இந்திய மண்ணில் மீண்டும் பாக்


இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான தொடருக்கு, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின், பாகிஸ்தான் அணி இந்தியா வர உள்ளது. 

கடந்த 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடக்கவில்லை. சர்வதேச போட்டிகளில் மட்டும், அவ்வப்போது பொது இடங்களில் மோதிக் கொண்டன. கடந்த ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட, பாகிஸ்தான் அணி இங்கு வந்தது. 

திடீர் தொடர்:

தற்போது, இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, வரும் டிசம்பர் 22ம் தேதி வரை, நான்கு டெஸ்ட், இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. பின், கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக நாடு திரும்பும் இங்கிலாந்து அணி, மீண்டும் 2013 ஜனவரி 6 முதல், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க வருகிறது. 

இடைப்பட்ட 14 நாட்களில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையில் மூன்று ஒருநாள், இரண்டு "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், இத்தொடரை நடத்த இரு நாடுகளின் போர்டுகள் சம்மதித்தன. 

அரசு சம்மதம்:

இருப்பினும், மத்திய அரசு முடிவெடுக்காமல் இருந்தது. இதுதொடர்பாக, டில்லியில் மத்திய உள்துறைச் செயலரை, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா சந்தித்து பேசினார். இதில், பாகிஸ்தான் தொடரை நடத்த, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்தது. 

இதனால், இருஅணிகள் பங்கேற்கும் தொடர் நடப்பது உறுதியாகியுள்ளது. வரும் டிசம்பர் 22ல் இந்தியா வரும் பாகிஸ்தான் அணி, டில்லி, சென்னை, கோல்கட்டாவில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், பெங்களூரு, ஆமதாபாத்தில் இரு "டுவென்டி-20' போட்டிகளிலும் பங்கேற்கிறது. 

முதல் போட்டி வரும் டிச., 25ல் துவங்கும். மற்ற விவரங்கள் பின் வெளியாகும் எனத் தெரிகிறது.

பயிற்சியில் திணறிய சேவக்


ரஞ்சிக் கோப்பை போட்டிக்கான வலைப்பயிற்சியில் சேவக் திணறியது பெரும் அதிர்ச்சி அளித்தது.

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 34. சமீப காலமாக இவரது ஆட்டம் எடுபடவில்லை. இவர்,டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. 

கடைசியாக 2010, நவ., 4ம் தேதி ஆமதாபாத்தில் நடந்த டெஸ்டில், நியூசிலாந்துக்கு எதிராக 173 ரன்கள் எடுத்தார். அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்து தொடரில் இவரை தான் இந்திய அணி பெரிதும் நம்பியுள்ளது. 

இந்நிலையில், வரும் நவ., 2ம் தேதி துவங்கும் உ.பி., அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் டில்லி அணியின் கேப்டனாக சேவக் களமிறங்குகிறார். 

நேற்று நடந்த வலைப்பயிற்சியில் இவர் பங்கேற்றார். அப்போது இஷாந்த் சர்மா, ஆஷிஷ் நெஹ்ரா பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். 

இதனைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், உள்ளூர் பவுலர்கள் சிலரின் "பவுன்சரில்' திணறியது தான் அதிர்ச்சி அளித்தது. 

ரஞ்சிக் கோப்பை போட்டியில் இழந்த "பார்மை' சேவக் மீட்க தவறினால், இந்திய அணிக்கு பெரும் சிக்கல் ஏற்படலாம். 

ஐ.பி.எல்., தொடரில் இருந்து விடைபெறுகிறார் சவுரவ் கங்குலி


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, 40. ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில், முதல் மூன்று ஆண்டுகள் கோல்கட்டா அணிக்காக விளையாடினார். 

2011ல் நடந்த வீரர்களுக்கான ஏலத்தில் இவரை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை. ஒருவழியாக புனே அணி ஒப்பந்தம் செய்தது. சமீபத்திய ஐந்தாவது தொடரில் யுவராஜ் சிங் "கேன்சரால்' பாதிக்கப்பட, புனே அணியின் கேப்டன், ஆலோசகராக செயல்பட்டார். 

இத்தொடரில் புனே அணி கடைசி இடம் பிடித்து ஏமாற்றியது. இதையடுத்து கங்குலி நீக்கப்படும் நிலை ஏற்பட்டது. 

இதற்கிடையே வரும் 31ம் தேதிக்குள் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அணிகள் வெளியிட வேண்டும் என ஐ.பி.எல்., நிர்வாகம் கெடு விதித்தது. 

இதன்படி "கேன்சரில்' இருந்து மீண்ட யுவராஜை தொடர்ந்து புனே அணியில் இடம் பெறுவார் எனத் தெரிகிறது. இவரிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம். 

தன் மீது விருப்பம் அணி நிர்வாகம் விருப்பம் காட்டாததால், ஐ.பி.எல்., தொடரில் இருந்து ஓய்வு பெறுவது என கங்குலி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பயிற்சியாளர், ஆலோசகர் உள்ளிட்ட வேறு எந்த பொறுப்பையும் ஏற்க அவர் முன்வரவில்லையாம். 

திவாரிக்கு பொறுப்பு:

நேற்று அறிவிக்கப்பட்ட ரஞ்சி கோப்பை தொடருக்கான பெங்கால் அணியிலும் கங்குலி இடம் பெறவில்லை. இந்த அணியின் கேப்டனாக மனோஜ் திவாரி நியமிக்கப்பட்டார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்கால் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் (நவ. 2-5) அணியை சந்திக்கிறது. அதன்பின், பஞ்சாப் (நவ. 9-12) அணியை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட வீரர்களை, பெங்கால் கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது.

முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி இப்போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவிக்காததால், மனோஜ் திவாரிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. விரிதிமன் சகா, அசோக் டிண்டா, லட்சுமி ரத்தன் சுக்லா, வீர் பிரதாப் சிங் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

இது குறித்து கங்குலி கூறுகையில்,""நான் ஐ.பி.எல்., தொடரில் விளையாடவில்லை என்றால், ரஞ்சி கோப்பை போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பு இல்லை,''என்றார். 

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் துணை செயலாளர் சுஜன் முகர்ஜி கூறுகையில், ""சவுரவ் கங்குலி, முதலிரண்டு போட்டியில் விளையாட மாட்டார். தேவைப்படும் பட்சத்தில், அணியின் நிலையை கருத்தில் கொண்டு அடுத்த போட்டிகளில் விளையாடலாம்'' என்றார்.

