கோஹ்லி விளாசல் - இந்திய அணி வெற்றி

கொச்சியில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் கோஹ்லி 86 ரன்கள் விளாச, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஏமாற்றம் அடைந்தது. 
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் இன்று நடந்தது. 

இதில் "டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டுவைன் பிராவோ முதலில் "பேட்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் வினய் குமாருக்கு பதில் உனத்கத் இடம் பிடித்தார். 


ரெய்னா அசத்தல்:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் கெய்ல் (0) ரன் அவுட்டானார். சார்லஸ் (42) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதன் பின் பந்துவீச வந்த ரெய்னா அசத்தினார். 

இவரின் சுழலில், சாமுவேல்ஸ் (24), சிம்மன்ஸ் (29), தியோநரைன் (4) சிக்கினர். அரை சதம் கடந்த டேரன் பிராவோ 59 ரன்களுக்கு போல்டானார். டுவைன் பிராவோ 24 ரன்களில் ஜடேஜா சுழலில் வெளியேறினார். சமி 5 ரன்களில் அவுட்டானார். 

நரைன் (0), ராம்பால் (1) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 48.5 ஓவரில், 211 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஹோல்டர் (16) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் ஜடேஜா, ரெய்னா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 


கோஹ்லி அபாரம்:

இந்திய அணியின் தவான் 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி தந்தார். ரோகித், கோஹ்லி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சமி ஓவரில் ரோகித் இரண்டு பவுண்டரி விளாசினார். 

தன் பங்கிற்கு ஹோல்டர், ராம்பால் பந்துவீச்சில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். தியோநரைன் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த ரோகித், ஒரு நாள் அரங்கில் 20வது அரை சதத்தை எட்டினார். நரைன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோஹ்லி 27வது அரை சதத்தை பதிவு செய்தார். 

தொடர்ந்து விளாசிய இவர் டுவைன் பிராவோ பந்தில் 2 பவுண்டரி அடித்தார். ரோகித் 72 ரன்களில் அவுட்டானார். கோஹ்லி 86 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஒரு நாள் அரங்கில் 5000 ரன்கள் எடுத்து அசத்தினார். 

ரெய்னா டக்-அவுட் ஆனார். ஹோல்டர் பந்துவீச்சில் தோனி இரண்டு பவுண்டரி அடித்தார். இந்திய அணி 35.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

யுவராஜ் (16), தோனி (13) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர் அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார். 

0 comments:

Post a Comment