டர்பனில் டர்ர்ர்ர்... - தொடரை இழந்தது இந்தியா



தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டர்பன் டெஸ்டில், பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்த, இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இளம் வீரர் ரகானே அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். 
                                   
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரு அணிகள் மோதிய இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், டர்பனில் நடந்தது.      
                               
முதல் இன்னிங்சில் இந்தியா 334, தென் ஆப்ரிக்கா 500 ரன்கள் எடுத்தன. ௪வது நாள் முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு, 68 ரன் எடுத்து, 98 ரன் பின் தங்கி இருந்தது. புஜாரா (32), விராத் கோஹ்லி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.            

திடீர் சரிவு: நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி. ஸ்டைன் வீசிய முதல் பந்தில், விராத் கோஹ்லி (11) அவுட்.        

புஜாராவும் (32), ஸ்டைன் வேகத்தில் போல்டாகி வெளியேற, இந்திய அணி 71 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பின் ரோகித் சர்மா 25 ரன் எடுத்த போது, பிலாண்டர் வேகத்தில் வீழ்ந்தார்.அடுத்து வந்த தோனி (15), பீட்டர்சன் ஓவரில் தேவையில்லாமல் அவுட்டாக, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. 
                             
இதே ஓவரில், ஜடேஜாவை (8), மார்கல் ‘கேட்ச்’ செய்தார்.    
                           
ரகானே போராட்டம்: ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் இளம் வீரர் ரகானே உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய ரகானே, டெஸ்ட் அரங்கில் 2வது அரைசதம் கடந்தார். 

ஜாகிர் கான் (3 ரன், 41 பந்து), அம்பயர் ஸ்டீவ் டேவிசின் (ஆஸி.,) தவறான தீர்ப்பினால் எல்.பி.டபிள்யு., ஆனார். இஷாந்த் சர்மா (1) நிலைக்கவில்லை. மனம் தளராத ரகானே, 96 ரன்னுக்கு அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 

இந்திய அணி, 223 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷமி (1) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் பீட்டர்சன் 4, ஸ்டைன், பிலாண்டர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.           
                   
எளிய இலக்கு: இரண்டாவது இன்னிங்சில் 58 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது. ஆல்விரோ பீட்டர்சன், ஸ்மித் இணைந்து விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுக்க, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் (27), பீட்டர்சன் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.         
          
டெஸ்ட் தொடரை இந்திய அணி 0–1 என இழந்தது.


ஸ்டைன் ‘350’   
         
நேற்று இஷாந்த் சர்மாவை அவுட்டாக்கிய ஸ்டைன், டெஸ்ட் அரங்கில் வேகமாக ‘350’ விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில், இரண்டாவது (130 இன்னிங்ஸ்) இடம் பெற்றார். முதலிடத்தில் இலங்கையின் ஓய்வு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் (120 இன்னிங்ஸ்) உள்ளார்.       

     
‘96’

2010ல் இந்திய அணி தென் ஆப்ரிக்கா சென்ற போது, டர்பன் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் லட்சுமண், 96 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். இப்போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.             

நேற்று அதே டர்பன் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில், புஜாரா 96 ரன்கள் எடுத்தார். இதில் இந்திய அணி தோல்வியடைந்தது.


தேறாத தோனி

அன்னியமண்ணில் கேப்டன் தோனி எடுக்குமு் முடிவுகள் இந்திய அணிக்கு வெற்றி தேடித்தரவில்லை. கடந்த 2011ல் இங்கிலாந்து (0–4), 2011–12ல் ஆஸ்திரேலியா (0–4) தொடர், தற்போது தென் ஆப்ரிக்க மண்ணில் (0–1) என, இந்திய அணி பங்கேற்ற 10 டெஸ்டில், 9ல் தோல்வியடைந்துள்ளது. ஜோகனஸ்பர்க்கில் நடந்த டெஸ்டில் மட்டும், வெற்றிபெற வேண்டிய போட்டியை, போராடி ‘டிரா’ செய்தனர்.       

* தவிர, கடந்த 1992–93 முதல் தென்ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி பங்கேற்ற 6 டெஸ்ட் தொடரில், 5ல் இந்திய அணி தோற்றுள்ளது. கடைசியாக பங்கேற்ற 2010 டெஸ்ட் தொடரை மட்டும் ‘டிரா’ (1–1) செய்தது.        

           
புஜாரா முதலிடம்            
      
இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் புஜாரா, 4 இன்னிங்சில் 280 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 

அடுத்த இரு இடங்களில் இந்தியாவின் கோஹ்லி (272), ரகானே (209) உள்ளனர். தென் ஆப்ரிக்காவின் டுபிளசி (197), டிவிலியர்ஸ் (190), ஆல்விரோ பீட்டர்சன் (190) அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.             

      
ஜாகிர் கான் ‘7’     
             
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முதலிடத்தை (10) பெற்றார் பிலாண்டர். அடுத்த இரு இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (10), இந்தியாவின் ஜாகிர் கான் (7) உள்ளனர். தென்ஆப்ரிக்காவின் மார்கல், இந்தியாவின் ஜடேஜா தலா 6 விக்கெட் கைப்பற்றி, 4, 5வது இடத்தில் உள்ளனர்.                  

வெற்றியுடன் விடைபெற்றார் காலிஸ்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டர்பன் டெஸ்டில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த தென் ஆப்ரிக்க ‛ஆல்-ரவுண்டர்’ காலிஸ் வெற்றியுடன் விடைபெற்றார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் "டிரா'வில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. 

இந்திய அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள், தென்ஆப்ரிக்க அணி 500 ரன்கள் எடுத்தது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்து, 98 ரன்கள் பின் தங்கியிருந்தது. புஜாரா(32), கோஹ்லி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.  

இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு ஸ்டைன் வீசிய முதல்பந்தில் விராத் கோஹ்லி (11) அவுட்டானார். தொடர்ந்து புஜாராவும் (32) ஸ்டைன் வேகத்தில் ‘போல்டானார்’. ரோகித் சர்மா (25) நிலைக்கவில்லை. 

பின் வந்த கேப்டன் தோனி (15) நிலைக்கவில்லை. தொடர்ந்து வந்த ஜாகிர் கான் கைகொடுக்க, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தய ரகானே, அரைசதம் கடந்தார். அடுத்து வந்த ஜாகிர் கான் (3), இஷாந்த் சர்மா (1) ஏமாற்றினர். 

பொறுப்பாக ஆடிய ரகானே 96 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களுக்கு ‛ஆல்-அவுட்’ ஆனது. தென் ஆப்ரிக்கா சார்பில் ராபின் பீட்டர்சன் 4, ஸ்டைன், பிலாண்டர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் ஸ்மித், அல்விரோ பீட்டர்சன் ஜோடி நம்பிக்கை அளித்தது. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

ஸ்மித் (27), பீட்டர்சன் (31) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்க அணி 1-0  என கைப்பற்றி கோப்பை வென்றது.       

விராத் கோஹ்லி நம்பர் 2



ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 2வது இடத்தில் நீடிக்கிறார்.

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் நீடிக்கிறார். 

