இந்திய அணிகளில் வெளிநாட்டு வீரர்கள்சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், மைக்கேல் ஹசி, டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்கள் உள்ளூர் அணிக்காக விளையாடாமல், இந்திய அணிகளுக்காக விளையாட உள்ளனர்.

இந்தியாவில், சர்வதேச உள்ளூர் சாம்பியன் அணிகள் பங்கேற்கும், ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர், செப்.17 முதல் அக்.6 வரை நடக்கிறது. 

இதில், 6வது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த மும்பை, சென்னை, ராஜஸ்தான் அணிகளுடன், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் ஹீட், பெர்த் ஸ்கார்சர்ஸ், தென் ஆப்ரிக்காவின் லயன்ஸ், டைட்டன்ஸ், வெஸ்ட் இண்டீசின் டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.


தகுதி சுற்று:

இந்தியா (3), ஆஸ்திரேலியா (2), தென் ஆப்ரிக்கா (2), வெஸ்ட் இண்டீசை (1) சேர்ந்த 8 அணிகள் நேரடியாக பிரதான சுற்றில் விளையாடுகின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 உள்ளூர் அணிகள் தகுதிச் சுற்றில் பங்கேற்கின்றன. 

ஐதராபாத்தில் செப்.17-20ம் தேதிகளில் நடக்கும் தகுதிச் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.


இரண்டு பிரிவு:

பிரதான சுற்றில், 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். "ஏ' பிரிவில் ராஜஸ்தான், மும்பை, லயன்ஸ், பெர்த் மற்றும் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன. "பி' பிரிவில் சென்னை, டைட்டன்ஸ், பிரிஸ்பேன், டிரினிடாட் அண்டு டுபாகோ மற்றும் தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடிக்கும் அணிகள் இடம் பெற்றுள்ளன. செப்.21ம் தேதி நடக்கவுள்ள "ஏ' பிரிவுக்கான லீக் போட்டியில், ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதுகின்றன.


உத்தேச அணி:

இத்தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும், உத்தேச அணியை அறிவித்தன. பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள், தங்கள் நாட்டை சேர்ந்த உள்ளூர் அணிகளிலும் இடம் பெற்றுள்ளனர். இரண்டு அணிகளில் இடம் பெற்றுள்ள 15 வெளிநாட்டு வீரர்களில், 11 பேர் இந்திய அணிக்காக விøளாட உள்ளனர். 

இலங்கையின் சங்ககரா (கந்துரதா மரோன்ஸ்), நுவன் குலசேகரா (கந்துரதா மரோன்ஸ்), ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக் (பெர்த்), தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் (லயன்ஸ்) ஆகியோர் மட்டும், உள்ளூர் அணிக்கு விளையாட முடிவு செய்துள்ளார்.

இரண்டு அணிகளில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களை, தங்களது அணிக்காக விøளாட தேர்வு செய்யும் இந்திய அணிகள், சாம்பியன்ஸ் லீக் விதிமுறைப்படி, வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ள உள்ளூர் அணிகளுக்கு நஷ்ட ஈடாக, ஒரு வீரருக்கு தலா ரூ. ஒரு கோடி வரை கொடுக்க வேண்டும்.

இந்திய அணிக்காக விளையாடும் வெளிநாட்டு வீரர்கள்:

வெஸ்ட் இண்டீஸ்: டுவைன் பிராவோ (சென்னை), கெவான் கூப்பர் (ராஜஸ்தான்), போலார்டு (மும்பை).

தென் ஆப்ரிக்கா: டுபிளசி (சென்னை), ஆல்பி மார்கல் (சென்னை), கிறிஸ் மோரிஸ் (சென்னை).

ஆஸ்திரேலியா: நாதன் கவுல்டர்-நைல் (மும்பை), மைக்கேல் ஹசி (சென்னை), மிட்சல் ஜான்சன் (மும்பை), ஷேன் வாட்சன் (ராஜஸ்தான்).

இலங்கை: திசாரா பெரேரா (ஐதராபாத்).


சச்சின் பங்கேற்பாரா

பிரிமியர் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த மும்பை அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுகிறார். கடந்த தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் பங்கேற்கவில்லை. இவர், சமீபத்தில் முடிந்த கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், 7 போட்டியில் 41 ரன்கள் மட்டும் எடுத்தார். 

மும்பை அணிக்காக மட்டும் விளையாடும் இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, தனது மனைவியின் பிரசவத்துக்காக இத்தொடரில் பங்கேற்கவில்லை. இதேபோல, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு, இது கடைசி தொடர்.

அஜய் ஜடேஜாவின் ஆசை

சூதாட்ட அஜய் ஜடேஜாவுக்கு மீண்டும் கிரிக்கெட் மீது ஆசை பிறந்துள்ளது. இவர், ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட தயாராக இருக்கிறாராம்.
இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, 42. கடந்த 1992ல் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் களமிறங்கிய இவர், 2000ம் ஆண்டு வரை விளையாடினார். 

இதுவரை இவர், 15 டெஸ்ட் (576 ரன்கள்), 196 ஒருநாள் (5359 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன்பின் சூதாட்டப்புகாரில் சிக்கிய இவருக்கு, ஐந்து ஆண்டுகள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

இதை எதிர்த்து அப்பீல் செய்த இவருக்கு, 2003ல் டில்லி கோர்ட் வழங்கிய தீர்ப்பில், தடை நீக்கப்பட்டு, உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடலாம் என தெரிவிக்கப்பட்டது. 

இருப்பினும் வயது, "பார்ம்', உடற்தகுதி காரணமாக இந்திய அணியில் அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த 2005ல் ரஞ்சி கோப்பைக்கான ராஜஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக களமிறங்கினார். அதன்பின் 2007ல், ஹாங்காங் சர்வதேச சிக்சஸ் தொடரில் விளையாடினார். 

இந்நிலையில் சமீபத்தில் இவர், சென்னையில் நடந்த புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் அரியானா அணியின் கேப்டனாக விளையாடினார். இதன்மூலம் ஆறு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். 

இதனையடுத்து இவர், அடுத்தாண்டு நடக்கவுள்ள ஏழாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அஜய் ஜடேஜா கூறியது: இந்தியாவில் நடக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் எண்ணம் கிடையாது. ஏனெனில் "டுவென்டி-20' போட்டியில் விளையாடுவதற்கேற்ப உடற்தகுதி என்னிடம் இல்லை. 

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இருந்து "டுவென்டி-20' போட்டி முற்றிலும் மாறுபட்டது. எனவே பிரிமியர் கிரிக்கெட் தொடரின் போது, "டிவி' சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவே தொடர விரும்புகிறேன்.

