தோனி, ரெய்னாவிடம் விசாரணை - விரைவில் சூதாட்ட அறிக்கை தாக்கல்

ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்து முத்கல் தலைமையிலான குழு, கேப்டன் தோனி, இவரது நண்பர் அருண் பாண்டே மற்றும் ரெய்னாவிடம் விசாரணை நடத்தியது. இந்த வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஆறாவது ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில், ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு தலைமையிலான குழு நேரடியாக விசாரிக்கிறது. 

இதன் முதற்கட்ட அறிக்கையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மற்றும் இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னா உட்பட 13 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. 

இந்த வார கடைசிக்குள்  (நவ., 2) முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்பிக்க வேண்டும். இதனால், விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 


எப்போது நடந்தது:

கடந்த 11ம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க, இந்திய அணி டில்லி சென்றது.

அப்போது, தங்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி கேப்டனாக இருக்கும் தோனி, ரெய்னா மற்றும் இரு வீரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதில் தோனியிடம் மட்டும் நான்கு மணி நேரம் விசாரணை நடந்ததாம். அடுத்து ரெய்னா மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டுள்ளார்.

ஆறாவது இடத்தில் இந்தியா - டெஸ்ட் தரவரிசையில் பின்னடைவு

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி, 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பாகிஸ்தான் அணி 5வது இடத்துக்கு முன்னேறியது.      

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்காக தரவரிசைப் பட்டியல் (‘ரேங்க்’) வெளியிடப்பட்டது.             

இதில் இந்திய அணி 96 புள்ளியுடன் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த 2011ல் ‘நம்பர்–1’ இடத்தில் இருந்த இந்திய அணி, இதன் பின் தொடர்ச்சியாக 12 டெஸ்டில் தோற்க, தரவரிசையில் அடுத்தடுத்து சரிவைக் கண்டது. இதன் பின் தொடர்ந்து வீழ்ச்சி கண்ட இந்திய அணி, தற்போது மிக மோசமான இடத்தை அடைந்துள்ளது.          
   
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி (99 புள்ளி), 5வது இடத்துக்கு முன்னேறியது.     
        
பறிபோன வாய்ப்பு: முதல் டெஸ்ட் தோல்வியால், தற்போது இரண்டாவது இடத்திலுள்ள ஆஸ்திரேலிய (123) அணி, தென் ஆப்ரிக்காவை (124) பின்தள்ளி, ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறலாம் என்ற கனவு தகர்ந்தது.    
   
அடுத்து இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றாலும் (121), தோல்வியடைந்தாலும் (117) என, தற்போதுள்ள இரண்டாவது இடத்துக்கு பாதிப்பு இல்லை.       

பாக்., முன்னேற்றம்: அதேநேரம், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை 2–0 என, கைப்பற்றினால், 105 புள்ளிகளுடன், இங்கிலாந்து (104), இலங்கை (101) அணிகளை பின்தள்ளி மூன்றாவது இடத்தை பிடிக்கலாம்.      

ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான தொடரை (1–0) என, வென்றால், பாகிஸ்தான் அணி 103 புள்ளியுடன், 4வது இடம் பெறும்.

முறைகேடு செய்ததா கபில் நிறுவனம்?

மைதானத்தில் விளக்கு பொருத்தியதில் நடந்த முறைகேடு குறித்து, கபில்தேவ் நிறுவனம் மீது அரசு விசாரணை நடத்த வேண்டும் என, கோவா கிரிக்கெட் சங்கம் (ஜி.சி.ஏ.,) கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், 55. கடந்த 1983ல் உலக கோப்பை வென்று தந்தார். 

இவர், ‘தேவ் முஸ்கோ லைட்டிங்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் சார்பில் கோவா கிரிக்கெட் மைதானத்தில், ஒளி விளக்கு பொருத்தும் பணி நடந்தது.

இதில் முறைகேடு நடந்திருப்பதாக ஜி.சி.ஏ., தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜி.சி.ஏ., துணைத்தலைவர் ஷேகர் சால்கர் கூறியது:

கபில்தேவின் நிறுவனம் நொய்டாவில் உள்ளது.  இது எப்படி ஜி.சி.ஏ., பட்டியலில் வந்தது. இவரது நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்குவது குறித்து நிர்வாகக்குழுவில் அனுமதி எதுவும் வழங்கவில்லை. இது எப்படி தரப்பட்டது என்றே  தெரியவில்லை.

