20 ஆண்டுகளாக கிரிக்கெட் சூதாட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியில் கடந்த பல ஆண்டு காலமாக சூதாட்டம் இருந்து வருகிறது என்றும் இது புற்றுநோய் போல பரவி வருவதாகவும் இலங்கை முன்னாள் கேப்டன் ஹசன்திலகரத்னே கூறியிருக்கிறார்.


இலங்கை அணியில் ஆடியபோது வாய்திறக்காத திலகரத்னே இப்போது வாய்திறந்திருக்கிறார். மேட்ச் பிக்ஸிங்கை இப்போது நிறுத்தாவிட்டால், பாகிஸ்தான் கதி தான் இலங்கைக்கு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.


இது குறித்து ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:


கிரிக்கெட்டில் மேட்ச் பிக்சிங் மோசடி இன்று, நேற்று துவங்கவில்லை. நீண்டகாலமாக உள்ள பிரச்சனை இது. 1992ம் ஆண்டிலிருந்து இந்த பிக்ஸிங் நடக்கிறது என்பதை உறுதியாகவே சொல்வேன்.


உலகக் கோப்பை இறுதிப் பேட்டியில் ஏன் 4 வீரர்கள் திடீரென மாற்றப்பட்டனர். ( மென்டிஸ் நீக்கம் ரன்னே எடுக்காத கபுகேந்திரா சேர்ப்பு) இது ஏன் என்று இதுவரை புரியவில்லை. ஆனால் உலக கோப்பை போட்டி பிக்ஸ் செய்யப்பட்டது என்று நான் சொல்ல முடியாது. இது போன்ற சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களின் பெயர் விவரங்களை விரைவில் வெளியிடுவேன்.


மேட்ச் பிக்சிங் இந்த நாட்டின் கிரிக்கெட்டில் சகஜமாகிவிட்டது . இது கேன்சர் மாதிரி பரவிக் கொண்டிருக்கிறது. வெளியில் சொல்ல நினைத்த பலர் முயன்றனர் ஆனால், அவர்களுக்கும் பணம் தந்து வாயை அடைத்து விட்டனர்.


பொறுப்பில் உள்ளவர்கள் விரைவில் இதனை தடுக்க வேண்டும். இல்லையேல் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இலங்கை அணிக்கு ஏற்படும் என்றார்.


இலங்கை அணியில் 83 டெஸ்ட் போட்டிகள், 200 ஒரு நாள் போட்டியில் விளையாடியவர். 2003 முதல் 2004 வரை ஒரு ஆண்டு கேப்டனாக இருந்தவர் இவர் இப்போதுதான் சூதாட்டம் குறித்து வாய்திறந்திருக்கிறார்.

சேவக்கை வீழ்த்த திட்டம் தயார்

கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில், சேவக்கை வீழ்த்த தேவையான திட்டங்களுடன் தயாராக உள்ளோம்,'' என, கோல்கட்டா அணியின் பயிற்சியாளர் வாட்மோர் தெரிவித்துள்ளார்.

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் தலா 3 வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அதிக ரன்கள் எடுத்தும், கெய்ல் புயலில் சிக்கி வீழ்ந்தது. அடுத்து வரும் 28ம் தேதி நடக்கும் போட்டியில் டில்லி அணியை எதிர்கொள்கிறது.


இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் வாட்மோர் கூறியது:

இந்திய அணியின் சேவக், வெஸ்ட் இண்டீசின் கெய்ல், ஆஸ்திரேலியாவின் வார்னர் ஆகியோர் அபாயகரமான வீரர்கள். இதில் சேவக், வார்னரை துவக்க வீரர்களாக கொண்ட டில்லி அணிக்கு எதிரான போட்டி, எந்த அணிக்கும் எளிதாக இருக்காது.

இந்நிலையில் சேவக் அணியை, அடுத்த போட்டியில் எதிர்கொள்கிறோம். இதில் எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு போராடுவோம்.

இதில் சேவக்கை வீழ்த்த வியூகங்கள் வகுத்துள்ளோம். தவிர, டில்லி வீரர்கள் காம்பிர், பட்டியா போன்ற வீரர்கள் எங்கள் அணியில் இருப்பதால், சற்று கூடுதல் நம்பிக்கையுடன் உள்ளோம்.

பஞ்சாப், டில்லி அணிகள் மோதிய போட்டியில் 40 ஓவரில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

இன்று டில்லி, பெங்களூரு அணிகள் மோதும் போட்டியை கவனமாக பார்க்க உள்ளோம். ஏனெனில் இதன் மூலம், அடுத்து டில்லிக்கு எதிரான போட்டியில் எங்களது வெற்றிக்கு தேவையான திட்டங்கள் ஏதும் கிடைக்கலாம்.

இவ்வாறு வாட்மோர் தெரிவித்தார்.

ஹேப்பி பர்த்டே சச்சின்

இந்திய அணியின் சாதனை நாயகன் சச்சின் இன்னொரு மைல்கல்லை எட்டுகிறார். இன்று தனது 38வது பிறந்தநாளில் காலடி எடுத்து வைக்கிறார். உலக கோப்பை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இவருக்கு, ரசிகர்கள் மனதார வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் (38). கடந்த 1973, ஏப். 24ம் தேதி மும்பையில் பிறந்த இவர், பள்ளிப் பருவத்திலேயே கிரிக்கெட் போட்டிகளில் சாதித்தார். 1988ல் பள்ளி அளவிலான போட்டியில் காம்ப்ளியுடன் இணைந்து 664 ரன்கள் குவித்தார்.

தனது 16வது வயதில் இந்திய அணியில் அறிமுகமான இவர், எண்ணற்ற சாதனைகளை படைத்தார். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், அதிக சதம் அடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார்.

