ஊக்கமருந்து விவகாரம்: இந்திய வீரர்களுக்காக விதியை தளர்த்த முடியாது; சர்வதேச அமைப்பு பிடிவாதம்

கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்துகளை பயன்படுத்துவதை தடுப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் சங்கம் சர்வதேச ஊக்க மருந்து எதிர்ப்பு இயக்கத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. சர்வதேச ஊக்க மருந்து எதிர்ப்பு இயக்கம் கிரிக்கெட் வீரர்களுக்காக புதிய விதி முறைகளை வகுத்து உள்ளது. இதை சர்வதேச கிரிக்கெட் சங்கம் ஏற்றுக்கொண்டது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் கையெழுத்திட வேண்டும் என கூறப்பட்டது. இதை ஏற்று அனைத்து நாட்டு வீரர்களும் கையெழுத்திட்டனர். ஆனால் இந்திய வீரர்கள் மட்டும் கையெழுத்திட மறுத்து வருகின்றனர்.

போட்டி நடக்காத காலங்களிலும் வீரர்கள் தாங்கள் தங்கி இருக்கும் இடங்கள் மற்றும் விபரங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இதை வீரர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக இருக்கிறது என கூறி இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் சங்கமும் ஆதரவாக உள்ளது.

அனைத்து நாட்டு வீரர்களும் சம்மதித்து விட்ட நேரத்தில் இந்திய வீரர்கள் மட்டும் எதிர்ப்பதால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. எனவே விதிமுறைகள் தளர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதற்காக விதிமுறைகளை மாற்ற முடியாது என்று சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு இயக்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:-

சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளைத்தான் கிரிக்கெட்டுக்கும் கொண்டு வந்து உள்ளோம். இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தனிநபர் விளையாட்டு, அணி விளையாட்டு என அதற்கு தகுந்த மாதிரி விதிமுறைகளை உருவாக்கி உள்ளோம். அனைத்து ஒலிம்பிக் சங்கங்கள், சர்வதேச ஒலிம்பிக் சங்கங்களும் இதை ஏற்றுக்கொண்டு உள்ளன.

சர்வதேச சூழ்நிலைக்கு ஏற்றார்போல வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை ஒரு குறிப்பிட்ட அணிக்காக எப்படி மாற்ற முடியும்?

இவ்வாறு அவர் கூறினார்

0 comments:

Post a Comment