சில ஆண்டுக்கு முன், ரூ. 4 கோடிக்கும் அதிகமான செலவில், விளக்குகள் பொருத்தியுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு இதை விட குறைந்த செலவில், மற்றொரு மைதானத்துக்கு கோவா அரசு சார்பில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 

இதனால், ஜி.சி.ஏ.,யுடன், கபில்தேவ் நிறுவனத்துக்கு உள்ள தொடர்பு குறித்து, கோவா அரசு விசாரிக்க வேண்டும். இவ்வாறு ஷேகர் சால்கர் கூறினார். 


காரணம் என்ன:

கோவா கிரிக்கெட் சங்கம் தற்போது, தலைவர் வின்டோ பத்கே, துணைத்தலைவர் ஷேகர் சால்கர் தலைமையில் இரு பிரிவுகளாக செயல்படுகிறது. 

வின்டோ முறைகேடுகளில் ஈடுபடுவதாக ஷேகர் சால்கர் குற்றம் சுமத்தினார். இதுகுறித்து ஏற்கனவே கோவா அரசு விசாரிக்கிறது. இந்நிலையில் தான் கபில்தேவ் நிறுவனத்தின் மீது புகார் தரப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் பிளிண்டாப்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட, முன்னாள் இங்கிலாந்து ‘ஆல்–ரவுண்டர்’ பிளிண்டாப், பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் ‘ஆல்–ரவுண்டர்’ ஆன்ட்ரூ பிளிண்டாப், 36. இதுவரை 79 டெஸ்ட் (3845 ரன்கள், 226 விக்.,), 141 ஒருநாள் (3394 ரன்கள், 169 விக்.,), 7 சர்வதேச ‘டுவென்டி–20’ (76 ரன், 5 விக்.,) போட்டிகளில் விளையாடிய இவர், கடந்த 2009ல் ஓய்வை அறிவித்தார். 

தற்போது இவர், ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட, பிரிஸ்பேன் ஹீட் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள இத்தொடரில் இவர் விளையாட உள்ளார். 

இதுகுறித்து பிரிஸ்பேன் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கூறுகையில், ‘‘சிறந்த அனுபவ வீரரான பிளிண்டாப்பின் வருகையால் பிரிஸ்பேன் அணியின் பேட்டிங், பவுலிங் பலம் அதிகரித்துள்ளது. 

இது, பிரிஸ்பேன் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கும். இவர், அணியின் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுப்பார் என நம்புகிறேன்,’’ என்றார்.

இந்திய இளம் வீரர் இரட்டை சதம்

ரயில்வே அணிக்கு எதிரான 19வயது கிரிக்கெட் 50 ஓவர் போட்டியில், ராஜஸ்தானின் ஆதித்யா கார்வல், 263 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இளம் வீரர்கள் (19 வயது) பங்கேற்கும், வினோ மன்கட் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன், மத்திய மண்டலத்தை சேர்ந்த ராஜஸ்தான், ரயில்வே அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆதித்யா கார்வல், 151 பந்துகளில், 18 சிக்சர், 22 பவுண்டரி உட்பட, மொத்தம் 263 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி 50 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்தது.

பின் களமிறங்கிய ரயில்வே அணி, 42.2 ஓவரில் 147 ரன்னுக்கு சுருண்டு, 266 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராஸ்தான் வீரர் ஷுபம் சர்மா, 5 விக்கெட் வீழ்த்தினார்.

யூனிஸ் கான் சாதனை சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சதம் அடித்தார். 

இதையடுத்து, டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். 

பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத் (3), முகமது ஹபீஸ் (0) சொதப்பல் துவக்கம் தந்தனர். பின் இணைந்த அசார் அலி, யூனிஸ் கான் ஜோடி இணைந்து ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அசார் அலி டெஸ்ட் அரங்கில் 16வது அரை சதம் கடந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில், அசார் அலி (53 ரன், 167 பந்து) அவுட்டானார்.

