மவுனம் கலைத்தார் சச்சின் - சூதாட்டத்தால் அதிர்ச்சி



கிரிக்கெட் தொடர்பாக தவறான செய்திகள் வெளியாவது மனதிற்கு வேதனை அளிக்கிறது. கடந்த இரு வாரங்களாக நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது,'' என, சச்சின் தெரிவித்தார்.

 ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "ஸ்பாட் பிக்சிங்' எனும் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இது குறித்து கேப்டன் தோனி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் மவுனம் சாதித்து வருகின்றனர். இந்நிலையில், சூதாட்ட விவகாரம் குறித்து இந்தியாவின் சச்சின் கூறியது: 

கடந்த இரண்டு வாரங்களாக விரிவடைந்து கொண்டே செல்லும் சூதாட்ட விவகாரம், அதிர்ச்சி மற்றும் ஏமாற்றம் அளிக்கிறது. இது கோடிக்கணக்கான ரசிகர்களின் நம்பிக்கையை வீணடிக்கும் செயல். 

விரைந்து நடவடிக்கை எடுத்து, கிரிக்கெட்டின் நம்பகத்தன்மையை மீட்டு தரவேண்டும். எப்போதும் கிரிக்கெட்டை விளையாட்டு உணர்வுடன் தான் ஆட வேண்டும் என்பது தான் நான் கற்றும் கொண்ட முதல் பாடம். 

அதனால் கிரிக்கெட்டைப்பற்றி தவறான செய்திகள் வெளியாவது மனதிற்கு வேதனை அளிக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரருக்கு கடினமாக போராடும் குணம், உண்மையான விளையாட்டு உணர்வு எப்போதும் இருப்பது அவசியம். 

அதிகாரிகளை இப்பிரச்னையின் வேர் வரை சென்று நடவடிக்கை எடுக்கும்படி எல்லா கிரிக்கெட் வீரர்களையும் திரட்டி வலியுறுத்துவேன். 

சூதாட்ட புயலில் ரெய்னா, ஆர்.பி.சிங்



சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் போலீசார் கண்காணிப்பு வளையத்தில் ரெய்னா, ஆர்.பி.சிங் உள்ளிட்ட 10 உ.பி., வீரர்கள் சிக்கியுள்ளனர்.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான், பாலிவுட் நடிகர் வின்டூ, சென்னை அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் என, பலர் கைது செய்யப்பட்டனர். 

இதுதொடர்பாக டில்லி, மும்பை, சென்னை மற்றும் உ.பி., போலீசார் இணைந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே உ.பி.,யை சேர்ந்த 10 கிரிக்கெட் வீரர்களும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 

இதில் சென்னை அணியின் "மிடில் ஆர்டர்' வீரர் ரெய்னா, புனே அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், பெங்களூருவின் ஆர்.பி.சிங் ஆகியோர் "டாப்-3' வீரர்களாக உள்ளனர். 

தவிர, ஆறாவது தொடரில் பங்கேற்ற அலி முர்டசா, திவேதி (புனே), பிரவீண் குமார், பியுஸ் சாவ்லா (பஞ்சாப்), இம்தியாஸ் அகமது, அங்கித் சிங் ராஜ்புத் (சென்னை) உள்ளிட்டோரையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இதுகுறித்து உ.பி., சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் அருண்குமார் கூறியது:
சூதாட்டம் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி, தனியாக விசாரித்து வருகிறோம். 

வாரணாசி, மீரட், கான்பூர், காஜியாபாத் ஆகிய இடத்தில் இருந்து பலரை பிடித்துள்ளோம். இவர்கள் கொடுத்த தகவலின்படி, மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது உண்மை தான். 

இதில் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தெரிகிறது. சென்னை-பெங்களூரு அணி மோதிய லீக் போட்டியில், கடைசி பந்தை ஒரு வீரர்(ஆர்.பி.சிங்) "நோ-பாலாக' வீசியதில் "பிக்சிங்' இருப்பதாக தெரிகிறது. 

இதுகுறித்து விசாரணை நடந்து வருவதால் மேலும் தகவல்களை வெளியில் கூற முடியாது. என்ன நடக்கின்றது என, பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவ்வாறு அருண் குமார் தெரிவித்தார்.

சென்னை வீரர்கள் 3 பேருக்கு தொடர்பு


பிக்சிங்' விவரகாரத்தில் ஒரு "சீனியர்' வீரர் உட்பட மொத்தம் சென்னை அணியின் மூன்று வீரர்கள் சிக்கவுள்ளனர். விரைவில் இவர்கள் கைதாகலாம்.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளில் "பிக்சிங்' செய்த ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோர் பிடிபட்டனர். 

இதன் பின் இவ்விவகாரத்தில் தினமும் ஒரு புதுத்தகவல் வெளியாகிறது. 

இதுவரை மொத்தம் 21க்கும் மேற்பட்டோர் டில்லி டில்லி போலீசிடம் சிக்கியுள்ளனர். இதனிடையே, "பிக்சிங்' குறித்து தனியாக விசாரித்து வரும் மும்பை போலீசில், மல்யுத்த வீரர், நடிகர் தாராசிங்கின் மகன், நடிகர் வின்டூ ரந்த்வா சிக்கினார். 