கேப்டன் தோனிக்கு கோஹ்லி ஆதரவு


தொடர்ந்து எட்டு டெஸ்டில் தோற்றதால், கேப்டன் தோனியை குறை சொல்லக் கூடாது. ஏனெனில், இவரது தலைமையில் தான் இரண்டு உலக கோப்பை வென்றோம், டெஸ்டில் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினோம்,'' என, இந்திய அணியின் விராத் கோஹ்லி தெரிவித்தார்.

இந்தியா வரும் இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட், இரண்டு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நவ., 15ல் ஆமதாபாத்தில் துவங்குகிறது. 

விராத் கோஹ்லி கூறியது:

பொதுவாக சொந்த மண்ணில் விளையாடும் அணிகள், இங்குள்ள சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் தவறு இல்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்ற போது, பயிற்சி போட்டிக்காக எங்களுக்கு சமதளமான ஆடுகளங்கள் தான் தரப்பட்டது. ஆனால், டெஸ்ட் போட்டியின் போது புற்கள் அதிகமாக இருந்த,வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடினோம். 

மற்றவர்கள் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என நினைத்தால், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் ஒரே மாதிரியான ஆடுகளத்தை தந்திருக்கலாமே. பயிற்சிக்கு குறைந்த நாட்களே இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். இப்போது சுழலுக்கு சாதகமாக ஆடுகளத்தில், திடீரென விளையாடும் போது தான் அவர்களுக்கு சிரமம் தெரியவரும்.

பீட்டர்சனுக்கு நெருக்கடி:

இந்தியா வரும் இங்கிலாந்து அணியின் பீட்டர்சனுக்கு, ரன்கள் சேர்க்க வேண்டிய நெருக்கடி அதிகம் இருக்கும். சுழற்பந்து வீச்சை சமாளித்தாலும், இது எளிதாக இருக்காது. 

யாரும் இல்லை:

உலகில் எந்த வீரரும் "பவுன்சராக' வரும் பந்துகளை சரியாக எதிர்கொள்ள முடியாது. இந்திய வீரர்கள் "ஷார்ட் பிட்ச்' பந்துகளில் அவுட்டாகின்றனர் என்பது தவறு. அப்படி என்றால் சச்சின், டிராவிட், லட்சுமண் எல்லாம் எப்படி ரன்கள் சேர்த்தனர். சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் இந்த பந்துகளில் அதிகளவில் யாரும் அவுட்டாகவில்லை. 

தோனிக்கு பாராட்டு:

இந்திய கேப்டன் தோனி சிறப்பாக செயல்படுகிறார். தொடர்ந்து 8 டெஸ்டில் தோற்றதற்காக, அவரை குற்றச் சொல்லக் கூடாது. இவரது தலைமையில் தான் இந்திய அணி இரண்டு உலக கோப்பை (2007, 2011) வென்றது. டெஸ்ட் தரவரிசையில் "நம்பர்-1' இடத்துக்கு சென்றதை மறக்கக் கூடாது.
இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கோப்பையை வெல்வது யார்?


தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் எது என்பது தெரிந்து விட்டது. 

முதலாவது அரை இறுதியில் வெற்றி பெற்ற லயன்ஸ் அணியும், நேற்று செஞ்சூரியனில் நடந்த 2-வது அரைஇறுதியில் வெற்றி பெற்ற சிட்னி சிக்சர்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் சிட்னி வீரர்களின் ஆட்டம் அபாரமாக இருந்தது.

முதலில் ஆடிய டைட்டன்ஸ் வீரர்கள் சிட்னி பவுலர்களின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்கள். இதனால் 82 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்பிறகு 6-வது விக்கெட்டுக்கு வந்த டேவிட் வைஸ், டேவிட்சுடன் சேர்ந்து சிக்சரும், பவுண்டரியும் விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டார். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் யூட்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. வைஸ் 61 ரன்களும், டேவிட்ஸ் 59 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய சிட்னி வீரர்களின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. லம்ப் 33 ரன்களும், ஓகீலே 32 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பிராட்ஹேடின் 3 ரன்னிலும், மேடின்சன் 20 ரன்னிலும், ஸ்டீவன் சுமித் 3 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் அணி சரிவுக்கு உள்ளானது. 

அதன்பிறகு ஹென் ரிக்ஸ் 27 ரன்கள் எடுத்து அணிக்கு நம்பிக்கை யூட்டினார். வெற்றியை நிர்ணயிக்க கடைசி 2 ஓவர் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. கடைசி 2 ஓவர்களில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19-வது ஓவரில் ஒரு சிக்சர் உள்பட 11 ரன் கள் எடுத்தனர். இதனால் 20-வது ஓவரில் 8 ரன்களே தேவைப்பட்டது. இதில் 5 பந்துகளில் 7 ரன் எடுத்ததால் ஸ்கோர் சமநிலைக்கு வந்தது. 

கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தை எதிர்கொண்ட கம்மின்ஸ் பந்தை அடிக்காமல் விட்டு விட்டார். பைஸ் முறையில் கம்மின்ஸ் ஒரு ரன் எடுக்க ஓடினார். அதற்குள் விக்கெட் கீப்பர் குன் தன் கையில் இருந்த பந்தை ரன்அவுட் ஆக்க வீசினார். 

ஆனால் ரன்அவுட் ஆக்க தவறியதால் சிட்னி அணி வெற்றிக்கான ரன்னை எடுத்தது. சிட்னி கிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 

நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜோகனஸ் பர்க்கில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - லயன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவது யார்? என்ற பரபரப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நாளை இரவு 9 மணிக்கு நடைபெறும் போட்டியை ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக பார்க்கலாம்.

அஷ்வின் சம்பளம் ரூ. 1 கோடி


வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலில், "ஏ' கிரேடில் இடம் பெற்றார் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். இவர், ஆண்டுக்கு ரூ. 1 கோடி சம்பளம் பெறுவார். ஹர்பஜன், இஷாந்த் சர்மா ஆகியோர் அடுத்த பிரிவுக்கு தள்ளப்பட்டனர்.

இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) மத்திய ஒப்பந்த கமிட்டி, ஒவ்வொரு ஆண்டும் வீரர்கள் திறமை அடிப்படையில் ஒப்பந்த பட்டியலை வெளியிடுகிறது. இதில் "ஏ' கிரேடில் இடம் பெறும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 கோடி கிடைக்கும். "பி' கிரேடு எனில், ரூ. 50 லட்சம், கிரேடு "சி' எனில் ரூ. 25 லட்சம் பெறுவர். 

