இலங்கை பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டிகள் ஆகஸ்டில் துவக்கம்

இந்தியாவில் கடந்த 2008-ல் துவக்கப்பட்ட 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச அளவில் பிரபலமானதை அடுத்து ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டில் இதே போன்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் துவங்கியுள்ளன.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இதுபோன்ற போட்டிகளை நடத்திவரும் நிலையில் தற்போது இலங்கையும் இதன் வரிசையில் சேர்ந்துள்ளது.

இலங்கை பிரீமியர் லீக் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 20 ஓவர் போட்டித் தொடர் வரும் ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி கோலாகலமாக இலங்கையில் துவங்க உள்ளது. இத்தொடரின் இறுதிப் போட்டி ஆகஸ்டு 31-ம் தேதி நடைபெற இருக்கிறது.

இப்போட்டியில் இலங்கையின் உள்ளூர் அணிகளான வயம்பா, கண்டுரட்டா உள்ளிட்ட ஏழு அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டியில் விளையாட இருக்கும் இலங்கை அணி வீரர்களின் ஏலம் வரும் ஜூலை 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு அணியிலும் 18 வீரர்கள் இருக்கலாம். அதில் 6 பேர் வெளிநாட்டை சேர்ந்த வீரர்களாக இருக்கலாம். விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் உள்ளூர் வீரர்கள் 9 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 2 பேரும் இடம் பெறலாம். இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் கொழும்பு மற்றும் பல்லேகலே ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஏழு அணிகளையும் இந்தியாவை சேர்ந்த கார்ப்பரேட் மற்றும் விளையாட்டுத்துறை நிறுவனங்களே வாங்கியிருக்கின்றன என்பதுதான்.

இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியிருப்பதுதான்.

அசத்துவாரா ஜூனியர் சச்சின்

சச்சின் வழியில் அசத்த காத்திருக்கிறார் அவரது மகன் அர்ஜுன். மும்பை கிரிக்கெட் (எம்.சி.ஏ.,)சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். இவரது மகன் அர்ஜுனும் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமாக உள்ளார்.

இடது கை பேட்ஸ்மேனான இவர், வேகப்பந்துவீச்சிலும் வல்லவர். மும்பையில் உள்ள திருபாய் அம்பானி பள்ளியில் படிக்கும் இவர், சமீபத்தில் உள்ளூர் கிளப் அணிக்காக பங்கேற்று சதம்(124 ரன்) விளாசினார்.

இந்நிலையில், அடுத்த மாதம் எம்.சி.ஏ., சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம் நடக்க உள்ளது.

இதற்கான 32 பேர் கொண்ட உத்தேச அணியில் அர்ஜுனும் இடம் பெற்றுள்ளார். இது குறித்து எம்.சி.ஏ., இணை செயலர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் ஷெட்டி கூறுகையில்,""கோடை கால கிரிக்கெட் தொடரில் அர்ஜுன் சிறப்பாக செயல்பட்டார்.

ஐந்து போட்டிகளில் 250 ரன்களுக்கும் மேல் எடுத்தார். இதன் அடிப்படையில் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜூலை 3ம் தேதி பயிற்சி துவங்கும், என்றார்.

கிரிக்கெட் உலகில் அடுத்த சச்சின் தெண்டுல்கர் ரெடி

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார்.

கடந்த மாதம் மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெற்றன.

இதில் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜுன் தெண்டுல்கரும் கலந்துகொண்டார்.

12 வயதே ஆன அர்ஜுன், இந்த போட்டியில் ஒரு சிக்சர், 14 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 124 ரன்கள் எடுத்து தனது அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய உதவினார். இந்த சிறப்பான ஆட்டமே இவரை 14 வயதுக்குட்பட்டோருக்கான வீரர்கள் பட்டியலில் இடம் பிடிக்க செய்துள்ளது.

கடந்த வருடம் புனேயில், நடைபெற்ற கேடன்ஸ் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டியில் அறிமுகமான முதல் ஆட்டத்தில் அர்ஜுன் 39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அன்று முதல் செய்திகளில் வரவும் ஆரம்பித்தார் அர்ஜுன்.

இடது கையில் பந்து வீசும் பழக்கமுள்ள அர்ஜுன், அடுத்து 2011-ல் நடைபெற்ற மற்றொரு போட்டியில் சிறப்பாக பந்து வீசி 22 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிரேங்கிங் - தோனி பின்னடைவு

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்திய கேப்டன் தோனி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது.

இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்திய கேப்டன் தோனி 4வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இவர், 5வது இடத்தை இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக்குடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மற்ற இந்திய வீரர்களான விராத் கோஹ்லி 3வது, கவுதம் காம்பிர் 17வது இடத்தில் நீடிக்கின்றனர். தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, முதலிடத்தில் உள்ளார்.


அஷ்வின் முன்னேற்றம்:

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 6வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறினார்.

மற்ற இந்திய வீரர்களான ரவிந்திர ஜடேஜா (31வது இடம்), ஹர்பஜன் சிங் (34வது), ஜாகிர் கான் (35வது), பிரவீண் குமார் (36வது), முனாப் படேல் (50வது) ஆகியோர் "டாப்-50' வரிசையில் உள்ளனர். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் டசாட்சொபே உள்ளார்.


இந்தியா "நம்பர்-3':

அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 117 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா (123 புள்ளி), தென் ஆப்ரிக்கா (118) முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றன. இங்கிலாந்து, இலங்கை அணிகள் தலா 112 புள்ளிகளுடன் முறையே 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளன.

ஜெர்மனி உலக சாதனை! - அரையிறுதிக்கு முன்னேறியது

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதியில் ஜெர்மனி அணி, கிரீசை வீழ்த்தி, அரையிறுதிக்கு சுலபமாக முன்னேறியது. தவிர, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து 15வது வெற்றியை பெற்று உலக சாதனை படைத்தது.

கிரீஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் போலந்து, உக்ரைனில் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதியில் ஜெர்மனி, கிரீஸ் அணிகள் மோதின.

ஜெர்மனி அணியில் கோமஸ், தாமஸ் முல்லர், பொடோல்ஸ்கி ஆகிய முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டு, போயட்டங், ஆன்ட்ரூ ஸ்சருள் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். கிரீஸ் அணியின் கேப்டன் கரகவுனிசிற்கு பதில் கிரிகோரிஸ் வாய்ப்பு பெற்றார்.

போட்டியின் துவக்கத்தில் ஜெர்மனி வீரர்கள் நிறைய கோல் வாய்ப்புகளை வீணாக்கினர். 4வது நிமிடத்தில் கெடிரா, கோல் அடித்தார். இது "ஆப் சைடு' கோல் என நடுவர் அறிவித்தார்.போயட்டங், மெசூர் ஆசில், குளோஸ் ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டனர்.