மறுமுனையில், லியான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய யூனிஸ் கான் டெஸ்ட் அரங்கில் 25வதுசதம் எட்டினார். இவர் 106 ரன்கள் (223 பந்து) எடுத்து, ஜான்சன் வேகத்தில் வீழ்ந்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. மிஸ்பா (34), அசாத் சபிக் (9) அவுட்டாகாமல் இருந்தனர். 


சாதனை சதம்:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான துபாய் டெஸ்டில் சதம் அடித்த யூனிஸ் கான், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராக சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை பெற்றார். 

* தவிர, அதிக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் முதலிடத்திலுள்ள இன்சமாம் (25) சாதனையை, யூனிஸ் சமன் செய்தார்.

ரூ. 400 கோடி கொடு - இழப்பீடு கேட்கிறது பி.சி.சி.ஐ

இந்திய தொடரில் இருந்து பாதியில் விலகிய வெஸ்ட் இண்டீசுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. சுமார் ரூ. 400 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வலியுறுத்தியுள்ளது.    
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு.ஐ.சி.பி.,), வீரர்கள் சங்கம் இடையில் சமீபத்தில் புதிய சம்பள ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் 75 சதவீத அளவுக்கு சம்பளம் குறைந்ததால், வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலக முடிவு செய்தனர். நான்காவது ஒருநாள் போட்டிக்குப் பின், மீதமுள்ள தொடரை புறக்கணித்து, நாடு திரும்பினர். இது, ‘கிரிக்கெட் வல்லரசான’ இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடும் கோபத்தை ஏற்படுத்தியது.                               
டபிள்யு.ஐ.சி.பி., இந்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வேலைகளில் பி.சி.சி.ஐ., இறங்கியுள்ளது. தொடர் ரத்தானதால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட இழப்பீடு கேட்பது,  2016ல் வெஸ்ட் இண்டீசில் நடக்கவுள்ள தொடரை புறக்கணிப்பது, ஐ.பி.எல்., தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை நீக்குவது உள்ளிட்டவை  பல அதிரடி முடிவுகள் நாளை ஐதராபாத்தில் நடக்கவுள்ள பி.சி.சி.ஐ., செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.       

இழப்பீடு எவ்வளவு: வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து ஒருநாள், ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. ஆனால் நான்கு ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடியது. 

மீதமுள்ள ஒரு ஒருநாள், ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’, 3 டெஸ்ட் போட்டிகள் என 17 நாட்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதில் இலங்கை அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட சம்மதம் தெரிவித்திருப்பதால், மீதமுள்ள 12 நாட்களுக்கு இழப்பீட்டு தொகை கணக்கிடப்பட்டுள்ளது. 

நாள் ஒன்றுக்கு  வருமானமாக ரூ. 33 கோடி கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி 12 நாட்களுக்கு ரூ. 396 கோடி வருகிறது. ஒட்டுமொத்தமாக சுமார் ரூ. 400 கோடி இழப்பீட்டு தொகையாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டிடம் கேட்க பி.சி.சி.ஐ., முடிவு செய்து உள்ளது.    
  
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில், ‘‘தொடர் ரத்தானதால் எங்களுக்கு ரூ. 400 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தான் தரவேண்டும். இதுகுறித்து ஐதராபாத்தில் நாளை நடக்கவுள்ள செயற்குழுவில் விவாதிக்க உள்ளோம்,’’ என்றார்.

தோனியின் நம்பிக்கை நாயகன்

கேப்டன் தோனியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார் முகமது ஷமி.

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 24. இதுவரை 35 ஒருநாள் போட்டிகளில் 66 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 டெஸ்டில் 5 விக்., மற்றுள் 4 ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் மட்டும் சாய்த்தார்.

இதையடுத்து, கடினமான பயிற்சியில் ஈடுபட்ட ஷமி, பந்தை ‘லேட் சுவிங்’ செய்வதில் மீண்டும் அசத்த துவங்கியுள்ளார். 

இதற்கான பலனை, தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறுவடை செய்யத் துவங்கியுள்ளார்.

முதல் இரு போட்டியில் தலா 4 என, மொத்தம் 8 விக்கெட் கைப்பற்றிய இவர், வரும் உலக கோப்பை தொடரில், கேப்டன் தோனியின் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில், 97 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீசின் ஸ்மித், ஏறக்குறைய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். 


