வெடிகுண்டு பீதியில் இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள் தங்கிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக லண்டன் போலீசார் சோதனை நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஒரே ஒரு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. "டுவென்டி-20' போட்டி வரும் 31ம் தேதி மான்செஸ்டர் நகரில் நடக்கிறது.

இதற்கு முன்னதாக, கடந்த 26ம் தேதி கென்ட் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடியது. இப்போட்டியின் போது, இந்திய வீரர்களின் "டிரஸ்சிங் ரூமில்' சந்தேகத்துக்கு இடமான பொருள் இருப்பதாக கூறப்பட்டது.

இது வெடிகுண்டாக இருக்கும் என லண்டன் போலீசார் சந்தேகித்தனர். உடனே இந்திய வீரர்களை மைதானத்துக்குள் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். பின் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இறுதியில் வெடிகுண்டு புரளி என்பது தெரிய வந்தது.


பயிற்சி ஆட்டம்:

இதற்கிடையே லீசெஸ்டர் நகரில் இன்று நடக்கவுள்ள "டுவென்டி-20' பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, லீசெஸ்டர்ஷையர் அணியை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியின் போது "மீடியாவை' அனுமதிக்கவில்லை. இதற்கு கென்ட் அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட வெடிகுண்டு பீதியே காரணம் என தெரிகிறது.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ""வெடிகுண்டு பீதி காரணமாகவே மைதானத்திற்குள் "மீடியாவை' அனுமதிக்க வேண்டாம் என, இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் கேட்டுக் கொண்டார்,'' என்றார்.

இந்திய அணிக்கு திரில் வெற்றி

கென்ட் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி, 78 ரன்கள் விளாசினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஒரு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் வகையில், மூன்று பயிற்சி போட்டிகளில் (50 ஓவர் போட்டி 2, ஒரு "டுவென்டி-20') விளையாடுகிறது.

சசக்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று முன் தினம் நடந்த இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் (50 ஓவர்) கென்ட் அணியை சந்தித்தது.

"டாஸ்' வென்ற கென்ட் கேப்டன் ஜார்ஸ்வெல்டு, பீல்டிங் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விளையாடிய சச்சினுக்குப் பதில், இம்முறை டிராவிட் இடம் பெற்றார். மழை காரணமாக போட்டி 20 ஓவர்களாக மாற்றப்பட்டது.


டிராவிட் ஏமாற்றம்:

இந்திய அணிக்கு பார்த்திவ் படேல், டிராவிட் இணைந்து துவக்கம் தந்தனர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த பார்த்திவ், இம்முறை ஒரு ரன்னில் அவுட்டானார். டிராவிட் 15 ரன்கள் எடுத்தார்.


கோஹ்லி அதிரடி:

இதன் பின் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 30 ரன்னுக்கு திரும்பினார். 53 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 78 ரன்கள் அடித்து அவுட்டானார் விராத் கோஹ்லி.


ரெய்னா சொதப்பல்:

தோனி(0), ரெய்னாவின் (4) மோசமான "பார்ம்' தொடர்ந்தது. கடைசி நேரத்தில் தமிழகத்தின் அஷ்வின் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. அஷ்வின் (23), அமித் மிஸ்ரா (5) அவுட்டாகாமல் இருந்தனர்.


டென்லி சதம்:

அடுத்து களமிறங்கிய கென்ட் அணியின் துவக்க வீரர் டேனியல் பெல் (11), ஆர்.பி.சிங் வேகத்தில் போல்டானார். ஜார்ஸ்வெல்டு 17 ரன்கள் எடுத்தார். மற்றொரு துவக்க வீரர் டென்லி 67 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். இவர் 100 ரன்களுக்கு (3 சிக்சர், 8 பவுண்டரி) ஆர்.பி.சிங் பந்தில் போல்டாக, திருப்புமுனை ஏற்பட்டது.

கென்ட் அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டன. முதல் நான்கு பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. கடைசி இரு பந்தில், 6 ரன்கள் தேவை என்ற நிலையில் நார்த்தீஸ்ட் (2) ரன் அவுட்டானார். அடுத்த பந்தில் ஸ்டுவன்சும் (17) போல்டாக, கென்ட் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து, தோல்வி அடைந்தது.

நாளை நடக்கும் "டுவென்டி-20' பயிற்சி போட்டியில் இந்தியா, லீசெஸ்டர்ஷையர் அணிகள் மோதுகின்றன.

ஐ.சி.சி., அணியில் சச்சின்

இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி., டெஸ்ட் அணியில், இந்தியா சார்பில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களை கவுரவிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஆண்டுதோரும், சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்யும்.

இந்த ஆண்டுக்கான அணியை, முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிளைவ் லாய்டு தலைமையிலான குழு தேர்வு செய்தது. இக்குழுவில் பால் ஆடம்ஸ் (தென் ஆப்ரிக்கா), ஜாகிர் அபாஸ் (பாகிஸ்தான்), டேனி மாரிசன் (நியூசிலாந்து), மைக் கேட்டிங் (இங்கிலாந்து) உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

மொத்தம் 12 பேர் கொண்ட இந்த அணியில், அதிகபட்சமாக இங்கிலாந்து சார்பில் ஐந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்ரிக்கா (4), இந்தியா (2 ), இலங்கை (1) சார்பில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.


மூன்றாவது முறை:

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கடந்த 2009, 2010ம் ஆண்டுகளிலும் இடம் பெற்றுள்ளார். இவரை தவிர, அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், 12வது வீரராக இடம் பெற்றுள்ளார்.