மூன்றாவது இடத்தில் மற்றொரு தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா உள்ளார். இந்திய கேப்டன் தோனி (6வது இடம்), ஷிகர் தவான் (10வது) ஆகியோர் "டாப்-10' பட்டியலில் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், முதன்முறையாக 16வது இடத்துக்கு முன்னேறினார்.

ஜடேஜா முன்னேற்றம்: பவுலர்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 7வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 17வது இடத்தில் நீடிக்கிறார். 

முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், வெஸ்ட் இண்டீசின் சுனில் நரைன் ஆகியோர் உள்ளனர்.

"ஆல்-ரவுண்டர்'களுக்கான தர வரிசையில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 5வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். 

முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் ஆகியோர் நீடிக்கின்றனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கு சிக்கல்

வங்கதேசத்தில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு, புதிய வடிவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் 2014, பிப்., 24 முதல் மார்ச் 8 வரை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட், வரும் மார்ச் 16 முதல் ஏப்., 6 வரை "டுவென்டி-20' உலக கோப்பை தொடர்கள் நடக்கவுள்ளன. 

வங்கதேசத்தில் நடக்கும் கலவரம், பாகிஸ்தான் அணி மறுப்பு காரணமாக, உலக கோப்பை "டுவென்டி-20' தொடரை இந்தியாவுக்கு மாற்ற பரிசீலனை நடக்கிறது. தற்போது ஆசிய கோப்பை போட்டிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இப்போட்டியை ஒளிபரப்ப, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) நிம்பஸ் "டிவி' நிறுவனத்துடன் 10 ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 2012ல் வங்கதேசத்தில் ஆசிய போட்டி நடந்தது. மீண்டும் இங்கு நடத்த, "டிவி' நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து, ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக, 'நோட்டீஸ்' அனுப்பியது. 

அதேநேரம், ஏ.சி.சி., தலைவராக இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) சீனிவாசன் தான் உள்ளார். இருப்பினும், 1990-91 முதல் ஆசிய கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தவில்லை. 

அரசியல் மற்றும் ஒளிபரப்பு ஒப்பந்தம் உட்பட பல காரணங்களுக்காக, 2014 ஆசிய கோப்பை தொடர் குறித்து, பி.சி.சி.ஐ., முடிவு எடுக்கவில்லை. இதுகுறித்து சீனிவாசனிடம் கேட்ட போது, பதிலளிக்க மறுத்துவிட்டார்.

 ஏ.சி.சி., தலைமை அதிகாரி சையது அஷ்ரபுல் கூறுகையில், ""ஒளிபரப்பு பிரச்னையால் தொடரை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. புதிய ஏலம் குறித்து அறிவித்துள்ளோம். போட்டியை இந்தியா அல்லது இலங்கைக்கு மாற்ற முயற்சிகள் நடக்கின்றன,'' என்றார்.

வங்கதேசத்தில் 2014, ஜன. 5ல் தேர்தல் முடிந்துவிடும் என்பதால், ஆசிய போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு போதிய பாதுகாப்பு தரப்படும். தொடரை மாற்ற வேண்டாம் என, வங்கதேசம் தெரிவிக்கிறது. இதனால், குழப்பமான நிலை நீடிக்கிறது.

ஓய்வு பெறுவாரா ஹர்பஜன்?



இந்திய அணிக்காக இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் விளையாடுவேன். தற்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், 33. இதுவரை 101 டெஸ்ட் (413 விக்.,), 229 ஒரு நாள் (259 விக்.,), 25 "டுவென்டி-20' (22 விக்.,) போட்டியில் விளையாடி உள்ளார். 

கடைசியாக கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்றார். தற்போது ரஞ்சி கோப்பையில் கலந்து கொள்கிறார். இந்திய அணியில் விளையாட முடியாததால், ஓய்வு முடிவில் உள்ளதாக சொல்லப்பட்டது. 

இது குறித்து இவர் கூறியது: இந்திய அணியில் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் பங்கேற்று, அதிக விக்கெட் வீழ்த்த வேண்டும். 

இது தான் என் எண்ணம். எனவே, ஓய்வு என்ற முடிவுக்கு இடமில்லை. ரஞ்சி கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்காக முதல் இரு போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தினேன். 

இதன் பின், தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறினேன். இப்படி அவ்வப்போது, காயம் தொல்லை தருகிறது. இருப்பினும், இதிலிருந்து விரைவில் மீண்டு, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன் என நம்புகிறேன். 

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

பிரிமியர் கிரிக்கெட் - புதிய விதிமுறைகள்



ஏழாவது பிரிமியர் தொடருக்கான ஏலம், அடுத்த ஆண்டு பிப்., 12ம் தேதி நடக்கவுள்ளது. 

இந்தியாவில் கடந்த 2008 முதல் பிரிமியர் "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடந்து வருகிறது. புனே அணி சமீபத்தில் நீக்கப்பட்டதால், இம்முறை சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி, பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் என, மொத்தம் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. 

முதல் தொடரில் ஒரு அணிக்கு 50க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர். போகப் போக இது பாதியானது. தற்போது மொத்த வீரர்கள் எண்ணிக்கை 33 ல் இருந்து 27 ஆக குறைக்கப்படுகிறது. 

இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், வரும் 2014, பிப்., 12ல் நடக்கும். தேவைப்பட்டால், 13ம் தேதி ஏலம் தொடரும். இடம் பின்னர் முடிவு செய்யப்படும். ஏழாவது பிரிமியர் தொடர் ஏலம் குறித்து முக்கிய விவரங்கள்:


வீரர்கள் ஒப்பந்தம்:

* வீரர்கள் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவர். தேவைப்பட்டால், அணி உரிமையாளர் இதை மேலும் ஓரிரு ஆண்டுக்கு நீட்டிக்கலாம்

* சம்பளம் ரூபாய் மதிப்பில் தரப்படும்.

* ரூபாய் மதிப்பு ஏற்ற, இறக்கத்தில் வீரர்களுக்கு பாதகமில்லாமல் சம்பளம் தரப்படும். 


அணி விவரம்:

* ஒவ்வொரு அணியும் குறைந்தது 16, அதிகபட்சம் 27 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். 9 வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் இடம் பெறக் கூடாது. 

* விளையாடும் லெவனில், 4 வெளிநாட்டு வீரர்கள் தான் இருக்க வேண்டும். 

* 19வயதுக்குட்பட்ட வீரர்கள் முதல் தரம் அல்லது "ஏ' பிரிவு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 

* வீரர்களுக்கு மொத்த செலவு ரூ. 60 கோடி. இது 2015, 16ல் 5 சதவீதம் அதிகரிக்கும். 

* வீரர்கள் ஏலத்துக்கு குறைந்தது ரூ. 36 கோடி செலவிட வேண்டும்.


இம்முறை ஐந்து:

* ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். 

* இதை 2014, ஜன., 10க்குள் முடிவு செய்யவேண்டும். 

* அணியின் "டாப்' வீரருக்கு, ரூ. 12.5 கோடி தரலாம். இரண்டாவது வீரருக்கு ரூ. 9.5 கோடி, அடுத்து ரூ. 7.5 கோடி, ரூ. 5.5 கோடி மற்றும் ஐந்தாவது வீரருக்கு ரூ. 4 கோடி என்ற விகிதத்தில் பிரித்து தரப்படும். 