போட்டியின் 39வது நிமிடத்தில் மெசூட் ஆசில் அடித்த பந்தை பெற்ற, ஜெர்மனி அணி கேப்டன் பிலிப் லாம், முதல் கோல் அடித்து எண்ணிக்கையை துவங்கி வைத்தார். முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது.


கோல் மழை:

இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற கிரீஸ் அணியின் ஜார்ஜியோஸ் சமராஸ், ஒரு கோல் அடித்து, ஸ்கோரை சமன் செய்தார். இதன் பின், ஜெர்மனி வீரர்கள், கிரீஸ் கோல் ஏரியாவில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். 61வது நிமிடத்தில் ஜெர்மனியின் கெடிரா ஒரு கோல் அடிக்க, 2-1 என முன்னிலை கிடைத்தது.

அடுத்த 7 வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு "பிரி-கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதை மெசூட் ஆசில் அடிக்க, அதனை குளோஸ், அப்படியே தலையால் முட்டி கோலாக மாற்றினார். சர்வதேச அளவில் குளோஸ் அடித்த 64வது கோல் இது.


"சூப்பர்' முன்னிலை:

பின், 74வது நிமிடத்தில் மீண்டும் அசத்தினார் மெசூட் ஆசில். இம்முறை இவர் பந்தை குளோசிடம் அனுப்பினார். இவரிடம் இருந்து பந்தை பெற்ற மார்கோ ரியுஸ், கோலாக மாற்ற, ஜெர்மனி அணி 4-1 என, அசைக்க முடியாத முன்னிலை பெற்றது.

9வது நிமிடத்தில், ஜெர்மனி கோல் ஏரியாவில், பந்து போயட்டங் கையில் பட, கிரீஸ் அணிக்கு "பெனால்டி' வாய்ப்பு தரப்பட்டது. இதை சல்பிங்கிடிஸ் கோலாக மாற்றினார்.


உலக சாதனை:

முடிவில் ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து, சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து 15 போட்டிகளில் வென்ற அணி என, உலக சாதனை படைத்தது ஜெர்மனி. கடந்த 2010 உலக கோப்பை தொடரில் 3வது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி அணி, உருகுவேயை வென்றது. இதில் இருந்து வெற்றிநடையை தொடர்கிறது. இதற்கு முன் ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் அணிகள் தொடர்ந்து 14 வெற்றி பெற்றுள்ளன.


கேப்டன் சபதம்

ஜெர்மனி அணி கேப்டன் பிலிப் லாம் கூறுகையில்,""கிரீசிற்கு எதிரான போட்டியில் நிறைய தவறுகள் செய்தோம். இதனால் தான் அவர்கள் 2 கோல் அடித்தனர். அரையிறுதியில் தவறு செய்ய மாட்டோம். முழுத்திறமை வெளிப்படுத்துவோம். எங்களை வீழ்த்துவது கடினம்,'' என்றார்.

டென்னிஸ் சர்ச்சை: தீர்வு எப்போது?

லண்டன் ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸ் பங்கேற்பாரா, இல்லையா என்பது, வரும் 28ம் தேதிக்கு மேல் தான் உறுதியாக தெரியும்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு சர்வதேச தரவரிசையில் 7வது இடத்திலுள்ள பயஸ், நேரடியாக தகுதி பெற்றார்.

இவருடன் விளையாட மகேஷ் பூபதி, போபண்ணா இருவரும் மறுத்த நிலையில், வேறு வழியின்றி "ஜூனியர்' வீரர் விஷணு வர்தன் (207வது "ரேங்க்') விளையாடுவார் என்றும், கலப்பு இரட்டையரில் பயஸ்-சானியா ஜோடி பங்கேற்கும் எனவும் இந்திய டென்னிஸ் சங்கம்(ஏ.ஐ.டி.ஏ.,) அறிவித்தது.

பயஸ், இதை ஏற்றுக்கொண்டாரா, இல்லையா என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை.

இவரை சமாதானப்படுத்த ஏ.ஐ.டி.ஏ., தேர்வுக்குழுவின் "சீனியர்' ரோகித் ராஜ்பால், லண்டன் சென்றும், சமாதானம் ஏற்பட்டதாக தெரியவில்லை.


காரணம் என்ன:

வரும் 28ம் தேதி சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,), லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சிறப்பு அனுமதி ("வைல்டு கார்டு') பெற்றவர்கள் பெயரை வெளியிடுகிறது. இதில் சானியா மிர்சா பெயர் இருந்து, அவர் பயசுடன் விளையாடுவது உறுதி என்றால் தான், லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்பார். இல்லையென்றால், பயஸ் விலகி விடலாம்.


சானியா மறுப்பு:

ஏனெனில், பூபதி-சானியா ஜோடி கலப்பு இரட்டையரில் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளது. இதனால், பயசை ஏற்க சானியா மறுக்க அதிக வாய்ப்புள்ளது. தவிர, பயஸ், சானியா இருவரும் முன்கள வீரர்கள்.

இவர்கள் இணைந்து விளையாடிய 2010 காமன்வெல்த் போட்டி காலிறுதியில் சாதாரண அறிமுகமற்ற ஜோடியிடம் தோற்றது. இதனால், பின்கள வீரரான பூபதியுடன் சேர்ந்தால் தான் பதக்கம் வெல்ல வாய்ப்பு கிடைக்கும் என, சானியா நம்புகிறார்.

இதனால், இப்பிரச்னையில் வரும் 28ம் தேதிக்குப் பின் தான், உறுதியாக முடிவு தெரியும் என்று நம்பப்படுகிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தல்

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக போர்ச்சுகல் முன்னேறியது. கேப்டன் கிறிஸ்டியனோ ரொனால்டோவின் அசத்தல் கோல், வெற்றிக்கு கைகொடுத்தது. செக் குடியரசு அணி பரிதாபமாக வெளியேறியது.

போலந்து மற்றும் உக்ரைனில் 14வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் லீக் சுற்று முடிந்து தற்போது காலிறுதி போட்டிகள் நடக்கின்றன. வார்சா நகரில் நடந்த முதல் காலிறுதியில் போர்ச்சுகல், செக் குடியரசு அணிகள் மோதின.

போட்டி துவங்கியது முதல் இரு அணிகளும், கோல் அடிப்பதை விட தற்காப்பு ஆட்டத்தில் தான் அதிக கவனம் செலுத்தின. 26 மற்றும் 27 வது நிமிடங்களில் போர்ச்சுகல் வீரர்கள் நானி, மெய்ர்லஸ் இருவரும் "மஞ்சள் கார்டு' பெற்றனர்.