நான்காவது முறை:

தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டைன், நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இவர், கடந்த 2008, 2009, 2010ம் ஆண்டுகளில் இடம் பெற்றிருந்தார். இவரை தவிர, ஹசிம் ஆம்லா, காலிஸ், டிவிலியர்ஸ் உள்ளிட்ட தென் ஆப்ரிக்க வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


ஐந்து பேர்:

இங்கிலாந்து சார்பில் ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அலெஸ்டர் குக், ஜோனாதன் டிராட், ஸ்டூவர்ட் பிராட், சுவான், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இலங்கை சார்பில் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக சங்ககரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் கிளைவ் லாய்டு கூறியதாவது: இந்த ஆண்டு டெஸ்ட் அணியை தேர்வு செய்ய மிகவும் கடினமாக இருந்தது. இதற்காக கடந்த 12 மாதங்களில் வீரர்களின் செயல்பாட்டை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

முந்தைய சாதனைகளை தவிர்த்து, வீரர்கள் விளையாடிய எதிரணி, மைதானத்தின் தன்மை, போட்டியின் தன்மை உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு கிளைவ் லாய்டு கூறினார்.

ஐ.சி.சி., டெஸ்ட் அணி: அலெஸ்டர் குக் (இங்கிலாந்து), ஹசிம் ஆம்லா (தென் ஆப்ரிக்கா), ஜோனாதன் டிராட் (இங்கிலாந்து), சச்சின் (இந்தியா), சங்ககரா (இலங்கை), டிவிலியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), காலிஸ் (தென் ஆப்ரிக்கா), ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து), சுவான் (இங்கிலாந்து), டேல் ஸ்டைன் (தென் ஆப்ரிக்கா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஜாகிர் கான் (இந்தியா, 12வது வீரர்).

இந்திய அணிக்கு முதல் வெற்றி

இங்கிலாந்து தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த பயிற்சி போட்டியில் சசக்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் போட்டித் தொடர் வரும் செப். 3ம் தேதி துவங்குகிறது.

இதற்கு முன்னதாக நேற்று இந்தியா, சசக்ஸ் அணிகள் இடையே பயிற்சி போட்டி(மழையால் 45 ஓவர்) நடந்தது. முதலில் பேட் செய்த சசக்ஸ் அணி 45 ஓவரில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு "டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி 45 ஓவரில் 235 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது.

பார்த்திவ் படேல்(55) நல்ல அடித்தளம் அமைத்தார். சச்சின்(21), ரெய்னா(12) சோபிக்கவில்லை.

அபாரமாக ஆடிய இளம் வீரர்களான விராத் கோஹ்லி(71), ரோகித் சர்மா(61*) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர்.

இந்திய அணி 40.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்து, "டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி வெற்றி பெற்றது.

சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்த இந்திய அணி, தற்போது முதல் வெற்றியை பெற்றுள்ளது.

எதிர்ப்பின்றி சரணடைந்த இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பெரிய அளவில், எவ்வித எதிர்ப்பும் இன்றி சரணடைந்தது வியப்பு தருகிறது,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதில் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின், அமித் மிஸ்ரா இருவரும் துணிச்சலான போராட்டத்தை வெளிப்படுத்தி, "டிரா' செய்யப் போராடினர். இருப்பினும், மற்றவீரர்கள் ஏனோதானோ என்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இன்னிங்ஸ் தோல்வியடைய நேரிட்டது.

இதுகுறித்து முன்னாள் வீரர்கள் கூறியது:
கவாஸ்கர்:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவு பெரும் ஏமாற்றம் தருகிறது. இரண்டு சிறந்த அணிகள் பங்கேற்ற நிலையில், இத்தொடர் சிறப்பானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இந்திய வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எவ்வித எதிர்ப்பும் இன்றி சரணடைந்தனர்.

இது "நம்பர்-1' அணிக்கு அழகல்ல. தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணிகள், பொதுவாக கடைசிவரை போராடி, சிறிய வித்தியாசத்தில் தான் தோற்கும். இப்படி மிகப்பெரிய அளவில் தோற்க மாட்டார்கள். ஒருவேளை இந்திய வீரர்களின் அணுகுமுறைகள் தவறாக இருந்திருக்கலாம்.

ரவி சாஸ்திரி:

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய வீரர்களின் காயங்கள், "பார்ம்' இல்லாதது என, பல்வேறு காரணங்கள் <உள்ளன. ஆனால், இந்த தோல்வியிலிருந்து உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். இதற்காக கண்டிப்பான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, மூன்று வகையான போட்டிகளுக்கும் தனித்தனியாக குறிப்பிட்ட அளவு தரமான வீரர்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீரர்களின் பழைய சாதனைகளை எப்போதும் பேசிக்கொண்டு, தேர்வு முடிவுக்கு வரக்கூடாது. இவற்றை சரியாக பின்பற்றினால் அடுத்த 6 முதல் 8 மாதங்களில் இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர்:

லட்சுமண் போன்றவர்கள் ஒரு திறமையை மட்டும் வைத்துக் கொண்டு, அணியில் காலம் தள்ள முடியாது. தென் ஆப்ரிக்காவில் ஸ்ரீசாந்த் செயல்பாட்டினை பார்த்தபின், ஜாகிர் கானுக்கு மாற்றாக நல்ல வீரரை கண்டறிய வேண்டும் என நினைத்தேன். இங்கிலாந்து தொடரில் ஸ்ரீசாந்துக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மிகச் சாதாரணமான பவுலிங்கை வெளிப்படுத்தியது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

வெங்சர்க்கார்:

வெளிப்படையாக சொல்வதென்றால், இது இந்திய அணிக்கு கடினமான தொடர். சமீபகாலமாக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், அஞ்சத்தக்க அணியுடன் தான் இந்தியா மோதியது. என்னைப் பொறுத்தவரையில் கடைசி சில இன்னிங்ஸ்களில் இந்திய வீரர்கள் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஆறுதலாக இருந்திருக்கும்.

பாபு நட்கர்னி:

இந்திய அணி இவ்வளவு மோசமாக விளையாடும் என்று நினைக்கவே இல்லை. நமக்குள்ள திறமையில் 5 சதவீதம் கூட வெளிப்படுத்தவில்லை. அடுத்தடுத்து தவறு செய்து கொண்டே தான் இருந்தனர். சில சீனியர் வீரர்களுக்கு உடல் ஒத்துழைத்தால், மனது தயாராக இல்லை. சிலநேரங்களில் மனது தயாராக இருந்தால், உடல் ஒத்துழைக்கவில்லை. மொத்தத்தில் இவர்கள் மனதளவில் பலகீனமாக இருந்தனர்.