இவர் கொடுத்த தகவலின் பேரில், சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனை போலீசார் விசாரிக்க உள்ளனர். இதனிடையே, "பிக்சிங்' செய்த மூன்று சென்னை வீரர்கள் குறித்து வின்டூ, போலீசிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பை போலீஸ் இணைக்கமிஷனர் ஹிமான்சு ராய் கூறுகையில்<"" சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று சென்னை வீரர்களின் பெயரை, வின்டூ எங்களிடம் தெரிவித்தது உண்மை தான். 

இதில் ஒரு முன்னணி "சீனியர்' வீரரும் உள்ளார். இதன் நம்பகத்தன்மை குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இது யார் யார் என்பது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது,'' என்றார்.

சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணை


கிரிக்கெட் சூதாட்ட விசாரணை தீவிரமடைகிறது. ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்ட வீரர்கள் மற்றும் "புக்கி'களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து கண்டறிய முக்கிய ஓட்டல்களின் "சிசிடிவி' கேமராவில் பதிவான படங்களை டில்லி போலீசார் சோதனை செய்ய உள்ளனர். 

தவிர, சூதாட்ட விவகாரம் தொடர்பாக நேற்று ஒரு கிரிக்கெட் வீரர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்ற ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரும் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்டு, டில்லி போலீசிடம் பிடிபட்டனர். கிரிக்கெட் வீரராக இருந்து புக்கியாக மாறிய அமித் சிங்கும் கைதானார். ஐந்து நாள் போலீஸ் காவலில் உள்ள இவர்களிடம், போலீசார் "கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தி வருகின்றனர். 

இவர்கள் கொடுத்த தகவலின்படி, நேற்று அவுரங்காபாத்தில் வைத்து மனிஷ் குடேவர், 32 மற்றும் "புக்கி'களான சுனில் பாட்யா, 44, கிரண் டோல், 42, ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை "ஸ்பாட் பிக்சிங்' தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரான குடேவார், சண்டிலா வீட்டுக்கு அருகில் வசிப்பவர். இவர், 2003-05 வரை ரஞ்சி போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பாபுராவ் யாதவ் என்ற இன்னொரு கிரிக்கெட் வீரரை போலீசார் தேடி வருகின்றனர். இவர், ரயில்வே அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். இவர் மிக விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.


மும்பையில் சோதனை: 

இ-தற்-கிடையே மும்பையில் உள்ள இரண்டு ஐந்து நட்சத்திர ஓட்டலில் டில்லி சிறப்பு பிரிவு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்ட வீரர்கள் தொடர்பாக விசாரித்தனர். தவிர மும்பை, சண்டிகர், கோல்கட்டா, ஐதராபாத் ஆகிய இடங்களில் ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் தங்கிய ஓட்டலில் உள்ள "சிசிடிவி' ரகசிய கேமராவில் பதிவான படங்களை தருமாறு டில்லி போலீசார் கேட்டுள்ளனர். 

இதனை சோதனை செய்தால், "புக்கி'களுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஸ்ரீசாந்த், உள்ளிட்ட மூன்று பேரின் குரல் மாதிரியை பதிவு செய்ய கோர்ட்டில் அனுமதி கோர உள்ளனர்.

இந்த விசாரணையில், இன்ஸ்பெக்டர் பத்ரிஷ் தத் ஏற்கனவே ஒட்டு கேட்டு பதிவு செய்த வீரர்களின் உரையாடல் உதவலாம். மர்மமான முறையில் மரணம் அடைந்த இவர் சார்பில், கடந்த மே 9ம் தேதி பதிவு செய்த எப்.ஐ.ஆர்., ல் வீரர்கள் மற்றும் "புக்கி'களின் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

அதில்,"கடந்த ஏப்ரல் மாத மூன்றாவது வாரத்தில், பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடப்பதாக சிறப்பு பிரிவுக்கு தகவல் வந்தது. இதில், "நிழல் உலக தாதா' மற்றும் வீரர்களுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது. பெரும் தொகையை பெற்றுக் கொண்டு வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக செயல்படுகின்றனர். இது கிரிக்கெட்டை நேசிக்கும் அப்பாவி ரசிகர்களை ஏமாற்றும் செயல்,''என தெரிவிக்கப்பட்டது. 

இதனை அடிப்படையாக கொண்டு, டில்லி சிறப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடர உள்ளனர்.

திறமை இல்லாத ஐ.சி.சி. - ஆஸி., வீரர்கள் சங்கம் தாக்கு


விளையாட்டு உலகின் மிகவும் மோசமான, திறமையற்ற நிர்வாகமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) உள்ளது,' என, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ஏ.சி.ஏ.,) தெரிவித்தது. 

ஐ.சி.சி., வீரர்கள் பிரதிநிதி கமிட்டி உறுப்பினராக, முன்னாள் இந்திய வீரர் சிவராமகிருஷ்ணன் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), இருப்பதாக புகார் எழுந்தது. இதனால், தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு கிளம்பின. 

