தேர்வு குழுவினரால் என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. இடது கை ஆட்டக்காரரான இவர் தெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் ஆவார். இருவரும் பள்ளி போட்டியில் உலக சாதனை படைத்து இருந்தனர்.ஆனால் தெண்டுல்கர் அளவுக்கு காம்ப்ளியால் சர்வதேச போட்டிகளில் சாதிக்க முடியவில்லை. சமீபத்தில் டெலிவிஷன் நிகழ்ச்சியில் பேட்டி அளித்த காம்ப்ளி தான் ஆடிய காலத்தில் தெண்டுல்கர் எதுவும் உதவி செய்யவில்லை என்று கூறினார். பின்னர் அதை மறுத்தார். கிரிக்கெட் வாரியம் மீதும் பாய்ந்து இருந்தார்.

இந்த நிலையில் தேர்வு குழுவினரால் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக காம்ப்ளி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

சர்வதேச போட்டியில் அறிமுகமானபோது சிறப்பாக ஆடினேன். ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு நீக்கப்பட்டேன். பின்னர் உலக கோப்பையில் இடம் பெற்றேன். அதன்பிறகு மீண்டும் நீக்கப்பட்டேன். இப்படி தொடர்ந்து நடந்தது.

அணியில் இருந்து நான் நீக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் தேர்வு குழுவினர் சொல்லவில்லை. இன்றுவரை என்னிடம் அதுபற்றி சொல்லவில்லை. தேர்வு குழுவினர் எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டனர்.

நான் ஆடிய காலத்தில் பேட்டிங் வரிசையில் எனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. 3-வது வீரர்தான் எனது இடம். ஆனால் 6-வது அல்லது 7-வது வீரராக நான் களம் இறக்கப்பட்டேன். அந்த வரிசையில் நான் அதிக ஸ்கோர் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அது எப்படி முடியும்?

தற்போதுள்ள இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

இவ்வாறு காம்ப்ளி கூறியுள்ளார். அவர் 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

காம்ப்ளி மராட்டிய கிரிக்கெட் சங்க தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

0 comments:

Post a Comment