அதேவேளையின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சி கோப்பை தொடரில் அரியானா அணிக்காக விளையாட விரும்புகிறேன். இத்தொடரில் விளையாடுவதற்குரிய தகுதியும், திறமையும் என்னிடம் உள்ளது. 

வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், இளம் வீரர்களுடன் இணைந்து விளையாட தயாராக உள்ளேன். ஆனால் அணியில் தேர்வு செய்யப்படுவது என் கையில் இல்லை. இது, அரியானா அணி நிர்வாகத்திடம் உள்ளது. புச்சிபாபு தொடர் மூலம், மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அஜய் ஜடேஜா கூறினார்.

இங்கிலாந்து வீரர்கள் முட்டாள்கள் - வாருகிறார் வார்ன்

ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தது மிதமிஞ்சிய முட்டாள்தனமான, திமிர் பிடித்த செயல்,'' என, வார்ன் தெரிவித்தார். 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை, இங்கிலாந்து அணி 3-0 என, கைப்பற்றியது. 

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஷஸ் கோப்பை வென்ற உற்சாகத்தில், இங்கிலாந்து அணியின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது உற்சாக மிகுதியில் பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் ஆகியோர், ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தனர். 

அப்போது, ஆஸ்திரேலிய வீரர்கள், பத்திரிகையாளர்கள் மைதானத்தில் தான் இருந்தனர். 

இதனால், இவ்விஷயம் வெளிப்பட்டு விட்டது. கிரிக்கெட் வீரர்களின் புனித இடமான ஆடுகளத்தை, அசிங்கப்படுத்திய வீரர்களின் செயல் குறித்து, விசாரணை நடக்கிறது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் கூறுகையில்,"" வீரர்களின் கொண்டாட்டம் என்பது "டிரசிங் ரூமிற்குள்' இருப்பது தான் சிறந்தது. 

மிகவும் பழமை வாய்ந்த ஓவல் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தது, இங்கிலாந்து வீரர்களில் மிதமிஞ்சிய முட்டாள்தனமான, திமிர் பிடித்த செயல்,'' என்றார்.

டெஸ்ட் ரேங்கிங் - இந்தியா பின்னடைவுடெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி தசம புள்ளிகள் வித்தியாசத்தில் 3வது இடத்தில் தள்ளப்பட்டது.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டது. 

இதில், தென் ஆப்ரிக்க அணி தொடர்ந்து முதலிடத்தை (135) தக்கவைத்துக் கொண்டது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3-0 என, கைப்பற்றிய இங்கிலாந்து அணி, 116 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. 

தசம புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய அணி மூன்றாவது (116 புள்ளி) இடத்துக்கு தள்ளப்பட்டது.

 4 புள்ளிகளை இழந்த ஆஸ்திரேலிய அணி (101), இரண்டு ஆண்டுகளுக்கு பின் தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. பாகிஸ்தான் அணி (102) நான்காவது இடத்திற்கு முன்னேறியது. 

வெஸ்ட் இண்டீஸ் (99), இலங்கை (88), நியூசிலாந்து (79), வங்கதேசம் (10) ஆகிய அணிகள் முறையே ஆறு முதல் ஒன்பது இடங்களை பிடித்தன.

யுவராஜ் சிங் மீண்டும் விளையாட என்ன காரணம்?

கிரிக்கெட் மீதுள்ள ஆர்வம், மீண்டும் போட்டியில் விளையாட தூண்டியது,'' என, இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், 31. 2011ல் நடந்த உலக கோப்பை போட்டியில், தொடர் நாயகன் விருது வென்றார். 

இதன் பின் ஏற்பட்ட நுரையீரல் "கேன்சரில்' இருந்து மீண்ட இவர், 2012 "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். 

தற்போது "பார்ம்' இல்லாததால், அணியில் இருந்து நீக்கப்பட்டார். 2015 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள இவர், சமீபத்தில் பிரான்ஸ் சென்று புகழ் பெற்ற டிம் எக்செட்டரிடம் பயிற்சி எடுத்தார். தற்போது இவர், உள்ளூர் போட்டிகளில் விளையாட காத்திருக்கிறார்.

யுவராஜ் சிங் கூறியது: கடந்த ஒரு ஆண்டாக அணியில் இடம் கிடைக்காதது கடினமாக இருந்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளேன்.

உலக கோப்பை (2011) தொடருக்கு முன் ஏற்பட்ட காயம், அதன்பின் கேன்சரால் பாதிக்கப்பட்டு மீண்டது, மீண்டும் அணியில் இடம் பிடித்தது, தற்போது அணியில் இடம் கிடைக்காமல் தவிப்பது என, எல்லாமே சோதனை தான். 

இருப்பினும், கிரிக்கெட் மீதுள்ள ஆர்வம், மீண்டும் அணியில் இடம் பிடிக்க தூண்டியது. இதற்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தற்போது உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறேன். அடுத்த மாதம் நடக்கவுள்ள சாலஞ்சர் டிராபி தொடரில் பங்கேற்க உள்ளேன். 

அதற்கு முன், சில உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளேன். அதன்பின், அக்டோபரில் துலீப் டிராபி தொடரில் பங்கேற்க உள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன். அதன்பின் ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

சவாலுக்கு தயாராகும் ஜாகிர்மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முயற்சிக்கும் எனக்கு, உள்ளூர் போட்டிகளில் சோதனை காத்திருக்கிறது. இதை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன்,'' என, வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் தெரிவித்தார்.

இந்திய அணியின் "சீனியர்' வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், 34. கடந்த ஆக., மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குப் பின் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான கோல்கட்டா (2012, டிச.,) போட்டிக்குப் பின், டெஸ்ட் அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து மும்பை அணிக்காக சில ரஞ்சி போட்டிகளில் பங்கேற்றார். அடுத்து கெண்டைக்கால் காயம் காரணமாக, நான்கு மாத காலம் போட்டிகளில் விளையாட முடியவில்லை. 

பிரிமியர் தொடரின் கடைசியில் மீண்டு வந்த இவர், கடந்த பிப்.,ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் மறுபடியும் காயம் அடைய, அடுத்தடுத்து அணியில் சேர்க்கப்படவில்லை. 

இப்போது, கடுமையான பயிற்சிக்குப் பின் மீண்டும் அணியில் இடம் பெற முயற்சித்து வருகிறார். 

இதுகுறித்து ஜாகிர் கான் கூறியது:

பொதுவாக ஒவ்வொருவரும் இந்திய அணிக்காக விளையாடுவதைத் தான் விரும்புவர். எனது உடற்தகுதி நன்றாக இருந்தால், நானும் அணியில் இடம் பெற முயற்சிக்கலாம். ஏற்கனவே, இந்த காரணத்துக்காகத் தான் நீக்கப்பட்டேன். மீண்டும் சரியான உடற்தகுதி பெறத்தான் இப்போது போராடிக் கொண்டுள்ளேன்.

