சாதிக்க உதவிய கிண்டல் - ஸ்ரீசாந்த்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் என்னுடைய சிறப்பான செயல்பாட்டிற்கு, இங்குள்ள ரசிகர்கள் என்னைப் பார்த்து கிண்டல் செய்தது தான் காரணம்,'' என, இந்திய வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாட்டிங்காமில் நடக்கிறது. இதில் இயான் பெல் அடித்த பந்து, தரையில் பட்டதை கவனிக்காத ஸ்ரீசாந்த், பிடித்து விட்டதாக நினைத்து "அவுட்' கேட்டார். அப்போது ரசிகர்கள் கூட்டம் ஸ்ரீசாந்தை கடுப்பேற்றியது.

இதேபோல, பிரையர் அவுட்டான போது, "சீட்டிங்', "சீட்டிங்' என்று குரல் எழுப்பினர். இருப்பினும், இதைக் கண்டு கொள்ளாத இவர், முதல் இன்னிங்சில் அபாரமாக பந்துவீசி, 3 விக்கெட் கைப்பற்றினார்.


இது குறித்து ஸ்ரீசாந்த் கூறியது:

நீண்ட நாள் போட்டியில் பங்கேற்காமல் இருந்த நான், முதல் போட்டியிலேயே இந்தளவு சாதிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்கு காரணம் அணியில் என்னுடைய இடத்தை நிரந்தரமாக தக்க வைத்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமும், இங்குள்ள ரசிகர்கள் என்னை கேலி செய்ததும் தான்.

ஜாகிர்கானுக்கு பதிலாக, அணியில் இடம் பெற்றுள்ளேன். "டிரன்ட் பிரட்ஜ்' மைதானத்திற்கு ஏற்ப எப்படி பந்துவீச வேண்டும் என்பது குறித்த நுணுக்கங்களை அவரிடம் இருந்து விரைவாக கற்று கொண்டேன். இதனால் தான் சாதிக்க முடிந்தது. தவிர, பீட்டர்சன் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு மேலோங்கி இருந்தது.

பவுன்சர் பந்துகளை சந்திப்பதில் பலவீனமாக இருக்கும் இவரை, அதே முறையில் செயல்பட்டு வீழ்த்த வேண்டும் என முடிவு செய்தோம். அதன் படியே, திட்டமிட்டது பலனை தந்தது. இவருடைய விக்கெட்டை நான் எடுப்பேன் என நினைக்க வில்லை. மொத்தத்தில் கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த பீட்டர்சன், சதம் கடந்த பிரையர் ஆகியோரை வீழ்த்தியது அதிக மகிழ்ச்சி தருகிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை குறைவான ரன்களுக்கு கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால் பிராட், சுவான் சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

பிராட்டை வீழ்த்துவதற்கு இரண்டு, மூன்று சந்தர்ப்பங்கள் கிடைத்த போதும், அதனை தவறவிட்டது தவறாகி போனது. "டிரன்ட் பிரிட்ஜ்' மைதானம் உண்மையிலேயே பவுலர்களுக்கு சாதகமானது. இதற்காக சாதாரணமாக பந்துவீசினால் அது பயன் தராது.

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

தோனிக்கு ஐ.சி.சி., விருது?

ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரருக்கான விருதுக்கு இந்திய கேப்டன் தோனியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ரசிகர்களின் மனம் கவந்த வீரருக்கான விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இவ்விருதை, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் பெற்றார்.

இம்முறை இவ்விருதுக்கு, இந்திய கேப்டன் தோனி, தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், முன்னாள் இலங்கை கேப்டன் சங்ககரா, இங்கிலாந்தின் டிராட் உள்ளிட்ட ஐந்து வீரர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவர்களை, முன்னாள் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் கிளைவ் லாய்டு, பாகிஸ்தானின் ஜாகிர் அப்பாஸ், இங்கிலாந்தின் மைக்கேட்டிங், தென்ஆப்ரிக்காவின் பால் ஆடம்ஸ், நியூசிலாந்தின் டேனி மோரிசன் உள்ளிட்டோர் அடங்கிய குழு பரிந்துரை செய்தது.

இந்த ஐந்து வீரர்களின் பெயர், ஐ.சி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், தங்களுக்கு பிடித்தமான வீரர்களுக்கு ஓட்டு அளிக்கலாம். இதற்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் வெற்றி பெற்றவர்களின் விவரம் வரும் செப்., 12ம் தேதி லண்டனில் நடக்கும் ஐ.சி.சி., விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்படும்.

இது குறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹரூன் லார்கட் கூறுகையில்,""கடந்த ஆண்டு இந்த விருதினை சச்சின் பெற்றார். இது போன்று செல்வாக்கு மிக்க வீரர் இந்திய அணியில் இருப்பது இந்தியாவுக்கு தான் பெருமை.

இன்னும் சில தினங்களில் லண்டனில் நடக்கும் ஐ.சி.சி., விருது வழங்கும் விழாவில், மக்கள் விரும்பும் மற்றொரு கிரிக்கெட் வீரர் யார் என்பது தெரிந்து விடும்,'' என்றார்.

சேவக் இடத்தை நிரப்புவது கடினம்

சேவக் இடத்தை பூர்த்தி செய்வது மிகவும் கடினம்,'' என, இளம் இந்திய துவக்க வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 196 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இப்போட்டியில் தோள்பட்டை காயம் காரணமாக, இந்திய அதிரடி துவக்க வீரர் சேவக் பங்கேற்கவில்லை. இதனால் இளம் வீரர் அபினவ் முகுந்த், துவக்க வீரராக களமிறக்கப்பட்டார்.