அசத்தல் ‘பார்ம்’:

ஆனால், முகமது ஷமியின் அசத்தலான ‘சுவிங்’ பந்து, இவரை போல்டாக்க, போட்டியில் திருப்பம் ஏற்பட்டு இந்திய அணி வெற்றி பெற்றது. இவரது இந்த ‘சுவிங்கை’ பார்க்கும் போது, ஷமி அசத்தலான ‘பார்மில்’ உள்ளது தெளிவாகத் தெரிகிறது. 

இதனால், உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில், கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளட்சரின் முதல் தேர்வாக ஷமி இருப்பது உறுதி.

இத்துடன் உமேஷ் யாதவின் வேகம், இஷாந்த் சர்மாவின் அனுபவம், புவனேஷ்வர் குமாரின் துல்லியமான பந்துவீச்சும் இணைவது, தோனிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

இந்திய அணியின் நம்பர் 1 அம்போ

மூன்றாவது போட்டி ரத்தானதால், ஒருநாள் அரங்கில் ‘நம்பர்–1’ இடம் பெறும் இந்திய அணியின் கனவு தகர்ந்தது.       
     
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. 

பின், டில்லியில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, தொடர் 1–1 என சமநிலை ஆனது. அடுத்த மூன்று போட்டிகளிலும் இந்தியா வென்றால், இரண்டாவது இடத்தில் இருந்து ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது. 

இந்நிலையில், மூன்றாவது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்க இருந்தது. இங்கு ‘ஹூட் ஹூட்’ புயலால் கடும் பாதிப்பு ஏற்பட, போட்டியை ரத்து செய்வதாக பி.சி.சி.ஐ., தெரிவித்தது. 

இதையடுத்து, ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்தை பிடிக்கும் வாய்ப்பு பறிபோனது. தற்போது இந்திய அணி 113 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3–0 என வென்ற ஆஸ்திரேலிய அணி 114 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தை தக்க வைத்துக் கொண்டது. தென் ஆப்ரிக்க அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.          
  
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் கூட 114 புள்ளிகளுடன் 2வது இடத்தையே பிடிக்க முடியும். ஆஸ்திரேலிய அணி, தசம புள்ளிகள் (0.02) வித்தியாசத்தில் முதலிடத்தில் நீடிக்கும்.           

ஒருவேளை இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் 112 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு தள்ளப்படும். இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்தால், 111 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு தள்ளப்படும்.

நான்காவது போட்டிக்கு சிக்கல்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி(அக்., 17) திட்டமிட்டபடி  நடக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது.        
          
இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா, தரை மட்டத்தில் இருந்து 6,800 அடி உயரத்தில் உள்ளது.  இங்கு வீரர்களை ஏற்றிச் செல்ல விமான நிறுவனங்கள் மறுக்கின்றன. 

இங்கு விமானம் தரையிறங்கும் இடம் சிறியது என்பதால், மிகவும் துல்லியமாக, தரையிறக்க வேண்டும். தவிர, இரவில் தரையிறங்கும் வசதி கிடையாது.              
           
சாலை வழியாக செல்லலாம் எனில், 5 மணி நேரம் பஸ்சில் செல்ல வேண்டும் என்பதால், இந்த திட்டத்தை கைவிட்டனர்.             
            
உறுதி இல்லை: வேறு வழியில்லாத நிலையில், ஆந்திரா கிரிக்கெட் சங்கத்தை தொடர்பு கொண்ட பி.சி.சி.ஐ., விசாகப்பட்டின மைதானத்தை தயார் நிலையில் வைத்திருக்குமாறு தெரிவித்துள்ளது. 

ஆனால், தொடர் மழை காரணமாக, இங்கு மூன்றாவது ஒருநாள் போட்டி(அக்., 14) நடப்பதே கேள்விக்குறியாக உள்ளது.


டிக்கெட் தயார்          
              
இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க செயலர் மோகித் சூட் கூறுகையில்,‘‘ தரம்சாலாவில் போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடக்கின்றன. 

டிக்கெட்டுகள் அச்சடித்து விற்பனைக்கு தயாராக உள்ளன. போட்டியை இங்கு நடத்த முடியாது என்று கூறுவதற்கே இடமில்லை,’’ என்றார்.