பகுதி நேர பந்துவீச்சாளராகவும் அசத்தி வருகிறார். சர்வதேச "டுவென்டி-20' போட்டிகளில் இருந்து விலகிய இவர் , ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.

கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் இவருக்கு இம்முறை உலக கோப்பை வென்றது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. இது குறித்து சச்சின் கூறுகையில்,""உலக கோப்பையை கையில் தாங்கிய அந்த தருணம், வாழ்நாளில் மறக்க முடியாது,'' என, தெரிவித்து இருந்தார்.


சதத்தில் சதம்:

தற்போதைய ஐ.பி.எல்., தொடரில், இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 4ல் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சச்சினின் அணி. இன்றைய போட்டியில் சச்சின் அணி, டெக்கானை சந்திக்கிறது. இதனால் சச்சின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவாரா என்று சரியாகத் தெரியவில்லை.

உலக கோப்பை கனவு நிறைவேறிய உற்சாகத்தில் உள்ள சச்சின், தனது 38 வது வயதில், மேலும் ஒரு சர்வதேச சதம் அடித்து, மொத்தம் 100 சதம் அடித்தவர் என்ற பெருமை பெறுவார் என்று நம்பப்படுகிறது.ராணுவ வீரர்களுடன்...
கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் "வீல்-சேரில்' அமர்ந்தவாறு புனேயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் "வீடியோ கான்பரன்சிங்' மூலம் உரையாடிய சச்சின் கூறுகையில்,""போட்டிகளில் இறுதி வரை போராட வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்,''என்றார்.

பின் வீரர்களுக்காக "வீடியோ கான்பிரன்சிங்' மூலமாகவே "கேக்' வெட்டி தனது பிறந்தநாளை முன்னதாகவே கொண்டாடினார்.

கிறிஸ் கெய்ல் "333'

ஐ.பி.எல்., போட்டிகளில் பெங்களூரு அணி சார்பில் விளையாடிவரும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், 333 ம் எண் கொண்ட "ஜெர்சி' அணிந்து பங்கேற்று வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி துவக்க வீரர் கிறிஸ் கெய்ல். கடந்த மூன்று தொடர்களில் கோல்கட்டா அணி சார்பில் பங்கேற்ற இவரை, நான்காவது ஐ.பி.எல்., தொடரில், எந்த அணி நிர்வாகமும் தேர்வு செய்யவில்லை.

தவிர, மோசமான பார்ம், உடற் தகுதியின்மையை காரணம் காட்டி, தற்போது சொந்த மண்ணில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இவர் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில், பெங்களூருவின் நான்சிற்கு பதிலாக கெய்ல் மீண்டும் வாய்ப்பு பெற்றார். முதல் போட்டியில், கோல்கட்டாவை எதிர்த்து களமிறங்கி, சதமடித்து அசத்தினார். இந்த போட்டியின் போது புதிய முறையில், அதாவது "333' என்ற எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடியுள்ளார்.

இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட் வீழ்த்திய இலங்கையின் முரளிதரன், அடுத்து நடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில், "800' என்ற எண் கொண்ட, ஜெர்சி அணிந்து விளையாடினார். அது போல டெஸ்ட் போட்டிகளில் தனது அதிகபட்ச ரன்னாக, கெய்ல் 333 ரன்கள் (எதிரணி-இலங்கை) எடுத்திருந்தார்.

இதை நினைவு படுத்தும் வகையில் நேற்று கெய்ல், "333' ம் எண் கொண்ட ஜெர்சியுடன் விளையாடி, சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இதுகுறித்து கெய்ல் கூறுகையில்,"" எனது வேலை மக்களை மகிழ்விப்பது தான். நான் அடித்த சிக்சர்கள், பவுண்டரிகளால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன். இதை சரியாக செய்யவில்லை என்றால், மக்கள் எனக்கு சாபம் கொடுத்துவிடுவார்கள்,'' என்றார்.

வேகத்தில் சாதிக்க தயார்

உலக கோப்பை தொடரின் போது காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார், காயத்திலிருந்து மீண்டு நான்காவது ஐ.பி.எல்., தொடருக்காக முழு அளவில் தயாராகியுள்ளார்.

இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார். உலககோப்பை அணியில் இடம் பெற்றிருந்த இவர், முழங்கை காயம் காரணமாக கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த இவர், தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ளார்.

காயத்தில் இருந்து மீண்ட இவர், பங்கேற்ற முதல் போட்டியின் முதல் பந்திலேயே, புனே அணியின் ஸ்மித்தை அவுட்டாக்கினார். அடுத்து சென்னைக்கு எதிரான போட்டியில் முதல் இரண்டு பந்தில், இரண்டு விக்கெட் வீழ்த்தி தனது திறமை நிரூபித்துள்ளார்.

இதுகுறித்து பிரவீண் குமார் அளித்த பேட்டி:


* உங்களது காயம் எப்படி உள்ளது?

எனது காயம் முற்றிலும் குணமடைந்து, போட்டிகளுக்கு முழுமையாக தயாராகியுள்ளேன். இதற்காக பெங்களூருவில் <உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அதிக நேரம் செலவு செய்துள்ளேன். இதனால் தற்போது 100 சதவீதம் மீண்டுள்ளேன்.


* உலக கோப்பை தொடரில் பங்கேற்காததால், ஐ.பி.எல்., தொடரில் அசத்துவீர்களா?

உலக கோப்பை தொடர் முடிந்துவிட்டது. இப்போது ஐ.பி.எல்., தொடர் வந்துள்ளது, அவ்வளவு தான். இதற்காக வேறு எதையும் நினைத்துக்கொண்டு, எனக்கு நானே நெருக்கடி கொடுத்துக் கொள்ள விரும்பவில்லை.


