உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் புதிய ஒப்பந்தத்தில் இந்திய வீரர்கள் கையெழுத்திட மறுப்பதில், நியாயம் உள்ளது,'' என்கிறார் யுவராஜ் சிங்.
உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் புதிய விதிமுறைப் படி ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வீரர் கள் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும். தவிர, மூன்று மாதங்களுக்கு முன்பே, இந்த தகவலை தெரிவித்து விட வேண்டும். உலகின் மற்ற கிரிக்கெட் போர்டுகள் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டன. ஆனால் தோனி, யுவராஜ் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து விட்டனர். இதன் மூலம் தங்களது சுதந்திரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். தவிர, தங்களது பாதுகாப்பு குறித்தும் அச்சம் தெரிவித்தனர். வீரர்களின் கருத்துக்கு, இந்திய கிரிக்கெட் போர்டும் ஆதரவு தெரிவித்து உள்ளது.
இது குறித்து யுவராஜ் கூறியதாவது: ஒரு ஆண்டில் 9 முதல் 10 மாதங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறோம். சுமார் 10 நாட்கள் என்ற அளவில் தான் எங்களுக்கு ஓய்வு கிடைக்கிறது. அதில் எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட விரும்புவது இயற்கை. அந்த நேரத்தை ஊக்கமருந்து பரிசோதனைக்கு என்று ஒதுக்குவது முடியாத காரியம். விதிமுறைகள் பொதுவானவை தான். இருப்பினும் எங்களது கருத் தையும், அவர்கள் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஐ.சி.சி.,), இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி. சி.ஐ.,) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நியாயமான முடிவை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு யுவராஜ் கூறினார்.
ஐ.சி.சி., பேச்சு வார்த்தை:உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் புதிய விதிமுறைக்கு பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்து வருவது ஐ.சி. சி.,க்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பி.சி.சி. ஐ.,க்கு ஆதரவாக தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து வீரர் கள் சங்கங்களும் கருத்து தெரிவித்து வருகின்றன. இதனால் அனைத்து கிரிக்கெட் போர்டுகளுடனும் "டெலிகான்பிரன்சிங்' மூலம் பேச்சு வார்த்தை நடத்த ஐ.சி.சி., திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஐ.சி.சி.,யின் மீடியா மானேஜர் பிரையன் முர்கட்ராய்டு கூறுகையில்,"" புதிய ஒப்பந்தத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு உள்ள நடைமுறை சிக்கல் குறித்து, உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்திடம் ஐ.சி.சி., ஆலோ சித்து வருகிறது. ஐ.சி.சி.,யின் செயற்குழு கூட்டம் வரும் அக்டோபரில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் இதுகுறித்து விரிவான ஆலோசனை மேற் கொள்ளப்படும். அதற்கு முன்னதாக கிரிக்கெட் போர்டுகளுடன் "டெலிகான்பிரன்சிங்' மூலம் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கிரிக்கெட் வீரர்களின் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில், ஐ.சி.சி.,யின் முடிவு அமையும்,'' என்றார்.
பிரச்னை இல்லை:""உலக ஊக்க மருந்து தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால், வீரர்களின் சுதந்திரத்திற்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாது,'' என இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் குமார் கூறியுள்ளார். இவர் கூறுகையில், ""கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்த ஒப்பந்தத்தில் குத்துச்சண்டை வீரர்கள் கையெழுத்திட்டோம். எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை தெரிவித்ததன்மூலம் இதுவரை எவ்வித பிரச்னையும் எங்களுக்கு ஏற்படவில்லை. எனவே, கிரிக்கெட் வீரர்கள் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை,'' என்றார்.
சுஷில் குமார் அறிவுரை:உலக ஊக்கமருந்து மையத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார். இது குறித்து அவர் கூறுகையில்,"" ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள கிரிக்கெட் வீரர்கள் ஏன் அளவுக்கு அதிகமாக பயப்படுகிறார்கள் என்றே தெரிய வில்லை. சட்டத்தை மீறும் வகையில் நடந்தால் தான் அவர்கள் பயப்பட வேண்டும். அதைவிடுத்து பாதுகாப்பு காரணங்கள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. நான் ஏற்கனவே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கிறேன். கிரிக்கெட் வீரர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். இந்திய வீரர்கள் ஊக்கமருந்து சோதனை மையத்தை நம்பவேண்டும்,'' என்றார்
0 comments:
Post a Comment