சச்சினின் சிலையில் மாற்றம்


இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின், 40. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதான நிர்வாகம் சார்பில், இவரது மெழுகு சிலை திறக்கப்பட்டது. 

இந்த சிலையில் கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் "டி-சர்ட்டுடன்' சச்சின் காணப்பட்டார். 

ஆனால், 2006ல், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஜோகனஸ்பர்க், "டுவென்டி-20' போட்டி தான் இவர் பங்கேற்ற முதல் மற்றும் கடைசி ஆட்டம். இதையடுத்து "டி-சர்ட்' தொடர்பாக சர்ச்சை எழுந்தது. 

இதுகுறித்து சச்சின் சிலை வைக்கப்பட்டுள்ள "மேடம்-டுசாட்ஸ்' அருங்காட்சியக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,"" கடந்த 2012 "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சச்சின் பங்கேற்கவே இல்லை என்ற நிலையில், தவறான "டி-சர்ட்' அணிந்துள்ளது, படைப்பில் ஏற்பட்ட தவறு. 

இதற்காக வருந்துகிறோம். இதற்குப் பதில் 2011 உலக கோப்பை தொடரில் சச்சின் விளையாடிய, "டி-சர்ட்' போன்று விரைவில் மாற்ற முயற்சித்து வருகிறோம்,'' என்றார்.

விராத் கோஹ்லிக்கு அர்ஜுனா விருது


இந்திய வீரர் விராத் கோஹ்லியின் பெயரை, அர்ஜுனா விருதுக்கு பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்துள்ளது.

இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, 24. சிறந்த "மிடில் ஆர்டர்' வீரரான இவர், இதுவரை 18 டெஸ்ட் (1,175 ரன்), 98 ஒருநாள் (4,054 ரன்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,), சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது வென்றார். 

முதலில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடிய இவர், அடிலெய்டு டெஸ்ட் (2012, ஜன.,), இதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் (2012, ஆக.,) போட்டிகளில் சதம் அடித்து அசத்தினார். 

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். 

இதனிடையே, கோஹ்லியின் பெயரை இந்த ஆண்டு அர்ஜுனா விருதுக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) பரிந்துரை செய்தது. 

அர்ஜுனா விருது பெறவுள்ள 46வது கிரிக்கெட் வீரராகிறார் கோஹ்லி.

வாழ்நாள் சாதனையாளருக்கு தரப்படும் தயான்சந்த் விருதுக்கு, முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. 

சென்னை அணி அசத்தல் வெற்றி


கோல்கட்டா அணிக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் மைக்கேல் ஹசி அதிரடி ஆட்டம் கைகொடுக்க, சென்னை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 

இந்தியாவில், 6வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்த  லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் தேர்வு செய்தார்.

சென்னை அணிக்கு சகா, மைக்கேல் ஹசி சிறப்பான துவக்கம் கொடுத்தனர். பாலாஜி ஓவரில் ஹசி, மூன்று பவுண்டரிகள் விளாசினார். தன் பங்கிற்கு ஷமி அகமது ஓவரில் சகா இரு பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்தார். 

இவர் பாட்யா பந்தில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹசி (95) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின் வந்த ரெய்னா 44 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முடிவில், சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது. தோனி (18), ஜடேஜா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

கோல்கட்டா அணி சார்பில் பாட்யா, நரைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

கடின இலக்கை துரத்திய கோல்கட்டா அணிக்கு காம்பிர், பிஸ்லா ஜோடி துவக்கம் தந்தது. காம்பிர் (14) ஏமாற்றினார். மறுமுனையில், மோரிஸ் வீசிய ஓவரில் பிஸ்லா "ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டினார். 

அஷ்வின் பந்துவீச்சிலும் பவுண்டரி அடித்து அசத்திய இவரால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பிரண்டன் மெக்கலம் (6), காலிஸ் (19) நீடிக்கவில்லை. 

இக்கட்டான நேரத்தில் பிஸ்லா (92) ரன்-அவுட்டாக, அணியின் தோல்வி உறுதியானது. முடிவில், கோல்கட்டா அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து, தோல்வியடைந்தது. இயான் மார்கன் (32), யுசுப் பதான் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

சென்னை அணி சார்பில் மோகித் சர்மா, மோரிஸ், பிராவோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

தோனியை சமாளிப்பாரா காம்பிர்?


சென்னையில் இன்று நடக்கும் ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சென்னை, "நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. 

சென்னை அணிக்கு துவக்க வீரர் மைக்கேல் ஹசி, பேட்டிங்கில் நம்பிக்கை தருகிறார். 

இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 3 அரைசதம் <உட்பட, மொத்தம் 350 ரன்கள் அடித்துள்ளார். தமிழகத்தின் முரளி விஜய் தான் பெரிதும் (8 போட்டி, 122 ரன்) ஏமாற்றுகிறார். 

துவக்க போட்டிகளில் சொதப்பிய "மிடில் ஆர்டர்' ரெய்னா, மீண்டும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஆறுதல். சென்னை வீரர்களில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரராக உள்ள, கேப்டன் தோனி (235 ரன்கள்) இன்றும் அசத்தட்டும். அடுத்து வரும் பத்ரிநாத், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் பொறுப்புணர்ந்து விளையாடினால் நல்லது. 

"ஆல்-ரவுண்டர்' பிராவோ, பவுலிங்கில் 14 விக்கெட் வீழ்த்தினாலும், பேட்டிங்கில் அதிக பந்துகளை வீணடித்து ரசிகர்கள் பொறுமையை சோதிக்கிறார்.


கடைசியில் ஏமாற்றம்:

சென்னை அணியின் பவுலிங், துவக்கத்தில் எல்லாம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால், கடைசி கட்ட ஓவர்களில் சொதப்புவது தொடர்கிறது. 

ஐதராபாத்துக்கு எதிரான கடந்த போட்டியில், கடைசி 5 ஓவர்களில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்தது சிக்கலை தந்தது. 

இதற்கேற்ப, மோகித் சர்மா, கிறிஸ் மோரிஸ் இன்று கவனமாக செயல்பட வேண்டும். 

சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோரது நம்பிக்கை தொடர்ந்தால் நல்லது. 

மீண்டும் விளாசுவாரா கெய்ல்?


மும்பையில் இன்று நடக்கும் பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில், கெய்ல் மீண்டும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பெங்களூரு அணியின் பலமே கெய்ல்தான். புனே அணிக்கு எதிராக 30 பந்தில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இவரது சிறப்பான "பார்ம்' இன்றும் தொடரலாம். 

இவருக்கு பக்கபலமாக, கேப்டன் கோஹ்லி உள்ளார். சவுரப் திவாரி, அருண் கார்த்திக் ஆகியோர் தங்களது பங்களிப்பை கொடுத்தால் நல்லது. 