இதுகுறித்து அபினவ் முகுந்த் கூறியதாவது: லார்ட்ஸ் டெஸ்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தோள்பட்டை காயம் காரணமாக நட்சத்திர வீரர் சேவக் விளையாடாததால், துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சேவக் இடத்தை நிரப்புவது எளிதான காரியமல்ல.

இவரது அதிரடி ஆட்டத்தை கண்டு அஞ்சாத பவுலர்களே கிடையாது. எனவே இவருடன் என்னை ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை. எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். இப்போட்டியில் பெரிய அளவில் சாதிக்காதது ஏமாற்றமாக இருந்தது.

ஆனால் எனது பேட்டிங், திருப்தி அளித்தது. எனவே வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுக்க போராடுவேன்.

இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய விஷயம். இந்திய அணியினரோடு தினமும் பயிற்சி மேற்கொள்ளும் போது, நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. சச்சின் உள்ளிட்ட சீனியர் வீரர் பேட்டிங் குறித்த நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கின்றனர். இது போட்டியில் சாதிப்போம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

காயம் காரணமாக ஜாகிர் கான் வெளியேறியது பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் இஷாந்த் சர்மா, பிரவீண் குமார் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் இருந்திருந்தால், லார்ட்ஸ் டெஸ்டில் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம்.

இரண்டாவது டெஸ்டில் ஸ்ரீசாந்த் விளையாட இருப்பது வரவேற்கத்தக்கது. இவர், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் நெருக்கடி அளிப்பார் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அபினவ் முகுந்த் கூறினார்.

சறுக்கியது நம்பர்-1 இந்தியா

டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1 இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு மிகப் பெரும் "அடி. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்திடம் 196 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த 2000வது டெஸ்ட் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் சாதித்துக் காட்டியது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதல் கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இது டெஸ்ட் அரங்கில் 2000வது போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 474/8(டிக்ளேர்) மற்றும் இந்தியா 286 ரன்கள் எடுத்தன.

பின் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் என்ற நிலையில் "டிக்ளேர் செய்தது. இதையடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு 458 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது.


ஆண்டர்சன் மிரட்டல்:

நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணியின் "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆடினர். இவர்கள், ஆண்டர்சன் "வேகத்தில் வரிசையாக "சரண்டர் ஆகினர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த டிராவிட், இம்முறை ஆண்டர்சன் பந்தில் 36 ரன்களுக்கு வெளியேறினார்.

பின் லட்சுமண், காம்பிர் இணைந்து போராடினர். டெஸ்ட் அரங்கில் தனது 53வது அரைசதம் அடித்த லட்சுமணும்(56), ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்தார். சுவான் சுழலில் காம்பிர்(22) சிக்கினார்.


சச்சின் வீண்:

அடுத்து வந்த சச்சினுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக கைகொடுத்தது. ஆண்டர்சன் பந்தில், கேப்டன் ஸ்டிராஸ் கைநழுவியதால் முதலில் கண்டம் தப்பினார். ஆனாலும், இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்த தவறினார். இதே ஓவரில் ஆண்டர்சன் பந்தில் வெறும் 12 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். இதையடுத்து லார்ட்ஸ் அரங்கில் தனது 100வது சதம் அடிக்கும் சச்சினின் கனவு தகர்ந்தது.


ரெய்னா ஆறுதல்:

பின் சுரேஷ் ரெய்னா, தோனி இணைந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் பொறுப்பற்ற "ஷாட் அடித்த தோனி(16), டிரம்லட் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த "டெயிலெண்டர்கள் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ஆண்டர்சன் பந்தில் ஹர்பஜன்(12) காலியானார். பிராட் வேகத்தில் பிரவீண் குமார்(2) போல்டானார்.

போராடிய ரெய்னா, டெஸ்ட் அரங்கில் தனது 6வது அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். ரெய்னாவை( 78), ஆண்டர்சன் தனது 5வது விக்கெட்டாக பெற்றார். இஷாந்த் ஒரு ரன்னில் வெளியேற, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 261 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 196 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரில் 1-0 என்ற முன்னிலை பெற்றது.

முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் 29ம் தேதி நாட்டிங்காமில் துவங்குகிறது.


முந்தினார் டிராவிட்

டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார் இந்தியாவின் டிராவிட். 52 இன்னிங்சில், ஒரு சதம் மற்றும் 9 அரைசதம் உட்பட மொத்தம் 1,470 ரன்கள் எடுத்துள்ளார். இவர் வெஸ்ட் இண்டீசின் லாராவை (1,440) முந்தினார்

பேஸ்புக்கில் கிரிக்கெட் சூதாட்டம்

கிரிக்கெட் வீரர்களை சூதாட்ட புக்கிகள், இப்போது "பேஸ்புக்' மூலம் அணுகுகின்றனர். ஐ.சி.சி., இதனை விழிப்பாக இருந்து கண்காணிக்க வேண்டும்,'' என, இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) உன்னிப்பாக கவனித்து வந்தாலும், கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்கமுடியவில்லை. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியது:

நாங்கள் என்ன பார்க்கிறோம், எங்களை யார் சந்திக்கின்றனர் என்பதை, "ரெகுலராக' ஐ.சி.சி.,யிடம் தெரிவித்து வருகிறோம். அவர்கள் தான் இதற்கான சட்டத்தை கடுமையாக்க வேண்டும்.