* முதல் 5 வீரர்களுக்கு ரூ. 39 கோடி போக, மீதமுள்ள 21 கோடியில், 22 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். 

அதிர்ச்சி அளித்த முடிவு - விராத் கோஹ்லி

வெற்றி பெற வேண்டிய போட்டியை, கடைசி நேரத்தில் தென் ஆப்ரிக்க அணி "டிரா' செய்தது அதிர்ச்சியாக உள்ளது,'' என, இந்திய வீரர் விராத் கோஹ்லி தெரிவித்தார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஜோகனஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்ட், கடைசி நேரத்தில் "டிரா' ஆனது. 

டுபிளசி அவுட்டான போது, தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு, 19 பந்தில் 16 ரன்கள் தேவைப்பட்டன. மூன்று விக்கெட் கைவசம் இருந்த போதும், வெற்றிக்கு முயற்சிக்கவில்லை. 

இதுகுறித்து விராத் கோஹ்லி கூறியது:

முதல் டெஸ்டின் முதல் நான்கு நாட்களில், இரு அணிகளும் போராட்ட குணத்தை வெளிப்படுத்தின. ஒவ்வொரு முறையில் மீண்டு வர முயற்சித்தன. கடைசி நாளில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வந்தன. 

முதலில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், உணவு இடைவேளைக்குப் பின் மேலும் சில விக்கெட்டுகள் எடுத்திருந்தால், வெற்றி பெற்றிருப்போம். டிவிலியர்ஸ், டுபிளசி இணைந்து இதை தடுத்து விட்டனர். 

பின், டிவிலியர்ஸ், டுமினி வெளியேறியதும் சற்று வாய்ப்பு வந்தது. ஆனால், பிலாண்டர் அதிரடியாக ரன்கள் சேர்க்க, மீண்டும் சிக்கலானது. அடுத்து டுபிளசி ரன் அவுட்டானதும் மறுபடியும் வெற்றி வாய்ப்பு வந்தது. 

கடைசியில், தென் ஆப்ரிக்க அணி போட்டியை "டிரா' செய்தது அனைவருக்கும் வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. களத்தில் பிலாண்டர் இருந்த நிலையில், ஓவருக்கு 8 ரன்கள் எடுத்தால் போதும். இதற்கு முன் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ள பிலாண்டரால், இந்த ரன்களை எடுத்திருக்க முடியும். 

எங்களது திட்டமெல்லாம் எப்படியும் மீதமுள்ள மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி விட வேண்டும் என்பது தான். இதற்காக தீவிரமாக முயற்சித்தோம். ஆனால், அவர்கள் வெற்றிக்கு முயற்சிக்காமல், பந்துகளை வீணடிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. 

ஏன் இப்படிச் செய்தனர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், இது சிறந்த முடிவு தான். "நம்பர்-1' அணிக்கு எதிராக விளையாடும் போது, இதெல்லாம் எதிர்பார்த்தது தான். ஏனெனில், அவர்களை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. 

இவ்வாறு விராத் கோஹ்லி தெரிவித்தார்.

சச்சின் கனவு பலிக்குமா?

சச்சின் கவனம், தற்போது கால்பந்து பக்கம் திரும்பியுள்ளது. வரும் 2022ல் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடருக்கு இந்தியா தகுதி பெறும் என, நம்பிக்கை தெரிவித்தார்.
வரும் 2017ல் உலக (17 வயதுக்குட்பட்டோர்) கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. இதன் மூலம், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) மிகப்பெரிய தொடரை முதல் முறையாக நடத்துகிறது. 

இந்நிலையில், அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கான தங்க கோப்பை இந்திய மக்களின் பார்வைக்காக கோல்கட்டா வந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் கூறியது: 

வரும் 2014ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடருக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. 2022ல் விளையாடுவதே இலக்காக இருக்க வேண்டும். இது, ஒரே இரவில் நடந்துவிடாது. 

படிப்படியாக செயல்படுத்த வேண்டும். இதற்கான அடித்தளத்தை இளம் வீரர்களுக்கு உருவாக்கி தருவது அவசியம். கடின பயிற்சி, சரியான திட்டமிடல் முக்கியம். இதன்படி செயல்பட்டால், சாம்பியனாக உருவாக முடியும். என் ஆதரவு என்றும் இளம் கால்பந்து வீரர்களுக்கு உண்டு. 

கோல்கட்டா வந்துள்ள "பிபா' உலக கோப்பையை எல்லா மக்களும் வந்து ரசிப்பர் என நம்புகிறேன். இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி மீது மரியாதை உள்ளது.என்னை விட கால்பந்து விளையாட்டை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்ப்பார். 


நினைவில் உள்ளது:

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை 1983ல் முதல் முறையாக வென்றது. கேப்டன் கபில்தேவ் வெற்றிக்கோப்பையை, கையில் வைத்திருந்ததை பார்த்தேன். அப்போதே, இந்த இடத்திற்கு நானும் வர வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன். 

கடந்த 2011ல் நடந்த உலக கோப்பை தொடர் பைனலில் பங்கேற்க, என் காரிலிருந்து இறங்கி, அணிக்கான பஸ்சில் ஏறினேன். இதில் வெற்றி பெற்றவுடன், என் வாழ்க்கை முழுமையடைந்ததை உணர்ந்தேன். இந்த கனவு நிஜமாக எனக்கு 22 ஆண்டுகள் தேவைப்பட்டன. 

இவ்வாறு சச்சின் கூறினார்.

புஜாரா சதம் அடித்தது எப்படி?

தென் ஆப்ரிக்க மண்ணில் புஜரா சதம் அடிக்க, இந்தியா "ஏ' தொடர் தான் உதவியாக இருந்தது,'' என, பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்க தொடருக்கு தயாராகும் விதத்தில், இந்திய "ஏ' அணி கடந்த ஆக., மாதம் அங்கு சென்றது. 

இதன் கேப்டனாக புஜாரா இருந்தார். அதிகாரப்பூர்வமற்ற இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி தொடரை "டிரா' (1-1) செய்தது.

இதில் பேட்டிங்கில் அசத்திய புஜாரா, தலா ஒரு சதம், அரைசதம் (137, 54 ரன்கள்) அடித்தார். இப்போது, முதல் டெஸ்டில் 153 ரன்கள் எடுத்தார். இதுகுறித்து இந்திய "ஏ' அணி பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் கூறியது:

இந்திய "ஏ' அணி தொடரின் போது, எதிர்வரும் இந்திய அணியின் பயணத்தை மனதில் கொண்டு, சூழ்நிலைகளை நன்கு பழக்கப்படுத்திக் கொண்டார் புஜாரா. 

அது தான் இப்போது இவருக்கு கைகொடுத்துள்ளது. மிகவும் மன உறுதி மிக்க அவர், தனது விக்கெட்டின் மதிப்பு குறித்து நன்கு தெரிந்து வைத்துள்ளார்.

ஜோகனஸ்பர்க் டெஸ்டில் இவர் விளையாடியதைப் பார்த்த போது, முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக 25 ரன்னில் ரன் அவுட்டாகி விட்டார். 