பரூக் என்ஜினியர்:

இங்கிலாந்து அணி அதன் சொந்தமண்ணில் வலுவானது. இவர்களை இந்திய வீரர்கள் குறைத்து மதிப்பிட்டனர். இத்தொடருக்கு போதிய அளவில் தயாராகவில்லை. கூடுதலான பயிற்சி போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும். அதிகளவில் சம்பளம் பெறும் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை.

அருண் லால்:

இந்திய அணியில் இள ரத்தத்தை பாய்ச்ச வேண்டும். 35 அல்லது 38 வயதுள்ள வீரர்களை இன்னும் வைத்துக்கொண்டிருக்கக் கூடாது. இவர்களுக்கு பார்வைக் குறைபாடும் உள்ளது.

மனீந்தர் சிங்:

சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகியோரை எப்போதும் பெறமுடியாது. 19வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு, டெஸ்ட் போட்டியின் மீதான ஆர்வத்தை, பி.சி.சி.ஐ., கொண்டு வர வேண்டும். இதன் மூலம் எதிர்கால வீரர்களை உருவாக்கலாம்

சச்சினை வீழ்த்திய திட்டம் அம்பலம்

சச்சின் விக்கெட்டை கைப்பற்ற இங்கிலாந்து அணி வகுத்த அதிரடி திட்டம் அம்பலமாகியுள்ளது. கணித நிபுணர் உதவியுடன் நவீன கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இவரது பலவீனங்களை கண்டறிந்துள்ளது. இதன் மூலம் சதத்தில் சதம் காணும் இவரது கனவை தகர்த்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. இம்முறை இந்திய வீரர் சச்சின், சர்வதேச அளவில் தனது 100வது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இவரது ஆட்டம் படுமோசமாக இருந்தது. இங்கு 7 இன்னிங்சில்(34, 12, 16, 56, 1, 40, 23) சேர்த்து 182 ரன்கள்(சராசரி 26.00) மட்டுமே எடுத்துள்ளார். இவர் தொடர்ந்து தடுமாறியதற்கு, இங்கிலாந்து அணியின் தொழில்நுட்ப ஆலோசகர் நாதன் லியாமன் வகுத்த திட்டமே காரணம் என தெரிய வந்துள்ளது.


கேம்பிரிட்ஜில் படித்த லியாமன் மிகச் சிறந்த கணித நிபுணர். இவர், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டர் "சிமுலேட்டரில்' கிரிக்கெட் ஆடுகளங்களின் தன்மை, வீரர்கள் விளையாடும் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளார். உதாரணமாக, ஆடுகளத்தில் பந்து விழும் இடத்தை 100 * 15 செ.மீ., என்ற அளவில் 20 பகுதிகளாக பிரித்துக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் குறிப்பிட்ட பேட்ஸ்மேன்களுக்கு எந்த இடத்தில் பந்துவீசினால் நெருக்கடி ஏற்படும் என்பதை கண்டறிந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக டெஸ்ட் அரங்கில் வீசப்பட்ட பந்துகளை பதிவு செய்து வைத்திருக்கிறார். பேட்ஸ்மேன்களின் "புட் வொர்க்', "பேட்' பிடிக்கும் முறை போன்றவற்றையும் துல்லியமாக கணக்கிட்டுள்ளார்.


லியாமன் கணக்குகளின்படி, சச்சின் 50 ரன்களை எட்டும் வரை பெரும்பாலும் "ஆன்' திசையில் தான் விளையாடுவாராம். இந்த பலவீனத்தை அறிந்து கொண்டு அவருக்கு "ஆப்- சைடில்' பந்துவீசச் சொல்லியுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டி வரை அவருக்கு வீசப்பட்ட 261 பந்துகளில், 254 பந்துகள் "ஆப் சைடுக்கு' வெளியே செல்லும் வகையில் வீசப்பட்டன. 6 பந்துகள் "ஆப்-சைடு' திசையில் வீசப்பட்டன. ஒரு பந்து மட்டுமே "லெக்' திசையில் வீசப்பட்டது.


இந்த திட்டத்தை அறிந்த கொண்ட சச்சின், மூன்றாவது டெஸ்டில் தனது அணுகுமுறையை மாற்றியுள்ளார். "மிடில் ஸ்டம்ப்பை' மையமாக வைத்து ஆட முயற்சி செய்துள்ளார். "கிரீசுக்கு' வெளியே நின்று "பேட்' செய்துள்ளார். இதற்கு பதிலடியாக, ஆண்டர்சன் பந்துவீசிய போது, விக்கெட் கீப்பர் மாட் பிரையரை "ஸ்டம்ப்ஸ்' அருகில் வந்து நிற்க சொல்லியுள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ். இதனை பார்த்த சச்சின் மீண்டும் "கிரீசுக்குள்' செல்ல நேர்ந்ததாம்.


இது குறித்து லியாமன் கூறுகையில்,"வீரர்கள் பந்துவீசும் முறை, "பேட்' பிடிக்கும் விதம் போன்றவற்றை கண்டறிய வேண்டும். இதற்கு "ஹாக்-ஐ' தொழில்நுட்பம் உதவும். வீசப்படும் பந்துகளை பல்வேறு வகையாக பிரிக்கிறோம். இதனை பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை "வீடியோ' ஆதாரங்களுடன் ஆய்வு செய்கிறோம்.

ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பந்துவீசும் போது நெருக்கடி ஏற்படும். இந்த பலவீனத்தை அறிந்து அந்த இடத்தில் ஒரு ஓவரில் இரு முறை பந்துவீசினால், எளிதாக விக்கெட்டை கைப்பற்றி விடலாம். இந்திய வீரர்களில் சச்சினுக்கு எதிராக இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிக் காட்டினோம். இவருக்கு எதிராக இங்கிலாந்து "வேகங்கள்' அபாரமாக பந்துவீசினர்,''என்றார்.