இதன் மூலம், யாராவது உங்களை அணுகினால், மற்ற அனைவரும் விழிப்பாகி விடலாம். ஒருவேளை இதை சரியான இடத்தில் சொல்லவில்லை என்றால், பிறகு ஒன்றுமே நடக்காது.

தற்போது சூதாட்டக்காரர்கள் "இன்டர்நெட்டை' அதிகம் பயன்படுத்துகின்றனர். "பேஸ்புக்' மூலம், நண்பர்கள் என்ற போர்வையில் கிரிக்கெட் வீரர்களை அணுகுகின்றனர்.

இதனால், புக்கிகள் விரிக்கும் வலையில் வீரர்கள் எளிதாக சிக்குகின்றனர். அதேநேரம் சூதாட்டம் குறித்து யாரும் என்னை அணுகியதில்லை.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு சிக்கியது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை. இவர்கள் மட்டும் தான் பிடிபட்டனர். இதுபோல உலகின் பல இடங்களில் நடந்து கொண்டு தான் உள்ளது.

இவை இந்தியா மற்றும் பிற நாடுகளில் எப்படி நடக்கின்றனது என்பதை, ஐ.சி.சி.,யின் சூதாட்ட தடுப்பு மையத்தை சேர்ந்தவர்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.

அவுட் கொடுக்க மறந்த அம்பயர்

லார்ட்ஸ் டெஸ்டில் பீட்டர்சன், 49 ரன்னில் அவுட்டாகி இருக்க வேண்டும். ஆனால் அம்பயர் ஆசாப் ராப், சரியாக கவனிக்காததால், இரட்டை சதம் அடித்துவிட்டார்,'' என, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், இங்கிலாந்தின் பீட்டர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். ஆனால், பீட்டர்சன் முன்னதாகவே அவுட்டாகி இருக்க வேண்டும் என்கிறார் ஜெப்ரி பாய்காட். இதுகுறித்து அவர் கூறியது:

முதல் இன்னிங்சில் பீட்டர்சன் 49 ரன்கள் எடுத்த போது, பிரவீண் குமார் பந்தில் "சிலிப்' பகுதியில் இருந்த ராகுல் டிராவிட் "கேட்ச்' செய்தார். இதற்கு "ஸ்கொயர் லெக்' பகுதியில் இருந்த அம்பயர் ஆசாத் ராப் (பாகிஸ்தான்), "அவுட்' கொடுத்திருக்க வேண்டும். ஆனால் "அவுட்' கொடுக்காமல் தவறு செய்துவிட்டார்.

19 மீட்டர் தொலைவில் இருந்து சரியாக பார்க்க முடியவில்லை என்றால், இவர் "டிவி' அம்பயரிடம் முறையிட்டு இருக்கலாமே. பேட்ஸ்மேன்கள் போட்டி முழுவதும் பேட்டிங் செய்யத்தான் விரும்புவார்கள்.

இதற்காக பேட்ஸ்மேனை குறை சொல்கிறேன் என்று அர்த்தமல்ல. நான் அம்பயரைத் தான் குற்றம் சுமத்துகின்றேன். "டிவி' அம்பயர் உதவியில்லாமல் தனிப்பட்ட முறையில், முடிவெடுத்தது ஆசாத் ராப்பின் குற்றம்.


பவுலிங் சரியில்லை:

லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணியின் பவுலிங்கை பார்க்கும் போது, "நம்பர்-1' அணி என்ற தரத்துக்கு ஏற்ப இல்லை. ஜாகிர் கான் காயம் காரணமாக பந்து வீச முடியாக நிலையில், ஹர்பஜன் சிங் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இஷாந்த் சர்மா முடிந்தவரை சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறார். போதிய அனுபவமின்மை, இயலாமை காரணமாக விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

பிரவீண் குமார் கட்டுக்கோப்பாக பந்து வீசுகின்றார். பந்தை சுவிங் செய்யும் இவர், ஐந்து விக்கெட் வீழ்த்தியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதற்கான தகுதி இவருக்குள்ளது. இப்படிப்பட்ட பவுலிங்கை வைத்துக்கொண்டு, இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் எப்படி வீழ்த்த போகின்றனர் என்று தெரியவில்லை. தவிர, உலகின் "நம்பர்-1' என்ற அந்தஸ்தை எப்படி பெற்றார்கள் என்பதே வியப்பாக உள்ளது.

இவ்வாறு ஜெப்ரி பாய்காட் கூறினார்.

சச்சின் அடிப்பாரா "100' சூதாட்டமோ ரூ. 200 கோடி

சச்சின் 100வது சதம் தொடர்பாக கிரிக்கெட் சூதாட்டம் கொடி கட்டிப் பறக்கிறது. இதுவரை 200 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய உலக கோப்பை தொடரில் போலீசாரின் கடும் நடவடிக்கை காரணமாக பெரிய அளவில் சூதாட்டம் நடக்கவில்லை. அடுத்து நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சச்சின், சேவக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பெறாததால் சூதாட்டம் நடக்க வாய்ப்பே இல்லாமல் போனது.

இதனால் நொந்து போன கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு, தற்போதைய இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் "ஜாக்பாட்' காத்திருக்கிறது. இத்தொடரில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச அளவில் தனது 100வது சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் அடிப்படையில் பெருமளவில் சூதாட்டம் நடக்கிறதாம்.

