சரியாக கணித்த சேவக்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்கும் திறமை என்னிடம் உள்ளது என இந்திய வீரர் சேவக் கணித்தார்,'' என, ஆஸ்திரேலியாவின் வார்னர் கூறினார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி, பிரிஸ்பேனில் நாளை துவங்குகிறது.

முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில், ஷேன் வாட்சனுக்குப் பதிலாக இளம் வீரர் டேவிட் வார்னர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.


இது குறித்து வார்னர் கூறியது:

டெஸ்ட் தொடருக்கான அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் முழுதிறமையையும் வெளிப்படுத்தி சாதிப்பேன். கடந்த 2009ல் ஐ.பி.எல்., போட்டியில், டில்லி அணிக்காக விளையாடினேன்.

அப்போது கேப்டனாக இருந்த சேவக், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக வரும் திறமை என்னிடம் உள்ளதாக சொன்னார். தவிர, போட்டியின் போது, அனைத்து பந்துகளை அடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் இருக்கும்.

அதனை கட்டுப்படுத்தி எந்த பகுதியில் அடித்தால் அவுட்டாகாமல் இருப்போம் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

சேவக் உண்மையிலேயே சிறந்த வீரர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடைய விளையாட்டை பார்த்து வருகிறேன். அவருடன் இணைந்து பயிற்சி செய்த போது, எந்தளவு அவர் திறமையானவர் என்பதை அறிந்து கொண்டேன்.

இவ்வாறு வார்னர் கூறினார்.

அஷ்வினுக்கு விருது

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் அஷ்வினுக்கு, திலீப் சர்தேசாய் விருது வழங்கப்படுகிறது.

சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில், முதன் முதலாக வாய்ப்பு பெற்றவர் அஷ்வின், 25. இதில் 22 விக்கெட் கைப்பற்றிய இவர், பேட்டிங்கில் ஒரு சதம் உட்பட 121 ரன்கள் எடுத்து, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில்,"" வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய அஷ்வினுக்கு, 2011-12ம் ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 5 லட்சம் மற்றும் கோப்பை அடங்கிய இந்த விருது, வரும் டிசம்பர் 10ம் தேதி சென்னையில் நடக்கும், பி.சி.சி.ஐ., விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

யுவராஜுக்கு என்ன பிரச்னை?

யுவராஜ் சிங் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இருமலும் வாந்தியும் தொடர்ந்து இருந்தது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் "கேன்சர்' என்று டாக்டர்கள் தெரிவித்த போது, அதிர்ந்து போனோம்.

ஆனாலும், வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்காத யுவராஜ், மிக விரைவில் மீண்டான்,''என, தாயார் ஷப்னம் சிங் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ். சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில், நமது அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இத்தொடரின் போதே இவரது நுரையீரலில் பிரச்னை இருப்பதாக செய்திகள் வெளியாகின.

தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் யுவராஜ் சிங்கிற்கு "கேன்சர்' நோய்க்கான அறிகுறிகள் இருந்ததாக அவரது தாயார் ஷப்னம் சிங் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.


இது குறித்து ஷப்னம் கூறியது:

இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரின் போதே யுவராஜுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது. கடுமையான இருமல் மற்றும் வாந்தி இருந்தது. உள்ளூரில் சாதிக்க வேண்டும் என்ற நெருக்கடி காரணமாக இத்தகைய பிரச்னைகள் இருக்கலாம் என்று நினைத்தோம்.

இந்திய அணி கோப்பை வென்ற பின், முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்தோம். அப்போது இடது நுரையீரலில் "கோல்ப்' பந்து அளவுக்கு சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இது "கேன்சர்' நோயாக இருக்கலாம் என்று டாக்டர்கள் முதலில் கூறிய போது அதிர்ந்து போனோம். ஏனென்றால் இதற்கு முன்பும் யுவராஜுக்கு இருமல் வந்துள்ளது. அப்போது தூசியால் ஏற்பட்ட "அலர்ஜி' என்று தான் சொன்னார்கள்.


துணிச்சலானவர்:

ஆரம்பத்தில் யுவராஜ் கடும் வலியால் அவதிப்பட்டான். அவனை பார்ப்பதற்கே வேதனையாக இருந்தது. அவனது அறையில் முடங்கினான். தனது நோய் பற்றி யாருக்கும் தெரியக் கூடாது என நினைத்தான். ஆனாலும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. மருத்துவ அறிக்கையை படித்த பின்,""இந்த அறிக்கையை நம்பவில்லை.

நான் நன்றாக இருப்பதாக, எனது உள்ளூணர்வு சொல்கிறது,''என்றான். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டான். ஒரு "ஸ்கேன்' மாறி இன்னொரு "ஸ்கேன்' செய்தான்.

அவனது முகத்தில் புன்னகையை காண முடிந்தாலும், கண்களில் மரண பயம் இருந்தது. எனக்கு அவ்வப்போது நம்பிக்கை அளித்தான். ""நான் துணிச்சலான பையன். இந்த பிரச்னையில் இருந்து கண்டிப்பாக மீள்வேன்,''என்று உறுதியாக சொன்னான்.


நம்பிக்கை வெற்றி:

இறுதியில், கடந்த அக்டோபரில் அவனது தன்னம்பிக்கைக்கு வெற்றி கிடைத்தது. மூன்றாவது முறையாக செய்யப்பட்ட "பயோப்சி' சோதனையில் அவனது நுரையீரலில் இருந்த கட்டி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத ஒன்று என உறுதி செய்யப்பட்டது.

முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால், விரைவில் மீண்டு விடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை மேற்கொண்டான். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற போதும், முதலிரண்டு போட்டிகளில் சோபிக்க முடியவில்லை. இதன் காரணமாக மூன்றாவது டெஸ்டில் நீக்கப்பட்டான்.