இதற்காகத்தான் பிரான்சின் டிம் எக்செட்டரிடம் நானும், யுவராஜ் சிங்கும் சென்றோம். எங்களைப் பொறுத்தவரை இவர் சரியான நபர் தான். ஏனெனில், உலகின் பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் என்ன தேவை என்பதை, எக்செட்டர் சரியாக தெரிந்து வைத்துள்ளார். 

இப்போது முதல்கட்ட பயிற்சி தான் முடிந்துள்ளது. வரும் செப்., துவக்கத்தில் தென் ஆப்ரிக்கா சென்று பவுலிங் பயிற்சியில் ஈடுபடவுள்ளேன். 

அடுத்து வரும் ரஞ்சி சீசன் போட்டிகள் எனக்கு மிகப்பெரிய சோதனை. இதில் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு திரும்ப விரும்புகிறேன். இந்திய அணியில் இப்போதுள்ள இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதனால் அணிக்கு திரும்ப முடியுமா என்று பயப்படவில்லை. ஏனெனில், இதுபோன்ற போட்டிகள் இருந்தால் தான், மேலும் சிறப்பாக செயல்பட முடியும்.

இவ்வாறு ஜாகிர் கான் கூறினார்.

இளம் இந்தியாவின் வெற்றி தொடருமா?இந்தியா, தென் ஆப்ரிக்கா "ஏ' அணிகளுக்கு இடையிலான, 2வது நான்கு நாள் டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரை முழுமையாக கைப்பற்ற இளம் இந்திய அணி காத்திருக்கிறது.

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய "ஏ' அணி, நான்கு நாட்கள் விளையாடும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 

ரஸ்டன்பர்க் நகரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி, பிரிட்டோரியாவில் இன்று துவங்குகிறது.

முதல் டெஸ்டில் சதம் அடித்து அசத்திய கேப்டன் புஜாரா, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் இப்போட்டியிலும் கைகொடுக்கலாம். 

கடந்த போட்டியில் ஏமாற்றிய ஷிகர் தவான், முரளி விஜய் ஜோடி சிறந்த துவக்கம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். முதல் டெஸ்டில் விளையாடாத அம்பதி ராயுடுவுக்கு இடம் கிடைக்கலாம். 

விக்கெட் கீப்பர் விரிதிமன் சகாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்கலாம். காஷ்மீரை சேர்ந்த இளம் "ஆல்-ரவுண்டர்' பர்வேஸ் ரசூல், இப்போட்டிக்கு தேர்வு செய்யப்படலாம். 

பவுலிங்கில் அசத்திய ஈஷ்வர் பாண்டே, சுரேஷ் ரெய்னா, ஜெயதேவ் உனத்கத், முகமது ஷமி, நதீம் உள்ளிட்டோர் இம்முறையும் கைகொடுக்கலாம்.

சொந்த மண்ணில் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய தென் ஆப்ரிக்க அணி, எழுச்சி காணும் பட்சத்தில், இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து, தொடரை 1-1 என சமன் செய்யலாம்.

தென் ஆப்ரிக்க தொடருக்கு தயார் - இஷாந்த் சர்மா உற்சாகம்எதிர் வரும் தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளேன்,'' என, இஷாந்த் சர்மா தெரிவித்தார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, 24. இதுவரை 51 டெஸ்ட் (144 விக்.,), 65 ஒரு நாள் (94 விக்.,), 13 "டுவென்டி-20' (8 விக்.,) போட்டியில் விளையாடி உள்ளார். கடந்த மாதம் நடந்த முத்தரப்பு தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்றார். 

தற்போது ஓய்வில் உள்ள இஷாந்த் சர்மா கூறியது:

கடந்த பிப்ரவரி மாதம் கணுக்கால் காயத்திலிருந்து மீண்ட பின், எனக்கு ஓய்வு கிடையாது. தற்போது, உடற்தகுதி மற்றும் பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறேன். 

தவிர, தொடர்ந்து வேகமாக பவுலிங் செய்ய முயற்சிக்கிறேன். இதற்காக காலையில் "ஜிம்', பின் மதியம் பவுலிங், அடுத்து நீச்சல் என, தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடினமாக பயிற்சி செய்கிறேன். 

சமீபத்தில் நியூசிலாந்து முன்னாள் வீரர் ரிச்சர்டு ஹாட்லி என் பந்துவீச்சு குறித்து தெரிவித்த கருத்தை வரவேற்கிறேன். 

ஏனெனில், ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது.இருப்பினும், இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன்.

இங்கிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி பைனலில், முக்கிய கட்டத்தில் கேப்டன் தோனி என்னை பந்துவீச அழைத்தது ஆச்சரியத்தை தந்தது. "இந்த ஓவர் தான் போட்டியில் வெற்றி பெற உதவப் போகிறது,' என்றார். இவரது நம்பிக்கைக்கு ஏற்ப, சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி.

இதேபோல, எதிர்வரும் தென் ஆப்ரிக்க தொடருக்கும் தயாராக உள்ளேன். உடற்தகுதியை தொடர்ந்து சிறப்பாக வைத்து, இந்திய அணியின் பவுலிங் பிரிவுக்கு தலைமையேற்று முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன். 

ஆனால், இதற்கு முன் சாம்பியன்ஸ் லீக், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் போன்றவை வரவுள்ளது. முதலில் இதில் கவனம் செலுத்த வேண்டும். 

விராத் கோஹ்லி 6 வது இடம்ஐ.சி.சி., சர்வதேச "டுவென்டி-20' போட்டி, பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 6வது இடத்தில் நீடிக்கிறார்.

சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் விராத் கோஹ்லி, 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்றொரு இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 8வது இடத்தில் உள்ளார். 

இவர்களை அடுத்து, இந்தியாவின் யுவராஜ் சிங் 16வது, கவுதம் காம்பிர் 19வது இடத்தில் உள்ளனர். 

முதல் மூன்று இடங்களில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம், இங்கிலாந்தின் ஹால்ஸ், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் உள்ளனர்.

பவுலர்களுக்கான ரேங்கிங்கில், ஒரு இந்திய பவுலர் கூட "டாப்-10' வரிசையில் இல்லை. 

இந்தியா சார்பில் அஷ்வின் 16வது இடத்தில் உள்ளார். ஹர்பஜன் சிங் 32வது இடம் பிடித்தார். 

முதல் மூன்று இடங்களில் வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன், பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் ஆகியோர் உள்ளனர்.

உசைன் போல்ட்டை முந்தினார் இந்திய கேப்டன் தோனிஓட்டத்தில் உசைன் போல்ட் தான் "டாப்'. ஆனால், வருமானத்தில் நம்ம தோனி தான் முந்துகிறார். 

உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், போல்ட்டை(40) முந்திய இவர் 16வது இடம் பிடித்தார். 

பிரபல "போர்ப்ஸ்' பத்திரிகை சார்பில், உலகளவில் கடந்த ஆண்டு (ஜூன் 2012- ஜூலை 2013) அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியானது. 

இதற்கு போட்டி சம்பளம், விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் தொகை போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. 

கடந்த ஜூன் 2011- ஜூலை 2012ல் வெளியான பட்டியலில் 31வது இடத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, தற்போது 16வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

இவரது கடந்த ஆண்டு வருமானம் ரூ. 200 கோடி. இதில் ரூ. 22 கோடி போட்டிகளில் பங்கேற்க சம்பளமாக பெற்றுள்ளார். 

எஞ்சியுள்ள ரூ. 178 கோடி விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பெற்றுள்ளார். 

மீண்டும் அசத்த அஷ்வின் தீவிரம்சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் அசத்த, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், 26. இதுவரை டெஸ்ட் (16ல், 92 விக்.,), ஒருநாள் (58ல், 80 விக்.,) போட்டிகளில் மொத்தம் 172 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 

கடைசியாக பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் முத்தரப்பு தொடரில், 5 போட்டிகளில் 6 விக்கெட் தான் கைப்பற்றினார். 

இதுகுறித்து அஷ்வின் கூறியது:

தற்போது இந்திய அணி போட்டிகளில் பங்கேற்காததால் ஓய்வு கிடைத்துள்ளது. 

இதைப் பயன்படுத்தி பவுலிங் திறமையை வளர்க்க முயற்சித்து வருகிறேன். ஏற்கனவே, "கேரம், ஆர்ம் பால்', "அன்டர் கட்டர்' என, பல்வேறு முறையில் பவுலிங் செய்து வருகிறேன். 

இப்போது பந்தை "பிட்ச்' செய்யும் நீளத்தை குறைத்து வேகமாக செல்லும் வகையில் பயிற்சி செய்து வருகிறேன். 

அடுத்து, வலது கை பேட்ஸ்மேன்களுக்கு "கேரம்' முறையில் பவுலிங் செய்ய முயற்சிக்கிறேன். 

இவ்வாறு அஷ்வின் கூறினார்.

மூன்றே பந்தில் ஹீரோ - சச்சின் வியப்புவிறுவிறுப்பான "டுவென்டி-20' போட்டிகளில் ஒருவர் "பேட்டை' சுழற்றினால், மூன்றே பந்துகளில் "ஹீரோ' அந்துஸ்துக்கு உயர்ந்துவிடலாம்,''என, சச்சின் தெரிவித்தார்.

பெங்களூருவில், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் 75வது ஆண்டு விழா நடந்தது. இதில் இந்தியாவின் சச்சின், கங்குலி, டிராவிட், கும்ளே, நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சச்சின் கூறியது: 

கிரிக்கெட்டில் மட்டும் தான் மூன்றுவிதமான போட்டிகள் உண்டு. டெஸ்டில் அடிப்படையான விஷயங்களை பின்பற்ற வேண்டும். 

மற்ற போட்டிகளில் கட்டுப்பாடு கிடையாது. அதிலும், "டுவென்டி-20' போட்டியில் ஒரு வீரர் அதிரடியாக ரன் சேர்த்தால், மூன்று அல்லது நான்கு பந்துகளில் "ஹீரோ' அந்தஸ்து பெறலாம். 

தேர்வு எப்படி: வீரர்கள் தேர்வு என்பது வெறும் புள்ளிவிவரங்களை அடிப்படையாக கொண்டு இருக்கக்கூடாது. உள்ளூர் போட்டிகளில் ரன் மழை பொழியும் சிலர், சர்வதேச போட்டிகளில் சொதப்புவர். 

எனவே, ஒரு வீரரின் செயல்பாட்டை முழுமையாக ஆய்வு செய்தல் அவசியம். ஒருவர் சில போட்டிகளில் ஏமாற்றினாலும், அவருக்கு நெருக்கடியான தருணங்களை சமாளித்து, சர்வதேச அரங்கில் பிரகாசிக்கும் திறன் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.

 இவ்வாறு சச்சின் கூறினார். 

இங்கிலாந்து கவுன்டி அணியில் காம்பிர்இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில், எசக்ஸ் அணிக்காக விளையாட இந்திய வீரர் கவுதம் காம்பிர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்திய அணியின் துவக்க வீரர் கவுதம் காம்பிர், 31. இதுவரை 54 டெஸ்ட் (4021 ரன்கள்), 147 ஒருநாள் (5238 ரன்கள்), 37 சர்வதேச "டுவென்டி-20' (932 ரன்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். 

சமீபகாலமாக மோசமான "பார்ம்' காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கிறார். 

இந்நிலையில் இவர், இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட சசக்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

இவர், நியூசிலாந்தின் ஹமிஷ் ரூதர்போர்டுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரூதர்போர்டு, நியூசிலாந்தில் நடக்கவுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சென்றுவிட்டார்.

இதனையடுத்து காம்பிர், வரும் ஆக., 20ம் தேதி கோல்செஸ்டர் நகரில் நடக்கவுள்ள நார்தாம்ப்டன்ஷயர் அணிக்கு எதிரான கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிசன்-2 போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து காம்பிர், தனது "டுவிட்டர்' இணைய தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "ரசிகர்களுக்கு நற்செய்தி, இன்று முதல் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளேன். இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி போட்டியில், சசக்ஸ் அணிக்காக விளையாட உள்ளேன்,' என, தெரிவித்தார்.

இப்போட்டியில் காம்பிர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், மீண்டும் இந்தியாவுக்காக விரைவில் விளையாடலாம்.

கங்குலி கனவு அணியில் லட்சுமணுக்கு நோகங்குலியின் கனவு டெஸ்ட் "லெவனில்' லட்சுமண் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் எடுத்த பெருமைமிக்க இவரை புறக்கணித்தது பெரும் வியப்பை அளித்துள்ளது. 

சமீபத்தில் இந்திய கிரிக்öட் ஜாம்பவான் கபில்தேவ் தனது கனவு அணியை அறிவித்தார். இதே போல முன்னாள் கேப்டன் கங்குலியும் தனது கனவு இந்திய அணிகளை தேர்வு செய்தார். இதில், டெஸ்ட், ஒருநாள் என இரு அணியிலும் கபில்தேவை சேர்த்துள்ளார். தனது பெயரையும் இடம் பெறச் செய்துள்ளார். 