* உலக கோப்பை அணியில் இல்லாதது எந்தளவுக்கு வருத்தமாக இருந்தது?

காயங்கள் ஏற்படுவது விளையாட்டின் ஒரு பகுதி தான். இருந்தாலும், உலக கோப்பை தொடரில் விளையாட முடியாதது மிகுந்த ஏமாற்றம் தான். ஆனால் இதற்காக அதிகம் வருந்தவில்லை. இனி அடுத்து வரும் போட்டிகளில் கவனம் செலுத்துவேன்.


* இந்திய அணி உலககோப்பை வென்ற போது எப்படி உணர்ந்தீர்கள்?

தொடரில் பங்கேற்காதது, அணியில் நான் இல்லாமல் இருந்தது என பல ஏமாற்றம் இருந்தாலும், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி தந்தது.


* இதை எப்படி கொண்டாடினீர்கள்?

இந்திய அணி இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டது, நமது கிரிக்கெட்டுக்கு மிக முக்கியமான நாள். இதை மகிழ்ச்சியுடன் கொண்டாட இன்னும் அதிக நாட்கள் உள்ளது. அதாவது அடுத்த உலக கோப்பை தொடர் வரை நேரம் உள்ளது. இதனால், இப்போது இதைக் கொண்டாடுவது குறித்து இதுவரையிலும் முடிவு செய்யவில்லை.

வீரர்கள் வேண்டுகோளை ஏற்க முடியாது

உலக கோப்பை வென்றதால் ரூ. 5 கோடி பரிசு தரவேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேண்டுகோளை ஏற்க முடியாது,' என, பி.சி.சி.ஐ., தெரிவித்துள்ளது.

பத்தாவது உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 15 வீரர்களுக்கும், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ரூ. 1 கோடி பரிசு வழங்கியது. இது தங்களுக்கு போதாது என்று வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக தெரிகிறது.

இதுகுறித்து ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியில், பெயர் குறிப்பிட விரும்பாத முன்னணி வீரர் ஒருவர் கூறியது:

உலக கோப்பை தொடரால், பி.சி.சி.ஐ.,க்கு அதிக லாபம் கிடைத்தது. இதனால் வீரர்களுக்கு ரூ. 5 கோடி பரிசு தரவேண்டும். எங்களைப் போன்ற சீனியர் வீரர்களுக்கு எந்த பேராசையும் இல்லை. இந்த பணம் ஒரு பொருட்டல்ல. ஆனால் முனாப் படேல் போன்ற புதியதாக வந்த வீரர்கள் நிலை பரிதாபம் தான்.

இந்த வீரர்களால் பி.சி.சி.ஐ., அதிக லாபம் தான் கிடைத்துள்ளது. இத்தொடரில் ரூ. 1000 கோடிக்கும் மேல் லாபம் வந்துள்ளது. ஆனால், புதிய வீரர்களின் வாழ்க்கை தான் உறுதியில்லாமல் உள்ளது. ஏனெனில், அடுத்து அணியில் யார் இருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதேபோல பயிற்சியாளர்களுக்கும், அணி தேர்வாளர்களுக்கும் 50 லட்சம் ரூபாய் கொடுத்தது தவறு. கிறிஸ்டன் போன்றவர்களுக்கு அதிக தொகை தரவேண்டும்.

இவ்வாறு அந்த வீரர் தெரிவித்துள்ளார்.

ஆனால் வீரர்களின் இந்த கருத்தை ஏற்க, பி.சி.சி.ஐ., மறுத்துள்ளது. இதுகுறித்து அதன் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" ஒரு கோடி என்பது சிறிய தொகை அல்ல. வீரர்களுக்கு ஏற்கனவே போதிய அளவு பணம் வழங்கப்பட்டுவிட்டது. தவிர, பல மாநில அரசுகள் அவர்களுக்கு நிலம், வீடு மற்றும் பணம் வழங்கியுள்ளது. இதனால் வீரர்கள் வேண்டுகோளை ஏற்கமுடியாது,'' என்றார்.

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சந்தேகமே!

இந்த ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளிடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவது சந்தேகம்தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த ஆண்டில் இரு அணிகளும் சர்வதேச அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் போட்டியை நடத்தும் வாய்ப்பு குறைவு. இருப்பினும் இரு நாட்டு அரசுகளும் முயற்சி எடுக்கும் பட்சத்தில், பொதுவான இடத்தில் வைத்து போட்டியை நடத்துவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


ஜாகீர் அப்பாஸ்: இரு நாட்டு அரசுகளும் விரும்பினால் இரு நாடுகளிலும் அல்லாமல், பொதுவான இடத்தில் போட்டியை நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. இந்திய அரசு அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) கேட்டுக் கொண்டால், கண்டிப்பாக அதற்கான நடவடிக்கையை கிரிக்கெட் வாரியம் எடுக்கும்.


இரு நாடுகளுக்கிடையில் மீண்டும் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டியை நடத்துவது முக்கியமானது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை நடத்துவது சர்வதேச கிரிக்கெட்டுக்கும் முக்கியமானது.


இவ்விரு அணிகளுக்கு இடையில் போட்டியை நடத்துவதன் மூலம் இரு நாட்டு கிரிக்கெட் வாரியம், வீரர்கள் ஆகியோருக்கு அதிக அளவில் நிதியும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.