நேற்று புதிதாக வெளியிடப்பட்ட பட்டியலில், "ஏ' கிரேடில் இடம் பெற்றிருந்த வீரர்கள் எண்ணிக்கை 12ல் இருந்து 9 ஆக குறைக்கப்பட்டது. லட்சுமண், டிராவிட் ஓய்வு பெற்றதால், இவர்கள் பெயர் இடம் பெறவில்லை. இஷாந்த் சர்மா, ஹர்பஜன் இருவரும் "பி' கிரேடுக்கு தள்ளப்பட்டனர். 

அஷ்வின் முன்னேற்றம்:

இதற்குப் பதில், தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், "பி' கிரேடில் இருந்து "ஏ' க்கு தேர்வு செய்யப்பட்டார். இதனால், அஷ்வின் இனி ஆண்டுக்கு ரூ. 1 கோடி பெறுவார். ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா இருவருக்கும் ரூ. 50 லட்சம் மட்டுமே கிடைக்கும். 

பாலாஜிக்கு இடம்:

இதேபோல "சி' கிரேடில் இருந்த புஜாரா, ரகானே, சமீபகாலமாக பவுலிங்கில் அசத்தி வரும் இர்பான் பதான், உமேஷ் யாதவும் "பி' கிரேடில் இடம் பெற்றனர். பிரவீண் குமார், ரவிந்திர ஜடேஜா இருவரும், "பி' யில் இருந்து "சி' கிரேடுக்கு தள்ளப்பட்டனர். 

"சி' கிரேடில் இருந்த உனத்கட், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தமிழகத்தின் வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி சேர்க்கப்பட்டார்.
37 வீரர்கள் அடங்கிய ஒப்பந்த பட்டியல் விவரம்:

கிரேடு "ஏ' (ரூ. 1 கோடி): 

சச்சின், தோனி, சேவக், ஜாகிர் கான், காம்பிர், ரெய்னா, யுவராஜ் சிங், விராத் கோஹ்லி, அஷ்வின்.

கிரேடு "பி' (ரூ. 50 லட்சம்):

ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, பிரக்யான் ஓஜா, ரோகித் சர்மா, புஜாரா, ரகானே, இர்பான் பதான், உமேஷ் யாதவ்.

கிரேடு "சி' (ரூ. 25 லட்சம்);

ரவிந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, வினய் குமார், முனாப் படேல், அபிமன்யு மிதுன், முரளி விஜய், ஷிகர் தவான், சகா, பார்த்திவ் படேல், மனோஜ் திவாரி, பத்ரிநாத், பியுஸ் சாவ்லா, தினேஷ் கார்த்திக், ராகுல் சர்மா, வருண் ஆரோன், அபினவ் முகுந்த், டிண்டா, யூசுப் பதான், பிரவீண் குமார், பாலாஜி.

சதம் அடிப்பவர்கள் மட்டும் சிறந்த ஆட்டக்காரர் அல்ல


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவின் கவுதம் கம்பீர், வீரேந்திர ஷேவாக் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி வருகின்றனர். இந்த ஜோடி எந்த டெஸ்ட் போட்டியிலும் சதம் அடிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் விளையாடியும் இந்த ஜோடி 26 ரன்களை மட்டுமே பெற்றது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. 

இந்நிலையில் அடுத்த மாதம் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மோத உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில்  மாற்றம் செய்யப்பட வேண்டும் என தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இதுநாள் வரை இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்காத கவுதம் கம்பீர் தற்போது மவுனம் கலைத்துள்ளார். அவர் கூறியதாவது:- 

சதம் அடிப்பவர்கள் மட்டுமே சிறந்த ஆட்டக்காரர்கள் என்ற அளவுகோலை வைத்து ஒருவரை எடைபோட கூடாது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 93 ரன்களையும், ஆஸ்திரேலியாவில் 85 ரன்களையும் நான் எடுத்துள்ளேன். 

இதுவரை நடந்த எல்லா டெஸ்ட் போட்டிகளிலும், நானும் ஷேவாக்கும் இணைந்து சராசரியாக 52 ரன்கள் எடுத்துள்ளோம். சர்சதேச கிரிக்கெட்டை பொருத்த வரை இந்த ரன் விகிதம் சிறப்பானது என்றே நான் கருதுகிறேன்.

இவ்வளவு காலமாக நடைபெற்ற எல்லா போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரர்களாக அரை சதத்துக்கு மேல் ரன் எடுத்துள்ளோம். ஒவ்வொரு முறையும் சதம் அடிப்பது முக்கியமல்ல. 

தொடக்க ஆட்டக்காரர்கள் நிறைய பேர் சதம் அடிக்க தவறியுள்ளனர். நான் சதம் அடிக்கவில்லை என்று குறை கூறுபவர்கள், மற்ற ஆட்டக்காரர்களின் புள்ளி விவரங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 

நாங்க தான் சிறந்த துவக்க ஜோடி - காம்பிர்


நானும் சேவக்கும் சேர்ந்து சராசரியாக 53 ரன்கள் எடுத்துள்ளோம். உலக கிரிக்கெட் அரங்கில் நாங்கதான் சிறந்த துவக்க ஜோடி,'' என, காம்பிர் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சேவக், காம்பிர். இவர்களது ஆட்டம் சமீப காலமாக மோசமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் மட்டும் அடித்துள்ள சேவக், சராசரியாக 37.26 ரன்கள் தான் எடுத்துள்ளார். 

இந்த காலக்கட்டத்தில் காம்பிரை எடுத்துக் கொண்டால் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. சராசரியாக 30.31 ரன் தான் எடுத்துள்ளார். இந்நிலையில், இவர்களுக்கு பதில் உள்ளூர் போட்டிகளில் அசத்தும் ஷிகர் தவான், முரளி விஜய்க்கு வாய்ப்பு அளிக்கலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இது குறித்து காம்பிர் கூறியது: 

நானும், சேவக்கும் இணைந்து துவக்க ஜோடியாக சராசரியாக 53 ரன்கள் எடுத்துள்ளோம். உலக கிரிக்கெட் அரங்கில் இது தான் சிறந்தது என நினைக்கிறேன். சதம் அடிக்காததால் எனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை. ஒவ்வொரு முறையும் சதம் அடிக்க முடியாது. 