முதல்பாதி சமன்:

32வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அந்தரத்தில் தலை கீழாக பறந்து கோல் அடிக்க முயற்சித்தார். இதை செக் குடியரசு கீப்பர் பீட்டர் செக், அருமையாக தடுத்தார். முதல் பாதியின் "ஸ்டாப்பேஜ்' நேரத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பந்து, கோல் "போஸ்ட்டில்' பட்டு திரும்ப, கோல் வாய்ப்பு நழுவியது.


"ஆப் சைடு' கோல்:

இரண்டாவது பாதி முழுவதும் போர்ச்சுகல் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். . 58வது நிமிடத்தில் நானியிடம் இருந்து பெற்ற பந்தை அல்மெய்டா, கோலாக மாற்றினார். ஆனால், இது "ஆப் சைடு' கோல் என, நடுவர் அறிவிக்க போர்ச்சுகல் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.


முன்னிலை பெற்றது:

மவுட்டினோ, நானி ஆகியோர் எடுத்த கோல் முயற்சிகளும் வீணாகின. பின் 79 வது நிமிடத்தில் மவுட்டினோவிடம் இருந்து பெற்ற பந்தை, அப்படியே தலையால் முட்டி வலைக்குள் தள்ளினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இதையடுத்து போர்ச்சுகல் அணி 1-0 என முன்னிலை பெற்றது.


முதல் அணி:

இதை சமன் செய்து விட வேண்டும் என்று செக் குடியரசு அணியினர் எடுத்த எந்த முடிவும் பலன் தரவில்லை. முடிவில், போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 2012 யூரோ தொடரில் முதல் அணியாக, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வரும் 27ம் தேதி நடக்கும் அரையிறுதியில் ஸ்பெயின் அல்லது பிரான்ஸ் அணியை சந்திக்கும்.


பைனல் தான் இலக்கு

போர்ச்சுகல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில், ""யூரோ கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. செக்குடியரசு அணிக்கு எதிரான காலிறுதியில் முதல் 20 நிமிடங்கள் மோசமாக விளையாடினோம். பின், சுதாரித்து எழுச்சி கண்டதால் வெற்றி பெற முடிந்தது.

அணியில் சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், அரையிறுதியில் விளையாடும் தகுதி எங்களுக்கு உள்ளது. பைனலுக்கு முன்னேறுவதுதான் முதல் இலக்கு. அரையிறுதிப் போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும். இருப்பினும் முழுத்திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறப் போராடுவோம்,'' என்றார்.

ராஜ்யசபாவில் சத்தமின்றி சாதிப்பேன் - சச்சின் உறுதி

ராஜ்யசபாவில் சத்தமிட்டு பேச வேண்டிய அவசியம் இருக்காது. அடக்கமாக பேசி காரியம் சாதிப்பேன்,'' என, சச்சின் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவரது சாதனைகளுக்கு அங்கீகாரமாக ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். பொதுவாக பார்லிமென்ட் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி, பிரச்னை கிளப்புவர்.

ஆனால், சச்சினை பொறுத்தவரை அமைதியாக பேசி மிகவும் நாகரிகமாக நடந்து கொள்ள விரும்புகிறார்.

இது குறித்து சச்சின் கூறியது:

ராஜ்யசபாவில் நான் சத்தமிட்டு கோஷம் எழுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என நம்புகிறேன். என்னை யாரும் சத்தமாக பேச வைக்க மாட்டார்கள். எதற்காக கத்த வேண்டும்? சொல்ல வேண்டிய விஷயத்தை அடக்கமாக சொல்லலாம்.

அதற்கு பின் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு எனது வாழ்த்துகள். இவர்கள் சிறப்பாக செயல்பட இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக கடினமாக பயிற்சி மேற்கொண்டுள்ளனர். பதக்கம் வெல்ல தவறினாலும் கூட, அவர்களது முயற்சிகளை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்.

பகலிரவு டெஸ்ட் போட்டியை உடனடியாக சர்வதேச அளவில் அமல்படுத்தக் கூடாது. முதல் தர போட்டிகளில் சோதனை ரீதியாக அமல்படுத்தி, வீரர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.

இவ்வாறு சச்சின் கூறினார்.

அப்பாடா... இரண்டு ஜோடிக்கு ஓ.கே

ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்னைக்கு முடிவு கிடைத்துள்ளது. "லண்டன் ஒலிம்பிக்கில் பயஸ்-விஷ்ணு வர்தன், பூபதி-போபண்ணா என, இரண்டு ஜோடி பங்கேற்கும்,' என, அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) முடிவு செய்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் வீரர்கள் தேர்வு, இம்முறை பிரச்னையாக போனது. லியாண்டர் பயசுடன் இணைந்து மகேஷ் பூபதி விளையாடுவார் என, ஏ.ஐ.டி.ஏ., முதலில் அறிவித்தது. இதை ஏற்க முடியாது என, பூபதி முதலில் அறிவித்தார்.

"பூபதி வேண்டாம் என்றால் ரோகன் போபண்ணாவுடன் விளையாடத் தயார்,' என பயஸ் தெரிவிக்க, போபண்ணாவும் மறுத்தார். பின், மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகனை தலையிடுமாறு கேட்டுக்கொண்டார் பூபதி. "வீரர்கள் தேர்வு விஷயத்தில் தலையிட முடியாது,' என, அஜய் மேகனும் ஒதுங்கினார்.

"தரவரிசையில் பின்தங்கிய விஷ்ணு வர்தன், யூகி பாம்ப்ரி போன்ற ஜூனியர் வீரர்களுடன் விளையாட முடியாது. தொடர்ந்து வற்புறுத்தினால் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவேன்,' என, தன் பங்கிற்கு திடீரென மிரட்டினார் பயஸ்.

நேற்று டென்னிஸ் வீரர்களை தேர்வு செய்ய கடைசி நாள். பூபதி, போபண்ணாவை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. வேறு வழியின்றி இரண்டு ஜோடி செல்லலாம் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.டி.ஏ., தலைவர் அனில் கண்ணா கூறியது:

அனைத்து சூழ்நிலைகளையும் ஆராய்ந்த பின், வேறு வழியின்றி லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இரு ஜோடிகளை அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. இதன் படி பயஸ்-விஷ்ணு வர்தன் (207வது இடம்), பூபதி-போபண்ணா என இரு ஜோடி ஒலிம்பிக் செல்கிறது. சோம்தேவ் தேவ்வர்மன் தோள்பட்டை காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை என்பதால் அவரை தேர்வு செய்யவில்லை.