வேகப்பந்துவீச்சில் அசத்த வினய் குமார், ராம்பால், ஆர்.பி.சிங் உள்ளனர். தவிர, உனத்கத்தும் அசத்துவது கூடுதல் பலம். 


ஸ்மித் அசத்தல்: 

ஏற்கனவே கோல்கட்டா அணியை அதன் சொந்த மண்ணில் வென்ற உற்சாகத்தில் உள்ளது மும்பை அணி. கடந்த போட்டியில் சிறப்பான அடித்தளம் அமைத்த டுவைன் ஸ்மித் இன்றும் மிரட்டலாம். 

சச்சின் திறமை நிரூபிக்க வேண்டும். பாண்டிங்கிற்கு பதில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரோகித் சர்மா, கடந்த போட்டியில் அற்புதமாக செயல்பட்டார். இவருக்கு தினேஷ் கார்த்திக் கைகொடுக்கலாம். 

பவுலிங்கில் மலிங்கா, ஜான்சன் உள்ளனர். சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ஏழு போட்டியில் ஆறு விக்கெட் மட்டும் வீழ்த்தியுள்ளார். 

இவர் இன்றாவது, ஜாலம் காட்டுவாரா என பார்ப்போம். பிரக்யான் ஓஜா விக்கெட் வீழ்த்தி நம்பிக்கை அளிக்கிறார். 

ஏமாற்றம் அளிக்கும் பேட்டிங்

கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா, 2வது இடம் பிடித்த சென்னை அணிகள் புள்ளிப் பட்டியலில் பின்வரிசையில் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. 

இந்த அணிகளின் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்காதது பின்னடைவை ஏற்படுத்துகிறது. 

கோல்கட்டா அணியின் மனோஜ் திவாரி, யூசுப் பதான் எழுச்சி கண்டால் பேட்டிங்கில் பலம் கிடைக்கும். முன்னணி சர்வதேச வீரர்கள் அதிகம் இல்லாத ராஜஸ்தான், ஐதராபாத், பஞ்சாப் அணிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. 

இதற்கு வீரர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் முக்கிய காரணம்.

ஐ.பி.எல். தொடரில் 175 ரன்கள் குவித்து கிறிஸ் கெய்ல் புதிய சாதனை


ஐ.பி.எல். போட்டியில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. 

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தில்சானும், கெய்ல்-ம் ஆரம்பம் முதலே புனே வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சை மைதானத்தில் நாலாபுறமும் விளாசித் தள்ளினர். 

குறிப்பாக கெய்ல் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 11 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 100 ரன்களை கடந்தார். 

ஐ.பி.எல். தொடரில் குறைந்த பந்துகளில் விரைவாக சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 

இதற்கு முன்னர் யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கெய்ல் முறியடித்துள்ளார். 

மேலும், இன்றைய ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்து, ஐ.பி.எல். தொடரில் முதன்முதலாக அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 

இவருடைய இந்த அதிரடியில் 17 சிக்சர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். 

இதற்கு முன்பு பெங்களூர் மைதானத்தில் கொல்கத்தா அணி வீரர் மெக்குல்லம் 158 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன் என்பது சாதனையாக இருந்தது. இந்த சாதனையையும் தற்போது கெய்ல் முறியடித்துள்ளார். 

டாப் 10 வரிசையில் புஜாரா, அஷ்வின்


ஐ.சி.சி., டெஸ்ட் வீரர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் புஜாரா, அஷ்வின் "டாப்-10' வரிசையில் உள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்டது. 

இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் புஜாரா, 777 புள்ளிகளுடன் 7வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். கேப்டன் தோனி 22வது இடத்தில் உள்ளார். 

முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் உள்ளனர். 

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த அசத்திய ஜிம்பாப்வே அணி கேப்டன் பிரண்டன் டெய்லர் 41 இடங்கள் முன்னேறி 29வது இடம் பிடித்தார்.

பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் அஷ்வின் 6வது இடத்தில் நீடிக்கிறார். பிரக்யான் ஓஜா 10வது, ஜாகிர் கான் 16வது இடத்தில் உள்ளனர். 

முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், பிலாண்டர், இலங்கையின் ஹெராத் ஆகியோர் உள்ளனர்.

"ஆல்-ரவுண்டர்'களுக்கான தரவரிசையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. 

முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் காலிஸ், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன், இந்தியாவின் அஷ்வின் உள்ளனர்.

சென்னை பிளே-ஆப் போட்டிகள் மாற்றமா?


பிரிமியர் கிரிக்கெட் தொடரின் இரண்டு "பிளே-ஆப்' போட்டிகள், சென்னையில் இருந்து மாற்றப்படலாம் எனத்தெரிகிறது.

ஆறாவது பிரிமியர் லீக் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இலங்கையில் நடந்த இறுதிப் போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை வீரர்கள், தமிழகத்தில் விளையாட அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 

இதையடுத்து, சென்னையில் நடக்கும் லீக் போட்டிகளின் போது, இலங்கை வீரர்களை சேர்க்காமல், மாற்று வீரர்களுடன் அணிகள் களமிறங்குகின்றன. 

ஆனால், லீக் போட்டிகள் முடிந்த பின், வரும் மே 21, 22ம் தேதிகளில் சென்னையில் இரு "பிளே-ஆப்' போட்டிகள் நடக்கவுள்ளன. 

இதில் மலிங்கா போன்ற முக்கியமான வீரர்கள் இல்லாமல் களமிறங்க இயலாது என அணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, "பிளே-ஆப்' போட்டிகளை மாற்றும் திட்டம் இருப்பதாக தெரிகிறது. 

இதுகுறித்து பிரிமியர் கிரிக்கெட் தொடரின் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,"" அடுத்தகட்ட போட்டிகள் நடக்கும் இடம் குறித்து, நாளை சென்னையில் நடக்கவுள்ள கட்டுப்பாட்டு குழுவில் இறுதி முடிவு செய்யப்படவுள்ளது,'' என்றார்.

IPL 6 - சென்னை அணி அசத்தல் வெற்றி


கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியாவில் ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் 26வது லீக் போட்டியில் சென்னை, "நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் பேட்டிங் தேர்வு செய்தார். 

கோல்கட்டா அணிக்கு காம்பிர் (25), யூசுப் (25) ஆறுதல் அளித்தனர். பின் வந்த காலிஸ் (0), மார்கன் (2) சொதப்பினர். மனோஜ் திவாரி (13), தாஸ் (19), நரைன் (13) விரைவில் பெவிலியன் திரும்பினர். 

முடிவில், கோல்கட்டா அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. சேனநாயகே (7), பாலாஜி (9) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் ஜடேஜா 3, அஷ்வின் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 

எளிய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, அஷ்வின் ஜோடி துவக்கம் கொடுத்தது. அஷ்வின் (11) நிலைக்கவில்லை. பின் வந்த முரளி விஜய்(2), ரெய்னா (7), பத்ரிநாத் (6) ஒற்றை இலக்கில் வெளியேறினர். 