இதுகுறித்து ஏ.சி.ஏ., தலைவர் பால் மார்ஷ் கூறியது:

கிரிக்கெட் உலகின் மோசமான நாள் இது தான். சிவராமகிருஷ்ணன் தேர்வு பிரச்னை, கிரிக்கெட்டுக்கு தவறான அறிகுறி. இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு கிரிக்கெட் போர்டும் துணிச்சலாக செயல்படும் என்று நினைக்கவில்லை. 

இதனால், இவ்விஷயத்தில் ஐ.சி.சி., கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வீரர்கள் விரும்புகின்றனர். ஆனால், இது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில், உலக விளையாட்டு அமைப்புகளில் திறமையற்ற நிர்வாகமாக ஐ.சி.சி., உள்ளது. 

இவ்வாறு பால் மார்ஷ் கூறினார். 

பிரிக்க முடியாத கிரிக்கெட்டும் சூதாட்டமும்


ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்ற ராஜஸ்தான் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகிய மூவரும் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்டு, டில்லி போலீசிடம் பிடிபட்டனர். தற்போது, 5 நாள் போலீஸ் காவலில் உள்ள இவர்களிடம் தீவிர விசாரணையின் நடக்கிறது.

கிரிக்கெட்டில் சூதாட்டம் நடப்பது புதிதல்ல. இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான இதில், பல ஆண்டுகளாக சூதாட்டம் நடந்து வருகிறது.

1979-80: இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கோல்கட்டா டெஸ்ட் போட்டியில், டாஸ் சுண்டுவதில் சூதாட்டம் நடந்தது. பாக்., கேப்டன் ஆசிப் இக்பால் நாணயத்தை சுண்டி, டாசில் ஜெயித்த போதும், இந்திய கேப்டன் ஜி.ஆர்.விஸ்வநாத் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

1981: ஆஸ்திரேலிய வீரர்கள் டென்னிஸ் லில்லி மற்றும் ரோட்னி மார்ஷ், தங்கள் அணிக்கு எதிராக சூதாட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

1992-93: ஆஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது நடந்த விபரங்களை அறிய, இந்தியர் ஒருவர் ஆஸி., வீரர் டீன் ஜோன்ஸ்சுக்கு 50 ஆயிரம் டாலர் அளித்தார்.

1993: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோற்க, ஆஸி., வீரர் ஆலன் பார்டருக்கு, முஸ்டாக் முகமது 5 லட்சம் பவுண்ட் அளித்ததாக புகார்.

1996: இந்திய அணியின் முன்னாள் மேனேஜர் சுனில் தேவ், சில இந்திய வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்தியதாக விசாரிக்கப்பட்டார்.

1997: இந்திய வீரர் மனோஜ் பிரபாகர், இலங்கை சுற்றுப் பயணத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார்.

1998: நியூசிலாந்து எதிராக மோசமாக பந்து வீச, பாக்., கேப்டன் வாசிம் அக்ரம், தனது அணி வீரர் அடா உர் ரஹ்மானுக்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்ததாக புகார். இதனால் கேப்டன் பதவியை அக்ரம் ராஜினாமா செய்தார்.

1998: பாக்., வீரர்கள் அக்ரம், சலீம் மாலிக், இன்சமாம், இஜாஸ் அகமது ஆகியோர், தெ.ஆ., மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாக்., வீரர் ராஷித் லத்தீப் புகார்.

1998: பாக்., அணிக்கு எதிரான போட்டியில் தோற்க, ஆஸி., வீரர்கள் மார்க் வாக், வார்ன், டிம் மே ஆகியோருக்கு சலீம் மாலிக் 50 ஆயிரம் டாலர் அளித்தார்.

1999: நியூசி.,க்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தோற்க, வீரர்களுக்கு 3 லட்சம் பவுண்ட் அளித்ததாக இங்கி., வீரர் கிறிஸ் லுயிஸ் புகார்.

2000, ஏப்.7: இந்தியா-தெ.ஆ., எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தெ.ஆ., கேப்டன் ஹான்சி குரோனியே சூதாட்டத்தில் ஈடுபட்டதால், வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதில் கிப்ஸ், பீட்டர் ஸ்ட்ரைடம், ஹென்றி வில்லியம்ஸ், நிக்கி போயேவுக்கும் தொடர்பு இருப்பதாக புகார்.

2000, மே 24: சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பாக்., வீரர்கள் சலீம் மாலிக், அடா உர் ரஹ்மானுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

2000, ஜூலை 20: இந்திய வீரர்கள் கபில் தேவ், அசாருதீன், அஜய் ஜடேஜா, மோங்கியா மற்றும் நிகில் சோப்ரா ஆகியோர், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

2000, அக்.31: கிரிக்கெட் வீரர்கள் லாரா, டீன் ஜோன்ஸ், அலெக்ஸ் ஸ்டூவர்ட், ரணதுங்கா, அரவிந்த டி சில்வா, மார்டின் குரோவ், சலீம் மாலிக் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சி.பி.ஐ., அறிக்கை.

2000, டிச.5: அசாருதீன், அஜய் சர்மா ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் வாழ்நாள் தடை. அஜய் ஜடேஜாவுக்கு ஐந்து ஆண்டுகள் தடை.

2004, ஆக.17: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கென்ய வீரர் மவ்ரைஸ் உடும்பேவுக்கு, ஐந்து ஆண்டுகள் தடை.