கவாஸ்கர் கிண்டல்

இங்கிலாந்தின் திட்டத்தில் புதுமை ஒன்றும் இல்லை என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில்,"" ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு விதமான "பேட்டிங்' "ஸ்டைல்' இருக்கும். "பேட்' பிடிக்கும் விதத்தை பொறுத்து இது அமையும்.

உதாரணமாக கங்குலி பயன்படுத்தும் பேட்டின் பிடி அதிக எடை கொண்டதாக இருக்கும். இது "ஆப்-சைடில்' விளையாட எளிதாக இருக்கும். சச்சினை எடுத்துக் கொண்டால் "பேட்' பிடிக்கும் பகுதி உருண்டை வடிவில் இருக்கும். இதன் மூலம் "ஆன்-சைடில்' எளிதாக ரன் சேர்க்கலாம். எனவே, சச்சின் "பேட்டிங்' பற்றி புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து விடவில்லை,''என்றார்.

கடினமான தொடராக தெரியவில்லை - ஸ்ரீசாந்த்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை, இந்திய அணி இழந்தாலும், இத்தொடரை கடினமான தொடராக தெரியவில்லை,'' என, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.

இது குறித்து ஸ்ரீசாந்த் கூறியது:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்து, தர வரிசைப் பட்டியலில் "நம்பர்-1' இடத்தை இழந்திருந்தாலும், இத்தொடர் கடினமாக தெரியவில்லை. இதை விட கடினமான சவால்களையெல்லாம் இந்திய அணி எதிர்கொண்டுள்ளது. 2008ல் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர், இதனை விட கடிமாக இருந்தது.

தற்போதைய டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் துவக்கத்தில், நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். உணவு இடைவேளைக்கு பின் பந்துவீச்சு பயன்தரவில்லை.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எப்படிபட்ட பந்து வீச்சையும் சிறப்பாக எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு எதிராக பந்துவீசுவது சவாலாக உள்ளது. இத்தொடர் எங்களுடைய பலத்தை பற்றி அறிய உதவியாக உள்ளது. இருப்பினும், இரு அணிகளுக்கு இடையிலான தொடர் ரசிக்கும்படியாக உள்ளது.

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் எனக்கு ஆலோசனைகள் தருகிறார். இத்தொடரில் பங்கேற்றதன் மூலம் பவுலிங் குறித்து, நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். போட்டிகளில் வெற்றி பெறுவது எளிதான செயல் அல்ல என்பதை அறிந்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை சிறப்பாக பந்து வீசினால், நன்றாக தூக்கம் வரும்.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

ஜாகிர் கானுக்கு ஆப்பரேஷன்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், கணுக்கால் காயத்துக்கு ஆப்பரேஷன் செய்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் இடம் பெற்றவர் ஜாகிர் கான். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் கணுக்காலில் காயமடைந்தார். பின் பயிற்சி போட்டியிலும் இது தொடரவே, பாதியில் நாடுதிரும்பினார். தற்போது இவரது கணுக்காலில் ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜாகிர் கான் தனது "டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில்,""எனது வலது கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக, கடந்த 15ம் தேதி ஆப்பரேஷன் செய்துள்ளேன். இது நல்லவிதமாக முடிந்துள்ளது,'' என, தெரிவித்துள்ளார்.

இந்த காயம் முழுமையாக குணமடைய குறைந்தது 14 முதல் 16 வாரங்கள் ஆகும் என்பதால், இந்தியாவில் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும், ஜாகிர் கான் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.

ஆனால், அடுத்து துவங்கும் ஆஸ்திரேலிய தொடரில் கலந்து கொள்வார் என நம்பப்படுகிறது.

சோகத்தை தவிர்க்குமா இந்திய அணி?

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. ஏற்கனவே தொடரை இழந்த இந்திய அணி, இப்போட்டியில் வென்று மானம் காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை 0-3 என இழந்ததோடு, டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் "நம்பர்-1' இடத்தையும் பறிகொடுத்தது. இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேறியது.
இரு அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று, லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.


துவக்கம் மோசம்:

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். கடந்த போட்டியில் சேவக் இரண்டு இன்னிங்சிலும் முதல் பந்தில் அவுட்டானார். காம்பிரும் சொதப்புகிறார். "மிடில் ஆர்டரில்' டிராவிட் (302 ரன்கள்) தவிர, கேப்டன் தோனி (200), லட்சுமண் (156) ஆகியோரது செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் அடிப்பார் என, எதிர்பார்க்கப்பட்ட சச்சின் (159), ரெய்னா (105) ஆகியோரும் சோபிக்கவில்லை.


கோஹ்லி வாய்ப்பு:

இன்று ரெய்னாவுக்குப் பதில், விராத் கோஹ்லிக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். மற்றபடி ஓவல் மைதானம், இந்திய அணிக்கு சற்று சாதகமாகவே இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தி, இத்தொடரில் முதன் முறையாக ஒரு இன்னிங்சில் 300 ரன்களுக்கும் மேல் கடந்து, தங்களை நிரூபிக்க வேண்டும்.


பிரவீண் சந்தேகம்:

பவுலிங்கில் அசத்தி வரும் பிரவீண் குமார் (15 விக்.,), கைவிரல் காயம் காரணமாக இந்த டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம் தான். இவருக்குப் பதில் ஆர்.பி.சிங் களமிறங்கலாம். இஷாந்த் சர்மா (10), ஸ்ரீசாந்தின் (5), பவுலிங், முனை மழுங்கிய ஆயுதமாகத் தான் உள்ளது. அமித் மிஸ்ரா (3) எதிர்பார்த்தபடி பந்தை சுழற்றாததால், அவரது இடத்தை பிரக்யான் ஓஜா தட்டிச் செல்வார் என்று தெரிகிறது.


பேட்டிங் படை:

தொடரை வென்றது மட்டுமன்றி இந்தியாவை 4-0 என்று தோற்கடிப்போம் என்று வீர வசனம் பேசி வருகின்றனர் இங்கிலாந்து வீரர்கள். இதற்கேற்ப, பீட்டர்சன் (358), குக் (314), பெல் (269), பிரையர் (253), மார்கன் (193), கேப்டன் ஸ்டிராஸ் (189) என வலுவான பேட்டிங் படையினர், மீண்டும் இந்திய அணிக்கு தொல்லை தர காத்திருக்கின்றனர். பவுலர்களான பிராட் (182), பிரஸ்னன் (154) கூட தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்க்கின்றனர்.