ஜாவித் மியான்தத்: சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணையை நான் இன்னும் பார்க்கவில்லை. பாகிஸ்தான் அணிக்கு பெரிய அளவில் போட்டிகள் இருக்காது என்று நினைக்கிறேன். இருப்பினும் இந்திய அணிக்கு நிறைய போட்டிகள் இருக்கும். எனவே அடுத்த ஆண்டில் இவ்விரு அணிகளுக்கு இடையே போட்டியை நடத்த பாகிஸ்தான் வாரியம் இப்போதிலிருந்தே திட்டமிட வேண்டும் என்று
கூறியுள்ளார்.


ரஷீத் லத்திப்: போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்பதை ஆதரிக்க முடியாது. அவ்வாறு நடத்தும்போது அந்தப் போட்டி அதன் அழகையும், முக்கியத்துவத்தையும் இழந்துவிடும். இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடக்கும்போது அதற்கு கிடைக்கும் முக்கியத்துவமே வித்தியாசமானது. ஏராளமானோர் போட்டியைக் கண்டுகளிக்க வருவர். தேவைப்பட்டால் இந்தியாவிலேயே இந்தப் போட்டியை நடத்தலாம் என்று கூறியுள்ளார்.


2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர். இதன்பிறகு இவ்விரு அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் சமீபத்தில் மொஹாலியில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை காண பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானி வந்து சென்றார். இதன்பிறகு இவ்விரு நாடுகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை தொடங்க பாகிஸ்தான் அரசும், கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்திய அரசும் அதற்கு இசைவு தெரிவித்திருந்தது.


இருப்பினும் இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. இதுதொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்தியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டோம் என சமீபத்தில் பிசிசிஐ செயலர் சீனிவாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

இந்த ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.


அதனால் இந்த ஆண்டு இவ்விரு அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெறக் கூடும் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன்பிறகு பாகிஸ்தானுடன், இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில்லை என முடிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சந்தித்தன. இந்த ஆட்டத்தைக் காண வருமாறு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்று கிலானி மொஹாலி வந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைக் கண்டுகளித்தார்.


இந்த நிலையில் உலகக் கோப்பையில் விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் கிலானி திங்கள்கிழமை விருந்தளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கிலானி, இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புகிறோம். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் இதில் முடிவு எட்டப்படவில்லை என்றார்.


இதுதொடர்பாக "தி நியூஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுபான் அஹமது கூறியிருப்பது:


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அட்டவணைப்படி தொடர்ந்து போட்டிகள் உள்ளது. ஆனாலும், அதற்கிடையில் இந்த ஆண்டு இவ்விரு அணிகளுக்கு இடையில் மூன்று ஒருநாள் ஆட்டங்களை நடத்த வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறோம்.

இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் இதற்கு முயற்சி செய்யும் பட்சத்தில் இந்த ஆண்டில் விளையாட வாய்ப்புள்ளது. போட்டியை நடத்துவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது என்றார்.

15 சிக்ஸர்கள் வாட்சன் சாதனை

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 15 சிக்ஸர்களை விளாசி ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் உலக சாதனை படைத்தார்.

இதற்கு முன் மேற்கிந்தியத் தீவுகளின் சேவியர் மார்ஷல் அதிகபட்சமாக ஒருநாள் ஆட்டத்தில் 12 சிக்ஸர்கள் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அவர் கனடாவுக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்தார்.


மார்ஷலின் சாதனையை மிர்பூரில் திங்கள்கிழமை வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வாட்சன் முறியடித்தார். இது தவிர ஒருநாள் கிரிக்கெட்டில் தனிப்பட்ட முறையில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையும் வாட்சன் படைத்தார். இதற்கு முன் மேத்யூ ஹேடன் நியூசிலாந்துக்கு எதிராக 2007-ம் ஆண்டில் 181 ரன்கள் எடுத்ததே ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.


ஒருநாள் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் வாட்சன் 8-வது இடத்தில் உள்ளார். சச்சின் 200 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

சாதனை ஆட்டம்!


இந்த ஒருநாள் ஆட்டத்தை வாட்சனின் சாதனை ஆட்டம் என்று கூறுவது கூடப் பொருந்தும். ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் என்ற சாதனையுடன் இந்த ஒரே ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை தனதாக்கியுள்ளார் வாட்சன்.


* ஆஸ்திரேலிய அணியில் ஒருநாள் ஆட்டத்தில் அதிபட்ச ரன் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். வேகமாக சதமடித்த ஆஸ்திரேலிய வீரர்களில் 3-வது இடத்தைப் பிடித்தார்.


* வாட்சன் குவித்த 185 ரன்களில் 150 ரன்கள் சிக்ஸர், பவுண்டரிகள் மூலமே எடுக்கப்பட்டன. இதுவும் ஒரு சாதனைதான். இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ் ஒருநாள் ஆட்டத்தில் 126 ரன்களை சிக்ஸர், பவுண்டரிகள் மூலம் எடுத்திருந்தார்.


* இரண்டாவதாக பேட் செய்த அணியில் அதிகபட்ச ரன் (185*) எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னர் தோனி, இலங்கைக்கு எதிராக 183* ரன்கள் எடுத்திருந்ததே இரண்டாவதாக பேட் செய்த அணியின் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.


* வாட்சன் இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார். இதில் 5 சதங்கள் இரண்டாவதாக பேட் செய்த போது எடுக்கப்பட்டவை. முதல் இன்னிங்ஸில் வாட்சனின் சராசரி 32.81, இரண்டாவது இன்னிங்ஸில் அவரது சராசரி 64.30.