இவ்வாறு லால்சந்த் ராஜ்புத் கூறினார்.

கங்குலி கிரிக்கெட் அகாடமிக்கு தடை

வீரர்களின் வயதில் மோசடி காரணமாக, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் அகாடமி உட்பட மொத்தம் 13 பயிற்சி மையங்களுக்கு, பெங்கால் கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) ஒரு ஆண்டு தடை விதித்தது.
கோல்கட்டாவில், பெங்கால் கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் ஜூனியர் (17 வயது) மற்றும் சப்-ஜூனியர் (14 வயது) அம்பர் ராய் கிரிக்கெட் தொடர் நடந்தது. 

இதில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் பெங்கால் அணி கேப்டன் சம்பரன் பானர்ஜி உள்ளிட்டோரின் கிரிக்கெட் அகாடமிகள் பங்கேற்றன.

இத்தொடரில் பங்கேற்ற 13 கிரிக்கெட் அகாடமிகளின் வீரர்கள் வயதில் மோசடி நடந்திருப்பதை சி.ஏ.பி., கண்டுபிடித்தது. இதில் கங்குலி, சம்பரன் பானர்ஜி ஆகியோரின் கிரிக்கெட் அகாடமிகளும் அடங்கும்.

 இதனையடுத்து கங்குலி உள்ளிட்டோரின் 13 கிரிக்கெட் அகாடமிகளுக்கும் ஒரு ஆண்டு தடை விதித்தது. தவிர, வயதில் மோசடி செய்து விளையாடிய 42 வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன.

இதுகுறித்து சி.ஏ.பி.,யின் இணை செயலாளர் சுபிர் கங்குலி கூறுகையில், ""இது போன்ற மோசடி, மீண்டும் கண்டுபிடிக்கப்படுமானால், சம்பந்தப்பட்ட கிரிக்கெட் அகாடமிகளுக்க வாழ்நாள் தடை விதிக்கப்படும். வீரர்களுக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்,'' என்றார்.

இதுகுறித்து கங்குலி கிரிக்கெட் அகாடமி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""வீரர்களின் வயது சான்றிதழ்களை, சி.ஏ.பி., சரிபார்க்கும் என நினைத்துவிட்டோம். 

இது போன்ற தவறுகள் வரும் காலங்களில் நிகழாமல் பார்த்துக் கொள்வோம். விரைவில் வீரர்களின் வயது சான்றிதழ்களை, சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள் மூலம் சரிபார்ப்போம்,'' என்றார்.

சச்சினை நினைவுபடுத்திய கோஹ்லி

விராத் கோஹ்லியின் பேட்டிங்கை பார்க்கும் போது, எனக்கு சச்சின் தான் நினைவுக்கு வந்தார்,'' என, தென் ஆப்ரிக்க அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்டு தெரிவித்தார்.
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது. 

முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியின் வேகப்புயல்கள் ஸ்டைன், மார்கல், பிலாண்டரை சமாளித்த விராத் கோஹ்லி, சதம் அடித்து அசத்தினார். 

தவிர, தென் ஆப்ரிக்க மண்ணில் களமிறங்கிய முதல் டெஸ்டில் சதம் அடித்த பிரவீண் ஆம்ரே, சேவக்கிற்கு அடுத்து, கோஹ்லிக்கு இப்பெருமை கிடைத்தது. இத்துடன் இந்த ஆண்டில் அதிக சதம் (6) அடித்த வீரர்கள் பட்டியலில் டிவிலியர்ஸ், ஷிகர் தவானுடன் கோஹ்லியும் இணைந்தார்.

இதுகுறித்து தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு கூறியது:

சச்சினுக்குப் பின் 4வது இடத்தில் யார் வரவுள்ளனர் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த இடத்தில் களமிறங்கிய கோஹ்லி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த 1996ல் இந்திய அணி இங்கு வந்த போது, சச்சின் இப்படித்தான் விளையாடினார். 

இத்தொடரின் போது, இந்திய வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் சச்சின் மட்டும் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடினார். 

இதனால், கோஹ்லியின் பேட்டிங்கை பார்த்த போது, எனக்கு சச்சின் தான் நினைவுக்கு வந்தார். துல்லியமான பந்துகளை விட்டுவிட்டு, மோசமாக வீசப்பட்ட பந்துகளை விளாசினார். 

இவ்வாறு ஆலன் டொனால்டு கூறினார். 

கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பி.சி.சி.ஐ., சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஆண்டுதோறும், சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்படுவார். 

நடப்பு ஆண்டுக்கான இந்த விருதுக்கு, 1983ல் இந்தியாவுக்கு முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்த, முன்னாள் கேப்டன் கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டார். 

இவரை, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன், செயலாளர் சஞ்சய் படேல் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு கமிட்டி, சென்னையில் நேற்று தேர்வு செய்தது. 

இவருக்கு, இவ்விருதுடன் ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. பி.சி.சி.ஐ.,யின் விருது வழங்கும் நிகழ்ச்சியில், கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

கடந்த 1983ல் முதன்முறையாக இந்தியாவுக்கு உலக கோப்பை பெற்றுத் தந்த கபில்தேவ், இதுவரை 131 டெஸ்ட் (5248 ரன்கள், 434 விக்கெட்), 225 ஒருநாள் (3783 ரன்கள், 253 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு இவ்விருது, முன்னாள் கேப்டன் கவாஸ்கருக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலாளர் சஞ்சய் படேல் கூறுகையில், ""இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு கபில் தேவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

விருதுடன், ரூ. 25 லட்சத்துக்கான காசோலை வழங்கி கவுரவிக்கப்படுவார். விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,'' என்றார்.

பெங்களூரில் தெண்டுல்கர் உருவத்தில் பிரமாண்ட கேக்

கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கரின் முழு உருவத்தில் கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் கேக் கண்காட்சிக்காக இது அமைக்கப்பட்டுள்ளது. 

8 முதல் 10 பேர்கள் சேர்ந்து 5 தினங்களில் தெண்டுல்கரின் முழு உருவ கேக்கை வடிவமைத்துள்ளனர். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

பொங்கி எழுமா இளம் இந்தியா?

இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை ஜோகனஸ்பர்க்கில் துவங்குகிறது. இதில், இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி சாதிக்க காத்திருக்கிறது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை ஜோகனஸ்பர்க் மைதானத்தில் துவங்குகிறது. 

இங்கு இந்திய அணி பங்கேற்ற 3 டெஸ்டில், 2006ல் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1992, 1997ல் நடந்த டெஸ்ட் போட்டிகள் "டிரா' ஆகின. இம்முறை வெற்றிக்கு முயற்சிக்கலாம் என எதிர்பார்த்த நிலையில், ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்றப்பட்டிருப்பது புது சோதனையாக அமைந்துள்ளது. 

ஸ்டைன், பிலாண்டர், மார்கலின் வேகப்பந்துகள், நாகப்பாம்பு படமெடுப்பது போல திடீரென வீரர்களுக்கு முன்பு உயரமாக எழும். பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தும் பட்சத்தில், இந்திய பேட்ஸ்மேன்கள் தப்பிப்பது கடினம். 