இது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படமாட்டான் என்பதை உணர்த்தியது. இது தான் இவனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகவும் சோகமான நாளாக அமைந்தது. அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளான்.

இவ்வாறு ஷப்னம் சிங் கூறினார்.

ஹர்பஜனுக்கு மீண்டும் கைவிரிப்பு

ஆஸ்திரேலியா செல்லும் டெஸ்ட் அணியில் ஹர்பஜனுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ரோகித் சர்மாவுடன் ஜாகிர் கான், பிரவீண் குமாரும் இந்திய அணியில் இடம் பெற்றனர்.

வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி நான்கு டெஸ்ட், இரண்டு "டுவென்டி-20' மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இலங்கை பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் டிச., 26ம் தேதி, மெல்போர்னில் துவங்குகிறது.

அடுத்த மூன்று போட்டிகள் சிட்னி (2012, ஜன., 3-7), பெர்த் (ஜன., 13-17), அடிலெய்டில் (ஜன., 24-28) நடக்கவுள்ளது.

இதற்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் ஜக்தலே அறிவித்தார். கேப்டன் தோனி தலைமையிலான இந்த அணியில் காம்பிர், சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகியோர் வழக்கம் போல இடம் பெற்றுள்ளனர். சேவக்கிற்கு துணைக் கேப்டன் அந்தஸ்து தரப்பட்டுள்ளது.


யுவராஜ் இல்லை:

"மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நுரையீரல் பிரச்னை காரணமாக யுவராஜ் சிங், இத்தொடருக்கான அணியிலும் சேர்க்கப்படவில்லை. ராகுல் சர்மா நீக்கப்பட்டார்.


சந்தேகத்தில் ஜாகிர்:

வேகப்பந்து வீச்சு பிரிவில் இஷாந்த் சர்மா, பிரவீண் குமார் ஆகியோருடன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய உமேஷ் யாதவ், வருண் ஆரோனும் இடம் பெற்றனர். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜாகிர் கான் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரஞ்சி தொடரில் இவர் உடற் தகுதியை நிரூபிக்கவில்லை என்றால், அணியில் இருந்து நீக்கப்படுவார்.


ஹர்பஜன் பரிதாபம்:

மோசமான "பார்ம்' காரணமாக சமீபத்திய தொடர்களில் புறக்கணிக்கப்பட்டு வரும் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் என்பதால், எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய சுழல் சூறாவளிகளாக உருவெடுத்துள்ள அஷ்வின், பிரக்யான் ஓஜா இருவரும் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

கூடுதல் விக்கெட் கீப்பராக பார்த்திவ் படேல் இடம் பெறலாம் என்ற நிலையில், எதிர்பாராதவிதமாக சகா வாய்ப்பை தட்டிச் சென்றது, பெரிய ஆச்சரியமாக இருந்தது.


அணி விவரம்:

தோனி (கேப்டன்), சேவக் (துணைக் கேப்டன்), காம்பிர், டிராவிட், சச்சின், லட்சுமண், விராத் கோஹ்லி, அஷ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன், ரோகித் சர்மா, பிரக்யான் ஓஜா, பிரவீண் குமார், ரகானே, சகா, ஜாகிர் கான்.

சச்சின், தோனிக்கு ஓய்வு * சேவக் கேப்டன்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், சச்சின், தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சேவக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி வரும் 29ம் தேதி கட்டாக்கில் நடக்கிறது.

மற்ற போட்டிகள் விசாகபட்டினம் (டிச., 2), ஆமதாபாத் (டிச., 5), இந்தூர் (டிச., 8), சென்னை (டிச., 11) ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது. முதல் மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்களை, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தேர்வுக்குழு நேற்று அறிவித்தது.


சச்சின் இல்லை:

இதில் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், கேப்டன் தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை தொடருக்கு பின், இதுவரை ஒரு ஒருநாள் போட்டியில் கூட சச்சின் விளையாடவில்லை.

இதன்மூலம், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 100வது சர்வதேச சதத்தை நழுவவிட்ட சச்சின், ஒருநாள் தொடரில் அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.


சேவக் கேப்டன்:

இந்த ஆண்டு இதுவரை 11 டெஸ்ட், 24 ஒருநாள், மூன்று சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் விளையாடிய கேப்டன் தோனி, ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். தொடர்ச்சியாக விளையாடி வரும் இவருக்கு ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கேப்டன் பொறுப்பு அதிரடி துவக்க வீரர் சேவக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஏழு போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள சேவக், நான்கு வெற்றி, மூன்று தோல்வியை பெற்றுத் தந்துள்ளார். துணைக் கேப்டனாக மற்றொரு துவக்க வீரர் கவுதம் காம்பிர் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பருக்கு பார்த்திவ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


யுவராஜ் காயம்:

சமீபத்திய உலக கோப்பை தொடரில் "தொடர் நாயகன்' விருது வென்ற யுவராஜ் சிங், போதிய உடற்தகுதி இல்லாததால், தாமாகவே விலகிக் கொண்டார். விரைவில் இவர், நுரையீரல் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு "ஆப்பரேஷன்' செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக "பார்மின்றி' தவித்து வரும் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் தொடரில் சுழலில் அசத்திய அஷ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரக்யான் ஓஜா தேர்வு செய்யப்படவில்லை. இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக ராகுல் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ரகானே வாய்ப்பு:

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்திய அஜின்கியா ரகானே, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சில் நம்பிக்கை அளித்த வருண் ஆரோன், உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் பிரவீண் குமார், வினய் குமார் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

15 பேர் கொண்ட இந்திய அணி: சேவக் (கேப்டன்), காம்பிர் (துணைக் கேப்டன்), பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, ரவிந்திர ஜடேஜா, பிரவீண் குமார், வினய் குமார், வருண் ஆரோன், உமேஷ் யாதவ், அஷ்வின், ராகுல் சர்மா.

