் ஜூன் 15ம் தேதி நடக்கும் தொடரின் முதல் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

இந்திய அணி, தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை (ஜூன் 16) சந்திக்கிறது. அதன்பின் பாகிஸ்தான் (ஜூன் 19), இலங்கை (ஜூன் 22) அணிகளுடன் மோதுகிறது. இத்தொடரின் பைனல் அடுத்த மாதம் 24ம் தேதி நடக்கிறது.

நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர்

நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் என்று பெயரெடுத்தவர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஷான் போலாக்.

இவர் 1973 ஜூலை 16-ம் தேதி தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே பெüலிங், பேட்டிங் என இரண்டிலும் சிறந்து விளங்கிய போலாக், 1995-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக களம் கண்டார்.

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போலாக், அடுத்த சில நாள்களிலேயே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் களம்கண்டார். அப்போதைய வேகப்பந்து வீச்சாளர் ஆலன்டொனால்டிடம் இருந்து பந்துவீச்சு நுணுக்கங்களை கற்றுக்கொண்ட போலாக், டொனால்டின் ஓய்வுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.

2000-ம் ஆண்டு சூதாட்டப்புகாரில் சிக்கிய அப்போதைய கேப்டன் ஹான்சி குரோனியேவுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து போலாக் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனானார்.

இவரது தலைமையிலான 2003 உலகக்கோப்பை போட்டியில் மோசமாக விளையாடியது. இதனால் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்தார் போலாக். டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட் வீழ்த்திய உலகின் 10-வது வீரர், தென்னாப்பிரிக்காவின் முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

2008 பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் ஆட்டத்தோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து போலாக் ஓய்வுபெற்றார். 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள போலாக், இரண்டு சதம் உள்பட 3,781 ரன்களையும், 421 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 

இதேபோல் 303 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் உள்பட 3,519 ரன்களையும் 393 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்தவரை ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள்ளேயே இருந்தார். கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்கள் எடுத்த 6 வீரர்களில் இவரும் ஒருவர்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பௌலிங் தரவரிசையில் முதல் இடம், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் இடம், டெஸ்ட் பேட்டிங்கில் 37-வது இடம், ஒருநாள் பேட்டிங்கில் 34-வது இடம் ஆகிய இடங்களைப் பிடித்துள்ளார்.

தேர்வுக்கு மீண்டும் "கட்' அடித்த தோனி

இடைவிடாத போட்டிகள் காரணமாக, தனது கல்லூரிப் பருவத் தேர்வில் பங்கேற்காமல், இரண்டாவது முறையாக "கட்' அடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி.


ராஞ்சியில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில், விளையாட்டு ஒதுக்கீட்டின் அடிப்படையில், அலுவலக நிர்வாகம் மற்றும் செயலாளர் நடைமுறைகள் கோர்ஸ் படித்து வருகிறார் தோனி. கடந்த ஆண்டு லண்டனில் நடந்த 2 வது "டுவென்டி-20' உலககோப்பை காரணமாக, முதலாம் ஆண்டு தேர்வில் தோனி பங்கேற்க வில்லை.


இதே போல சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பை காரணமாக இரண்டாம் ஆண்டு தேர்விலும் தோனியால் பங்கேற்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதுவரை ஒரு தேர்வு கூட தோனி எழுத வில்லை.


இது குறித்து கல்லூரியின் தேர்வுத் துறை தலைவர் சின்கா கூறுகையில்,"" உலககோப்பையில் பங்கேற்றதால், தோனி இந்த ஆண்டும் தேர்வில் பங்கேற்க வில்லை. அடுத்த ஆண்டு தேர்வில் பங்கேற்கும் பட்சத்தில், மொத்தம் உள்ள ஆறு பருவத் தேர்வுகளையும் எழுத வேண்டிய நிலை ஏற்படும். இல்லாவிட்டால், 5 ஆண்டுகளுக்குள் அனைத்து தேர்வுகளையும் எழுதி முடிக்க வேண்டும். இதுவரை ஒரு தேர்வு கூட தோனி எழுத வில்லை,'' என்றார்.


சலுகை இல்லை: செயின்ட் சேவியர் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இதனால் கல்லூரி நிர்வாகம், கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நாட்களில் தேர்வுகளை நடத்தலாம். ஆனால் தோனிக்கு தனிச் சலுகை அளிக்க கல்லூரி நிர்வாகம் முன்வரவில்லை எனத் தெரிகிறது

புதிய "ஸ்பான்சர்' தேடுகிறது இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணியுடனான, சஹாரா நிறுவனத்தின் ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இதனால் புதிய "ஸ்பான்சருக்கு' அழைப்பு விடுத்துள்ளது இந்திய அணி.


உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் "ஸ்பான்சராக' தற்போது சஹாரா நிறுவனம் உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 400 கோடி ரூபாய் கொடுத்து, இந்திய அணிக்கு "ஸ்பான்சர்' செய்யும் உரிமையை சஹாரா பெற்று இருந்தது.