முக்கிய நகரங்களில் போலீசாரின் கண்காணிப்பு அதிகமாக இருப்பதால், இம்முறை சூதாட்டக்காரர்கள் காசியாபாத், ஹரித்வார் போன்ற சிறிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். சச்சின் 100வது சதம் அடிப்பார் என்று நம்பி பணம் செலுத்தியவர்களுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உதாரணமாக சச்சின் 100வது சதம் அடிப்பார் என்று கூறி 40 ரூபாய் செலுத்த வேண்டும். அவர் சதம் அடித்தால், 90 ரூபாய் கிடைக்கும். லட்சம் மற்றும் கோடிகளில் கட்டும் போது, அதற்கேற்ப பணம் கிடைக்கும். சச்சின் ஒருவேளை அரைசதம் அடித்தால், பாதி தொகை தான் வழங்கப்படும்.

அவர் சதம் அடிக்க தவறினால், பணம் கட்டியவர்களின் கதி "அம்போ' தான். சச்சினுக்கு அடுத்து, காம்பிர் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறதாம். இவர் குறைந்தபட்சம் அரைசதம் அடிப்பார் என ஏராளமானோர் பணம் கட்டியுள்ளனர்.

இது குறித்து சூதாட்டப் புள்ளி ஒருவர் கூறுகையில்,""லார்ட்சில் வரலாற்று சிறப்புமிக்க 2000வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இங்கு சச்சின் 100வது சதம் அடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் "பெட்டிங்' படுஜோராக நடக்கிறது.

அனைவரும் சச்சின் சதத்தில் சதம் காண்பார் என்று தான் பணம் செலுத்துகின்றனர். இதுவரை 200 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கட்டப்பட்டுள்ளது. இந்திய அணி இரண்டாவதாக பேட் செய்வதால், தொகை இன்னும் பல மடங்கு அதிகரிக்கலாம்,''என்றார்.

பிளட்சர் புதிய சாதனை

இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், டெஸ்ட் அரங்கில் 100 போட்டிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றி புதிய சாதனை படைத்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டி, இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், பயிற்சியாளராக செயல்படும் 100வது டெஸ்ட் போட்டி.

இதன்மூலம் இவர், டெஸ்ட் அரங்கில் 100 போட்டிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய முதல் பயிற்சியாளர் என்ற புதிய சாதனை படைத்தார்.

உலக கோப்பை தொடருக்கு பின், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கேறி கிறிஸ்டன் விலகினார். இதனால் ஜிம்பாப்வேயின் டங்கன் பிளட்சர், இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 1999ல் இங்கிலாந்து அணியின் முதலாவது வெளிநாட்டு பயிற்சியாளராக காலடி வைத்த இவர், 96 டெஸ்ட் போட்டிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். இவரது பயிற்சியில், 2004ல் இங்கிலாந்து அணி தொடர்ந்து எட்டு டெஸ்டில் வெற்றி பெற்று அசத்தியது. கடந்த 2005ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

சுமார் எட்டு ஆண்டுகள் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட இவர், நிறைய வெற்றிகளை பெற்றுத்தந்தார். சமீபத்தில் இவரது பயிற்சியின் கீழ், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இதுகுறித்து டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கூறுகையில், ""இந்திய அணியின் பயிற்சியாளராக பிளட்சர் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் அமைதியாக காணப்படும் இவர், கிரிக்கெட் குறித்த நிறைய விஷயங்களை தெரிந்துள்ளார்.

அனுபவம் வாய்ந்த இவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். இதன்மூலம் சிறந்த வீரராக வலம் வர வாய்ப்புள்ளது. இவரது வருகை இந்திய அணிக்கு கிடைத்த மிகப் பெரிய பலம்,'' என்றனர்.

திரில்லிங் தரும் டெஸ்ட் 2000

100வது டெஸ்ட்

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில், இன்று நடக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி, இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நூறாவது டெஸ்ட் போட்டி. முன்னதாக விளையாடிய 99 டெஸ்டில் இங்கிலாந்து 34, இந்தியா 19 போட்டிகளில் வெற்றி கண்டன. 46 போட்டிகள் "டிராவில் முடிந்தன.


நான்காவது முறை

இன்றைய போட்டியின் மூலம் டெஸ்ட் அரங்கில், இங்கிலாந்து அணி நான்காவது முறையாக 100 அல்லது அதற்கு மேல் ஒரு அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியா (326 போட்டி), வெஸ்ட் இண்டீஸ் (145 போட்டி), தென் ஆப்ரிக்கா (138 போட்டி) உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளது.


இங்கிலாந்து ஆதிக்கம்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இதுவரை 28 முறை டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளன. இதில் இங்கிலாந்து 15, இந்தியா 9 முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளன. நான்கு முறை தொடர் "டிரா ஆனது.

* டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி, இதுவரை 15 முறை இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் இங்கிலாந்து 11, இந்தியா மூன்று முறை தொடரை கைப்பற்றியுள்ளன. ஒரு முறை தொடர் "டிரா ஆனது.

* டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து அணி, இதுவரை 13 முறை இந்திய சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் இந்தியா 6, இங்கிலாந்து 4 முறை தொடரை வென்றுள்ளன. மூன்று முறை தொடர் "டிரா ஆனது.


அதிகபட்ச ஸ்கோர்

டெஸ்ட் அரங்கில், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 664 ரன்கள் (இடம்: ஓவல், 2007) எடுத்தது. கடந்த 1990ல், இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி, அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கு 653 ரன்கள் எடுத்து "டிக்ளேர் செய்தது.


மோசமான ஸ்கோர்

1974ல், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 42 ரன்களுக்கு சுருண்டு, இங்கிலாந்துக்கு எதிராக மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. தவிர, இதுவரை இந்திய அணி, ஒன்பது முறை 100 அல்லது அதற்கு குறைவான ஸ்கோரை இங்கிலாந்துக்கு எதிராக பெற்றுள்ளது. கடந்த 1971ல், ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்டில் 101 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.