* இந்த ஆட்டத்தில் வாட்சன் தான் எதிர்கொண்ட 3.2 பந்துகளில் (சராசரியாக) ஒன்றை பவுண்டரிக்கோ அல்லது சிக்ஸருக்கோ விரட்டியுள்ளார். இதற்கு முன் சேவாக் இதில் சாதனை படைத்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் 70 பந்துகளில் சதமடித்த அவர், சராசரியாக 3.5 பந்துகளில் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸரை எடுத்துள்ளார்.

சச்சின் ஆட்டம் வியப்பளிக்கிறது

வயது கூடிக் கொண்டே சென்றாலும், கடந்த இரு ஆண்டுகளாக சச்சின் சிறப்பாக ஆடி வருவதை நம்பமுடியவில்லை என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார்.

லண்டனில் இந்திய பத்திரிகையாளர்களிடம் அவர் இதுகுறித்து வியாழக்கிழமை கூறியது:

வயது கூடிக்கொண்ட சென்றாலும்கூட, சச்சின் சாம்பியனைப் போன்றே விளையாடி வருகிறார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு எனது பாராட்டுகள். இந்திய அணி உலகின் எந்த அணியையையும் வெல்லக்கூடிய திறமைபடைத்த அணி.


இருப்பினும் அவர்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தி விளையாடுவதில்லை. மற்ற அணிகளை விட இந்திய அணி சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை என்றார்.


இந்திய அணியின் வெற்றிக்கான ரகசியம் குறித்து பேசிய கபில்தேவ், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, உலகக் கோப்பை என பார்க்கும்போது நிச்சயம் ஒவ்வொரு விளையாடிலும் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது. இப்போது இந்திய அணி உலகின் நம்பர் ஒன் அணியாக உள்ளது. வீரர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தும் போது நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்கள் என்றார்.


உலகக் கோப்பை இறுதி ஆட்டம் குறித்துப் பேசிய கபில்தேவ், பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தது. தோனி தேவையான நேரத்தில் சிறப்பாக ஆடினார். வீரேந்திர சேவாக் மிக அபாயகரமான வீரர். அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். ஆட்டத்தை எளிதாக எதிர்கொள்ளக்கூடியவர் என்றார்.


இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து கவலை தெரிவித்த கபில், 1983-ல் கோப்பையை வென்ற அணியைவிட இப்போதைய அணியே சிறந்த அணி. அப்போதைய வீரர்கள் நிறைய ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். இப்போதைய வீரர்கள் மிகுந்த அனுபவமுள்ளவர்கள். அதனால் இப்போதைய அணி சிறந்த அணி என்றார்.


ஐபிஎல் குறித்துப் பேசிய கபில், ஐபிஎல் போட்டியால் எல்லா வீரர்களும் பயனடைந்துள்ளனர். அதில் சாதகத்தைப் போன்று பாதகமும் உள்ளது. தொடர்ந்து விளையாடுவதால் வீரர்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரஞ்சி வீரர்களுக்கும், இளம் வீரர்களுக்கும் பணம் வழங்க வேண்டும்.


விளையாட்டை வளர்க்க வேண்டுமென்றால் பள்ளிகள் அளவிலேயே அதற்கான பணிகளை
மேற்கொள்ள வேண்டும். வீரர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் 10 சச்சின்களையோ, தோனிகளையோ உருவாக்க முடியும்.


எங்கள் காலத்தில் கிரிக்கெட்டில் காவஸ்கர்தான் கடவுள் போன்றவர். இப்போது சச்சின் கடவுள் போன்றவர். இனிமேல் அவரைப் போன்று ஒரு வீரர் கிடைக்காவிட்டால் அது வருத்தத்துக்குரியது என்றார்.


கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்படுவது குறித்துகேட்டபோது, சட்டம் என்பது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒன்றுதான். எனவே எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

பைனலுக்கு செல்வது எப்படி?

நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும், தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. இதன் பின் அரையிறுதி போட்டியில் பங்கேற்காமல், பைனலுக்கு செல்வது எப்படி என்ற விபரத்தை இங்கே காணலாம்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 2010 தொடரில் இருந்த 8 அணிகளின் எண்ணிக்கையுடன் கூடுதலாக, இரண்டு அணிகள் இம்முறை பங்கேற்கின்றன. இதன்படி கொச்சி மற்றும் புனே அணிகளை சேர்த்து, மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்த அணிகள் அனைத்தும், மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும் பட்சத்தில், போட்டிகளின் எண்ணிக்கை 94 ஆக உயரும். இதைக்குறைப்பதற்காக, இம்முறை 10 அணிகளும், "ஏ', "பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், ஒன்றுக்கொன்று இரண்டு முறை மோதும்.

தவிர, ஏற்கனவே தேர்வு செய்ததன் அடிப்படையில், அடுத்த பிரிவில் உள்ள ஏதாவது ஒரு அணியுடன் இரண்டு போட்டியும், மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு போட்டியிலும் பங்கேற்கும்.

இதனால், கடந்த முறை போலவே, ஒரு அணி மொத்தம் 14 போட்டிகளில் பங்கேற்கும். இதில் வழக்கம் போல் ஒவ்வொரு அணியும் சொந்த ஊரில் 7 போட்டிகளிலும்,வெளியூரில் 7 போட்டிகளிலும் விளையாட உள்ளன. மொத்தம் 74 போட்டிகள் நடக்கும்.


சென்னை போட்டி:

உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொச்சி, புனே வாரியர்ஸ், கோல்கட்டா, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய 5 அணிகளுக்கு எதிராக உள்ளூரிலும், வெளியூரில் தலா 2 போட்டிகளில் விளையாடும். தவிர, டில்லி, டெக்கான் அணிகளுடன் உள்ளூரிலும், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக வெளியூரிலும் தலா ஒரு போட்டியில் விளையாட உள்ளது.