ஒப்பந்த காலம் கடந்த ஆண்டு டிசம்பரில் முடிவடைந்தது. ஆனால் அப்போது இந்திய அணிக்கு "ஸ்பான்சர்' யாரும் கிடைக்க வில்லை. இதனையடுத்து சஹாரா நிறுவனத்தின் ஒப்பந்தம் மேலும் 6 மாதம் காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதத்துடன் ஒப்பந்த காலம் முடிவடைகிறது. இதனால் புதிய "ஸ்பான்சரை' தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ., ) ஆர்வம் காட்டி வருகிறது.


இதையடுத்து இந்திய சீனியர் அணி, "ஏ' அணி, 19 வயதிக்குட்பட்ட அணி மற்றும் பெண்கள் அணிக்கு "ஸ்பான்சராக' இருக்க விரும்புபவர்களுக்கான புதிய ஏலத்தை பி.சி.சி.ஐ.,நேற்று அறிவித்தது. ஏலத்துக்கான விண்ணப்பம் நேற்று முதல் பி.சி.சி.ஐ., அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் விலை ரூ. 5 லட்சம்.

தற்போது ஐ.பி.எல்., ஏலத்தில், புனே அணியை ரூ. 1700 கோடிக்கு விலைக்கு வாங்கிய சஹாரா அணி, மீண்டும் இந்திய அணிக்கு "ஸ்பான்சர்' செய்வது கடினம் தான். இதனால் புதிய ஸ்பான்சரை, எதிர்நோக்கியுள்ளது இந்திய அணி.

சாம்பியன்ஸ் லீக் : 10 அணிகள் பங்கேற்பு

தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள "டுவென்டி-20' சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில், இம்முறை 10 அணிகள் பங்கேற்க உள்ளன.


உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் பங்கேற்கும் "டுவென்டி-20' சாம்பியன்ஸ் லீக் தொடர், ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இத்தொடர் வரும் செப். 10 ம் தேதி முதல் 26 வரை தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது.


இங்கிலாந்து விலகல்: இந்த முறை இந்தியா தரப்பில் ஐ.பி.எல்., சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில் போட்டி அட்டவணையை மாற்றுமாறு, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு விடுத்த வேண்டுகோளை, சாம்பியன்ஸ் லீக் நிர்வாகம் ஏற்க மறுத்து விட்டது. இதனால் இத்தொடரிலிருந்து இங்கிலாந்து கவுன்டி அணிகள் விலகின. கடந்த முறை இங்கிலாந்து தரப்பில் 2 அணிகள் பங்கேற்றன.


10 அணிகள்: இதனையடுத்து 12 அணிகள் பங்கேற்கவிருந்த இத்தொடர், 10 அணிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 9 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பங்கேற்கும் அணி மட்டும் வரும் ஜூலை மாத இறுதிக்குள் உறுதிசெய்யப்பட உள்ளது. இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ள அணிகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா), மும்பை இந்தியன்ஸ் (இந்தியா), பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் (இந்தியா), விக்டோரியன் பஸ்ரேஞ்சர்ஸ் (ஆஸி.,), சவுத் ஆஸ்திரேலியன் ரெட்பேக்ஸ் (ஆஸி.,), வாரியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), ஹைவெல்ட் லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா), சென்டிரல் ஸ்டேஜஸ் (நியூசி.,), வேயம்பா லெவன்ஸ் (இலங்கை).

உல​கக்​கோப்​பை​யில் அசத்​தி​ய​வர்

1999-ல் இங்​கி​லாந்​தில் நடை​பெற்ற உல​கக் கோப்பை கிரிக்​கெட்​டில் அனைத்து போட்​டி​க​ளி​லும் அதி​ர​டி​யாக விளை​யாடி அனை​வ​ரின் கவ​னத்​தை​யும் ஈர்த்​த​வர் தென்​னாப்​பி​ரிக்​கா​வின் முன்​னாள் ஆல்​ர​வுண்​டர் லான்ஸ் குளூஸ்​னர்.​

÷இ​வர் 1971 செப்​டம்​பர் 4-ம் தேதி தென்​னாப்​பி​ரிக்​கா​வின் டர்​ப​னில் பிறந்​தார்.​ இடது கை பேட்ஸ்​மேன் மற்​றும் வலது கை வேகப்​பந்து வீச்​சா​ள​ரான குளூஸ்​னர்,​​ 1996 ஜன​வ​ரி​யில் இங்​கி​லாந்​துக்கு எதி​ரான ஒரு தின போட்​டி​யில் தென்​னாப்​பி​ரிக்க அணிக்​காக முதன்​மு​த​லாக களம் கண்​டார்.​ ​

÷அ​தன்​பி​றகு அதே ஆண்​டில் கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற இந்​தி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் போட்​டி​யில் கள​மி​றங்​கி​னார்.​ அதைத் தொடர்ந்து பல்​வேறு போட்​டி​க​ளில் சிறப்​பாக விளை​யா​டிய குளூஸ்​னர்,​​ 1999-ல் இங்​கி​லாந்​தில் நடை​பெற்ற உல​கக் கோப்​பை​யில் விளை​யா​டிய தென்​னாப்​பி​ரிக்க அணி​யி​லும் இடம்​பி​டித்​தார்.​ ​