2008, மே 13: வெ.இ., வீரர் மார்லன் சாமுவேல்சுக்கு, அணியின் ரகசியங்களை தெரிவித்ததற்காக இரண்டு ஆண்டுகள் தடை.

2010, நவ: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் "ஸ்பாட் பிக்சிங்'சில் ஈடுபட்டதாக பாக்., வீரர்கள் சல்மான் பட்டுக்கு 10 ஆண்டுகளும், முகமது ஆசிப்புக்கு 7 ஆண்டுகளும், முகமது ஆமிருக்கு 5 ஆண்டுகளும் தடை.

2012: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய வீரர் சுதிந்ராவுக்கு வாழ்நாள் தடையும், ஸ்ரீவஸ்தவாவுக்கு ஐந்து ஆண்டுகளும், மோனிஷ் மிஸ்ரா, அமித் யாதவ், அபினவ் பாலி ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டும் தடை விதிக்கப்பட்டது.

2012: சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பாக்., வீரர் டேனிஷ் கனேரியாவுக்கு வாழ்நாள் தடை. இங்கி., வீரர் மெர்வ்யன் வெஸ்ட்பீல்டுக்கு 5 ஆண்டுகள் தடை.

3 ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டம்


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 வீரர்கள், 11 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கடந்த 5-ம் தேதி நடைபெற்ற புனே வாரியர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின்போது சூதாட்டம் நடந்துள்ளது. இதேபோல் 9-ம் தேதி ராஜஸ்தான்-பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியிலும் சூதாட்டம் நடந்துள்ளது. 

புனே அணிக்கு எதிராக சண்டிலா சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு ஓவரில் குறிப்பிட்ட ரன்களை விட்டுக் கொடுப்பதற்காக கூறி சூதாட்டம் நடந்துள்ளது. சண்டிலாவுக்கு ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் சில சைகைகளுக்கு ஏற்ப வீரர்கள் ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர். வீரர்களும் தங்கள் சமிக்ஞைகள் மூலம் இடைத்தரகர்களுக்கு தங்கள் செயல்பாடுகளை தெரிவித்துள்ளனர். சூதாட்டப் புகார் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

பதான் செய்த தவறால் திருப்புமுனை


ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ராஞ்சியில் நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. 

முதலில் ஆடிய புனே வாரியர்ஸ் அணிக்கு, விக்கெட் கீப்பர் உத்தப்பாவும், கேப்டன் ஆரான் பிஞ்சும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். உத்தப்பா 21 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 25 ரன்கள் அடித்தார். 32 பந்துகளை எதிர்கொண்ட பிஞ்ச், 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசினார்.

இவர்கள் பெவிலியன் திரும்பிய பிறகு அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திய மணீஷ் பாண்டே, 47 பந்துகளில் 66 ரன்கள் (8 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். 

கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடிய யுவராஜ் சிங், 20 பந்துகளில் 3 சிக்சர் உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் புனே அணி 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைத் துரத்திய கொல்கத்தா அணியின் துவக்க விக்கெட்டுகள் விரைவில் சரிந்தன. காம்பிர் 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 

4-வது வீரராக களமிறங்கிய யூசுப் பதான், புனே பந்துவீச்சை நேர்த்தியாக சமாளித்து ஆட்டத்தை தன்பக்கம் திருப்பினார். விரைவில் அரை சதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த அவருடன், மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த டென் டஸ்கதே தன் பங்களிப்பை சிறப்பாக செய்தார்.

இந்நிலையில் 16-வது ஓவரில் அணியின் ஸ்கோர் 127 இருந்தபோது டென் டஸ்கதே ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மனோஜ் திவாரி ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். 

அதேசமயம் மறுமுனையில் யூசுப் பதான் நிச்சயம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பை வீணடித்து வெளியேறினார் யூசுப் பதான். 18-வது ஓவரில் பார்னெல் வீசிய பந்தை தட்டிவிட்டு ரன் எடுக்க ஓடினார் பதான். 

அப்போது பாய்ந்து வந்த பந்தை எடுக்க பார்னெல் முயன்றபோது, அவர் கைக்கு கிடைக்காத வகையில், பந்தை காலால் தட்டிவிட்டு சென்றார். இதனால் பதான் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டார். அவர் 44 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ரன்கள் சேர்த்தார். அப்போது அணியின் ஸ்கோர் 148. 

அதன்பின்னர் 13 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றது. பாண்டேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பிளவு படுகிறதா கிரிக்கெட் உலகம்


சிவராமகிருஷ்ணன் விவகாரத்தில், இந்தியாவுக்கு இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதனால், கிரிக்கெட் உலகில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வீரர்கள் பிரதிநிதி கமிட்டி உறுப்பினராக, முதலில் ஆஸ்திரேலியாவின் டிம் மே தேர்வானார். இதில் குழப்பம் நடந்ததாக கூறிய ஐ.சி.சி., முன்னாள் இந்திய வீரர் சிவராமகிருஷ்ணன், தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தது. 

இதில் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) பங்கு இருப்பதாக, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு (எப்.ஐ.சி.ஏ.,) போன்றவை எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், தேர்தல் நடந்த விதம் குறித்து நன்னடத்தை குழு அதிகாரியை வைத்து விசாரிக்க ஐ.சி.சி., முடிவு செய்தது. 

