சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய உத்தேச அணி வீரர்களுக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இரண்டு கட்டமாக உடற்தகுதி தேர்வு நடத்துகிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற இந்திய அணி வீரர்கள், அதற்குபின் சுமார் இரண்டு மாதங்கள் ஓய்வில் உள்ளனர். இந்திய அணியினர் அடுத்த மாதம் இலங்கை பயணம் மேற் கொண்டு முத்தரப்பு ஒருநாள் தொடரில் (செப்.8-14) பங்கேற் கின்றனர். அதன்பின்னர் தென் ஆப்ரிக்காவில் நடக் கும் சாம்பியன்ஸ் டிராபி (செப்.22-அக்.5) தொடரில் விளையாடுகின்றனர்.
இந்த இரண்டு தொடருக்கான வீரர்களின் தேர்வு சென்னையில் வரும் 16 ம் தேதி நடக்கிறது. இதற்கு முன், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய உத்தேச அணி வீரர்களுக்கு, இரண்டு கட்டமாக உடற்தகுதி தேர்வு நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது. இத்தேர்வை டில்லி மற்றும் மும்பையில் நடத்துகிறது. நேற்று டில்லியில் உள்ள பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த முதற் கட்ட தேர்வில் கேப்டன் தோனி, இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங், கவுதம் காம்பிர், பிரவீண் குமார், சுரேஷ் ரெய்னா, நெஹ்ரா உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், மனநிலை ஆய்வாளர் பட்டி அப்டன், அணியின் பிஸியோதெரபிஸ்ட் நிடன் படேல் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி மேற்கொண்டனர்.
சேவக் இப்பயிற்சியில் பங்கேற்கவில்லை. தோள்பட்டை காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் இவருக்கு, அடுத்த மாதம் 17ம் தேதி வரை ஓய்வு வழங்கப் பட்டுள்ளது. எனவே இவர், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் உடற்தகுதியை நிரூபிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. இன்று மும்பையில் நடக்கும் 2வது கட்டத்தேர்வில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், டிராவிட், ரோகித் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த உடற்தகுதி தேர்வு முடிவை, பி.சி.சி.ஐ., தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். இம்முடிவின் அடிப்படையில் முத்தரப்பு மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தவிர, இந்திய அணி வீரர்களுக்கு வரும் 25ம் தேதி முதல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி முகாம் நடக்கிறது
0 comments:
Post a Comment