ஹசி 40 ரன்களில் யூசுப் பதானிடம் "கேட்ச்' கொடுத்து அவுட்டானார். கேப்டன் தோனியும் (9) வெளியேற, அணி சிக்கலில் தவித்தது. இருப்பினும், ஜடேஜா அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். 

3 பவுண்டரிகள், சிக்சர்கள் விளாசிய இவர், வெற்றியை உறுதி செய்தார். முடிவில், சென்னை அணி 19.1 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. 

ஜடேஜா (36), பிராவோ (7) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா அணி சார்பில் நரைன், பாலாஜி, காலிஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 

சச்சினுக்கு இடமில்லையா? முன்னாள் வீரர்கள் ஆவேசம்


இங்கிலாந்தின் டிக்கி பேர்டு அறிவித்த கனவு அணியில், சச்சின் சேர்க்கப்படாதது, கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிக்கி பேர்டு. தேசிய அணியில் கடைசிவரை இடம் பெறாத இவர், 66 டெஸ்ட் போட்டிகளுக்கு அம்பயராக இருந்தார் . 

தனது 80வது பிறந்த நாளுக்கு 11 சிறந்த வீரர்கள் அடங்கிய தனது டெஸ்ட் கனவு அணியை தேர்வு செய்தார். டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்த இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் பிராட்மேன், பாண்டிங், வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா உள்ளிட்ட வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. 

இந்தியா சார்பில் கவாஸ்கர் மட்டும் இடம் பெற்றார். மற்றபடி வார்ன், இம்ரான் கான், விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். 

இதற்கு முன்னாள் இந்திய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 


அஜித் வடேகர்

துவக்க வீரராக கவாஸ்கர் தேர்வு சரிதான். ஆனால், சச்சின், பிராட்மேன் மற்றும் வெஸ்ட் இண்டீசின் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது ஆச்சரியம் தருகிறது. சரியான பலமில்லாத இந்த தேர்வு ஒருதலைப் பட்சமானது. இவரது காலத்தில் விளையாடிய தெரிந்த வீரர்களை மட்டும், பேர்டு தேர்வு செய்துள்ளார்.

பிஷன் சிங் பேடி, எரபள்ளி பிரசன்னா, வெங்கட்ராகவன் என, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கில்கிறிஸ்ட் இல்லாதது வியப்பு தான். 


சந்து போர்டே

டிக்கி பேர்டின் கிரிக்கெட் அறிவு குறைவாக உள்ளதால் தான், பிராட்மேன், சச்சின் ஆகியோருக்கு அணியில் இடம் இல்லை. பேர்டு சேர்க்காவிட்டாலும், 

இவர்கள் யார் என்பதை புள்ளி விவரங்கள் பேசும். என்னைப் பொறுத்தவரையில் இங்கிலாந்து "மீடியா' தான், இவரை சிறந்த அம்பயர் என்கின்றன. ஆனால், பேர்டு எப்போதும் தப்பான எண்ணம் கொண்டவர்.

ஐ.பி.எல்., அரங்கில் 50வது வெற்றி - சென்னை சிங்கங்கள் அசத்தல்


டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசத்திய மைக்கேல் ஹசி அரைசதம் அடித்தார். மீண்டும் சொதப்பிய டில்லி அணி, தொடர்ந்து 6வது தோல்வியை பெற்றது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த தொடரின் 24வது லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.


மீண்டும் ஹசி:

சென்னை அணியில் காயம் காரணமாக டிர்க் நானஸ் நீக்கப்பட்டு, மீண்டும் மைக்கேல் ஹசி இடம் பிடித்தார். அனிருதா ஸ்ரீகாந்துக்கு பதிலாக மோஹித் சர்மா சேர்க்கப்பட்டார். டில்லி அணியில் ஆஷிஸ் நெஹ்ரா, பென் ரோரர் நீக்கப்பட்டு அஜித் அகார்கர், ஜீவன் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டனர். "டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.


ஹசி அரைசதம்:

முதலில் "பேட்' செய்த சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மார்னே மார்கல் "வேகத்தில்' முரளி விஜய் (18) அவுட்டானார். பின் இணைந்த மைக்கேல் ஹசி, சுரேஷ் ரெய்னா ஜோடி பொறுப்பாக விளையாடியது. 

ஒன்று, இரண்டாக ரன் எடுத்த இவர்கள் அவ்வப்போது பவுண்டரி அடித்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த போது, இர்பான் பதான் பந்தில் ரெய்னா (30) வெளியேறினார். அகார்கர், நதீம் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட மைக்கேல் ஹசி அரைசதம் அடித்தார்.


தோனி அதிரடி:

பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய கேப்டன் தோனி, மார்னே மார்கல் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். இதே ஓவரில் மைக்கேல் ஹசி தன்பங்கிற்கு இரண்டு பவுண்டரி அடிக்க, சென்னை அணிக்கு 19 ரன்கள் கிடைத்தது. 

அதிரடியாக ஆடிய தோனி 22 பந்தில் 44 ரன்கள் (ஒரு சிக்சர், 5 பவுண்டரி) எடுத்த போது, உமேஷ் யாதவ் பந்தில் அவுட்டானார். ஆட்டத்தின் கடைசி பந்தில் 2வது ரன்னுக்கு ஆசைப்பட்ட டுவைன் பிராவோ (3) "ரன்-அவுட்' ஆனார்.
சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. மைக்கேல் ஹசி (65) அவுட்டாகாமல் இருந்தார். டில்லி அணி சார்பில் இர்பான் பதான், மார்னே மார்கல், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.


வார்னர் ஏமாற்றம்:

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணி, சென்னை கிங்ஸ் "வேகத்தில்' திணறியது. மோஹித் சர்மா பந்தில் டேவிட் வார்னர் (1), மன்பிரித் ஜுனேஜா (2) அவுட்டானார்கள். 

அடுத்து வந்த கேப்டன் மகிளா ஜெயவர்தனாவை (6), கிறிஸ் மோரிஸ் வெளியேற்றினார். ஆல்பி மார்கல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட சேவக், கிறிஸ் மோரிஸ் பந்தில் ஒரே ஒரு பவுண்டரி அடித்தார். இவர், 17 ரன்கள் எடுத்த போது மோஹித் சர்மாவிடம் சரணடைந்தார்.