சிறந்த வெற்றி

கடந்த 1974ல், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 285 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு எதிரான சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து அணி, இதுவரை ஒன்பது முறை இந்தியாவுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது.

* கடந்த 2002ல், லீட்சில் நடந்த டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இங்கிலாந்துக்கு எதிரான சிறந்த வெற்றியை பெற்றது. இந்திய அணி, இதுவரை நான்கு முறை இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.


பத்து விக்கெட் வித்தியாசம்

1946ல், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி முதன்முறையாக இந்தியாவுக்கு எதிராக பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி, இதுவரை மூன்று முறை பத்து விக்கெட் வித்தியாசத்திலும், நான்கு முறை 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியாவுக்கு எதிராக வெற்றி கண்டுள்ளது.

* 2001ல், மொகாலியில் நடந்த டெஸ்டில் இந்திய அணி முதன்முறையாக இங்கிலாந்துக்கு எதிராக பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய அணி, இதுவரை தலா ஒரு முறை பத்து மற்றும் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி கண்டுள்ளது.


கவாஸ்கர் முன்னிலை

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர்கள் வரிசையில் சுனில் கவாஸ்கர் முன்னிலை வகிக்கிறார். இதுவரை இவர், இங்கிலாந்துக்கு எதிராக 38 டெஸ்டில் பங்கேற்று 4 சதம், 16 அரைசதம் உட்பட 2483 ரன்கள் எடுத்துள்ளார்.


கூச் முதலிடம்

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்து வீரர்கள் வரிசையில், கிரகாம் கூச் முதலிடத்தில் உள்ளார். இதுவரை இவர், இந்தியாவுக்கு எதிராக 19 டெஸ்டில் பங்கேற்று 5 சதம், 8 அரைசதம் உட்பட 1725 ரன்கள் எடுத்துள்ளார். இவரை தொடர்ந்து டேவிட் கோவர் (24 டெஸ்ட், 1391 ரன்கள்), பாரிங்டன் (14 டெஸ்ட், 1355 ரன்கள்) உள்ளிட்டோர் "டாப்-3 வரிசையில் உள்ளனர்.


கலக்கல் காம்ப்ளி

இங்கிலாந்துக்கு எதிராக, ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்துள்ள இந்திய வீரர்கள் வரிசையில் வினோத் காம்ப்ளி முன்னிலை வகிக்கிறார். இவர், 1993ல் மும்பையில் நடந்த டெஸ்டில் அதிகபட்சமாக 224 ரன்கள் எடுத்தார். இவரை தொடர்ந்து விஸ்வநாத் (222 ரன்கள், சென்னை, 1982), கவாஸ்கர் (221 ரன்கள், ஓவல், 1979) உள்ளிட்ட இந்திய வீரர்கள் உள்ளனர்.

* இங்கிலாந்து சார்பில் கிரகாம் கூச், 1990ல் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 333 ரன்கள் குவித்தார். இவரை அடுத்து, பாய்காட் (246 ரன்கள், லீட்ஸ், 1967), ஹம்மாண்டு (217 ரன்கள், ஓவல், 1936) உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்.


சபாஷ் சச்சின்

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக சதம் கடந்த இந்திய வீரர்கள் வரிசையில், சச்சின் முன்னிலை வகிக்கிறார். இதுவரை இவர், இங்கிலாந்துக்கு எதிராக 24 டெஸ்டில் பங்கேற்று ஏழு சதம் அடித்துள்ளார். இவரை தொடர்ந்து அசார் (6 சதம்), வெங்சர்க்கார் (5 சதம்) உள்ளிட்ட இந்திய வீரர்கள் உள்ளனர்.

* இங்கிலாந்து சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் இயான் போத்தம், கிரகாம் கூச் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 5 சதம் அடித்துள்ளனர்.


சந்திரசேகர் அபாரம்

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் வரிசையில் சந்திரசேகர் முன்னிலை வகிக்கிறார். இவர், 23 டெஸ்டில் பங்கேற்று 95 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவரை அடுத்து கும்ளே (92 விக்.,), பிஷன் சிங் பேடி (85 விக்.,), கபில்தேவ் (85 விக்.,) உள்ளிட்ட இந்திய பவுலர்கள் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

* இங்கிலாந்து சார்பில், இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் வரிசையில் வில்ஸ், அண்டர்வுட் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 62 விக்கெட் சாய்த்துள்ளார்.


சச்சின் "முதல்வன்

டெஸ்ட் அரங்கில், அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் சச்சின், முதல்வனாக ஜொலிக்கிறார். இதுவரை இவர் 177 டெஸ்டில் பங்கேற்று 14,692 ரன்கள் எடுத்துள்ளார்.

* இதுவரை டெஸ்ட் அரங்கில் பத்தாயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டு வீரர்கள் எட்டியுள்ளனர். சச்சின் (14,692), பாண்டிங் (12,363 ரன்கள்), டிராவிட் (12,314), லாரா (11,953), காலிஸ் (11,947), ஆலன் பார்டர் (11,174), ஸ்டீவ் வாக் (10,927), கவாஸ்கர் (10,122) உள்ளிட்டோர் பத்தாயிரம் ரன்களை கடந்து சாதித்துள்ளனர்.