அனுபவம் இல்லை:  

அணியின் "டாப்-5' வீரர்களில் முரளி விஜய் (7 டெஸ்ட்), விராத் கோஹ்லி (7), புஜாரா (2) இணைந்து மொத்தமே 16 டெஸ்டில் தான், அன்னிய மண்ணில் பங்கேற்றுள்ளனர். ரோகித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் இந்த கணக்கை துவக்கவே இல்லை. 

கேப்டன் தோனி, ஜாகிர் கான், இஷாந்த் சர்மாவைத் தவிர, அஷ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி என, யாரும் தென் ஆப்ரிக்க மண்ணில் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதில்லை. 

மிகவும் கடினம்: இதுகுறித்து தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கெப்ளர் வெசல்ஸ் கூறியது:

கடந்த 2006 டெஸ்டில் இந்திய அணி இங்கு வெற்றி பெற்றது. அப்போது இருந்த சச்சின் இப்போதில்லை. ஸ்ரீசாந்த் வீணாகி விட்டார். இந்நிலையில், இளம் வீரர்கள் நிலைத்து நின்று பேட்டிங் திறமை வெளிப்படுத்துவது என்பது கடினம். 


அதிகபட்சம் "மூன்று': 

வானிலையிலும் சற்று ஈரப்பதம் இருப்பதால், பந்துகள் நன்றாக "சுவிங்' ஆகும். இந்திய வீரர்கள் அதிக ரன்கள் எடுக்க வாய்ப்பில்லை. முதல் டெஸ்ட் எப்படியும் மூன்று நாட்களுக்குள் முடிந்துவிடும். இப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி ஏற்கனவே வெற்றி பெற்றது போலத்தான். 


ரன்கள் முக்கியம்: 

ஒருவேளை இதில் இந்திய வீரர்கள் தாக்குப்பிடித்து விட்டால், உலகின் வேறெந்த இடத்திலும் நன்றாக விளையாடலாம். துவக்க வீரர்கள் முதல் ஒரு மணி நேரம் சமாளித்து நிலைத்துவிட்டால், இந்திய அணியின் "மிடில் ஆர்டர்' வீரர்களுக்கு ரன்கள் சேர்ப்பது எளிதாக இருக்கும்.

ஜாகிர் கான், இஷாந்த் சர்மா என, இருவரும் வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். இருப்பினும், இது இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன்கள் எடுக்கின்றனர் என்பதைப் பொறுத்து தான் அமையும்.

இவ்வாறு கெப்ளர் வெசல்ஸ் கூறினார்.

உலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா-பாகிஸ்தான் மோதல்



ஐ.சி.சி., உலக கோப்பை (19 வயதுக்குட்பட்டோருக்கான) தொடரில், "நடப்பு சாம்பியன்' இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), அடுத்த ஆண்டு பிப்., 14ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான 10வது ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 

இதில் தலா மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 16 அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதும். 

ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், "நாக்-அவுட்' (காலிறுதி, அரையிறுதி, பைனல்) சுற்றுக்கு முன்னேறும். மொத்தம் 16 நாட்கள் நடக்கும் இத்தொடரில் பைனல், அரையிறுதி உட்பட 48 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் அபுதாபி, துபாய், சார்ஜாவில் உள்ள ஏழு மைதானங்களில் நடக்கவுள்ளன.

இத்தொடருக்கான அட்டவணை, துபாயில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் "நடப்பு சாம்பியன்' இந்திய அணி "ஏ' பிரிவில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. 

"பி' பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நமீபியா, "சி' பிரிவில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, கனடா, "டி' பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, யு.ஏ.இ., அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை பிப்., 15ல் துபாயில் சந்திக்கிறது. பிப்., 14ல் நடக்கவுள்ள முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து-யு.ஏ.இ., (இடம்-அபுதாபி), ஜிம்பாப்வே-கனடா (இடம்-அபுதாபி), இலங்கை-நியூசி., (இடம்-சார்ஜா), தென் ஆப்ரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் (இடம்-துபாய்) அணிகள் மோதுகின்றன. இத்தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

முன்னதாக நடந்த இத்தொடரில், இந்தியா (2000, 2008, 2012), ஆஸ்திரேலியா (1988, 2002, 2010) அணிகள் அதிகபட்சமாக தலா 3 முறை கோப்பை வென்றன. பாகிஸ்தான் அணி இரண்டு முறை (2004, 2006) சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 1998ல் இங்கிலாந்து அணி கோப்பை வென்றது.

ரஜினியின் பணிவை கண்டு வியந்தேன் - தெண்டுல்கர் புகழாரம்



தனியார் டி.வி. நடத்திய கருத்து கணிப்பில் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் குறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், அவரை சந்தித்ததில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அப்போது அவரது பணிவு மற்றும் தன்னடக்கத்தை பார்த்து வியப்படைந்தேன். அவரது நற்பண்புகளை உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

அவர் கிரிக்கெட் மீது ஆர்வம் மிக்க ரசிகர் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட் விளையாட்டை அவர் உற்று நோக்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை குறித்து விவாதித்தோம். குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் குறித்து பேசினோம்.

கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெற்றதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் இந்தியாவுக்காக மீண்டும் நான் விளையாட மாட்டேன். ஓய்வு என்னை பாதிக்கவில்லை. 

தற்போது குடும்பத்தினருடன் பல மணி நேரம் பொழுதை கழிக்கிறேன். எனது மகன் அர்ஜூன் மற்றும் அவனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறேன்.

கிரிக்கெட் போட்டி எங்கு நடந்தாலும் அந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை நானும் எனது மகனும் பார்த்து வருகிறோம். கிரிக்கெட்டில் இருந்து என்னால் விலக முடியாது. ஓய்வு நேரத்தை எனது குடும்பத்தினருடன் கழிக்கிறேன் என்றார்.

புத்துயிர் தந்த புரட்சி கேப்டன்

தோனி தொட்டதெல்லாம் பொன்னாகிறது. இவர், கேப்டனாக பொறுப்பேற்ற பின் இந்திய அணியின் வெற்றிநடை தொடர்கிறது. ஒருநாள் அரங்கில். இதுவரை 20 கோப்பைகள் வென்று,"சூப்பர்' கேப்டனாக ஜொலிக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்.
இந்திய அணி ஒருநாள் அரங்கில் 1974ல் காலடி எடுத்து வைத்தது. துவக்கத்தில் பலவீனமாக கருதப்பட்ட இந்திய அணி, கபில்தேவ், கவாஸ்கர் போன்ற வீரர்களின் வருகைக்குப் பின் சற்று எழுச்சி பெற்றது. முதல் பத்தாண்டுகளில் பங்கேற்ற 21 ஒருநாள் தொடர்களில் 7ல் கோப்பை வென்றது. 

இந்த காலத்தில் தான், இந்திய அணிக்கு கபில்தேவ் முதன் முறையாக உலக கோப்பை (1983) பெற்றுத் தந்தார். 1984-85 முதல் 2000 வரையிலான காலத்தில், இந்திய அணிக்கு சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற வீரர்களின் வரவு காரணமாக, மொத்தம் 85 தொடர்களில் பங்கேற்று, 31ல் கோப்பை வெல்ல முடிந்தது. ஆனாலும், உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சாதிக்க முடியவில்லை. 