பி.சி.சி.ஐ., கோபம்: ஐ.சி.சி.,யின் இம்முடிவு பி.சி.சி.ஐ.,க்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், வரும் சாம்பியன்ஸ் டிராபி (ஜூன் 6-23) தொடரில் இருந்து, இந்திய அணி விலகப் போவதாக செய்திகள் வெளியாகின. 

இந்தியாவுக்கு ஆதரவு: தவிர, இவ்விஷயத்தில் இந்தியாவுக்கு ஆசிய நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுகள் ஆதரவு தெரிவித்தன. 

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் போர்டின் செயலர் நிஷாந்தா ரணதுங்கா கூறுகையில்,"" ஆசிய அல்லது இந்திய அளவில் வீரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கிளம்பியது துரதிருஷ்டவசமானது. சிவராமகிருஷ்ணனுக்கு உள்ள கிரிக்கெட் திறமையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்,'' என்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் ஜக்கா அஷ்ரப் கூறுகையில்,"" இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் என, ஆசிய நாடுகள் ஒருமித்த கொள்கைகளை கொண்டவை. இதற்கு எதிராக ஏன் அவர்கள் உள்ளனர்,'' என்றார். 

பிளவுபடுகிறதா கிரிக்கெட்: இப்படி, ஆசிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாகவும், மேற்கு உலகின் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள், ஐ.சி.சி.,க்கு ஆதரவாகவும், கிளம்பியுள்ளன. இதனால், கிரிக்கெட் உலகம் பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மும்பை ரசிகர்கள் திருந்துவார்களா?

விராத் கோஹ்லியை மட்டுமல்ல, ஜாம்பவான் சச்சினையும் மும்பை ரசிகர்கள் கேலி செய்துள்ளனர். 

பெங்களூரு, மும்பை அணிகள் மோதிய பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டி மும்பையில் நடந்தது. இதில் பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லி, ரன் அவுட் கேட்டதற்கு, மும்பை ரசிகர்கள் "துரோகி' என்று குரல் எழுப்பினர். 

இதுகுறித்து கோபமடைந்த கோஹ்லி,"" நான் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் போது, இதே ரசிகர்கள் எனக்கு உற்சாகம் அளிப்பார்கள்,'' என்றார். 

மும்பை ரசிகர்களை பொறுத்தவரை எப்போதுமே அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார். இதற்கு சில உதாரணங்கள்...


கவாஸ்கர்:

கடந்த 1987 உலக கோப்பை காலிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக சதம் (103, நாக்பூர்) அடித்து இருந்தார் கவாஸ்கர். மும்பையில் நடந்த அரையிறுதியில் இங்கிலாந்தின் இலக்கை (254/6) துரத்தியது இந்திய அணி. துவக்க வீரர் கவாஸ்கர் 4 ரன்னுக்கு அவுட்டாகி, பெவிலியன் திரும்ப, மும்பை ரசிகர்கள் இவரை இகழ்ச்சியாக பேசினர்.


ரவி சாஸ்திரி:

கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதித்த சோபர்சின் சாதனையை முதன் முதலில் சமன் செய்தவர் ரவி சாஸ்திரி (1984-85). தொடர்ச்சியாக எட்டு சீசனில், ரஞ்சி கோப்பை வெல்லத் தவறிய மும்பை அணி, 1993-94ல் இவரது தலைமையில் தான் சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், இவரது மந்தமான ஆட்டத்தை பார்த்து வெறுத்துப் போன மும்பை ரசிகர்கள், ஒருமுறை இவரை பார்த்து சத்தம் எழுப்பினர். 


சச்சின்:

கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படுபவர் சச்சின். தனது 132வது டெஸ்ட் போட்டியை (2006) மும்பையில் விளையாடினார். இதன் முதல் இன்னிங்சில் ஒரு ரன்னுக்கு அவுட்டானார். இதனால், ஏமாற்றம் அடைந்த மும்பை ரசிகர்கள், அவரைப் பார்த்து சப்தமாக ஒலி எழுப்பி, வெறுப்படையச் செய்தனர். 


சைமன்ட்ஸ்:

பின் 2007ல் ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ சைமன்ஸ் குறித்து, சிலர் இனவெறியை தூண்டும் வகையில் கத்தினர். இப்பிரச்னையை பெரிதுபடுத்திய ஆஸ்திரேலிய நிர்வாகம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) புகார் அளித்தது. 

இஷாந்த் சர்மாவை தேர்வு செய்தது தவறு


ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஜூன் 6-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

வேகப்பந்து வீரர்களில் இஷாந்த் சர்மா, வினய்குமார், புவனேஸ்வர்குமார், உமேஷ்யாதவ், இர்பான் பதான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

இஷாந்த் சர்மாவை சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தேர்வு செய்தது தவறு என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான வாசிம்அக்ரம் கூறியுள்ளார். 

முன்னாள் கேப்டனான அவர் இது குறித்து கூறும்போது, சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி தேர்வை நான் நியாயப்படுத்த மாட்டேன். இஷாந்த் சர்மாவின் தேர்வு நியாயமற்றது. 