÷உ​ல​கக் கோப்​பை​யில் பல ஆட்​டங்​க​ளில் இக்​கட்​டான நேரங்​க​ளில் கள​மி​றங்​கிய குளூஸ்​னர்,​​ அதி​ர​டி​யாக விளை​யாடி அணி வெற்​றி​பெற உத​வி​னார்.​ தென்​னாப்​பி​ரிக்க அணி அரை இறு​திக்​குள் நுழை​வ​தற்கு அவ​ரது ஆட்​டம் கார​ணம் என்​றால் அது மிகை​யா​காது.​ ​

÷அரை இறு​திப் போட்​டி​யி​லும் ஆஸ்​தி​ரே​லி​யா​வுக்கு எதி​ராக அபா​ர​மாக ஆடிய குளூஸ்​னர்,​​ வெற்​றிக்கு 1 ரன் தேவைப்​பட்​ட​போது எதிர்​பா​ரா​த​வி​த​மாக ரன் அவுட் ஆனார்.​

இத​னால் ஆட்​டம் "டை'யில் முடி​வ​டைந்​தது.​ ​

÷இ​த​னால் தென்​னாப்​பி​ரிக்க அணி சிறப்​பாக விளை​யா​டி​யும் இறு​திப் போட்​டி​யில் நுழைய இய​லா​மல் போனது.​ உல​கக் கோப்​பை​யின் அனைத்து போட்​டி​க​ளி​லும் சிறப்​பாக விளை​யா​டிய குளூஸ்​னர் தொடர் நாய​கன் விருதை தட்​டிச் சென்​றார்.​

2004-ம் ஆண்டு மேற்​கிந்​தி​யத் தீவு​க​ளுக்கு எதி​ரான ஒரு​நாள் தொட​ரோடு சர்​வ​தேச கிரிக்​கெட்டி​லி​ருந்து குளூஸ்​னர் ஓய்​வு​பெற்​றார்.​

÷49 டெஸ்ட் போட்​டி​க​ளில் விளை​யா​டி​யுள்ள குளூஸ்​னர்,​​ 1906 ரன்​க​ளை​யும்,​​ 80 விக்​கெட்​டு​க​ளை​யும் வீழ்த்​தி​யுள்​ளார்.​ இதே​போல் 171 ஒரு​நாள் போட்​டி​க​ளில் 3576 ரன்​க​ளும்,​​ 192 விக்​கெட்​டு​க​ளும் எடுத்​துள்​ளார்.​ முதல் தர கிரிக்​கெட்​டில் 197 போட்​டி​க​ளில் 9521 ரன்​க​ளை​யும்,​​ 508 விக்​கெட்​டு​க​ளை​யும் வீழ்த்​தி​யுள்​ளார்.​

÷1999-ம் ஆண்டு உல​கக் கோப்​பை​யில் சிறப்​பாக விளை​யா​டிய குளூஸ்​னர் 2000-ம் ஆண்​டின் சிறந்த வீர​ராக விஸ்​ட​னால் தேர்வு செய்​யப்​பட்​டார்.​ ​

என்.பி.ஏ., பாணியில் ஐ.பி.எல்., போட்டி

அமெரிக்காவின் என்.பி.ஏ., (தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பு) பாணியில் ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த, இந்திய கிரிக்கெட் போர்டு ஆலேசானை நடத்தி வருகிறது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நிர்வாகிகள் கூட்டம் கடந்த 17 ம் தேதி மும்பையில் நடந்தது. இக்கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில், போட்டிகள் நடத்தும் முறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடந்தது.

இதன் படி என்.பி.ஏ., தொடரில் இருக்கும் போட்டி முறைகளை பின்பற்றி, ஐ.பி.எல்., போட்டிகளை நடத்துவது என பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. இது குறித்து அடுத்த மாதம், ஐ.பி.எல்., ஆட்சிக் குழு நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது. அதற்குப் பின் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

என்.பி.ஏ., முறை:

தற்போது கொச்சி, புனே அணிகளை சேர்த்து மொத்தம் 10 அணிகள் ஐ.பி.எல்., அமைப்பில் இடம் பெற்றுள்ளன. கடந்த முறை நடந்த 3 வது ஐ.பி.எல்., தொடரில் 60 போட்டிகள் நடந்தன. அடுத்த முறை அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தற்போதுள்ள முறைப்படி 94 போட்டிகள் வரை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், என்.பி.ஏ., பாணியில் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ., முடிவுசெய்துள்ளது. இதன் படி மொத்தம் உள்ள 10 அணிகள் "ஏ', "பி' என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். "ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள ஒரு அணி, மற்ற 4 அணிகளுடன் தலா 2 முறை மோதும்.

அதே சமயம் "பி' பிரிவில் இடம் பெற்ற மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் அடிப்படையில் ஒரு அணி குறைந்தது 13 போட்டிகள் வரை விளையாடும். முடிவில் முதல் 4 இடங்களை எட்டும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

"சூப்பர் சிக்ஸ்' முறை:

என்.பி.ஏ., முறைக்கு எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில், "ரவுண்ட் ராபின்' முறையில் போட்டிகளை நடத்தவும் பி.சி.சி.ஐ., ஆலோசித்து வருகிறது. இதன் படி 10 அணிகள் "ஏ', "பி' என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி, மற்ற 4 அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள், "சூப்பர்-சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறும். இதில், ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முதல் 4 இடங்களை பெறும் அணிகள் அரையிறுதி வாய்ப்பை எட்டும். ஆனால் இந்த முறையில் ஒரு குறிப்பிட்ட அணி, மற்றொரு முக்கியமான அணியை சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போகலாம்.