லாரா "400

டெஸ்ட் அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை பதிவு செய்த வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் லாரா முன்னிலை வகிக்கிறார். இவர், 2004ல், இங்கிலாந்துக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் ஹைடன் (380, எதிர்-ஜிம்பாப்வே, 2003), லாரா (375, எதிர்-இங்கிலாந்து, 1994), இலங்கையின் மகிளா ஜெயவர்தனே (374, எதிர்-தென் ஆப்ரிக்கா, 2006) ஆகியோர் உள்ளனர்.

* இந்தியா சார்பில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை பதிவு செய்த வீரர்கள் வரிசையில் சேவக் முன்னிலை வகிக்கிறார். இவர், 2008ல், சென்னையில் நடந்த டெஸ்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிகபட்சமாக 319 ரன்கள் எடுத்தார். தவிர இவர், பாகிஸ்தானுக்கு எதிராக 2004ல் 309 ரன்கள் எடுத்தார்.


சதங்களின் நாயகன்

டெஸ்ட் அரங்கில், அதிக சதம் அடித்துள்ள வீரர்கள் வரிசையில் இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இதுவரை இவர், 177 டெஸ்டில் பங்கேற்று 51 சதம் அடித்துள்ளார். இவரை தொடர்ந்து தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (40 சதம்), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (39 சதம்), இந்தியாவின் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீசின் லாரா தலா 34 சதம் அடித்துள்ளனர்.

* அதிக இரட்டை சதம் கடந்துள்ள வீரர்கள் வரிசையில் முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் முன்னிலை வகிக்கிறார். இதுவரை இவர், 52 டெஸ்டில் பங்கேற்று 12 இரட்டை சதம் அடித்துள்ளார். இவரை அடுத்து, வெஸ்ட் இண்டீசின் லாரா (9), இங்கிலாந்தின் ஹாம்மண்டு (7), இலங்கையின் சங்ககரா (7) உள்ளிட்டோர் அதிக இரட்டை சதம் அடித்துள்ளனர். இந்தியா சார்பில் சேவக், அதிகபட்சமாக ஆறு முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

* அதிக "டிரிபிள் செஞ்சுரி அடித்துள்ள வீரர்கள் வரிசையில் பிராட்மேன் (ஆஸ்திரேலியா), சேவக் (இந்தியா), கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), லாரா (வெஸ்ட் இண்டீஸ்) உள்ளிட்டோர் அதிகபட்சமாக தலா இரண்டு முறை ஒரு இன்னிங்சில் 300 அல்லது அதற்கு மேல் எடுத்துள்ளனர்.


முரளிதரன் "800

டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள பவுலர்கள் வரிசையில், இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் முன்னிலை வகிக்கிறார். இவர் 133 டெஸ்டில் பங்கேற்று 800 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (708 விக்.,), இந்தியாவின் அனில் கும்ளே (619 விக்.,), ஆஸ்திரேலியாவின் மெக்ராத் (563 விக்.,), வெஸ்ட் இண்டீஸ் வால்ஸ் (519 விக்.,) உள்ளிட்டோர் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.


இருவர் மட்டும்

டெஸ்ட் அரங்கில், ஒரே இன்னிங்சில் பத்து விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற பெருமை இங்கிலாந்தின் லாகர் (எதிர்-ஆஸ்திரேலியா, 1956, இடம்-மான்செஸ்டர்) மற்றும் இந்தியாவின் கும்ளே (எதிர்-பாகிஸ்தான், 1999, இடம்-டில்லி) இருவருக்கு மட்டும்தான் உள்ளது.

தோனியின் "பேட்' ரூ.72 லட்சம்

உலக கோப்பை பைனலில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி பயன்படுத்திய "பேட்' ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் போனது.

இந்திய அணி கேப்டன் தோனி, கடந்த ஆண்டு "வின்னிங் வேய்ஸ் டுடே பார் டுமாரோ' என்ற பெயரில் அறக்கட்டளை துவங்கினார். இதற்கு நிதி சேர்க்கும் விதத்தில், கடந்த உலக கோப்பை பைனலில், இலங்கைக்கு எதிராக 91 ரன்கள் சேர்க்க உதவிய "பேட்' உட்பட பல பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

தோனியின் "பேட்' மட்டும் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் போனது. தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பை வென்றது, சிறந்த வீரர் சச்சின் சாதனைகளை குறிக்கும் வகையில், உலகின் பிரபல ஓவியர் சச்சா ஜாப்ரி வரைந்த ஓவியம் ஏலத்தில் விடப்பட்டது.

இதேபோல, முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பாண்டிங், ஆன்ட்ரூ பிளின்டாப், ஆலன் பார்டர், மலிங்கா ஆகியோர் வரைந்த ஓவியம், கையெழுத்திட்ட பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டன. இதன் மூலம் மொத்தம் ரூ. 3.25 கோடி வசூலானது. ஏலம் குறித்து தோனி கூறியது:

எனது அறக்கட்டளை கடந்த ஆண்டு, மார்ச் மாதம் இந்தியாவில் துவங்கப்பட்டது. தற்போதைய ஏலத்தில் கிடைத்துள்ள நிதியை, சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள சிறுவர்களின், கிரிக்கெட் திறனை வளர்க்க பயன்படுத்தப் போகிறேன்.

தவிர, ராஞ்சியில் புதிய விளையாட்டு அகாடமி ஒன்றை துவங்க போகிறேன். இதற்காக ஜார்க்கண்ட் அரசு போதிய நிலத்தை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், வசதியில்லாத சிறுவர்களின் திறமைகளை பட்டை தீட்டி, அவர்களது திறமைகளை வெளிப்படுத்த உதவ உள்ளேன்.