ஆண்டர்சன் சந்தேகம்:

வேகப்பந்து வீச்சில் ஸ்டூவர்ட் பிராட் (21), ஆண்டர்சன் (18), பிரஸ்னன் (12) கூட்டணி மிரட்டுகின்றனர். இதில் ஆண்டர்சன் காயம் காரணமாக இன்று விளையாடுவது உறுதியில்லாமல் உள்ளது. இவருக்குப் பதில் கிரகாம் ஆனியன் சேர்க்கப்பட்டுள்ளார். சுழலில் வழக்கம் போல சுவான், நம்பிக்கை தருகிறார்.

சொந்த மண்ணில் அசத்தும் இங்கிலாந்து அணி, கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் தூள் கிளப்புகிறது. அதே நேரத்தில் டெஸ்ட் போட்டியை எப்படி விளையாடுவது என தெரியாமல் தவிக்கும் இந்திய அணியினர், இம்முறை எழுச்சி காண வேண்டும். தங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்த வேண்டும்.


ராசியான ஓவல் மைதானம்

இந்திய அணிக்கு லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானம் ராசியானது. இங்கு பங்கேற்ற 10 டெஸ்டில், 2 போட்டிகளில் மட்டுமே தோற்றுள்ளது. ஒரு போட்டியில் வெற்றி (1971) தவிர, மற்ற அனைத்திலும் "டிரா' செய்துள்ளது.

* இங்குதான் இந்திய வீரர்கள் கவாஸ்கர் (221 ரன்கள், 1979), டிராவிட் (217 ரன்கள், 2002) இரட்டைசதம் அடித்தனர். சுழல் ஜாம்பவான் கும்ளே, தனது முதல் சதத்தை (110*) இந்த மைதானத்தில் தான் எடுத்தார்.


பறிபோகுமா "நம்பர்-2'

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில், "நம்பர்-1' இடத்தை இழந்துள்ள இந்திய அணி, தற்போது இரண்டாவது (119) இடத்தில் உள்ளது. இன்றைய நான்காவது டெஸ்டிலும் தோல்வியடையும் பட்சத்தில், இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும். இங்கிலாந்து (125), தசம புள்ளிகள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணிகள் (117), முதல் இரண்டு இடத்தில் இருக்கும்.

சோகத்தை தவிர்க்குமா?
இந்திய அணியின் 79 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில், 4 அல்லது 5 போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து (0-5, 1959), வெஸ்ட் இண்டீஸ் (0-5, 1961-62), ஆஸ்திரேலியா (0-4, 1967-68) அணிகளுக்கு எதிராக மட்டுமே முழுமையாக தோல்வியடைந்தது. மற்றபடி 1967, 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக 0-3 எனவும், 1999-2000ல் ஆஸ்திரேலியாவுடன் 0-3 எனவும் மோசமாக தோற்றது. இம்முறை இந்த சோகத்தை தவிர்க்கும் என்று நம்புவோம்.

இலக்கு இல்லாத இந்திய அணி

டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான புதிய இலக்குகளை இந்திய அணி நிர்ணயித்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் வரிசையாக தோல்வி அடைந்த இந்தியா, தொடரை இழந்ததோடு, டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் முதலிடத்தையும் கோட்டை விட்டது. இங்கிலாந்து முதலிடத்துக்கு முன்னேறியது.


புள்ளிகள் குறைவு:

கடந்த 2009, டிச. 6ம் தேதி தோனி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் முதல் முறையாக முதலிடம் பெற்றது. அடுத்த 20 மாதங்களில் தென் ஆப்ரிக்காவுடனான தொடரை "டிரா' செய்தது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களை வென்றது.

வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் வெற்றிவாகை சூடியது. இந்த தொடர்களின் போது இந்திய வீரர்கள், போதும் என்ற மனநிறைவோடு காணப்பட்டனர். வெற்றி தாகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.

உதாரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 15 ஓவரில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை காணப்பட்டது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்ததால், எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், தொடரில் 1-0 என்ற முன்னிலையில் இருந்ததால், போட்டியை வீணாக "டிரா' செய்தனர். இதனால் "ரேங்கிங்' பட்டியலில் வீணாக புள்ளிகளை இழந்தது.


திட்டம் இல்லை:

இந்திய அணியின் சரிவுக்கு சரியாக திட்டமிடாததும் முக்கிய காரணம். "நம்பர்-1' இடத்தை பெறுவதை காட்டிலும், அதனை தக்க வைப்பதே மிகவும் கடினம் என்பதை அறிந்து கொள்ள நம்மவர்கள் தவறினர். முதலிடத்தில் இருக்கிறோம் என்ற மிதப்பில் இருந்தனர். அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம், எத்தனை வெற்றிகளை பெறப் போகிறோம் என புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளவில்லை.

தவிர, ஏதாவது ஒரு வீரரை தான் பெரிதும் சார்ந்து இருந்தது. இலங்கை, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர்களை "டிரா' செய்ய லட்சுமண் காரணமாக இருந்தார். இவரது சிறப்பான ஆட்டம் அணிக்கு பெரிதும் கைகொடுத்தது.

இதே போல ஆஸ்திரேலியாவுடனான மொகாலி டெஸ்டில் கடைசி வரை பொறுப்பாக ஆடிய லட்சுமண், இஷாந்த் சர்மாவுடன் சேர்ந்து அணிக்கு "திரில்' வெற்றி தேடி தந்தார். இத்தகைய ஒரு வீரர் இங்கிலாந்து தொடரில் கிடைக்கவில்லை. டிராவிட் இரண்டு சதம் அடித்த போதும், அது அணியின் தோல்வியை தவிர்க்க உதவவில்லை.