இந்த இரண்டு புதிய முறைகளுள் ஒன்றை, அடுத்த ஆண்டு நான்காவது ஐ.பி.எல்., தொடரில் நடைமுறைப்படுத்த பி.சி.சி.ஐ., தீவிரம் காட்டி வருகிறது. ஐ.பி.எல்., ஆட்சிக் குழுவும் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலுமினிய கிரிக்கெட் பேட் அறிமுகம்

கிரிக்கெட் அரங்கில் இன்னொரு புரட்சி. அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட பேட், புதுப்பொலிவுடன் அறிமுகமாகிறது.

கிரிக்கெட்டில் அவ்வப்போது புதுமைகள் அரங்கேறும். எஸ்.ஜி, கூக்கபரா என இரண்டு வகை பந்துகள் உண்டு. இதே போன்று பல்வேறு வகையான பேட் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் மிக நீளமான கைப்பிடி கொண்ட "மங்கூஸ்' வகை பேட் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை பயன்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் ஹைடன், சில போட்டிகளில் அதிரடி காட்டினார்.

இந்திய கண்டுபிடிப்பு:

தற்போது அலுமினியத்தாலான பேட் ஒன்றை இந்தியாவை சேர்ந்த இன்ஜினியர் விவேக் லகோத்தியா உருவாக்கியுள்ளார். "டென்னிஸ் பந்து கிரிக்கெட்' போட்டிக்கு ஏற்ற அலுமினிய பேட்டை இன்று டில்லியில் அறிமுகம் செய்கிறார். மூன்று மாதங்களுக்கு பின் "லெதர்' பந்து மூலம் விளையாடப்படும் வழக்கமான போட்டிக்கான பேட்டை அறிமுகம் செய்ய உள்ளார்.

மரங்கள் பாதுகாப்பு:

இவ்வகை பேட் தயாரிக்க, விமானத்துக்கான உயர் ரக அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. நவீன இயந்திரங்கள் மூலம் மிக நேர்த்தியாக உருவாக்குகின்றனர். இதன் தயாரிப்பு விலை ரூ. 500 முதல் ரூ. 800 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மரத்தினால் செய்யப்பட்ட வழக்கமான பேட்டை விட, அலுமினிய பேட் எடை குறைவாக இருக்கும். தவிர, 5 மடங்கு அதிகமாக உழைக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உகந்தது. இதன் மூலம் பேட் தயாரிப்புக்காக காஷ்மீரில் உள்ள "வில்லோ' மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதை தவிர்க்கலாம். ஐ.சி.சி., அனுமதி அளிக்கும்பட்சத்தில் இவ்வகை பேட், போட்டிகளில் பயன்படுத்தப்படலாம்.

இது குறித்து அலுமினிய கம்பெனி ஒன்றை நடத்தி வரும் லகோத்தியா கூறியது:

இந்தியாவில் சுமார் 25 கோடி பேர் டென்னிஸ் பந்து மூலம் கிரிக்கெட் விளையாடுகின்றனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு 5 ஆயிரம் போட்டி தொடர்கள் நடத்தப்படுகின்றன. இவர்கள் மரத்திலான பேட்டை தொடர்ந்து பயன்படுத்தினால் விரைவில் காடுகள் அழிந்து விடும்.

எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி அலுமினிய பேட் உருவாக்கும் திட்டம் எனது மனதில் கடந்த ஆண்டு உதித்தது. இதனை பயன்படுத்துவதன் மூலம் பசுமையான உலகுக்கு ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளிக்கலாம்.

சச்சின் போன்றவர்கள் அதிக எடை கொண்ட பேட் பயன்படுத்துகின்றனர். இதற்கேற்ப அலுமினிய பேட்டின் அடிப்பகுதியின் எடையை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யலாம்.
இவ்வாறு லகோத்தியா கூறினார்.

ராஜஸ்தான் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கத்தின் செயலர் மன்சூர் பெய்க் கூறுகையில்,""புதிய பேட் சிறப்பாக உள்ளது. அனைத்து வகையான "ஷாட்'களையும் எளிதாக அடிக்க முடிகிறது. தற்போது தான் வீரர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். மிக விரைவில் பிரபலமடையும்,''என்றார்.

டெனிஸ் லில்லி சர்ச்சை

கிரிக்கெட்டில் அலுமினிய பேட் பயன்படுத்திய வரலாறு உண்டு. கடந்த 1979ல் பெர்த்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி, அலுமினிய பேட்டுடன் களமிறங்கினார். இந்த பேட் மூலம், போத்தம் வீசிய பந்தில் 3 ரன் எடுத்தார். ஆனால், ஆஸ்திரேலிய கேப்டன் கிரக் சாப்பல், பவுண்டரி கிடைத்திருக்க வேண்டுமென நினைத்தார்.