இந்த அகாடமியில் பயிலும் மாணவர்கள், ஊழியர்கள் தங்குவதற்கு ஏற்ப, அருகில் வீடு கட்டவும் திட்டமிட்டுள்ளேன்.

என்னுடைய 18 வயதில் (1999-2000) பொதுத்துறை நிறுவனத்தின் சார்பில், 3 பந்துகள், கிரிக்கெட் பேட், பேடுகளை வழங்கியது. இதன் பின் அடுத்த நான்கு ஆண்டில், எனது கிரிக்கெட் திறமையில் வியக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது. இவ்வாறு தோனி கூறினார்.


அடுத்த இலக்கு:

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்பஜன் சிங் கூறுகையில்,"" சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடர் அரையிறுதியில், பாகிஸ்தானை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது, எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட் வீழ்த்தியுள்ளேன். விரைவில் மேலும் 400 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்ற நம்பிக்கையுள்ளது,'' என்றார்.

விளம்பர சர்ச்சை: ஹர்பஜன் நோட்டீஸ்

தோனி நடித்த மதுபான விளம்பரம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஜய் மல்லையாவின் நிறுவனத்துக்கு ஹர்பஜன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் தோனி, ஹர்பஜன் இருவரும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் தனித்தனியாக வெவ்வேறு மதுபான விளம்பரங்களில் நடித்துள்ளனர். இதில் பிரபல தொழிலதிபர், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் ஐ.பி.எல்., அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின், மதுபான விளம்பரத்தில் தோனி நடித்துள்ளார்.

இந்த விளம்பரம் ஹர்பஜன், அவரது குடும்பம் மற்றும் சீக்கிய சமூகத்தை கிண்டல் செய்வது போல அமைந்துள்ளது.

இதையடுத்து ஹர்பஜன் சிங் சார்பில் அவரது தாயார் அவ்தார் சிங், விஜய் மல்லையாவின் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதில்,""மதுபான விளம்பரத்தினால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்திய கிரிக்கெட் அணியின் ஒற்றுமை குலையும். தவிர, எங்களது சமூகத்தையும் கிண்டல் செய்கிறது. இதனால் இந்த விளம்பரம் குறித்து ஹர்பஜன் சிங் குடும்பத்தினரிடம், அனைத்து பத்திரிகைகள் மற்றும் "டிவி'க்களில், உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும்.

இந்த விளம்பரத்தை மூன்று நாட்களில் திரும்பபெற வேண்டும். தவிர, நோட்டீஸ் அனுப்புவதற்கு செலவான ஒரு லட்ச ரூபாயையும், இழப்பீடாக தரவேண்டும்,'' என, கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் வக்கீல் வெளியிட்ட செய்தியில்,"" நாங்கள் அனுப்பிய நோட்டீஸ், உங்களது தவறுகளை சரிசெய்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதில் குறிப்பிட்டபடி மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கிரிமினல் சட்டப்படி மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,'' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல்வாதிகள்

விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் இடம் பெறுவது மிகவும் அவசியமானது,'' என, மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் தலைவர்களாக அரசியல்வாதிகள் உள்ளனர். இதற்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு நிர்வாகத்தில் வீரர்களே இடம் பெற வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

இந்தச் சூழலில் மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார், காங்., கட்சியை சேர்ந்த விலாஸ் ராவ் தேஷ்முக்கிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து அரசியல்வாதிகளுக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா கூறியது:

விளையாட்டு நிர்வாகத்தில் இருந்து அரசியல்வாதிகள் விலகி விட்டால், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இயலாது. இவர்களிடம் தான் வளர்ச்சிக்கான வழியை காட்டும் சாவி உள்ளது. முன்னாள் வீரர்களால் திட்டங்களை நிறைவேற்ற முடியாது. எனவே, விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகள் இடம் பெறுவது மிகவும் அவசியமானது.

காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக உள்ள நான் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறேன். இங்கு சர்வதேச தரம் வாய்ந்த இரண்டு கிரிக்கெட் மைதானங்கள் அமைய உள்ளன. ஜம்மு மைதானத்துக்கு செல்லும் பாதையை அமைக்க, ராணுவத்தின் உதவியை நாட உள்ளோம்.

எனது எம்.பி., நிதி ஒதுக்கீட்டில் இருந்து 1.40 கோடி ரூபாயை எஸ்.பி. கல்லூரி மைதானத்தை மேம்படுத்துவதற்கு வழங்க உள்ளேன். இதன் மூலம் ஸ்ரீநகரில் உள்ள இளைஞர்கள் பெரிதும் பயனடைவர். வாசிர் பாக் பகுதியில் உள்ள அமர் சிங் கல்லூரி மைதானத்துக்கு கூடுதல் வசதிகள் செய்திட, 30 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.

பேடி "பல்டி'

மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் வெங்சர்க்கார் தோல்வி அடைந்ததும், அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தார் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி. தற்போது காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர், தனது கருத்தை மறுத்துள்ளார்.

இது குறித்து இவர் கூறுகையில்,""விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகள் இடம் பெறுவது பற்றி நான் கருத்து எதுவும் கூறவில்லை,''என்று, நழுவினார்.

தோனிக்கு வாகன் பாராட்டு

இந்திய அணியின் கேப்டன் தோனி, களத்தில் போராட்டத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர்,'' என, இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மைக்கேல் வாகன் கூறியது:

இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் எப்போதும் தற்காப்பு முறையிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதால் இவரை தற்காப்பு கேப்டன் என அழைக்கலாம். இவருடைய தலைமையில் இங்கிலாந்து அணி "நம்பர்-1' அணியாக வர முடியும்.