பின் இணைந்த ஜீவன் மெண்டிஸ், கேதர் ஜாதவ் ஜோடி நிதானமாக ஆடியது. ஒன்று, இரண்டாக ரன் எடுத்த இவர்கள், ஐந்தாவது விக்கெட்டுக்கு 31 ரன்கள் சேர்த்த போது, ஜீவன் மெண்டிஸ் (12) "ரன்-அவுட்' ஆனார். அடுத்து வந்த இர்பான் பதான் (2), அஜித் அகார்கர் (3), மார்னே மார்கல் (2) சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேதர் ஜாதவ் (31), ஆல்பி மார்கல் பந்தில் அவுட்டானார். டுவைன் பிராவோ பந்தில் உமேஷ் யாதவ் (1) சரணடைய, டில்லி அணி 17.3 ஓவரில் 83 ரன்களுக்கு சுருண்டது. நதீம் (2) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை அணி சார்பில் மோஹித் சர்மா 3, அஷ்வின் 2, ஆல்பி மார்கல், கிறிஸ் மோரிஸ், டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

மிஸ்ரா ஹாட்ரிக் - ஐதராபாத் வெற்றி


ஐ.பி.எல்., லீக் போட்டியில், அமித் மிஸ்ரா "ஹாட்ரிக்' சாதனை படைக்க, ஐதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை விரைவாக இழந்த புனே அணி ஏமாற்றம் அளித்தது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று புனேயில் நடந்த தொடரின் 22வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், ஐதராபாத் அணிகள் மோதின.


ஒயிட் கேப்டன்:

சங்ககரா ஓய்வு எடுத்துக் கொள்ள, ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பை காமிரான் ஒயிட் ஏற்றார். மாற்று வீரராக குயின்டன் டி காக் அறிமுகமானார். ரவி தேஜாவுக்கு பதிலாக சமந்த்ரே இடம் பிடித்தார். புனே அணியில் ராஸ் டெய்லர் நீக்கப்பட்டு, மாத்யூஸ் சேர்க்கப்பட்டார். "டாஸ்' வென்ற புனே கேப்டன் மாத்யூஸ், "பீல்டிங்' தேர்வு செய்தார்.


புவனேஷ்வர் அபாரம்:

ஐதராபாத் அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. டிண்டா பந்தில் குயின்டன் டி காக் (2) அவுட்டானார். பின் புவனேஷ்வர் குமார் போட்டுத் தாக்கினார். இவரது "வேகத்தில்' பார்த்திவ் படேல் (12), கேப்டன் காமிரான் ஒயிட் (0), ஹனுமா விஹாரி (1) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

"மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய கரண் சர்மா (7), திசாரா பெரேரா (2) நிலைக்கவில்லை. இதனால் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்து திணறியது. 


சமந்த்ரே ஆறுதல்:

அடுத்து வந்த அமித் மிஸ்ராவுடன் இணைந்த சமந்த்ரே பொறுப்பாக ஆடினார். ஏழாவது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்த போது, ராகுல் சர்மா "சுழலில்' சமந்த்ரே (37) சிக்கினார். பின் இணைந்த அமித் மிஸ்ரா, ஆஷிஸ் ரெட்டி ஜோடி ஓரளவு கைகொடுக்க, அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது. எட்டாவது விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்த போது அமித் மிஸ்ரா (30) "ரன்-அவுட்' ஆனார்.

ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. ஆஷிஸ் ரெட்டி (19), ஸ்டைன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். புனே அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட் கைப்பற்றினார்.


இரட்டை "அடி':

சுலப இலக்கை விரட்டிய புனே அணிக்கு ராபின் உத்தப்பா, ஆரோன் பின்ச் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய இவர்கள், இஷாந்த் சர்மா, ஸ்டைன் பந்தை பவுண்டரிகளாக விரட்டினர். இந்நிலையில் 5வது ஓவரை வீசிய திசாரா பெரேரா இரட்டை "அடி' கொடுத்தார். 

இரண்டாவது பந்தில் ராபின் உத்தப்பாவை (22) அவுட்டாக்கிய இவர், 3வது பந்தில் ஆரோன் பின்ச்சை (16) வெளியேற்றினார். நான்காவது பந்தை ஸ்டீவன் ஸ்மித் தடுத்தாட, "ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.


மிஸ்ரா "ஹாட்ரிக்':

அடுத்து வந்த சுமன் (12) ஏமாற்றினார். ஒரு பவுண்டரி கூட அடிக்காத ஸ்டீவன் ஸ்மித் (17) பெரிய அளவில் சோபிக்கவில்லை. மிஸ்ரா பந்தில் சிக்சர் அடித்த மிட்சல் மார்ஷ் (14) நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 19வது ஓவரை வீசிய அமித் மிஸ்ரா, "ஹாட்ரிக்' சாதனை படைத்தார். 

முதலில் கேப்டன் மாத்யூசை (20) அவுட்டாக்கினார். பின், புவனேஷ்வர் குமார் (0), ராகுல் சர்மா (0), அசோக் டிண்டா (0) ஆகியோரை அடுத்தடுத்து அவுட்டாக்கி "ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.

புனே அணி 19 ஓவரில் 108 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. மனிஷ் பாண்டே (7) அவுட்டாகாமல் இருந்தார். ஐதராபாத் அணி சார்பில் அமித் மிஸ்ரா 4, திசாரா பெரேரா 3 விக்கெட் வீழ்த்தினர். 

ஆட்டநாயகன் விருதை ஐதராபாத் அணியின் அமித் மிஸ்ரா கைப்பற்றினார்.


புதிய வரலாறு

புனே அணிக்கு எதிராக "சுழலில்' அசத்திய ஐதராபாத் அணியின் அமித் மிஸ்ரா, ஐ.பி.எல்., வரலாற்றில் மூன்று முறை "ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார். கடந்த 2008ல் டில்லி அணிக்காக விளையாடிய இவர், டெக்கான் அணிக்கு எதிராக முதன்முதலில் இச்சாதனை படைத்தார். பின், 2011ல் டெக்கான் அணிக்காக விளையாடிய இவர், பஞ்சாப் அணிக்கு எதிராக "ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றினார்.

சென்னை அணியின் பிரச்னை - பத்ரிநாத் வருத்தம்


சென்னை அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. விரைவில் இது சரி செய்யப்படும்,'' என, பத்ரிநாத் தெரிவித்தார்.

ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி இதுவரை பங்கேற்ற நான்கு போட்டிகளில் தலா 2 வெற்றி, தோல்வியடைந்தது. 

இதில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் துவக்க வீரர்கள் முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து 139 ரன்கள் எடுத்தனர். மற்றபடி இந்த ஜோடி 10, 4 ரன்கள் தான் எடுத்தது. 

கடைசியில் சென்னை அணியில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தில் (112) இருந்த மைக்கேல் ஹசி நீக்கப்பட்டு, அனிருதா சேர்க்கப்பட்டார். இவர், புனே அணிக்கு எதிராக, ரன்கணக்கை துவக்கும் முன்பே அவுட்டானார். இதுகுறித்து சென்னை வீரர் பத்ரிநாத் கூறியது:

"டுவென்டி-20' போட்டிகளைப் பொறுத்தவரையில் துவக்கம் முக்கியம். "பவர் பிளே'யின் ஓவர்களில் பீல்டர்கள் உள்வட்டத்தில் நிற்பதை பயன்படுத்தி, இவர்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும். இதைப் பொறுத்து தான் "மிடில் ஆர்டர்' உட்பட மற்ற பேட்டிங்கும் சிறப்பாக அமையும்.