மறுபக்கம் இங்கிலாந்து கேப்டன் மைக் பிரயார்லி, உலோகத்திலான அலுமினிய பேட் காரணமாக பந்து சேதமடைவதாக அம்பயரிடம் புகார் கூறினார். தனது பேட்டை மாற்ற லில்லி மறுக்க, ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

பின் மைதானத்துக்குள் வந்த சாப்பல், லில்லி கையில் வலுக்கட்டாயமாக மரத்திலான பேட்டை
கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த லில்லி, அலுமினிய பேட்டை, "பெவிலியன்' நோக்கி எறிந்து, சர்ச்சை கிளப்பினார்.

இந்த சம்பவத்துக்கு பின், மரத்தினால் தயாரிக்கப்பட்ட பேட் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது.

மூன்று பைனல் வேண்டும்

உலக கோப்பை போன்ற சில முக்கியமான தொடர்களில் "டுவென்டி-20' போட்டிக்கு, மூன்று பைனல்கள் நடத்த வேண்டும்,'' என, ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாண்டிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் லீக், "சூப்பர்-8' மற்றும் அரையிறுதி என பங்கேற்ற 6 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முக்கியமான பைனலில் கோட்டை விட, கோப்பையை இங்கிலாந்து அணி தட்டிச் சென்றது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் பாண்டிங் கூறியது:

தற்போதைய ஆஸ்திரேலிய "டுவென்டி-20' அணி, சிறந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்கள் உலக கோப்பை தொடர் முழுவதும், சிறப்பாக செயல்பட்டு, ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், முக்கியமான பைனலில் சாதிக்க தவறினர். இருப்பினும் பைனல் வரை சென்றதுக்கு, ஆஸ்திரேலிய வீரர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

இவ்வகை போட்டியில், ஏதாவது ஒரு ஓவரில் நடக்கும் மாற்றத்தால், முடிவே மாறிவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் "டுவென்டி-20' தொடரின் பைனலை எப்போதும் மூன்று போட்டிகள் கொண்டதாக நடத்த வேண்டும்.

கேப்டனுக்கு ஆதரவு:

கிளார்க் தனது பேட்டிங் மற்றும் "டுவென்டி-20' கேப்டன் பதவி குறித்து என்ன கூறினார் என, எனத்தெரியாது. ஆனால் என்னைப்பொறுத்தவரையில், ஒவ்வொரு முறையும் கிளார்க், தனது பணியில் சிறப்பாகத் தான் செயல்படுகிறார். இதை எதிர்காலத்திலும் தொடர்வார் என பயிற்சியாளர் டிம் நீல்சனுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

தவிர, "டுவென்டி-20' உட்பட மூன்றுவகைப் போட்டிகளிலும் பங்கேற்க விருப்பம் இருந்தாலும், உடல் நிலை ஒத்துழைக்க மறுக்கிறது.

இவ்வாறு பாண்டிங் தெரிவித்தது.

டெஸ்ட் வீரர்கள்:​ யூசுப் வேதனை

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால்,​​ தரம்வாய்ந்த டெஸ்ட் வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் முகமது யூசுப் வேதனை தெரிவித்தார்.

இந்தாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடியது.​ இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக விசாரணைக் கமிட்டி முன் ஆஜரான முகமது யூசுப்,​​ மேலும் கூறியது:​ ​

பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு தரம்வாய்ந்த வீரர்கள் இல்லை.​

தற்போதுள்ள அணி இருபது ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்கு ஏற்ற அணி.​ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இருபது ஓவர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது துரதிர்ஷ்டவசமானது.​ ​ ​

இதைச் சரிசெய்து தரம்வாய்ந்த டெஸ்ட் வீரர்களை உருவாக்க கிரிக்கெட் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் காலங்களில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் மோசமான தோல்விகளைச் சந்திக்க நேரிடும் என்றார்.

தற்போதுள்ள வீரர்களில் ஏராளமானோர் இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்கே ஆர்வம் காட்டுகின்றனர்.​ டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்பவில்லை என்றார்.

ஆஸ்திரேலிய வீரர் ஹாடினுக்கு அபராதம்

பிரிட்ஜ்டவுன்,​​ மே 18:​ இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின்போது நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாடினுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் சைடுபாட்டம் பந்தில்,​​ கீஸ்வெட்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஹாடின்.​ அப்போது அவருக்கு மேற்கிந்திய தீவுகள் நடுவர் பில்லி டாக்ட்ரோவ் அவுட் கொடுத்தார்.​ அம்பயரின் இந்த தீர்ப்புக்கு ஹாடின் எதிர்ப்புத் தெரிவித்தார்.​ இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.​ இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடத்தை விதிகளை மீறியதாக ஹாடினுக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.இந்தப்போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மிடில் ஆர்டரில் கலக்கியவர்

ஆஸ்திரேலியாவின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தவர் டேமியன் மார்டின்.