ஒருநாள் போட்டியில் துவக்கத்துக்கு சச்சினுடன், தனது பெயரை தேர்வு செய்துள்ளார். கடந்த 1996-2007 இடைப்பட்ட காலத்தில் இந்த ஜோடி ரன்மழை பொழிந்தது. 21 முறை 100 அல்லது அதற்கு மேல் எடுத்து உலக சாதனை படைத்த, இந்த ஜோடி 136 இன்னிங்சில் 6609 ரன்கள் (சராசரி 49.32) எடுத்தது.


 யார் சிறந்தவர்:

கங்குலி ஓய்வுக்குப் பின் இந்திய அணியின் சிறந்த துவக்க ஜோடி குறித்து அவ்வப்போது பெரிய விவாதமே எழும். இருப்பினும், சச்சின்-சேவக் ஜோடி (3919 ரன்கள், சராசரி 42.14) சற்று சிறப்பாக செயல்பட்டது. சமீபத்தில் சேவக்-காம்பிர் சிறந்த சராசரி (50.54) வைத்துள்ளது. இவர்கள் 38 இன்னிங்சில் 1870 ரன்கள் எடுத்தனர். 


 தோனிக்கு இடம்:

டெஸ்ட் அணிக்கு கவாஸ்கர், சேவக்கை துவக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார் கங்குலி. 3வது இடத்துக்கு டிராவிட் தான் பொருத்தமானவராம். ஒவ்வொன்றுக்கும் "ஸ்பெஷலிஸ்ட்' வீரர் வேண்டும் என நினைக்கும் இவர், இந்த அடிப்படையில் டெஸ்ட், ஒருநாள் அணிக்கு தோனியை தேர்வு செய்துள்ளார். 

2011 உலக கோப்பை தொடரின், "நாயகன்' யுவராஜ் சிங், இளம் வீரர் விராத் கோஹ்லி ஆகியோர் ஒருநாள் அணியில் தேர்வாகினார்.


 லட்சுமண் "281':

டெஸ்ட் "லெவனில்' லட்சுமணை சேர்க்காமல் அதிர்ச்சி அளித்துள்ளார். கடந்த 2001ல் இவரது தலைமையில் கோல்கட்டாவில் நடந்த டெஸ்டில், லட்சுமண் 281 ரன்கள் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்ததை மறக்க முடியாது. லட்சுமணை 12வது வீரராக தான் தேர்வு செய்துள்ளார்.


 "தலை' இல்லை:

எரப்பள்ளி பிரசன்னா, சந்திரசேகர், பிஷன்சிங் பேடி ஆகியோர் ஜாம்பவான்கள் சேர்க்கப்படவில்லை. இரு அணிகளின் கேப்டன் யார் என்பதையும் கங்குலி குறிப்பிடவில்லை. 


 ஒருநாள் போட்டிக்கான கனவு அணி:

சச்சின், கங்குலி, சேவக், கோஹ்லி, டிராவிட், யுவராஜ், தோனி, கபில், ரவிந்திர ஜடேஜா, கும்ளே/ஸ்ரீநாத், ஜாகிர் கான்.


 டெஸ்ட் அணி:

கவாஸ்கர், சேவக், டிராவிட், சச்சின், கங்குலி/குண்டப்பா விஸ்வநாத், தோனி, கபில்தேவ், ஹர்பஜன், கும்ளே , ஸ்ரீநாத், ஜாகிர் கான், லட்சுமண் (12வது வீரர்).

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் திடீர் போராட்டம்


ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஒவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. 

இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடர் தொடங்க இன்னும் ஒருவார காலமே இருக்கும் நிலையில் ஜிம்பாப்வே வீரர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துடன் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வீரர்கள் புதிய சங்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஊதிய உயர்வு, அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. அளிக்கும் கட்டணதொகையில் 10 சதவீதத்தை வீரர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

ஊதிய உயர்வு அளிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடருக்கு தயாராகாமல் பயிற்சியை புறக்கணித்துள்ளனர். 

பிரச்சினைக்கு தீர்வு காண வீரர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

இந்த பிரச்சினை குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய நிர்வாக இயக்குனர் வில்பிரட் முகோன்டிகா கூறுகையில், ‘வீரர்கள் சங்கம் அமைக்க கடந்த சில மாதங்களாக முயற்சித்தனர். ஆனால் இவ்வளவு விரைவில் வீரர்கள் சங்கம் அமைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வீரர்களின் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

சம்பள பிரச்சினைக்கு விரைவில் முடிவு காணப்படும். பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிதி பற்றாக்குறை காரணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கு கடந்த மாத (ஜூலை) சம்பளத்தை வழங்கவில்லை. 

இந்தியாவுக்கு எதிரான தொடரால் எங்களுக்கு பணம் கிடைத்தாலும், ஏற்கனவே உள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. வீரர்களுக்கான சம்பள பாக்கி நிச்சயம் அளிக்கப்படும்’ என்றார்.

கபில்தேவ் பயிற்சியாளர் மரணம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் பயிற்சியாளர் தேஷ் பிரேம் ஆசாத், மரணம் அடைந்தார்.

இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை (1983) வென்று தந்தவர் கபில்தேவ். இவருக்கு 1970ல் களில் பயிற்சியாளராக இருந்தவர் தேஷ் பிரேம் ஆசாத், 75. கடந்த 1986 ல் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியா விருது கிடைத்தது. 

உடல்நலக்குறைவு காரணமாக சண்டிகரில் உள்ள தனியார், ஆஸ்பத்திரியில் 15 நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று ஆசாத் இறந்தார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைக்க வாய்ப்பு உள்ளது,''என, பயிற்சியாளர் லால் சந்த் ராஜ்புட் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய அணியின் அதிரடி வீரர் ஷிகர் தவான், 27. அறிமுக டெஸ்ட் (எதிர்- ஆஸி.,) போட்டியில் அதிவேக சதம் அடித்து உலக சாதனை படைத்தார். 

பின் தென் ஆப்ரிக்கா "ஏ' அணிக்கு எதிரான முத்தரப்பு லீக் போட்டியில், 248 ரன்கள் விளாசினார். 

இதன் மூலம், 50 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் சச்சின், சேவக் மட்டுமே இரட்டை சதம் அடித்திருந்தனர். 

இது குறித்து இந்திய "ஏ' அணி பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் கூறியது: 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக தவான் சிறப்பாக செயல்பட்டார். இதற்கு முன் இம்மாதிரியான ஆட்டத்தை நான் பார்த்தது கிடையாது. சச்சின், சேவக்கை போல தவானும் இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. 

இவர் வியக்கத்தக்க "ஷாட்களை' அடித்தார். இதனால், எதிரணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. மொத்தம் 30 பவுண்டரி, 7 சிக்சர் அடித்ததால், தென் ஆப்ரிக்க அணி பவுலர்கள் திணறிவிட்டனர். 

தற்போதுள்ள சூழ்நிலையில், எந்தவொரு ஸ்கோரும் சாத்தியமே. இதன்படி, தவான் எதிர்காலத்தில் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில், ஒரு இன்னிங்சில் 300 ரன்களை எட்ட வாய்ப்பு உள்ளது. 