எங்களைப் பொறுத்தவரையில் கடந்த தொடரில் டுபிளசி "டாப் ஆர்டரில்' அசத்தினார். 

இம்முறை பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகளை தவிர, பிற போட்டிகளில் துவக்க வீரர்கள் தேவையான அளவு ரன்களை எடுக்கவில்லை. போவதும் வருவதுமாக உள்ளனர். பேட்டிங், பவுலிங்கை பலப்படுத்தும் வகையில் அனிருதா, ஆல்பி மார்கலை சேர்த்தோம். துரதிருஷ்டவசமாக இது எடுபடவில்லை. 

இதேபோல, இனி வரும் போட்டிகளில் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்ய முயற்சிப்போம்.

இவ்வாறு பத்ரிநாத் கூறினார்.

ரெய்னாவுக்கு பிடிச்சது 3


தொடர்ந்து மூன்றாவது இடத்தில் களமிறங்குவதையே விரும்புகிறேன்,'' என, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளில் கடைசி வரை களத்தில் இருந்து, "பினிஷிங்' செய்வதில் வல்லவர் ரெய்னா. 

இவர், ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் (2,294) குவித்த வீரர்கள் வரிசையில், முதலிடத்தில் உள்ளார். "பேட்டிங் ஆர்டர்' குறித்து ரெய்னா கூறியது:

2010ல் வெஸ்ட் இண்டீசில் நடந்த தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான, உலக கோப்பை "டுவென்டி-20' போட்டியில், மூன்றாவது இடத்தில் களமிறங்கி சதம் அடித்தேன். தொடர்ந்து 3வது இடத்திலேயே வர விரும்புகிறேன். 

ஏனெனில், அப்போது தான் அனைத்து பவுலர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும். இது தான் எனக்கு பிடிக்கும். அதிர்ஷ்டவசமாக பேட்டிங்கில், அதிக ரன்கள் எடுக்கிறேன். இது எதிர்வரும் போட்டிகளிலும் தொடரும் என்று நம்புகிறேன். 

ஐந்து ஆண்டுகள் ஐ.பி.எல்., தொடரில் வெற்றிகரமாக ஜொலிக்கும் போது, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். கடினமான நேரங்களில் இருந்து மீண்டு, அணி வெற்றி பெற இது உதவும்.

ஆறாவது ஐ.பி.எல்., தொடரில், சென்னை அணி சிறப்பாக உள்ளது. இத்தொடரை மிகவும் எதிர்பார்த்து உள்ளேன். 

"டுவென்டி-20' போட்டிகளைப் பொறுத்தவரை எந்த அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. 

ஒவ்வொரு வெற்றிக்கும் கடினமாக போராட வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவது முக்கியம். 
இவ்வாறு ரெய்னா கூறினார்.

தெண்டுல்கரை முந்திய ரோகித் சர்மா


ஐ.பி.எல். போட்டியில் நேற்று ரோகித் சர்மா 62 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் தெண்டுல்கரை முந்தினார். 

ரெய்னா 2294 ரன் எடுத்து (84 ஆட்டம்) முதல் இடத்திலும், காம்பீர் 2187 ரன் எடுத்து (75 ஆட்டம்), 2-வது இடத்திலும் ரோகித் சர்மா 2130 ரன் எடுத்து (82 ஆட்டம்) 3-வது இடத்திலும் உள்ளனர். 

தெண்டுல்கர் 2115 ரன்களுடனும் (68 ஆட்டம்), காலிஸ் 2004 ரன்களுடனும் (77 ஆட்டம்) அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். 

கிறிஸ்கெய்ல் 2 ஆயிரம் ரன்னை தொட 1 ரன்னே தேவை. அவர் 48 ஆட்டத்தில் 1999 ரன் எடுத்துள்ளார். கெய்ல் விளையாடும் அடுத்த ஆட்டத்தில் 2 ஆயிரம் ரன்னை தொடுகிறார்.

எனக்கு சர் பட்டம் - காமெடி என்கிறார் ஜடேஜா


சர் பட்டத்துடன் என்னை அழைப்பது "காமெடி'யான ஒன்று'' என, சென்னை அணியின் ஜடேஜா தெரிவித்தார். 

பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி பந்தில் வெற்றி பெற, சென்னை அணிக்கு ஜடேஜா கைகொடுத்தார். 

இது குறித்து இவர் கூறியது: முக்கியமான கட்டத்தில், கேப்டன் தோனி அவுட்டானார். எனவே அடுத்து என்ன நடக்கப்போகிறது என நினைத்தோம். 

தவிர, கடைசி ஓவரில், வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன. ஆனாலும், சிறப்பான ஆட்டத்தால் கடைசி பந்தில் வெற்றி பெற்றோம். 

அணியின் பலமே, நான், ஆல்பி மார்கல், மோரிஸ், பிராவோ போன்ற "ஆல்-ரவுண்டர்கள்' அதிகம் இருப்பதுதான். 

தோனி உள்ளிட்ட சக வீரர்கள் "சர்' பட்டத்துடன் என்னை அழைத்து, "காமெடி' செய்கிறார்கள். 

இந்த பட்டத்தால், நான் மிகப்பெரிய மனிதன் என்றெல்லாம் நினைக்கவில்லை. 

எனவே, இதை நான் "சீரியசாக' எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு ஜடேஜா கூறினார். 

ஐ.பி.எல்., ரேட்டிங் குழப்பம்


ஆறாவது ஐ.பி.எல்., தொடர் பார்வையாளர்கள் குறித்த "ரேட்டிங்' விவரம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 

இப்போட்டியை காணும் "டிவி' பார்வையாளர்கள் "ரேட்டிங்' குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. 

சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் சார்பிலான மல்டி ஸ்கிரீன் மீடியா (எம்.எஸ்.எம்.,) நிறுவனம் வெளியிட்ட செய்தியில்," கடந்த ஆண்டினை விட ஆறாவது ஐ.பி.எல்., தொடர் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. 

முதல் வாரம் நடந்த போட்டிகளை சுமார் ஒரு கோடி பேர் வரை பார்த்துள்ளனர். 

இது இன்னும் அதிகமாகத்தான் இருக்கும். ரசிகர்கள் கொடுத்த இந்த வரவேற்பு மிகவும் "திரில்லாக' உள்ளது,' என, தெரிவித்துள்ளது.

ஆனால், உண்மையில் ஐ.பி.எல்., தொடருக்கு வரவேற்பு குறைந்துள்ளதாக டி.ஏ.எம்., ரேட்டிங் தெரிவிக்கிறது. 

கடந்த ஆண்டு முதல் ஐந்து போட்டிகளை ஒப்பிடும் போது, 3.89 லிருந்து 3.82 ஆக குறைந்துள்ளது. 