துவக்க வீரராக சிறப்பாக செயல்படுவதே முக்கியம். தென் ஆப்ரிக்காவில் ஒரு முறை 93 ரன்கள், ஆஸ்திரேலியாவில் 85 ரன்களை எடுத்துள்ளேன். அப்போது 7 அல்லது 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் எனது சதம் பற்றி அதிகம் விவாதித்திருக்க மாட்டார்கள். 

எனது பேட்டிங்கில் குறை எதுவும் இல்லை. அப்படி குறை இருந்தால், ஒரு நாள் போட்டிகளில், கடந்த 24 இன்னிங்சில் 1100 ரன்களை எடுத்திருக்க முடியாது. டெஸ்ட், "டுவென்டி-20', ஒருநாள் போட்டி ஆகிய மூன்றும் வெவ்வேறானவை. அனைத்திலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகவும் கடினம். 

எனது தலைமையிலான கோல்கட்டா அணி ஐ.பி.எல்., தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. இதற்காக எல்லா தொடர்களிலும் வெற்றி பெற முடியாது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை "பழிவாங்கும் தொடர்' என கூறுவதை ஏற்க இயலாது. ஏனெனில் கிரிக்கெட் அல்லது எந்த ஒரு விளையாட்டிலும் பழிவாங்குதல் என்ற வார்த்தைக்கு இடமில்லை. 

இவ்வாறு காம்பிர் கூறினார். 

அக்ரம் ஆதரவு

இந்திய அணியில் சேவக், காம்பிருக்கு மாற்றாக வேறு துவக்க வீரர்கள் இல்லை என, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அக்ரம் குறிப்பிட்டார். 

இவர் கூறுகையில்,""டிராவிட், லட்சுமண் ஓய்வு பெற்ற நிலையில் "மிடில்-ஆர்டரில்' போதிய அனுபவம் இல்லை. இந்த நேரத்தில் துவக்க ஜோடியை மாற்றுவது சரியாக இருக்காது. 

இவர்களுக்கு நிகரான வீரர்களும் இந்திய அணியில் இல்லை. அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இத்தொடரில் சேவக், காம்பிர் இழந்த "பார்மை' மீட்க வேண்டும்,''என்றார். 

ஐ.பி.எல்., அணிகள் சொதப்பியது ஏன்?


சாம்பியன்ஸ் லீக் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் பெரும் ஏமாற்றம் அளித்தன. 

சொந்த மண்ணில் அசத்தும் இந்த அணிகள், வெளிநாட்டில் சொதப்புகின்றன. டில்லி அணி மட்டும் ஓரளவுக்கு திறமை வெளிப்படுத்தியது.

தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் சாதித்த அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) தொடரில் அசத்திய நான்கு அணிகள் கலந்து கொண்டன. 

சச்சின் சொதப்பல்:

இதில் நடப்பு சாம்பியனாக வந்த மும்பை அணியில் சச்சின், ரோகித் சர்மா, போலார்டு, அம்பதி ராயுடு என பெரும் பேட்டிங் படை இருந்தது. பவுலிங்கில் கேப்டன் ஹர்பஜன், மலிங்கா போன்ற அனுபவ வீரர்கள் இருந்தனர். 

ஆனாலும், தென் ஆப்ரிக்க ஆடுகளத்திற்கு ஏற்ப இவர்களால் பக்குவப்படுத்திக் கொள்ள முடியவில்லை. லயன்ஸ், சென்னை, சிட்னி சிக்சர்ஸ் அணிகளிடம் தோல்வி அடைந்தது. ஒரு வெற்றி கூட பெறாமல் நாடு திரும்பியது. 

அணியின் நட்சத்திர வீரரான சச்சின் ஆட்டம் தான் பெரும் ஏமாற்றம் அளித்தது. இவர் நான்கு இன்னிங்சில் 47 ரன்கள்(சராசரி 11.75, ஸ்டிரைக் ரேட் 71.21) தான் எடுத்தார். 

இதில், இரண்டு முறை "போல்டு' ஆனது துரதிருஷ்டம். "டுவென்டி-20' போட்டிக்கு ஏற்ப அதிரடியாக விளையாட தவறிய இவர், ஒரு நாள் போட்டி போல மந்தமாக "பேட்' செய்ததால், அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. மற்ற பேட்ஸ்மேன்களும் சோபிக்காததால், அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

அஷ்வின் வீண்:

கடந்த 2010ல் சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோப்பை வென்ற சென்னை அணியும் பெரிதாக சாதிக்கவில்லை. சிட்னி, லயன்ஸ் அணிகளிடம் தோற்றது. பின் மும்பை, யார்க்ஷயர் அணிகளுக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெற்றது. 

"டுவென்டி-20' அரங்கில் சிறந்த அணியாக கருதப்பட்ட சென்னை, இம்முறை அரையிறுதியை கூட எட்டாதது வருத்தமான விஷயம். தோனி, ரெய்னா, அஷ்வின், ஜடேஜா என இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இடம் பெற்ற போதும், அரையிறுதியை எட்ட வேண்டும் என்ற எண்ணம் துளியும் காணப்படவில்லை. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் நான்கு போட்டிகளில் 3 விக்கெட் தான் வீழ்த்தினார். இவர் சொப்பியதால், அணி எழுச்சி காண முடியவில்லை.

காம்பிர் ஏமாற்றம்:

நடப்பு ஐ.பி.எல்., சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய கோல்கட்டா அணி ஆரம்பத்தில் டில்லி, ஆக்லாந்திடம் தோற்றது. டைட்டன் அணிக்கு எதிராக மட்டும் 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் அளித்தது. பந்துவீச்சில் பாலாஜி ரன்களை வாரி வழங்கினார். கேப்டன் காம்பிரை தான் அணி அதிகம் நம்பி இருந்தது. இவர் 3 இன்னிங்சில் 49 ரன்கள் மட்டும் எடுத்து, அணியின் அரையிறுதி வாய்ப்பை தகர்த்தார். 

மொத்தத்தில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் அலட்சியமாக செயல்பட்ட இந்த மூன்று ஐ.பி.எல்., அணிகளும், கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களை ஏமாற்றிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும்.