கடந்த 2007ல் சீனியர்கள் அடங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், முதல் சுற்றுடன் நடையை கட்டியது. இதன் பின், ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பு தோனியிடம் தரப்பட்டது. இவர் தலைமைக்கு முதல் சோதனை, சொந்தமண்ணில் கிடைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-4 என இழந்தது. 

இருப்பினும், அடுத்தடுத்த தொடர்களில் எழுச்சி பெற்றது இந்திய அணி. ஆஸ்திரேலிய மண்ணில் (2007-08) நடந்த முத்தரப்பு தொடரில், தோனியின் இந்திய அணி முதன் முறையாக கோப்பை வென்றது. 

கடைசி நேரத்தில் போட்டியை முடித்து தரும் "பினிஷிங்' மன்னனாக தோனி மிரட்டினார். 2011ல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், இலங்கைக்கு எதிரான பைனலில், இவரது 91 ரன்கள் கைகொடுக்க, 28 ஆண்டுக்குப் பின் இந்தியாவுக்கு மீண்டும் உலக கோப்பை கிடைத்தது. 

இந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணி கோப்பை வென்றது. கடந்த 2008 முதல் 2009 வரை, 2012 முதல் இப்போது வரை என, தொடர்ச்சியாக இரு முறை தலா 6 கோப்பைகள் வெல்ல காரணமாக அமைந்தார். 

அதாவது, 1974 முதல் 2007 வரை என, இந்திய அணி பங்கேற்ற 154 ஒருநாள் தொடர்களில், பல்வேறு கேப்டன்கள் 53 கோப்பை வென்றனர். தோனி வந்த பின் பங்கேற்ற 37 தொடர்களில், இந்திய அணி 24ல் கோப்பை வென்றது. 

இதில் தோனி கேப்டனாக இருந்த 33 தொடர்களில், 20 முறை சாம்பியன் பட்டம் வென்றது. தவிர, தோனி தலைமையில் பங்கேற்ற 152 போட்டிகளில், 88 வெற்றிகள் கிடைத்துள்ளது. 

ஐ.சி.சி., ரேங்கிங் - விராத் கோஹ்லி பின்னடைவு

ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய வீரர் விராத் கோஹ்லி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 

இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி (859 புள்ளி) முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். 

இவர், சமீபத்தில் முடிந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோபிக்காதது பின்னடைவுக்கு காரணம். கேப்டன் தோனி 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சோபிக்காத இந்தியாவின் ஷிகர் தவான் (10வது இடம்), ரோகித் சர்மா (18வது), சுரேஷ் ரெய்னா (23வது) ஆகியோரும் பின்னடைவை சந்தித்தனர்.


டிவிலியர்ஸ் முன்னேற்றம்:

இந்தியாவுக்கு எதிராக ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 189 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், 872 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து முதன்முறையாக "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். 

ஏற்கனவே இவர், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையிலும் "நம்பர்-1' இடத்தில் உள்ளார். இதன்மூலம் ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங்கில் முதலிடம் வகிக்கும் 9வது வீரர் என்ற பெருமை பெற்றார். 

தென் ஆப்ரிக்கா சார்பில் காலிஸ், ஆம்லாவுக்கு பின் இந்த இலக்கை எட்டிய மூன்றாவது வீரரானார். தவிர இவர், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ஐ.சி.சி., டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக "ஹாட்ரிக்' சதம் அடித்து சாதித்த, இளம் தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டி காக், 61 இடங்கள் முன்னேறி, 14வது இடம் பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் டுமினி (24வது இடம்), டேவிட் மில்லர் (45வது), இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (71வது) ஆகியோர் முன்னேற்றம் கண்டனர்.


ஜடேஜா பின்னடைவு:

பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (7வது இடம்), அஷ்வின் (17வது) ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர். இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட் கைப்பற்றிய தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், மூன்று இடங்கள் முன்னேறி, 2வது இடம் பிடித்தார். 

பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்ரிக்காவின் டிசாட்சொபே (8வது இடம்), மார்னே மார்கல் (9வது) ஆகியோர் "டாப்-10' வரிசையில் உள்ளனர். தென் ஆப்ரிக்காவின் மெக்லாரன், முதன்முறையாக 20வது இடத்துக்கு முன்னேறினார். 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வேகத்தில் அசத்திய இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 9 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் 7 இடங்கள் முன்னேறிய ஷமி, 43வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, 16 இடங்கள் முன்னேறி 51வது இடம் பிடித்தார்.


இந்தியா "நம்பர்-1'

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை இழந்த போதிலும், ஒருநாள் போட்டி அணிகளுக்கான ரேங்கிங்கில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் "நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. 

அடுத்த மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (111), இலங்கை (110) அணிகள் உள்ளன. மூன்று ரேங்கிங் புள்ளிகள் கூடுதலாக பெற்ற தென் ஆப்ரிக்க அணி 110 புள்ளிகளுடன் 5வது இடத்தில் தொடர்கிறது. 

அடுத்த இரண்டு இடங்களில் பாகிஸ்தான் (100 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (90) அணிகள் உள்ளன.

மழையால் தப்பியது இந்தியா

இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. இதனையடுத்து இந்திய அணி "ஹாட்ரிக்' தோல்வியில் இருந்து தப்பியது. 
அபாரமாக ஆடிய தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், கேப்டன் டிவிலியர்ஸ் சதம் அடித்தனர். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி கோப்பை வென்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்கா 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி செஞ்சுரியனில் நேற்று நடந்தது. இதில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் இந்தியா களமிறங்கியது.


ஸ்டைன் இல்லை:

தென் ஆப்ரிக்க அணியில் ஸ்டைன், மார்னே மார்கல், காலிசிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக ஹென்ரி டேவிட்ஸ், பார்னல், இம்ரான் தாகிர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் ரகானே நீக்கப்பட்டு யுவராஜ் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.


"டாப்-ஆர்டர்' சரிவு:

கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா (13), இம்முறை முகமது ஷமி பந்தில் அவுட்டானார். இஷாந்த் சர்மா "வேகத்தில்' ஹென்றி டேவிட்ஸ் (1), டுமினி (0) வெளியேறினர். இதையடுத்து 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.


குயின்டன் அபாரம்:

பின் இணைந்த குயின்டன் டி காக், கேப்டன் டிவிலியர்ஸ் ஜோடி அசத்தியது. மீண்டும் ஒருமுறை இந்திய பந்துவீச்சை பதம்பார்த்தார் குயின்டன். இவர், உமேஷ் யாதவ் ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் கோஹ்லி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். 

தொடர்ந்து அசத்திய இவர், இத்தொடரில் தனது "ஹாட்ரிக்' சதத்தை பதிவு செய்தார். இது, ஒருநாள் போட்டியில் இவரது 4வது சதம். நான்காவது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த போது, 120 பந்தில் 101 ரன்கள் (2 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்த குயின்டன், இஷாந்த் பந்தில் போல்டானார்.