இவர் 1971 அக்டோபர் 21-ம் தேதி ஆஸ்திரேலியாவின் டார்வினில் பிறந்தார்.​ வலது கை பேட்ஸ்மேனான இவர்,​​ 1992-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக முதன்முதலாக களம் கண்டார்.​ ​

அப்போது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய அவர்,​​ அந்த தொடரில் சிறப்பாக விளையாடி 168 ரன்கள் குவித்தார்.​ அதே ஆண்டில் ஒருதின அணியிலும் இடம்பிடித்தார்.​ ​

2003-ல் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.​ ​

அப்போட்டியில் அவர் 88 ரன்கள் எடுத்து இறுதிவரை ​ ஆட்டமிழக்காமல் இருந்தார்.​ அவருடைய அதிரடி ஆட்டம் ஆஸ்திரலிய அணி கோப்பையை வெல்ல உதவியாக இருந்தது என்றால் அது மிகையல்ல.

2000-ல் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய மார்டின்,​​ 2001-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக விஸ்டனால் தேர்வு செய்யப்பட்டார்.

2004-ல் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரு சதங்களை விளாசி அத்தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வெல்வதற்கு காரணகர்த்தவாக அமைந்தார்.

அதன்பிறகு இந்திய மண்ணில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி 30 ஆண்டுகளுக்குப்பிறகு ஆஸ்திரேலியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெறுவதற்கு உதவினார்.​ அத்தொடரில் தொடர்நாயகன் விருதையும் அவர் தட்டிச்சென்றார்.​ ​

2006 டிசம்பரில் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.​ ​

67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மார்டின் 4,406 ரன்கள் குவித்துள்ளார்.​ இதில் 13 சதங்கள்,​​ 23 அரை சதங்கள் அடங்கும்.​ 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,346 ரன்கள் குவித்துள்ளார்.​ முதல்தர கிரிக்கெட்டில் 204 போட்டிகளில் 14,630 ரன்கள் குவித்துள்ளார்.

​ சமீபத்தில் முடிவடைந்த ஐ.பி.எல்.​ கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக மார்டின் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்திய வீரர்களுக்கு இங்கிலாந்தில் அவமானம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்ற, இந்திய அணியினர் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, முன்னணி வீரர் மானவ்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் டார்சட் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் சார்பில், உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதில் பங்கேற்க சென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு, இங்கிலாந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து அணியின் மானேஜர் பத்மனாபன், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு, எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது:

பயிற்சி முடித்து இந்திய வீரர்கள் தங்களது ஓட்டலுக்கு செல்ல பஸ்சில் ஏற முயன்றனர். அப்போது கதவை அடைத்த டிரைவர், போக்குவரத்து துறை அதிகாரி மைக்கிடம் புகார் கூறினார். உடனே அங்கு வந்த மைக், நமது வீரர்களை பார்த்து திட்டினார்.

மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட இவர், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார். மானவ்ஜித் சிங்கிடம் பஸ்சில் இருந்து கீழே இறங்கும்படி கூறினார். இதற்கு மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்தார். இது ஒன்றும் மானவ்ஜித்தின் சொந்த வாகனம் அல்ல, என்று ஏளனமாக பேசினார்.

முதல் சம்பவம்:

இரண்டு நாட்களுக்கு முன் நமது வீராங்கனைகள் ஷிரயாசி, ஷேகன் ஆகியோரை பஸ்சை விட்டு வெளியேற்றி, மற்ற நாட்டு வீரர்களுக்கு முன் அவமானப்படுத்தினர். இது பற்றி போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் எடுத்துக் கூறி, உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இச்சம்பவத்தால், தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என, மானவ்ஜித் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:

எங்களை திட்டமிட்டு வேண்டுமேன்றே அவமானப்படுத்தினர். எதற்காக இப்படி நடந்து கொண்டனர் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் இதற்கு முன் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்றுள்ளோம். ஆனால் இதுபோன்ற நிலையை எப்போதும் எதிர்கொண்டதில்லை. இந்நிலையில் போக்குவரத்து ஊழியரிடம் தவறாக நடந்தது, பெண் டிரைவரை நாங்கள் திட்டினோம் போன்ற குற்றச்சாட்டுக்கள் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

வீடியோ ஆதாரம்:

இதெல்லாம் நிர்வாகிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தெரிவித்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள். ஆனால் இவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த குற்றச்சாட்டுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். சம்பவத்துக்கு பின் அந்த பெண் டிரைவரே, நாங்கள் அப்படிப்பட்ட செயலில் ஈடுபடவில்லை, என தெரிவித்துள்ளார். தவிர, இவற்றை மற்ற நாடுகளின் வீரர்கள் நேரில் பார்த்துக்கொண்டிருந்தனர். இதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது.

திறனை பாதிக்கும்:

பொதுவாக துப்பாக்கி சுடுதல் போட்டி என்பது மனநிலை சம்பந்தப்பட்டது. இதற்கு மன அமைதி, ஒருமுகப்படுத்துதல் போன்றவை இருந்தால் தான், போட்டிகளில் வெற்றி பெற முடியும். தொடரை வெல்லும் போட்டியில் எப்போதும் முன்னிலையில் இருப்பது இந்திய வீரர்கள் தான். ஆனால் நடந்த சம்பவங்களால் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு மானவ்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.


மன்னிப்பு கேட்டனர்

இந்திய வீரர்கள் அவமானப்படுத்தப்பட்டதுக்கு சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு அமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்.,) மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ரைபிள் சங்கத்தின் செயலாளர் ராஜிப் பாட்யா கூறுகையில்,"" நமது பிரதிநிதிகளுக்கும், போட்டி அமைப்பாளர்கள் இடையில் நடந்த கூட்டத்தில், அமைப்பாளர்கள் முறைப்படி மன்னிப்பு கேட்டனர். இருப்பினும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் கேட்டுள்ளோம்,'' என்றார்.