2-வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தரவரிசையில் இந்திய அணி 117 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கண்ட படுதோல்வியால் முதலிடத்தை இழந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது இந்திய அணி.

இந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்றதன் மூலம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோல்வி கண்டதும், இந்திய அணியின் தரவரிசை முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் ஆகும்.

2-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி 116-வது புள்ளிகளுடன் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி 125 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

4-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (105 புள்ளிகள்), 5-வது இடத்தில் இலங்கையும் (99), 6-வது இடத்தில் பாகிஸ்தானும் (98) உள்ளன.

பரிசு மழையில் இந்திய கபடி சாம்பியன்கள்

உலக கோப்பை வென்ற இந்திய கபடி வீரர், வீராங்கனைகள் பரிசு மழையில் நனைகின்றனர். ஆண்கள் அணிக்கு ரூ. 2 கோடி பரிசுடன் அரசு வேலையும் காத்திருக்கிறது.

பஞ்சாப்பில், ஆண்களுக்கான 2வது உலக கோப்பை கபடி தொடர் நடந்தது. நேற்று முன்தினம் லூதியானாவில் நடந்த பைனலில் இந்தியா, கனடா அணிகள் மோதின.

இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 63-25 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக (2010-11) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 2 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த கனடாவுக்கு, ரூ. ஒரு கோடி பரிசு வழங்கப்பட்டது. இதுதவிர, இளம் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில், பாகிஸ்தான் அணி 60-22 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.


பெண்கள் அபாரம்:

முன்னதாக நடந்த பெண்களுக்கான உலக கோப்பை கபடி பைனலில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் அசத்தலாக ஆடிய இந்திய அணி 44-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ. 25 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இத்துடன், அனைத்து வீராங்கனைகளுக்கும் அரசு வேலை வழங்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.

லட்சுமணுக்கு தேவை 45 நிமிடங்கள்

ஐந்தாவது வீரராக களமிறங்குவது லட்சுமணுக்கு சாதகம். பூஜைகளை முடித்து விட்டு "பேட்டிங்கிற்கு' தயாராக நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்,''என, சேவக் தெரிவித்துள்ளார்.

மும்பையில் "சியட்' சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா நடந்தது. இதில், இங்கிலாந்தின் டிராட்(சிறந்த வீரர்+பேட்ஸ்மேன்), இந்தியாவின் கோஹ்லி(இளம் வீரர்), ரெய்னா("டுவென்டி-20' வீரர்), வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வால்ஷ்(வாழ்நாள் சாதனையாளர்) உள்ளிட்டோர் விருதுகள் பெற்றனர்.

தவிர, லட்சுமண்(இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவை), சேவக்(சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டு நிறைவு) சிறப்பு விருதுகளை பெற்றனர். அப்போது லட்சுமண் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட சேவக் கூறியது:

வீரர்களுக்கான "டிரஸ்சிங் ரூமில்' லட்சுமண் பதட்டப்படாமல் இருப்பார். "பேட்டிங்' வரிசையில் ஐந்தாவது வீரராக களமிறங்குவதால், இவருக்கு போதுமான நேரம் கிடைப்பதுண்டு. இரண்டு முறை "ஷவரில்' குளித்து விட்டு, பூஜைகள் செய்வார்.

தொடர்ந்து சிறிய பயிற்சிகள் மேற்கொள்வார். இவற்றை எல்லாம் முடித்து, "பேட்டிங்' செய்ய உடல் அளவில் தயாராக இவருக்கு எப்படியும் 45 நிமிடங்கள் தேவைப்படும். இப்படி "ரிலாக்சாக' இருப்பது தான் இவரது அமைதியான குணத்தின் ரகசியம்.

லட்சுமண் போன்ற நல்ல நண்பர் கிடைக்க, கொடுத்து வைத்திருக்க வேண்டும். மனதில் பட்டதை நேர்மையாக சொல்வார். உதாரணமாக, 2001ல் அப்போதைய கேப்டன் கங்குலி, பயிற்சியாளர் ஜான் ரைட் ஆகியோர் என்னை துவக்க வீரராக களமிறங்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அந்த நேரத்தில் குறுக்கிட்ட லட்சுமண்,"இதனை ஒருபோதும் ஏற்க வேண்டாம். இத்தவறை ஏற்கனவே செய்த நான் சிக்கலில் மாட்டிக் கொண்டேன். துவக்க வீரராக களமிறங்க முடிவு செய்தால், உனது கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு தான்' என எச்சரித்தார்.

இதற்கு பதில் அளித்த நான்,"தற்போது "ரிஸ்க்' எடுக்க அனுமதியுங்கள். இதில், வெற்றி கிடைத்தால் நல்லது. தவறினால், உங்களுடன் "மிடில் ஆர்டரில்' இடம் கிடைக்க போட்டியிடுவேன்,'என்றேன்.


லட்சுமண் வழங்கிய ஆலோசனைகள் எனக்கு உதவிகரமாக அமைந்துள்ளன. இதற்காக, எனது பரிசுத் தொகையை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று கவாஸ்கர் "ஜாலியாக' குறிப்பிட்டார். இதனை ஏற்க இயலாது. ஏனென்றால் அவருக்கு பெரிய தொகையை கையாளத் தெரியாது. அவரது பரிசு தொகையை என்னிடம் வழங்கினால், நல்ல முறையில் முதலீடு செய்வேன்.


அதிரடி ஆட்டம்:

இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் விளையாட துவங்கிய காலத்தில் அதிரடியாக ரன் எடுக்க வேண்டும் என்று தான் அறிவுறுத்தினர். போட்டிக்கு முன் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் ஆய்வு செய்ய மாட்டேன்.

களமிறங்கிய முதல் நிமிடத்தில் இருந்து, அனைத்து பந்திலும் ரன் எடுக்க முற்படுவேன். "பேட்' செய்யும் போது எனக்கு பிடித்த கி÷ஷார் குமாரின் "சலா ஜாத்தா ஹூன்' என்ற பாடலை பாடுவது வழக்கம்.
இவ்வாறு சேவக் கூறினார்.