கடந்த இரண்டு மாதமாக நடந்த சாம்பியன்ஸ் டிராபி, ஜிம்பாப்வே என அனைத்திலும் தவான் அசத்தினார். இவரைப்போல, இளம் வீரர்கள் இருப்பதால், இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. 

இவ்வாறு லால்சந்த் ராஜ்புட் கூறினார்.

9 சூதாட்ட வீரர்கள் மீது வழக்கு - ஐ.சி.சி., நடவடிக்கைவங்கதேச பிரிமியர் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 வீரர்கள் மீது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வழக்குப் பதிவு செய்தது.

"டுவென்டி-20' பிரிமியர் கிரிக்கெட் போல, வங்கதேசத்தில் பி.பி.எல்., தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது தொடர் கடந்த ஜன., 18 முதல் பிப்., 19 வரை நடந்தது. இதில் பல போட்டிகளில் சூதாட்டம் நடந்தது அம்பலமானது. 

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஷ்ரபுல், சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டு, மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்து ஐ.சி.சி., ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு (ஏ.சி.எஸ்.யு.,) தனியாக விசாரணை நடத்தியது. முடிவில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. 

இதில் 7 பேர் வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) நடத்தும் எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் வெளியிட்ட செய்தியில்," சூதாட்டம் குறித்து ஏ.சி.எஸ்.யு., நிறைய பேரிடம் விசாரணை நடத்தியது. பல்வேறு வழிகளில் இதற்கான ஆதாரங்களை திரட்டினோம். இதன் அடிப்படையில் தான் வழக்கு பதியப்பட்டது,' என, தெரிவித்துள்ளார்.


இப்போது இல்லை:

சூதாட்டத்தில் ஈடுபட்டு வழக்குப் பதியப்பட்ட 9 வீரர்கள் யார், யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின் தான் தெரியவரும். தவிர, தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்ல இவர்களுக்கு, இரு வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்திய A அணி சாம்பியன் - ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி

ஆஸ்திரேலிய "ஏ' அணிக்கு எதிரான பைனலில், 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, இந்திய "ஏ' அணி முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி, சாம்பியன் பட்டம் வென்றது. 
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய "ஏ' அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்றது. மூன்றாவது அணியாக ஆஸ்திரேலிய "ஏ' அணி விளையாடியது. 

லீக் சுற்றில் அசத்திய இந்தியா (2 வெற்றி), ஆஸ்திரேலியா (3 வெற்றி) அணிகள், பிரிட்டோரியாவில் நேற்று நடந்த பைனலில் மோதின. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் புஜாரா, "பேட்டிங்' தேர்வு செய்தார்.


தவான் அரைசதம்:

இந்திய அணிக்கு ரோகித் சர்மா (6), கேப்டன் புஜாரா (1) சொதப்பினர். பின் இணைந்த ஷிகர் தவான் (62), கார்த்திக் (73) அரைசதம் அடித்தனர். சுரேஷ் ரெய்னா (17), அம்பதி ராயுடு (34), விரிதிமன் சகா (31) பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்திய அணி 49.2 ஓவரில் 243 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது.


மேக்ஸ்வெல் சொதப்பல்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு, கேப்டன் ஆரோன் பின்ச் (20), ஷான் மார்ஷ் (11), மேக்ஸ்வெல் (12), மட்டின்சன் (7), மிட்சல் மார்ஷ் (2), ஹென்ரிக்ஸ் (20), நாதன் கூல்டர்-நைல் (5) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். சிறிது நேரம் தாக்குப்பிடித்த டிம் பெய்ன் 47 ரன்கள் எடுத்தார். 

கடைசியில் பவாத் அகமது (9) "ரன்-அவுட்' ஆக, ஆஸ்திரேலிய அணி 46.3 ஓவரில் 193 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது. சாந்து (21) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் நதீம் 3, முகமது சமி 2, ரெய்னா, ஈஷ்வர் பாண்டே, பர்வேஸ் ரசூல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இளம் இந்திய அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றி, கோப்பை வென்றது.

கனவு அணியில் கும்ளே, டிராவிட்

சையது கிர்மானியின் "கனவு கர்நாடக' அணியில், கும்ளே, டிராவிட் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றனர்.
கர்நாடக கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ.,) நேற்று "பிளாட்டினம் ஜூப்ளி' (70 ஆண்டு) விழாவை கொண்டாடியது. 

இதையடுத்து, கர்நாடகாவை சேர்ந்த 12 சிறந்த முன்னாள் வீரர்கள் அடங்கிய "கனவு' அணியை தேர்வு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி, 63. 

அணியின் கேப்டனாக வெங்கட்ராமன் சுப்ரமணியா இடம் பெற்றார். ஓய்வு பெற்ற கும்ளே, டிராவிட் ஆகியோரும் உள்ளனர்.

12 பேர் கொண்ட அணி விவரம்: சுப்ரமணியா (கேப்டன்), ரோஜர் பின்னி, டிராவிட், விஸ்வநாத், பிரிஜேஷ் படேல், சையது கிர்மானி (விக்கெட் கீப்பர்), சுனில் ஜோஷி, கும்ளே, பிரசன்னா, சந்திரசேகர், ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதல் - ஷிகார் தவான் இரட்டைச் சதம்இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 

இன்று இந்தியா -தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கிடையிலான போட்டி பிரிட்டோரியாவில் நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக ஷிகார் தவான், முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். 

துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் 14 ஓவர்களில் 100 ரன்னைத் தொட்டனர்.

37 பந்துகளில் 40 ரன்கள் குவித்த முரளி விஜய், ஹென்ட்ரிக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் புஜாராவும், ஷிகார் தவானும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 

86 பந்துகளில் சதம் கடந்த தவான், அதே வேகத்தில் இரட்டைச் சதத்தையும் கடந்தார். 132 பந்துகளில் 24 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் இந்த சாதனையை அவர் எட்டினார்.

இதன்மூலம் சர்வதேச அளவில் ஏ அணியில் அதிகபட்ச ரன் குவித்த வீரர் என்ற பெருமையை ஷிகார் தவான் பெற்றார். 

இதற்கு முன்பு 2008ம் ஆண்டு லண்டனில் நடந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் உபுல் தரங்கா 173 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அதனை இப்போது தவான் முறியடித்துள்ளார்.

இந்திய பவுலர்களுக்கு மெக்ராத் பயிற்சிஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மெக்ராத் பயிற்சி தருவார் என்று தெரிகிறது.

சென்னையில் இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான எம்.ஆர்.எப்., பயிற்சி அகாடமி உள்ளது. இதன் இயக்குனராக சமீபத்தில் மெக்ராத் நியமிக்கப்பட்டார்.