கில் நடவடிக்கை

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதுகுறித்து விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,"" லண்டனில் <உள்ள இந்திய தூதரகம் மற்றும் தேசிய ரைபிள் கூட்டமைப்பு (என்.ஆர்.ஏ.ஐ.,) நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு கில் விசாரித்தார். பின் இதன் முழுவிபரத்தை அனுப்புமாறு அவர்களை கேட்டுக்கொண்டார்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனி-3, காம்பிர்-2, ஜடேஜா-0

டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு வீரர்களின் மோசமான ஆட்டமே முக்கிய காரணம். வீரர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப, அவர்களது "மார்க்' வருமாறு:


ரெய்னா-7/10

போட்டி- 5, ரன்- 219, அதிகபட்சம்- 101, சராசரி- 43.80, ஸ்டிரைக் ரேட் -146.

இந்திய அணி சொதப்பிய போதும், ரெய்னா மட்டும் நம்பிக்கை அளித்தார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த இவர், "டுவென்டி-20' வரலாற்றில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இவரும் "ஷார்ட் பிட்ச்' பந்துகளை சமாளிப்பதில் திணறினார்.


நெஹ்ரா-6/10

போட்டி-5, ஓவர்- 20, விக்.,- 10

இந்திய அணியின் சிறந்த பவுலராக குறிப்பிடலாம். முக்கிய கட்டத்தில் எதிரணியின் விக்கெட்டை சாய்க்க இவரை தான், கேப்டன் தோனி தேடினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி கட்டத்தில் சூப்பராக பந்துவீசினார். இலங்கைக்கு எதிரான போட்டியில், இவரது கடைசி பந்தில் கபுகேதரா சிக்சர் அடித்தது வேதனையான விஷயம்.


ஹர்பஜன் சிங்-5/10

போட்டி- 5, ரன் -27, விக்கெட்- 0

விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. ஆனாலும் மிகவும் துல்லியமாக பந்துவீசி கலக்கினார். பெரும்பாலான போட்டிகளில் முதல் ஓவரை அருமையாக வீசினார். இலங்கைக்கு எதிரான போட்டி தவிர, மற்ற ஆட்டங்களில் நம்பிக்கை காத்தார். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டிகளில் பேட்டிங்கில் கைகொடுத்த இவர், மோசமான தோல்வியை தவிர்க்க உதவினார்.


ரோகித் சர்மா 4/10

போட்டி: 3, ரன்-84, சராசரி 84, ஸ்டிரைக் ரேட் 155.55

ரோகித் சர்மா மீது கேப்டன் தோனிக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அதனால் அதிக போட்டிகளில் வாய்ப்பு அளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 79 ரன்கள் எடுத்த இவர், அணியின் மானம் காத்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில், அம்பயர் பில்லி பவுடனின் தவறான தீர்ப்பால் அவுட்டானார்.


பியுஸ் சாவ்லா- 3/10

போட்டி-2, விக்.,-1

வேகத்துக்கு ஒத்துழைக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில், ஓரளவுக்கு சுழலில் அசத்தினார். இலங்கைக்கு எதிராக துவக்கத்தில் அபாரமாக பந்துவீசினார். கடைசி நேரத்தில் ஏஞ்சலோ மாத்யூஸ் அதிரடியில் கலங்கிப் போனார்.


காம்பிர்-2/10

போட்டி: 4, ரன்- 69, சராசரி- 17.25, ஸ்டிரைக் ரேட் -111.29

முதல் உலக கோப்பை தொடரில் ஹீரோவாக ஜொலித்த காம்பிர், இம்முறை ஏமாற்றம் அளித்தார். சேவக் இல்லாத நிலையில் இவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கப்பட்டது. அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்த இவர், "ஷார்ட் பிட்ச்' பந்துகளில் திணறினார். இவர், இலங்கைக்கு எதிரான போட்டியில் விக்கெட்டுகளுக்கு இடையே மந்தமாக ஓடியதால், வலுவான ஸ்கோரை எட்ட முடியவில்லை.


தினேஷ் கார்த்திக்-2/10

போட்டி-2, ரன்-29, அதிகபட்சம்- 16, சராசரி- 14.50, ஸ்டிரைக் ரேட்- 100.00

கிடைத்த 2 வாய்ப்புகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள தவறினார். பேட்டிங் வரிசையில் துவக்க வீரராக களமிறங்கி ஏமாற்றினார்.


யுவராஜ் சிங்-1/10

போட்டி-5, ரன்- 74, அதிகபட்சம்- 37, சராசரி 18.50, ஸ்டிரைக் ரேட் 105.71

ஐ.பி.எல்., தொடரில் சொதப்பிய இவர், கரீபிய மண்ணிலும் ஏமாற்றினார். மோசமான "பார்ம்' மற்றும் போதிய உடற்தகுதி இல்லாமல் தவித்தார். அணியின் மூத்த வீரர் என்ற பொறுப்பை உணராமல் செயல்பட்டார். பீல்டிங்கிலும் கோட்டைவிட்டார்.