தவறுகள் செய்தோம்

சென்னை அணியின் ரெய்னா கூறியது: 

சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. சில போட்டிகளில் தவறு செய்தோம். இதன் காரணமாக நாடு திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சாம்பியன்ஸ் லீக் கோப்பை வெல்லும் தகுதி இருப்பதாகவே உணர்கிறேன். 

யார்க்ஷயர் அணிக்கு எதிராக கேப்டனாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டிக்கு முன் தோனி, என்னை கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு கூறினார். கேப்டனாக சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தார். கேப்டன் பொறுப்பு கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். இப்போட்டியில் எங்கள் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் பத்ரிநாத் சிறப்பாக விளையாடினார்.

இவ்வாறு ரெய்னா கூறினார்.

அரையிறுதியை உறுதி செய்யுமா டில்லி?


சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்று டில்லி டேர்டெவில்ஸ், டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் டில்லி அணி அரையிறுதியை உறுதி செய்யலாம்.

தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. செஞ்சுரியனில் இன்று நடக்கவுள்ள "ஏ' பிரிவு லீக் போட்டியில் டில்லி, டைட்டன்ஸ்(தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதுகின்றன.

சேவக் ஆதிக்கம்:

டில்லி அணி சேவக்கை தான் பெரிதும் நம்பி உள்ளது. பெர்த் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இவர் அதிரடியாக அரைசதம் கடந்து வெற்றிக்கு கைகொடுத்தார். கேப்டன் ஜெயவர்தனா பொறுப்புணர்ந்து ரன் சேர்க்க வேண்டும். பீட்டர்சன், ராஸ் டெய்லர், உன்முக்த் சந்த் தங்களது ரன் வேட்டையை தொடர்ந்தால் நல்லது. பந்துவீச்சில் மார்னே மார்கல், "ஆல்-ரவுண்டர்' அகார்கர், இர்பான் பதான் அசத்த வேண்டும். 

ருடால்ப் நம்பிக்கை:

 அரையிறுதி வாய்ப்பை பெற டைட்டன்ஸ் அணியும் வெற்றிக்காக போராடும். ருடால்ப், டேவிட்ஸ் ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுக்கலாம். கோல்கட்டா அணிக்கு எதிரான(4 ஓவரில், 52 ரன்கள்) போட்டியில் மோசமாக பந்துவீசினார் தாமஸ். இன்றைய போட்டியில் இவர் திறமையை வெளிப்படுத்த வேண்டும். 


சிக்கல் வருமா

இன்று "ஏ' பிரிவில் நடக்கும், லீக் போட்டிகளில் பங்கேற்றும் நான்கு அணிகளில், மூன்று அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்புள்ளது.

அதாவது, டில்லி, டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி நேரடியாக அரையிறுதிக்கு செல்லும். ஒருவேளை டில்லி தோற்றால் 10 புள்ளி, டைட்டன்ஸ் வீழ்ந்தால் 8 புள்ளியுடன் நீடிக்கும். 

* இந்நிலையில் பெர்த் அணிக்கு எதிரான போட்டியில், ஆக்லாந்து தோற்கும்பட்சத்தில், இரு அணிகளும் தலா 6 புள்ளியுடன் வெளியேறும். அரையிறுதி வாய்ப்பு டில்லி, டைட்டன்ஸ் அணிகளுக்கு கிடைக்கும்.

* மாறாக, பெர்த் தோற்றால், ஆக்லாந்து, டில்லி அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்று, அரையிறுதிக்கு செல்லும். பெர்த், டைட்டன்ஸ் அணிகள் வெளியேறும். 

* டைட்டன்ஸ் அரையிறுதிக்கு சென்று, டில்லி, ஆக்லாந்து அணிகள் சம புள்ளியுடன் (10) இருந்தால், "ரன்ரேட்' அடிப்படையில் ஏதாவது ஒரு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அசத்துமா ஆக்லாந்து

செஞ்சுரியன்: இன்று "ஏ' பிரிவில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில், ஆக்லாந்து, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த பெர்த் அணி, வெற்றியுடன் நாடுதிரும்ப முயற்சிக்கும். கேப்டன் ஹாக்கின்சின் ஆக்லாந்து அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றால், டில்லி-டைட்டன்ஸ் அணிக்கு இடையிலான போட்டியின் முடிவை பொறுத்து, ஆக்லாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் இரு அணிகளும் வெற்றிக்கு போராட தயாராக உள்ளதால், கடும் போட்டியை காணலாம்.

முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் மரணம்


முன்னாள் ரயில்வே கிரிக்கெட் அணி மற்றும் சிறந்த முதல் தர கிரிக்கெட் வீரருமான ராஜா அலி (36) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பு காரணமாக ராஜா இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் ஒரு குழந்தை உள்ளனர்.

இடக்கை ஆட்டக்காரரான இவர், ரஞ்சி மற்றும் இரானி கோப்பைகளை வென்ற ரயில்வே அணியில் இடம் பிடித்திருந்தார். 

87 முதல் தர போட்டிகளில் விளையாடிய இவர், 9 சதங்கள் மற்றும் 22 அரை சதங்களுடன் 4,337 ரன்கள் எடுத்துள்ளார்.

வெற்றியுடன் திரும்புகிறது சென்னை கிங்ஸ்


சாம்பியன்ஸ் லீக் தொடரில் யார்க்ஷயருக்கு எதிரான போட்டியில் சென்னை கிங்ஸ் அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. 

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடர் நடக்கிறது. நேற்று தங்களது கடைசி லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ், யார்க்ஷயர் அணிகள் மோதின. "டாஸ் வென்ற சென்னை கேப்டன் ரெய்னா, "பீல்டிங் தேர்வுசெய்தார். 

யார்க்ஷயர் அணிக்கு லித் (11), காலே (23) ஆறுதல் தந்தனர். மில்லர் 28 ரன்களில் அவுட்டான போதும், பேலன்ஸ் அரைசதம் (58) கடந்து அவுட்டானார். யார்க்ஷயர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. 

எளிய இலக்கைத் துரத்திய சென்னை கிங்சின் டுபிளசி (1), முரளிவிஜய் (13) நிலைக்கவில்லை. ரெய்னா (31), பத்ரிநாத் (47), தோனி (31) வெற்றியை உறுதி செய்தனர்.  சென்னை அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. 

கவலை தரும் காம்பிர், சேவக் பார்ம்


காம்பிர், சேவக்கின் மோசமான "பார்ம்' கவலை அளிக்கிறது,'' என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வருத்தம் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர்கள் சேவக், காம்பிர். சமீபகாலமாக இவர்களது ஆட்டம் மோசமாக உள்ளது. 