இப்போது, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), எம்.ஆர்.எப்., நிறுவனம் இரண்டும் விரைவில் கைகோர்க்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு, மெக்ராத் பயிற்சி தரலாம்.

இதுகுறித்து எம்.ஆர்.எப்.,ன் பொறுப்பாளர் செந்தில்நாதன் கூறுகையில்,"" பவுலிங் பயிற்சி குறித்த எங்கள் விளக்கங்களை கொடுத்துள்ளோம். ஆனால், ஒப்பந்தம் குறித்து பி.சி.சி.ஐ., தான் முடிவு செய்ய வேண்டும். 

இதுகுறித்து அவர்கள் தரப்பில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நாங்கள் முடிவெடுக்க குறைந்த நேரமே கொடுத்துள்ளனர். பி.சி.சி.ஐ., மீண்டும் வரும்வரை காத்திருப்போம்,'' என்றார். 

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறுகையில்,"" இந்த ஒப்பந்தம் பவுலிங் பயிற்சி, பவுலிங் அகாடமி பற்றியது மட்டுமல்ல. 

மறுவாழ்வு பயிற்சி மையம் மற்றும் பயிற்சியாளருக்கு பயிற்சி தரும் வசதிகள் குறித்தும் பேசப்படுகிறது. மொத்தத்தில் இது நல்ல ஒப்பந்தம்,'' என்றார்.

மீண்டும் சேவக், காம்பிர்உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், சேவக், காம்பிர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம்,'' என, முன்னாள் பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் கிரண் மோரே நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய அணியின் துவக்க வீரர்களாக, டில்லியை சேர்ந்த சேவக், காம்பிர் ஜோடி அசத்தியது. மோசமான "பார்ம்' காரணமாக, சமீபத்திய போட்டிகளில் இவர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இவர்களுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட ஷிகர் தவான், ரோகித் சர்மா, முரளி விஜய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் சேவக், காம்பிர் ஜோடி, மீண்டும் அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறது. 

இதனையடுத்து இவர்களது கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்தது என முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த முன்னாள் வீரர் கிரண் மோரே கூறியது: சேவக், காம்பிர் இருவரும் திறமையானவர்கள். சமீபகாலமாக தேசிய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் இவர்களது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது எனக் கூறுவது தவறு. 

உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம். சேவக் குறித்து அனைவருக்கும் நன்கு தெரியும். இவர், உலகின் எந்த ஒரு பகுதியிலும், எந்த ஒரு பவுலரை கண்டு அஞ்சாமல் அதிரடியாக ரன் சேர்க்கும் திறமை படைத்தவர். 

இவர்கள் அணியில் இல்லாத போது, தவான் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இதனால் தான் இவர்கள் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது தாமதமாகிறது.

ஷிகர் தவான், முரளி விஜய், ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடும் ரோகித், டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். 

சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்பட்ட அம்பதி ராயுடு, அஜின்கியா ரகானே, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இந்திய கேப்டன் தோனிக்கு பின், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுகிறார். இவரது கீப்பிங் திறமையை காட்டிலும், பேட்டிங்கை வைத்து தான் அணியில் இடம் பிடிக்கிறார்.

இவ்வாறு கிரண் மோரே கூறினார்.

சதம் அடிக்காமல் சாதனை

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், "சதத்தில் சதம்' அடித்து உலக சாதனை படைத்தார். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, சதம் அடிக்காமல் புதிய சாதனை நிகழ்த்தினார்.
கடந்த 2001ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான மிஸ்பா, 39, 2002ல் முதன்முதலில் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இதுவரை 39 டெஸ்ட், 125 ஒருநாள், 39 சர்வதேச "டுவென்டி-20' போட்டிகளில் விளையாடி உள்ளார். 

"மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் இவர், டெஸ்டில் மூன்று சதம் அடித்துள்ளார். ஆனால் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒருநாள் போட்டியில் இவரது அதிகபட்சமாக ரன் 96 (எதிர்-வெஸ்ட் இண்டீஸ், 2013, இடம்-ஓவல்).

மிஸ்பா, இதுவரை விளையாடிய 125 ஒருநாள் போட்டியில் 29 அரைசதம் உட்பட 3819 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில், ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். 

இவரை அடுத்து பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் (356 போட்டி, 3717 ரன், 6 அரைசதம்), மோயின் கான் (219 போட்டி, 3266 ரன், 12 அரைசதம்), ஜிம்பாப்வேயின் சிகும்புரா (150 போட்டி, 2996 ரன், 15 அரைசதம்) ஆகியோர் உள்ளனர். 

இந்தியா சார்பில் ஒருநாள் போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமல் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் இர்பான் பதான் (120 போட்டி, 5 அரைசதம், 1544 ரன்கள்) உள்ளார்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சென்ற பாகிஸ்தான் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இத்தொடரில் பேட்டிங்கில் அசத்திய மிஸ்பா, 4 அரைசதம் உட்பட 260 ரன்கள் எடுத்து, தொடர் நாயகன் விருது வென்றார். 

இதன்மூலம் இரண்டு அணிகள் மட்டும் மோதிய ஒருநாள் தொடரில் அதிக அரைசதம் அடித்த கேப்டன் வரிசையில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (எதிர்-இலங்கை, 4 அரைசதம், 2004), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (எதிர்-பாகிஸ்தான், 4 அரைசதம், 2013) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இந்திய கேப்டன்களில், அசார், கங்குலி, தோனி ஆகியோர் ஒரே தொடரில் அதிகபட்சமாக தலா 3 அரைசதம் அடித்துள்ளனர்.

கவாஸ்கருக்கு விருது கிடைக்காதது ஏன்?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைக்காதது ஏன் என, இப்போது தெரியவந்துள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பல பிரிவுகளில், மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், விஜய் அமிர்தராஜ் (டென்னிஸ்) உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

ரூ. 5 லட்சம் மதிப்பிலான இவ்விருதுக்கான இறுதிப் பட்டியலில் கிரிராஜ் சிங் (பாரா விளையாட்டு), மேரி டிசவுசா (தடகளம்), அனில் மேன் (மல்யுத்தம்), சையது அலி (ஹாக்கி) ஆகியோரது பெயர் மட்டும் இடம் பெற்றன. 

கவாஸ்கர், விஜய் அமிர்தராஜ் பெயர்கள் இல்லை. இதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, வாழ்நாள் சாதனையாளருக்காக அர்ஜுனா விருது தான் முதலில் வழங்கப்பட்டு வந்தது. 