இந்திய கேப்டன் தோனி, எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார். இதுதான் இவர் கேப்டன் பதவியை சிறப்பாக நிர்வகிப்பதற்கு காரணம். கடினமாக போராடும் குணம் தான் இவரது சிறப்பு. இதனால் இவரை சிறந்த போராட்டக்காரர் என்றே அழைக்கலாம்.

களத்தில் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி, அவர்களது முழுத்திறமையையும் வெளிக்கொண்டு வந்து, இதன்மூலம் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கக் கூடியவர்.

இத்தொடரில், இரண்டு கேப்டன்களில் யார் அதிக தைரியத்துடன் போட்டியை அணுகுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளதால் அதிகபட்சமான, ஸ்கோரை பதிவு செய்யலாம்.

முக்கியமான நேரங்களில் ஏற்படும் நெருக்கடியை, எந்த கேப்டன் சிறப்பாக சமாளிக்கின்றாரோ, அவரது அணி தான் வெற்றிபெறும்.

இவ்வாறு மைக்கேல் வாகன் கூறினார்.

சச்சினுக்கு தலைவணங்கும் ஸ்டிராஸ்

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 100வது சதம் அடிப்பதை தலைவணங்கி வரவேற்கிறேன். சர்வதேச டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க, இந்திய அணியின் சவாலை சந்திக்கத் தயாராக உள்ளோம்,'' என, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டிராஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரில் இந்திய அணியின் "சீனியர்' சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100வது சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்டிராஸ் கூறியது:

எந்த ஒரு தொடராக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சச்சின் தான், எங்களுக்கு முன்மாதிரி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டில் நீடித்து இருக்கும் இவர், எங்களுக்கு எதிரான தொடரில் நிச்சயம் சாதிப்பார் என்று நம்புகிறேன். இங்கு சச்சின் 100வது சதம் அடிப்பதை வரவேற்கிறேன்.

இது உண்மையில் வியக்கத்தக்க சாதனை. இந்த இலக்கை எட்டியது மட்டுமல்லாமல், இவர் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்திருக்க விரும்புகிறார். எவ்வித நெருக்கடியான நிலையிலும், மனவலிமை உதவியுடன் பேட்டிங்கில் மீண்டு விடுவார். மிகவும் பணிவான குணமுடைய சச்சின், மற்றவர்களிடமும் மரியாதை காட்டுவார்.

"நம்பர்-1' இடம்:

டெஸ்ட் அரங்கில் "நம்பர்-1' இடத்தில் உள்ள இந்திய அணி, கடந்த சில ஆண்டுகளாக வெற்றி, தோல்வி கலந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வருகிறது. தற்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், இதற்கு முன் இங்கிலாந்து அணிக்காக செயல் பட்டுள்ளார். இப்போது இந்திய அணிக்கு பயிற்சி தரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் எங்களது பலம், பலவீனங்கள் நன்கு தெரியும்.

சொந்தமண் பலம்:

இருப்பினும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்திய அணியை முந்துவது என்பது கடினம். இந்நிலையில் இந்திய அணியின் சவாலை சந்திப்பது, முதலிடத்தை பெறவுள்ள எங்களை, சிறப்பான அணியாக மாற்றும். தவிர, சொந்தமண் பலமும் எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எங்களைப் பொறுத்தவரையில், "நம்பர்-1' இடத்தை பெறுவது தான் எங்கள் லட்சியம். இதைத்தான் வீரர்கள் எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதேநேரம் இந்த "ரேங்க்' குறித்து அதிகம் கவலைப்படாமல், தொடர்ந்து சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தினோம்.

கவலை இல்லை:

தற்போது இதற்கான வாய்ப்பு கூடி வந்துள்ளது. இத்தொடரில் இந்தியாவை வென்று, "நம்பர்-1' இடத்தை பெற்றால், மிகச்சிறப்பாக இருக்கும். ஒரே அணியாக அசத்தும் எங்களுக்கு இது அபாரமான முன்னேற்றம். ஆனால் இத்துடன் வேலை முடிந்து விட்டது என்று சொல்லமுடியாது. ஏனெனில், இது போன்ற எண்ணங்கள் எப்போதும் அபாயமானது.

மற்றபடி தொடரின் முடிவில் எது நடந்தாலும் கவலையில்லை. கடந்த 6 முதல் 12 மாதங்களாக முயற்சித்து வந்த எங்கள் லட்சியத்தை, மீண்டும் தொடருவோம். ஏனெனில் இந்த சவால் எப்படிப்பட்டது என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

டிரம்லட் தொல்லை:

இந்திய துணைக்கண்டத்து அணிகள் கடந்த சில ஆண்டுகளாக "ஷார்ட் பிட்ச்' பந்துகளை நன்கு சமாளிக்க கற்றுக்கொண்டு விட்டனர். இத்தொடரிலும் அணியின் சீனியர் வீரர்களுக்கு, இது ஒரு தொல்லையாக இருக்காது என்பது உறுதி.

மற்றபடி, இந்திய அணியினருக்கு குறிப்பிடத்தக்க வகையில் எந்த பலவீனமும் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், கடந்த முறை டிரம்லட் இந்திய அணிக்கு பெரிதும் சிரமம் கொடுத்தார். இப்போது நல்ல அனுபவம் பெற்ற நிலையில், தொடர்ந்து அசத்துவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஸ்டிராஸ் கூறினார்.