"பிளே ஆப்':

லீக் போட்டிகள் முடிந்தவுடன், கடந்த முறை போன்று அரையிறுதி போட்டிகள் இம்முறை கிடையாது. ஏனெனில் 10 அணிகளில் முதலிடம் பெற்றும், அரையிறுதியில் தோற்கும் பட்சத்தில் தொடரில் இருந்து வெளியேற நேரிடும். இதை தவிர்ப்பதற்காக இம்முறை "பிளே ஆப்' முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


பைனல் எப்படி?

இதன்படி, மொத்தமுள்ள 10 அணிகளில் "டாப்-4' இடம் பெறும் அணிகள், இந்த சுற்றில் பங்கேற்கும். இதன் விபரம்:

* முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள், மோதும் போட்டியில் (மே 24) வெற்றி பெறும் அணி, நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.

* மூன்று, நான்காவது இடத்தை பெறும், அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி, முந்தைய போட்டியில் (மே 24) தோல்வியடைந்த அணியுடன் மோத வேண்டும்.

* இதில் வெற்றி பெறும் அணி, முதலில் பைனலுக்கு முன்னேறிய அணியுடன், வரும் மே 28ம் தேதி சென்னையில் நடக்கும் பைனலில் மோதும்.

பாரத ரத்னா சச்சின்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு இன்னும் "பாரத ரத்னா' விருது வழங்கப்படவில்லை. இருப்பினும் ஏற்கனவே இவர், இந்தியர்களின் "பாரத ரத்னா'வாக விளங்குகிறார்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் புகழாரம் சூட்டியுள்ளார்.

பத்தாவது உலக கோப்பை தொடரில், தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதன்மூலம் ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்ற சச்சினின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது.

இம்முறை பேட்டிங்கில் அசத்திய இவர், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தார். இவருக்கு, நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருது இந்த ஆண்டு வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


இதுகுறித்து இந்திய வீரர் டிராவிட் கூறியதாவது:

கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு, இதுவரை "பாரத ரத்னா' விருது வழங்கப்படவில்லை. "பாரத ரத்னா' விருது பெற என்ன தகுதி வேண்டும் என்பது எனக்கு தெரியாது. இருப்பினும், ஏற்கனவே இவர் இந்தியர்களின் உள்ளத்தில் "பாரத் ரத்னா'வாக திகழ்கிறார்.

கடந்த மூன்று ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடினேன். இம்முறை ராஜஸ்தான் அணிக்காக விளையாட உள்ளேன். ஏற்கனவே ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடி இருப்பதால், எந்த அணிக்காக விளையாடுகிறோம் என்பது பற்றி கவலை இல்லை.

தென் ஆப்ரிக்க தொடருக்கு பின், ஐ.பி.எல்., தொடருக்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். எனது உடற்தகுதியில் முழுகவனம் செலுத்தி வருகிறேன். இம்முறை, ஐ.பி.எல்., தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

போலி உலக கோப்பையா? ஐ.சி.சி., விளக்கம்

உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, வழங்கப்பட்ட கோப்பை உண்மையானது தான். இது போலி என்ற பேச்சிற்கே இடமில்லை,' என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), தெரிவித்துள்ளது.

பத்தாவது உலக கோப்பை தொடரில் இந்திய அணி உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. பைனலில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்டது உண்மையான கோப்பை அல்ல என, செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, இலங்கை, நியூசிலாந்து அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியின் போது, கொழும்புவில் ரசிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது தான் உண்மையான கோப்பை என்றும், மும்பை கொண்டு வரும் போது, விமான நிலையத்தில் சுங்கவரித்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டது என்பதும் தகவல் வெளியாகி உள்ளன.


பிடிபட்டது எது?

கோப்பையின் மதிப்பில் 35 சதவீதம் (ரூ. 22 லட்சம்) வரி செலுத்தினால் தான், கோப்பையை திருப்பி தருவோம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தினர். இதை ஐ.சி.சி., செலுத்தாததால் கோப்பை அவர்களிடமே இருந்தது. பைனலில் இந்திய அணி வெற்றி பெற்றதும், அங்கிருந்த மாதிரி உலக கோப்பையைத் தான், ஐ.சி.சி., தலைவர் சரத்பவார், இந்திய அணிக்கு பரிசாக வழங்கினார்.

36 ஆண்டுகால உலக கோப்பை வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது தான் முதன்முறை என்றும் தகவல்கள் பரவின. இதற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஐ.சி.சி., மறுப்பு:

இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கை:

மீடியாக்கள் தான் வேண்டுமென்றே, தேவையற்ற செய்திகளை வெளியிடுகின்றன. 2011ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்ட கோப்பை உண்மையானது. அது மாதிரி (டூப்ளிகேட்) என்ற பேச்சிற்கே இடமில்லை. இக்கோப்பையில் பத்தாவது உலக கோப்பை தொடரின் லோகோ இடம் பெற்றுள்ளது.

தொடரை பிரபலப்படுத்துவதற்காக பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட கோப்பை தான் சுங்கத்துறையிடம் பிடிபட்டது. இக்கோப்பையில் தொடரின் லோகோவை விட, சிறிய ஐ.சி.சி., லோகோ இடம் பெற்றிருக்கும். சுங்கத்துறையிடம் பிடிபட்ட கோப்பையை, மீண்டும் துபாய் கொண்டு வர, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு ஐ.சி.சி., தெரிவித்துள்ளது.

மும்பை சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" எங்களிடம் இருக்கும் கோப்பை உண்மையானதா, போலியானதா என தெரியாது. 35 சதவீத வரியை செலுத்தினால் திருப்பிக்கொடுத்து விடுவோம்,'' என்றார்.