வரும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், கடினமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது குறித்து கபில் தேவ் கூறியது:
 காம்பிர், சேவக் திறமையான துவக்க வீரர்கள். 

இவர்கள் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். எப்போது இது போன்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறதோ, அதை தக்க வைக்க வேண்டும். 

சிறந்த வீரர்களான இவர்கள், அணிக்காக மட்டுமன்றி, தங்கள் நலனுக்காகவும் ரன்கள் சேர்க்க வேண்டும். இல்லையெனில், இது மகிழ்ச்சி தரக்கூடியதாக அமையாது. 

சச்சின் ஜாம்பவான் வீரர். இவரது முடிவு குறித்து பேசமால் இருப்பது தான் நல்லது. அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்பதை, சமீபத்திய பேட்டியில் சச்சின் தெரிவித்து இருந்தார். 

தோனியை பொறுத்தவரை, கேப்டன் பணியில் நிறைய வெற்றிகள் கொடுத்து விட்டார். 2007 ("டுவென்டி-20'), 2011 (50 ஓவர்) என, இரண்டு உலக கோப்பை வென்று தந்துள்ளார். 

பல்வேறு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியை, டெஸ்ட் தரவரிசையில் அணியை "நம்பர்-1' இடத்துக்கு கொண்டு சென்றார். இதற்கு பின்பும், வெற்றி தேடித்தர வேண்டும் என, தோனியிடம் எதிர்பார்க்கக் கூடாது. 

அணித் தேர்வாளர்கள், ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இருப்பினும், அவர்களது அனைத்து செயல்களும், இந்திய அணியின் நன்மைக்காக இருக்கும் என்று நம்புகிறேன். 

யார், யாரை தேர்வு செய்வது என்பதெல்லாம் நிர்வாகத்தின் முடிவு. இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

சாம்பியன்ஸ் லீக் T20 - வெளியேறியது சென்னை, மும்பை


சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடரின் அரையிறுதிக்கு லயன்ஸ் அணி முன்னேறியது. இதனால் இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில் சென்னை, மும்பை அணிகள் வெளியேறுகின்றன.

தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடர் நடக்கிறது. 

இதன் "பி பிரிவில் நடந்த முக்கிய போட்டியில் ஹைவெல்டு லயன்ஸ், யார்க்ஷயர் அணிகள் மோதின. 

முதலில் விளையாடிய யார்க்ஷயர் அணிக்கு காலே (21), ஜாக்குஸ் (31)கைகொடுக்க, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 131 ரன்கள் மட்டும் எடுத்தது.

எட்டிவிடும் இலக்கை விரட்டிய லயன்ஸ் அணிக்கு கேப்டன் அல்விரோ பீட்டர்சன் (19), மெக்கன்சி (13), குயின்டன் (32) ஸ்கோர் உயர உதவினர். 

கடைசி நேரத்தில்  டுவைனே (25), சைம்ஸ் (27) அதிரடி கைகொடுக்க, லயன்ஸ் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சென்னை "அவுட்:

இதனால் "பி பிரிவில் 12 புள்ளிகள் பெற்ற லயன்ஸ், சிட்னி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 

இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில், 2 புள்ளிகள் பெற்ற மும்பை, புள்ளிக்கணக்கை துவக்காத சென்னை, யார்க்ஷயர் அணிகள் தொடரில் இருந்து வெளியேறுகின்றன.

சென்னை கிங்ஸ் இக்கட்டான நிலையில் மும்பையுடன் மோதல்


சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், "நடப்பு சாம்பியன்' மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளும் வெற்றியை நோக்கி களம் காணுகின்றன.

தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் இன்றைய "பி' பிரிவு முக்கிய போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த பிரிவில் இருந்து ஏற்கனவே சிட்னி சிக்சர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. மீதமுள்ள ஒரு இடத்துக்கு நான்கு அணிகள் போட்டியிடுகின்றன. 

கடந்த 2010ல் ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன் லீக் தொடரில் கோப்பை வென்றது தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் மீண்டும் சாம்பியன் என, தொடர்ந்து அசத்திய இந்த அணி, இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தடுமாறுகிறது. 

தொடரின் முதல் இரு லீக் போட்டியில் சிட்னி மற்றும் லயன்ஸ் அணிகளுக்கு எதிரான தோல்வியால், அணியின் அரையிறுதி வாய்ப்பு குறைந்துள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் அதிசயங்கள் நிகழ்த்தினால் மட்டுமே, அரையிறுதி குறித்து யோசிக்கலாம். 

பேட்டிங் ஏமாற்றம்:

சென்னை அணிக்கு பேட்டிங்கில் முதல் போட்டியில் ரெய்னா, டுபிளசி மட்டும் சிறப்பாக விளையாடினர். மற்றவர்கள் நன்றாக ரன்கள் சேர்க்கத் துவங்குகின்றனர். ஆனால், தொடர்ந்து களத்தில் நிலைக்க மறுப்பதால், அணியும் தடுமாறுகிறது. 

துவக்க வீரர் முரளி விஜய், கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா ஆகியோருடன் மைக்கேல் ஹசியை மீண்டும் களமிறக்கிப் பார்க்கலாம்.

பவுலிங் சொதப்பல்:

அணியின் பவுலிங் தான் மிகவும் சொதப்பலாக உள்ளது. முதல் போட்டியில் 185, அடுத்து 159 ரன்கள் என விட்டுக்கொடுத்தனர். போலிஞ்சர் மட்டும் சற்று ஆறுதல் தருகிறார். மற்றபடி ஹில்பெனாஸ் விக்கெட் வீழ்த்த தடுமாறுவது பலவீனம் தான். கடந்த இரு போட்டிகளில் ஏமாற்றிய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினுக்குப் பதில் இன்று ஜகாதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. 

மும்பை பரிதாபம்:

"நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய மும்பை அணி, முதல் போட்டியில் லயன்சிடம் வீழ்ந்தது. யார்க்ஷயருடன் நல்ல நிலையில் இருந்த போது, மழை வந்துவிட எல்லாம் வீணாக போனது. சீனியர் சச்சின் பேட்டிங்கில் தொடர்ந்து ஏமாற்றம் தருகிறார். டுவைன் ஸ்மித், போலார்டு மட்டும் சிறப்பான ஆட்டத்தை தருகின்றனர். ரோகித் சர்மா பந்துகளை வீணடிப்பது நீடிக்கிறது.