7 ஆண்டாக பந்து வீசும் அவரால் முறையாக யார்க்கர் பந்துகூட வீச முடியவில்லை என்றார். 

ஐ.பி.எல். போட்டியில் சமீபத்தில் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சை ரெய்னா விளாசி தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி மீது வழக்கு


மத உணர்வுகளை புண்படுத்தியதாக கேப்டன் தோனி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனி, 31. இவர் பல்வேறு பொருட்களுக்கு விளம்பர "மாடலாக' உள்ளார். 

இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஆங்கில பத்திரிகை ஒன்று, அட்டை படத்தில் தோனியை விஷ்ணு மாதிரி சித்தரித்து இருந்தது. 

கைகளில் பல விளம்பர பொருட்கள் இருந்தன. அதில், ஒரு கையில் "ஷூ' இடம் பெற, பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. 

இதற்கும் தோனிக்கும் சம்பந்தம் கிடையாது. சம்பந்தப்பட்ட பத்திரிகை தான் கற்பனையாக படத்தை வெளியிட்டு உள்ளது. 

ஆனால், இந்து கடவுள் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, பெங்களூருவை சேர்ந்த சமூக சேவகர் ஜெயகுமார், தோனி மீது வழக்கு தொடர்ந்தார். 

இதை ஏற்றுக்கொண்ட பெங்களூரு 6வது கூடுதல் பெருநகர நீதிபதி சூரி கான், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். 

இவ்வழக்கு மே 12ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சேவக்கை சுற்றி வளைத்த கும்பல்


போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சேவக் உள்ளிட்ட வீரர்களை, கும்பலாக சுற்றி வளைத்ததால், ஒரே நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பினர். 

பிரிமியர் கிரிக்கெட் தொடரில், டில்லி அணிக்காக விளையாடி வருகின்றனர் இந்திய வீரர்கள் சேவக், ஆஷிஸ் நெஹ்ரா மற்றும் நமன் ஓஜா. இவர்கள் டில்லியில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

ஹெல்மெட் அணிவது, பாதுகாப்பாக பயணம் செய்வது உள்ளிட்ட பல விதிகளை வலியுறுத்த இருந்தனர். இவர்களுடன், பள்ளி சிறுவர்களும் பங்கேற்றனர். இதற்காக "இந்தியா கேட்' பகுதிக்கு வந்த இவர்களை, பத்திரிகையாளர்கள் கும்பலாக சுற்றி வளைத்தனர். 

விலகிச் செல்லுமாறு போலீசார் மற்றும் வீரர்கள் கூறியும், அவர்கள் கேட்கவில்லை. அந்த இடத்தை விட்டு கிளம்பிய ஆஷிஸ் நெஹ்ரா, நமன் ஓஜா இருவரும் தங்களது காருக்குள் சென்று அமர்ந்தனர். 

தொடர்ந்து சேவக்கும் அவர்களுடன் செல்ல, அந்த இடத்தை விட்டு உடனடியாக கிளம்பினர். 

சேவக் கூறுகையில்,"" பயணங்களின் போது வேகமாக செல்ல வேண்டாம். சாலை விதிகளை மதிக்க வேண்டும். 

இதனால், விபத்துக்கள் நடப்பது குறையும்,'' என்றார்.

ஐ.பி.எல். போட்டியில் தெண்டுல்கர் சாதனை


ஐ.பி.எல். போட்டியில் அதிக பவுண்டரி அடித்தவர் என்ற சாதனையை தெண்டுல்கர் படைத்தார். கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 8 பவுண்டரி அடித்தார். 

இதன்மூலம் அவர் அதிக பவுண்டரி அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவர் 289 பவுண்டரி அடித்துள்ளார். 

ஐ.பி.எல். போட்டியில் அதிக பவுண்டரி அடித்த வீரர்களில் `டாப் 5' வீரர்கள் வருமாறு:- 

1. தெண்டுல்கர் (மும்பை): 289 பவுண்டரி- 76 மேட்ச். 

2. காம்பீர் (கொல்கத்தா): -281 (84). 

3. ஷேவாக் (டெல்லி): 254 (75). 

4. டிராவிட் (ராஜஸ்தான்): 252 (83). 

5. காலிஸ் (கொல்கத்தா): 236 (86).

200வது டெஸ்டில் சச்சின்


கடந்த 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் நீடித்து வரும் சச்சினுக்கு, 200 வது டெஸ்டில் பங்கேற்க தகுதி உள்ளது,'' என, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிரட் லீ தெரிவித்தார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. இவர் 198 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இன்னும் 2 போட்டிகளில் பங்கேற்கும் பட்சத்தில், 200வது டெஸ்டில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனை படைக்கலாம். 

இதுகுறித்து பிரட் லீ கூறியது:

சச்சின் ஓய்வு பெற வேண்டும் என, பல்வேறு "மீடியா' கூறுகின்றன. 198 டெஸ்டில் பங்கேற்றுள்ள ஜாம்பவானான இவருக்கு மரியாதை தரவேண்டும். உலகில் அதிக ரன்கள் சேர்த்த வீரர். ஆஸ்திரேலியாவின் பிராட்மேன், சச்சின் என, இதில் யார் சிறந்தவர் என்று கூற வரவில்லை. 