முரளி விஜய்-1/10

போட்டி-4, ரன்-57, அதிகபட்சம் 48, சராசரி 14.25, ஸ்டிரைக் ரேட் 83.82

ஐ.பி.எல்., தொடரில் சென்னை கிங்ஸ் அணிக்காக அசத்திய இவர், உலக கோப்பை தொடரில் சாதிக்க தவறினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டும் 48 ரன்கள் எடுத்தார். இவரது அணுகுமுறை மற்றும் ஆட்ட நுணுக்கம் மோசமாக இருந்தது. பவுன்சர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.


யூசுப் பதான்- 2/10

போட்டி-5, ரன் 42, சராசரி 10.50, விக்.,-4

அதிரடியாக விளையாடக்கூடியவர் என்ற அடிப்படையில் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், பவுன்சர்களில் அவுட்டாகி ஏமாற்றினார். பந்துவீச்சில் மட்டும் அவ்வப்போது ஆறுதல் அளித்தார்.


ஜாகிர் கான் -2/10

போட்டி-3, ஓவர் 11, விக்., 2

ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அசத்திய இவர், உலக கோப்பை தொடரில் ஏமாற்றினார். அணியின் பந்துவீச்சை வழிநடத்த வேண்டிய இவர், சரியான அளவில் துல்லியமாக பந்துவீச தவறினார்.


தோனி -3/10

போட்டி-5, ரன் -85, அதிகபட்சம் 29, சராசரி 42.50, ஸ்டிரைக் ரேட் 149.12

கேப்டனாக தவறான யுக்திகளை கையாண்டார். பந்துகள் எகிறும் பார்படாஸ் ஆடுகளத்தில், இரண்டு வேகங்களுடன் களமிறங்கினார். தொடர்ந்து ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளித்து வெறுப்பேற்றினார். பேட்டிங் வரிசையில் சரியான இடத்தில் களமிறங்காத இவர், பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை.


பிரவீண் குமார் 2/10

போட்டி-2, ஓவர்-4, விக்.,-2,

லீக் சுற்றில் நன்றாக தான் பந்துவீசினார். ஆனால் காயமடைந்தால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. சூப்பர்-8 சுற்றில் இவர் இல்லாதது பெரும் குறையாக இருந்தது.


வினய் குமார்- 2/10

போட்டி-1, ஓவர்-4, விக்.,-2.

பிரவீண் குமார் காயமடைந்ததும் இவருக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், வீணாக தாமதம் செய்தார்கள். இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜெயசூர்யா, சங்ககரா போன்ற அனுபவ வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றி திறமை நிரூபித்தார். இப்போட்டியில் தனது கடைசி ஓவரில் 17 ரன் கொடுத்த இவர், ஏமாற்றம் அளித்தார்.


ரவிந்திர ஜடேஜா-0/10

போட்டி-4, ரன் -9, அதிகபட்சம் 5, ஸ்டிரைக் ரேட் 81.81, விக்-2

இத்தொடரில் மிக மோசமாக செயல்பட்டவர் இவர் தான். ஐ.பி.எல்., தொடரில் தடை விதிக்கப்பட்ட இவரை, வீணாக தேர்வு செய்தனர். முக்கிய கட்டங்களில் மோசமாக பந்துவீசிய இவர் "சிக்சர்களாக' விட்டுக் கொடுத்தார். "கேட்ச்' வாய்ப்புகளை வீணடித்தது இவர், பேட்டிங்கிலும் சொதப்பினார்.

4-வது முறையாக உலக சாம்பியன்

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் (40) 4வது முறையாக பெற்றுள்ளார்.

நடப்பு சாம்பியனான அவர், பல்கேரியாவின் வெஸலின் டொபலோவை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.

12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஆனந்த் 6.5 - 5.5 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று பட்டம் வென்றார்.

11 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 5.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் கடைசி சுற்று ஆட்டம் செவ்வாய்க்கிழமை மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது.

கடைசி சுற்று ஆட்டத்தில் கறுப்பு காயுடன் விளையாடினார் ஆனந்த். கடைசி ஆட்டமும் டிரா ஏற்பட்டு, பின்னர் டைபிரேக்கரில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனந்த் அதிரடியாக விளையாடி பட்டத்துக்கான புள்ளிகளை வென்றார்.

32வது நகர்த்தலின்போது செய்த சிறிய தவறால் டொபலோவ் நிதானம் இழந்தார். அதேசமயம் 40வது நகர்த்தலில் ஆனந்த் தவறு செய்தாலும், அது அவரது ஆட்டத்தின் போக்கை மாற்றவில்லை. எனினும் 56 நகர்த்தலில் ஆனந்த் வென்று பட்டம் வென்றார்.

ஆனந்தின் சாதனைகள்: உலக சாம்பியன் பட்டங்கள் - 2000, 2007, 2008, 2010; 5 முறை செஸ் ஆஸ்கர் விருதுகள், 1987-ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டம், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.

செஸ் ஆட்டத்தில் நாக்அவுட், டோர்ணமென்ட், மேட்ச் ஆகிய முறைகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆனந்த் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.