முதல் போட்டிக்கான டி.வி., ரேட்டிங் கடந்த ஆண்டினை (5.57) விட இரண்டு சதவீதம் குறைந்துவிட்டதாம் (4.13). 

கெய்ல் இல்லாமல் சாதிக்க முடியுமா?


அதிரடி துவக்க வீரர் கெய்ல் இல்லாமலும் போட்டியில் வெற்றி பெற முடியும்,'' என்று பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங் தெரிவித்தார். 

இந்தியாவில் ஆறாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இதில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வெஸ்ட் இண்டீசின் கெய்ல் உள்ளார். மும்பை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் சிக்சர் மழை பொழிந்த கெய்ல் 92 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். 

ஐதராபாத் அணிக்கு எதிரான மூன்றாவது லீக் போட்டியில் இவர் சோபிக்கவில்லை. ஆனாலும், கேப்டன் கோஹ்லி அசத்த, பெங்களூரு வெற்றி பெற்றது. 

இதுகுறித்து ஆர்.பி.சிங் கூறியது:

ரசிகர்களுக்கு கெய்ல் தான் நம்பிக்கை நாயகன். ஆனால் எல்லா போட்டிகளிலும் அவர் கைகொடுப்பார் என்று நம்பமுடியாது. அவரை தவிர்த்து எங்கள் அணியில் கேப்டன் கோஹ்லி, டிவிலியர்ஸ் உள்ளிட்ட திறமையான வீரர்கள் உள்ளனர். 

கெய்ல் கைகொடுக்கவில்லை என்றால் போட்டியில் தோல்விதான் என்ற நிலை எங்கள் அணிக்கு இல்லை. 

ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இதற்கு அவர் திட்டம் வகுத்து செயல்பட்டதே முக்கிய காரணம். பெங்களூரு அணிக்கு கிடைத்த சிறந்த பேட்ஸ்மேன்களில் கோஹ்லியும் ஒருவர். 

எந்த நேரத்திலும் போட்டியின் முடிவை மாற்றும் திறமை அவரிடம் உள்ளது. 

இவ்வாறு ஆர்.பி.சிங் கூறினார். 

டெலிவிசன் தொடரில் சச்சின் தெண்டுல்கர்


இந்திய கிரிக்கெட் அணியின் சாகப்தமான சச்சின் தெண்டுல்கர் டெலிவிசன் தொடரில் அறிமுகம் ஆகிறார். மாஸ்டர் பிளாஸ்டர்ஸ் என்ற கார்ட்டூன் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். 

மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் 3டி அனிமேசன் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது. இதில் கார்ட்டூன் ஹீரோவாக வரும் தெண்டுல்கர் 12 சுட்டிக்குழந்தைகளுடன் சேர்ந்து கிரிக்கெட் சாகசங்கள் நிகழ்த்துகிறார்.

மெதுவாக பந்து வீச்சு - டிராவிட்டுக்கு அபராதம்


ஜெய்ப்பூரில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 19 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
 
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி மெதுவாக பந்து வீசியது தெரிய வந்தது. குறிப்பிட்ட நேரத்தில் 2 ஓவர் குறைவாக வீசி இருந்தது.
 
இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் டிராவிட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். விதிப்படி அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத வகையில் எழுச்சி பெற்ற ஜடேஜா


ஆஸ்திரேலிய தொடரில் யாருமே எதிர்பாராத வகையில், வியக்கத்தக்க வகையில் எழுச்சி பெற்று அசத்தினார் இளம் வீரர் ரவிந்திர ஜடேஜா.

கடந்த 2008ல் ராஜஸ்தான் ஐ.பி.எல்., அணி மூலம், ஜடேஜாவை வெளியுலகிற்கு கொண்டு வந்தது ஆஸ்திரேலிய அணியின் வார்ன் தான். இத்தொடரில் ராஜஸ்தான் கோப்பை வெல்ல, இந்திய "டுவென்டி-20' அணியில் இடம் பெற்றார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், அவ்வப்போது ஏற்ற இறக்கங்களுடன் செயல்பட்டு வந்தார்.

கடைசியில், கடந்த 2012 தொடரில் சென்னை அணிக்காக ரூ. 10.66 கோடிக்கு வாங்கப்பட்டார். இருப்பினும், ஐந்தாவது தொடரில் பெரியளவில் சாதிக்க முடியவில்லை. அதேநேரம் கேப்டன் தோனியின் ஆதரவு இவருக்கு தொடர்ந்து கிடைத்தது. 


புதிய சாதனை:

முதல் தர கிரிக்கெட்டில் மூன்று முறை "டிரிபிள்' சதம் (314, 303, 331) அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்தார் ஜடோஜா. இதனால், டெஸ்ட் அணியில் இவரை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பிரக்யான் ஓஜாவுக்குப் பதில், சென்னை டெஸ்டில் ஜடேஜாவை களமிறக்கினார் தோனி. நிறைய பேரின் புருவங்கள் உயர்ந்தன. கடைசியில் விமர்சகர்கள் வாயை அடைந்து, தன் மீது கேப்டன் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினார். 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-0 என, வென்று புதிய வரலாறு படைத்தது. பவுலிங்கில் அசத்திய அஷ்வின் (29 விக்.,) தொடர் நாயகன் ஆனார். பேட்டிங்கில் முரளி விஜய் (430), புஜாரா (419) இருவரும் 400 ரன்களுக்கும் மேல் குவித்தனர்.


அசத்தல் பவுலிங்:

இவை அனைத்தையும் விட ஆச்சரியம் ரவிந்திர ஜடேஜா, 24, தான். இத்தொடரில் தொடர்ந்து சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினார். பந்தை வேகமாக அனுப்பும் இவர், சரியான அளவு, நீளத்தில், "ஆப்-ஸ்டம்ப்' அல்லது "மிடில்-ஸ்டம்ப்பை' துல்லியமாக தாக்கும் வகையில் பவுலிங் செய்கிறார். 

அனைத்து பந்தையும் இதேபோல வீசுவதால், பேட்ஸ்மேன்கள் திணறிப் போக, எதிரணியினரால் எழுந்திருக்கவே முடியவில்லை. ஆஸ்திரேலிய தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் இவருக்குத் தான் இரண்டாவது (24) இடம். 


சிறந்த பந்து:

சில நேரங்களில் நம்பமுடியாத அளவில் பவுலிங் செய்தார். ஐதராபாத் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் மைக்கேல் கிளார்க் வந்த வேகத்தில், இவரது சுழலில் ஏமாந்து "டக்' அவுட்டானார். ஜடேஜா வீசிய பந்தை "இந்த நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சு' என வர்ணித்தார் இந்திய ஜாம்பவான் கவாஸ்கர். 