இந்திய ஹீரோக்கள் பெற்றது ஒரிஜினல் உலகக்கோப்பையா?

28 ஆண்டு கால தவத்திற்கு பின் 120 கோடி மக்கள் கனவு ஏப்ரல் 2ம் தேதியன்று நனவானது. இலங்கையை வீழ்த்தி இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றியது.


தங்கள் வெற்றிக் களிப்பை, கைகளில் உலகக்கோப்பையை ஏந்தியபடி மைதானத்தை சுற்றி வந்து கொண்டாடினர் இந்திய வீரர்கள். ஆனால் முதலுக்கே மோசம் என்பது போல் தற்போது ஒரு பூதாகர சர்ச்சை கிளம்பியுள்ளது. அது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உலகக்கோப்பை ஒரிஜினல் தானா என்பது.பிரச்னை :


உலககோப்பையை இந்தியா கொண்டு வர முறையான வரி செலுத்தாதால் உலககோப்பையை மும்பை விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் , இறுதிப் போட்டியை வென்று வெற்றி வாகை சூடிய இந்திய அணிக்கு வழங்கப்பட்டது அதன் மாதிரி தான் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.வெளிநாட்டிலிருந்து எந்தப் பொருளை இந்தியாவுக்கு கொண்டு வந்தாலும், அதன் உண்மையான மதிப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை சுங்க வரியாக கட்ட வேண்டும். ஆனால் ஐசிசி உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்தபோது வரியாக செலுத்தப்பட வேண்டிய ரூ. 22 லட்சம் கட்டப்படவில்லை.

இதையடுத்து

விமான நிலையத்தில் வைத்து மும்பை சுங்கத்துறையினர் கோப்பையைக் கைப்பற்றி விட்டனர் என்பது புகார். தற்போது இந்திய வீரர்களிடம் இருப்பது நகல் கோப்பை என்றும், ஒரிஜினல் கோப்பை இன்னும் சுங்கத்துறை வசம்தான் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் நிலவுகின்றன.ஐ.சி.சி., மறுப்பு :


இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஐ.சி.சி., இறுதிப் போட்டியில் வெற்றிவாகை சூடிய இந்திய அணிக்கு வழங்கப்பட்டது உண்மையான உலக கோப்பை தான் என தெரிவித்துள்ளது.


கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் இருப்பது, உலககோப்பை போட்டியை பிரபலப்படுத்த பயன்படுத்தப்பட்ட மாதிரி கோப்பை என்றும் தெரிவித்துள்ளது.

28 ஆண்டுகளுக்குப் பின்...

கேப்டன் தோனி இமாலய சிக்சர் அடிக்க...இந்திய அணி உலக கோப்பையை "சூப்பராக' கைப்பற்றி, வரலாறு படைத்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தோனி (91*) மற்றும் காம்பிரின் (97) அபார ஆட்டம், கோப்பை கனவுக்கு கைகொடுத்தது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடந்தது. நேற்று மும்பையில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.


ஸ்ரீசாந்த் வாய்ப்பு:

இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட முரளிதரன் இடம் பெற்றார். இந்திய அணியில் காயமடைந்த நெஹ்ராவுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா,"பேட்டிங்' தேர்வு செய்தார்.


ஜாகிர் துல்லியம்:

இந்திய "வேகங்கள்' துவக்கத்தில் போட்டுத் தாக்க , இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. ஜாகிர் வீசிய முதல் இரண்டு ஓவர்களும் "மெய்டனாக' அமைந்தன. மறுபக்கம் ஸ்ரீசாந்தும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.


ஸ்ரீசாந்த் ஏமாற்றம்:

"ரன் ரேட்' மிகவும் குறைய அதிரடிக்கு மாறினார் தில்ஷன். ஸ்ரீசாந்த் வீசிய போட்டியின் 6வது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். படுமந்தமாக ஆடிய தரங்கா 2 ரன்களுக்கு(20 பந்து), ஜாகிர் பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த சங்ககராவும், ஸ்ரீசாந்த் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஹர்பஜன் சுழலில் தில்ஷன்(33) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அப்போது இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து தவித்தது.


யுவராஜ் அபாரம்:

பின் சங்ககரா, ஜெயவர்தனா இணைந்து பொறுப்பாக ஆடினர். அனுபவ வீரர்களான இவர்கள் துடிப்பாக ரன் சேர்த்தனர். இந்த நேரத்தில் யுவராஜ் சிங் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் முதலில் சங்ககரா(48) சிக்கினார். அடுத்து சமரவீரா(21), "ரிவியு' முறையில் வெளியேறினார். ஜாகிர் வேகத்தில் கபுகேதரா(1) காலியானார்.


இரண்டாவது சதம்:

அடுத்து வந்த குலசேகரா "கம்பெனி' கொடுக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் ஜெயவர்தனா. இவர்கள் "பேட்டிங் பவர்பிளேயை' பயன்படுத்தி அதிரடியாக ரன் சேர்த்தனர். ஜாகிர் வீசிய போட்டியின் 48வது ஓவரில் குலசேகரா ஒரு இமாலய சிக்சர்(87 மீட்டர் தூரம்) அடித்தார். மறுபக்கம் ஒரு பவுண்டரி அடித்த ஜெயவர்தனா, இத்தொடரில் தனது இரண்டாவது சதம் அடித்தார்.

இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 14வது சதம். குலசேகரா (32) ரன் அவுட்டானார். ஜாகிர் வீசிய போட்டியின் 50வது ஓவரில் பெரேரா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, ஒட்டுமொத்தமாக 18 ரன்கள் கிடைத்தன. கடைசி 5 ஓவரில் மட்டும் 63 ரன்கள் எடுக்கப்பட, இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்öட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனா(103), பெரேரா(22) அவுட்டாகாமல் இருந்தனர்.