எழுச்சி பெறுவாரா:

வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில், மலிங்கா அதிக விக்கெட் முடியாமல் தடுமாறுகிறார். இன்று இவர் எழுச்சி பெற்றால், சென்னை பாடு திண்டாட்டம் தான். தவிர, மிட்சல் ஜான்சன், சுழலில் ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா ஆகியோரும் இன்று கைகொடுக்க வேண்டும்.
வெளியேறுவது யார்:

இத்தொடரில் இரு போட்டிகளில் பங்கேற்றுள்ள மும்பை அணி 2 புள்ளியும், சென்னை புள்ளிகள் எதுவும் பெறாமலும் உள்ளது. இன்றைய போட்டியில் தோற்கும் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும் என்பதால், களத்தில் கடும் போட்டி காத்திருக்கிறது.

எல்லாம் "சிங்கங்கள்' கையில்...

என்ன தான் மும்பை, சென்னை அணிகள் வெற்றிக்கு போராடினாலும், இந்த அணிகளின் தலைவிதி லயன்ஸ் (சிங்கங்கள்) அணியின் கையில் தான் உள்ளது. 

* ஏனெனில், ஏற்கனவே இரு போட்டியில் வென்றுள்ள லயன்ஸ், இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் யார்க்ஷயரை வென்றால், 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். சென்னை, மும்பை, யார்க்ஷயர் அணிகள் வெளியேறும்.

* அதே நேரம், லயன்ஸ், மும்பை அணிகள் இன்று தோற்கும் பட்சத்தில், யார்க்ஷயர் 6, சென்னை 4 புள்ளிகள் பெறும். இந்த இரு அணிகள் மோதும் (அக்., 22) லீக் போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு செல்லும்.

* மாறாக, இன்று மும்பை, யார்க்ஷயர் வென்றால் இரு அணிகளும் தலா, 6 புள்ளி பெறும். சென்னை வெளியேறும். 

அக்., 22ல் நடக்கும் தங்களது கடைசி லீக் (மும்பை-சிட்னி, சென்னை-யார்க்ஷயர்) போட்டிகளில் வெல்லும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். 

ஒருவேளை, இதில் மும்பை, யார்க்ஷயர் என இரு அணியும் வெற்றிபெற்றால், "ரன்ரேட்' அடிப்படையில் ஒரு அணி முடிவாகும். இதில், தற்போதைய நிலையில் மும்பை அணிக்கு அதிக வாய்ப்புள்ளது. 

தோல்வி அதிகம்

சென்னை, மும்பை அணிகள் இதுவரை ஐ.பி.எல்., தொடரில் 11 போட்டிகளில் மோதின. இதில் 6ல் தோற்ற சென்னை அணி, 5 போட்டியில் மட்டும் வென்றது.

* சாம்பியன்ஸ் லீக் தொடரில் இரு அணிகள் மோதிய, 2011 போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது.

மழை வருமா

போட்டி நடக்கும் ஜோகனஸ்பர்க்கில் இன்று இடியுடன் கூடிய மழை வர 90 சதவீதம் வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை காரணமாக சென்னை, மும்பைக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டால், சென்னை அணி "அவுட்' தான். 

சச்சினுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதவி


மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஆஸ்திரேலியாவில் வசித்தால் அவருக்கு பிரதமர் பதவி கூட அளியுங்கள். 

ஆனால் அவர் வசிப்பதே இந்தியாவில் .இது சச்சினுக்கு “ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா” விருது வழங்கப்படும் என்ற ஆஸி., பிரதமர் ஜூலியா கில்லார்டின் அறிவிப்புக்கு அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹைடனின் கருத்து அல்ல எரிச்சல்.

அரசுமுறை பயணமாக இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு, இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான “ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா” விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். 

இதற்கு இந்தியாவில் வரவேற்பும் ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் மாத்யூ ஹைடன், தன்னைப் பொறுத்தவரையில் “ஆர்ட்ர் ஆப் ஆஸ்திரேலியா” விருது ஆஸ்திரேலியர்களுக்கு மட்டுமே. 

சில விஷயங்கள் நமது நாட்டிற்கு மட்டுமே உரியது. சச்சினைப் பொறுத்தவரையில் அவர் மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் மட்டும் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்திருந்தால் அவருக்கு பிரதமர் பதவியே கொடுத்திருக்கலாம். 

ஆனால் அவர் இந்தியாவில் அல்லவா வசிக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு எனது சிட்னி வீட்டில் விருந்தளித்ததை மறக்க முடியாது என்று தெரிவித்துள்ள அவர், ஆஸ்திரேலியர்களால் சச்சின் மிகவும் விரும்பப்படுபவராகவும் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி மைதானங்கள் மாற்றம்


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்த மாதம் கடைசியில் இருந்து டிசம்பர் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
 
வருகிற 30-ந்தேதி பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 17-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது. 20 ஓவர் போட்டி டிசம்பர் 20 மற்றும் 22-ந்தேதி நடைபெறும்.
அதன்பின்னர் ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியா வந்து 5 ஒருநாள் போட்டியில் விளையாடும்.
 
இந்நிலையில் வட இந்தியாவில் ஜனவரி மாதம் அதிக குளிர் இருக்கும். இதனால் அந்த காலநிலைக்கு ஏற்ப இரண்டு ஒரு நாள் போட்டிகளின் இடம், நேரத்தை பி.சி.சி.ஐ. மாற்றியுள்ளது.
 
அதாவது, ஜனவரி 23-ம் தேதி இரு அணிகளும் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குவதாக இருந்த இப்போட்டி 12 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.
 
இதேபோல் ஜனவரி 27-ல் நடைபெற உள்ள 5-வது ஒருநாள் போட்டி தர்மசாலாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பகல் ஆட்டமாக நடைபெறும் இப்போட்டி காலை 9 மணிக்கு தொடங்கும்.
 
இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் ஜனவரி 11-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி ராஜ்கோட்டில் நடக்கிறது. 2-வது போட்டி கொச்சியிலும் (ஜன.15), 3-வது போட்டி ராஞ்சியிலும் (ஜன.19) பகலிரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளன.

இங்கிலாந்து டெஸ்ட் - ரெய்னாவுக்கு பதில் யுவராஜ்சிங்


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்த மாதம் கடைசியில் இருந்து டிசம்பர் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. 