நூறாவது சதத்துக்கு, 100 தங்க காசுகள்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், சச்சின் தனது 100வது சதத்தை அடித்தால், மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) சார்பில் 100 தங்க காசுகள் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், இதுவரை 48 ஒருநாள், 51 டெஸ்ட் என, மொத்தம் 99 சதம் அடித்துள்ளார்.

கடைசியாக கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில், சதம் அடித்தார்.

இதற்குப் பின் தனது நூறாவது சதத்தை அடிப்பதில் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ஏமாற்றினார். இதனால் சச்சின் தனது சொந்த ஊரான மும்பையில் இந்த இலக்கை எட்டுவார் என்று நம்பப்படுகிறது.

ஒருவேளை மும்பையில் சாதித்தால், எம்.சி.ஏ., சார்பில் சச்சினுக்கு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்.சி.ஏ., இணைச் செயலர் நிடின் தலால் கூறியது:

கோல்கட்டா டெஸ்டில் சச்சின், சர்வதேச அளவிலான நூறாவது சதத்தை எட்டினால், அவருக்கு 100 தங்க காசுகள் கொடுக்க, பெங்கால் கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே உறுதி அளித்து இருந்தது. ஆனால் சச்சின் ஏமாற்றினார்.

இதையடுத்து தனது சொந்த ஊரான மும்பையில் சச்சின், இந்த சாதனை படைத்தால், அவருக்கு 100 தங்க காசுகள் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு நிடின் தலால் கூறினார்.

காம்ப்ளி கருத்து - பி.சி.சி.ஐ., எதிர்ப்பு

உலக கோப்பை போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்ற காம்ப்ளியின் கருத்து முட்டாள்தனமானது. இதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.

கடந்த 1996ல் உலக கோப்பை தொடர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கையில் நடந்தது. இத்தொடரில் கோல்கட்டாவில் நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் விளையாடிய இலங்கை அணி, 50 ஓவரில் 251/8 ரன்கள் எடுத்தது.

பின் களமிறங்கிய இந்திய அணி 98 ரன்னுக்கு ஒரு விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்து, பின் 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் என தடுமாறியது. இதனால், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தண்ணீர் பாட்டில், கற்களை கொண்டு எறிந்தனர். இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டு, இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.


திடீர் புகார்:

இந்த போட்டி குறித்து அப்போது களத்தில் இருந்த வினோத் காம்ப்ளி கூறுகையில்,"" இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் ஏதோ நடந்துள்ளது. இதனால் தான் இந்திய வீரரகள் வரிசையாக அவுட்டாகினர். இது அதிர்ச்சியாக இருந்தது,'' என, திடீரென 15 ஆண்டுகள் கழித்து இப்போது தெரிவித்துள்ளார்.


பி.சி.சி.ஐ., எதிர்ப்பு:

காம்ப்ளியின் இந்த கருத்துக்கு பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில்,"" இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒருவேளை பிரச்னை இருந்தது என்றால், இதை அவர் இத்தனை ஆண்டுகாலமாக தெரிவிக்காதது ஏன்.

இவரது கருத்து முட்டாள்தனமானது. இதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. இதற்கு யாரும் முக்கியத்துவம் தரவேண்டாம்,'' என, தெரிவித்துள்ளது.


அசார் எதிர்ப்பு:

இதனிடையே காம்ப்ளி கருத்து குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசார் கூறியது:

காம்ப்ளி என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். அவருடைய இந்த செயல் முட்டாள்தனமாக உள்ளது. எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் இது போன்ற செயலில் இறங்குவது நல்லதல்ல.

இவரது செயல், அப்போது அணியில் விளையாடிய அனைத்து வீரர்களையும் இழிவு படுத்துவதாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது. "மேட்ச் பிக்சிங்' நடந்திருப்பதற்கு ஒரு போதும் வாய்ப்பில்லை.


தோல்விக்கு காரணம்:

போட்டியின் போது, பேட்டிங் தேர்வு செய்வதா அல்லது பீல்டிங் செய்வதா என்பது அனைத்து வீரர்களின் முன்னிலையில் தான் முடிவு எடுக்கப்படும். அப்போது காம்ப்ளி தூங்கி கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை.

அந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு எங்களின் மோசமான ஆட்டம் தான் காரணம். "டாஸ்' வென்று பீல்டிங் எடுத்தது தான் காரணமல்ல. "மேட்ச் பிக்சிங்' குறித்து ஆதராம் எதுவும் இருந்தால் அதனை தாராளமாக இவர் வெளியிடலாம்.

இவ்வாறு அசார் கூறினார்.

சதத்தில் அரைசதம்

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' இன்னும் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில், "சதத்தில் சதம்' கடந்து சாதிக்கலாம். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சதம் அடித்துள்ள வீரர்கள் வரிசையில் சச்சின் (99 சதம்) உள்ளார்.

இவர், டெஸ்டில் 51, ஒருநாள் போட்டியில் 48 சதம் அடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக உள்ள ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், மொத்தம் 69 சதம் அடித்துள்ளார்.

இவர், டெஸ்டில் 39, ஒருநாள் போட்டியில் 30 சதம் அடித்துள்ளார். 17 சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் விளையாடிய இவர், ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

இரண்டு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.

"சதத்தில் அரைசதம்' கடந்த "டாப்-4' பேட்ஸ்மேன்கள்:

வீரர் போட்டி சதம்

சச்சின் (இந்தியா) 636 99

பாண்டிங் (ஆஸி.,) 542 69

காலிஸ் (தெ.ஆ.,) 479 57

லாரா (வெ.இ.,) 430 53


* இந்தியாவின் டிராவிட் (47 சதம்), இலங்கையின் மகிளா ஜெயவர்தனா (45 சதம்), இலங்கையின் ஜெயசூர்யா (42 சதம்), ஆஸ்திரேலியாவின் ஹைடன் (40 சதம்) ஆகியோர் 40 அல்லது அதற்கு மேல் சதம் அடித்துள்ளனர்.

இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடிய டேரன் பிராவோவின் சதம் வீணானது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது டெஸ்ட் கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.

முதல் இன்னிங்சில் லட்சுமண் (176*), தோனி (144), டிராவிட் (119) கைகொடுக்க இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 631 ரன்கள் எடுத்து "டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு சுருண்டு "பாலோ-ஆன் பெற்றது.

பின், 478 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. டேரன் பிராவோ (38), சந்தர்பால் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.


பிராவோ அபாரம்:

இன்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சந்தர்பால் (47) பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. மறுமுனையில் அபாரமாக ஆடிய டேரன் பிராவோ, டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்ததை பதிவு செய்தார்.

இவருக்கு ஒத்துழைப்பு தந்த சாமுவேல்ஸ், அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த போது பிராவோ (136) அவுட்டானார்.


சாமுவேல்ஸ் ஆறுதல்:

அடுத்து வந்த கார்ல்டன் பாக் (3) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய சாமுவேல்ஸ் (84), அஷ்வின் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் டேரன் சமி (32) பெரிய அளவில் சோபிக்கவில்லை. தேவேந்திர பிஷூ (0) ஏமாற்றினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 463 ரன்களுக்கு "ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிடல் எட்வர்ட்ஸ் (15) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 4, இஷாந்த் சர்மா, பிரக்யான் ஓஜா, அஷ்வின் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

லட்சுமண், தோனி சதம் - வலுவான நிலையில் இந்தியா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில், லட்சுமண், கேப்டன் தோனி சதம் அடித்து தூள் கிளப்ப, இந்திய அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

டில்லியில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.

டிராவிட் (119) சதம் அடித்து கைகொடுக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 346 ரன்கள் எடுத்திருந்தது. லட்சுமண் (73) அவுட்டாகாமல் இருந்தார்.


லட்சுமண் அபாரம்:

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, லட்சுமண் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார். அபாரமாக ஆடிய லட்சுமண், டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை பதிவு செய்தார். இது வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நான்காவது சதம். தவிர இது, ஈடன் கார்டனில் இவரது ஐந்தாவது சதம்.


தோனி அசத்தல்:

யுவராஜ் சிங் (25) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பின், லட்சுமணுடன் இணைந்து அபாரமாக ஆடிய கேப்டன் தோனி டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இது, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இவரது முதல் சதம்.

100வது சதத்தை மீண்டும் நழுவவிட்டார் சச்சின்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 38 ரன்களுக்கு அவுட்டான இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் "சதத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை நழுவவிட்டார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது டெஸ்ட், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று துவங்கியது. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.


காம்பிர் அரைசதம்:

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த போது சேவக் (38) அவுட்டானார். அடுத்து வந்த அனுபவ வீரர் டிராவிட்டுடன் இணைந்த காம்பிர், டெஸ்ட் அரங்கில் தனது 17வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 103 பந்தில் 65 ரன்கள் (8 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.


டிராவிட் அபாரம்:

பின், "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுடன் இணைந்த டிராவிட், டெஸ்ட் அரங்கில் தனது 62வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100வது சதத்தை எதிர்நோக்கி விளையாடிய சச்சின் (38) மீண்டும் ஒருமுறை ஏமாற்றினார்.

இதன்மூலம் சச்சினின் "சதத்தில் சதம் அடிக்கும் கனவு நீடிக்கிறது. இவர், கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில் தனது 99வது சர்வதேச சதத்தை (48 ஒருநாள்+51 டெஸ்ட்) அடித்தார்.

அதன்பின் இவர் விளையாடிய நான்கு ஒருநாள் (2, 53, 85, 18 ரன்கள்), ஆறு டெஸ்ட் (34, 12, 16, 56, 1, 40, 23, 91, 7, 76, 38 ரன்கள்) போட்டியில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தவிக்கிறார்.

சுழல் ஆதிக்கம் கோல்கட்டாவில் தொடருமா?

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட், நாளை கோல்கட்டாவில் துவங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியை போல, இங்கும் இந்திய அணியின் சுழல் ஆதிக்கம் தொடருமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியில் பிரக்யான் ஓஜா, ஹர்பஜனுக்குப் பதில் வாய்ப்பு பெற்ற அஷ்வின் இருவரும் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர். இதில், 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான வீரர்களில் இரண்டாவது சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார்.


புதிய ஜோடி:

இந்தியாவின் கும்ளே - ஹர்பஜன் சிங் ஜோடி, அணியின் "மேட்ச் வின்னர்களாக' இருந்துள்ளனர். கும்ளே 2008ல் ஓய்வு பெற்றார். ஹர்பஜன் சமீபகாலமாக "பார்ம்' இன்றி தவித்து வருகிறார். இப்படி ஒரு இக்கட்டான நிலையில், பிரக்யான் ஓஜாவும் (7 விக்.,), அஷ்வினும் இணைந்து "மேட்ச் வின்னர்களாக' சரியான நேரத்தில் ஜொலித்துள்ளனர்.


பிரசன்னா பாராட்டு:

இதனிடையே அஷ்வினுக்கு இன்று திருமணம் நடக்கிறது. இவரை பாராட்டிய இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் பிரசன்னா கூறுகையில், ""டில்லி டெஸ்டில் அஷ்வின் பவுலிங் என்னை கவர்ந்து விட்டது.

பந்தை எவ்வித குறையும் இல்லாமல், சரியான அளவு மற்றும் வேகத்தில் வீசுகிறார். தனது உயரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு, பந்தை நன்கு சுழற்றுகிறார்,'' என்றார்.

இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை கோல்கட்டாவில் துவங்குகிறது. வழக்கமாகவே சுழலுக்கு நன்கு ஒத்துழைக்கும் இங்குள்ள ஆடுகளம், இம்முறையும் ஏமாற்றாது என்றே தெரிகிறது.

இதனால், டில்லி டெஸ்டில் ஏற்கனவே சுழற் பந்து வீச்சை சந்திக்க திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர், கோல்கட்டாவில் மீண்டு வருவது சிரமம்.


பேட்டிங் நம்பிக்கை:

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் சொதப்பினாலும், இரண்டாவது இன்னிங்சில் எழுச்சி பெற்றது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காத நிலையிலும், சச்சின், சேவக், லட்சுமண், டிராவிட் போன்ற சீனியர் வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். காம்பிர் இரு இன்னிங்சிலும் நல்ல துவக்கம் அமைத்து தந்தார்.


சந்தர்பால் அபாரம்:

வெஸ்ட் இண்டீஸ் அணியில் சந்தர்பால் மட்டும் (118, 47 ரன்கள்) சிறப்பான முறையில் ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் இந்தியாவின் சுழலில் சிக்கி விரைவில் திரும்பினர். இதை அந்த அணியின் கேப்டன் சமியும் ஒத்துக்கொண்டார்.

பவுலிங்கில் சமி, பிடல் எட்வர்ஸ், தேவேந்திர பிஷு ஆகியோர், முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டனர். இருப்பினும், இந்திய அணியின் வலிமையான பேட்டிங் வரிசை மீது, தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால் தான், எழுச்சி பெற முடியும்.

கோல்கட்டாவில் இந்திய வீரர்கள்

இரண்டாவது டெஸ்டில் பங்கேற்பதற்காக, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நேற்று கோல்கட்டா வந்தனர்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் டெஸ்டில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், வரும் 14ம் தேதி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.


சச்சின் வரவில்லை:

இதற்காக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நேற்று கோல்கட்டா வந்தனர். இரு அணி வீரர்களும், விமானநிலையத்தில் இருந்து பாதுகாப்பாக ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்திய அணியினரோடு "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் நேற்று வரவில்லை. சர்வதேச கிரிக்கெட் அரங்கில், தனது 100வது சதத்தை எதிர்நோக்கி உள்ள இவர், இன்று சகவீரர்களுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, நாளை சென்னையில் நடக்கவுள்ள தனது திருமண நிகழ்ச்சி காரணமாக இளம் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் வரவில்லை. இவர், திருமண நிகழ்ச்சிக்குப் பின் இந்திய அணியினரோடு இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்று பயிற்சி:

நேற்று கோல்கட்டா வந்த இரு அணி வீரர்களும் ஓய்வு எடுத்துக் கொண்டனர். இவர்கள் இன்று பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

ஹர்பஜனுக்கு மீண்டும் கல்தா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணியில் மாற்றம் இல்லை. "சீனியர்' வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு, மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

டில்லியில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இப்போட்டியில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனுக்கு பதிலாக, அஷ்வின், பிரக்யான் ஓஜா இடம் பெற்றனர். முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தினார் ஓஜா. அஷ்வின் ஒட்டுமொத்தமாக 9 விக்கெட் சாய்த்தார்.

இந்நிலையில், இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், கோல்கட்டா ஈடன் காடன் மைதானத்தில் வரும் 14ம் தேதி துவங்குகிறது. வரும் 13ம் தேதி தமிழக வீரர் அஷ்வினுக்கு திருமணம் நடக்க இருப்பதால், இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முதல் போட்டியில் பங்கேற்ற அணியில் மாற்றம் எதுவுமில்லை என்று அறிவிக்கப்பட்டது. முதல் நாள் சென்னையில் திருமணம் செய்யும் அஷ்வின், அடுத்த நாள் கோல்கட்டா டெஸ்டில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இதனால், ஹர்பஜனுக்கு வாய்ப்பு இம்முறையும் கிடைக்கவில்லை.

"பார்ம்' இல்லாமல் தவிக்கும் ஹர்பஜன், கடந்த வாரம் நடந்த ரஞ்சிக் கோப்பை போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

இதனால் இந்திய அணியில் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,""வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இளம் வீரர்கள் அஷ்வின், பிரக்யான் ஓஜா சிறப்பாக செயல்பட்டனர்.

வேகத்துக்கு ஒத்துழைக்காத இந்திய ஆடுகளங்களில், உமேஷ் யாதவும் நன்றாகவே பவுலிங் செய்தார். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, இந்திய அணியின் செயல்பாடு நன்றாக இருந்தது. இதனால் தான் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் மாற்றம் செய்யவில்லை,''என்றார்.

அஸ்வின் 13-ந்தேதி திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரராக திகழ்பவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த அவர் தனது அறிமுக டெஸ்டிலேயே சிறப்பாக பந்து வீசினார். இந்த நிலையில் அஸ்வின் திருமணம் செய்ய உள்ளார். 25 வயதான அவர் தனது பள்ளி தோழி பிரீத்தியை மணக்கிறார்.

இந்த திருமணம் வருகிற 13-ந்தேதி கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடக்கிறது. உறவினர்கள், குடும்ப நண்பர்கள் ஆகியோருக்கு மட்டுமே திருமண அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த திருமணத்திற்கு மறுநாள் (14-ந்தேதி) இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் தொடங்குகிறது. திருமணம் முடிந்தவுடன் 2-வது டெஸ்டில் விளையாட அஸ்வின் கொல்கத்தா சென்று விடுவார்.

ஈடன் கார்டனில் 100வது சதம்

சச்சின் தனது 100 வது சதத்தை, பாரம்பரியமிக்க கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் எட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில், இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தனது 99வது சர்வதேச சதத்தை (48 ஒருநாள்+51 டெஸ்ட்) அடித்தார்.