மதிப்பு உள்ளது:

பயஸ் மீது நாங்கள் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளோம். இவரது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க மாட்டோம். பூபதி, போபண்ணா பேசியதை, பயஸ் மன்னித்து விட வேண்டும். இவர், தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். தவிர, முதன் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள போபண்ணா, விஷ்ணு வர்தனின் வெற்றிக்கு உதவுமாறும் கேட்டுள்ளோம்.


நம்பிக்கை உள்ளது:

இந்தியாவின் "நம்பர்-1' வீரர் பயஸ். இந்தியாவுக்காக டேவிஸ் கோப்பை போட்டிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கேற்றுள்ள இவருக்கு, இது ஏற்றுக் கொள்ள முடியாத முடிவு என்பதில் சந்தேகம் இல்லை. இதனால், பயஸ் ஏமாற்றம் அடைய மாட்டார் என்று உறுதியாக நம்புகிறோம்.

அதேநேரம், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனில் பூபதியுடன் சேர்ந்து விளையாடிய சானியா மிர்சாவுக்கு, ஒலிம்பிக்கில் பங்கேற்க சிறப்பு அனுமதி ("வைல்டு கார்டு') கிடைத்தால், கலப்பு இரட்டையரில் பயசுடன் தான் பங்கேற்பார். இதில் மாற்றமில்லை.

இவ்வாறு அனில் கண்ணா தெரிவித்தார்.


பாம்ப்ரி பாய்ச்சல்

ஜூனியர் வீரர்களுடன் விளையாட முடியாது என்ற லியாண்டர் பயஸ் முடிவு குறித்து இந்திய இளம் வீரர் யூகி பாம்ப்ரி கூறுகையில்,""1992ல் பயஸ் வயது 19. அப்போதைய சீனியர் வீரர் ரமேஷ் கிருஷ்ணன், பயசை சேர்த்துக் கொண்டு தான், பார்சிலோனா ஒலிம்பிக் இரட்டையர் போட்டியில் பங்கேற்றார். அப்படியென்றால் ரமேஷ் கிருஷ்ணன் செய்தது தவறா. இப்போது பயஸ் இப்படி கூறுவது துரதிர்ஷ்டவசமானது,'' என்றார்.


வரவேற்பும், எதிர்ப்பும்

வேஸ் பயஸ் ( லியாண்டர் பயஸ் தந்தை)

ஏ.ஐ.டி.ஏ., முடிவு பயசுக்கு ஏமாற்றமாக இருக்கும். அதிக உணர்ச்சி வசப்படக் கூடிய பயஸ், அடுத்து என்ன செய்வார் என, கணிப்பது கடினம். நாட்டுக்காக விளையாடுவதில் பயஸ் எப்போதுமே சமரசம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இருவரது மிரட்டல் காரணமாக இம்முடிவை எடுத்திருப்பது, மற்றவர்களுக்கும் மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும்.


கிருஷ்ணா பூபதி (மகேஷ் பூபதியின் தந்தை)

இரண்டு அணி செல்வது என்ற ஏ.ஐ.டி.ஏ., முடிவால் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. பூபதி, போபண்ணா ஜோடி எப்படியும் லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும். அதேநேரம், கலப்பு இரட்டையரில் பயசுடன், சானியா ஜோடி சேர்வார் என்று அறிவித்து இருப்பது ஏமாற்றம் தருகிறது.


"கிருஷ்ணா, கிருஷ்ணா'

ஏ.ஐ.டி.ஏ., பொதுச்செயலர் பரத் ஓஜா கூறுகையில்,"" நேற்று காலை மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பயசுடன் பேசினார். நாட்டுக்காக சில தியாகத்தை செய்யும் படி அவரிடம் கேட்டுக்கொண்டார். இவரது தலையீட்டுக்குப் பின் தான் இம்முடிவு எடுத்தோம். இதை பயஸ் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறோம்,'' என்றார்.


உற்சாகமாக உள்ளது

பூபதி-போபண்ணா ஜோடி இணைந்து வெளியிட்ட அறிக்கை:

கடந்த நான்கு ஒலிம்பிக்கில் பயசுடன் சேர்ந்து விளையாடியும், பதக்கம் வெல்ல முடியவில்லை. புதிதாக ஜோடி சேர்ந்தால் ஒருவேளை சாதிக்கலாம் என்று தான் போபண்ணாவுடன் இணைந்தேன். எங்களது முடிவில் உறுதியாக இருந்தோம். கடைசியில், 30வது ஒலிம்பிக் போட்டியில் எங்களையும் ஒரு ஜோடியாக தேர்வு செய்தது மகிழ்ச்சி. இனி, எங்களது கவனம் முழுவதும் பயிற்சியில் தான் இருக்கும். கலப்பு இரட்டையரில் சானியாவுடன் பயஸ் விளையாடுவார் என்ற அறிவிப்பு குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.


லியாண்டர் பயஸ் விலகல்

இரண்டு ஜோடி முடிவுக்கு பயஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏ.ஐ.டி.ஏ., க்கு எழுதிய கடிதத்தில்," ஜூனியர் வீரருடன் தான் பங்கேற்க வேண்டும் என்ற முடிவு ஏமாற்றம் தருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது,' என, பயஸ் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

ஒலிம்பிக்கிற்கு குட்பை - லியாண்டர் பயஸ் மிரட்டல்

ஜூனியர் வீரருடன் சேர்ந்து விளையாட முடியாது. தொடர்ந்து வற்புறுத்தினால், லண்டன் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவேன்,'' என, இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ் மிரட்டியுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் வீரர்கள் தேர்வு இடியாப்ப சிக்கலாக நீடிக்கிறது. லியாண்டர் பயசுடன் இணைந்து மகேஷ் பூபதி விளையாடுவார் என, அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) அறிவித்தது முதல் பிரச்னை துவங்கியது.

பயசுடன் விளையாட முடியாது என, பூபதி முதலில் அறிவித்தார், பூபதி இல்லையென்றால் ரோகன் போபண்ணாவுடன் விளையாட தயார் என பயஸ் தெரிவித்தார்.

ஆனால், போபண்ணாவும் தன் பங்கிற்கு மறுத்தார். இருவரும் முடியாது என்றதால், அடுத்து தரவரிசையில் 207வது இடத்திலுள்ள விஷ்ணு வர்தன், பயசுடன் ஜோடி சேரலாம் என தெரிவிக்க, இம்முறை பயஸ் கோபமடைந்து உள்ளார்.