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் சச்சின் சிறந்தவர். ஏனெனில், நான் வளர்ந்த காலத்தில் இருந்து, இவர் தான் "ஹீரோ'. பேட்டிங்கில் தொடர்ந்து சச்சின் ரன்கள் சேர்க்கும் பட்சத்தில், ஓய்வை முடிவை அவரிடமே விட்டுவிட வேண்டும். இது தான் சரியானது. 

கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டில் நீடித்து வரும் சச்சினுக்கு, 200வது டெஸ்டில் பங்கேற்கும் அனைத்து உரிமைகளும் உள்ளது. இதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். ஏனெனில், இவருக்குப் பின் இந்த இலக்கை அடையும் வீரரை பார்க்க முடியாது. 

ஆஸ்திரேலிய மக்களால் மிகவும் நேசிக்கப்படும் வீரரான சச்சின், உலகளவில் வீரர்களுக்கு "ரோல் மாடலாக' உள்ளார். 

இன்னும் நீண்ட நாட்கள் இவர் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன். அதேநேரம், எப்போது ஓய்வு என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு பிரட் லீ கூறினார்.

IPL போட்டியில் 2000 ரன்னை கடந்த 10-வது வீரர் டிராவிட்


ஐ.பி.எல். போட்டியில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் கேப்டன் டிராவிட் அபாரமாக விளையாடி 40 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 58 ரன் எடுத்தார்.
 
இதில் 40-வது ரன்னை எடுத்தபோது ராகுல் டிராவிட் 2 ஆயிரம் ரன்னை தொட்டார். 82 ஆட்டத்தில் விளையாடி அவர் 2011 ரன் எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் 2 ஆயிரம் ரன்னை எடுத்த 10-வது வீரர் டிராவிட் ஆவார்.
 
இந்த 6-வது ஐ.பி.எல். தொடரில் கிறிஸ் கெய்ல், ஷேவாக், டோனி, விராட் கோலி ஆகியோர் 2 ஆயிரம் ரன்னை எடுத்து இருந்தனர். அந்த வரிசையில் தற்போது டிராவிட் இணைந்துள்ளார்.

டிராவிட் மீது அதிக மதிப்பு - பணிந்தார் காம்பிர்


டிராவிட் மீது எப்போதுமே அதிக மதிப்பு உண்டு. அவருக்கு எதிராக கடும் வார்த்தைகளை பயன்படுத்தவில்லை,'' என, காம்பிர் தெரிவித்தார்.

கோல்கட்டாவில் நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், காம்பிரின் கோல்கட்டா அணி, டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. 

இதில், ராஜஸ்தானின் வாட்சன், கோல்கட்டாவின் பிஸ்லா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காம்பிர், டிராவிட் உரசிக் கொள்ள, பிரச்னை பெரிதானது. 

இத்தொடரில் காம்பிர், இரண்டாவது முறையாக எதிரணி வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முன்னதாக பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லியுடன் சண்டையிட்டார். இதையடுத்து கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார். 

இது குறித்து "டுவிட்டர்' இணையதளத்தில் காம்பிர் வெளியிட்ட செய்தியில், "டிராவிட்டுடன் சொற்போரில் ஈடுபட்டது உண்மை. ஆனால், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. அவர் மீது எப்போதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன்,' என, குறிப்பிட்டுள்ளார்.

யுவராஜ், காம்பிர் நீக்கம் - ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் வாய்ப்பு


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங், கவுதம் காம்பிர் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. ஷிகர் தவான், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றனர்.

இங்கிலாந்தில், வரும் ஜூன் 6-23ம் தேதிகளில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

இத்தொடருக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி, கடந்த ஏப்., 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சேவக், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு "கல்தா' கொடுக்கப்பட்டது. 

இந்த உத்தேச அணியில் இருந்து, சிறந்த 15 பேர் கொண்ட இறுதி அணி, பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையில் இன்று மும்பையில் அறிவிக்கப்பட்டது.

இதில் சீனியர் வீரர்களான கவுதம் காம்பிர், யுவராஜ் சிங் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான், இர்பான் பதான், வினய் குமார், உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அணி விவரம்: தோனி (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், அஷ்வின், அமித் மிஸ்ரா, இர்பான் பதான், இஷாந்த் சர்மா, வினய் குமார், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

IPL 6 - புதிய சாதனை

பஞ்சாப் அணிக்கு எதிராக சதம் அடித்த ரெய்னா, பிரிமியர் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

இதன் மூலம் சர்வதேச "டுவென்டி-20' (தென் ஆப்ரிக்கா, 2010, 101 ரன்கள்) மற்றும் பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். 

இதற்கு முன் கெய்ல், பிரண்டன் மெக்கலம் என, இருவரும் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.

* நேற்று 53 வது பந்தில் சதத்தை எட்டிய ரெய்னா, பிரிமியர் வரலாற்றில் அதிவேக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் 14வது இடத்தை பெற்றார். முதல் மூன்று இடங்களில் கெய்ல் (30 பந்து), யூசுப் பதான் (37), கில்கிறிஸ்ட் (42) உள்ளனர். 

