இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 102 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா வீரர் பீட்டர் சிடில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
ஹெடிங்லி மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் நாள் ஆட்டம் நடைபெற்றது. டாஸில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
ஆனால் ஆரம்பத்திலேயே இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பீட்டர் சிடில் தனது 2-வது ஓவரிலேயே ஸ்டிராûஸ வெளியேற்றினார். ஸ்டிராஸ் 3 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார்.
இதைத் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர் குக்குடன், ரவி பொபாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஸ்டூவர்ட் கிளார்க் பந்துவீச்சில் மைக்கேல் கிளார்க்கிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார் பொபாரா. அவர் ஒரு ரன் மட்டுமே சேர்த்தார்.
அதன் பின்னர் இயன் பெல், காலிங்வுட், குக், பிராட் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது.
உணவு இடைவேளைக்குப் பின்னரும் இங்கிலாந்து சரிவிலிந்து மீளவில்லை. பீட்டர் சிடிலின் அனல்பறக்கும் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் 33.5 ஓவர்களிலேயே இங்கிலாந்து 102 ரன்களுக்கு சுருண்டது. அணியில் அதிக அளவாக பிரையர் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குக் 30 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ஸ்கோரில் ஆட்டமிழந்தனர்.
பீட்டர் சிடில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டூவர்ட் கிளார்க் 3 விக்கெட்டுகளும், ஜான்சன், ஹில்பெனாஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா தேநீர் இடைவேளையின்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரிக்கி பாண்டிங் 39 ரன்களும், வாட்சன் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சைமன் காடிச் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை ஹார்மிசன் வீழ்த்தினார்
0 comments:
Post a Comment