விலகி விடுவேன்:

பயஸ், ஏ.ஐ.டி.ஏ.,க்கு எழுதிய கடிதம்:

லண்டன் ஒலிம்பிக்கில் பூபதி அல்லது போபண்ணாவுடன் தான் விளையாட முடியும். இவர்கள் இருவரும் நாட்டுக்காக என்னுடன் விளையாடவில்லை என்றால், மற்ற வீரர்களுடன் விளையாட வேண்டும் என்பது மகிழ்ச்சி தான். ஆனால், இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏனெனில், இந்தியாவின் சிறந்த டென்னிஸ் வீரரான எனக்கு, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு ஏற்ப, ஜோடியை தேர்வு செய்ய உரிமை உண்டு. தரவரிசையில் பின்தங்கியுள்ள விஷ்ணு வர்தன், யூகி பாம்ப்ரி போன்ற ஜூனியர் வீரர்களுடன் விளையாட முடியாது.

வர்களுடன் தான் பங்கேற்க வேண்டும் என வற்புறுத்தினால், லண்டன் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இன்று முடிவு:

இதனிடையே, பயசுடன் சேர்ந்து விளையாடுமாறு, பூபதி மற்றும் போபண்ணாவுடன் தொடர்ந்து ஏ.ஐ.டி.ஏ., பேசி வருகிறது. இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இன்று ஒலிம்பிக் டென்னிஸ் வீரர்களை தேர்வு செய்ய கடைசி நாள் என்பதால், என்ன செய்வது என தெரியாமல், ஏ.ஐ.டி.ஏ., இக்கட்டான நிலையில் சிக்கித் தவிக்கிறது.

சச்சினை முந்தினார் தோனி

உலகின் பணக்கார விளையாட்டு நட்சத்திரங்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, சச்சின், உசைன் போல்ட், ஜோகோவிச் ஆகியோரை பின்தள்ளி 31வது இடம் பிடித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியாகும் பிரபல "போர்ப்ஸ்' பத்திரிகை, உலகின் பணக்கார விளையாட்டு நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது.

இதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு 31வது இடம் கிடைத்துள்ளது. இவரது வருமானம் ரூ. 148 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு 78வது இடம் (ரூ. 104 கோடி) கிடைத்துள்ளது.

இங்கிலாந்து கால்பந்து வீரர் ரூனே (37வது இடம், ரூ. 135 கோடி), செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (62வது இடம், ரூ. 115 கோடி), ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் (63வது இடம், ரூ. 113 கோடி) ஆகியோர் "டாப்-100' வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.

அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பிளாய்டு மேவெதர் (ரூ. 475 கோடி), பிலிப்பினோ குத்துச்சண்டை வீரர் மான்னி பாக்குயோ (ரூ. 346 கோடி), அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் (ரூ. 332 கோடி) ஆகியோர் "டாப்-3' வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (5வது இடம், ரூ. 320 கோடி), இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் (8வது இடம், ரூ. 257 கோடி), போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (9வது இடம், ரூ. 237 கோடி) ஆகியோர் "டாப்-10' வரிசையில் இடம் பிடித்தனர்.

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி (11வது இடம், ரூ. 218 கோடி), ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா (26வது இடம், ரூ. 156 கோடி) ஆகியோர் "டாப்-50' வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.

போபண்ணா போர்க்கோலம் - பயசுடன் விளையாட முடியாது

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய வீரர்கள் தேர்வு பிரச்னை இன்னும் முடியவில்லை. மகேஷ் பூபதியை அடுத்து இப்போது, ரோகன் போபண்ணாவும் லியாண்டர் பயசுடன் சேர்ந்து விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் டென்னிஸ் வீரர்களை, அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) சமீபத்தில் அறிவித்தது. இதன்படி, ஒலிம்பிக் இரட்டையர் பிரிவில், லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி ஜோடியை தேர்வு செய்தது.

சமீபகாலமாக பயசை பிரிந்து, போபண்ணாவுடன் விளையாடி வரும் பூபதிக்கு இது பிடிக்கவில்லை. பயசுடன் சேர்ந்து விளையாட முடியாது என, வெளிப்படையாக அறிவித்த இவர், ஏ.ஐ.டி.ஏ.,க்கு கடிதம் எழுதினார். பூபதி இல்லையென்றால் போபண்ணாவுடன் விளையாடவும் தயார் என்று பயஸ் அறிவித்தார்.

இப்பிரச்னையில் திடீர் திருப்பமாக, இப்போது போபண்ணாவும் பயசுடன் விளையாட முடியாது என அறிவித்துள்ளார். ஏ.ஐ.டி.ஏ.,க்கு போபண்ணா எழுதிய கடிதம்:

2012ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து, பூபதியுடன் இணைந்து விளையாடி வருகிறேன். இது லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று நினைத்தேன். சேர்ந்து விளையாடுவது என நாங்கள் எடுத்த முடிவு குறித்த ஒவ்வொரு நடவடிக்கையையும் ஏ.ஐ.டி.ஏ.,க்கும் தெரிவித்துள்ளோம். அப்போது, எல்லோரும் எங்களது முடிவை பாராட்டினர்.


உரிமை உண்டு:

பயசுடன் இதுவரை இரண்டு முறை தான், இரட்டையர் போட்டியில் பங்கேற்றுள்ளேன். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்காக திடீரென பயசுடன் தான் விளையாட வேண்டும் என்ற முடிவை ஏற்பது சரியல்ல. இதை ஏற்க முடியாத நிலையில் <<உள்ளேன். யாருடன் சேர்வது என்பதை தேர்வு செய்யும், <உரிமை எங்களுக்கு உள்ளது.


கடமை உள்ளது:

எனது இம்முடிவை ஏற்றுக்கொள்வது, கடினம் என்பது தெரியும். எனினும், இதை நான் ஏற்பது எனது தொழிலின் நேர்மைக்கு ஏற்றதல்ல. தற்போது பூபதியுடன் இணைந்து விளையாடி வரும் நான், எதிர்காலத்திலும் இதை தொடரவுள்ளேன்.


நட்பில் விரிசல்:

ஏனெனில் கடந்த அக்டோபர் 2011ல் எனது வெற்றிகரமான "பார்ட்னர்' அய்சம் அல் குரேஷியை பிரிந்தேன்.டென்னிஸ் வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவு இது. "நம்பர்-8'வது இடத்தில் இருந்த எங்கள் ஜோடி, அதிக வெற்றிகளை பெற்று வந்தது. இந்த முடிவால், குரேஷியின் நட்பும் பாதிக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவது தான் எனது முக்கிய லட்சியம். இதனால் தான் குரேஷியை விட்டு விலகி பூபதியுடன் இணைந்தேன். ஒலிம்பிக்கிற்கு முன் சேர்ந்து விளையாடினால், எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்படும் என்று விளையாடி வருகிறோம். தொடர்ந்து சிறப்பாக விளையாடி "டாப்-10' இடத்துக்குள் வர முயற்சிப்போம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


மகேஷ் பூபதி கடிதம்

ஏ.ஐ.டி.ஏ., தேர்வு குறித்து மகேஷ் பூபதி, மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகனுக்கு எழுதிய கடிதத்தில்," இரு ஜோடியை அனுப்ப முடியும் என, ஏ.ஐ.டி.ஏ., தெரிவித்துள்ளது. இந்நிலையில், தர வரிசையில் 7வது இடத்திலுள்ள எங்களை பிரித்து ஒரு ஜோடியை மட்டும் அனுப்புவது ஏன். இவ்விஷயத்தில் நீங்கள் தலையிட்டு தீர்வு காணவேண்டும்,' என, தெரிவித்துள்ளார்.