விதிகளில் மாற்றம்:

இதை உமாபாரதி விளையாட்டு அமைச்சராக இருந்த போது (2002) மாற்றினார். அதாவது, வாழ்நாள் சாதனையாளர் விருதை, மறைந்த ஹாக்கி வீரர் தயான்சந்த் பெயரில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 2002க்கு முன் அர்ஜுனா விருது வென்றவர்கள், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படக் கூடாது. 


தகுதி தெரியவில்லை:

1975ல் கவாஸ்கர், 1974ல் விஜய் அமிர்தராஜ் அர்ஜுனா விருது பெற்று விட்டனர். இந்நிலையில், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கான தகுதி என்ன எனத் தெரியாமல், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏ.ஐ.டி.ஏ.,) இவர்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளது. 

இதனால் தான் இவர்களுக்கு விருது தரப்படவில்லை என, மத்திய விளையாட்டு விருது கமிட்டி தெரிவித்தது.


யாருக்கு துரோணாச்சார்யா:

சிறந்த பயிற்சியாளருக்காக வழங்கப்படும் துரோணாச்சார்யா விருதுக்கு, ஐந்து பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். 

இதன் படி, பர்னிமா மகட்டோ (வில்வித்தை), நரேந்திரா சிங் செய்னி (பெண்கள் ஹாக்கி), ராஜ் சிங் (மல்யுத்தம்), கே.பி.தாமஸ் (தடகளம்), மகாவீர் சிங் (குத்துச்சண்டை) ஆகியோரது பட்டியல், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 

கால்பந்து தூதராக டோனி நியமனம்இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி தீவிர கால்பந்து ரசிகர் ஆவார். தனது பள்ளி பருவத்தில் கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்து விளையாடியவர். அதன்பின் கிரிக்கெட் மீது ஆர்வம் திரும்பியது.

தற்போது டோனியை இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியின் இந்திய தூதராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டி.வி நிறுவனம் நியமித்து உள்ளது. 

இந்தியாவில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரை பிரபலபடுத்தும் விளம்பரங்களில் அவர் தோன்றுவார். 

கால்பந்து போட்டியுடன் இணையுங்கள் என்று ரசிகர்களை அழைக்க உள்ளார்.

இதுகுறித்து டோனி கூறுகையில், கிரிக்கெட் மீது ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் மற்ற விளையாட்டுகளையும் ரசிக்க வேண்டும். 

இதேபோல் மற்ற விளையாட்டுகளுக்கும் மதிப்பு தர வேண்டும் என்றார்.

சாதிக்க உதவிய தோனியின் டிப்ஸ்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சிறந்த கேப்டனாக சாதிக்க, தோனி வழங்கிய ஆலோசனைகள் உதவியது,'' என, இந்திய வீரர் விராத் கோஹ்லி தெரிவித்தார்.
சமீபத்தில் ஜிம்பாப்வே சென்ற விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, 5-0 என தொடரை வென்றது. இதன்மூலம் அன்னிய மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றி சாதித்தது.

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரின் போது முதுகுபகுதியில் காயமடைந்த தோனி மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. 

இதனையடுத்து அணியின் கேப்டன் பொறுப்பு என்னிடம் வந்தது. அப்போது, வெவ்வேறு சூழ்நிலைகள் எப்படி செயல்படுவது, நெருக்கடியான நேரத்தில் "கூலாக' எப்படி அணியை வழிநடத்துவது என தோனியிடம் ஆலோசனை கேட்டேன். தோனியின் ஆலோசனைகள், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியை சிறப்பாக வழிநடத்தி சாதிக்க உதவியது.

ஜிம்பாப்வே வெற்றி குறித்து தோனியிடம் பேச முயன்றேன். ஆனால், தற்போது இவர், "பிஸி'யாக இருப்பதால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பொதுவாக ஓய்வு நேரத்தில் இவரை தொடர்பு கொள்வது கடினம். விரைவில் தோனியை சந்தித்து, ஜிம்பாப்வே அனுபவம் குறித்து தெரிவிப்பேன்.

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா "நம்பர்-1' இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வருவதால், இவரால் முதலிடத்துக்கு முன்னேற முடிந்தது. 

19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் இவருடன் இணைந்து விளையாடி உள்ளேன். உலக கோப்பை (19 வயது) தொடருக்கு கேப்டனாக இருந்த போது எனது அணியில் ஜடேஜா இடம் பெற்றிருந்தார். தற்போது நாங்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இவரது சிறப்பான ஆட்டம் வரும் காலங்களிலும் தொடரும் என நம்புகிறேன்.

வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடரை வரவேற்கிறேன். இதன்மூலம் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி, தேசிய அணியில் இடம் பிடிக்கலாம். 

கடந்த 2009ல் ஆஸ்திரேலியாவில் நடந்த இத்தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம், இந்திய அணியில் இடம் பிடிக்க முடிந்தது. சவால் நிறைந்த இத்தொடர் மூலம் திறமையான இளம் வீரர்களை கண்டறியலாம்.

இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணியை பலமாக்கியவர் கங்குலி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலியை விமர்சித்து இருந்தார். 

தற்போது அவர் அதில் இருந்து பல்டி அடித்து கங்குலியை பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்டீவ்வாக் கூறியதாவது:–

கொல்கத்தா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கங்குலி தான். அவர் ஒரு சிறந்த கேப்டன். 

இந்திய அணியை பலமான அணியாக உருவாக்கியவர் ஆவார். கங்குலியும், டோனியும் வித்தியாசமான கேப்டன்கள். ஆனால் இருவருமே சிறந்தவர்கள்.

ஆசஷ் டெஸ்ட் தொடரில் 3–வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நன்றாகவே ஆடியது. இளம் வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி சிறப்பான நிலையை அடைய சில காலம் ஆகும். 

0–2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும். ஆஸ்திரேலிய அணி இனிவரும் 2 டெஸ் டில் வென்று 2–2 என்ற சமநிலையை அடைவது மிகவும் கடினம்.

20 ஓவர் போட்டியின் ஆதிக்கத்தால் டெஸ்ட் போட்டி அழிந்துவிட்டதாக கூறுவதை ஏற்கமுடிய வில்லை. டெஸ்ட் போட்டி உறுதியாகவே இருக்கிறது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆசஷ் டெஸ்ட் தொடரை அதிகமான ரசிகர்கள் ரசித்தனர்.

20 ஓவர் போட்டி இளம் வீரர்களுக்கானது. வீரர்களுக்கு நல்ல பணம் கிடைக்கிறது. ரசிகர்களும் விரும்புகிறார்கள். ஆனாலும் டெஸ்ட் போட்டியின் புகழ் மங்கி விட வில்லை.

தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது தெண்டுல்கர் 200–வது டெஸ்டில் விளையாட உள்ளார். அதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். இதை யாராலும் முறியடிப்பது கடினமே.

இவ்வாறு ஸ்டீவ்வாக் கூறியுள்ளார்.