இந்திய அணியில் கூட்டுமுயற்சியும் காணப்படவில்லை. நமது வீரர்கள் 80 முதல் 70 சதவீதம் வரை இந்திய மண்ணில் தான் விளையாடுகின்றனர். இதனால் தான் வெளிநாடுகளில் சோபிக்க முடியவில்லை என்கிறார் தோனி. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஏனென்றால் ஹெடிங்லி, பெர்த், ஜமைக்கா போன்ற இடங்களில் இவரது தலைமையில் தான் இந்தியா வெற்றி பெற்றது. டிராவிட், சச்சின், லட்சுமண், ஜாகிர், போன்றவர்கள் ஓய்வு பெறும் பட்சத்தில் அவர்களுக்கு நிகரான மாற்று வீரர்கள் இல்லை.

இந்திய அணி இழந்த பெருமையை மீட்க, குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் தேவைப்படலாம். இந்த காலக்கட்டத்தில் புதிய இலக்குகளை நிர்ணயித்து, டெஸ்ட் அரங்கில் மீண்டும் எழுச்சி பெற தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.


பி.சி.சி.ஐ., அதிரடி

இந்திய அணியின் வீழ்ச்சி பற்றி மும்பையில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் போர்டின்(பி.சி.சி.ஐ.,)செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு பி.சி.சி.ஐ., தலைவர் சஷான்க் மனோகர் மற்றும் செயலர் சீனிவாசன் இணைந்து நல்ல தீர்வு காண்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,""இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி பற்றி நிர்வாகிகள் கவலை வெளியிட்டனர். பி.சி.சி.ஐ., தலைவர் மற்றும் செயலரிடம் உரிய தீர்வு காணும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வு பெற்று 10 ஆண்டுகளுக்கு பதிலாக 5 ஆண்டுகளில் முன்னாள் வீரர்கள் தேசிய தேர்வுக்குழு உறுப்பினராக முடியும் என விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது,''என்றார்.

இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம்?

டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் வீழ்ச்சி பற்றி கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 3 டெஸ்டில் தோல்வி அடைந்து, "நம்பர்-1' இடத்தை இழந்ததற்கு மோசமான பேட்டிங்கே காரணம் என தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் அடித்துச் சொல்கிறார்.

தேசத்தை மறந்து பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்ததே தோல்விக்கு வித்திட்டதாக கூறப்படுகிறது. தவறான வீரர்கள் தேர்வு மற்றும் அளவுக்கு அதிகமான கிரிக்கெட் போட்டிகளே வீழ்ச்சிக்கு காரணம் என, இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,)மீதும் பழி சுமத்துகின்றனர். இது பற்றி விரிவாக ஆய்வு செய்ய பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.

உலக கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, தற்போது சரிவை சந்திக்க துவங்கியுள்ளது. இங்கிலாந்துடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. இதையடுத்து டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் "நம்பர்-1' இடத்தை பறிகொடுத்தது. முதலிடத்துக்கு இங்கிலாந்து முன்னேறியது.


ஓய்வில்லாத போட்டி:


இந்த வீழ்ச்சிக்கு ஓய்வில்லாத போட்டிகளே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில், ஆஸ்திரேலியாவோடு ஒப்பிடுகையில் இந்திய அணி இரண்டு மடங்கு போட்டிகளில் பங்கேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கணக்கிட்டால், இந்திய அணி 14 டெஸ்டில் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலியாவோ 7 டெஸ்டில் தான் பங்கேற்றுள்ளது.

இதே போல இந்தியா 29 ஒரு நாள் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 23 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளன. இப்படி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றதால் பெரும்பாலான இந்திய வீரர்கள் சோர்வடைந்தனர். இதனால் தான் இங்கிலாந்து மண்ணில் சோபிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதை மறுத்த தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியது:

இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் தான் முக்கிய காரணம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட அனைத்து அணிகளும் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு தான் இருக்கின்றன. டெஸ்ட், ஒரு நாள் போட்டி, "டுவென்டி-20' என ஏதாவது ஒரு வகையிலான போட்டிகளில் பங்கேற்கின்றன. எனவே, இந்தியா மட்டும் அதிக போட்டிகளில் விளையாடவில்லை.

இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியதால், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதனை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை பேட்டிங் "கிளிக்' ஆகவில்லை. "டாப்-5' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். "பவுலிங்', "பீல்டிங்கிலும்' நம்மவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பட தவறினர். தங்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் இங்கிலாந்து "வேகங்கள்' அசத்தினர்.

ஜாகிர் கான் காயம் பற்றி அதிகம் விவாதிக்க தேவையில்லை. தோல்விக்கு வீரர்கள் அல்லது பி.சி.சி.ஐ., அல்லது நிர்வாகிகள் மீது பழி சுமத்தும் பணியில் ஈடுபட வேண்டாம். தற்போது இந்திய அணி மோசமான காலக்கட்டத்தை நோக்கி செல்கிறது. நமது வீழ்ச்சிக்கான காரணங்களை கண்டறிந்து விரைவில் முதலிடத்தை மீண்டும் பிடிப்போம். தற்போது இந்திய வீரர்கள் தன்னம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். ரசிகர்கள் தான் அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.


ஐ.பி.எல்., பாதிப்பு:

அடுத்து, பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்தால், நம்மவர்கள் டெஸ்ட் போட்டிக்கான அணுகுமுறையை மறந்து விட்டனர். டிராவிட்டை தவிர மற்றவர்கள் "டுவென்டி-20' போன்று அதிரடியாக "ஷாட்' அடித்து அவுட்டாகினர். தவிர, அதிமான ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்றதால் சோர்ந்து விட்டனர். ஜாகிர், காம்பிர், சேவக் போன்றவர்களுக்கு காயமும் ஏற்பட்டது.


பி.சி.சி.ஐ., நடவடிக்கை:

டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து, வீரர்களை பி.சி.சி.ஐ., தேர்வு செய்யாததே தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து பி.சி.சி.ஐ., செயலவர் சீனிவாசன் கூறுகையில்,""ஜாகிர், சேவக், காம்பிர் ஆகியோருக்கு காயம் ஏற்பட, ஒரு போட்டியில் கூட இந்தியா முழு பலத்துடன் பங்கேற்க இயலவில்லை. சுமார் 2 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த போது யாரும் விமர்சிக்கவில்லை.

