இந்திய அணியில் மீண்டும் திராவிட், சச்சின்

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு நாடுகள் கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் மீண்டும் திராவிட், சச்சின் இடம்பெற்றுள்ளனர். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கும் அணியில் இடம் கிடைத்தது.

இந்திய அணியைத் தேர்வு செய்யும் கூட்டம் சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் தேர்வுக் குழு உறுப்பினர்கள் கூடி அணியைத் தேர்வு செய்தனர். அணித் தேர்வுக்காக சனிக்கிழமை இரவு அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி சென்னை வந்தார்.

அணித் தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் என். ஸ்ரீநிவாசன் கூறியதாவது:

அணியில் ராகுல் திராவிட் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஒருதினப் போட்டிக்குப் பிறகு திராவிட் தற்போது அணிக்குத் திரும்பியுள்ளார். மேலும் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தின்போது காயம் காரணமாக விலகியிருந்த சச்சின் டெண்டுல்கரும் தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.

காயம் காரணமாக வீரேந்திர சேவாக், ஜாகீர்கான் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

8 பேட்ஸ்மேன்கள், 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழல்பந்து வீச்சாளர்கள், ஒரு ஆல்-ரவுண்டர் என 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20-20 உலகக் கோப்பை போட்டியின்போது இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் மோசமாக இருந்தது. நடுவரிசை ஆட்டக்காரர்கள் தடுமாறியபோது இந்திய அணி பல ஆட்டங்களில் தோற்று வெளியேறியது. இந்தக் குறையைப் போக்க அனுபவமுள்ள ஆட்டக்காரர் திராவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக சேவாக் அணியில் இடம்பெறாததால் சச்சின் டெண்டுல்கருடன், கெüதம் கம்பீர் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். அதைத் தொடர்ந்து திராவிட், ரெய்னா, துணை கேப்டன் யுவராஜ்சிங், கேப்டன் தோனி ஆகியோர் களம் காண்பர்.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அமித் மிஸ்ரா அணியில் இடம்பெற்றுள்ளார். கம்பீர், சச்சின் இல்லாதபட்சத்தில் மற்றொரு துவக்க ஆட்டக்காரராக தினேஷ் கார்த்திக் இருப்பார்.

வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் காயம் காரணமாக விலகியுள்ளதால் பொறுப்பு இஷாந்த் சர்மா, பிரவீண்குமார், ஆர்பி சிங் ஆகியோர் மீது விழுந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் பெங்களூரில் 4 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்கும் என்றார் அவர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

இந்திய அணி விவரம்: எம்.எஸ். தோனி (கேப்டன்), யுவராஜ்சிங் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், கெüதம் கம்பீர், ராகுல் திராவிட், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங், யூசுப் பதான், ஆர்பி சிங், இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக், அபிஷேக் நாயர், பிரவீண்குமார், அமித் மிஸ்ரா

0 comments:

Post a Comment