டிவிலியர்ஸ் அதிரடி:

மறுமுனையில் அதிரடி காட்டிய டிவிலியர்ஸ், பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார். முகமது ஷமி வீசிய 37வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்த டிவிலியர்ஸ், ஒருநாள் போட்டியில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார். 

அஷ்வின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட டிவிலியர்ஸ் 101 பந்தில் 109 ரன்கள் (5 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்த போது உமேஷ் யாதவ் பந்தில் அவுட்டானார்.


மில்லர் அரைசதம்:

அடுத்து வந்த மெக்லாரன் (6) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய டேவிட் மில்லர், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். முகமது ஷமி பந்தை சிக்சருக்கு அனுப்பிய மில்லர், ஒருநாள் போட்டியில் தனது 6வது அரைசதம் அடித்தார். முகமது ஷமியிடம் பார்னல் (9), பிலாண்டர் (0) சரணடைந்தனர்.

தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 301 ரன்கள் எடுத்தது. மில்லர் (56), டிசாட்சொபே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 4, முகமது ஷமி 3, உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


மழை குறுக்கீடு:

பின், மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்கா 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் வென்றார்.

அடுத்து இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜோகனஸ்பர்க்கில் வரும் டிச., 18ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட், டர்பனில் வரும் டிச., 26ல் ஆரம்பமாகிறது.


இஷாந்த் "100'

நேற்று "வேகத்தில்' அசத்தி 4 விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் இஷாந்த் சர்மா, ஒருநாள் போட்டியில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். தவிர, இம்மைல்கல்லை எட்டிய 16வது இந்திய பவுலரானார்.

* இதுவரை இவர், 70 போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய இவர், குறைந்த போட்டிகளில் இந்த இலக்கை எட்டிய 5வது இந்திய பவுலரானார். முன்னதாக இந்தியாவின் இர்பான் பதான் (59 போட்டி), ஜாகிர் கான் (65), அஜித் அகார்கர் (67), ஜவகல் ஸ்ரீநாத் (68) ஆகியோர் இச்சாதனை படைத்தனர்.


300

நடப்பு ஆண்டில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில், இந்திய அணி 10வது முறையாக 300 அல்லது அதற்கு மேல் ரன்களை வாரி வழங்கியது. இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிகமுறை இப்படி ரன்கள் கொடுத்த அணிகள் வரிசையில், முதலிடம் பெற்றது. இதற்கு முன், இந்திய அணி 2009ல் 9 முறை, 300 அல்லது அதற்கு மேல் ரன்கள் கொடுத்தது.


பீல்டிங் சொதப்பல்

நேற்று இந்திய அணியின் "பீல்டிங்' சொதப்பலாக இருந்தது. குயின்டன் டி காக், ரன் எதுவும் எடுக்காமல் இருந்த போது கிடைத்த "ரன்-அவுட்' வாய்ப்பை ரோகித் சர்மா கோட்டைவிட்டார். பின், 37 ரன்கள் எடுத்திருந்த போது, உமேஷ் யாதவ் பந்தில் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை ரகானே கோட்டைவிட்டார். 

அடுத்து இவர் 43 ரன்கள் எடுத்த போது, அஷ்வின் பந்தில் கொடுத்த "கேட்ச்' 
வாய்ப்பை யுவராஜ் சிங் நழுவவிட்டார். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட குயின்டன் டி காக், "ஹாட்ரிக்' சதம் அடித்து அசத்தினார்.


"ஹாட்ரிக்' சதம்

நேற்று 101 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக், ஒருநாள் போட்டியில் "ஹாட்ரிக்' சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமை பெற்றார். 

* தவிர, இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது தென் ஆப்ரிக்க வீரரானார். முன்னதாக தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், டிவிலியர்ஸ் ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.

* இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று சதம் அடித்த இரண்டாவது வீரரானார். முன்னதாக பாகிஸ்தானின் ஜாகிர் அபாஸ் இம்மைல்கல்லை எட்டினார்.

ஹாக்கி - இந்தியா அவுட்

ஜூனியர் உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது இந்திய அணி. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் தென் கொரியாவுடன் "டிரா' செய்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், 10வது ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர், டில்லியில் நடக்கிறது. "சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் லீக் போட்டியில் நெதர்லாந்திடம் தோற்றது. அடுத்து கனடாவை வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில், தென் கொரியாவை எதிர்கொண்டது. 

இதில் வென்றால் மட்டுமே காலிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு, 3 வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை, ராமன்தீப் வீணடித்தார்.

தொடர்ந்து இந்திய வீரர்கள் செய்த தவறுகளால், 16வது நிமிடம் தென் கொரிய அணிக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் லீ ஒரு கோல் அடிக்க, 0-1 என இந்திய அணி பின்தங்கியது. 

பின், 33வது நிமிடம் கிடைத்த "பெனால்டி கார்னரில்', குர்ஜிந்தர் சிங் கோலாக மாற்ற இந்திய அணிக்கு சற்று நிம்மதி கிடைத்தது. அடுத்த சில நிமிடத்தில் (35வது), "பெனால்டி கார்னரில்', குர்ஜிந்தர் சிங் இரண்டாவது கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 2-1 என, முன்னிலை பெற்றது.


திடீர் திருப்பம்:

இரண்டாவது பாதியில் மன்தீப் ஒரு "பீல்டு' கோல் அடிக்க, 3-1 என, வ<லுவான முன்னிலை பெற்றது. இருப்பினும், கடைசி நேரத்தில் எதிரணியை கோல் அடிக்க விட்டு ஏமாறுவதை வழக்கமாக கொண்ட இந்திய வீரர்கள், நேற்றும் சொதப்பினர். 

இதைப் பயன்படுத்திய தென் கொரிய வீரர் சீயுங்ஜு, 58, 60 வது நிமிடங்களில் , இரண்டு கோல்கள் அடிக்க, இந்திய அணியின் காலிறுதி கனது தகர்ந்தது. முடிவில், போட்டி 3-3 என்ற கணக்கில் "டிரா' ஆனது. 


இந்தியா "அவுட்';

"சி' பிரிவில் இந்தியா, தென் கொரிய அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்ற போதும், இத்தொடரில் அதிக கோல்கள் அடித்ததன் அடிப்படையில், இரண்டாவது இடம் பெற்ற தென் கொரிய அணி காலிறுதிக்கு முன்னேறியது. 9 முதல் 12வது இடங்களுக்கான போட்டியில் இந்திய அணி, நாளை அர்ஜென்டினாவை சந்திக்கிறது.

தடுமாறும் மிடில் ஆர்டர் - சிக்கலில் ரெய்னா, யுவராஜ்

சமீபத்திய தோல்விகளுக்கு "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததே காரணம்,'' என, இந்திய கேப்டன் தோனி புகார் கூறினார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது.

இதற்கு அணியின் "மிடில் ஆர்டர்' வீரர்கள் யுவராஜ் சிங், ரெய்னாவின் நிலையற்ற பேட்டிங்கும் ஒரு காரணம். யுவராஜ் சிங் இந்த ஆண்டு பங்கேற்ற 17 ஒருநாள் போட்டிகளில் 274 ரன்கள் (2 அரை சதம்) தான் எடுத்துள்ளார். சராசரி 19.71 ரன்கள். தென் ஆப்ரிக்க மண்ணில் விளையாடிய 11 போட்டிகளில் 211 ரன்கள் (23.44) எடுத்தார்.