மத்திய அமைச்சர் தலையீடு

டென்னிஸ் வீரர்கள் தேர்வு பிரச்னையில் மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் தலையிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது "டுவிட்டர்' இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில்," இந்தியாவில் இருந்து இரு ஜோடியை அனுப்பமுடியும் என்ற நிலையில் ஒரு ஜோடியை மட்டும் தேர்வு செய்தது ஏன்?

ஒலிம்பிக்கில் சானியாவுடன் சேர்ந்து விளையாடுவது யார் என்ற கேள்விக்கு பதிலில்லை. பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்ற பூபதி-சானியா ஜோடியை ஏன் பிரிக்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்: இந்தியா "ஏ' அணி ஏமாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணியின் அபார பந்துவீச்சில் இந்தியா "ஏ' அணி முதல் இன்னிங்சில் 230 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா "ஏ', வெஸ்ட் இண்டீஸ் "ஏ' அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி நான்கு நாள் போட்டி செயின்ட் லூசியாவில் நடக்கிறது. "டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பெர்மால், "பீல்டிங்' தேர்வு செய்தார்.


"டாப்-ஆர்டர்' ஏமாற்றம்:

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அபினவ் முகுந்த் (10) மோசமான துவக்கம் கொடுத்தார். அடுத்து வந்த ரோகித் சர்மா (12) ஏமாற்றினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த அஜின்கியா ரகானே (32), கேப்டன் புஜாரா (33), மனோஜ் திவாரி (32) பெரிய அளவில் சோபிக்கவில்லை.


சாக்சேனா அரைசதம்:

"மிடில்-ஆர்டரில்' ராபின் பிஸ்ட் (5), விரிதிமன் சகா (27) கைகொடுக்கவில்லை. விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ஜலாஜ் சாக்சேனா அரைசதம் அடித்தார். இத்தொடரில் முதன்முறையாக களமிறங்கிய இவர், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எளிதாக சமாளித்து கவுரவமான ஸ்கோரை பெற்றுத் தந்தார். இவர், 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அக்ஷய் தரேகர் (0), பர்விந்தர் அவானா (0) ஏமாற்ற, முதல் இன்னிங்சில் இந்திய அணி 230 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோனாதன் கார்டர், தேவேந்திர பிஷூ தலா 3,
ஜான்சன், மெக்கிளின், வீராசாமி பெர்மால் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


நல்ல துவக்கம்:

பின் முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத்வைட், பாவல் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் (13), பாவல் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹாட்ரிக் சாதனை படைத்த 4-வது இலங்கை வீரர்

பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 44 ரன்னில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் இலங்கை 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இந்தப்போட்டியில் இலங்கை வேகப்பந்து வீரர் பெரைரா ஹாட்ரிக் சாதனை படைத்தார். 41-வது ஓவரில் 2-வது பந்தில் யூனுஸ்கானையும், 3-வது பந்தில் அப்ரிடியையும், 4-வது பந்தில் சர்பிராஸ் அகமதுவையும் அவர் அவுட் செய்தார். 5-வது பந்தில் சோகைல் தன்வீர் ரன்அவுட் ஆனார்.

ஒருநாள் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 32-வது ஹாட்ரிக் இதுவாகும். ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த 4-வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெரைரா பெற்றார்.

இதற்கு முன்பு இலங்கை வீரர்களில் மலிங்கா, சமிந்தா வாஸ், மெகரூப் ஹாட்ரிக் சாதனை படைத்து இருந்தனர்.

மலிங்கா 3 முறையும் (2007 தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2011 கென்யாவுக்கு எதிராக, 2011 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக).

சமிந்தாவாஸ் 2 முறையும் (2001 ஜிம்பாப்வேக்கு எதிராக, 2003 வங்காளதேசத்துக்கு எதிராக) ஹாட்ரிக் சாதனை படைத்தனர்.

மெகரூப் 2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

நேபாளத்தின் கிரிக்கெட் தூதுவரானார் தோனி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி நோபாளத்தின் கிரிக்கெட் தூதுராக நியமிக்கப்பட்டார். இந்திய எல்லைப்பகுதியான ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு சில நாட்களுக்கு முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தோனி, தற்போது நேபாள தலைநகர் காட்மாண்டுவிற்கு தனது மனைவி சாக்ஷியுடன் சென்றுள்ளார்.

அவர் அங்குள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுடன் விளையாட்டு நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார்.
பின், தோனி நேபாளத்தின் தூதுவராக நியமிக்கபட்டார்.

இது நேபாளத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று நேபாள சுற்றுலா துறை தலைமை அதிகாரி சுபாஷ் நிரவ்லா தெரிவித்தார்.

தோனி கூறிகையில்,"" கிரிக்கெட் தூதுவராக நியமித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இளைஞர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவது போல விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும் அது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் கைகொடுக்கும். கிரிக்கெட் விளையாட்டு தற்போது நேபாளத்தில் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது.

விரைவில் சர்வதேச அரங்கில் ஒரு சிறந்த அணியை காண அதிக ஆவலாக உள்ளேன். என்றார்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணியை விற்க முடிவு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை கடந்த 2008-ம் ஆண்டு ஏலத்தில் ரூ.592 கோடிக்கு டெக்கான் கிரானிக்கல் குரூப் வாங்கியது.

இந்த நிலையில் டெக்கான் அணியை முழுமையாகவோ அல்லது அணியின் மொத்த பங்குகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியையோ விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அணியை வாங்குவதற்கு தகுதியான நிறுவனத்தை தேடும் பணி நடந்து வருகிறது.

லண்டன் ஒலிம்பிக்: பூபதி திடீர் போர்க்கொடி

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் விளையாட லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி தேர்வு செய்யப்பட்டனர். போபண்ணாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற பூபதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் கூட்டம்(ஏ.ஐ.டி.ஏ.,) நேற்று பெங்களூருவில் நடந்தது.