அதன் பின் "சதத்தில் சதம்' என்ற சாதனையை படைக்க இவர் எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டில்லியில் நடந்த முதல் டெஸ்டில், சதம் எட்டுவார் என அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் முதல் இன்னிங்சில் 7 ரன்கள் எடுத்த போது, அம்பயர் ராடு டக்கர் (ஆஸி.,) அவசரப்பட்டு சச்சினுக்கு எல்.பி.டபிள்யு., "அவுட்' கொடுத்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில், 91 ரன்கள் எடுத்திருந்த போது, பிரஸ்னன் பந்தில் இதே ராடு டக்கர் தான், சச்சினுக்கு எல்.பி.டபிள்யு., "அவுட்' கொடுத்து வெறுப்பேற்றினார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,"" கடந்த 2010 தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கோல்கட்டா டெஸ்டில், சச்சின் 106 ரன்கள் எடுத்தார். 2002ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் 176 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதனால், இம்முறை ஈடன் கார்டனில் நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்டில் (நவ., 14-18), சச்சின் சதத்தில் சதம் என்ற புதிய சாதனையை எட்டுவார் என்று நினைக்கிறேன்.

தவிர, இங்கு அதிக ரசிகர்கள் வருவதும் கூடுதல் ஆதரவாக இருக்கும்,'' என்றார்.

சச்சின் 15,000 ரன்கள் கடந்து சூப்பர் சாதனை

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் இன்னொரு சாதனை படைத்தார். டெஸ்ட் வரலாற்றில் 15 ஆயிரம் ரன்களை எட்டிய உலகின் முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டில்லி டெஸ்டில், நேற்று 33 ரன்கள் எடுத்த சச்சின், 28வது ரன்னை கடந்த போது இச்சாதனை படைத்தார்.

இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் முடிசூடா மன்னனாக நீடிக்கிறார்.

இதுவரை இவர், 182 டெஸ்டில் பங்கேற்று 51 சதம், 61 அரைசதம் உட்பட 15,005 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் மற்றொரு இந்திய வீரர் டிராவிட் (12, 859 ரன்கள்) உள்ளார்.
டெஸ்ட் அரங்கில் பத்தாயிரம் ரன்களை கடந்த வீரர்கள்:
வீரர் போட்டி ரன்கள் சதம்/அரைசதம் சச்சின் (இந்தியா) 182 15,005 51/61 டிராவிட் (இந்தியா) 158 12,859 35/61 பாண்டிங் (ஆஸி.,) 154 12,487 39/56 லாரா (வெ.இ.,) 131 11,953 34/48 காலிஸ் (தெ.ஆ.,) 145 11,947 40/54 ஆலன் பார்டர் (ஆஸி.,) 156 11,174 27/63 ஸ்டீவ் வாக் (ஆஸி.,) 168 10,927 32/50 கவாஸ்கர் (இந்தியா) 125 10,122 34/45
* டெஸ்ட் அரங்கில் 15 ஆயிரம் ரன்களை கடந்த சச்சின், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 31 டெஸ்டில் விளையாடியுள்ள இவர், 11 சதம், 13 அரைசதம் உட்பட 3,151 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒவ்வொரு அணிக்கு எதிராக சச்சின் எடுத்த ரன்கள்:
அணி போட்டி ரன்கள் சதம்/அரைசதம் ஆஸ்திரேலியா 31 3,151 11/13 இங்கிலாந்து 28 2,423 7/12 இலங்கை 25 1,995 9/6 தென் ஆப்ரிக்கா 25 1,741 7/5 நியூசிலாந்து 22 1,532 4/8 வெஸ்ட் இண்டீஸ் 17 1,368 3/7 பாகிஸ்தான் 18 1,057 2/7 ஜிம்பாப்வே 9 918 3/3 வங்கதேசம் 7 820 5/0
அசத்தல் அறிமுகம்
சுழலில் அசத்திய தமிழக வீரர் அஷ்வின், 47 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அறிமுகமான முதல் போட்டியில், ஐந்து அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய ஏழாவது இந்திய பவுலர் என்ற சாதனை படைத்தார்.

நூறு டெஸ்ட் - சேவக் இலக்கு

டெஸ்ட் அரங்கில், நூறு போட்டிகளுக்கு மேல் விளையாட வேண்டும்,'' என, இந்திய அணியின் துவக்க வீரர் சேவக் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். டில்லியை சேர்ந்த இவர், கடந்த 2001ல் (செப்., 3-6) புளோயம்போன்டைன் நகரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.

முதல் டெஸ்டில் சதம் அடித்து முத்திரை பதித்த இவர், இதுவரை 89 டெஸ்ட் (7735 ரன்கள்), 236 ஒருநாள் (7760 ரன்கள்), 14 சர்வதேச "டுவென்டி-20' (313 ரன்கள்) போட்டிகளில் விளையாடியுள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டில்லி நடக்கும் முதல் டெஸ்டில் இடம் பெற்றுள்ள இவர், தனது 90வது டெஸ்டில் விளையாடுகிறார்.
இதுகுறித்து சேவக் கூறியதாவது: கிரிக்கெட் அரங்கில், பத்து ஆண்டுகளாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. காயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கடந்து, தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன். கடந்த 10 ஆண்டு காலத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளேன். இதன்மூலம் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு என்ற எண்ணம் தற்போது இல்லை. ஆனால் நூறு டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாட விரும்புகிறேன். ஏனெனில் கவாஸ்கர், வெங்சர்க்கார், சச்சின், டிராவிட், கங்குலி, கும்ளே, லட்சுமண் ஆகியோர் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர். இவர்கள் பட்டியலில் இணைய விரும்புகிறேன்.
கடந்த 2001ல், எனது முதல் டெஸ்ட் போட்டியை என்றும் மறக்க முடியாது. ஏனெனில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், முதல் டெஸ்டில் சதம் அடித்து நம்பிக்கை அளித்தேன். அப்போதிருந்த கேப்டன் கங்குலி, பயிற்சியாளர் ஜான் ரைட் வெகுவாகப் பாராட்டினார்கள். அதன்பின் டெஸ்ட் அரங்கில் இரண்டு முறை 300 ரன்களுக்கு மேல் எடுத்ததை என்றும் மறக்க முடியாது.
டெஸ்ட் அரங்கில், நிறைய சதத்தை இழந்துள்ளேன். அதிக முறை 90 ரன்களுக்கு மேல் அவுட்டாகியுள்ளேன். இதுகுறித்து கவலைப்பட போவதில்லை. கடந்த பத்து ஆண்டில் எனது செயல்பாடு திருப்தி அளிக்கிறது.
இவ்வாறு சேவக் கூறினார்.