மலிங்கா மிரட்டல்:

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே "ஷாக்' கொடுத்தார் மலிங்கா. இவரது இரண்டாவது பந்தில் சேவக் "டக்' அவுட்டானார். இது தொடர்பாக "ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. குலசேகரா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த சச்சின் நம்பிக்கை தந்தார்.

இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த மலிங்கா, சச்சினையும்(18) அவுட்டாக்கி பேரதிர்ச்சி கொடுத்தார். பிறந்த மண்ணில் 100வது சதம் காண்பார் என எதிர்பார்த்த நிலையில், உள்ளூர் ரசிகர்களின் நெஞ்சங்களை தகர்த்து, வெளியேறினார் சச்சின்.


காம்பிர் அதிர்ஷ்டம்:

பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து கலக்கலாக ஆடினர். காம்பிர் பக்கம் அதிர்ஷ்டம் அதிகமாகவே இருந்தது. இவர் 30 ரன்களில் இருந்த போது "கேட்ச்' வாய்ப்பை குலசேகரா நழுவிட்டார். பின் "ரன் அவுட்' வாய்ப்பிலும் தப்பிய இவர், ஒரு நாள் போட்டிகளில் தனது 25வது அரைசதம் கடந்தார். தில்ஷன் பந்தில் அவரது சூப்பர் "கேட்ச்சில்' விராத் கோஹ்லி(35) அவுட்டானார்.


வெற்றி கேப்டன்:

அடுத்து வந்த தோனி ஒத்துழைப்பு தர, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் காம்பிர். முதுகு வலியை பொருட்படுத்தாது "கேப்டன் இன்னிங்ஸ்' விளையாடிய தோனி, முரளிதரன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, ஒரு நாள் போட்டிகளில் தனது 38வது அரைசதம் கடந்தார். இந்த நேரத்தில் பெரேரா பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பர்(97) பரிதாபமாக போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.


இரண்டாவது கோப்பை:

தொடர்ந்து பெரேரா பந்தை சிக்சருக்கு விரட்டிய தோனி, இந்திய ரசிகர்களை குஷிப்படுத் தினார். "பேட்டிங் பவர்பிளேயில்' யுவராஜும் பவுண்டரிகளாக விளாசி, வெற்றியை உறுதி செய்தார். குலசேகரா பந்தில் தோனி ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. தோனி(91), யுவராஜ்(21) அவுட்டாகாமல் இருந்தனர்.


முதல்முறையாக அசத்தல் :

சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை

பைனல் குறித்து வெளியாகும் பரபரப்பான தகவல்களில் இருந்து, சக வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான போட்டியில், சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

பத்தாவது உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடக்கும் பைனலில் ஆசிய அணிகளான இந்தியா, இலங்கை மோதுகின்றன.


இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:

உலக கோப்பை அட்டவணை, உண்மையில் நமக்கு பெரும் உதவியாக இருந்தது. கிடைக்கும் ஓய்வை பயன்படுத்தி, கொஞ்சம், கொஞ்சமாக இழந்த பார்மை மீட்டு வந்தனர். இத்தொடரின் சில போட்டிகளில், கடைசிநேரத்தில் தான் வெற்றி பெற்றோம். இது இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பாக அமைய, அரையிறுதிக்கு முன்னேற முடிந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டி நடந்த மொகாலி ஆடுகளம், எப்போதும் வேகத்துக்கு தான் ஒத்துழைக்கும். இதனால் தான் அஷ்வினை சேர்க்காமல் ஆஷிஸ் நெஹ்ராவை களமிறக்கினேன். ஆனால் எனது கணிப்பு தவறாகிவிட்டது. இருப்பினும், எதிர்பார்ப்புக்கு மாறாக சுழலுக்கு நன்கு உதவ, ஹர்பஜனும், யுவராஜ் சிங்கும் அசத்தி, நெருக்கடி கொடுத்தனர்.

தற்போது உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியுள்ளோம். நாம் கோப்பை வெல்லவேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகின்றனர். இந்நிலையில் தேசத்துக்காக போட்டிகளில் பங்கேற்கும் போது, எந்த ஒரு வீரரையும் யாரும் ஊக்குவிக்க வேண்டும் என்ற தேவையில்லை.

சரியான நேரத்தில் எழுச்சி பெறுவோம் என இத்தொடரின் துவக்கத்தில் கூறினேன். அதுபோல ஒவ்வொரு போட்டியிலும் போராடி வென்று வந்துள்ளோம். இது அவ்வளவு எளிதானதல்ல. தவிர, இலக்குகளை "சேஸ்' செய்வது உட்பட, அனைத்து பிரிவுகளிலும் அணியின் திறமையை சோதித்து பார்த்துவிட்டோம். தற்போது பைனலுக்கு தயாராகியுள்ளோம்.

பைனல் போட்டி குறித்து பல்வேறு வகையான கருத்துக்கள் நம்மைச் சுற்றி உலவுகின்றன. இந்த செய்திகளில் நமது கவனத்தை சிதறச்செய்து விடக்கூடாது. ஏனெனில் எல்லோரும் தொழில் ரீதியிலான கிரிக்கெட் வீரர்கள், அதனால் பைனலில் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும்.

இத்தொடரில் துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தால் அசத்தி வருபவர்கள் இலங்கை அணியினர். இவர்களுக்கு எதிரான பைனலில், நம்மால் முடிந்த அளவுக்கு திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான், இலங்கை அணியை வீழ்த்த முடியும்.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.