* ஆறாவது பிரிமியர் தொடரில் அடிக்கப்பட்ட மூன்றாவது சதம் இது. இதற்கு முன் கெய்ல் (175), வாட்சன் (101) சதம் அடித்து இருந்தனர். 

* ஒட்டுமொத்த பிரிமியர் வரலாற்றில் அடிக்கப்பட்ட 27வது சதம் இது. 

ஐ.பி.எல். போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்


6-வது ஐ.பி.எல். போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதுபற்றிய ஒரு பார்வை:-

கிறிஸ்கெய்ல் (பெங்களூர்)

ஐ.பி.எல். போட்டியில் தொடர்ந்து 3-வது முறையாக கிறிஸ்கெய்ல் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த இரண்டு ஐ.பி.எல். போட்டியிலும் அதிக ரன் எடுத்த வீரர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். இந்த முறையும் அவர் தான் முன்னிலையில் உள்ளார். 10 ஆட்டத்தில் 484 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக்ரேட் 166.89. 36 சிக்சர் அடித்தும் முதலிடத்தில் உள்ளார்.

புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 175 ரன் குவித்து பல்வேறு சாதனைகளை படைத்தார். அவர் அதிரடியாக ஆடினால் பவுலர்களின் நிலை திண்டாட்டம் தான். பெங்களூர் அணியின் துருப்பு சீட்டாக இருக்கும் அவர் சிறந்த அதிரடி வீரராக ஜொலிக்கிறார்.

இதேபோல வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ராம்பால் பெங்களூர் அணியின் முன்னணி பவுலர்களில் ஒருவராக திகழ்கிறார். 6 ஆட்டத்தில் 10 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

சுனில் நரீன் (கொல்கத்தா)

இந்த ஐ.பி.எல். போட்டி தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் 2-வது இடத்தில் உள்ளார். 9 ஆட்டத்தில் 15 விக்கெட் எடுத்துள்ளார். சிறந்த சுழற்பந்து வீரராக உள்ளார். கடந்த ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார். இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் சிரமப்படுகிறார்கள்.

பிராவோ (சென்னை)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் அடித்து மேட்ச் வின்னராக ஜொலித்தார். 15 விக்கெட் கைப்பற்றியுள்ளார். சிறந்த பீல்டரும் ஆவார். களத்தில் விளையாடுவதில் மட்டுமல்ல நடனம் ஆடுவதிலும் இவர் ரசிகர்களை கவர்ந்தவர்.

போலார்ட், சுமித் (மும்பை)

மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடும் அதிரடி வீரர்களில் ஒருவர் ஆவார். ஆல்ரவுண்டர் வரிசையில் உள்ளார். மிகசிறந்த பீல்டர் ஆவார். 9 ஆட்டத்தில் 201 ரன் எடுத்துள்ளார். ஸ்டிரைக்ரேட் 144.60 ஆகும். 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான இவரது அதிரடி ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.

இதேபோல தொடக்க வீரர் சுமித்தும் அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். கொல்கத்தா, பெங்களூர் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடினார். பாண்டிங் இடத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

(இதேபோல ஐதராபாத் அணியில் உள்ள டாரன்சேமி, ராஜஸ்தான் அணியில் உள்ள கெவன் கூப்பர் ஆகிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். 20 ஓவர் உலககோப்பையில் தற்போதைய சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.)

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி தேர்வு எப்போது?


சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி மே 4ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட உள்ளது.

இங்கிலாந்தில், வரும் ஜூன் 6-23ம் தேதிகளில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 

லீக் சுற்றின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் தலா முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், வரும் ஜூன் 19, 20ம் தேதிகளில் நடக்கவுள்ள அரையிறுதியில் விளையாடும். பைனல், ஜூன் 23ம் தேதி பர்மிங்காமில் நடக்கவுள்ளது.

"ஏ' பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து அணிகளும், "பி' பிரிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. வரும் ஜூன் 6ம் தேதி கார்டிப் நகரில் நடக்கவுள்ள தொடரின் முதல் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. அதன்பின் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் (ஜூன் 11), பாகிஸ்தான் (ஜூன் 15) அணிகளுடன் விளையாடுகிறது.

இத்தொடருக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி, கடந்த ஏப்., 6ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சேவக், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு "கல்தா' கொடுக்கப்பட்டது. இந்த உத்தேச அணியில் இருந்து, சிறந்த 15 பேர் கொண்ட இறுதி அணி, பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையில் வரும் மே 4ம் தேதி மும்பையில் தேர்வு செய்யப்பட உள்ளது.


இந்திய உத்தேச அணி விவரம்: முரளி விஜய், ஷிகர் தவான், காம்பிர், உன்முக்த் சந்த், கோஹ்லி, யுவராஜ் சிங், ரெய்னா, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, ரகானே, அம்பதி ராயுடு, ஜாதவ், தோனி, விரிதிமான் சகா, தினேஷ் கார்த்திக், அஷ்வின், அமித் மிஸ்ரா, ஜடேஜா, சேனா, பர்வேஸ் ரசூல், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், டிண்டா, உமேஷ் யாதவ், ஷமி அகமது, இர்பான் பதான், வினய் குமார், பிரவீண் குமார், ஈஷ்வர் பாண்டே, சித்தார்த் கவுல்.