ஆட்ட நாயகன்:

இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சை கிளார்க் தான் நன்கு எதிர்கொள்வார் என நம்பப்பட்டது. இதை தவிடு பொடியாக்கினர் ஜடேஜா. கிளார்க்கின் ஆறு இன்னிங்சில், 5 முறை இவரிடம் தான் சிக்கினார். டில்லி டெஸ்டில் 7 விக்கெட் கைப்பற்றிய இவர், முதல் இன்னிங்சில் 43 ரன்கள் எடுக்க, ஆட்டநாயகன் விருதை வென்றார். 


எதிர்காலம் எப்படி:

 இந்திய ஆடுகளில் இவர் அசத்தினாலும், அன்னிய மண்ணில் சாதிப்பது சிரமம் தான். இதற்கேற்ப பேட்டிங்கிலும் எழுச்சி பெற்றால், அனைத்து வித ஆடுகளங்களிலும் சாதித்து, சிறந்த "ஆல்-ரவுண்டராக' அணியில் இடத்தை தக்கவைக்கலாம். 

ஜம்பிங் ஜபாங் ஜம்பக் ஜம்பக்


ஐ.பி.எல். கிரிக்கெட் ஜூரம் நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. போட்டிகளின் விறுவிறுப்பு எப்படி ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கிறதோ அதுபோல ஐ.பி.எல். போட்டிக்கான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

ஐ.பி.எல். போட்டியை சோனி செட் மேக்ஸ் டெலிவிசன் ஒளிபரப்பி வருகிறது. போட்டிக்கு முன்பும், பிறகும் அந்த டெலிவிசனில் ஒளிபரப்பாகும். ஐ.பி.எல். பாடல் ரசிகர்களின் வர வேற்பை பெற்றுள்ளது. 

ஜம்பிங் ஜபாங் ஜம்பக் ஜம்பக் கிலி கிலியா தம்பிங் தபாங் தம்பக் தம்பக் கிலி கிலியா என்ற இந்த பாடல் வரிகள் தான் அனைவரது வாயிலும் முனு முனுத்தவாறே இருக்கிறது. 

கிரிக்கெட் பற்றி தெரியாத 2 வயது சிறுவன் கூட அந்த பாடலை பாடும் அளவுக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த இந்திப்பாடல் வரிக்கு எந்தவித அர்த்தமும் இல்லை. 

ஆனால் காதால் கேட்பதற்கும், வாயால் முனுமுனுக்க மிகவும் எளிதாக இருக்கிறது. செட் மேக்ஸ் டெலிவிசனின் வர்ணனையாளர்களே இந்த பாடலை பாடி விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். 

அதில் வரும் நடன அசைவுகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

போட்டி தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பே இந்தபாடல் விளம்பரப்படுத்தப்பட்டதால் தற்போது எல்லோராலும் பாடக்கூடிய அளவுக்கு உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டது. 

ஒவ்வொரு இன்னிங்சும் இடையே பவுண்டரி, சிக்சர் மற்றும் விக்கெட் விழுவதை காட்டும் முன்பு நடன அழகிகள் நடனத்துடன் அந்த பாடல் இசைக்கப்படுகிறது.

IPL 6 - அதிக விலைக்கு எடுத்தவருக்கு ஆடவாய்ப்பு இல்லை


இந்த ஐ.பி.எல் போட்டியில் அதிக விலைக்கு ஏலம் போனவர் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலிய வீரரான அவரை மும்பை இந்தியன்ஸ அணி ரூ.5.30 கோடிக்கு எடுத்தது. ஆனால் மும்பை அணி விளையாடிய 2 ஆட்டத்திலும் மேக்ஸ்வெலுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
 
சென்னையில் நேற்று நடந்த ஆட்டத்தில் அவருக்கு ஆடவாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பெஞ்சிலேயே உட்கார வைக்கப்பட்டு விட்டார்.
 
கேப்டன் பாண்டிங், போலார்ட், ஜான்சன், சுமித் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் அந்த அணியில் ஆடினார்கள். இனிவரும் போட்டிகளில் சுமித் அல்லது ஜான்சன் இடத்தில் மேக்ஸ்வெலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. 

புது வரலாறு படைக்குமா பஞ்சாப்


ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று புனே வாரியர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

கடந்த 5 தொடர்களில் பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் வென்றதில்லை. இம்முறை வெற்றி பெற்று புது வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று புனேயில் நடக்கும் லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் அணி, மாத்யூஸ் தலைமையிலான புனே அணியை எதிர்கொள்கிறது. 

முதல் போட்டியில், ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்த சோகத்தில் புனே அணி உள்ளது. 

துவக்கத்தில் ராபின் உத்தப்பா கைகொடுக்கலாம். யுவராஜ் இன்றாவது தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும். 

ராஸ் டெய்லர் எழுச்சி பெற்றால் நல்லது. சாமுவேல்ஸ், கேப்டன் மாத்யூஸ் பொறுப்புணர்ந்து விளையாட வேண்டும். 

கில்கிறிஸ்ட் பலம்: பஞ்சாப் அணியை பொறுத்தவரை கேப்டன் கில்கிறிஸ்ட் தான் மிகப் பெரும் பலம். 

இவர் அதிரடி காட்டினால், எளிதாக வெற்றி பெறலாம். ஷான் மார்ஷ் காயத்தில் இருப்பதால், இப்போட்டியில் பங்கேற்க மாட்டார். 

எனவே, கில்கிறிஸ்ட்டுடன் டேவிட் ஹசி அல்லது பாமர்ஸ்பச் துவக்கம் தர வாய்ப்புண்டு. "மிடில்-ஆர்டரை' கவனித்துக் கொள்ள, அசார் மகமூத், டிமிட்ரி மஸ்கரானஸ் உள்ளனர். 

வேகப்பந்துவீச்சில் ஜொலிக்க ரியான் ஹாரிஸ், மன்பிரீத் கோனி, பிரவீண் குமார் காத்திருக்கின்றனர். அனுபவ பியுஸ் சாவ்லா உள்ளது நம்பிக்கை அளிக்கிறது.

சேப்பாக்கத்தில் 33-வது ஐ.பி.எல். போட்டி


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுவது 33-வது ஐ.பி.எல். போட்டியாகும். இதுவரை நடந்த 32 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 21 போட்டியில் வெற்றி பெற்றது. 11 ஆட்டத்தில் தோற்றது. 

2011-ம் ஆண்டு சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தான் மோதிய 8 ஆட்டத்திலும் வென்று சாதனை படைத்து கோப்பையை வென்றது. இங்கு சூப்பர் கிங்ஸ் வீரர் முரளிவிஜய் 2 முறை சதம் அடித்துள்ளார். 

2010-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராக 56 பந்தில் 127 ரன்னும், கடந்த ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக 58 பந்தில் 113 ரன்னும் எடுத்தார்.

வாழ்த்து மழையில் டிராவிட்


இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு, பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 

இந்தியாவின் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு, நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று வழங்கினார். 

விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்ட, முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு, பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 

தவிர, லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற, இந்தியாவின் மேரி கோமுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 


பத்மஸ்ரீ யோகேஷ்வர்:

லண்டன் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற இந்தியாவின் யோகேஷ்வர் தத், 2012 பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிரிஷா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 


10வது கிரிக்கெட் வீரர் 

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், கவாஸ்கர், லாலா அமர்நாத், வினோ மன்கட், உள்ளிட்ட வீரர்கள் வரிசையில் பத்ம பூஷண் விருது பெற்ற 10வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமை பெற்றார் டிராவிட். 

இந்திய அணியின் தூண் என்ற போற்றப்பட்ட இவர், 164 டெஸ்டில் 13, 288 ரன்கள், 344 ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்கள் எடுத்துள்ளார். 

பத்ம பூஷண் விருது வென்ற இவருக்கு சக வீரர் ரகானே உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சச்சினிடம் இருந்து பாடம் கற்ற பிரக்யான் ஓஜா


இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு பந்துவீசுவதன் மூலம் சிறந்த பாடம் கற்றுக் கொள்ளலாம்,'' என, மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா, 26. சமீபத்தில் டில்லியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில், ஜேம்ஸ் பட்டின்சனை அவுட்டாக்கிய இவர், டெஸ்ட் அரங்கில் குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். 

இதுவரை இவர் 22 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 102 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

இதுகுறித்து பிரக்யான் ஓஜா கூறியது: ஐ.பி.எல்., தொடர் இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க கிடைத்த சிறந்த மேடையாக திகழ்கிறது. கடந்த 2008ல் நடந்த முதலாவது ஐ.பி.எல்., தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட போது, உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடினேன். 

ஐ.பி.எல்., தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தேசிய அணியில் இடம் பிடித்தேன். ஒவ்வொரு அணியிலும் உள்ள சீனியர் வீரர்களிடம் இருந்து இளம் வீரர்கள் கிரிக்கெட் குறித்த நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்த அனுபவம் போட்டியில் சாதிக்க உதவும்.

முதல் நான்கு தொடர்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போது சிறப்பாக (54 போட்டி, 60 விக்கெட்) பந்துவீசினேன். கடந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய போது லேசான பின்னடைவை சந்தித்தேன். அதன்பின் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எழுச்சி கண்டு, இழந்த "பார்மை' மீட்டேன்.

மும்பை அணியில் இணைந்த பின், "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. பயிற்சி முகாமில் இவருக்கு பந்துவீசுவதன் மூலம், நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். பவுலிங் குறித்து சச்சின் வழங்கிய ஆலோசனைகள் போட்டியில் சாதிக்க கைகொடுத்தது. இவர் சிறந்த வீரராக மட்டமல்லாமல், நல்ல மனிதராகவும் இருப்பது சிறப்பம்சம்.

இம்முறை எங்கள் அணியின் ஆலோசகராக அனுபவ சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இவரது வருகையால் எங்கள் அணியில் உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இவரிடம் இருந்து சுழற்பந்துவீச்சு குறித்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதன்மூலம் சிறந்த பவுலராக வலம் வர வாய்ப்பு உள்ளது.

கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு முறை உலக கோப்பை பெற்றுத் தந்துள்ளார். இம்முறை, மும்பை அணியை திறம்பட வழிநடத்தி, முதன்முறையாக ஐ.பி.எல்., கோப்பை வென்று தருவார் என நம்புகிறேன்.

எங்கள் அணியில் உள்ள மற்றொரு அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இளம் வீரர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார். இவரிடம் இருந்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பயிற்சியாளர் ஜான் ரைட், இந்திய அணியை எழுச்சிப் பாதைக்கு கொண்டு சென்றார். இதேபோல இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வார் என நினைக்கிறேன். 

தவிர இம்முறை பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இதற்கு ஜான் ரைட் நிறைய ஆலோசனைகள் வழங்கினார். இது போட்டியில் சாதிக்க உதவும்.
இவ்வாறு பிரக்யான் ஓஜா கூறினார்.

தோனிக்கு முதல் மரியாதை


ஆறாவது ஐ.பி.எல்., தொடரின் துவக்க விழா நேற்று கோல்கட்டாவில் வண்ணமயமாக நடந்தது. இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், கத்ரினா கைப், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் ஆடிப் பாடி அசத்தினர்.

ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் (ஏப்.3-மே 26) இன்று துவங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் உட்பட 9 அணிகள் பங்கேற்கின்றன. 

இதன் துவக்கவிழா நேற்று கோல்கட்டாவில் உள்ள "சால்ட் லேக்' மைதானத்தில் கோலாகலமாக நடந்தது. முதலில் மிகப் பெரிய சிவப்பு பட்டனை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழுத்த, மறுபக்கம் குத்துவிளக்குகள் ஜொலிக்க, விழா அமர்க்களமாக துவங்கியது. 

தொடர்ந்து "டிரம்சில்' பறந்தவாறு கலைஞர்கள் சாகசம் நிகழ்த்த, சீனப் பெண்கள் "மெகா' முரசு அடித்து முழக்கம் எழுப்ப, அரங்கில் ஐ.பி.எல்., கோப்பையுடன் அழகிய பெண் ஒருவர் பலூனில் தலைகீழாக பறந்து வந்தார். 

பின் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் வசம் கோப்பையை அந்த பெண் வழங்கினார். அப்போது 9 அணிகளும் 9 கிரகங்கள் போல காட்சி அளிக்கும் வகையில் பலூன்கள் இடம் பெற்றிருந்தன. 

அடுத்து "பாலிவுட்' நடிகை தீபிகா படுகோனே அசத்தலாக நடனமாடினார். அடுத்து ராணி போல் பவனி வந்த கத்ரினா கைப் "ஷீலா கா ஜவானி' என்ற பிரபல பாடலுக்கு கவர்ச்சி உடையில் நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்தார். 

கோல்கட்டா அணி உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கானும் அசத்தலாக ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். பிரபல பாடகி உஷா உதுப், அமெரிக்காவை சேர்ந்த "ராப்' பாடகர் பிட் புல் ஆகியோர் ரம்மியமாக பாடி உற்சாகம் அளித்தனர். கண்கவர் வாணவேடிக்கை, "லேசர் ÷ஷா'வுடன் துவக்க விழா இனிதே நிறைவு பெற்றது.


தோனிக்கு  முதல் மரியாதை

துவக்க விழாவில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் அரங்கில் அணிவகுத்து நின்றனர். பின் போட்டிகளின் போது விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்வோம் என்று உறுதி அளிக்கும் வகையில் மைதானத்தில் இருந்து தொடு திரையில் விரலால் தொட்டு கையெழுத்திட்டனர். 

இதில் முதல் நபராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அழைக்கப்பட்டார். அவர் கையெழுத்திட, ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர்.