ஒரு தொடரில் தோற்றவுடன் அனைத்து தரப்பிலும் இருந்து புகார் கூறப்படுகிறது. தேசத்துக்காக விளையாடுவதை தான் வீரர்கள் விரும்புகின்றனர். இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடாத வீரர்களுக்கு ஐ.பி.எல்., தொடரில் மவுசு இருக்காது. இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் நமது வீரர்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். பின் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.


முன்னாள் வீரர்கள் பாய்ச்சல்

தோனி தலைமையிலான அணியின் மோசமான ஆட்டத்தை, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடியுள்ளனர். அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சப்பட வேண்டுமென வலியுறுத்தினர். "சீனியர்' வீரர்களுக்கு விடைகொடுத்து விட்டு விராத் கோஹ்லி, ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

கங்குலி: டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைவது சகஜம். ஆனால், வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வி, மிகப் பெரும் ஸ்கோரை எட்ட முடியாதது வருத்தம் அளிக்கிறது. இது, இத்தொடருடன் முடிந்து விடுமா அல்லது வீழ்ச்சியின் துவக்கமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கும்ளே: அனுபவ வீரர்களான சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகியோரது ஓய்வுக்கு பின் டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமடையும். எதிர்காலத்தை கணக்கில் கொண்டு, தற்போதே நான்கு அல்லது ஐந்து இளம் வீரர்களை கண்டறிய வேண்டும். விராத் கோஹ்லி, ரோகித் சர்மா போன்றவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.

அருண் லால்: இங்கிலாந்து மண்ணில் சந்தித்த தோல்வி, இந்திய அணிக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. 35 அல்லது 38 வயதான வீரர்களுடன் இனியும் விளையாடுவதில் அர்த்தமில்லை. இவர்களுக்கு கண் பார்வை குறைவு, உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு பதில் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

வினோத் காம்ப்ளி: இங்கிலாந்தின் ஸ்டிராசுடன் ஒப்பிடுகையில் கேப்டனாக தோனியின் வியூகம் எடுபடவில்லை. தவறான திட்டங்களை வகுத்தார். சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையில், இத்தொடர் தான் மிக மோசமானதாக அமைந்தது.

வெங்கசர்க்கார்: முன்னணி பவுலர்களுக்கு காயம், எளிய "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டது போன்றவை சிக்கலை ஏற்படுத்தியது. லார்ட்ஸ் டெஸ்டில் கேப்டன் தோனியே "பவுலிங்' செய்ய வேண்டிய பரிதாப நிலைமையை காண முடிந்தது. வீரர்கள் மத்தியில் வெற்றி தாகம், போராடும் குணம் இல்லாததே தோல்விக்கு காரணம்.

இது போன்ற அணியை பார்த்ததில்லை - கங்குலி

இந்திய அணியின் பேட்டிங் இத்தொடரில் சிறப்பாக இல்லை. இங்கிலாந்து அணியிடம் "நம்பர்-1' இடத்தை ஒப்படைத்து விட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோன்ற இந்திய அணியை பார்த்ததில்லை,'' என, கங்குலி வருத்தம் தெரிவித்து உள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டிராவிட் தவிர, மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை கொடுக்கின்றனர்.

பவுலர்கள் மட்டமாக செயல்படும் நிலையில், பீல்டிங் அதைவிட மோசம். இதனால் அடுத்தடுத்து "அடி' வாங்கி வருகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியினர் சாதாரணமாக விளையாடுகின்றனர். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இங்கிலாந்து அணி 372 ரன்கள் குவித்தது. இது இந்தியாவுக்கு மோசமான நாள். இப்படி ஒரு இந்திய அணியை, பத்து ஆண்டுகளில் நான் பார்த்ததில்லை.


பயிற்சி இல்லை:

இதற்காக இந்திய வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆர்வமில்லாமல் உள்ளனர் என்பது தவறு. போதியளவு பயிற்சிகள் இல்லை என்பதே உண்மை. முக்கிய வீரர்கள் இந்தியாவில் இருந்து நேரடியாக இங்கிலாந்து வந்திருந்தனர்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல, குறைந்தது இரண்டு பயிற்சி போட்டிகள் இருந்திருக்க வேண்டும். இங்கு, இந்திய அணி ஒரு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே விளையாடி, டெஸ்டில் பங்கேற்றது.


மீண்டு வரும்:

இருப்பினும், இதிலிருந்து மீண்டு வரும் திறன் இந்தியாவுக்கு உண்டு. இத்தொடருடன் டிராவிட், சச்சின், லட்சுமண் ஆகியோருக்கு கிரிக்கெட் முடிந்து விடவில்லை. அடுத்து ஆஸ்திரேலிய தொடர் காத்திருக்கிறது.


மோசமான தொடர்:

சமீபத்தில் இந்திய அணி மோசமாக செயல்பட்ட முதல் தொடர் இது தான். சச்சின், டிராவிட் ஆகியோரிடம் மக்கள் அதிகம் எதிர்பார்த்தனர்.

பயிற்சியாளர் டங்கன் பிளட்சருக்கு இது சோதனைக் காலம். இந்திய அணியில் "சீனியர்கள்' அதிகம் இருப்பதால், அவர்களை கையாளுவதில் சிக்கல் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் ஒருமுறை வெற்றி துவங்கி விட்டால், அப்புறம் அவருக்கு நல்ல நேரம் தான். ஏனெனில் இந்திய வீரர்கள் நல்ல பண்பாளர்கள்.

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

இந்தியா இன்னிங்ஸ் தோல்வி: முதலிடத்தை இழந்தது

பிர்மிங்ஹாமில் நடந்த 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை இழந்தது.