ரெய்னா இவரைவிட பரவாயில்லை. கடைசியாக விளையாடிய 33 போட்டிகளில் 770 ரன்கள் (சராசரி 35.00) அடித்துள்ளார். தொடர்ந்து "ஷார்ட் பிட்ச்' பந்துகளில் தடுமாறுகிறார். 

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

கடந்த சில தொடர்களாக "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சொதப்புகின்றனர். இது அணிக்கு நெருக்கடியாக அமைகிறது. சமீபத்திய போட்டிகளில் திறமை வெளிப்படுத்தி வந்த "டாப் ஆர்டர்' வீரர்கள், தென் ஆப்ரிக்க தொடரில் விரைவில் அவுட்டாகினர். 

"மிடில் ஆர்டர்' பலவீனமும் நன்கு வெளிப்பட்டது. இந்த வீரர்கள் தங்களது ஆட்டம் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. 

டர்பன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவாக இருந்தது. இந்நிலையில், சரியான முறையில் பந்துகளை தேர்வு செய்து அடிக்காமல், கோட்டை விட்டது தான் ஏமாற்றத்துக்கு காரணம். 


ஷமி அபாரம்:

பவுலிங்கை பொறுத்தவரையில் ஜோகனஸ்பர்க் போட்டியை விட, டர்பனில் முகமது ஷமி நன்கு பந்துவீசினார். பந்தை "சுவிங்' செய்வது, சரியான அளவில் வீசுவது என, இங்குள்ள சூழலுக்கு ஏற்ப செயல்பட்டார்.


எல்லாம் சகஜம்:

வெளிநாடுகளுக்கு போட்டிகளில் பங்கேற்க செல்லும் போதெல்லாம், "ஷார்ட் பிட்ச்' பந்தில் திணறுவது குறித்து பேசுகின்றனர். ஏனெனில், துணைக்கண்டத்து ஆடுகளங்களில் இந்த முறையில் அதிகம் பந்துவீசுவதில்லை. 

மொத்தத்தில் சில போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். சில போட்டிகளில் தோல்வியடைந்து இருக்கலாம். இதில் இருந்து என்ன கற்றுக் கொண்டோம் என்பது தான் முக்கியம். முதல் போட்டியில் பவுலிங் சரியில்லை. அடுத்த முறை பேட்டிங்கில் ஏமாற்றம் கிடைத்தது. அடுத்த போட்டியில் வெற்றிக்கு முயற்சிப்போம்.

இவ்வாறு தோனி கூறினார்.

இந்திய அணிக்கு மரண அடி

தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணியின் சோகம் தொடர்கிறது. டர்பன் ஒருநாள் போட்டியிலும் "பேட்டிங், "பவுலிங்', "பீல்டிங்' என எதுவுமே எடுபடாமல் போக, 134 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 
இதன் மூலம் தொடரை 0-2 என இழந்தது. தென் ஆப்ரிக்க தரப்பில் குயின்டன் டி காக், ஆம்லா சதம் அடித்து அசத்தினர்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று டர்பனில் நடந்தது. 


துவக்கம் தாமதம்: 

மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக, போட்டி துவங்குவதில் ஒன்றரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. பின் 49 ஓவராக குறைக்கப்பட்டது. இந்திய அணியில் யுவராஜ் சிங், புவனேஷ்வர் குமார், மோகித் சர்மாவுக்கு பதிலாக ரகானே, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா இடம் பெற்றனர். "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார். 


"சூப்பர்' துவக்கம்: 

தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக், ஆம்லா ஜோடி மீண்டும் அசத்தல் துவக்கம் அளித்தது. அதிரடியாக ரன்கள் சேர்த்த குயிண்டன் பவுண்டரிகளாக விளாசினார். ஷமி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இவர், இத்தொடரில் வரிசையாக 2வது சதம் அடித்தார். இவர் 106 ரன்கள் எடுத்த போது அஷ்வின் "சுழலில்' சிக்கினார். 


டிவிலியர்ஸ் ஏமாற்றம்: 

பின் வந்த கேப்டன் டிவியர்ஸ் (3) ஏமாற்றினார். தொடர்ந்து வந்த மில்லர் "டக்' அவுட்டாக, ரன்வேகம் குறைந்தது. பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஆம்லா, 12வது ஒருநாள் சதத்தை எட்டினார். இவர், 100 ரன்களுக்கு முகமது ஷமி "வேகத்தில்' வெளியேறினார். 

அனுபவ காலிஸ் (10) நிலைக்கவில்லை. உமேஷ் யாதவின் கடைசி ஓவரில் மெக்லாரன் ஒருசிக்சர் அடித்தார். எதிர்முனையில் பிலாண்டர் தன்பங்கிற்கு மூன்று பவுண்டரிகள் விளாச, மொத்தம் 21 ரன்கள் எடுக்கப்பட்டன .தென் ஆப்ரிக்க அணி 49 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்தது. 

இந்தியா சார்பில் முகமது ஷசி 3 விக்கெட் சாய்த்தார். 


விக்கெட் மடமட:

சவாலான இலக்கை துரத்திய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற "ஷாட்' அடித்தனர். ஸ்டைன் "வேகத்தில்' தவான் "டக்' அவுட்டானார். விராத் கோஹ்லியும், ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 

ரோகித் சர்மா (19), ஆம்லாவின் "சூப்பர் கேட்ச்சில்' அவுட்டானார். ரகானே (8), அம்பயரின் தவறான முடிவால் வெளியேறினார். இப்படி தென் ஆப்ரிக்க வேகத்தில் "டாப்-ஆர்டர்' சரிய 8.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்து தத்தளித்தது. கேப்டன் தோனியும் (19) விரைவில் நடையை கட்ட, கதை முடிந்தது. 

ரெய்னா (36) சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். ரவிந்திர ஜடேஜா (26), அஷ்வின் (15) ஏமாற்றினர். "டெயிலெண்டர்களும்' வந்த வேகத்தில் வெளியேற இந்திய அணி 35.1 ஓவரில் 146 ரன்களுக்கு "ஆல் அவுட்டாகி' தோல்வி அடைந்தது. 
தென் ஆப்ரிக்க அணிக்கு "வேகத்தில்' மிரட்டிய டிசாட்சொபே 4, ஸ்டைன் 3, மார்னே மார்கல் 2 விக்கெட் கைப்பற்றினர். 


ஆம்லா "4000'

நேற்றைய போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் ஆம்லா, 59 ரன்கள் எடுத்த போது ஒருநாள் அரங்கில் தனது 4000வது ரன்னை பதிவு செய்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் (81 இன்னிங்ஸ்) இம்மைல்கல்லை எட்டிய வீரர்கள் வரிசையில், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சை (88) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் கோஹ்லி (93) உள்ளார். 

* தவிர, இம்மைல்கல்லை எட்டிய தென் ஆப்ரிக்க வீரர்கள் வரிசையில், கேப்டன் டிவிலியர்சை (105) பின்னுக்குதள்ளி ஆம்லா (81) முதலிடம் பிடித்தார்.