வருகிற 30-ந்தேதி பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 17-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது. 

20 ஓவர் போட்டி டிசம்பர் 20 மற்றும் 22-ந்தேதி வரை நடைபெறும். பின்னர் ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியா வந்து 5 ஒருநாள் போட்டியில் விளையாடும். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

புற்றுநோயில் இருந்து மீண்ட அவர் 20 ஓவர் உலக கோப்பையில் ஆடினார். துலீப் டிராபி போட்டியில் யுவராஜ்சிங் இரட்டை சதம் அடித்தார். அவர் 243 பந்துகளில் 208 ரன் (33 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். 

இந்த ஆட்டம் மூலம் அவர் டெஸ்ட் அணியில் தன்னை தேர்வு செய்யலாம் என்பதை நிரூபித்துள்ளார். 

ரெய்னாவுக்கு பதிலாக யுவராஜ்சிங் டெஸ்ட் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ரெய்னா 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கு தான் ஏற்றவர் என்ற கருத்து நிலவுகிறது. 

சந்தீப்பட்டில் தலைமையிலான புதிய தேர்வு குழு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியை முதல் முறையாக தேர்வு செய்கிறது.

சென்னை சொதப்பல் கிங்ஸ்


லயன்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

தொடர்ந்து இரண்டாவது தோல்வியை பெற்ற சென்னை அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அபாரமாக ஆடிய லயன்ஸ் அணி கடைசி ஓவரில் "திரில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்காவில், நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கேப்டவுனில் நேற்று இரவு நடந்த "பி பிரிவு லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா), ஹைவெல்டு லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதின.

வந்தார் ஆல்பி:

சென்னை கிங்ஸ் அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. மைக்கேல் ஹசி, யோ மகேஷ் நீக்கப்பட்டு, உள்ளூர் வீரரான ஆல்பி மார்கல், விரிதிமன் சகா தேர்வு செய்யப்பட்டனர். "டாஸ் வென்ற லயன்ஸ் அணி கேப்டன் ஆல்விரோ பீட்டர்சன், "பீல்டிங் தேர்வு செய்தார்.

நல்ல துவக்கம்:

முதலில் பேட் செய்த சென்னை கிங்ஸ் அணிக்கு டுபிளசி, முரளி விஜய் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த போது டுபிளசி (25) அவுட்டானார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (20) பெரிய அளவில் சாதிக்கவில்லை. பங்கிசோ சுழலில் முரளி விஜய் (22) வெளியேறினார்.

தோனி அபாரம்:

பின் இணைந்த கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. சிம்ஸ் பந்தில் சிக்சர் விளாசிய ஜடேஜா, டி பிரியுன் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய தோனி, மோரிஸ் பந்தில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்த போது ஜடேஜா (21) பெவிலியன் திரும்பினார். ஆல்பி மார்கல் (4) நிலைக்கவில்லை.

பத்ரிநாத் அதிரடி:

பின் தோனியுடன் இணைந்த பத்ரிநாத், நானஸ் பந்தில் இரண்டு சிக்சர் விளாச, ஸ்கோர் 150 ரன்களை கடந்தது. தன்விர் பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்ற தோனி (34) அவுட்டானார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. பத்ரிநாத் (27) அவுட்டாகாமல் இருந்தார். லயன்ஸ் அணி சார்பில் பங்கிசோ 2, தன்விர், நானஸ், மோரிஸ், டி பிரியுன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

போலிஞ்சர் கலக்கல்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஹைவெல்டு லயன்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. போலிஞ்சர் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் கேப்டன் ஆல்விரோ பீட்டர்சன் எல்.பி.டபிள்யு., முறையில் "டக்-அவுட் ஆனார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்த குயின்டன் டி காக் (5), இம்முறை போலிஞ்சரிடம் சரணடைந்தார்.

குலாம் அசத்தல்:

பின் இணைந்த குலாம், நீல் மெக்கன்சி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. ஆல்பி மார்கல் வீசிய 9வது ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த குலாம், ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், டுபிளசி ஆகியோரது பந்தையும் விட்டுவைக்கவில்லை. டுபிளசி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட இவர் அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த போது 46 பந்தில் 64 ரன்கள் (4 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்த குலாம் அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த மெக்கன்சி (33) நம்பிக்கை தந்தார்.

"திரில் வெற்றி:

"மிடில்-ஆர்டரில் களமிறங்கிய ஜீன் சிம்ஸ், கிறிஸ் மோரிஸ் ஜோடி பொறுப்பாக ஆடியது. சென்னை அணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 

ஆல்பி மார்கல் வீசிய 20வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்த இரண்டு பந்தில் சிம்ஸ் இரண்டு பவுண்டரி அடிக்க, லயன்ஸ் அணி 19.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிம்ஸ் (39), மோரிஸ் (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை லயன்ஸ் அணியின் பங்கிசோ பெற்றார்.

ஏற்கனவே மும்பை அணியை வீழ்த்திய லயன்ஸ் அணி, தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்து, அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேற, அடுத்த இரண்டு போட்டியிலும் நல்ல "ரன்-ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். பின், மற்ற போட்டிகளின் முடிவைப் பொறுத்து அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

50வது சிக்சர்

நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடரில் 50வது சிக்சர் அடித்த பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பெற்றார். இவர், லயன்ஸ் அணியின் கிறிஸ் மோரிஸ் வீசிய 14வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு இப்பெருமை பெற்றார். முதல் சிக்சரை டைட்டன்ஸ் அணியின் ருடோல்ப்(எதிர், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்) அடித்தார்.

உடைந்தது "பேட்

நேற்றைய போட்டியில் சென்னை கிங்ஸ் வீரர் டுபிளசியின் பேட் உடைந்தது. சோகைல் தன்விர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் 4வது பந்து டுபிளசி பேட்டின் கைபிடியை பலமாக தாக்கியதால் உடைந்தது. பின் புதிய பேட்டுடன் விளையாடிய டுபிளசி ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 25 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

19வது ஓவரில் 19 ரன்கள்

நேற்று லயன்ஸ் அணியின் டிர்க் நானஸ் வீசிய 19வது ஓவரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட மொத்தம் 19 ரன்கள் கிடைத்தது. இதனால் சென்னை அணி 150 ரன்களை எட்ட உதவியது.