தெண்டுல்கர் 100-வது சதம் அடிப்பாரா?

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சச்சின் தெண்டுல்கர். சர்வதேச போட்டிகளில் 100-வது சதத்துக்காக அவர் ஏங்கி இருக்கிறார். அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 99 சதம் (டெஸ்ட் 51+ ஒருநாள் போட்டி 48) அடித்துள்ளார்.

உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மார்ச் 12-ந்தேதி அவர் சதம் அடித்தார்.

அதற்கு பிறகு தெண்டுல்கர் சதம் அடிக்கவில்லை. உலக கோப்பையிலேயே தனது 100-வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தவறவிட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதியில் 85 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அதை தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் பயணம் சென்றபோது அவர் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரிலும் 100-வது சதம் வாய்ப்பை தவறவிட்டார்.

ஓவலில் நடந்த 4-வது டெஸ்டில் 91 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால் ஒருநாள் தொடரிலும், அதை தொடர்ந்து இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரிலும் தெண்டுல்கர் காயம் காரணமாக விளையாடவில்லை.

அணிக்கு திரும்பி இருக்கும் தெண்டுல்கர் தற்போது நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலாவது 100-வது சதத்தை அடிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சச்சின் சாதனை சதம்

டில்லி டெஸ்டில் சச்சின் தனது நூறாவது சதத்தை அடித்து, சாதனை படைப்பார் என்று நம்பிக்கை உள்ளது. சர்வதேச டெஸ்ட் அரங்கில் மீண்டும் முதலிடத்தை பெறுவதற்கான முயற்சியை துவங்கி விட்டோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், இன்று துவங்குகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில், இத்தொடரில் இந்திய அணி சாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தவிர, இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின், 100 சர்வதேச சதம் குறித்தும், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறியது:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் துவக்கம் சிறப்பாக அமைய வேண்டியது முக்கியம். அடுத்து இத்தொடர் முழுவதும் நன்கு செயல்பட வேண்டும். இதை எப்படி செய்வது என்று திட்டமிட்டு வருகிறோம். இந்த டெஸ்டில், சச்சின் தனது 100 வது சதத்தை அடிப்பார். அது இங்கு நடக்கும் என்று நம்புகிறேன். இல்லை என்றால் அடுத்த போட்டியில் எடுப்பார். அவர் சாதனை சதத்தை எட்டியவுடன், சிறப்பாக கொண்டாடுவோம்.

இரண்டு அறிமுகம்:
இத்தொடருக்கான பயிற்சியின் போது யாரும் காயமடையவில்லை. அனைத்து வீரர்களும் உடற்தகுதியுடன் தயாராக உள்ளனர். இன்றைய போட்டியில் இரு வீரர்கள் புதியதாக அறிமுகம் ஆக உள்ளனர். இது யாரென்று பொறுத்திருந்து பாருங்கள்.

ராகுல் சார்மாவைப் பொறுத்தவரையில், உள்ளூர் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவர் ஒருவர் மீது மட்டும் நாங்கள் கவனம் செலுத்த போவதில்லை.

சிறந்த அணி:
வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவான அணி தான். எங்கள் அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர் என்பதற்காக, அவர்களை எளிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில், வங்கதேசத்துக்கு எதிரான தொடரை வென்று திரும்பியுள்ளனர்.

இந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷு, நன்கு செயல்படுகிறார். மேலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் உள்ளனர். மொத்தத்தில் இத்தொடர் சிறப்பானதாக இருக்கும்.

முடிந்து போனது:
இங்கிலாந்துக்குக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அடைந்த தோல்விக்கு காயம் தான் முக்கிய காரணம். ஆனால், இதெல்லாம் விளையாட்டின் ஒரு பகுதிதான். இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. மூன்றரை மாதத்துக்கு முன் அப்படி நடந்து விட்டது. இந்நிலையில் இப்போது அது குறித்து நான் ஏன் பேசவேண்டும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் மட்டும் கவனம் செலுத்துவோம்.

திருப்பம் ஏற்படும்:
டில்லி ஆடுகளம் நல்ல முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அடுத்தடுத்த நாட்களில் பவுலிங்கில் திருப்பம் ஏற்படும் என்று நினைக்கிறேன். எங்கள் பவுலர்கள் மூன்றாவது நாளில் இருந்து அதிகமாக பந்தை சுழற்றலாம். இது எந்தளவுக்கு இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

மீண்டும் முயற்சி:
எங்களை பொறுத்தவரையில் "நம்பர்1' அணியாக இருக்க விரும்புகிறோம். ஆனால் முதலிடத்தில் இருந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால், "ரேங்கிங்' தானாகவே போய்விடும். அதை வைத்துக்கொண்டிருக்க முடியாது.

நாங்கள் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் முதலிடத்தை இழந்து விட்டோம். மீண்டும் முதலிடத்தை பெறுவதற்கான வேலையை துவங்கி விட்டோம். இது இத்தொடரில் இருந்து துவங்குகிறது. இவ்வாறு தோனி கூறினார்.