இங்கிலாந்து சென்ற இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது. பர்மிங்ஹாமில் 3வது டெஸ்ட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் தோனி அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார். காம்பீர் 38 ரன்களுக்கும், டிராவிட் 22 ரன்களுக்கும், லஷ்மன் 30 ரன்களுக்கும், பிரவீண் குமார் 26 ரன்களுக்கும்அவுட்டாயினர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டானார்கள். இங்கிலாந்து தரப்பில் பிராட், பிரஸ்னன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அதிரடியா விளையாடி 7 விக்கெட் இழப்பிற்கு 710 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியின் குக் அபாராமாக விளையாடி 294 ரன்களை குவித்தார்.

மோர்கன் 104 ரன்களுக்கும், ஸ்டிராஸ் 87 ரன்களுக்கும், பீட்டர்சன் 63 ரன்களுக்கும், பிரையர் 53 ரன்களுக்கும் அவுட்டாயினர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 486 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

சேவக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்தது. முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர்.

காம்பீர் 14 ரன்களுக்கும், டிராவிட் 18 ரன்களுக்கும், லஷ்மண் 2 ரன்களுக்கும், ரெய்னா 10 ரன்களுக்கும் அவுட்டாயினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், இந்தியா 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 40 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அமீத் மிஸ்ரா 22 ரன்களுக்கும், பிரவீண் குமார் 40 ரன்களுக்கும், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாயினர்.

இந்திய அணி சார்பில் கேப்டன் தோனி மட்டும் சிறப்பாக விளையாடி 74 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை இழந்தது. தோனி தலைமையில் இந்திய அணியின் முதல் டெஸ்ட் தொடர் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து வேகத்தில் சரிந்தது இந்தியா

பர்மிங்ஹாம் டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டையை கிளப்ப, இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு சுருண்டது. மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். தோனி மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

முக்கியமான மூன்றாவது டெஸ்ட், பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், "பீல்டிங்' தேர்வு செய்தார்.


சேவக் ஏமாற்றம்:

இங்கிலாந்து "வேகங்கள்' போட்டுத் தாக்க, இந்திய அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவக், தான் சந்தித்த முதல் பந்திலேயே "டக்' அவுட்டானார். இவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்து, இவரது "கிளவ்ஸ்' பகுதியை உரசிச் சென்றது.

அதனை பிடித்த விக்கெட் கீப்பர் பிரையர் "அவுட்' கேட்டார். இதனை ஏற்க அம்பயர் ஸ்டீவ் டேவிஸ் மறுத்தார். உடனே இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் "ரிவியு' கேட்டார். இதில் பந்து, "கிளவ்சில்' பட்டது உறுதி செய்யப்பட, சேவக் வெளியேற நேர்ந்தது.


விக்கெட் மடமட:

பின் இணைந்த, காம்பிர்-டிராவிட் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த போது, பிரஸ்னன் பந்தில் காம்பிர் (38) போல்டானார். அடுத்து வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். பிராட் வேகத்தில் நடையை கட்டிய சச்சின் (1), இம்முறையும் சதத்தில் சதம் காண தவறினார்.

பிரஸ்னன் பந்தில் "இந்திய பெருஞ்சுவர்' டிராவிட்டும் (22) சரிந்தார். ஆண்டர்சன் பந்தில் சுரேஷ் ரெய்னா (4), காலியானார். லட்சுமண் (30), பிரஸ்னன் பந்தில் தேவையில்லாத "ஷாட்' அடித்து வெளியேறினார். அமித் மிஸ்ரா (4) நிலைக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து தத்தளித்தது.


தோனி அரைசதம்:

இந்த நேரத்தில் பொறுப்பாக ஆடிய கேப்டன் தோனி, பிரவீண் குமார் ஜோடி, அணியை சரிவிலிருந்து மீட்டது. ஆண்டர்சன், பிரஸ்னன், பிராட் பந்துகளில் தலா ஒரு சிக்சர் பறக்க விட்ட தோனி, டெஸ்ட் அரங்கில் தனது 22வது அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்த நிலையில், பிரஸ்னன் பந்தில் பிரவீண் (26) அவுட்டானார்.

தோனி 77 ரன்களுக்கு பிராட் பந்தில் வெளியேற, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. இஷாந்த் சர்மா (4), ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டானார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் பிரஸ்னன், பிராட் தலா 4, ஆண்டர்சன் 2 விக்கெட் கைப்பற்றினர்.


நல்ல துவக்கம்:

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், அலெஸ்டர் குக் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் எடுத்திருந்தது.

அரைசதம் கடந்த ஸ்டிராஸ்(52), குக்(27) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து அணியின் கைவசம் விக்கெட்டுகள் அப்படியே இருப்பதால், இந்திய அணிக்கு மீண்டும் ஒரு முறை சோதனை காத்திருக்கிறது.

இலங்கை அணிக்கு நம்பர் 1 வாய்ப்பு

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், இலங்கை அணி முதன்முறையாக "நம்பர்-1' இடம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வெளியிடப்படும் ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், தற்போது 130 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.

இலங்கை (118 புள்ளி), இந்தியா (117 புள்ளி), தென் ஆப்ரிக்கா (116 புள்ளி), இங்கிலாந்து (106 புள்ளி) உள்ளிட்ட அணிகள் "டாப்-5' வரிசையில் உள்ளன. இப்பட்டியலில், முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி, பல்லேகெலே மைதானத்தில் இன்று நடக்கிறது.

இத்தொடரை இலங்கை அணி 4-1 எனக் கைப்பற்றும் பட்சத்தில், 125 புள்ளிகளுடன் முதல் முறையாக "நம்பர்-1' இடத்தை அடையலாம்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும். இப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி, கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இலங்கை அணி 5-0 எனக் கைப்பற்றும் பட்சத்தில், 129 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறும். ஆஸ்திரேலிய அணி 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.

ஒருவேளை ஆஸ்திரேலிய அணி, 4-1 எனக் கைப்பற்றும் பட்சத்தில் 133 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும். இலங்கை அணி 115 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும். ஆஸ்திரேலிய அணி 5-0 என கைப்பற்றும் பட்சத்தில், 136 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கும். இலங்கை அணி 112 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும்.