அரியானா அணிக்கு மாறுகிறார் சேவக்

வீரர்கள் தேர்வில் அதிகளவில் தேர்வுக்குழு உறுப்பினர்கள் தலையீடு இருப்பதால், டில்லி அணியை விட்டு விலக இருப்பதாக இந்திய வீரர் சேவக் தெரிவித்துள்ளார். அடுத்து அரியானா அணியில் சேவக் விளையாட உள்ளார்.

இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் டில்லியின் சேவக். தோள்பட்டை காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இதனால் இலங்கைத் தொடர், சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடர்களில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது டில்லி ரஞ்சி அணியில் விளையாடி வரும் சேவக், அந்த அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.

டில்லி அணியில் இருந்து விலகி, அரியானா அணியில் விளையாட உள்ளார். இதற்காக அனுமதி கேட்டு டில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங் கத்தின் (டி.டி.சி.ஏ.,) தலைவர் அருண் ஜேட்லியிடம் கடிதம் அளித்துள்ளார்.

இது குறித்து சேவக் கூறியது: டில்லி கிரிக்கெட் சங்கம் அதிக சக்தி வாய்ந்தது. ஆனால் தேர்வுக்குழுவினர் 19 மற்றும் 16 வயதிற் குட்பட்ட ரஞ்சி அணிக்கு வீரர்கள் தேர்வில் அதிக தலையீடு செய்கிறார்கள். சிலர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழலில் ஈடுபடுகிறார்கள். இதனால் டில்லி அணியில் இருந்து விலகி, அரியானா அணியில் விளையாட முயற்சி செய்து வருகிறேன். நான் இதுகுறித்து டி.டி.சி.ஏ., தலைவர் அருண் ஜேட்லியிடம் பேசினேன். அவர் இந்த பிரச்னை குறித்து வரும் ஆக. 27 அல்லது 28ல் விவாதிப்பதாக கூறினார். இந்த கூட்டத்தின் முடிவில் திருப்தி ஏற்பட வில்லை என்றால் உறுதியாகடில்லி அணியை விட்டு விலகிவிடுவேன்.

டி.டி.சி.ஏ.,ல் இருந்து விலகல் கடிதம் கொடுக்கவில்லை என்றாலும் விலகுவேன். ஏனெனில் வீரர்கள் பெற்றோர்கள் சங்க விதிப்படி, வீரர் ஒருவருக்கு தொடர்ந்து தொல்லை ஏற்படும் போது, அவர் விலகல் கடிதம் பெற்றுத்தான் அணியில் இருந்து விலக வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பார்த்துக்கொள்ளும்.
காரணம் என்ன?: ஆனால் சேவக் விலகலுக்கு வேறு காரணங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது மயங்க் டெக்லன், பிரதீப் சங்வான் என்ற இரண்டு வீரர்கள் ரஞ்சி அணியில் இடம் பெற வேண்டும் என சேவக் விரும்புகிறார்.

ஆனால் தற்போதுள்ள அணி சிறப்பாக உள்ளது என டில்லி கிரிக்கெட் சங்கம் கருதுகிறது. இந்நிலையில் புதிதாக வீரர்களை சேர்ப்பதுகடினம். இது தான்காரணம். அதைவிடுத்து விட்டு அவர் ஏன் அணியில் இருந்து விலகுவேன் என மிரட்டுகிறார் எனத் தெரியவில்லை என டில்லி கிரிக்கெட் சங்கம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

அரியானா வரவேற்பு: சேவக் அறிவிப்புகுறித்து கருத்து தெரிவித்த அரியானா கிரிக்கெட் சங்கம், ""சேவக் கடந்த ரஞ்சி கோப்பை தொடரின் போதே எங்கள் அணியில் இடம் பெறுமாறு கேட்டு இருந்தோம். இந்நிலையில் அவரது இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்,'' என தெரிவித்துள்ளது.

டில்லி சங்கம் எதிர்ப்பு : சேவக் தெரிவித்த கருத்துக்களுக்கு டி.டி.சி.ஏ., செயலாளர் சுனில் தேவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" சேவக் டில்லி அணிக்கு எப்போதும் கேப்டனாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஓய்வுக்கு பின், டில்லி கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்கு கட்டாயம் தேவை. இந்நிலையில் அவர் ஏன் ஜூனியர் கிரிக்கெட் குறித்து பேசவேண்டும். சேவக் தெரிவித்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை. இதுகுறித்து அவரிடம் திறந்த மனதுடன் பேசத் தயாராக உள்ளோம். விலகல் அனுமதி கடிதம் எதுவும் அவரிடம் இருந்து எங்களுக்கு வரவில்லை,'' என்றார்.

0 comments:

Post a Comment