ஒலிம்பிக் இரட்டையர் பிரிவில், ஒரு நாட்டின் சார்பில் இரண்டு வெவ்வேறு ஜோடியை அனுப்பலாம். ஆனால், ஏ.ஐ.டி.ஏ., ஒரே ஒரு ஜோடியை மட்டும் அனுப்ப முடிவு செய்தது. பயசுடன் பூபதி இணைந்து விளையாடுவார் என அறிவித்தது. இது பூபதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், போபண்ணாவுடன் இணைந்து விளையாட விருப்பம் தெரிவித்து இருந்தார்.

பயஸ்-பூபதியை பொறுத்தவரை ஏற்கனவே நான்கு முறை (1996, 2000, 04, 08) ஒலிம்பிக் போட்டியில் விளையாடியுள்ளனர். இதல் ஒரு முறை கூட பைனலுக்கு முன்னேறவில்லை. அதிகபட்சமாக 2004ல் அரையிறுதி வரை சென்றது. தற்போது, இவர்களை மீண்டும் தேர்வு செய்திருப்பது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தேசம் முக்கியம்:

இதுகுறித்து இந்திய டென்னிஸ் சங்க செயலாளர் அனில் கண்ணா கூறியது: லண்டன் ஒலிம்பிக்கில் பயசின் ஜோடியாக பூபதியை தேர்வு செய்துள்ளோம். ஏற்கனவே இவர்கள் நான்கு முறை ஒலிம்பிக் போட்டியில் விளையாடி இருப்பதால், போதிய அனுபம் பெற்றிருப்பார்கள். இவர்கள், தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டை மறந்து, தேசத்துக்காக இணைந்து விளையாடுவார்கள் என நம்புகிறோம்.

தவிர சமீபகாலமாக பூபதியின் "பார்ம்' சிறப்பாக இருப்பதால், பயசுக்கு சரியான ஜோடியாக தீர்மானித்தோம். இவர்களது பயிற்சிக்காக இந்திய அரசு மாதம் ரூ. 3.50 லட்சம் வரை செலவு செய்கிறது. இதனால் இவர்கள் மறுப்பு தெரிவிக்க முடியாது.

லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட இரண்டு இந்திய ஜோடிக்கு அனுமதி இருந்த போதிலும், ஒரே ஒரு ஜோடியை மட்டும் அனுப்ப உள்ளோம். இது தகுதியான வீரர்கள் இல்லாததையே சுட்டிக்காட்டுகிறது. இது, இந்திய டென்னிசுக்கு ஏமாற்றமான விஷயம்.

சானியாவுக்கு "வைல்டு கார்டு' அனுமதி கிடைத்த பின்பு தான், கலப்பு இரட்டையரில் விளையாடும் வீரர் குறித்து முடிவு செய்யப்படும். பயஸ், பூபதி ஜோடி லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட இருப்பதால், இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இவ்வாறு அனில் கண்ணா கூறினார்.ஒலிம்பிக் போட்டிக்கு முன்னரே இப்படி மோதிக் கொண்டால்


"முதுகில் குத்தியவர்'

பூபதி கூறுகையில், ""பயசுடன் இணைந்து மீண்டும் ஒலிம்பிக்கில் விளையாட இருப்பது ஏமாற்றமான முடிவு. ஏற்கனவே நான்கு முறை விளையாடி உள்ளோம். இதில் ஒரு முறை கூட பதக்கம் கிடைக்கவில்லை. கடந்த "சீசனில்' திடீரென பிரிந்து, எனது முதுகில் குத்தினார். நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதில்லை. எங்களுக்குள் நட்பு இல்லை.

இந்நிலையில் மீண்டும் எங்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவது சரியான முடிவு அல்ல. தற்போது நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். இதில் ஒருவரை, பயசின் ஜோடியாக தேர்வு செய்திருக்கலாம். இரண்டு ஜோடிக்கு வாய்ப்பு இருந்தும், ஒரே ஒரு ஜோடியை மட்டும் அனுப்புவது ஏமாற்றம் அளிக்கிறது,'' என்றார்.

ஒலிம்பிக் போட்டிக்கு முன்னரே இவர்கள் இப்படி மோதிக் கொண்டால், பதக்கம் எப்படி கிடைக்கும் என்று டென்னிஸ் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

லியாண்டர் பயஸ் ஜோடி யார்?

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், இந்திய வீரர் லியாண்டர் பயசுடன் இணைந்து விளையாடுவது யார் என்பதில் இழுபறி நீடிக்கிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஏ.டி.பி., டென்னிஸ் ரேங்கிங் (தரவரிசை) இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் 7வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் நேரடியாக விளையாடும் வாய்ப்பை பெற்றார். மற்ற இந்திய வீரர்களான மகேஷ் பூபதி (14வது இடம்), ரோகன் போபண்ணா (12வது) லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர்.

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ், ஆண்கள் இரட்டையரில் பயசுடன் இணைந்து விளையாடப் போவது யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாக உள்ளது. பூபதி அல்லது போபண்ணாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சமீபகாலமாக பயஸ், பூபதியுடன் இணைந்து விளையாடுவதில்லை. இந்த ஆண்டு முதல், புதிதாக ஜோடி சேர்ந்துள்ள பூபதி-போபண்ணா ஜோடி இரட்டையர் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் பூபதி-போபண்ணா ஜோடியை அனுப்ப இயலாது.


சர்ச்சை "மெயில்':

சமீபத்தில் பூபதி-போபண்ணா இணைந்து, இந்திய டென்னிஸ் சங்கத்திற்கு "இ-மெயில்' மூலம் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் லண்டன் ஒலிம்பிக்கில் நாங்களே இணைந்து விளையாட விரும்புகிறோம். இல்லையென்றால், பயசுக்கு ஜோடியாக வேறு யாரையாவது தேர்வு செய்து கொள்ளுமாறு கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது.


பூபதிக்கு வாய்ப்பு:

இந்திய வீராங்கனை சானியா மிர்சா, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட நேரடி வாய்ப்பை இழந்த நிலையில், தற்போது "வைல்டு கார்டு' அனுமதியை எதிர்நோக்கி உள்ளார். ஒருவேளை இவருக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், சானியாவுடன் இணைந்து கலப்பு இரட்டையரில் விளையாடப் போவது யார் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

சமீபத்தில் சானியா-பூபதி ஜோடி பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையரில் பட்டம் வென்றது. ஏற்கனவே இந்த ஜோடி, ஆஸ்திரேலிய ஓபனிலும் பட்டம் வென்று சாதித்துள்ளது. இதனால் பயசுடன் இணைந்து பூபதியை அனுப்பும் பட்சத்தில், ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடலாம்.


இன்று முடிவு:

இதனால் இந்திய டென்னிஸ் சங்கம் குழப்பத்தில் உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் இன்று இறுதி முடிவை எடுக்க உள்ளது.

இதுகுறித்து இந்திய டென்னிஸ் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ""லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு யாரை தேர்வு செய்வது என்பது எங்களுக்கு தெரியும். வீரர்கள், தங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டை மறந்து, தேசத்திற்காக இணைந்து விளையாட முன்வர வேண்டும்,'' என்றார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவுக்கு விளையாடத் தடை

இலங்கை அரசு சார்பில் எப்போது அழைத்தாலும் விளையாட வர வேண்டும் என்ற இலங்கை அரசின் விளையாட்டுத் துறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த இலங்கை கிரிக்கெட் வீரர் லஸித் மலிங்காவுக்கு விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் உள்ளூர் விளையாட்டு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தம், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத வீரர்களுக்கு, விளையாடத் தடை விதிக்கவும் வகை செய்வதாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தனந்தா கூறியுள்ளார்.

ரஞ்சி கோப்பை தொடரில் அதிரடி மாற்றம்

ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் தொடரில் அதிரடி மாற்றங்களை செய்து, கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ., தொழில்நுட்ப கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

உள்ளூர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர், ஆண்டுதோரும் நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இதில் 27 அணிகள், "எலைட்' மற்றும் "பிளேட்' என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் "எலைட்' பிரிவில் 15 அணிகளும், "பிளேட்' பிரிவில் 12 அணிகளும் விளையாடும்.

இதில் மாற்றம் கொண்டுவர, கங்குலி தலைமையிலான பி.சி.சி.ஐ., தொழில்நுட்ப கமிட்டி முடிவு செய்தது. இதற்காக நேற்று மும்பையில் இரண்டு மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, பி.சி.சி.ஐ., செயற்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
தொழில்நுட்ப கமிட்டியில் பரிந்துரை செய்யப்பட்ட முடிவுகள்:

ரஞ்சி கோப்பை தொடரில், மொத்தமுள்ள 27 அணிகள் "ஏ', "பி', "சி' என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 9 அணிகள் இடம் பெறும். ஒவ்வொரு அணிகளும், தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் விளையாடும்.

லீக் சுற்றின் முடிவில் "ஏ' மற்றும் "பி' பிரிவில் தலா முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள், "சி' பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அதன்பின் அரையிறுதி, பைனல் நடக்கும்.

* முன்னதாக லீக் சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் தலா நான்கு நாட்கள் நடக்கும். பைனல் மட்டும் ஐந்து நாட்கள் நடத்தப்படும். ஆனால் இனிவரும் காலங்களில் லீக் சுற்றுப் போட்டிகளை வழக்கம்போல நான்கு நாட்கள் நடத்தவும், "நாக்-அவுட்' சுற்றான காலிறுதி, அரையிறுதி மற்றும் பைனல் தலா ஐந்து நாட்கள் நடத்த ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

* முன்னதாக, வெற்றி பெறும் அணிக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும். "டிரா'வில் முடியும் பட்சத்தில், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற அணிக்கு 3 புள்ளி, மற்றொரு அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். இனி, "டிரா'வில் முடிந்தால், இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெற்றி பெறும் அணிக்கு வழக்கம்போல 6 புள்ளிகள் கிடைக்கும். தவிர, இன்னிங்ஸ் அல்லது 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அணிக்கு கூடுதலாக ஒரு "போனஸ்' புள்ளி வழங்கப்படும். மழை போன்ற இயற்கை நிகழ்வுகளால் போட்டி பாதிக்கப்படும் பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

* ரஞ்சி கோப்பை "நாக்-அவுட்' சுற்றின் போது, ஐந்து நாட்களில் போட்டி முடியாத பட்சத்தில், 6வது நாள் போட்டி நடத்தப்படும். 6வது நாளும் போட்டி முடியாத பட்சத்தில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணி முடிவு செய்யப்படும். ஒருவேளை இரு அணிகளின் முதல் இன்னிங்சும் 6 நாட்களில் முடியாத பட்சத்தில் "டாஸ்' முறையில் வெற்றி பெறும் அணி தேர்வு செய்யப்படும்.

* உள்ளூர் 50 ஓவர் போட்டிகளில், ஒரு ஓவரில் இரண்டு "பவுன்சர்' பந்துகள் வீச அனுமதி அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஒரு பவுலர் 12 ஓவர் வீச அனுமதி அளிக்கப்படும்.

* முன்னதாக சால்வே சாலஞ்சர்ஸ் தொடரில், இந்தியா "ரெட்', "புளூ', "கிரீன்' என மூன்று அணிகள் பங்கேற்கும். இந்த மூன்று அணிகளை பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தேர்வு செய்யும். இனிமேல் இரண்டு அணிகளை மட்டும் தேர்வுக்குழு நியமிக்கும். மூன்றாவது அணியாக விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி விளையாடும்.

இதுதவிர துலீப் டிராபி, இரானி கோப்பை, தியோதர் டிராபி, சயீத் முஸ்தாக் அலி டிராபி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களிலும் சில மாற்றங்கள் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்ப கமிட்டி தலைவர் கங்குலி கூறுகையில், ""ரஞ்சி கோப்பை தொடரில் சில முக்கிய மாற்றங்களை செய்ய பரிந்துரை செய்துள்ளோம். இதன்மூலம், இனிவரும் தொடரில் ஒவ்வொரு அணிகளும் நிறைய போட்டிகளில் பங்கேற்கலாம். இது வீரர்களுக்கு சிறந்த அனுபவம் கொடுக்கும். இதற்கான இறுதி முடிவை, செயற்குழு தான் முடிவு எடுக்கும்,'' என்றார்.

பிரெஞ்ச் ஓபன்: வரலாறு படைத்தார் நடால்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தார் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால். நேற்று நடந்த பைனலில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பைனலில் உலகின் "நம்பர்-1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், "நம்பர்-2 இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபெல் நடாலை சந்தித்தார்.

விறுவிறுப்பான இப்போட்டியில் நடால் 6-4, 6-3, 2-6, 1-2 என முன்னிலை வகித்திருந்த போது, மழை காரணமாக ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மீண்டும் ஆட்டம் நடந்தது. இதில் அபாரமாக ஆடிய நடால், 4வது செட்டை 7-5 என போராடி கைப்பற்றினார்.

இறுதியில் நடால் 6-4, 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, ஏழாவது முறையாக (2005-08, 2010-12) சாம்பியன் பட்டம் வென்றார்.